வெள்ளி, 21 நவம்பர், 2014

நல்லாசிரியர்கள் ஆகத் தெரியாத ஆசிரியர்கள்

      

      எங்கள் தளத்தில் துளசியின் கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்”   என்ற இடுகைக்கு நண்பர் ஸ்ரீ ராம் அவர்களது பின்னூட்டம் இது “ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த என் பிறந்தநாளை என்னால் மறக்கவே முடியாது. இந்தியாவில் இருப்புப் பாதைகள் என்ற கேள்விக்கான 4 பக்க பதிலில் என்னால் 2 பக்கங்கள் மட்டுமே சொல்ல முடிந்திருக்க, மங்கள்ராஜ் வாத்தியார் இன்னொரு மாணவனை விட்டு தரையில் மண் தூவச் சொல்லி, என்னை அதில்முட்டிக்கால் போடச்சொல்லி, இரண்டு பாதங்களிலும் வெளுத்தார் பாருங்கள்...இப்போது டைப் அடிக்கும்போதும் பாதங்கள் குறுகுறுக்கிறது!

      இதை வாசித்த போது மனம் நம் கல்வி முறையை நினைத்து வருந்தியது. 2 பக்கங்கள் எழுதாதது தவறா? அதற்காக, இந்த வயதிலும் கூட அந்த அடி ஆழ் மனதில் பதியும் அளவிற்கு அடிக்கும் தண்டனை அவசியமா? அந்த சிறு வயதில் ஸ்ரீராம் அவர்களின் மனது எப்படி வலித்திருக்கும்? இதனால் அவரது அறிவுக் கூர்மையையோ, இன்று நம்மை எல்லாம் மகிழ்விக்கும் சீரிய, ஹாஸ்ய உணர்வு இழை ஓட அருமையாக எழுதும் அவரது எழுத்துத் திறமையையோ, பள்ளியாலோ, தேர்வாளராலோ, ஆசிரியராலோ அறிய முடிந்ததா? கணித்திட முடிந்ததா? அவரது இசை அறிவை, ஆர்வத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததா? அவர் நல்ல பணியில் சேர முடியாமல் இருந்ததா என்ன? 

எனக்கு என் மகனைப் பற்றிய நினைவுகள் வந்தன. என் மகனின் சிறிய கற்றல் குறைபாட்டைப் பற்றி ஒரு சில இடுகைகளில் குறிப்பிடிருக்கின்றேன்.  +2 வரை போராட்டம் தான். அப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்தான் பலபோராட்டங்களுக்கு இடையில். எழுதுவதற்கும், படிப்பதற்கும் கஷ்டப்பட்டாலும், அதாவது படிப்பதற்கு அதிகப் பாடங்கள் (Subjects) என்பதாலும், அவனோ ஒவ்வொன்றிற்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாலும், எழுத்து வேலைகளும் அதிகம் என்பதாலும், நேரத்தை நிர்வகிக்க மிகவும் சிரமப்பட்டான். இது அவனது அறிவு சார்ந்தது அல்ல. ஆசிரியர்கள் அவனது பாட அறிவைக் கண்டு மெச்சத்தான் செய்தார்கள். ஒரே ஒரு ஆசிரியரைத் தவிர.  அதுவும், அவன் சிறந்து விளங்கிய கிளினிக்கல் வருடங்களின் போது. அந்த ஆசிரியரைப் பற்றிச் சொல்வதற்கு முன்...

31/2 வருடங்களுக்குப் பிறகு மருத்துவத்திற்கான பயிற்சி வருடங்கள். அப்போது கைனேக்காலஜி பிரிவில் இவனது தேர்வுத் தாளை, ஆசிரியர், வகுப்பில் எல்லோருக்கும் தூக்கிக் காட்டியிருக்கின்றார்.

“இவன் ஒருத்தன் தான் ஒரு டாக்டர் எப்படி எழுதணுமோ அப்படி எழுதியிருக்கான். ஒரு டாக்டர் எப்படி கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டுமோ அப்படிச் சுருக்கமாக, மிகவும் சரியான டயக்நோசிஸ், ட்ரீட்மென்ட், என்று ரத்தினச் சுருக்கமாகத் தெளிவாக எழுதிருக்கான்.  நீங்கல்லாம் பக்கம், பக்கமா எழுதிருக்கீங்க, உங்களுக்குத் தெரிஞ்ச கதையெல்லாம், விஷயத்த எல்லாம் எழுதியிருக்கீங்க. ஏதோ சமூகவியல் பேப்பர் மாதிரி. இவன் பேப்பர பார்த்துக் கத்துக்கங்க. இப்படித்தான் இருக்கணும்” என்று பாராட்டிவிட்டு,

“எப்படிப்பா உனக்கு ஆம்புலேட்டரில குறைஞ்சிருக்கு? நீ அதுலயும் சரியாத்தானே, நல்லாத்தானே எழுதிருக்க” என்று சொல்லியிருந்திருக்கின்றார். 

மருத்துவப் பயிற்சி வகுப்புகளில், ஆம்புலேட்டரி வகுப்பு என்று பல கிராமங்களுக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்துச் செல்வார்கள். அதில் தேர்வும் உண்டு. கிராமத்தில் அவனுக்கு வந்த நோயாளி ஒரு மாடு.  அதனைப் பரிசோதித்து அதற்கு என்ன பிரச்சினை என்பதைக் குறிப்பிட்டு, அதைச் சற்றே விவரித்து, அதற்கு என்ன தீர்வு, என்ன மருந்து என்று எழுத வேண்டும்.  இவன் எழுதியது ¾ பக்கத்திற்கு. அந்த ஆசிரியரோ,

“என்னப்பா இது?  இது பரீட்சை.  ¾ பக்கம்தான் எழுதியிருக்க.  2, 3 பக்கம் எழுதணும். நீ என்ன படிச்ச?” என்று கேட்கவும் இவனோ

“சார், நான் சரியாத்தான் எழுதியிருக்கேன்.  இது தியரி இல்லையே சார். எனக்கு என்ன பேஷன்ட் வந்துச்சோ அதுக்குண்டான பிரச்சினையை மட்டும்தானே சார் நான் எழுதணும்.  அதைத்தான் எழுதியிருக்கேன் சார்”

“அப்போ புக்க படிக்கலையா? புக்குல என்ன இருக்கோ அத எழுதியிருக்கணும்.  மினிமம் 2 பக்கம் எழுதி இருக்கணும்”

“சார், புக்குல கொடுத்துருக்கறது அமெரிக்க மாடு பத்தி சார்.  அந்த மாட்டுக்கு அங்க என்ன பிரச்சினையோ அத பத்தி சார்.  எனக்கு வந்த மாடு இந்திய நம்மூர் மாடு. அதுக்கு என்ன பிரச்சினையோ அதத்தானே சார் நான் எழுத முடியும். அதுமட்டும் இல்ல, நான் என்ன பேஷன்ட பாக்கறேனோ அதத்தானே நான் எழுதணும், ரெண்டாவது, புக்குல உள்ளத எழுதினா அப்புறம் கேஸே தப்பாயிடுமே சார்.  மூணாவது பாயின்ட், இது கேஸ் பத்தின- கேஸ் ஹிஸ்டரி, டயக்னாசிஸ், ட்ரீட்மென்ட் பத்தின பரீட்சை சார்” அவன் தனது அறிவு சார்ந்த நேர்மையான, நல்ல விஷயங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதும் இல்லை.

