செவ்வாய், 1 ஜனவரி, 2019

இறந்தவரை சுமந்தவரும் இறந்திட்டார்…..


மாமா எங்க வந்திருக்கீங்க?” இது பிஜு.

“மல்லேஸ்வரம்” என்றேன்.

“பக்கத்தில வந்திட்டீங்க. ஆனா பாடிய எடுக்கப் போறாங்க. 4.45க்குத்தான் தகனமாம்….வாங்க”

ஓலா, ஊபர் டாக்ஸி கூப்பிட்டுப் பழக்கப்படாத என்னை நானே சபித்துக் கொண்ட நேரம் அது.

“இறைவா, காலை 6 மணியிலிருந்து 300 கிமீ மேல் பயணித்து பெங்களூரு, வித்யாரண்யபுராவை அடைந்ததே உபேந்திரன் அண்ணன் உடலருகே நின்று, இறுதிச் சடங்கின் போது அவரது ஆத்மாவின் நித்திய சாந்திக்கும், மோட்சப் பிராப்திக்கும் பிரார்த்திக்கத்தானே!. அது நடக்காதா?”

முள்மேல் அமர்ந்து, சாமுண்டீஸ்வரி லேஅவுட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓடினேன். மெயின் ரோட்டிலிருந்து திரும்ப வேண்டிய சந்து எது என்று குழம்பி யோசித்துக் கொண்டிருந்த போது அதோ! அண்ணனின், “இரங்கலுக்கு வருந்துகிறோம்………அஞ்சலி……” ஃப்ளக்ஸ்.

அந்த வழியாக வேகமாக நடந்தேன். தூரத்தில் அண்ணன் வீட்டுக்கு வெளியே பந்தல், நாற்காலிகள். அதிகம் ஆட்கள் இல்லை. அண்ணனின் உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. வீட்டின் தரையில் தண்ணீர் உற்றிக் கழுவிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழையப்போன என் கையைப் பிடித்தது யாரென்று பார்த்தால் பிஜு.

“ஒரு பத்து நிமிஷம் முன்னாடிதான்” என்றான்.

“சரி மதினியைப் பார்த்திட்டு வரேன்” என்றபடி உள்ளே நுழைந்தேன். அண்ணனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.

“இங்கதானே” என்று கேட்டதும் “ஆம்” என்று யாரோ சொன்ன பதிலைக் கேட்டதும் விளக்கு அருகே நின்று கண் மூடி அவரது ஆத்மாவின் சாந்திக்கும், மோட்ச பிராப்திக்காகவும் பிரார்த்தித்தேன். பின் உள்ளே பெண்கள் மத்தியில் கலங்கிய கண்களுடன் உட்கார்ந்திருந்த அண்ணியிடம் சென்று,

“சேச்சி! இனி நமக்கு அண்ணனின் ஆத்மாவுக்குப் பிரார்த்திக்கத்தானே முடியும்” என்றேன். கண்களைத் துடைத்தபடி அருகிலிருந்த சந்திரா அக்காவைக் காண்பிக்க, அக்காவின் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னேன். கழுவும் மும்முரத்தில் இருந்த பெண்களுக்கு அவர்கள் வேலையை இடையூறு செய்யாதிருக்க எல்லோரும் எழுந்து மாடிக்குச் செல்ல முயன்றதும், நான் வெளியே வந்தேன்.

உபேந்திரன் அண்ணன் எனக்குப் பத்து வயதிருந்த போது ITI முடித்து பம்பாய் சென்றவர். பம்பாய் எனும் பெரு நகரத்தைப் பற்றி அவர் பலமுறை சொல்லி எனக்கு அந்த அதிசய உலகத்தை எப்போதாவது பார்க்க வேண்டுமென்ற ஆவலை உண்டாக்கியவர். மட்டுமல்ல கோவையில் ஜிடி நாயுடு எனும் புரட்சி விஞ்ஞானியை அறிமுகப்படுத்தியவர்.

“ஓரிடத்தில ஒரு செருப்புக்குக் கீழே எழுதியிருக்கும். தொட்டா செருப்படி கிடைக்கும்னு. தொட்டா உடனே அந்த செருப்பு பறந்து வந்து முன்னாடி நின்னு தொடர ஆள் முகத்தில் அடிச்சிட்டு பழையபடி முன்ன இருந்த இடத்துக்குப் போயிடும்.” கேட்க கேட்க ஆச்சரியம்.

