வெள்ளி, 23 செப்டம்பர், 2016

திரைப்படங்களாகும் திருமணங்கள்??!!

சமீப காலமாக நான் கலந்து கொள்ளும் திருமணங்கள் எல்லாமே எனக்கு ஒரு புறம் பிரமிப்பையும், மறுபுறம் வருத்தம், ஆதங்கம் என்று இன்னபிற உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. ஆடம்பரம், உதட்டளவுப் பேச்சுகள், குடும்ப உறவுகள் வலுவிழந்து வருவது மற்றும் இத்தனை ஆடம்பரத் திருமணங்கள் நடந்து சில மாதங்களிலேயே முறிவது.ம் குடும்ப வாழ்வு தொலைந்து வருவதும் என்று அந்த இன்னபிற உணர்வுகளை வகைப்படுத்தலாம்.
மண்டப வளாகம் மிகப் பெரியது-நுழைவு வாயில் தோரணங்களுடன்

அன்றைய திருமணங்கள் என்று பழம் பஞ்சாங்கம் பேசக் கூடாதுதான். காரணம் நமது வாழ்க்கை முறை முழுவதுமே மாறிவிட்டது, மாறி வருகின்றது. என்றாலும், அன்றைய திருமணங்கள் பல நாட்கள் நடந்த போதிலும் எல்லா பொறுப்புகளும் குடும்ப அங்கத்தினருக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டு கல்யாணத்திற்குத் தேவையான பலகாரங்கள் உட்பட, ஆடம்பரம் இல்லாமல், ஆடம்பரச் செலவுகள் இல்லாமல், குடும்பத்தின் ஒற்றுமையையும், உறவையும் வளர்த்தது என்பதை இங்கு மறுக்க இயலாது.

கிராமம் என்றால் அந்தக் கிராமம் முழுவதும் பெரும்பாலும் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். தெரு முழுவதும் அடைத்துப் பந்தல் போடப்பட்டு, தோட்டங்களில் இருக்கும் மருதாணி பறிக்கப்பட்டு பாட்டம் பாட்டமாக அரைக்கப்பட்டு எல்லோரும் கூடி உட்கார்ந்து அதை பெரியவர்கள் சிறியவர்களுக்கு இட்டு விடுவது என்று பல நிகழ்வுகள் ஒரு குடும்பத்திற்குத் தேவையான அன்பு, பாசம் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தியது. இப்படியான நிகழ்வுகள் திருமண உறவின் புனிதத்தையும் வளர்த்ததுவே அல்லாமல் பணவிரயமோ இல்லை அதீதமான செலவையோ ஏற்படுத்தியது இல்லை.  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஆதாரமாக இருந்து வந்தது.
இவை என்னவென்று தெரிகிறதா? பூக்கள் அல்ல. ஒப்பனை செய்து கொண்ட முள்ளங்கி. நாங்கள் அழகுக் காட்சிக்குத் தயாராகின்றோம்

இப்போது அதே மருதாணி இடும் நிகழ்வு சமீப காலங்களில் வட இந்திய கலாச்சாரப்படி “மெஹந்தி பார்ட்டி” என்று தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் நடைபெறுகின்றது. இதற்கென்று ஒரு நாள் தனியாக ஒதுக்கி விடுகிறார்கள். மிக மிக எளிமையாக நடந்து வந்த கேரளத்து மேல்தட்டு, நடுத்தர வர்கத்துக் கல்யாணங்கள் கூட சமீப காலமாக மாறி வரத்தொடங்கியிருக்கின்றன. அங்கும் இப்போது “மைலாஞ்சி பார்ட்டி” என்று நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதற்கென்று தொழில் ரீதியாக பல வடிவங்களில் மிக அழகாக வரையும் கலைஞர்களும் இருக்கின்றார்கள். கலை மிக அழகான கலைதான். அதைச் செய்யும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வருமானமும் கிடைக்கிறதுதான். தமிழகத்தில் சமூக அந்தஸ்தாகவும் மாறிவருகிறது.
இங்கு பாருங்கள் எத்தனையோ ஏழைகள் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்க, எத்தனை காய்கறிகள் ஒப்பனைகளுடன் காட்சியில்! இதற்குப் பதிலாக 50 ஏழைகளுக்கு உணவு அளித்திருக்கலாம். பதிவர்களே நீங்களேனும் உங்கள் வீட்டுக் கல்யாணங்களில் தவிர்க்க முயலுங்களேன்

இது ஒரு புறம் இருக்க, திருமணங்கள், மிகவும் ஆடம்பரமாக, தற்போது சினிமா ஷூட்டிங்க் போல் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஃபோட்டோ ஷூட் என்று ஒரு தனி நிகழ்வே நடக்கிறது.

திரைப்படத்தில் வருவது போன்று கல்யாணப் பெண்ணை, பையன் தூக்கித் தட்டாமாலை சுற்ற, பெண் தனியாகத் தட்டா மாலை சுற்ற, அவளது பாவாடை குடை போல விரிந்து சுற்றி அமரும் போது அவளைச் சுற்றி அந்தப் பாவாடை விரிந்து இருப்பது என்று பல பல கோணங்களில், விதம் விதமாக இருவரையும் வைத்து படம் பிடித்தார்கள்.

இனி எதிர்காலத்தில் சினிமா தியேட்டரில் படமாக ஒரு திருமணத்தைப் போட்டாலும் போடுவார்கள். வழ வழ என்று வருமே சில புத்தகங்கள் அழகான புகைப்படங்களுடன் அப்படி வரவேற்பு ஆல்பம், புத்தகம் போல் பெரியதாக இருந்தது. அதற்கு 1.50 லட்சமாம். அப்புறம் மற்ற ஆல்பங்களைக் குறித்துக் கொள்ளுங்கள். இதற்காக கல்யாணத்திற்கு முன்பே ஏதேனும் ஒரு வெளியிடத்திற்குச் சென்று புபைப்படம், காணொளிகள் எடுப்பதும் ஆரம்பித்திருக்கிறது.