“அதெல்லாம் இல்ல.  நீ புக்குல உள்ளத எழுதியிருக்கணும். என்ன நீ எதிர்த்து பேசற, வா, வா உன்ன வைவாவுல நல்லா கவனிச்சுக்கறேன்” என்று சொல்லியவர் இதற்கும் குறைவான க்ரேட் கொடுத்து, வைவாவிலும் - வேண்டுமென்றே குதர்க்கமான கேள்விகள் கேட்டும், அவன் மிகவும் புத்திசாலித்தனமாக விடையளித்தும் கூட குறைந்த மதிப்பெண்கள் இட்டு மொத்தமாக 69% தான் கிடைத்தது.  இவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பக்கம் பக்கமாக எழுதியிருந்திருக்கின்றார்கள். (நம்ம பையனுக்குத்தான் அது வராதே)

  இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை.  நான் பெருமைப்படவும் மாட்டேன். (முதலில் வேறு ஒரு பையனாகக் குறிப்பிட்டு எழுதலாம் என்றுதான் நினைத்தேன். துளசிதான் இப்படியே இருக்கட்டும் என்று சொன்னதால்தான்) நம் கல்வி முறை எப்படி உள்ளது என்பதைப் பற்றிச் சொல்லத்தான் எழுதினேன்.  அவனது இறுதி மொத்த மதிப்பெண்கள் வந்த போது - 7.32/10

“என்னாச்சுப்பா? உன் காமன்சென்ஸ், இன்டெலிஜன்ஸ், ப்ராக்டிகல் நாலெட்ஜ், அப்ளிக்கபிலிட்டி எல்லாம் பாத்தா நீதான் டாப்பரா இருப்பனு நினைச்சோம்...அப்போ நீ பேப்பர்ல ஒண்ணுமே காட்டல? நம்மூர் பொறுத்தவரை நீ பேப்பர்ல கதை காமிக்கணும்பா.” அவங்களுக்குத் தெரியாதே நம்ம பையன் எழுதறதுல வீக்குனு.....

அன்று நண்பர் ஸ்ரீராம் சிறு வயதில் அடிவாங்கியது போலவோ, இன்னும் பலர் அடிவாங்கியதாகவும், தண்டனைகள் பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள், அதைப் போலவோ, இப்போது பெரும்பாலும் அடிப்பது என்பது தடைசெய்யப்பட்டுள்ளதால், மகன் பள்ளியில் அடிவாங்கவில்லை என்றாலும் பல எதிர்மறை விமர்சனங்கள். அவமானங்கள். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்காததாலும், மகனின் தன்னம்பிக்கை பாதிக்கப்படக் கூடாது என்று அவன் மனதைப் பக்குவப்படுத்தி இருந்ததாலும் இவற்றை எல்லாம் எதிர்கொள்ள எளிதாக இருந்தது. இன்று அடிகள் குறைந்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான ஆசிரியர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றிலிருந்து இன்று வரை இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

 அடிப்பதில்லை என்றாலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் அளவில்  மதிப்பெண்களில் கைவப்பது, மனம் வலிக்கும் அளவு, சுயமரியாதையைச் தரக்குறைவாகப் பேசுவது போன்றவை நடக்கத்தான் செய்கின்றது. ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் தங்கள் ஈகோவைத் தவிர்த்து அவர்களின் தன்னம்பிக்கையையும், அறிவையும் வளர்க்கும் விதத்திலும், அவர்களதுத் தனித்திறமையை அறிந்து ஊக்கப்படுத்தி அதை வெளிக் கொணரும் வகையில் நடந்து, மாணவர்களின் மனதில் இறைவனுக்கு அடுத்த இடத்தில் இடம் பெறலாமே. எல்லா மாணவர்களையும் தங்கள் குழந்தைகளாக மனதில் கொண்டுவிட்டால் அவர்களை அடிக்கவோ, மனது புண்படும் அளவு பேசவோ, எதிர்காலம் பாதிக்கும் அளவிலோ செயல்படத் தோன்றாதல்லவா. ஆசிரியப் பெருமக்களே உங்கள் பிரம்பு அடிப்பதற்கு அல்ல, அதைக் குழந்தைகள் பிடித்துக் கொண்டு உங்கள் பின்னால் நடந்துவருவதற்கே. உங்கள் நா வசை பாடுவதற்கல்ல.  இனியதைப் பேசி நண்பரைப் போல பழகிடவே. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. கற்பிப்போருக்கும்தான்! அவர்கள் சிறந்த முறையில் கற்பித்திருந்தால்! 

( ஆசிரிய சகோதர, சகோதரிகளே! இந்தக் கட்டுரையைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இது ஆசிரியர்களைப் புண்படுத்தும் எண்ணத்தில் எழுதியது அல்ல.  எங்களிலும் ஆசிரியர் இருக்கின்றாரே)

படங்கள் : இணையம்.

61 கருத்துகள்:

 1. இனியதைப் பேசி நண்பரைப் போல பழகிடவே. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. கற்பிப்போருக்கும்தான்! அவர்கள் சிறந்த முறையில் கற்பித்திருந்தால்!//

  நல்லாசிரியராக நடத்தலே சிறப்பு அவர்களுக்கும் மாணவர்களுக்கும்...
  த.ம 1

  பதிலளிநீக்கு
 2. நீ பேப்பர்ல ஒண்ணுமே காட்டல?
  நம்மூர் பொறுத்தவரை நீ பேப்பர்ல கதை காமிக்கணும்பா//
  மனம் வலிக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் என்ன செய்ய இதுதான் உண்மை! உண்மை வலிக்கத்தானே செய்யும்...மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 3. "//“என்னப்பா இது? இது பரீட்சை. ¾ பக்கம்தான் எழுதியிருக்க. 2, 3 பக்கம் எழுதணும். நீ என்ன படிச்ச?//"

  இந்த தத்துவம் (பக்கம் பக்கமாக எழுதணும்) என் வரையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கை கொடுத்திருக்கிறது.
  அதாவது வரலாறு,பூகோளம் என்ற பாடப்பிரிவில், வரலாறு எனக்கு நன்றாக வரும் ஆனால் பூகோளம் அந்த அளவிற்கு வராது. அதனால் நான் சில பூகோள கேள்விக்கான பதில்களில் (விரிவான பதில்களுக்கு) முதல் இரண்டு பத்திகளில் அந்த கேள்விக்கான விடையையும்,அடுத்த ஒரு ஓரிரண்டு பத்திகளில் வரலாற்று சம்பந்தமான பதில்களும்,கடைசி பத்தியில் மீண்டும் அந்த கேள்விக்கான பதிலையும் எழுதி வைத்தேன். எந்த அளவிற்கு இது கை கொடுக்கப்போகிறது என்று நினைத்த போது, அந்த பாடத்தில் 86% மதிப்பெண்கள் பெற்றேன். இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால்,
  நான் படிக்கின்ற காலத்தில், விரிவான பதில்களுக்கு நீங்கள் சொல்வது போல், பக்கம் பக்கமாக எழுதினால் தான் மதிப்பெண் நிறைய கிடைக்கும் என்ற ஒரு தவறான எண்ணம் இருந்தது.
  இன்றைய காலகட்டத்தில் அந்த தவறான எண்ணம் மாறியிருக்கும் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே! இதில் என்ன வியப்பு என்றால், நான் படித்த காலத்தில் எங்கள் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி பக்கம் பார்த்து மதிப்பெண் இட்டதே இல்லை. கருத்துக்களைச் சரியாக எழுதி உள்ளோமா என்றுதான் பார்ப்பார்கள். படித்தது அரசு பாடத்திட்டத்தில்தான். ஆனாலும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தது கற்றல். மனனம், வாந்தி அல்ல. மிக மிக நல்ல ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரியில், தண்டனைகள் உண்டு. முட்டி போடுதல். வகுப்புக்கு வெளியில் நிற்க வைப்பது போன்றது. னீங்கள் சொல்வதும் சரியே. நிறைய எழுதினால்தான் மதிப்பெண். இப்போது மாற்றம் வந்திருப்பதாகத் தெரியவில்லை நண்பரே!

