ஞாயிறு, 31 ஜனவரி, 2016

கேடில் விழுச்செல்வம் கல்வி???!!!!

இது சற்று பெரிய பதிவுதான். பொருத்துக் கொள்ளுங்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி! இது நம் ஐயனின் வாக்கு.  அதாவது கல்வியே செல்வம் என்றார்.  ஆனால், இங்கு செல்வம் இருந்தால்தான் கல்வி என்றாகியிருக்கிறது.

மனதிற்கு வேதனை அளித்த ஒரு நிகழ்வுதான், மூன்று மருத்துவ மாணவிகளின் தற்கொலை.  இந்தத் தற்கொலையைப் பற்றி நம் நண்பர் விசு அவர்களும் ஒரு பதிவு எழுதியிருந்தார். http://vishcornelius.blogspot.com/2016/01/blog-post_27.html

இதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் பட்டியலில் வருபவர்கள் பதில் சொல்லுவதால் உயிர்கள் மீளப்போவதில்லைதான். ஆனால், அந்தப் பட்டியலில் வருபவர்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பானவர்களே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் எனது மற்றொரு கருத்தையும், இது போன்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மீதுள்ள கோபத்தையும், வருத்தத்தையும் முன்வைக்கத்தான் இந்தப் பதிவு. அந்த மற்றொரு கருத்திற்கு முன்...

பொறியியல், மருத்துவம் (நல்லகாலம் தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவத் துறையில் தனியார்கள் கல்லூரிகள் இல்லை) ஏன் விவசாயப்படிப்பிற்குக் கூட தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகத்தின் கீழும், அரசின் கீழும் அதாவது அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தின் கீழும் காளான்கள் போல் முளைத்திருக்கின்றன.

பொறியியல் கல்லூரி என்றால் ஒவ்வொரு துறைக்கும் AICTE (All India Council of Technical Education) அக்ரெடிட்டேஷன் பெற வேண்டும். அப்படிக் கிடைக்க அந்தக் கல்லூரிகள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்கின்றன, எவ்வளவு பெட்டிகள் கைமாறின/மாறுகின்றன இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன, எப்படி இத்தனைக் கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதன் ரிஷிமூலம், நதி மூலம் ஆராயத் தொடங்கினால் பல அதிர்ச்சியானத் தகவல்கள் கிடைக்கும்.

இதில் எத்தனைக் கல்லூரிகள் அந்தந்தத் துறைக்கு வேண்டிய எல்லா வசதிகள், தகுதிவாய்ந்த விரிவுரையாளர்கள், செய்முறைக் கூடங்கள் என்று செயல்படுகின்றன என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே.

நமது கல்வித்துறை ஊழல்கள் நிறைந்தத் துறையாகி நிற்பதுக் கண்கூடாகத் தெரிந்தும் நம்மால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாதது மிக மிக வேதனைக்குரியது. நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையே. ஏனென்றால் நம் குழந்தைகளும் இந்தக் கல்விக்கூடங்களின் மாணவ, மாணவிகளாய் இருக்கும் தலைவிதியை நினைத்து.

பொறியியல் கல்லூரிகளுக்கே இப்படி என்றால், உயிரைப் பாதுகாக்கும் கல்வியைப் போதிக்கும் மருத்துவக் கல்லூரிகளைச் சற்று எண்ணிப்பாருங்கள். தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இதில் அடக்கம். அப்படிப்பட்ட ஒரு தனியார் கல்லூரிதான் சமீபத்தில் சீல்வைக்கப்பட்ட, விழுப்புர மாவட்ட கள்ளக்குறிச்சி இயற்கை/சித்த மருத்துவக் கல்லூரியும்.

இந்தக் கல்லூரி ஆரம்பிக்க எப்படி அனுமதி கிடைத்தது? மருத்துவப் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டிருந்தது? 