மட்டுமல்ல சமீபத்தில் நான் பங்கெடுத்த திருமணங்களில், ஒன்றில் முன்னோட்டம் என்று சினிமாவிற்கு முன்னோட்டம் போடுவது போல் போட்டார்கள், கட்செவி (Whatsapp) குழுமத்திலும் பகிர்ந்தார்கள்! அதுவும் பஞ்ச் டயலாக்குடன், இசையுடன். இப்போது இத்தகைய ஆடம்பரத் திருமணங்கள் சமூக அந்தஸ்தாகிவிட்டது. திருமணங்கள் ஆடம்பரமாகி வருகிறது ஆனால் புனிதமான உறவுகளைக் களைந்து வருகிறது. இப்படிச் செய்யப்படும் திருமணங்கள் ஒரு சில மாதங்களில் முறிந்தும் விடுகிறது என்பது மனதிற்கு வேதனையும் தருகிறது.

கடலூரில் நான் கலந்து கொண்ட என் நெருங்கிய உறவினரின் மகனின் திருமணத்தில் நான் கண்ட புகைப்பட, காணொளிக் குழு ஸ்வாரஸ்யமாக இருந்தது. மொத்தம் புகைப்பட, மற்றும், காணொளிக் குழுக்காரர்கள் 7 பேர். அதில் ஒன்று “ஹெலி கேம்” எனப்படும் புகைப்பட, காணொளிக் கருவி. திரைப்படங்களில் கழுகுப் பார்வையில் பிரம்மாண்டமானக் காட்சிகளைக் கூட பறந்து பறந்து, மிக துல்லியமாகப் படம் பிடிக்கும், தொலையியக்கி - ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ஹெலிக்காப்டர் புகைப்படக் கருவி.  

ஹெலி கேம் பறந்து பறந்து புகைப்படம்-காணொளி எடுக்கின்றது
ஹெலி கேமை இயங்க வைக்கும் ரிமோட்
இப்போது இந்த ஹெலிகாப்டர் போன்று இருக்கும் இந்த புகைப்பட/காணொளிக் கருவி பறந்து பறந்து பல கோணங்களில் புகைப்படம் காணொளி எடுப்பது என்பது திருமணங்களில் பிரபலமாகி வருகிறது. ஒருவர் ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே இயக்குகிறார். நான் இதைப் பற்றி அறிந்திருந்தாலும் இது தான் முதல் முறையாக இந்தக் கல்யாணத்தில் நேரில் பார்த்தேன். நம் அருகில் நம் தலைக்கு மேலே உயரத்தில் பறந்த போது காற்று அடித்து, மெல்லிய சத்தத்துடன் பறந்தது ஸ்வாரஸ்யமாக இருந்தது. நான் அதை இயக்குபவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதன் விலை 1.5 லட்சம். இந்த வகையில் நிழற்படம் மட்டும் எடுக்கும் வகையிலும், அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப மிகக் குறைந்த விலையிலும், சாதாரண மனிதர்கள் வாங்கும் விலையிலும் இருக்கிறது. (வெங்கட்ஜி, மற்றும் செந்தில் குமார் அவர்கள் நினைவுக்கு வந்தார்கள். எனக்கும் ஆசை இருக்கிறது என்பது வேறு விஷயம்.)

பெண்கள் பொதுவாகப் புகைப்படக் கலையில் இறங்குவது குறைவுதான். நான் இதுவரை எந்தத் திருமண நிகழ்வுகளிலும் தொழில் முறை பெண் புகைப்படக் கலைஞரைக் கண்டதில்லை. இந்தப் புகைப்பட குழுவில், ஒரு குட்டிப் பெண், சுறு சுறுப்பாக ஓடி ஓடி, கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து, பல கோணங்களில் ஒரு ஆண் எடுப்பது போன்று எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆர்வமுள்ள புகைப்படக் கலையில் ஒரு பெண் இப்படித் தொழில்ரீதியாக இயங்கியதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருந்தது. ஏனென்றால், நிகழ்ச்சிகளுக்கு எடுப்பது என்பதற்கு நேரம் காலம் பார்க்காமல் இயங்க வேண்டும். பல வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிவரும்; அடிக்கடிப் பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆண்களுடன் பணியாற்ற வேண்டிவரும். தைரியம் வேண்டும். எல்லாம் அவரிடம் இருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதில். அழைக்கப்படும் போது இப்படிக் குழுவுடன் இணைந்து கொள்வதும் உண்டு என்றாலும் அவர் தனிப்பட்ட முறையிலும் இயங்குவது தெரிந்தது. தொழில்ரீதியான டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கிறார். படிக்கும் போதே நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தொடங்கினாலும், தொழில்ரீதியாக இயங்க ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகிறதாம்.

ஜிங்கல் டேபி (Jinkal Dabi) புகைப்படக் கலைஞர் முகநூல் முகவரி. Jinksphotography265

அவர் பெயர் ஜிங்கல் டேபி (Jinkal Dabi) அவரது அனுமதியுடன் அவரது புகைப்படத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதுதான் அவரது முகநூல் முகவரி. Jinksphotography265 அதில் அவர் கடலூர் திருமணத்தில், தான் எடுத்த திருமணப் பெண்ணின் புகைப்படங்களையும் பதிந்திருக்கிறார். அருமையாக எடுக்கிறார். தவிர ஒரு சில அழகான படங்களையும் பகிர்ந்திருக்கிறார். ஆத்மார்த்தமாக, அர்ப்பணிப்புடன் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தோழமை உணர்வுடன், சிரித்த முகத்துடன் அன்பாக, இனிமையாகவும் பழகுகிறார். எனக்கு நல்ல தோழியாகி விட்டார். அவரும் இங்கு நான் திருமணங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் அதே கருத்துகள் அவருக்கும் இருப்பது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

வாழ்த்துகள் ஜிங்கல்! அவர் மேலும் பல நிகழ்வுகளுக்குப் பணியாற்றி, பெண் புகைப்படக் கலைஞராக வெற்றி பெற வாழ்த்துவோம்! 