   மிக்க நன்றி!

   நீக்கு
 4. நண்பரே
  எந்தத் துறையினை எடுத்துக் கொண்டாலும் திறமை வாய்ந்தவர்களும்இருக்கிறார்கள், மற்றவர்களும் இருக்கிறார்கள்
  அதிக பக்கங்களில் தேர்வு எழுத வேண்டும் என்பது ஒரு மாயை
  மனப்பாடம் செய்யச் சொல்வது, படித்ததை புரியாவிட்டாலும் அப்படியே எழுத வைப்பது எல்லாம் நம் நாட்டின் சாபக்கேடுகள்
  பொதுவாகவே கல்லூரித் தேர்வு என்றால்அதிகப் பக்கங்கள் எழுத வேண்டும்என்ற ஒரு எண்ணம் உருவாகிவிட்டது, அப்படி எழுதினால் ஆசிரியர் படிக்க மாட்டார், மதிப்பெண் போட்டுவிடுவார் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் நிலைபெற்று விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் ஆசிரியராயிற்றே! உங்கள் கருத்து சரியாக இல்லாமல் இருக்குமா?! மிகவும் சரியே! மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 5. முதலில் என்னைக் குறிப்பிட்டு, பதிவை ஆரம்பித்திருப்பதற்கு என் நன்றி.

  அடிப்படையாக நம் கல்வி கற்கும் முறையிலேயே பல மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று தோன்றுகிறது. படித்ததை வாந்தி எடுக்கும் திறமைக்குத்தான் மதிப்பெண் என்னும் நிலையினால் படித்ததை வாழ்வியல் பிரச்னைகளுக்கு அப்ளை செய்யும் திறமை எல்லா மாணவர்களுக்கும் கைவருவதில்லை.

  அதே போல, பள்ளியில் மட்டுமல்ல அலுவலக நிலைகளிலும் தனக்குக் கீழ் வேலை செய்பவர்கள் திறமையாக இருந்தாலோ, திறமையாகப் பேசி நடந்து கொண்டாலோ மேலதிகாரிகளால் மதிக்கப் படுவதில்லை. இதே எள்ளல் பேச்சு, ஏளனம், உனக்கென்ன தெரியும், நீ என்ன பெரிய இதுவோ?' மனோபாவம் மட்டுமல்ல, அவர் சொன்ன, செய்த அந்தத் திறமையான பணிக்கும் அந்த மேலதிகாரி, தன் அடுத்த கட்ட மேலதிகாரிகளிடம் தன்னுடைய பெருமையாக, திறமையாக பறை சாற்றிக் கொள்வார். இது மனித பலவீனம்.

  ஆசிரியர்கள் லெவலிலும் இது விதிவிலக்கில்லாமல் காணக் கிடைக்கிறது. பாஸிட்டிவ் ஆசிரியர்களும் உண்டு.

  என் நண்பருடைய மகன் வறுமையான குடும்பத்திலிருந்து பி ஈ படித்து இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார். அவர் தன்னுடைய கல்லூரிக் காலத்தில் வறுமை காரணமான பல்வேறு காரணங்களால் கல்லூரிக்குத் தாமதமாகப் பலமுறை செல்பவர். அதனால் அவருக்கு ஒரு கெட்ட பெயரும் இருந்தது. ஆனால் வகுப்பில் தவறாகச் சொல்லிக் கொடுக்கப்படும் சில கணக்குகளுக்கு இவர் சரியான பதில் அல்லது இன்னும் சுருக்கமான வழியைச் சொல்லும்போது அவர் ஆசிரியரால் பாராட்டப் பட்டதாகவும், அடுத்ததடுத்த வகுப்புகளில் இவரிடம் 'இதற்கு வேறு வழி இருக்கிறதா சந்திரன்?' என்று கேட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்ததை வாழ்வியல் பிரச்னைகளுக்கு அப்ளை செய்யும் திறமை எல்லா மாணவர்களுக்கும் கைவருவதில்லை.// இது மிகவும் அவலமான நிலைமை. அதுவும் இப்போது பெரும்பான்மையான தொழிற்கல்வி, மருத்துவம் பயிலும் மாணவர்கள் அப்படி இருப்பது மிகவும் வேதனை. அலுவகண்களில் ஈகோதான் பிரச்சினை நீங்கள் சொல்லியிருப்பது போல்...அதான் நம்ம நாடு உருப்படாமல் போவதும்.

   பாசிட்டிவ் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்! ஆனால் மிகவும் குறைவு. விரல் விட்டு எண்ணும் வகையில்தான். நீங்கள் சொல்லி இருக்கும் அந்த மாணவரைப் பற்றிய செய்தி மிகவும் மகிழ்வு தருகின்றது. இது போன்ற ஈகோ இல்லாத ஆசிரியர்கள் மிகவும் குறைவு.

   மிக்க நன்றி!

   நீக்கு
 6. நான் படித்த அதே பள்ளியில் செபஸ்தியான் என்ற ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தார். எங்கள் கண்முன்னாலேயே ஸ்கேலால் பதிலை அளந்து அளந்து மதிப்பெண் கொடுப்பார். மாணவர்கள் என்னென்ன எழுதி இருப்பார்கள் தெரியுமா? சொல்ல முடியாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடப்பாவமே! இப்படிக்கூடவா? ஆச்சரியம்தான். அப்போ என் காலம் தேவலாம் போல...மிக நல்ல ஆசிரியர்கள்.

   நீக்கு
 7. பேப்பர்ல கதை வேறு... வாழ்க்கை கதை நன்றாக இருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் அதான் எத்தனை இளைஞர்கள், இளம்வயதுப் பெண்களின் வாழ்க்கைக் கதை வேறு திசையில் பயணிக்கின்றது. வேதனைதான்

   மிக்க நன்றி டிடி!

   நீக்கு
 8. நானும் இந்த அவஸ்தைகளைப் பட்டவன்
  என்கிற முறையில் கொஞ்சம் கூடுதல்
  அக்கரையுடன் படித்தேன்
  அவசியமான அக்கரையுடன் கூடிய பகிர்வுக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி! எல்லோரும் ஒரு வகையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அவஸ்தைப்படத்தான் செய்கின்றார்கள் போலும்...நீங்களும் அதில் அடக்கம்...ம்ம்ம்

   மிக்க நன்றி !

   நீக்கு
 9. இங்கு நான் [ஆசிரியர் பற்றிய செய்திகளில்] பிண்ணூட்டம் இடாமல் இருக்க காரணம் இரண்டே இரண்டு தான்...