ஒரு முறை அவருடன் நடந்து சென்ற போது செருப்பணியாத என் காலைப் பார்த்து, “பம்பாயில் எல்லாம் செருப்பு போடாத ஒரு மனுசனையும் பாக்கவே முடியாது” என்று சொன்னது இப்போதும் காதில் ஒலிக்கிறது.  இப்படி அவரது அனுபவனளை எல்லாம் சேமித்து, விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது சொன்னவை என் பொது அறிவு பொக்கிஷத்தில் இப்போதும் பசுமையாய் இருக்கிறது.

எனக்கு சட்டை பேன்ட்ஸ்களை அயர்ன் செய்யச் சொல்லிக் கொடுத்தவர். 11 ஆம் வகுப்பு படிக்கையில் தனியாகச் சமையல் செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்ட போது, ஒரு ஸ்டவ் வாங்கித் தந்து அதை எபடி உபயோகிக்க வேண்டும் என்று செய்து காட்டி வகுப்பெடுத்தவர். இப்படி எத்தனை எத்தனையோ இனிய நினைவுகள்.
எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அவர் தந்த வயலட் கலர் சட்டையும், நீல நிற பேன்ட்சும் இப்போதும் கண் முன் நிற்கிறது. 

அவர் பம்பாயிலிருந்து குவைத்துக்குப் போனபின் நான் அவருக்குத் தமிழில் எழுதும் கடிதங்களை ஏதோ ஒரு தமிழ் அன்பரின் உதவியுடன் வாசித்து அவரைக் கொண்டே தமிழில் பதில் எழுதி அனுப்பிய கடிதங்கள்! மணமான பின்னும் அப்பாவுக்கு எழுதிய கடிதங்களிலெல்லாம் என்னைப் பற்றி விசாரிக்கத் தவறியதேயில்லை. குடும்பத்துடன் குவைத்தில் குடியேறிய அவர், இராக் குவைத்தை ஆக்கிரமித்த போது இறையருளுளால், குடும்பத்துடன் தப்பி இந்தியாவை அடைந்தாலும் மீண்டும் தனியாக அங்கு சென்றவர்.

மீண்டும் வந்தவர்களுக்கு குவைத் அரசும், நிறுவனங்களும், வங்கிகளும் செய்த உதவியால் நஷ்டமான எல்லாவற்றையும் திரும்பப் பெற்றவர். கையிருந்த பணத்தை மிகுந்த கவனத்துடன் பலவிதத்தில் முதலீடு செய்தவர். பெங்களூரில் ஒரு ஷாப்பிங்க் காம்ப்ளெக்சுக்குச் சொந்தக்காரர். மகளை மருத்துவப் படிப்பு படிக்க வைத்து எம் டி ஆக்கியவர். மகனை ஃபேஷன் டிசைனர் ஆக்கியவர். 

குழந்தைப் பருவத்தில் தந்தை டீ மேக்கராக பணியாற்றிய வெள்ளையர் குடும்பத்தில் தன் வயதொத்த நண்பனுடன் நட்பை வளர்த்து அந்த நண்பனை குவைத்தில் தான் பணியாற்றிய நிறுவனத்தின் உயர் அதிகாரியாக ஒரு நாள் அதிர்ஷ்ட வசமாகக் காணவும் அந்நட்பை அங்கிருந்து தாய்நாடு வரும் வரை வாடாமலும், உடையாமலும் பாதுகாத்தவர்.

குவைத்திலிருந்து திரும்பி பெங்களூர் வந்த பிறகு நல்ல நட்புவட்டங்கள் கிடைக்கப்பெற்று சந்தோஷத்துடன் வாழ்ந்த அவர் வாழ்வில் திடீரென, ஆபத்தான ஒரு அழையா விருந்தாளியாக பார்க்கின்ஸன் நோய் அவரைத் தொற்றிக் கொண்டது. உடல் உறுப்புகளைச் சிறிது சிறிதாகச் செயலிழக்கச் செய்யும் நோய். பலவருடங்களாக அப்போதைக்கு அந்நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் உதவியுடனும், எல்லோரது பிரார்த்தனைகளின் சக்தியாலும் அவரது மன உறுதியாலும் வாழ்ந்தவர். 

அந்நிலையிலும் எனது குறும்படமான செயின்ட் த க்ரேட் ல் நம் ஜிஎம்பி சாரைப் போல் ஒரு சிறிய வேடத்தில் அவரது நண்பராக நடிக்க ஒத்துக் கொண்டு நடித்தவர். (கீதாவின் மகனின் நண்பரான கலைஞன் அவருக்குக் குரல் கொடுக்க மிகவும் சிரமப்பட்டு உதட்டசைவுக்கு ஏற்ப பேசி உதவியதை வாழ்வில் மறக்கவே முடியாது.)
யாரையும் தனக்குப் பகைவர்கள் ஆக்காதவர். யாருக்கும் தன்னோடு பகை வராது வாழ்ந்து காட்டியவர்.