எல்லா வசதிகளும், செய்முறைக் கூடங்களும், நல்ல விரிவுரையாளர்களும் இருக்கின்றார்களா என்ற தணிக்கை செய்யப்படவில்லையா? தணிக்கை செய்யப்பட்டுத்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றால் எவ்வளவு பணம் கைமாறியது? இந்தக் கல்லூரியை நடத்துபவர்களின் பின்புலம் என்ன?

மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, நாம் விரும்பும் துறை எந்தக் கல்லூரியில் கிடைக்கின்றது, அந்தக் கல்லூரி தரம் வாய்ந்தக் கல்லூரியா, செய்முறைக்கூடங்கள் நன்றாகச் செயல்படுகின்றனவா, கல்வியின் தரம், காம்பஸ் இன்டெர்வ்யூ உண்டா, அதன் சான்றிதழ் வேலைவாய்ப்புச் சந்தையில் எவ்வளவு மதிப்புடையது, என்ற பல விவரங்களையும் நாம் தனிப்பட்ட முறையிலும், அதன் முந்தைய மாணவர்களிடம் கேட்டும், அது தனியாராக இருந்தாலும் சரி, அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, நாம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

அரசு சார்ந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் தரம் வாய்ந்த கல்லூரிகள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மாணவ மாணவியர், தாங்கள் விரும்பிய துறையில் படிக்க ஆசைப்படுவதோ, பெற்றோர்கள் படிக்கவைக்க நினைப்பதோ தவறில்லை. ஆனால், நமது கட் ஆஃப் மார்க்கின் அடிப்படையில் நமக்குக் கிடைக்கும் கல்லூரி தரமற்றதாக இருந்தால் அதில் சேர்ந்து படிப்பதைவிட வேறு வழிகளை ஆலோசிக்கலாமே.

இந்த விழுப்புர சித்த மருத்துவக் கல்லூரியில் சேரும் முன், பெற்றோரும், மாணவ, மாணவிகள், தற்கொலை செய்து கொண்ட அந்த மூன்று மாணவிகள் உட்பட அரசு கவுன்சலிங்கில் கிடைத்திருந்தாலும், இந்தக் கல்லூரியைக் குறித்துச் சற்று ஆராய்ந்திருக்கலாம். இது போன்றக் கல்லூரிகளைக் குறித்துச் சாமானியர்கள் நாம் போராட முடியாது. அதற்கான பலம் நம்மிடம் இல்லாத போது நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசு கவுன்சலிங்கிலேயே கிடைத்தாலும் கூட என்றுதான் தோன்றுகின்றது.

தற்போதெல்லாம் மாணவர்களின் கட் ஆஃப் ரேங்கிற்கு நல்ல கல்லூரி, அரசுக் கவுன்சலிங்கில் கிடைக்க வாய்ப்பில்லை என்றறிந்ததும், பிற கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவிலோ, இல்லை தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலோ, இல்லை தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவிலோ பணம் கொடுத்து உறுதிப் படுத்திக் கொண்டுவிடுகின்றனர். சாமானிய மாணவர்களால் இப்படிப் படிக்க இயலுமா? பாவம் அப்படித் தான் விரும்பும் துறையைப் படிக்க நேரும் போதுதான் மன அழுத்தமும், பிரச்சனைகளும்.

பொறியியலாளராக, மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தரமற்றக் கல்லூரிகளிலும் கூட சேரத் துடிப்பதால்தான், இன்று காளான்கள் போல பல தனியார் கல்லூரிகள் முளைத்துக் கல்வியை வியாபரமாக்கியிருக்கின்றன.

அரசும் இதற்கு உடந்தையாக இருப்பதால் கல்வித்துறையே ஊழலாகி உள்ளது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, உழைத்துக் குருவி சேர்ப்பது போல் சேர்த்தப் பணத்தை இப்படி இழக்க வேண்டுமா? சற்று யோசியுங்கள் பெற்றோர்களே, மாணவர்களே!