  ஒன்று: எந்த ஆசிரியரும் எந்த தப்பு செய்தாலும் தண்டிக்க ஒரு போதும் உரிமை இல்லை; என் பெற்ற தகப்பனுக்கே அந்த உரிமை இல்லை -அப்படி செய்தால் குற்றம் என்ற எண்ணம் கொண்டவன்.

  இரண்டு --அடித்தாலும் சக மாணவர்கள் முன் அடிக்க என்ன உரிமை இருக்கு! இது தவறு..
  ____________________
  நம்பினால் நம்புங்கள்;;
  எங்கள் அப்பா எங்களை (பெரிய குடும்பம்) அடித்ததே இல்லை...நாங்கள் எல்லாம் வாலில்லா குரங்குகள்.. ஆனால், திட்டுவார்...

  ஒரு முறை, "அப்பா, திட்டாதீங்க அதுக்கு நாலு அடி அடிச்சுடுங்க என்று கெஞ்சி னோம்;" தீயினார் சுட்ட புண் ஆறும்...ஆறாதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நம்பள்கி! வெகுநாட்கள் ஆயிற்றே! சந்தோஷமாக இருக்கின்றது. களை கட்டியது போல. உங்கள் இந்தக் கருத்துக்கள் மிகவும் பிரபலம் நாங்கள் அடிக்கடிச் சொல்வதுண்டு! நல்ல கருத்துக்கள். மிக்க நன்றி நம்பள்கி!

   நீக்கு
 10. ஆசிரியர் – மாணவன் உறவு தாயும், சேயும்போல் தொடக்கம் முதலே வரவேண்டும் இதற்க்கு ஆசிரியர்தான் முதலில் தாயாக வேண்டும் மாணவனை குறை சொல்ல முடியாது காரணம் அவன் குழந்தை. அன்பால், பண்பால், அறிவின்பால் அவனுக்கு அறிவை இனிமேல்தான் ஆசிரியர் ஊட்டவேண்டும்.

  மாதா-பிதா-குரு-தெய்வம்

  ஆசிரியரை தாய்-தந்தைக்கு அடுத்து வைத்திருக்கிறார்கள் தெய்வத்துக்கே நான்காம் இடம்தான்.
  சமீப காலமாக பல இடங்களிலும் ஆசிரியர்களால் பெண்களுக்கு பாலியியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது இது தொடர்ந்தால்.....

  மீண்டும் பெண் குழந்தைகளுக்கு படிப்பு வேண்டாம் அடுப்படி போதும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் முடிவு எடுக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

  (போதாக்குறைக்கு வெளியில் திராவகம் வீச்சு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசிரியர் – மாணவன் உறவு தாயும், சேயும்போல் தொடக்கம் முதலே வரவேண்டும் இதற்க்கு ஆசிரியர்தான் முதலில் தாயாக வேண்டும் // மிகவும் அருமையான கருத்து கில்லர் ஜி!

   ஆசிரியர்களால் பெண்குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு....உண்மை. பெற்றோர்கள் நீங்கள் சொல்லும் முடிவு எடுத்தால் அவர்கல் முட்டாள்கள் அதுவும் இந்தக் கால கட்டத்தில். மாறாக பெண் குழந்தைகளை எந்த சூழ்னிலையிலும் தைரியமாக எதிர்கொள்ளவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் கற்றுக் கொடுத்து முன்னிலைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும். சமுதாயமும் மாறும் ஜி மிக்க நன்றி!

   நீக்கு
  2. \\மீண்டும் பெண் குழந்தைகளுக்கு படிப்பு வேண்டாம் அடுப்படி போதும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் முடிவு எடுக்கும் நிலை ஏற்பட்டு விடும்\\

   நண்பரே...
   இது எனது அச்சுறுத்தலான கவலைக்கிடமான கருத்தே பெற்றோர் நிலையில் நானும் உண்டு தாங்களும் உண்டு இந்த நிலைகள் நீடித்தால் மகள் படிப்பறிவில்லா விட்டாலும் பரவாயில்லை உயிருடன், மானமுடன் இருந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்களே... என்ற எனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன். (குறிப்பு - இப்பொழுது எல்லோருக்குமே ஒரு குழந்தைதான்)

   நீக்கு
 11. வணக்கம்
  அண்ணா
  சொல்ல வேண்டிய விடயத்தை மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்... யாவரும் அறிய வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. சில ஆசிரியர்கள் அப்படித்தான்! பக்கம் பக்கமாக எழுதினால்தான் மதிப்பெண் போடுவார்கள். இப்படி ஓர் அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு. என் டியுசனில் படித்த மாணவர்கள் அறிவியல் ஆசிரியர் பக்கம் பக்கமாக எழுதினால் மதிப்பெண் அள்ளி வீசுவார் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதி மதிப்பெண்களை வாங்கிவந்து என்னிடம் காண்பிப்பர். எப்படித்தான் படிக்காமலே பதிலின் நீளத்தை அளந்து அந்த ஆசிரியர் மதிப்பெண் போடுகிறாரோ என்று வியப்பேன். இன்னும் சிலர் சுருக்கமாக பாயிண்ட் பாயிண்டாக எழுதினால் போதும், தமிழ் தேர்வு என்றாலும் கூட வளவளா என்று எழுதாதே என்று சொல்லியிருக்க கேட்டிருக்கிறேன். நம்பள்கி சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியதே நமக்கு உரிமையில்லாத மாணவர்களை அடிப்பது கூடாதுதான். ஒரு காலத்தில் என் டியுசன் பிள்ளைகளை அடித்து திருத்திய நான் பின்பு அன்பால் திருத்த ஆரம்பித்து பெரிதும் வெற்றிபெற்றேன். அதை வைத்துச்சொல்கிறேன்! நல்லதொரு பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னறி நண்பரே! பரவாயில்லை சில ஆசிரியர்களாவது, சுருக்கமாக பாயின்ஸ் மட்டும் எழுதினால் போதும் எங்கின்றார்களே மிக நல்ல விஷயம்.

   நீங்கள் தான் இப்போது அன்பில் வெற்றி கண்டுள்ளீர்களே பாராட்டுக்கள்!

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 13. பசுமாட்டுக்கதை தெரியுமா உங்களுக்கு? ஒரு வகுப்பில் கட்டுரைகள் நிறையச் சொல்லிக் கொடுத்துப் பயில்வித்தனர். வீடு, காடு நகரம் பசுமாடு மரங்கள் வகைகள் என்று பலவிதகட்டுரைகள் சொல்லிக் கொடுத்திருந்தனர். நம் புத்திசாலி மாணவன் பசுமாடு பற்றிய கட்டுரை மட்டும் நன்றாகப் படித்திருந்தான். பரீட்சையில் தென்னை மரம் பற்றி எழுதச் சொன்னார்கள். நம் மாணவன் தான் அதி புத்திசாலி ஆயிற்றே. அழகாக எழுதினான்.. “ஒரு தோட்டத்தில் ஒரு தென்னைமரம் அதில் ஒரு பசுமாடு கட்ட்ப் பட்டிருந்தது...”என்று துவங்கி பசுமாட்டைப்பற்றி எழுதியே பரீட்ச்சையை ஒப்பேற்றிவிட்டான்......! in lighter vein ஒரு மாறுதலுக்காக புத்திசாலி மாணவன் பற்றி. . .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் உண்மை சார்! நம் பாடத்திட்டத்தில் எற்கனவே ஸ்பூன் ஃபீடிங்க். அதிலும், புத்தகத்தின் பின் பக்கம் 5 கேள்விகள் இருந்தால் அதில் 3 கேள்விகள் படித்தால் போதும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். நம் மாணவச் செல்வங்கள் கேட்கவே வேண்டாம் அந்த 3 லும் எது அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது என்று அதை மட்டும் மனனம் செய்வது என்று இப்படித்தான் போகின்றது. வேறு வந்துவிட்டால் நீங்கள் சொல்லியிருப்பது போல் படித்ததை அப்படியே எழுதுவது சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ......என்ன செய்வது....மிகவும் வேதனையான் விஷயம்.