----கீதா
திங்கள், 19 செப்டம்பர், 2016

பொன்மகள்

நண்பர் ஸ்ரீராம் அவர்கள், கேவாபோக (கேட்டு வாங்கிப் போடும் கதை) விற்காக என்னைத் தொடர்பு கொண்டதும், “நான் இப்போதுதான் ஒரு கதை எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். அதையே உங்கள் “எங்கள் ப்ளாகில் வெளியிட அனுப்புகிறேன். அதன் பின் எங்கள் தில்லைஅகத்திலும் போட்டுக் கொள்கிறேன்” என்றேன். ஓகே என்றார்.

கதை பிறந்த கதை. வண்டியில் சென்று கொண்டிருந்த போது “குழந்தைகள் விற்பனை. ரூ 6,00,000  என்று பிரபல இதழின் பரபரப்பான பெட்டிச் செய்தி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த ஓர் உண்மைச் சம்பவத்தையும் இணைத்துக் கொஞ்சம் டச்சப் செய்ததில் “பொன்மகள்” பிறந்தாள். இதோ அவளை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.

இதை “எங்கள் ப்ளாகில்” வெளியிட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை எல்லாம் வெளியிட்டு வரும் சமயத்தில் எனதும் வருவதில் மகிழ்ச்சி!  சாதாரணமான என்னையும் கௌரவப்படுத்தும் “எங்கள் ப்ளாகிற்கு” மனமார்ந்த நன்றிகள் பல.

எங்கள் ப்ளாகில் வெளியிட்டு அங்கு விமர்சித்துக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அங்கு "ஜீவி" சார் அவர்கள் சொன்ன பின்னூட்டக் கருத்து எனது மனதிற்கும் ஏற்புடையதாகவும், முதலில் இப்படி எழுதி, பின்னர் மாற்றி எங்கள் ப்ளாகிற்கு அனுப்பினேன். எனவே இங்கு நான் முதலில் இதை முடித்த விதத்தில் தருகிறேன். ஜி எம் பி சார் சொன்ன 600000 தவறையும் திருத்தியிருக்கிறேன்.


                                   பொன்மகள்


என் நண்பன் கார்த்தியிடமிருந்து அலைபேசி அழைப்பு.

“அக்கா எப்படி இருக்க? வெளியே இருக்கியா? பிஸியா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

இப்படித்தான் அடுத்தடுத்து கேள்வி கேட்டு, பிசியா என்றும் கேட்டுவிட்டு முற்றுப் புள்ளி வைக்காமல் தொடர்ந்து பேசுவான். அன்றைக்கு முக்கியமான விஷயம் என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தான்.

“நல்லாருக்கேன் கார்த்தி!. கடைக்கு வந்தேன். என்ன விஷயம் சொல்லுடா” என்று சொல்லிக் கொண்டே கடையை விட்டு வெளியில் வந்து, யாரும் இல்லாத இடம் பார்த்து ஒதுங்கி நின்றேன்.

“எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிடிக்கும் உனக்குத் தெரியும்ல.. இப்ப எங்க வீட்டுக்கு ஒரு “பொன்மகள்” வந்தால்?!.….ஒரு பக்கம் சந்தோஷம்…இன்னொரு பக்கம்… அக்கா என் வயசு என்ன? 47. என் வீட்டுக்காரி வயசு 45. அக்கம் பக்கம் என்ன சொல்லும்னு ஒரு வெட்கம்….அதான் உங்கிட்ட ஒரு ஆலோசனை கேட்கலாம்னு”

இப்படிப் பேசிக் குழப்புவதும் அவன் வழக்கம்.

“ஓ! கார்த்தி! புரியல.. இருந்தாலும் என் யூகம் இது…..சந்தோஷமான விஷயம்தான்….. உனக்கும் உன் மனைவிக்கும் இந்த வயசுலயும் பெத்து, வளக்க ஆரோக்கியமும், பொறுமையும் இருக்குன்னா எதுக்கு எங்கிட்ட கேக்கணும்? அக்கம் பக்கத்துக்குப் பயப்படணும்டா?

“ஐயோ! அக்கா….போதுமே உன் யூகம்….”பெத்து”ல “பெ” எடுத்துட்டுத் “த” போட்டுக்க…
“அட! “ தத்து” அதுவும் நல்ல விஷயம்தான். ஆனா, நல்லா யோசிச்சுச் செய்யணும்.. சரி விஷயத்தைச் சொல்லு.”

அவன் விவரித்தான். அவனது மனைவியின் தூரத்து உறவினரான பெண்ணிற்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்கள் இருவரும் பார்க்கச் சென்ற போது அந்த வீடு இழவு வீடு போல் துக்கத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டதும் இவர்களுக்குக் குழப்பம்.

ஒரு வேளை குழந்தை?……என்று மனதில் தோன்றிய எதிர்மறைச் சிந்தனையைப் புறம் தள்ளிவிட்டு மெதுவாக உள்ளே சென்றால், அங்கே அந்தப் பெண், “ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க. தினப்படி வாழ்க்கையே கஷ்டமா இருக்குது, இதுல மூணாவதும் பொண்ணு”. என்று அழுது கொண்டே இருந்திருக்கிறாள். இரு வீட்டாரும் பெண் குழந்தை என்று வசை பாடிக் கரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கார்த்திக்கும், அவனது மனைவிக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல், குழந்தைக்கான பரிசுப் பொருளைக் கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், வாசலில் மூன்று பேர் புதிய முகங்களாகத் தோன்றவே, கார்த்தி எட்டிப்பார்த்திருக்கிறான்.