2001 ல் என் அப்பா இறந்த போது, செய்தி அறிந்த உடன் எப்படியோ இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து கிடைத்த வண்டியிலும், லாரியிலும் ஏறி வந்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்.

“சித்தப்பாவோட இறுதிச் சடங்கில கலந்துகிட்டு அவரோட ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை பண்ணாம இருக்க முடியுமா?” என்றவர்.

அப்படிப்பட்ட அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நான், ஒரு பத்து நிமிடம் தாமதித்துவிட்டேனே! ஒரு முறை பைக்கில் நிலம்பூரிலிருந்து பெங்களூருக்கு வந்திருக்கிறேன். அது போல் இப்போதும் வந்திருக்கலாமோ? என்று தோன்றியது. இப்போதெல்லாம் நீண்ட தூர பைக் பயணம் செய்வதில்லை. கண் அயர்ந்துவிடுகிறது. அந்த பயமும் பைக்கில் வராததற்கு ஒரு காரணம். வேறு யாராவது துணைக்கு இருந்திருந்தால் காரை ஓட்டி வந்திருக்கலாம்தான். என்ன செய்ய? இனி அதை எல்லாம் பேசிப் பயனில்லை! நொந்து கொண்டே வெளியே வந்த என்னிடம் பிஜு,

“மாமா! பைக் இருக்கு. லட்சுமிபுரம் க்ரிமேஷன் யார்டுக்கு 15 நிமிஷத்துல போயிடலாம். போவோமா? என்றதும் பிஜு என் முன் தேவதூதனைப் போல் தோன்றிட,


“வா! போவோம். வழி தெரியுமா என்றேன். அருகிலிருந்த சிலரிடம் கன்னடத்தில் கேட்க அவர்கள் தெளிவாகச் சொல்ல, பிஜுவின் அவெஞ்சரில் பறந்தோம். மகனின் திருமணத்தன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்று ஒரு வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில்சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிர் நீத்தவர். அப்படி தன் வீட்டில் நடந்த இந்த இரண்டாவது திருமணம் வரை தன் உடலிலிருந்து உயிர் போகா வண்ணம் பிடித்து வைத்திருந்தது வியப்பாக இருக்கிறது.  தன்  4.30க்கு க்ரிமெட்டோரியத்தை அடைந்தோம். 

இறையருளாலும், பிஜுவின் உதவியாலும் சடங்குகள் தொடங்கும் முன் க்ரிமெட்டோரியம் சென்றதால் அண்ணனின் உடலருகே கண்களை மூடி, என் பெற்றோர்களையும், எனக்குக் காண பாக்கியம் கிடைத்த மூதாதயர்களையும், அவர்கள் வழியாக முகமறியா என் முன் தலைமுறை மூதாதயர்களையும் மனதில் தியானித்து “நம சிவாய” மந்திரம் சொல்லி அண்ணனின் ஆத்மா சிவனடி சேர வேண்டினேன். அண்ணனின் குடும்பத்தினருக்குக் காலமும், பொறுமையும் மருந்தாய் இருந்து துக்கக் கடலை நீந்திக் கடக்க உதவவும் வேண்டிக் கொண்டேன்.

சரியாக 4.50க்கு சடங்குகள் முடிந்து “நம சிவாய” மந்திரம் சொல்லியபடி மூங்கில் பாடையின் ஒரு பகுதியை தோளிலேற்றி, இறந்த என் அப்பாவைத் தோளிலேற்றிய என் அண்ணனின் உடலை மின்சார தகன மேடையில் வைத்தேன். இறந்தவர்களைச் சுமந்தவர்களும், சுமப்பவர்களும் ஒரு நாள் மரணத்தைத் தழுவித்தானே ஆக வேண்டும்! ஆனால் அவர்களது உடல் எரிக்கப்பட்டாலும் அவர்கள் நினைவு, நினைவைச் சுமக்கும் நம் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை வாழத்தானே செய்யும்!