   மிக்க நன்றி சார்!

   நீக்கு
 14. தோழி,
  பதிவு உண்மையை பேசுகிறது. அவர்கள் அங்கீகரித்தால் தான் திறமைக்கு மரியாதையா என்ன ?? நான் பள்ளி நாட்களில் எட்டாம் வகுப்புவரை ADD யால் பாதிக்கபட்டிருந்தேன். சில ஆசிரியர்கள் தப்புதப்பாய் பாடம் நடத்தி விட்டு, இப்படி நோட்ஸை பார்த்து படிக்கவில்லை என என்னை அசிங்கப்படுத்தியதும் உண்டு. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் என நான் அவர்களை மன்னித்து விட்டிருக்கிறேன்:))) இப்போ நெனச்சா ஜோக்கா இருக்கு. நான் அவர்கள் வயதின் பெருந்தன்மையோடும், அவர்கள் சின்ன பிள்ளை தனமாகவும் நடந்துகொண்டதுண்டு:)) ஆனாலும் அண்ணா ரவி, சிவா சார், போன்றோர் தான் கண்ணில் கிடைப்பதெல்லாம் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த எனக்கு உற்சாகம் கொடுத்தார்கள்!!
  so, இப்போ நான் மார்க் க்காக மாணவர்களை துன்புறுத்துவது கிடையாது. அவர்கள் தப்பு செய்தால் அதற்கான காரணத்தை யோசிக்கதொடங்குகிறேன். என்னை கேட்டால் ஆசிரியராக தகுதி தேர்வில் aptitude தான் முக்கியம் னு நினைகிறேன். ஆசிரியர்கள் கற்க வேண்டிய பாடம் உங்கள் பதிவு:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மைதிலி, நிச்சயமாகத் திறமைக்கு அங்கீகாரம் தேவையில்லை. அட்டென்ஷன் டெஃபிஷியன்சி டிஸார்டர்.....ம்ம்ம்ம் நல்லகாலம் ஹைப்பர் இல்லாமல் போனதே! அதனால் தான் தங்களால் அதிலிருந்து மீண்டு வர முடிந்திருக்கின்றது. ஆனால் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். வயதிற்கு மீறிய மெட்சுரிட்டி இருக்கும். (நல்ல விதத்தில்) உங்கள் புத்திசாலித்தனமும், மெட்சுரிட்டியும் தெரிகின்றது.

   aptitude முக்கியம் யெஸ் அதே போல் அட்டிட்யூட் அதுவும் முக்கியமாயிற்றே.!

   மிக்க நன்றி தோழி! இன்னும் இரு இடுகைகள் இருக்கின்றது. ஒன்று ஆசான் விஜு வின் கீழே உள்ள பின்னூட்டம் மற்றும்தோழர் கஸ்தூரியின் /மதுவின் / ஒரு பதிவை அடிப்படையாகக் கொண்டது. பார்ப்போம்

   நீக்கு
 15. ஆசிரியர் அடித்த அடியைத் தாங்கமுடியாமலும் சக மாணவர்களின் முன்பாக அடி பட்ட அவமானத்திலும் பள்ளியை - கல்வியை - விட்டு ஓடிப்போன மாணவச்செல்வங்கள் எத்தனை எத்தனை பேர்!?..

  திரு கில்லர்ஜி அவர்கள் கூறுவதிலும் - நியாயம் உண்டு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! ஐயா! ஆனால் அப்படி ஓடிப்போனவர்களில் பலர் இன்று உலக அளவில் பேசப்படுபவர்கள்தானே! ஸ்கூல்/கல்லூரி ட்ராப்ட் அவுட் ஆன பலர் இன்று உலகையே தங்களது அறிவுக் கூர்மையாலும், திறமையாலும் ஆளுமை செய்பவர்கள்தானே! கில்லர்ஜி சொல்வது சரியே. ஆனால் இந்தக் கால கட்டத்திலும் பெற்றோர் குழந்தைகளுக்கு உற்றத் துணையாக, அவர்களுக்கு வாழ்வை எதிர் நோக்கி நீச்சலடிக்கும் தைரியத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவா. மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 16. பாடநூலில் இருப்பதை அப்படியே கரைத்துக் குடித்துக் கக்குவதுதான் கற்றல் என்னும் அருமையான போக்கு பள்ளிக் கல்வியில்தான் இருக்கும் என்பதுதான் என் இத்தனை ஆண்டுக்கால நம்பிக்கை! (எங்கே, கல்லூரிக்கெல்லாம் போயிருந்தால்தானே தெரியும்?) ஆனால், கல்லூரிகளிலும் இதேதான் வாழ்வாங்கு வாழ்கிறது என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் திகைப்பை அளிக்கிறது கீதா அவர்களே!

  பள்ளிக் கல்வியாவது ஏட்டோடு சரி; ஆனால், கல்லூரியில், அதுவும் மருத்துவக் கல்லூரி போன்ற செயல்பாட்டு வழியிலேயே பெரும்பாலும் கற்க வேண்டியிருக்கும் படிப்புகளிலும் ஆசிரியர்கள் இதையே எதிர்பார்ப்பது துப்பட்டியில் வடிகட்டிய மடத்தனம்!! தெரியாமல்தான் கேட்கிறேன், மாணவன் மேற்கொண்டிருப்பது செயல்வழிக் கற்றல் -அதாவது, தானே ஒரு மாட்டைப் பரிசோதித்து அதைப் பற்றி அறிக்கை தர வேண்டிய நேரம். அந்த நேரத்தில் கூட மாணவன் தான் படித்த பாடநூலில் இருப்பதை அப்படியேதான் எழுத வேண்டும் என்றால், அவன் எந்த மண்ணாங்கட்டிக்குத் தன் கைக்காசைச் செலவழித்து, ஆடை அணிகலன் கருவிகள் படுக்கை கிடுக்கை என எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு, வேலை வினைகெட்டு அவ்வளவு தொலைவு லொங்கு லொங்கென்று அந்தச் செயல் வகுப்புக்கு வர வேண்டும்? எதற்காக அரசு / கல்வி நிறுவனம் தன் பணத்தைச் செலவிட்டு இத்தகைய வகுப்புகளை நடத்த வேண்டும்? வழக்கம் போல் வகுப்பறைக்கே வந்து இப்படியோர் அறிக்கையை அளித்து விடலாமே? இது கூடப் புரியாத, இந்த அளவுக்குக் கூட அடிப்படை அறிவு இல்லாதவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு எதற்காக வந்து எதிர்காலச் சமுதாயத்தைச் சீரழிக்கிறீர்கள்? வீட்டிலேயே உட்கார வேண்டியதுதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! பெரும்பான்மையானக் கல்லூரிகளும் மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றன. இதனைக் குறித்து ஒரு இடுகை உண்டு. எனவே இங்கு அதை விவரிக்க வில்லை.