அப்பெண்குழந்தையை விற்பதற்கான ஏற்பாடு என்பதை அறிந்ததும் கார்த்திக்கும் அவனது மனைவிக்கும் பதட்டம். வெளியில் விற்கப்பட்டுத் தவறான இடத்திற்குப் போய்விட்டால்?…என்ற பயம் தோன்ற, தாங்களே அக்குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாமா என்று ஆலோசனை கேட்கத்தான், வெளியில் வந்து என்னை அழைத்திருக்கிறான்.

எனக்கோ கோபம்! வீட்டு நிலைமை சரியில்லை. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஆசை…. சரி… தவறில்லை....ஆனால் மூன்றாவதும் பெண் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாதபோது எதற்கு இப்படி? அப்படியென்றால், இனியும் ஆண் குழந்தை ஆசையில் பெற்றுக் கொள்ள நினைப்பார்களோ? நான்காவதும் பெண் ஆகிப் போனால் மீண்டும் இப்படித்தானோ?……இப்படியே தொடர்ந்தால்…

.ஹும். என்ன உலகம் இது? நம் மக்களின் பாமரத்தனமான, மூட நம்பிக்கை நம் மக்களை அறிவிலிகள் ஆக்குகிறதே என்ற எண்ண அலைகளுடன், கார்த்தியிடம் எனது கோபத்தையும் வெளியிட்டுவிட்டு…

“கார்த்தி, அனாதைக் குழந்தைன்னா மறுவார்த்தை சொல்லாம “தத்தெடு” னு சொல்லிடுவேன்.. ஆனா இது அப்படி இல்லையே. கார்த்தி! ஒரு குழந்தை அதோட அம்மா அப்பாகிட்ட வளர்ரதுதான் நல்லது. அம்மா அப்பா இருக்கும் போது விற்க நினைக்கறது ரொம்ப அதிச்சியா இருக்கு. உனக்குத் தைரியம் இருந்தா போலீஸ்ல புகார் கொடு….

இல்லைனா வேறு வழி?....ம்ம்ம் உங்க வயசு, உங்க மகன்களின் சம்மதம், அந்தக் குழந்தைக்குப் பருவ வயசு வரும் போது உங்க ரெண்டு பேர் வயசும் 60 ஆகியிருக்கும். அந்த வயசுல கவனமா பாத்துக்க முடியுமா, படிப்பு, எதிர்காலம், உங்க காலத்துக்குப் பிறகு உங்க பசங்க தங்கச்சியா நினைச்சு அன்போடு பாத்துக்குவாங்களா… எல்லாம் நல்லா கலந்தாலோசிச்சு, சட்டரீதியா தத்தெடு”

என்று அரைகுறை மனதோடு சொன்னதும் கார்த்திக்கும் கொஞ்சம் வருத்தம்தான். நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன். போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு நின்ற போது, பெட்டிக்கடையில், பரபரப்புச் செய்தியுடன்  பிரபல இதழின் தாள் தொங்கிக் கொண்டிருந்தது. “குழந்தைகள் விற்பனை. ரூ 6,00,000” என்ற செய்தியைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. வீட்டை அடைந்ததும் முதல் வேலையாக கார்த்தியை அலைபேசியில் அழைத்தேன்.

“கார்த்தி! தத்தெடுக்கறதுக்கு உண்டான வேலைய உடனே தொடங்கு” என்றதும்

“அக்கா, அதுக்கு அவசியமே இல்லைக்கா. நான் உன்னைக் கூப்பிட உன் நம்பர ட்ரை பண்றேன்…… நீ கூப்பிடற… “

அவன் குரலில் மகிழ்ச்சி. “உன் முதல் விருப்பம்தான் நிறைவேறியிருக்குக்கா”

“அக்கா, உன்னக் கூப்பிட்டுத் தத்தெடுக்கறத சொல்லிட்டு அவங்க வீட்டுக்குப் போனேனா…….அப்போ அவங்க வீட்டு ஜோசியர் வந்திருந்தாரு. அவரு, இந்தக் குழந்தை நல்ல நாள்ல பிறந்திருக்கு. இந்த வீட்டுக்கு நல்லதே நடக்கும். உங்க வீடு லட்சுமிகரமாகும். சுபிட்சம் வரும். இவ பெண்குழந்தை மட்டுமில்ல….”பொன்குழந்தை”, உங்க வீட்டு “பொன்மகள்” னு சொன்னதும், அவங்க முடிவ மாத்திக்கிட்டாங்கக்கா.”

என்றதும், “ஹும்! பாரு கார்த்தி! நம் சமூக அவலத்தை. ஜோசியர் சொன்னதும், அதுவும் பொன்குழந்தைனு சொன்னதும் அதுவரை திட்டு வாங்கின குழந்தைக்குக் கிடைக்கும் மரியாதையைப் பாரு. இல்லைனா அந்தக் குழந்தையோட மதிப்பு சில லட்சங்கள், இல்லைனா குப்பையோடு குப்பையாய்த் தடம் மாறிப் போயிருக்கும்.”

“அக்கா இன்னொரு ரகசியத்தையும் சொல்றேன்” என்று விவரித்தான்

கார்த்தி வெளியில் வரவும் அந்த ஜோசியரும் வெளியில் வந்திருக்கிறார். வந்தவர் கார்த்தியிடம், ”ஹப்பா! தம்பி மனசு என்னமா நிறைஞ்சுருக்கு! ஆண்டவன் உங்க மூலமா வந்து என் கண்ணைத் தொறந்துட்டான். தொழில்ல முதல் முறையா ஒரு பெரிய நன்மை செஞ்சுருக்கேன். இவங்க சொல்லி அனுப்பி அஞ்சு நாளாச்சு, தம்பி. ஆனா இன்னிக்குத்தான் வந்தேன். நான் இன்னும் குழந்தையோட ஜாதகம் கூட குறிக்கல. வந்தப்ப, நீங்க யார்கிட்டயோ பேசிக்கிட்டுருந்ததைக் கேட்டேன். மனசு சங்கடமாகி நான் குழந்தையைப் பத்தி அப்படிச் சொன்னேன். தப்போ, ரைட்டோ ஒரு பெண் குழந்தைய காப்பாத்த முடிஞ்சுச்சு. அப்படிக் கேட்டுருக்கலைனா?? கேக்க வைச்ச அந்த ஆண்டவனுக்கு நான் நன்றி சொல்லணும். தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி. நீங்க நல்லாருக்கணும்!” என்று கார்த்தியின் கைகளைப் பிடித்துக் கண்கள் பனிக்க நன்றி சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

விவரித்தவன், “பரவாயில்லைக்கா. ஏதோ, இப்படியாச்சும் அவங்க முடிவு மாறிச்சே! உன் விருப்பப்படியே அந்தக் குழந்தை அதோட அம்மா அப்பாகிட்டயே வளரப் போகுதேனு நினைச்சுச் சந்தோஷப்படுவோம்.”