ஆம்! நாம் ஒவ்வொருவரும், இவ்வுலகில் நாம் தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவருடனும் செலவிடும் நேரங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தாலும் அதில் அன்பான வார்த்தைகள், ஆறுதல்கள், அறிவுரைகள், உதவிகள் இவை எல்லாம் உரமாய் நின்று அவர்களின் நினைவுகளை நம் சிந்தையில் வாடாமல்லிகைகளாக மாற்றிவிடும். நம்மை மரணம் தழுவும் வரை அந்நினைவுகளை மனதில் தாலாட்டி, சீராட்டி வாழ்வதும் ஒரு சுகமே. நம் இறந்தகாலம் அவர்கள் தொடர்பான நிகழ்வுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதும் அதற்கு மிக முக்கியமான காரணம் தான். இது போல் நம்மை மரணம் தழுவும் போது நம்மைப் பற்றிய எண்ணங்கள் சிலரது மனதில் சில காலம் வாழத்தானே செய்யும். எனவே, நாம் நம்மைப் பற்றிய நல்ல நினைவுகளை, நல்ல எண்ணங்களை எல்லோரது மனதிலும் விதைப்போம்!

அதனால் எல்லோரிடமும் நாம் வாழும் மட்டும் இனிய உளவாக இன்னாதது கூறாதிருந்தும் செய்யாதிருந்தும் கனியிருப்பக் காய் கவராதிருக்க முடிவெடுத்து வாழ்வோம்!


54 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது சகோதரரின் ஆத்மா சாந்தி அடைய எமது ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள்.

   நமது வாழ்வில் பல நிகழ்வுகளிலும் பந்தப்பட்டவரின் மரணம் என்பது...

   நமது மரணகாலம்வரை நினைவுகளை மீட்டிக்கொண்டே வரும்... மறக்க முயலுங்கள்.

   பிறருக்கு சொல்வது சுலபம், தனக்கு கடினம் என்பதை நானறிவேன்.

   நீக்கு
  2. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 2. >>> நாம் நம்மைப் பற்றிய நல்ல நினைவுகளை, நல்ல எண்ணங்களை எல்லோரது மனதிலும் விதைப்போம்!..<<<

  இது தான் உண்மையான வாழ்வியல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 3. சில குறள்கள் கேள்விகளை கேட்டு சிந்திக்க வைக்கும்... அதில் ஒரு குறள் கீழே... இந்தப் பதிவிற்கு மிகவும் பொருந்தும்...

  எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
  நச்சப் படாஅ தவன் (1004)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன்:-

   "தன் காலத்துக்குப் பிறகு, தான் இறந்த பிறகு, தன் வாழ்க்கையில் எது எஞ்சி இருக்கிறது என்று, யாருக்கு உதவியாகவோ பிறருக்கு பொருள் வழங்காமல் கஞ்சத்தனமாக வாழ்ந்தவன், எண்ணுவான்?"

   பலர் அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள். மற்றவர்களை ஏய்த்துப் பெரும் பொருள் ஈட்டிய அரசியல்வாதிகள், இயல்பாகவே உழைத்து (அதன்மூலம் பலருக்கு கெடுதல்கள், தவறு செய்து) பணக்காரனானவர்கள் - இவர்கள் சில சாரிட்டி வேலைகளை அவர்களது பெயருக்காகவும், அரசாங்கத்துக்குக் கணக்குக் காண்பிக்கவும் செய்கிறார்கள். அவர்கள் மறு உலகத்தைப் பற்றியோ தான் இறந்தபிறகு மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று கவலைப்பட மாட்டார்கள் (இருக்கும்போதே மற்றவர்களது தூற்றுதலைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை.. அதிலும் நியாயமான காரணம் இருக்கும். 60% பாராட்டினா, 40% தூற்றுவார்கள், யாரையும்). ஆனால், பணத்தினால் இருக்கும்வரை அவர்கள் கெளரவத்துடன் வாழ்கிறார்கள்.

   சாதாரண நிலையில் இருப்பவர்களும், தங்கள் இறப்பு வரை கையேந்திவிடக்கூடாதே என்பதற்காக பொருளைச் சேர்த்துவைக்கின்றனர். அப்படிச் சேர்த்து வைக்கிறவர்கள், இறக்கும் தருவாயில், "ஐயோ.... நாம் எஞ்சாய் செய்யாமல், நிறையச் செலவழிக்காமல் 2 கோடியை வீணாக வைத்துவிட்டுப் போகிறோமே" என்று எண்ணலாம். ஆனால், அன்றைக்குச் சாகாமல், இன்னும் பல வருடங்கள் இருந்து கஷ்டப்பட்டு உடல்நலத்திற்காக செலவழிக்கவேண்டுமே என்ற எண்ணத்தினால்தான் அவர் பணத்தைச் சேர்த்துவைக்கிறார். இறக்கும்போது அவர் நினைக்கலாம், அடடா... இன்னும் 1 1/2 கோடி ரூபாயை எளியோர்களின் படிப்புக்குக் கொடுத்திருக்கலாமே என்று. ஆனால் நம் தேவை என்ன என்று அறியாமல் எப்படி தானம் செய்யும் மனம் வரும் பலருக்கு (சிலர் அப்படி அல்ல).