   நம்மூரில் செயல் வழிக் கல்வி என்பது மிகவும் குறைவு. தங்கள் கருத்து மிகவும் சரியே. நியாயமானதே. இதில் இன்னும் பல இருக்கின்றன. வருகின்றோம் ஒரு இடுகையோடு. நம்மூரில் அரசாங்க மருத்துவமனைகள் அதுவும் கால்நடை மருத்துவமனைகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் குறித்து. கல்வி பற்றி ஒரு சில இடுகைகள் த இருக்கின்றோம். அப்போது இதற்கான விடயங்களைப் பகிர்கின்றோம்.

   மிக்க நன்றிநண்பரே!

   நீக்கு
  2. அப்படியே ஆகட்டும் அம்மணி / ஐயா! அந்தப் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

   நீக்கு
 17. அய்யா வணக்கம். எப்படி இப்படி அசமந்தமாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இப்போதுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன். இந்தக் கட்டுரை மிகவும் அருமை அய்யா. 34ஆண்டுக்காலத் தமிழாசிரிய வாழ்வில் பலநூறு ஆசிரியர்களையும் பலஆயிரம் மாணவர்களையும் பார்த்துவிட்டேன்... நீங்கள் எழுதியது மிகையே அல்ல.. இன்னும் கேவலமான ஆசிரியர்களும் உண்டு - கல்வித்துறையின் சாபக்கேடு அது. மிகச்சிற்நத ஈடுபட்டுப் பணியர்ற்றும் நல்ல ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன் அவர்கள்தான், ஆங்காங்கே சிலராவது இன்னும் மனிதராகத் திரியக் காரணம். இதுபோல நிறைய என்தளத்தில் நானும் எழுதியிருக்கிறேன் அ்யயா அந்த எனது கல்விச்சிந்தனைகளின் தொகுப்பைத்தான் “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” எனும் ஒரு நூலாகக் கடந்த மாதம் வெளியிட்டேன். தங்களைத் தொடர்வேன் அய்யா. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா! என்ன ஐயா இது அசமந்தம் என்றேல்லாம்....

   தங்களின் வருகையும், தொடர்கின்றேன் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது ஐயா! உங்களைப் போன்ற அறிவாளிகளின் ஊக்கத்தில்தானே எழுதுகின்றோம். நீங்கள் சொல்லியிருக்கும் கல்வித்துறையில் இருக்கும் சாபக் கேடு பற்றி இன்னும் இடுகைகள் கொடுக்கப் போகின்றோம்.

   தங்கள் தளத்தில் உள்ள அந்த இடுகைகளையும் வாசித்துள்ளோம். புத்தகங்களைப் பற்றியும் அறிவோம் ஐயா. தங்கள் புத்தகத்தின் இந்தத் தலைப்பு எங்களி மிகவும் கவர்ந்தது. வாசிக்கின்றோம்.

   மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 18. சகோதரி,
  முதன் முறையாகத் தங்களின் எழுத்தென்று புரிந்து கருத்திடுகிறேன்.
  ஆசிரியரால் பள்ளிகளில் நேர்ந்ததைவிட எனக்கு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்திலும் கல்லூரியிலும் நேர்ந்த் கொடுமைகள் அதிகம்.
  தங்களின் மகனைப்போலவே,
  //அவன் தனது அறிவு சார்ந்த நேர்மையான, நல்ல விஷயங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதும் இல்லை.//
  எனது செய்முறைத் தேர்வுகளிலும் என்னைப் பழிவாங்குவதாகச் சொல்லிப் பழிவாங்கிக் காட்டிய ஆசிரியர் இருக்கிறார்கள்.
  நான் செய்த தவறு “ கேள்விகள் கேட்பது “ அது மட்டுமே!
  தெரிந்ததையும் தெரியாததையும் தவறெனப்பட்டதையும்....!
  ஒரு கட்டத்தில் முடங்கிப் போகும் அளவிற்கு இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
  வகுப்பறையை விட்டு எத்தனையோ முறை வெளியேற்றப்பட்டிருக்கிறேன்.
  பிரச்சனை, அவர்கள் என்னை அறிந்ததாலும் நான் அவர்களை அறிந்து வைத்திருந்ததாலும் தான் நடந்தது.
  ஆசிரியனுக்கு எல்லாம் தெரிந்திருக்க முடியாது. அவன் ஞானி அல்ல.
  தெரியாது என்று ஒத்துக்கொள்வதில் இருக்கும் நேர்மையை,
  வெறியோடு அதைத் தெரிந்து மாணவர்க்குச் சொல்லித் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையை,
  அது போன்ற ஒரு சூழல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற அறிவை அவர்கள் பெற்றிராததே இது போன்ற நிலைக்குக் காரணம்.
  இரண்டாண்டுகளுக்கு முன் நான் படித்த நிறுவனத்துக்குப் போயிருந்தேன்.
  என் பேராசிரியரால் ஒரு மாணவன் வெளிநிறுத்தப்பட்டிருந்தான்.
  அருகில் நெருங்கி ஆசிரியர் யார் என்று கேட்டேன்.
  என் ஆசிரியர் பெயரை நடுக்கத்தோடு சொன்னான்.
  தற்பொழுது அவரே அங்கு முதல்வர். என்பதையும்!

  “உள்ளிருப்பவர்களை விட நீ நன்றாய் வருவாய்“ என்று வாழ்த்திப் புறப்பட்டேன்.
  பலநேரங்களில் வகுப்பறைகளுக்கு வெளியே நாம் கற்றுக் கொள்ளும் பாடத்தை எந்த ஆசிரியரும் கற்றுத் தர முடியாது.
  என் பால்யத்தின் சிறகுகளை மீண்டும் விரித்து இறந்த காலம் நோக்கி ஒருபயணத்தைக் கட்டமைத்த சிறந்த பகிர்வு சகோதரி!
  வாழ்த்துகள்!
  தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசானே! உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போதே நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போன்றதை சிறிது எதிர்பார்த்தோம். தங்கள் அறிவு சிறப்பானதாக இருப்பதால் அது மதிக்கப்பட்டிருக்காது என்பதை ஊகிக்க முடிந்தது. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வது சரிதான் என்றாலும் அதுவும் கூட அதைப் புரிந்து கொள்ள முடிந்தவர்கள் மத்தியில் மட்டுமே அந்தச் சிறப்பு. பொதுவாக அறிவுள்ளவர்களை இந்தக் கல்விச் சமுதாயம் புரிந்து கொள்வதில்லை என்பதே உண்மை. தங்களது இந்தப் பின்னூட்டம் எங்களுக்கு மற்றுமொரு இடுகைக்கு வழி வகுத்துள்ளது. வருகின்றோம். அந்த பதிவுடன். நிற்க

   உங்கள் அறிவு இகழப்பட்டிருக்கலாம் கடந்த காலத்தில். அதை வாசித்த போது மனது உண்மையாகவே வேதனித்தது. ஆனால் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம். இன்று உங்களை இந்த வலை உலகமே ஒரு ஆசானாக, அறிவு ஜீவியாகப் பார்த்து மெச்சுகின்றது. போற்றுகின்றது. நாங்கள் எங்களுக்கு, எங்கள் இடையில் இப்படி ஒரு அறிவாளியான, நல்ல மனம் படைத்த ஒரு ஆசிரியர் நண்பராகக் கிடைத்துளாரே, எவ்வளவு கற்றுத் தருகின்றார் என்று பெருமைப்படுகின்றோம். அன்று உங்களை இந்த கல்வி உலகம் புறக்கணித்திருக்கலாம். ஆனால் நாங்கள் (இந்த வலையுலகில் உள்ள எல்லோரும்) உங்களை எங்கள் தலை மீது வைத்துக் கொண்டாடுகின்றோம். இந்த சந்தோஷத்தை நாம் கொண்டாடுவோமே! நீங்கள் சொல்லியிருப்பதே என் மகனுக்கும் .அதைப் பற்றி ஒரு பதிவு உண்டு. அதில் பேசுவோம்.