“பொன்மகள்” என்ற ஜோசியரின் வாக்கினால் குழந்தை காப்பாற்றப்பட்டது என்ற நேர்மறை எண்ணமாய் என் மனதையும் சமாதானப்படுத்திக் கொண்டு ஜோசியருக்கும் மனதிற்குள் நன்றி சொன்னேன்! எப்படியோ என் எண்ணம் ஈடேறியதை நினைத்தும் மகிழ்ந்தேன்.

பெண்மகள் “பொன்மகள்” ஆனது பொன்னான ரகசியமாகவே இருக்கட்டும்! பொன்மகளாகவே திகழட்டும்! 

----கீதா 


சனி, 17 செப்டம்பர், 2016

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு


கார்மேகம் - படத்தின் ஒரு காட்சி 

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
                                           வாரி வளங்குன்றிக் கால்.

-------கீதா

காணொளி -  யுட்யூபிலிருந்து


வியாழன், 15 செப்டம்பர், 2016

தமிழரிடையே மறைந்து வருகிறதா? குழந்தையின் முதல் தமிழ் வார்த்தை

அம்மா என்பது தமிழ் வார்த்தை - கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் அருமையான பாடல். நான் ரசிக்கும் பாடல். உங்களுக்காக...

அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை!
அருமையான பாடல். சரி இது எதற்கு இப்போது?

எங்கள் நண்பர் குடும்பத்தில், குழந்தைகள் பெற்றோரை மம்மி, டாடி என்றே விளிக்கின்றர்.

மிகவும் நல்ல மனதுடைய பெற்றோர். சாதாரணமானவர்கள். படிப்பறிவு இல்லாதவர்கள். ஆனால். தந்தை ஓட்டுநர் வேலை பார்ப்பவர். தாய், பள்ளிக்கூடம் ஒன்றில் துப்புரவுப் பணியாளர். எனக்கும் என் மகனிற்கும் நல்ல நண்பர்கள்.

தங்களுக்குத்தான் கல்வியறிவு இல்லை தங்கள் குழந்தைகளேனும் நல்ல கல்வி பெற்று, நல்ல நிலையில் வாழ வேண்டும், அதுவும் பள்ளியில் அடி எடுத்து வைக்கும் முதல் தலைமுறை என்பதால் சற்றுக் கூடுதல் கவனம் வேறு. ஆங்கில வழிக் கல்வி.

இப்படித்தான், நான் பார்த்த வரையில், நகரங்களிலும், சிறு நகரங்களிலும் வசிக்கும் பெரும்பான்மையான, கல்வியறிவு இல்லாத பெற்றோர்களும், சிறிது கல்வியறிவு பெற்ற பெற்றோரும் சரி, தாங்கள் கல்வியறிவு பெறவில்லை என்பதற்காகத் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்று தங்களை அம்மா, அப்பா என்று அழைக்கக் கூடாது என்று சொல்லி மம்மி, டாடி என்றுதான் விளிக்கச் சொல்கிறார்கள். மாமாவை அங்கிள் என்றும், அத்தையை ஆண்டி என்றும் அழைக்கச் சொல்கின்றார்கள்.

இந்தப் பழக்கம் கொஞ்சம் மேல் தட்டு மக்களிடையே மம்மி, டாடி என்பதற்குப் பதில் மாம், டாட். அவ்வளவே.

அம்மா என்பது எவ்வளவு அழகான வார்த்தை! உலகில் எந்த மொழி பேசும் நாட்டிலும் மாடும் கூட “மா” என்றுதான் கத்துகிறது!

எனக்கு எனது 6 ஆம் வகுப்பில் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் தான் நினைவுக்கு வருகிறார். அருமையான தமிழ் ஆசிரியர்.

உயிர்மெய் எழுத்து பற்றி தமிழ் இலக்கண வகுப்பில் கற்பித்த போது அவர் சொன்ன விளக்கம் இதுதான்.

உயிர் எழுத்து + மெய் எழுத்து = உயிர்மெய் எழுத்து

இப்படித்தான் கரும்பலகையில் அவர் எழுதினார். இதற்குச் சொன்ன உதாரணங்கள் வழக்கமாகச் சொல்லப்படும் உதாரணங்கள்.

இன்று இப்போது உங்களுக்குச் சொல்லப் போவது இதற்கான முழுமையான உதாரணம் அல்ல ஆனால் நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

நீங்கள் எல்லோரும் உங்கள் பெற்றோரை எப்படி அழைப்பீர்கள்?

வகுப்பில் பத்து பேரைத் தவிர எல்லோரும் சொன்னது அம்மா, அப்பா. அந்தப் பத்து பேரில் ஆறு பேர் சொன்னது மம்மி, டாடி. மற்ற நான்கு பேரும் சொன்னது அம்ம/அம்மே, அச்சா/சோ.

உங்கள் தாய்மொழி என்ன?

ஆறு பேர் தமிழ் என்றனர். நான்கு பேர் மலயாளம்

தமிழ் மொழிக்கே உரித்தான அந்தப் பெருமையை இதோ சொல்கிறேன் இதற்குப் பிறகாவது உணர்ந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆறு பேரும் உங்கள் பெற்றோரைத் தமிழில் அழகுற விளியுங்கள் என்றார்.

அ  - உயிர் எழுத்து;  ம் – மெய்யெழுத்து;   மா – உயிர்மெய் எழுத்து.

அ – உயிர் எழுத்து;   ப் – மெய்யெழுத்து    பா – உயிர்மெய் எழுத்து

நான் கையை உயர்த்திக் கொண்டு எழுவதைப் பார்த்ததும் ஆசிரியருக்குப் புரிந்து விட்டது.

அ + ம் = ம     அ + ப் = ப. எப்படி மா, பா வரும் என்பதுதானே உன் கேள்வி? 

அம்ம சரிதான். அதன் விளக்கம் இப்போதைய வகுப்பில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

இப்போது எனது அர்த்தத்திற்கு வருகிறேன். மா என்பதும் உயிர்மெய் தானே? அதனால் மா என்பதையும் உயிர்மெய் என்பதையும் மட்டும் எடுத்துக் கொள்வோம்.

மெய் என்றால் உடல் என்ற பொருளும் உண்டு.

உயிரும், மெய்யும் இணைந்து. உயிர்மெய்

அம்மா அப்பா என்ற இரு உயிர்களும், மெய் களும் இணைந்து பிறப்பது குழந்தை எனும் உயிர்மெய். இப்படியும் கொள்ளலாம்

குழந்தைகளாகிய உங்களுக்கு உயிர் கொடுத்தவர் அப்பா. உங்கள் அம்மாவின் வயிற்றில் நீங்கள் கருப்பையில் வளரும் போது உங்களுக்கு உங்கள் உடல் அதாவது மெய்யின் பாகங்கள் உருவாகக் காரணமானவள் உங்கள் அம்மா. இப்படியும் கொள்ளலாம்.

அந்த உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய்யாகி வந்தது குழந்தைகளாகிய நீங்கள். எதிர்காலத்தில் நீங்களும் இப்படித்தான் பல உயிர்மெய்களை உருவாக்குவீர்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இதைச் சொல்லிக் கொடுங்கள். அம்மா, அப்பா என்றே சொல்லிக் கொடுங்கள்.

பிற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கும் எனது அறிவுரை, உங்கள் தாய் மொழியிலேயே உங்கள் பெற்றோரை அழையுங்கள் என்பதே.

வேறு எந்த மொழியிலும் இல்லாத பெருமை, இந்த இரு வார்த்தைகளுக்கும் இப்படிப் பொருள் கொள்ளும் பெருமை தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதால் உங்கள் பெற்றோரை அம்மா, அப்பா என்றே விளியுங்கள்! தயவாய்! உங்கள் தாய் மொழியைப் போற்றிப் பெருமை சேருங்கள்! தமிழ்த்தாயின்/மொழியின் அற்புதங்கள் பல! என்று வகுப்பை முடித்தார்.


அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே!! – புலமைப்பித்தன் 

அமுதே தமிழே அழகிய மொழியே- எப்போது கேட்டாலும் சலிக்காத நான் ரசிக்கும் பாடல். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்

-----கீதா (இந்தப் பதிவு எழுதி கிட்டத்தட்ட இரு வருடங்கள் ஆகிவிட்டன. அதைத் தேடி எடுத்து இப்போதுதான் வெளியிட முடிந்தது)

காணொளிகள் யுட்யூபிலிருந்து. திங்கள், 12 செப்டம்பர், 2016

பின்னூட்டங்களுக்குப் பதில்கள் - 2

கடந்த எனது பதிவுகளுக்கு வந்த ஒரு சில கருத்துகளுக்கு என் மனதில் எழுந்த கருத்து

இன்று 12-9-2016. உலகெங்கும் இன்று 12-9-2016 தான் ஆனால் 500 வருடங்களுக்கு முன் உலகின் பல பாகங்களில், ஐரோப்பாவில் இருந்தது போல் 12-9-1516 என்பது இருந்ததா? அப்படியானால் 12-9-1016?...12-9-516?...ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தற்குப் பிறகு, அறிவியலின் அதிவேக முன்னேற்றத்திற்குப் பிறகு வேகம் கூடியதால் தூரம் குறைந்த பிறகு உலகெங்கும் வந்த மாற்றம் கொண்டு வந்ததுதான் ஆங்கில வருடம் என்று அழைக்கப்படும் க்ரிக்கோரியன் காலெண்டர். ஆனால், அதற்கு முன் இமயம் முதல் குமரி வரை பரந்து கிடந்த இன்றைய இந்தியாவில் வழக்கில் இருந்தவை சக வருடமும், கொல்ல வருடமும், ஹஜிரா வருடமும் தான்.

சக வருடம் 78 வருடமும், ஹஜிரா வருடம் 579 வருடமும், கொல்ல வருடம் 824 வருடமும் ஆங்கில வருடத்திற்குப் பின்னால் நிற்பவை. அவைகளுக்கும் ஆங்கில வருடத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டுத்தான் நாம் இங்கு நம் நாட்டில் நடந்த பல சம்பவங்களின் காலகட்டத்தை கணக்கிட்டுச் சொல்லுகிறோம். இப்படிச் சொல்வதில் நமக்குத் துணையாவது கல்வெட்டுக்களும், ஓலைச் சுவடிகளும் செப்பேடுகளும், தலைமுறை, தலைமுறையாய் கைமாற்றம் செய்யப்படும் கதைகள் மற்றும் பாடல்களும் தான். இங்கெல்லாம் அதிகாரமுள்ளவர்கள் தங்களது விறுப்பு வெறுப்புகளை வேரூன்றச் செய்யத் தேவையான இடைசெறுகல்களைச் சேர்க்கத் தயங்கி இருக்க மாட்டார்கள்.

இடைச் செருகல்கள் எப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் “கேசரி” எனும் பத்திரிகையின் ஓணம் வெளியீட்டில், கே உன்னிக் கிருஷ்ணன் நம்பூதிரி என்பவர், ஓணம் உண்மையிலேயே முன்பு வாமன அவதார ஜெயந்தியாகத்தான் கொண்டாடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார். ஸ்ரீகண்டேஸ்வரத்தின் “ஸத்த தாராவெளியிலும்”, வெட்டம் மானியின் “புராண நிகண்டு” விலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் மட்டும்தான் வாமனன் மூன்றடி மண் தானம் கேட்டுச் சதி செய்து மாவேலி மன்னரை பாதாளத்திற்கு அனுப்பினார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதெல்லாம் பொய் என்கிறார். பரசுராம அவதாரத்திற்கு முன்பே தோன்றிய அவதாரம் வாமனன் என்பதால் (ராமவதாரமும், பரசுராமவதாரமும் ஒரே காலகட்டத்தில் இருந்திருக்கிறது!?) மஹாபலி கேரள மன்னரே அல்ல என்கிறார். மஹாபலி குஜராத்தைச் சேர்ந்தவராம். இப்படி, சைவர்களும், வைணவர்களும் சொல்லும் கதைகள் முரண்பாடு உள்ளவைகளாகவே இருக்கிறது. ஆனால், இதைச் சொல்பவர் ஒரு நம்பூதிரி என்பதாலும், இது பிரசுரமானது “கேசரி” யிலானதாலும் இது பல முறை விவாதிக்கப்பட்டு உண்மையாக்கப்பட வாய்ப்பு அதிகம்.

அதனால் 17 ஆம் நூற்றாண்டிற்கு முன் நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் (காகிதமும், அச்சடிக்கும் எந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டு அச்சடித்தல் சுலபமான பிறகு) அது உண்மையிலேயே நடந்ததற்கு 824 வருடங்களுக்கு முன்பு வரை நடந்ததாகச் சொல்லலாம். நிரூபிக்கலாம். அதனால், 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒன்றாக வாய்ப்பு அதிகம். அதனால்தான் ராமானுஜரின் காலகட்டம் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டுதான் என்பதையும், சங்கராச்சாரியார் 8 ஆம் நூற்றாண்டும், நாதமுனி 9 ஆம் நூற்றாண்டும், கம்பன் 12 ஆம் நூற்றாண்டும் வாழ்ந்தவர்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் சந்தேகிக்க வேண்டியதாகிறது. இங்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வாச்சாரியாருக்குப் பின் வந்த ராமானுஜர் எப்படிப் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். அதே போல் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனியின் முன்னிலையில் எப்படி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தன் இராமாயணத்தை எழுதி ஸ்ரீரங்கத்தில் வெளியிட்டிருக்க முடியும்?

இப்படி முரண்பாடுள்ள ஏராளமான இடைச்செருகல்களும், கட்டுக்கதைகளும் பலமுறை பலர் சொல்லி உண்மையாக்கும் முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபகாலத்தில் ஓணப்பண்டிகையை 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “மாங்குடி மருதனார்” தமிழகத்தில் கொண்டாடப்பட்டிருந்ததாகத் தன் பாடலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு செய்தி.. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படும் ஓணப்பண்டிகை எவ்வளவு எளிதாக 1000 ஆண்டுகளுக்கு அப்பால் பறித்து நடப்பட்டிருக்கிறது!! அசுரர்கள் எவ்வளவு நல்லவர்கள் ஆனாலும் நாடாளக் கூடாது என்பதை வலியுறுத்துவதால் இதை இனி பல முறை பலர் சொல்லி உண்மையாக்கிவிடுவார்கள். சந்தேகமே வேண்டாம்.

ஆனால், அதே சமயத்தில் கோமதி நதிக்கரையில் உள்ள நீம்சாரில் 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் எங்கும் உள்ள ஓலைச் சுவடிகள், நூல்கள் எல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்று சொல்லப்படுவதை நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அதற்குக் காரணமான பல சம்பவங்கள் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ருத்விராஜ் சௌகானின் தோல்விக்குப் பின் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் வட இந்தியாவில் தொடங்கியது. மதுரை வரை பரவியிருந்த அவ்வாதிக்கம் முடிவடைந்ததோ 1398ல். அதன் பின் முகலாயர்களின் ஆட்சி 1526 முதல் 1858 வரை நீடித்தது. அதன் பின் ஆங்கிலேயர்களின் ஆட்சி. இதனிடையே 1336 முதல் 1646 வரையான விஜயநகர பேரரசு காலக்கட்டத்தில் நடந்த பல சம்பவங்கள்தான் இன்றைய நிலையில் உள்ள இந்து மதமும், வர்ணங்களும், சாதிகளும் தோன்றக் காரணம் என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். அப்படி அதுவரை இல்லாதிருந்தவை எல்லாம் ஏன் 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில், விஜயநகர மன்னர்களின் காலத்தில் தோன்ற வேண்டும்? அதற்குக் காரணம் முகமது பின்துக்ளக்!? அவர் தன் தலைநகரை மாற்றியதையும், தோலாலான பணத்தை வெளியிட்டதைப் பற்றித்தான் நாம் அதிகமாகப் பேசிக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவற்றை எல்லாம் விட அவர் செய்த ஒரு காரியம் தான் அவரது வீழ்ச்சிக்கும், இந்தியாவில் இப்போது நாம் காணும், நம்மை வேதனைக்குள்ளாக்கும் பல பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.

14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் பயணித்தவர் மொரோக்கோவைச் சேர்ந்த இபிb)ன் (B)பட்டூட்டா (Ibin Battuta). பிரபலாமான ரிஹ்லா (Rihla) எனும் தன் பயணக் கதையை எழுதிய இபின் பட்டுட்டாவை 6 ஆண்டு காலம் துக்ளக் தன் அவையின் நீதிபதியாக நியமித்திருந்தார். ஆனால், இஸ்லாமிய மதத்தவரல்லாத இந்திய மக்களிடையே இஸ்லாமிய மதச் சட்டங்களை நிலை நாட்ட எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், அந்த ஆறு வருடங்கள் அன்றைய இமயம் முதல் குமரி வரை வாழ்ந்தவரிடையே ஏற்படுத்திய ஐயம், பயம் சன்னியாசிகளையும் விட்டுவைக்கவில்லை. அப்படி இஸ்லாமிலிருந்து தங்கள் மத நம்பிக்கை மற்றும் கொள்கைகளை, கலாச்சாரத்தை வாழ்வு நெறியைக் காப்பாற்ற முற்றும் துறந்த முனிவர்களே முன்வர வேண்டியதானது. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரிஷ்ய ச்ருங்க முனியின் சீடர்கள் 1336 முதல் ஹரிஹரா மற்றும் புக்காவை வழி நடத்தி இஸ்லாமிய மத ஆதிக்கமுள்ள அரசின் பிடியிலிருந்து விடுவிக்க எடுக்க்ப்பட்ட முயற்சிகள் 2 நூற்றாண்டுகள் நீடித்து நின்றது. விஜயநகர மன்னர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டார்கள். இங்குதான் கோவில் பராமரிப்பு, பூசைகள் செய்ய மத்வாச்சாரியார் பூணூலை இட்டுச் சிலரை அப்பணியை ஏற்பித்திருக்கிறார்.  அதிகாரம் மது போன்றது. அது அதன் வேலையைச் செய்யத் தொடங்கியது. இஸ்லாமியர்களுக்கு இறைவன் அருளிய நூலான குரானுக்கு இணையான நம் முன்னோர்கள் அருளிய அருள் வாக்கை எல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் மீம்சாரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அங்குதான் சாதி, வர்ணம் பேசும் மனுஸ்மிருதி போன்றவை திருகப்பட்டிருக்கின்றன. (அம்பேத்கர் மனுஸ்மிருதியை மட்டும் தான் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்!) விஜயநகர மன்னர்கள் காலப்போக்கில் தங்களது வைணவ மதத்தை நிலைநாட்ட திருப்பதி, உடுப்பி, குருவாயூர் போன்ற இடங்களில் இருந்த முருகன் கோயில்களை வெங்கடேஸ்வர மற்றும் கிருஷ்ண கோயில்களாக மாற்றியிருக்கிறார்கள். (அதனால்தான் 2 ஆம் வெங்கிடா குழந்தை பாக்கியம் இன்றி மனம் வருந்தி இறக்க நேர்ந்தது என்கிறார்கள்!!!!சைவர்கள்!!!) சைவர்களான நாயக்க மன்னர்கள் அவர்களை எதிர்த்ததால் மட்டும்தான் இப்போதைய தமிழகத்தில் சைவக் கோயில்களும், சைவ பிராமணர்களும் இப்போதும் நிலைத்திருக்கக் காரணம் என்றும் சொல்லபடுகிறது.

ஆனால் மலைநாடான கேரளத்தில் மஹாபலியைத் தந்திரத்தால் வென்ற வாமனன் அவரது நாட்டைக் கைப்பற்றி வைணவம் வளர்க்கத் தொடங்கியது 15 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் என்று சொல்லப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏறிய போதுதான், மீம்சார் கோயிலில் நடந்தது போல் மலைநாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் சேகரித்த ஓலைச் சுவடிகளைத் தீக்கிரையாக்கி “குளியும் தேவாரமுமாக”வாழ்ந்த மலைநாட்டு மக்களுக்கு, “தேவாரம் என்றால் அது நெற்றியில் இடும் ஹரி சந்தனம்” என்று சொல்லும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்.

உண்மையை எவ்வளவு ஆழத்தில் புதைத்தாலும் அது வேரிட்டுத் தளிர்க்கும் தானே. அதற்கு நல்ல ஒரு உதாரணம் தான் திருவனந்தபுரம் பத்மநாபர் கோயிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தப் பொக்கிஷம். தலைமுறைகள் பல கடந்தாலும் சுந்தர்ராஜனின் உருவில் அந்த உண்மை புலனானது. (கோயிலில் உள்ள பொக்கிஷம் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் சுந்தர்ராஜன்.) மார்த்தாண்டவர்மாவின் ஆட்சியின் போது திருப்பதி கோயிலுக்குக் கொண்டு போவதற்காக மலைநாட்டிலுள்ள கோயில்கள் மற்றும் சிற்றரசர்களிடமிருந்து கவர்ந்தவைகளை திப்புவிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் பயந்துதான் அங்கிருந்து அப்பொக்கிஷத்தை அகற்றவில்லை. நடந்து முடிந்த ஏராளமான சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும்தான் இப்போதைய இந்த நாட்களுக்குக் காரணம். 

இனி நடக்கப் போவதெல்லாம் அதன் தொடர்ச்சியாகத்தான் இருக்கும். சாதிகளைச் சட்டம் இயற்றியும், அவற்றிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் ஒழிக்க முடியாது. ஆனால், சாதி காலப்போக்கில் ஒழிந்துவிடும். பணம் இப்போதே சாதியை ஓரளவு ஒழிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. இனி பணத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வர்ணமும், சாதியும், குலமும் தோன்றும். அப்போது முன்பெல்லாம் பணத்தின் அடிப்படையில் அல்ல பரம்பரையும், இனத்தின், மொழியின், நிறத்தின் அடிப்படையில் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்று சொல்ல சிலர் வருவார்கள். இந்தக் காலக்கட்டத்திற்கு ஒவ்வாதவற்றைச் சொல்லும் இவர்கள் பைத்தியக்காரர்களே என்று அப்படிச் சொல்பவர்களை எள்ளி நடையாடிச் செல்வார்கள் மற்றவர்கள். வாழ்க்கை முன்னோக்கித்தான் போக வேண்டும். இருப்பினும், இடையிடையே பின்னால் திரும்பிப் பார்த்துப் போக வேண்டியதும் அவசியமே.