   அதனால், நான் இறந்த பிறகு என்ன எஞ்சி இருக்கிறது என்று ஒருவன் எண்ணுவது அர்த்தம் இல்லாததுதான், அவன் யாருக்கும் பண உதவி செய்யாது இருந்த காரணத்தால் அப்படி எண்ணுவது அர்த்தம் இல்லாதது.

   ஆனாலும் வாழ்வது பிறருக்கு உதவியாக, இசைபட வாழ்வது நல்லதுதான். அதுதான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சேர்க்கும். அது எல்லாரும் பின்பற்றுவது அல்ல.

   நீக்கு
  2. மிக்க நன்றி டிடி மற்றும் நெல்லைத்தமிழன் விரிவான கருத்திற்கு. நெல்லைத்தமிழனின் விளக்கம் யோசிக்க வைக்கும் விளக்கம்.

   துளசிதரன்

   நீக்கு
 4. படித்தேன். சந்தேகங்களை கீதா ரங்கனிடம் கேட்டிருக்கிறேன். அதற்குப்பின் பின்னூட்டம்.

  பதிலளிநீக்கு
 5. முன்பு ஒரு பதிவில் எழுதிய முன்னுரை...

  எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?-ன்னு நம்ம அய்யன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...? ஒவ்வொரு செயலிலும் இப்பதிவின் தலைப்பை சிந்திக்கிறவரின் செயல்கள் அனைத்தும் சிறப்படையும்... பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் தன் வாழ்வில், எந்த வயதிலாவது ஒரு முறை இந்தப் "பதிவின் தலைப்பு" பற்றி சிந்தனையும், பிறகு வாழ்வில் மாற்றமும் வரும்... வரலாம்... வர வேண்டும்...! வயது = ஒரு எண்... பலருக்கும் கடைசி படுக்கையில் - வரும்... ஆனா வராது...! வெகு சிலருக்கு விரைவிலேயே... அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாவ் !! அருமையா சொன்னீங்க சகோ டிடி

   நீக்கு
  2. //அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து...!//

   உண்மை. அருமை DD

   நீக்கு
  3. டிடி மிக மிக அருமையான கருத்து நேற்று இதற்கு என் கருத்தை வேர்டில் அடித்து இங்கு காப்பி பேஸ்ட் செய்து அது பப்ளிஷ் ஆகாமல் இருப்பதைக் கவனிக்காமல் வேர்டில் வைத்திருந்ததையும் சேவ் செய்யாமல் போனதால் கம்ப்யூட்டர் தானாக ஷ்ட் ஆகியதில் விட்டுப் போச்சு...

   அருமையான கருத்து டிடி. கண்டிப்பாக வாழ்வில் நாம் இதை மனதில் கொள்ள வேண்டும்.

   // வயது = ஒரு எண்... பலருக்கும் கடைசி படுக்கையில் - வரும்... ஆனா வராது...! வெகு சிலருக்கு விரைவிலேயே... அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து...!//

   அக்மார்க் உண்மை!!! அப்படியே வழி மொழிகிறேன்..

   கீதா

   நீக்கு
  4. டிடி மிகவும் அழகான கருத்து என்பதோடு தலைப்பையும் சொல்லி,
   பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் தன் வாழ்வில், எந்த வயதிலாவது ஒரு முறை இந்தப் "பதிவின் தலைப்பு" பற்றி சிந்தனையும், பிறகு வாழ்வில் மாற்றமும் வரும்... வரலாம்... வர வேண்டும்...! வயது = ஒரு எண்... பலருக்கும் கடைசி படுக்கையில் - வரும்... ஆனா வராது...! வெகு சிலருக்கு விரைவிலேயே... அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து...!// இப்படியான அருமையான கருத்தையும் சொன்னமைக்கு மிக்க நன்றி டிடி.

   துளசிதரன்

   நீக்கு
 6. நல்லவராய் இருத்தல் நல்லது. எல்லோர் நினைவிலும் இருக்கலாம்.