மாணவர்களும், பெற்றோர்களும் நினைத்தால், முனைந்தால் இந்த நிலையை மாற்ற முடியும். ஏதேனும் என்ஜிஓ (NGO) பொதுநல வழக்குத் தொடர்ந்தேனும்  இந்த நிலையை மாற்றலாம். எனக்கு இந்த மாணவிகளின் மீது கோபமும், வருத்தமும்தான் வருகின்றது கல்லூரியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் சேர்ந்துவிட்டுத் தொடர்ந்து போராட இயலாமல், தற்கொலைதான் ஒரே தீர்வு என்று முடிவெடுத்திருக்கின்றார்களே என்று. இப்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போலவே.

எனவே, பெற்றோர்களும், மாணவர்களும் கல்வியின் தரம் அறிந்து மேற்படிப்பு பற்றிய முடிவுகள் எடுப்பதில் விழிப்புணர்வுடனும், மத்திய அரசும், மாநில அரசுகளும் கல்வித்துறையை அரசியலிலிருந்து விலக்கித் தனியாக இயங்க வைத்துச் சட்டத்தைக் கடுமையாக்கிச் செயல்பட வைத்தால் மட்டுமே கல்வித்துறை உருப்பட்டு சாமானியர்களும் பயன் பெற முடியும். இல்லையேல் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

(உலகமே, குறிப்பாக இந்திய மாணவர்கள் உயர்கல்வியின் கனவு தேசமாய்க் கருதும் அமெரிக்காவிலும், அரசு அனுமதி பெற்றுத் தனியார் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், ஃபெடரல் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் செயல்படுவது தெரிந்தால், அங்கு சட்டங்கள் கடுமையாக இருப்பதால், “ப்ளாக் லிஸ்ட்” பட்டியலில் அடக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு மூடப்பட்டுவிடுகின்றன.

அந்தப் பட்டியலில், 2011ல் அதிகம் பேசப்பட்டவை ஹெர்குஅன் பல்கலைக்கழகம்(Herguan University) ட்ரை வாலி (Try Valley) பல்கலைக்கழகம். சமீபத்தில் சிலிக்கன் வாலி பல்கலைக்கழகமும், நார்த் வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகமும் அந்தப் பட்டியலில். நீங்கள் ஊடகங்களிலிருந்து அறிந்திருப்பீர்கள். இந்தப் பல்கலைக்கழகங்களின் இந்திய மாணவர்களில் பெரும்பான்மையோர் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பல்கலைக்கழகங்கள் சிக்கியதன் காரணங்கள் வேறு. மட்டுமல்ல அங்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  இங்கு?)

இதோ உங்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி. Even medical Seats under “merit quota” are sold, says report.  அதன் முழுத் தகவலையும் வாசிக்க இந்தச் சுட்டி www.timesofindia.com நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா.

--கீதா


45 கருத்துகள்:

 1. தலைகுனிந்து நிற்பதையும், வேதனைப்படுவதையும் தவிர வேறு ஏதும் செய்ய முடியாத நிலை. இருக்கும் சட்டங்களை முறையாகப் பின் பற்றினாலே போதும். அரசியல்வாதிகளும், அதைவிட அதிகாரிகளும் பணம், பணம் என்று பணத்தாசை பிடித்து அலையும்போது என்ன செய்ய முடியும்? பெருமூச்சுதான் எழுகிறது. வழக்கு போட்டால் மட்டும் என்ன வாழும்? வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்படும். அப்புறம் பணம் பாதாளம் வரை பாயும்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி ஸ்ரீராம். நம் கல்விமுறையை நினைக்க நினைக்க மனது மிகவும் வேதனை அடைகின்றது. கல்வியில், கற்பதில் (குறித்துக் கொள்ளவும்..கற்பது....படித்து மனனம் செய்வது அல்ல..) ஆர்வம் சற்று அதிகமாக எனக்கு இருக்கிறதே என்றும் பல சமயங்களில் தோன்றுகின்றது..கல்வி, கற்றல் குறைபாடுகள், குழந்தைகள் என்றாலே எனக்கு எழுதத் தோன்றிவிடுகின்றது. ம்ம்ம்ம் என்ன சொல்ல..