   மிக்க நன்றி ஆசானே!

   நீக்கு
  2. பல பதிவுகள் நான் எழுதியிருந்தாலும் அதில் நான் எனது பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். துளசி என்னை வற்புறுத்தாத நாள் இல்லை எனலாம். ஆனாலும் தவிர்த்திடுவேன். மதுரைத் தமிழனும் அதைப் பற்றிச் சொன்னார். துளசி அதைவாசித்தபின் என்னை என் பெயரை இட வைத்தார். என்றாலும் நான் இடுவதை விட்டுவிடுகின்றேன். மிகவும் அவசியாமாக இருந்தால் மட்டுமே எனது பெயரைத் தருகின்றேன். நண்பர் துளசிதான் எனது ஆர்வங்களில் நான் பங்கு பெறக் காரணமாகவும், ஊக்குமும் அளிப்பதாலும் அவர் என்னை எவ்வளவு வற்புறுத்தினாலும் பல சமயங்களில் பெயரிட விடுபடுகின்றது.

   மிக்க நன்றி ஆசானே!

   நீக்கு
  3. இது என்ன? நான் தவறாக எழுதிவிட்டேனா? ஓ! இருவரும் ஒரே பெயரில் எழுதுவதுண்டோ அது இன்னும் பெருந்தன்மையான பண்பாயிற்றே! இது எனக்குப் பிடிபட வில்லை. மதுரையில் தங்களிருவரையும் சந்திக்காமல் வந்துவிட்டதற்காக இப்போது வருந்துகிறேன். எழுதியது உங்களிருவரில் யாராயிருப்பினும், பிரிந்துநிற்க விரும்பாத நண்பருக்கும், அன்புச் சகோதரிக்கும் என் வணக்கமும். நன்றியும். தொடருங்கள், தொடர்வேன்.

   நீக்கு
  4. ஐயா!
   நீங்கள் தவறாக எழுதவில்லை! நீங்கள் எங்களில் யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் வரவேற்போம். அதில் பாகுபாடு என்பதே இல்லை. மதுரைக்குத் துளசி வர முடியாத சூழல். முதலில் கீதா வருவதற்கான பிரயாண ஏற்பாடுகள் அனைத்தும் செய்திருந்தும், இறுதியில் வர முடியாமல் போனது. எனவே எங்களால் தங்களைச் சந்திக்க முடியவில்லை. பலரையும். நண்பர்கள் மது/கஸ்தூரி, மைதிலி அவர்களையும்தான்.

   எங்களில் துளசி பாலக்காட்டில் ஆங்கில ஆசிரியர். கீதா சென்னையில். எங்கள் இடுகைகள் எல்லாமே சென்னையில் இருந்து தான் பதிவேற்றம் ஐயா. துளசியின் பதிவுகளும் அவர் எழுதிய பின் கீதாவிற்கு அனுப்பித் தரப்படும் இல்லை வாசிக்கப்படும். சென்னையில்தான் பதிவிடப்படும்.

   தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 19. காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது ,இன்று டிவி யில் ,சென்னையில் ஒரு PTஆசிரியரை பள்ளி வளாகத்திலேயே புகுந்து மிக கொடுமையாக ,கோமா ஸ்டேஜ் போகும் அளவிற்கு அடிக்கிறார் ஒரு மாணவனின் தந்தை !
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பகவான் ஜி! மிகவுமே மாறி விட்டது. மாணவ ஆசிரிய உறவு முறைகளும் சரி, பெற்றோர் ஆசிரிய உறவு முறைகளும் சரி மிகவும் மோசமாகி உள்ளது! இது வேதனைகுரிய ஒன்றெ!

   மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 20. "அடிப்பதில்லை என்றாலும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் அளவில் மதிப்பெண்களில் கைவப்பது, மனம் வலிக்கும் அளவு, சுயமரியாதையைச் தரக்குறைவாகப் பேசுவது போன்றவை நடக்கத்தான் செய்கின்றது. ஆசிரியர்கள்/பேராசிரியர்கள் தங்கள் ஈகோவைத் தவிர்த்து அவர்களின் தன்னம்பிக்கையையும், அறிவையும் வளர்க்கும் விதத்திலும், அவர்களதுத் தனித்திறமையை அறிந்து ஊக்கப்படுத்தி அதை வெளிக் கொணரும் வகையில் நடந்து, மாணவர்களின் மனதில் இறைவனுக்கு அடுத்த இடத்தில் இடம் பெறலாமே." என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 21. நல்ல பதிவு
  ஸ்ரீராமுக்கு பாரட்டுக்கள் ..
  தம எட்டு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரரே! தங்கள் கருத்திற்கு. ஏற்கனவே கல்வி சம்பந்தபட்ட இடுகைகள் எல்லாம் பாதி பாதியாக நிற்கின்ற வேளையில் இந்த இடுகை பற்றியும் எழுதி பாதியில் இருந்த போது நண்பர் ஸ்ரீராமின் பின்னூட்டம் அதற்கு நல்ல காரணமாக அமைந்து உதவியது. அது போல உங்கள் பதிவும் உதவி இருக்கின்றது...வரும் சில நாட்களில் பதிவு இங்கிருந்து...

   நீக்கு
  2. கஸ்தூரி உங்கள் ஓட்டிற்கு அன்பளிப்பு வேட்டியோ, சட்டையோ, பண முடிப்போ இல்லை...ஹாஹஹஹ் உங்கள் பதிவுக்கான ஓட்டு! போட்டுடறோம்.....ஹஹ

   நீக்கு
 22. அன்புள்ள பெற்றோர்களே!

  நல்லாசிரியர்கள் ஆகத் தெரியாத ஆசிரியர்களாக இருந்துகொண்டு...இங்கு எதைக் கொடுத்து நல்லாசியர் விருதை எப்படி வாங்கவேண்டும் ....என்பதை நல்லாவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

  அக்கறையுள்ள பெற்றோரின் அரவணைப்பில் இருந்ததால் ... தலையில் குட்டு வைக்காமல்...தட்டிக் கொடுத்ததால் இன்று கால்நடை மருத்துவராக மிளர வைக்க முடிந்திருக்கிறது என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது.

  ஊமைக்கனவுகள் அய்யா போனமாதத்தில் நடந்த ஆங்கிலத் தேர்வுபற்றி குறிப்பிட்டு இருந்தார். வேறு ஒருஆசிரியர்...ஒரு மாணவன் P.W.D. என்பதற்கு PUBLIC WORK DEPARTMENT என்று எழுதியிருக்கிறான். அந்த விடை தவறு என்று சொல்லி மதிப்பெண் போடவில்லை என்று வருத்தப்பட்டிருந்தார்.

  என்ன செய்வது? இன்றைக்கும் சரியான விடை தெரியாமலே சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்...!

  ‘ எல்லா மாணவர்களையும் தங்கள் குழந்தைகளாக மனதில் கொண்டுவிட்டால் அவர்களை அடிக்கவோ, மனது புண்படும் அளவு பேசவோ, எதிர்காலம் பாதிக்கும் அளவிலோ செயல்படத் தோன்றாதல்லவா. ’

  நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்களின் விரிவான பதிலிற்கும், கருத்திர்கும். விஜு ஆசான் சொல்லி இருப்பது போல பல அறிவு சார்ந்த விடயங்கள் தெரியாமல் தான் ஆசிரியர்கள் வருகின்றார்கள். அப்படி இருக்கும் போது மாணவர்களுக்கு எப்படி கற்கும் ஆர்வம் வரும்? இன்னும் கல்வி சம்பந்தப்பட்ட இடுகைகள் வர இருக்கின்றன. ஐயா!

   மிக்க நன்றி ஐயா எங்கல் பதிவைப் புரிந்து கொண்டதற்கு...

   நீக்கு
 23. சில நேரங்களில் மாணவர்களின் புத்திசாலித் தனத்தை அறியும் ஆசிரியர்கள் பொறாமைப் பாட வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறன். இது குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் அதிகம் இருக்கக் கூடும்.
  பத்தாம் வகுப்பு படிக்கும்போது விடை சரியாக சொன்னதற்காக அடிவாங்கிய அனுபவமும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா....சரியான விடைக்கு அடியா! ம்ம் வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஆம் சில நேரங்களில் ஆசிரியர்கள் பொறாமைப்படுகின்றார்கள் அது தங்கள் அறிவை வளர்க்கும் விதத்தில் நேர்மறை சக்தியாக இருந்தால் பரவாயில்லை. ஈகோவாக மாறும்போதுதான் பிரச்சினையாகின்றது.

   மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு.

   நீக்கு
 24. எப்படி என் கண்களுக்கு படாம போச்சு இந்த பதிவு !!
  அருமையான பதிவு சகோதரி கீதா ..
  உங்கள் மகனுக்கு ஏற்பட்டது போல நிறைய விஷயங்கள் இருக்கு ..எலியின் இதயம் சயன்ஸ் புத்தகத்தில் பெரிசா இருக்கும் அதை அப்படியே வரைஞ்சா எப்படின்னு நான் சிறிய அளவில் வரைந்தேன் அதை பார்த்த எக்சாமினேஷன் ஆசிரியருக்கு மிக ஆச்சர்யம் திட்டு விழும்னு நினைதேன் ஆனா பாராட்டினார் :)
  ஏனென்றால் என் வகுப்பில் எல்லாரும் எலி இதயத்தை மனித இதய அளவுக்கு வரைந்து வச்சிருந்தாங்க ..
  உங்க மகன் செய்தது மிக சரி நான் முன்பு இங்கே farm வாலண்டியர் வேலைகள் செய்வதுண்டு அப்போ வெட்னரி மாணவர்கள் observation செய்வாங்க ..குட்டியூண்டு நோட் ..அதில் ரிப்போர்ட் அவ்ளோதான் அனலைஸ் செய்தால் போதும் .
  அதை பற்றி கட்டுரை எழுத வேண்டியதில்லை .நம் நாட்டில் பல ஆசிரியர்கள் இப்படித்தான் .
  சொன்னா வெக்ககேடு ..ஒரு ப்ரொபசர் நான் M .Sc படிக்கும்போது டார்வின்ஸ் தியரி யில் giraffe .//.jiraf //என்று ஒழுங்கா pronounce செய்த என்னை ஏஞ்சல் நீ தவறாக உச்சரிக்கிறாய் அது jirafee என்றார் ..வெறுத்துபோயிட்டேன் ....
  இத்தனைக்கும் அவர் ph.d வேறு !!
  மேலும் சில ஆசிரியர்களுக்கு ஈகோ என்ற ஒன்றுண்டு .இங்கே மகள் பள்ளியில் ஒருநாள் கணித ஆசிரியை ஹோம்வொர்க் கொடுத்தார் அவர் போட்ட கணக்கு தவறு ..நான் எவ்ளோ சொல்லியும் பொண்ணு கேக்காம ..//உங்கள் மெதட் தவறான விடை தருதுன்னு ஆன்சர் சீட்ல எழுதி கொடுத்திட்டா ..இவள் மட்டுமில்லை ஐந்து பிள்ளைங்க செய்திருக்குங்க ..அந்த ஆசிரியை கொஞ்சம் depression உள்ளவர் ..முன்கொபியும் கூட இவளை மற்றும் இன்னும் நாலு பிள்ளைங்களை ஒரு நாள் lower செட்டில் maths வகுப்பில் உக்கார வைச்சாராம் :) ஆனா என் பொண்ணு அப்படியே கீதா மேடம் மகன் போலதான் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் தான் என்று அவள் செய்தது தான் சரி என்று நின்னா :).
  எத்தனையோ நல்லாசிரியர்கள் இருக்காங்க அன்பால் மட்டும் திருத்திஎடுப்பாங்க சிலருக்கு மட்டும் ஒரு ஈகோ :( அவங்களா திருத்திக்கனும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனா என் பொண்ணு அப்படியே கீதா மேடம் மகன் போலதான் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் தான் என்று அவள் செய்தது தான் சரி என்று நின்னா :).//

   ஹஹஹ் அருமை! ரொம்பவே பெருமையாக இருக்கின்றது சகோதரி!

   நாம் அறிவு சார்ந்த விடயங்களுக்கு ஒரு நாளும் விட்டுக் கொடுக்கக் கூடாது சகோதரி. மௌனமாகக் கூடப் போராடலாம். ஏனென்றால் அறிவு என்பது தாழ்மையானது அல்லவே. அதை நாம் நிலை நிறுத்த வேண்டும். அதே போன்று தவறு என்றாலும் ஈகோ பாராது ஒத்துக் கொண்டுத் திருத்திக் கொள்ள முன்வரவேண்டும். அப்பொதுதான் அறிவு தேக்கமுறாமல் விரிவடையும். நமது ஊரில் அது விரிவாகாஅமல் இருப்பதற்குக் காரணமே இந்த ஈகோதான். நீங்கள் சொல்லியிருப்பது போல்.

   பரவாயில்லை உங்களை அந்த ஆசிரியர் சரியாகப் புரிந்து கொண்டு பாராட்டினாரே! நண்பர் ஸ்ரீராம் சொல்வது போல (நம் வலை அன்பர்கள் பலர் ஆசிரியர்கள்தான் அவர்களைப் போல) நல்ல ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். மகிழ்வாகத்தான் இருக்கின்றது.

   தங்கல் அனுபவங்களையும் இங்குக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சகோதரி! நல்ல பின்னூட்டம் நிறைய தெரிந்து கொண்டோம்.

   நீக்கு