  நண்பரின் இழப்பைத் தாங்கும் திடம் வர பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் அது துளசியின் அண்ணா...பெரியப்பா மகன். நான் சரியா டைப் பண்ணலையா கரெக்ஷன் பார்த்துத்தானே அவர் கரெஷ்ன என்ன என்று பேசினார்...அதையும் டைப்பினேன்...பார்க்கிறேன் எங்கே மிஸ்ஸிங்க் நு

   கீதா

   நீக்கு
  2. கீதா... ஆமாம்... இதுபற்றி நீங்கள் எங்கள் தள பதிவொன்றில் கூடக் குறிப்பிட்டிருந்த நினைவு. பதிவின் வரிகள் கனம்.

   நீக்கு
  3. ஆமாம் ஸ்ரீராம் ஜி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை நினைத்துத்தான் இப்பதிவே எழுதியது.

   மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 7. //ஆம்! நாம் ஒவ்வொருவரும், இவ்வுலகில் நாம் தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவருடனும் செலவிடும் நேரங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தாலும் அதில் அன்பான வார்த்தைகள், ஆறுதல்கள், அறிவுரைகள், உதவிகள் இவை எல்லாம் உரமாய் நின்று அவர்களின் நினைவுகளை நம் சிந்தையில் வாடாமல்லிகைகளாக மாற்றிவிடும்.
  //


  மிகவும் அருமையான வார்த்தைகள் துளசி அண்ணா .சமீபத்தில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்திங்க ..
  நல்லதொரு குணவான்.அவரை எப்படியாவது பார்த்துவிட்டீர்கள் என்பது மனதுக்கு நிம்மதி அளித்தது .

  பலரை பற்றி சிந்திப்போம் சந்திப்போம் பழகுவோம் சிலர் மட்டும் அழியா தடங்களை நம்மில் விட்டு போவாங்க .அப்படிப்பட்ட நல்லதொரு நட்புறவு என்பது புரிகிறது ..அவரது ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள் .

  அப்புறம் தலைப்பு ..நாம் ஒவ்வொருவருமே சிந்திக்க வேண்டிய கவனத்தில் கொள்ள வேண்டிய எதிர்நோக்கவேண்டிய ஒன்று .அந்த பாடல் வரிகளை பூஸார் பக்கம் படித்து பிறகு பாடல் பார்த்ததில் இருந்து என்னமோ செய்யும் மனதை அவ்வரிகள் ..

  //
  எனவே, நாம் நம்மைப் பற்றிய நல்ல நினைவுகளை, நல்ல எண்ணங்களை எல்லோரது மனதிலும் விதைப்போம்!//

  அப்படியே வழிமொழிகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல் விரிவான கருத்திற்கு. ஆமாம் எனக்கு அன்று பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று மிகவும் வருந்திய நேரத்தில் எப்படியோ இறையருளால் காணக் கிடைத்துப் பிரார்த்திக்கவும் முடிந்தது.

   துளசிதரன்

   நீக்கு
 8. இனிமை உங்கள் வாழ்வில் பெருக்கட்டும் வசந்தத்தின் வாசம் எந்நாளும் வீசட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரை தமிழன் தங்களின் வாழ்த்திற்கு.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

   துளசிதரன்

   நீக்கு
 9. நல்ல எண்ணங்களோடும், நற்செயல்களோடும் வாழ்வோம்
  நம் காலத்திற்குப் பிறகும் நம்மைப்பற்றிய நல் வார்த்தைகளைப் பிறர் பேசும்படி விட்டுச் செல்வோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் கரந்தையார் தங்களின் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 10. நம்மைப் பற்றிய நல்ல நினைவுகளை, நல்ல எண்ணங்களை எல்லோரது மனதிலும் விதைப்போம்!....


  மிக உயர்ந்த வரிகள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி அனு ப்ரேம்குமார் தங்களின் கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 11. சொந்த அலுவல் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர இயலா நிலை. பதிவினைக் கண்டோம். கனியிருப்ப காய் கவராதிருப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 12. //என் பெற்றோர்களையும், எனக்குக் காண பாக்கியம் கிடைத்த மூதாதயர்களையும், அவர்கள் வழியாக முகமறியா என் முன் தலைமுறை மூதாதயர்களையும் மனதில் தியானித்து “நம சிவாய” மந்திரம் சொல்லி அண்ணனின் ஆத்மா சிவனடி சேர வேண்டினேன். அண்ணனின் குடும்பத்தினருக்குக் காலமும், பொறுமையும் மருந்தாய் இருந்து துக்கக் கடலை நீந்திக் கடக்க உதவவும் வேண்டிக் கொண்டேன்.//

  நல்ல பிரார்த்தனை.
  உங்களுக்கும், உங்கள் அண்ணன் குடும்பத்தினர்களுக்கும் இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தருவார்.