  மிக்க நன்றி ஸ்ரீராம் முதல் கருத்திற்கும் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 3. நான் நான்கு வருடங்கள் கல்லூரிகளைப் பற்றியும் பள்ளிகளைப் பற்றியும் பத்திரிகையில் எழுதினேன். அதற்காக கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது நான் உணர்ந்தது, நாம் செலுத்தும் கட்டணம் நம் குழந்தைகளுக்கான கல்விக்கல்ல, அதை நடத்துபவர்களின் சொகுசான வாழ்க்கைக்கு தான் என்பதை அனுபவ ரீதியாக புரிந்து கொண்டேன். இதில் என்னவொரு வேடிக்கை என்றால் நான் பல பெற்றோர்களிடம் நீங்கள் கொடுக்கும் பணம் உங்கள் குழந்தையின் வாழ்க்கைக்கானது அல்ல என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், யாரும் கேட்டது இல்லை. எல்லோருக்கும் அதிக கட்டணம் கட்டி தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது பெருமையான விஷயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பெற்றோர்கள் இருக்கும் வரை கல்விக் கொள்ளையர்கள் காட்டில் பணமழை தான். கட்டணங்களை உயர்த்திக் கொண்டேதான் போவார்கள்.

  அரசுக் கல்லூரிகள், அரசுப் பள்ளிகள் அதிகப்படுத்தப்பட்டு அதில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைத்தால்தான் கல்வியின் இன்றைய நிலை மாறும். நல்ல பதிவு!
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செந்தில் விரிவான கருத்திற்கு. உங்களிடமிருந்து எதிர்ப்பார்த்தேன். நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்ற நிலையில் கண்டிப்பாக உங்கள் நேரடி அனுபவம் இருக்கும், கருத்தாக வரும், நீங்களும் எழுதியிருப்பீர்கள் என்ற என் எதிர்பார்ப்பு சரிதான். மக்களும் மாற வேண்டும்...அரசும் இது போன்ற பள்ளிகள், கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்காமல் அரசு சார்ந்த பள்ளிகள், கல்லூரிகள் நல்ல முறையில் தொடங்க வேண்டும். அப்போதுதான் விடிவுகாலம்...அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க மிக்க நன்றி செந்தில்...

   நீக்கு
 4. >>> சற்று யோசியுங்கள் பெற்றோர்களே, மாணவர்களே!.. <<<

  இந்தக் கொடுமைக்கெல்லாம் - யோசித்து செயல்படுவது ஒன்றே தீர்வு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 5. இதனால் பலியானது மூன்று பெண் குழந்தைகளின் உயிர் .... செய்தியில் படித்ததும், வேதனையிலிருந்து மீள முடியவில்லை :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சித்ரா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். வேதனைதான் என்றாலும் அவர்கள் சேரும் முன் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துவிட்டுச் சேர்ந்திருக்கலாம்...

   நீக்கு
 6. வருத்தத்திற்கு உரியது
  உண்மைதான் . எல்லோருமே ஒரு குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டுமே முட்டி மோதிச் செல்கிறார்கள் . கிடைத்தால் நல்லதே . கிடைக்காவிட்டால் எந்தத் துறையை வேண்டுமானாலும் எடுத்து அதில் முழு ஈடுபாடு செய்தால் முன்னேறலாம் . நானே ஒரு முன் உதாரணம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அபயா அருணா உங்கள் கருத்து சரிதான்...படிக்க நினைக்கும் சப்ஜெக்ட்டுக்கு இணையான அல்லது அதன் தொடர்புள்ளவற்றையும் யோசிக்கலாம். அல்லது திறந்த மனதுடன் இருக்க வேண்டும்..எதை வேண்டுமானாலும் கற்று அதில் சாதிக்க முடியும் என்று...னீங்கள் சொல்லியிருப்பது போல்...சரிதான் மிக்க நன்றி

   நீக்கு
 7. இன்று கல்வி... லாபம் சம்பாதிக்கும்ட தொழிலதகிவிட்டது... அன்றைக்கு இல்லாவர்கள் படிக்கமுடியவில்லை... இன்றைக்கு இருப்பவர்களுக்கும் படிப்பு இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் உண்மைதான் வலிப்போக்கன். உண்மையாகவே படிக்கும் ஆர்வமிருந்து, படிப்பதிலும் திறமை உள்ளவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகி வருகின்றது

   மிக்க நன்றி வலிப்போக்கன் கருத்திற்கு

   நீக்கு
 8. வணக்கம்
  அண்ணா
  கல்வி பற்றி வள்ளுவரின் குறள்களை கொண்டு அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கல்வி இன்று வியாபாரமாகி விட்டது... த.ம 3
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நதி நீராய் ஓடுதடி.:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 9. பதில்கள்
  1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 10. அனைத்தும் வணிகமயமாகிவிட்ட நிலையில் நாம் தப்பிக்க இயலா நிலைக்கு ஆளாகிவிட்டோம். இப்பட்டியலில் கல்வியும் சேர்ந்தது வேதனையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..உண்மை நிலை நீங்கள் சொல்லியிருப்பதுதான் என்றும் தோன்றுகின்றது..

   நீக்கு
 11. வணக்கம்
  எனக்கு இதைப்படித்து கோபம்தான் வருகிறது மக்கள் இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகளை பார்த்துக்கொண்டே இருப்பது கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும் என்ற சிந்தையே வருவதில்லை.
  இனி வரும் காலங்களில் ஒட்டு மொத்த கல்வியையும் தனியாரிடமிருந்து பிடுங்கி அரசே நடத்த வேண்டும் இலவசங்களை ஒழித்து கல்வி மட்டுமே கொடுத்தால் போதுமானது.

  வரும் தேர்தலில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி புரட்சி செய்யலாம் இவ்வகையான விடயங்களுக்கு மக்கள் கூடவர மாட்டார்கள் மதப்பிரச்சினை என்றால் உடனே வருவார்கள் நாம் அரசியல்வாதிகளை குறை சொல்வதை மாற்றி அவர்களை மாற்றுவதற்கான முடிவுக்கு வரவேண்டும் இன்றே சட்ட இயற்றி நாளையே அமுலாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் மக்கள் அதிரடியாக வைக்க மேண்டும்.

  மேலே நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல வெட்கித் தலை குனிந்துதான் போக வேண்டியது இருக்கின்றது.
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெட்கித்தலை குனிந்து.....அதைத்தான் கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன் ஜி. நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல், நம் குழந்தைகளையும் அங்கு படிக்க வைக்கவேண்டிய நிலமையாகி இருக்கிறதே என்று. எனக்கும் கோபம்தான் ஜி. ஆனால் புரட்சி என்பதெல்லாம் வரப்போவதில்லை ஜி நோ சான்ஸ்.

   அரசு முனைந்தால் நல்லது நடக்கும். அதாவது கல்வித்துறையை அரசு எடுத்து நடத்த....நாம் பேசி எழுதத்தான்முடிகின்றது...செயல்??!!!