  நல்ல மனிதரைப் பற்றிய அருமையான பதிவு.

  //நல்ல நினைவுகள், நல்ல எண்ணங்களை எல்லோர் மனதிலும் விதைப்போம்//
  நன்றாக சொன்னீர்கள்.
  நல்லதே ந்டக்கட்டும். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி கோமதை அரசு தங்களின் கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 13. உண்மைச் சம்பவங்களை விவரித்து எழுதும்போது , கற்பனையில் எழுதுவதை விட, அதிகம் மனதைத்தொட்டு விடுகிறது.

  ஒருவர் நம்மோடு இருக்கும்போது அவர்பற்றி பெரிதாக நேரம் ஒதுக்கிச் சிந்திக்க மாட்டோம், ஆனா நம்மோடு இல்லை இனி திரும்ப மாட்டார் எனும்போது.. குட்டி வயசிலிருந்து நேற்றுவரை நடந்தவை எல்லாம் கியூவில் வந்து நிக்கும்.. மனதை நெருடும், சிலது திருப்தியையும் அளிக்கும்.

  எனக்கென்னமோ ஒருவர் காலமானபின் அவரின் உடலைப் பார்ப்பதைவிட, பார்க்காமல் இருப்பதையே விரும்புவேன்ன்.. ஆனா அது முடியாத ஒன்று.. பார்த்துத்தானே ஆக வேண்டும்.. நெருங்கிய உறவெனில், ஆனா பார்க்காமல் விட்டால், நமக்கு அவர் நலமோடு இருந்த நினைவுகள்தானே எப்பவும் மனதில் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்து மிகவும் சரியே அதிரா. முற்றத்து முல்லையின் அருமை தெரியாது என்று கூடச் சொல்லப்படுவதுண்டு இல்லையா?

   ஆனாலும் நெருங்கிய உறவுகளின் மரணத்தின் போது இப்படிச் சென்று பிரார்த்தித்தல் நல்லதுதானே.

   உங்களை போன்று விரிவாகக் கருத்து தர இயலவில்லை சகோதரி அதிரா.

   மிக்க நன்றி

   துளசிதரன்

   நீக்கு
 14. இங்கு வெள்லையர்களில் பலர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அப்போ ஒருவர் இறந்திட்டால் பின்பு எந்தக் காரியமும் செய்வதில்லை.. அப்படியே பாட்டுப்பாடி, கொஞ்சம் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை.. பின்பு அப்படியே தகனம் இப்படிப் பண்ணி விடுவார்கள்.

  போன வருடம் ஒருவர் இங்கு காலமானார் 70 வயதில், மனைவி ஹொஸ்பிட்டலில் பார்த்துவிட்டு வந்த பின் காலமாகி விட்டாராம், பின்பு அவரை பார்க்க விரும்பவில்லை, அப்படியே பெட்டியில் வைத்து அடக்கம் செய்வோம் என, யாருமே பார்க்கவில்லை இறந்தபின்.. அப்படியே ஆத்மசாந்திப் பிரார்த்தனையோடு அடக்கம் செய்தாயிட்டூ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெள்ளையர்களின் வழக்கங்களையும் கொஞ்சம் அறிவேன். இது கடவுள் நம்பிக்கை என்பதை விட அவர்கள் மரணத்தை அப்படித்தான் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே. அவர்களில் இறை நம்பிக்கை உடையவர்களும் கூட நம்மைப் போன்று சடங்குகள் அத்தனை செய்வதில்லை. நம்மிலுமே ஒவொரு சமூதத்தினரின் சடங்குகளும் வேறுபடுகிறதுதானே!

   எங்கள் சமூகத்தில் பல நாள் சடங்குகள் என்று எதுவும் கிடையாது.

   மிக்க நன்றி அதிரா கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 15. அந்த அண்ணாவின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பத்தில் அமைதி நிலவவும்.. இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அதிரா உங்கள் பிரார்த்தனைக்கு

   துளசிதரன்

   நீக்கு
 16. நல்லவர்களின் நினைவுகள் வழிநடத்தும் நான் அவரைச் சந்தித்து இருக்கிறேனா நினைவுக்கு வரவில்லையெ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜிஎம்பி சார்.

   நீங்கள் சந்தித்தது இல்லை. நாங்கள் அவர் வீட்டிலிருந்து உங்கள் வீட்டிற்கு வந்தோம். அவரை நீங்கள் படத்தில் பார்த்திருப்பீர்கள்.