   மிக்க நன்றி ஜி விரிவான கருத்திற்கு

   நீக்கு
 12. கல்வி பற்றி நானும் பல நேரங்களில் என் எண்ணங்களைப் பதித்ட்க்ஹிருக்கிறேன் என்னைப் பொறுத்தவரை கல்வியில் ஏற்றதாழ்வு குறந்தால் பல நன்மைகள் நிகழும்எல்லோருக்கும் சம கல்வி சம வாய்ப்பு என்று வராதவரை கல்வி பற்றிக் குறை கூறிக் கொண்டே இருப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சார்! நீங்கள் பல முறை சொல்லிவருகின்றீர்கள்தான். சம வாய்ப்பு வராதவரை புலம்பல்தான் நம்மிடமிருந்து

   மிக்க நன்றி சார் கருத்திற்கு

   நீக்கு
 13. கஞ்சா வித்தவன், கள்ள ஓட்டு போட்டவன், சாராயம் காய்ச்சினவன் எல்லாம் கல்வித் தந்தையாக தொப்பையைத் தூக்கிட்டுத் திரியற கல்லூரிகள்ல வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைச் சொல்லுங்க மலர். இவங்களை எல்லாம் யாருங்க உள்ள நுழையவிட்டது.....நம்மால ஒண்ணும் பண்ண முடியலையே...ம்ம்ம்ம் என்னத்த சொல்ல..நன்றி மலர்..

   நீக்கு
 14. மக்கள் விழிப்புடன் இருந்தால் ..இந்த களவாணிகளை துரத்தி அடிக்கலாம் .எல்லாருக்கும் ஆசை மருத்துவம் எப்படியாவது படிக்கணும் என்பதே அதில் இவர்கள் கவனிக்கதவறுவது நிறைய ஹிட்டன் சீக்ரெட்ஸ் :( பாவம் அந்த மாணவிகள் .
  இனியாவது மக்கள் கவனமாக இருக்கணும் பிள்ளைகளின் எதிர்காலம் சீரழியாம பார்த்துக்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யெஸ் ஏஞ்சல் அதே அதே. அதைத்தான் சொல்லியது இந்த போஸ்ட். மிக்க நன்றி தோழி...

   நீக்கு
 15. கல்வி வியாபாரமாகிவிட்டது...... பணம் கொடுத்து கல்லூரி கட்ட அனுமதி, ஒவ்வொரு சீட்டிற்கும் பல கோடிகள் வாங்கி அனுமதி கொடுக்கும் மந்திரிகள், அவர்கள் செய்த செலவை மாணவர்களின் பெற்றோர்களிடம் வாங்கும் கல்வி நிறுவனங்கள் - என இது ஒரு பெரிய Vicious Circle.....

  நிறையவே பிரச்சனைகள்.... மூன்று மாணவிகளின் பெற்றோர்களை நினைத்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி உண்மைதான் மிகவும் வேதனைக்குரியதாகிவிட்டது நமது கல்விச் சூழல். நாம் தான் விழிப்புணர்வுடன் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் நமது கல்லூரிகளை...

   நீக்கு
 16. //நிறையவே பிரச்சனைகள்.... மூன்று மாணவிகளின் பெற்றோர்களை நினைத்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது....//

  yes.exactly. Parents have a duty to verify the credentials of all these institutions before enlisting their wards.
  subbu thatha.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. yes.exactly. Parents have a duty to verify the credentials of all these institutions before enlisting their wards.
   subbu thatha.//

   Yes You are exactly right subbu thatha. That is the main point and view of my post regarding such happenings that you have got it right from the post and pointed out! Thanks a lot thatha for getting it right. Not only parents, even the students who wish to join the college have to scrutinize before applying.

   Thanks a lot thatha for understanding the post!

   நீக்கு
 17. அரசுத் துறையில் எதுவுமே இருக்கக்கூடாது என்று முனைப்புடன் செயல்படும் அரசுகளால் ஒன்றுமே மாற்றம் வராது ,கடன் கொடுக்கும் உலக வங்கிக்கு, கடன் பட்டவர்களின் ஆட்சியில் இதுதான் நடக்கும் !

  பதிலளிநீக்கு
 18. ஒரே அறையில் 30 மாணவிகள் தங்கி இருந்திருக்கின்றனர்
  ஒரே கழிவறையினை பயன்படுத்தி இருக்கின்றனர்
  சித்தாள் வேலை பார்த்திருக்கின்றனர்

  வேதனையாக இருக்கிறது
  சகோதரியாரே
  என்ன உலகு இது
  தம +1

  பதிலளிநீக்கு
 19. கட்டுரை நல்ல அலசல். இந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் அடிக்கும் கொள்ளைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். இங்கிலாந்து, அமெரிக்கப் பல்களைக் கழகங்களின் பெயரை தங்கள் கல்லூரிகளுக்கு வைத்துக் கொண்டு பொதுமக்கள் காதில் பூ சுற்றுபவர்களும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா தங்கள் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் நிறைய எழுதலாம்தான் காதில் பூச்சுற்றல் நிறையவே நடக்கின்றதே...

   நீக்கு
 20. வேதனையாக இருக்கிறது. பணம் அடிப்போர் சிலர். பழிவாங்கப்படுவோர் பலர். மனசாட்சி இல்லாததே...காரணம்...

  தம . கக

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி உமையாள் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 21. கல்வியை விற்பதால் வந்த அவலம் சகோ, என்று மாறும்,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஸ்வரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 22. பட்டப் பகலில் நடந்த பச்சைப் படுகொலை வழக்குகளிலேயே யாரும் தண்டனை பெறாமல் விடுதலையாகும் நாடு இது. இதுவோ தற்கொலை வழக்கு எனப்படுகிறது. என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

  வழக்கம் போல் நீங்கள் உங்கள் வேதனையைக் கொட்டிப் பதிவு செய்திருக்கிறீர்கள்...

  வழக்கம் போல் நாங்களும் எங்கள் வேதனை தோய்த்த கருத்துக்களைப் பதிந்து போகிறோம்...

  வழக்கம் போல் விசாரணை நடக்கும்...

  வழக்கம் போல் எல்லாரும் கடைசியில் விடுதலையாகி விடுவார்கள்...

  வழக்கம் போல் நமக்குக் கவலைப்பட வேறு ஒரு பிரச்சினை அதற்குள் கிடைத்து விடும்...

  வழக்கம் போல்............. ச்சை!

  மனம் மரத்துப் போய்க் கொண்டிருக்கிறது!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம் போல்............. ச்சை!// அதேதான் சகோ. நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் மிக மிகச்சரியே ச்சை என்றுதான் பல சமயங்களில் தோன்றி நாம் சொல்லுவதால் எழுதுவதால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்று தோன்றி கண்டுகொள்ளாமல் அதான் மரத்துப் போகச் செய்கிறதுதான்...

   நன்றி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
  2. ஆனால், அதே நேரம் நாம் எழுதுவதை நிறுத்தவும் கூடாது. பார்ப்போம்! ஒரு மாற்றம் விரைவில் வரும். காரணம், வெகு காலமாக இந்த சமூகம் மாறுதலே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

   நீக்கு
 23. மிகநீளமான பதிவில்லை..ஆனால் ஆழமான பதிவு...கல்லூரியை நான் குற்றம் சொல்வது இருக்கட்டும்....புடவை எடுக்கவும்..மற்ற விஷயங்களில் காட்டும் அக்கறை கல்வி விஷயத்தில் பெற்றோரும் மாணவரும் காட்டியிருக்கவேண்டும்..
  .கல்வி வியாபார நாய்கள் விஷயத்தில் சட்டங்கள் அரபுநாடுகள் போல் இயற்றப்படுவதோடு நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
  நல்ல பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செல்வா கருத்திற்கும் வருகைக்கும். ஆமாம் அதைத்தான் சொல்லியிருக்கின்றேன்/றோம். பெற்றோரும் மாணவர்களும் ஆராய்ந்திருக்க வேண்டும் கல்லூரியைப் பற்றி. அதே போன்று நீங்கள் சொல்லுவது போல் கல்வித்துறைக்கான சட்டங்கள் மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும். மிக்க நன்றி

   நீக்கு