   துளசிதரன்

   நீக்கு
 17. கடைசி நேரத்தில் பார்க்க, சுமக்க முடிந்ததற்குக்கூட பாக்கியம் செய்திருக்க வேண்டும். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி காமாட்சி அம்மா கருத்திற்கும், பிரார்த்தனைக்கும்

   துளசிதரன்

   நீக்கு
 18. கடைசி நேரத்திலாவது பார்த்தீர்களே! அன்னாரது ஆன்மா இறைவனின் பாதத்தில் நிம்மதி கொள்ளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பார்க்க முடிந்தது. மிக்க நன்றி சகோதரி ராஜி, கருத்திற்கும் பிரார்த்தனைக்கும்

   துளசிதரன்

   நீக்கு
 19. அறியா வயதில் உதவியவர், உறுதுணையாயிருந்தவர் மறைகையில், அதுவும் அவர் தமையனார் என்கையில், தடுமாறி நிலைகுலையத்தான் செய்யும் உள்ளம்.

  நல்லது சொல்லி, நல்லது செய்து, நல்லதே நினைத்து வாழ நேர்ந்தால் அதுவே ஒரு பாக்யம்தான், மனிதனுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஏகாந்தன் சார். ஆமாம் உங்கள் கருத்து சரியே.

   துளசிதரன்

   நீக்கு
 20. நல்ல தொரு பதிவு. தங்கள் பெரிய அன்னணின் மறைவுக்கு இரங்கல்கள். அருமையாக எழுதி இருக்கிறீர்கள் துளசி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வல்லிம்மா தங்களின் கருத்திற்கும் பிரார்த்தனைக்கும்.

   துளசிதரன்

   நீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  இழப்புகளை அதன் வலிகளை தாங்கித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது ஆனால் அதன் வேதனையும். வலியும் நம்முள்ளத்தில் சம்மட்டி கொண்டு தாக்கும் போது இப்படி ஒரு கொடுமையான விஷயத்தை கடவுள் ஏன் உண்டு பண்ணினான் என அச்சமயம் அவன் மேல் கோபம் வருவதை தடுக்க இயலவில்லை.

  தங்கள் சகோதரரின் உயர்வான செய்ககைகளையும், பரிவையும் காணும் போது அவருக்கும் ஏன் இந்த நிலையென வருத்தம் வருகிறது.

  அன்னாரின் ஆத்மா சாந்தியடையும், தாங்களும் இழப்பின் வலியிலிருந்து மீண்டு வரவும் என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு மிக்க நன்றி தங்களின் பிரார்த்தனைகளுக்கு. சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன் உங்கள் வீட்டு வருத்தம் பற்றி. தங்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்.

   மிக்க நன்றி சகோதரி

   துளசிதரன்

   நீக்கு
 22. நல்ல எண்ணங்களையும் நல்ல நினைவுகளையும் விதைத்துச் செல்லுவோம். அருமையா சொல்லி இருக்கீங்க. சகோதரன் மறைவுக்கு இரங்கல்கள். :(

  பதிலளிநீக்கு
 23. சகோதரி தேனம்மை தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. தங்களின் பிஸி ஷெட்யூலுக்கு நடுவிலும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. பலவிதங்களிலும் நெருங்கிய தோழமையை இழப்பது என்பது மனதைப் பெருமளவில் பாதிக்கும். உணர்வுகளை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். கடைசியில் முக தரிசனம் கிடைத்ததும், தூக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் நன்று. உங்கள் இழப்புக்கு ஈடு செய்வது கடினம். தாமதமான வருகை! மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 25. பதிவைப்படிக்க நான் இதுபோல் நெருங்கிய உறவுகளை இழந்து தவித்த பொழுதுகளும் என் நினைவில் தொடர கண்ணீர் கசிவதைத் தவிர்க்க இயலவில்லை.சிலரின் இழப்பினை நிச்சயமாக ஆறுதல் வாழ்த்தைகளால் ஈடு செய்ய முடியாது.காலமே ஆறுதல் தரும் தங்கள் சகோதரரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக

  பதிலளிநீக்கு
 26. //அன்பான வார்த்தைகள், ஆறுதல்கள், அறிவுரைகள், உதவிகள் இவை எல்லாம் உரமாய் நின்று அவர்களின் நினைவுகளை நம் சிந்தையில் வாடாமல்லிகைகளாக மாற்றிவிடும்.//
  100 சத உண்மை

  பதிலளிநீக்கு
 27. கடைசி நேரத்திலாவது முடிந்ததே. அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு