எனது சமீபத்திய
அனுபவம் இந்தப் பதிவை எழுதத் தூண்டி, ஆரம்பித்து, பல நாட்களாக எழுதி முடித்துப்
பதிவிட வேண்டும் என்று நினைத்து, பாதியில் தடைபட்டு நிற்க, இன்று எப்படியேனும் எழுதி முடித்துப் பதிவிட வேண்டும் என்ற
ஆர்வம் உந்தக் காரணமாயிருந்த டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா அவர்களுக்கு http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_26.html எங்கள்
முதற்கண் நன்றி.
தோழியைப்
பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே என்ற ஆர்வத்திலும், காணப் போகின்றோம் என்ற
மகிழ்விலும், எனக்குச் சற்று நேரம் கிடைத்தக் காரணத்தால் பார்க்கச் சென்றேன். காலை 11 மணிக்கு. போன நேரம் ராகு/எமகண்டம்
போலும். ஏதோ ஒரு தொடரில் அர்த்தமற்ற, அநாகரீகமான வசனங்கள், காதைப் பிளக்கும்
சப்தங்கள் என்று தொடர் ஒன்று ஓடிக் கொண்டிருக்க, நான் வாயிலில் சென்று நின்றது கூடத்
தெரியாமல் எனது தோழி தொடரில் ஆழ்ந்திருக்க, நான் அப்படியே திரும்பி விடலாமா என்று
நினைத்தேன். அப்பொது அவர் அருகில் இருந்த
ஃபோன் ஒலிப்பது திரை ஒளிர்ந்ததில் தெரிந்தது. அவர் அதைக் கூட கவனிக்கவில்லை.
நான்
திறந்திருந்த கதவைத் (க்ரில்லுடன் கூடிய கதவு) தட்டியதும், என் தோழி அந்தப்
ஃபோனைக் கட் செய்துவிட்டு, என்னைத் தலையால் அசைத்து வா என்று சொல்லி விட்டு
மீண்டும் தொடரில் ஆழ்ந்துவிட்டார். இடைவேளையின் போது, தொடரப் பற்றிப் பேசத்
தொடங்கினார். நான் செய்த தவறு அவரைத்
தொலைபேசியில் அழைத்து அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டுச் செல்லாதது. ஆனால்,
அதுவும் பயன் இல்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பித்தால் மதியம் 2.30 மணி
வரையாம். பின்னர் மாலை 5 மணிக்கோ இல்லை
5.30 க்கோ ஆரம்பித்தால் இரவு 11 மணி வரையாம்.
எனக்கு இருப்புக் கொள்ள வில்லை. சரி
கிளம்புகின்றேன் என்று நான் சொன்னதும், அவரும், “சரி அப்புறம் எப்போ டைம்
கிடைக்குதோ வா” என்று சொல்ல நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். எனக்குத்
தொடர்கள் என்றாலே அலர்ஜி. டீவி பார்ப்பது வெகு அபூர்வம். இப்போது எங்கள் வீட்டில் கேபிளும் கிடையாது. நானும்
எனது மகனும் பார்க்க விரும்புவதை இணையத்தில் பார்த்துக் கொள்கின்றோம். எங்கள் வீட்டிற்கு
வரும் விருந்தினர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
பெண்கள் ஆண்களை
விட மிகவும் புத்திசாலிகள் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அதனால்தான் பல
குடும்பங்களில் பெண்கள்தான் அதாவது, அம்மாக்கள்/மனைவிகள்
தான் நிதி மந்திரிகளாக இருப்பதுண்டு.
சேமிப்பிலும் சரி, குடும்பத்தை அழகாக நிர்வகித்துக் கொண்டு செல்வதிலும் சரி.
பெண்கள்
போற்றப்பட வேண்டியவர்கள் என்று பேசும் இதே சமூகத்தில், பெண்களைத் தற்போது வரும்
தொலைக்காட்சித் தொடர்கள் வில்லிகளாகவோ இல்லை என்றால் அடிமைகளாகவோ, தியாகச்
சுடர்களாகவோ மிகைப்படுத்திக் காட்சிப்படுத்தியும் வருகின்றன. அதுவும் பெரும்பான்மையான
தொடர்கள் பெண்களை மையமாகக் கொண்ட தொடர்கள் என்பதால், அதில் பெரும்பான்மையான ஆண்களையும்
மோசமானவர்களாகக் காட்சிப்படுத்துகின்றன. அர்த்தமற்ற, அநாகரீகமான வசனங்கள்
பெரும்பான்மையான வீடுகளின் வரவேற்பரையில் அனுமதி இல்லாமலேயே நுழைந்துவிட்டன. வாயிலில் வருவோர் யார் என்பது கூடத் தெரியாமல்,
வந்தவர்களிடம் நாலு நல்ல வார்த்தைகள் பேசுவதைக் கூட மறந்து, அப்படியே பேசினாலும்
அந்தத் தொடரில் அப்போது நடந்த நிகழ்வையும், கதையையும் பேசும் அளவிற்கு இந்தத்
தொடர்களும் பெண்களின் மனதை வசப்படுத்தி வைத்துள்ளன என்றால் மிகையல்ல.
எனக்கு என்ன
ஆச்சரியம் என்றால், பெண்களைக் கேவலமாக உருவகப்படுத்திக் காட்டும் தொலைக்காட்சித்
தொடர்களுக்குப் பரம ரசிகைகளாகி இருப்பதும் பெண்களே. இந்தத் தொலைக்காட்சித்
தொடர்களால் பல குடும்பங்களில் மன உளைச்சல்கள் ஏற்படுவதும், அதில் பேசப்படும் வசனங்கள்
பல குடும்ப பெண்களாலும், குழந்தைகளாலும் பேசப்படுவது பற்றியும் பல குரல்கள் எழும்
வேளையில், நானும் அதை நேரடியாகவும் காண நேர்ந்தது. அதில் வரும் கதாபாத்திரங்களையும்,
நிகழ்வுகளையும், கதையையும் கூட தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்
நிலைமை. இது தானே ஒவ்வொரு வீட்டிலும் நடக்கின்றது என்று வேறு பேசப்படுகின்றது.
அப்படியென்றால்
பெண்கள் தாங்கள் அப்படித்தான் என்பதை ஒப்புக் கொள்கின்றார்களா? இந்தத் தொடர்களைக்
காணும் பெண்கள் - மாமியார்கள்,
மருமகள்கள், நாத்தனார்கள், மகள்கள் எல்லோருமே அந்த இடத்தில் தங்களை நிறுத்திப்
பார்க்கின்றார்களா? அதைச் சரி என்கின்றார்களா? பெண்களே தங்களை இது போன்று
வில்லிகளாகவும், காட்டுவதை ஏற்றுக் கொண்டு, நாங்கள் அப்படித்தான் என்று ஒத்துக்
கொள்கின்றார்களா? எனக்கு அப்படித்தான் என்று தோன்றுகின்றது. அதைச் சற்று விரிவாக,
உளவியல் ரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால் பெண்கள் ஏன் இதை விழுந்து விழுந்து
பார்க்கின்றார்கள் என்ற காரணம் என்னவென்றால், ஃபேண்டசி! அதாவது பெண்கள் தங்கள் யதார்த்த
வாழ்க்கையில் செய்ய நினைத்துச் செய்ய இயலாததை அந்தத் தொடர்களில் வரும் பெண்கள்
செய்வது போல் காட்டப்படுவதால் அந்த ஃபேண்டசி/கற்பனை உலகிற்குள் சென்று மனது
லயித்து, அந்தக் கதாபாத்திரத்தில் தங்களை உட்படுத்தி ஒரு திருப்தி அடைகின்றார்க்ளோ?.
கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று விடுகின்றதால், பெண்கள் அதனை அப்படி ஆழ்ந்து
பார்க்கின்றதாகத்தான் தோன்றுகின்றது.
உதாரணமாக, ஒரு
பெண் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவளது கைப்பையை ஒருவன் அடித்துச்
சென்றுவிடுகின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
யதார்த்த வாழ்க்கையில் எத்தனைப் பெண்கள் அவனைத் துரத்திச் சென்று,
பிடித்தும் அடித்து மீட்டுக் கொண்டு வருவார்கள்? அதையே தொடரில் அந்தப் பெண் செய்வது
போல் காட்டும் போது, அதைப் பார்க்கும் பெண்களுக்கு ஒரு மனத் திருப்தி. தாங்கள்
செய்ய முடியாததை அந்தப் பெண் செய்கின்றாள் என்று.
ஒரு ஹீரோயிசம் போன்று. என்றாலும்......
அதில் வரும்
வசனங்கள் பல மிகைப்படுத்தப் பட்டவையாகத் தெரியவில்லையா? அநாகரீகமான வசனங்கள். அறிவிற்கு
அப்பாற்பட்ட வசனங்கள். அப்படியே நடைமுறையில் கூட அது போன்று பேசப் பட்டாலும்,
அதற்குத் தீர்வு நாம் காண மாட்டோமா நம் குடும்பங்களில்? தொடர்களில் அந்த வசனங்கள் பேசப்பட்டு அது
மேலும் மேலும் குடும்பங்களில் குழப்பங்களையும், பிரச்சினைகளையும் வளர்ப்பது போல்
தான் காட்டுகின்றார்களே தவிர அதற்கு அறிவு பூர்வமான தீர்வுகள் உண்டு என்பதை
ஆராய்வதாகத் தெரியவில்லையே. பெண்கள் எப்போதுமே உணர்வு பூர்வமாகத்தான்
சிந்திப்பார்களா? அறிவாளிகள் இல்லையா? ஒன்று
அழுகை, தியாகம், பொறுமை, இல்லை என்றால், அல்லக்கை, வில்லித்தனம், இவைதான்
பெண்களின் அடையாளங்களா? அறிவு பூர்வமாக, சுயமாகச் சிந்தித்தால் பிரச்சனைக்களுக்குத் தீர்வு
எளிதாகக் கிடைக்குமே
இப்படிப்
பிரச்சனைகளை ஒரு குடும்பத்திற்குள் அர்த்தமற்று வளர்ந்து கொண்டு போவது போல,
வளர்த்துக் கொண்டே பல ஆண்டுகள் தொடரும் இந்தத் தொடர்கள் வியாபாரத்திற்காக என்பது
ஏன் பெண்களுக்குத் தெரியவில்லை? என்றாலும்,
இந்த
அழுவாச்சித் தொடர்களைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தங்கள் பொன்னான நேரத்தை எவ்வளவு
ஆக்கப்பூர்வமாக்கிக் கொள்ளலாம்? பொழுது போவதற்காக என்று சொல்லும் சப்பைக் கட்டுகளைக்
காரணங்களாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பொழுது போவதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கின்றன. இந்த அழுவாச்சித் தொடர்களைக் கண்டு அவர்களின்
வியாபாரத்தைப் பெருக்குவதை விட உங்கள் குடும்ப நிதியைப் பெருக்கிக் கொள்ள வழி
தேடலாமே பெண்களே! உங்களை அறிவு பூர்வமாக உயர்த்திக் கொள்ளுங்களேன்!
பெண்ணீயம்
பேசும் பெண்கள் குழுக்கள், சங்கங்கள், இயக்கங்கள் எல்லாம் பெண்கள் தினத்தைக்
கொண்டாடுவதில் காட்டும் ஆர்வத்தையும், பெண்களுக்காகப் போராட்டங்கள் நடத்துவதில்
காட்டுவதையும் ஏன் இதைப் பற்றிப் பேசுவதில் காட்டுவதில்லை? குரல் கொடுப்பதில்லை
என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அவர்களும் இதை ஆமோதிப்பது போல் தான்
இருக்கின்றது. மொத்தத்தில் சமுதாய
உறவுகள், நட்புகள், குடும்பங்கள் கெட்டு வருவது நிதர்சனமாகத் தெரிகின்றது.
இதற்கு யார்
முற்றுப் புள்ளி வைப்பார்கள்? பெண்கள்தான் வைக்க வேண்டும். அறிவை மழுங்கவைக்கும் இந்தத் தொடர்களைப் புறக்கணிப்பதன் மூலம். பெண்களே சற்று சிந்தியுங்கள்! சுயமாகத் சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்! உங்களுடைய வாழ்க்கையை அடுத்த வீட்டாருடனோ, தொலைக்காட்சித் தொடருடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவை எல்லாமே மிகைப்படுத்தப்பட்டவை என்பதை உணருங்கள்! சிந்தியுங்கள் அறிவுபூர்வமாக!
ஆக்கப்பூர்வமாக!
நம் ஆண்
பதிவர்கள் கூட இதைப் பற்றி எழுதித்தான் வருகின்றார்கள். மதுரைத் தமிழன் கூட
எழுதியிருந்தார் கந்தசாமி ஐயாவின் பதிவில் பின்னூட்டத்தில்
“இப்படி
பெண்கள் அதிகம் சீரியல்கள் பார்ப்பதால்தான் நம்மால் அந்த நேரங்களில் பதிவுகள் எழுத
முடிகிறது என்பதை சொல்ல மறந்துட்டீங்களே ஐயா”.
என்று. ஹ்ஹ்ஹ் சரிதான். (பெண்கள் திரண்டு எழுந்து, சீரியல் நின்று விட்டால், ஐயோ! தமிழா,
ஆண்களால் எழுத முடியாமல் ஆகிவிடுமோ!!!!!) திரு.
அமுதவன் அவர்களும், திரு இக்பால் செல்வன் அவர்களும் மிக அழகான கருத்துகளைச் சொல்லி
இருந்தார்கள். கந்தசாமி ஐயா அவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் போல
உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். வைகோ
சாரும், மதுரைத் தமிழனும் அதில் துண்டு போட்டு விட்டார்கள். இடம் இன்னும்
இருக்கும் என்று நினைக்கின்றேன்! வேறு
ஒன்றும் இல்லை எங்களையும் அந்தச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளத்தான். பெண்களுக்கு
இடம் உண்டு அல்லவா?!
பெண்களே சற்று சிந்தியுங்கள்!
பின் குறிப்பு: தமிழ் சீரியல்கள் என்று கூகுள் செய்து இமேஜஸ் சென்றேன் ஏதேனும் ஒரு படத்தை எடுத்துப் போட......அம்மாடியோவ்! இத்தனை சீரியல்களா!? நான் "ஆ" என்று பிளந்த வாய்தான்! எப்படி பொன்னான நேரம் கொல்லப்படுகின்றது. அன் ப்ரொடக்டிவாகிக் கொண்டிருக்கின்றது என்று வேதனையாகவும் இருக்கின்றது. படம் போடும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
---கீதா (மீண்டும் கந்தசாமி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. நான் இதை எழுதி முடித்துப் பதிவிட உந்துதலாக இருந்தமைக்கு)
படங்கள் : கூகுள்
தாங்கள் இந்தப்பிரச்சனையைக் கையில் எடுத்து அனுபவபூர்வமாக அலசிப் பிழிந்து, உதறிக் காயப்போட்டு விட்டீர்கள். சபாஷ். ஆனால் இது என்றும் தீராத மாறாத பிரச்சனை மட்டுமே என்பது நன்றாகப்புரிகிறது. பிறர் வீட்டுக்கு நாம் செல்லும் போது இந்த டீ.வீ.யினால் ஏற்பட்டுவரும் மிகத்தொல்லையான இந்த அனுபவத்தை நான் என் சிறுகதை ஒன்றில் கூட ஓர் சம்பவமாக சுட்டிக்காட்டியுள்ளேன்.
பதிலளிநீக்குதலைப்பு: ’அழைப்பு’ http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html//கந்தசாமி ஐயா அவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் போல உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். வைகோ சாரும், மதுரைத் தமிழனும் அதில் துண்டு போட்டு விட்டார்கள். இடம் இன்னும் இருக்கும் என்று நினைக்கின்றேன்!//
:)))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, வாங்கோ, உங்களுக்கு இல்லாத இடமா :))))))
பகிர்வுக்கு நன்றிகள்.
இதற்கு பொருத்தமாய் இன்று நான் போட்டிருக்கும் பதிவை நீங்க பார்க்கலே போலிருக்கே ...பொண்ணு பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :) >>>http://www.jokkaali.in/2015/04/blog-post_28.html
பதிலளிநீக்குசூப்பர் சூடு வைத்து விட்டீர்கள் ஆசானே!
பதிலளிநீக்குபதிவு சூப்பர் டூப்பர் ஹிட்டாக வாழ்த்துகள்
த ம + 1
நட்புடன்,
புதுவை வேலு
அய்யா அவர்களுக்கு
எனது
கண்ணீர்க் குடம் பதிவினை இதற்கு பின்னூட்டக் கருத்தாக தருகிறேன்.
கண்ணீர்க் குடம்
தலைக் காவேரி
"ஆறு"
கரை புரண்டு
ஓடிய,
காலம் போச்சுதடி!
தங்கமே தங்கம் !
சின்னத் திரை வானின்
TRP - நிலவு பொழியும்,
(Tevevesion/Tv Rating Points)
காசு மழைக்காக!
குடும்பங்களில்,
குழாய் வழியே!
"குடத்தினில்"
கண்ணீரை நிறைப்பது
நியாயமா சொல் ?
தங்கமே தங்கம்.
இனி,
இல்லங்கள் தோறும்
புன்னகை என்னும்
பன்னீர் பூக்கள்
மட்டுமே
பூக்கட்டும்!
"சீரியலை" விட்டு,
கண்ணீர்க் கவலைகள்
மறையட்டும்!
என்று,
சொல்லடி
தங்கமே தங்கம்!
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
முதலில் ஒரு சந்தேகம். இந்தத் தளத்தின் பொறுப்பாளர் திரு. துளசிதரன் என்றிருக்கிறது. ஆனால் இந்தப் பதிவின் கடைசியில் கீதா என்று போட்டிருக்கிறது. கீதா என்பவர் திருமதி. துளசிதரன் என்று எடுத்துக் கொள்ளலாமா? அந்த அனுமானத்தில்தான் இந்த பின்னூட்டம் போடுகிறேன்.
பதிலளிநீக்குதிருமதி. கீதா அவர்கள் எனக்கு இரண்டு முறை நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதற்கண் என் நன்றி.
நான் இந்த தொலைக்காட்சி தொடர்களைப் பற்றி என் கருத்துகளை பதிவாக போட்டதின் காரணம் ஒரு நாள் என் மனைவியை நான் ஏதோ சாதாரணமாக கேட்கப்போக, வழக்கமில்லாத வழக்கமாக, பதில் சூடாக வந்தது. எதற்கு வீண் விவாதம் என்று நான் அப்போது அந்தப் பேச்சை விட்டு விட்டேன். பிறகு ஏன் அவள் இப்படிப் பேசினாள் என்று யோசித்தபோதுதான் அந்தப் பேச்சு இந்தத் தொலைக்காட்சிகளின் தாக்கம் என்று புலனாகியது.
இதை நான் ஒரு நகைச்சுவைப் பதிவாக எழுதியிருந்தாலும், என் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இது உண்மையிலேயே ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியிருப்பது புரிந்தது. பிரச்சினை இருக்கிறதென்று தெரிகிறது. ஆனால் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பது தெரியவில்லை. என் நிலையிலிருந்துதான் என்னால் யோசிக்க முடியும். எனக்கு 80 வயதாகிறது. என் மனைவிக்கு 71 வயது. இருவருக்கும் வயதாகி விட்டபடியால் சும்மா ஊர் சுற்றுவதற்காக என்று வெளியில் செல்ல முடியாது.
நான் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு பொழுதைப் போக்குகிறேன். என் மனைவி என்ன செய்ய முடியும் என்று யோசித்தால் தொலைக் காட்சி பார்ப்பதைத் தவிர வேறு செய்வதற்கு ஒன்றையும் காணோம். ஏட்டுச் சுரைக்காயாக, பல காரியங்களைச் சொல்லலாம். கைவேலை செய்யலாம், சமூக சேவை செய்யலாம், காலக்ஷேபம் கேட்கப் போகலாம், வேறு பல வேலைகள் செய்யலாம். பல பெண்கள் இவ்வாறு செய்கிறார்கள். அது அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. எல்லோரும் செய்யமுடியுமா என்று தெரியவில்லை.
பலநாள் குடிகாரன் மாலையானால் டாஸ்மாக்குக்கு எப்படி அவனை அறியாமல் போகிறானோ, சீட்டாட்டத்தில் ஊறிய ஒருவனுக்கு எப்படி மாலையானால் கை தினவு எடுக்கிறதோ, அப்படி தொலைக்காட்சி தொடர்களின் நேரம் வந்து விட்டால் இந்தப் பெண்கள் எப்படியோ தங்கள் கை வேலைகளை முடித்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து விடுகிறார்கள். இது ஏறக்குறைய ஒரு மனநோயின் அளவிற்கு சென்று விட்டது.
நான் வெட்கத்துடன் ஒத்துக் கொள்கிறேன். என் மனைவியை இந்த பழக்கத்திலிருந்து என்னால் மீட்க முடியாது. கால மாற்றத்தினால் கலாச்சாரங்கள் அழிவது போன்ற நிகழ்வுதான் இது. விரக்தியினால் பேசுவதாக நினைக்க வேண்டாம். நடைமுறை உண்மையை தெளிவாகக் காட்டுகிறேன். அவ்வளவுதான்.
பிரச்சினையை தெளிவாக அலசியிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்கு"பொழுது போவதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கின்றன. இந்த அழுவாச்சித் தொடர்களைக் கண்டு அவர்களின் வியாபாரத்தைப் பெருக்குவதை விட உங்கள் குடும்ப நிதியைப் பெருக்கிக் கொள்ள வழி தேடலாமே பெண்களே!" என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குஎல்லோரையும் சிந்திக்க வைக்கும் பதிவு
நானும் சரி, எங்கள் வீட்டிலும் சரி தொடர்கள் பார்ப்பது இல்லை. நான் டிவியில் காலை நேரங்களில் சில நாட்களில் பழைய ஹிந்திப் பாடல்களும், பழைய தமிழ்ப் பாடல்களும் கேட்பேன். அதை விட்டால் செய்திச் சேனல்கள். கிரிக்கெட் கூடக் கிடையாது!
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருக்கும் ஃபேன்டசி காரணம் ஆச்சர்யமளிக்கிறது. துன்பப்படும் பெண்கள் நிலையில் தங்களை வைத்துப் பார்ப்பார்கள் என்று நினைத்தேன்.
ஆண்களும் சீரியல்கள் பார்க்கிறார்கள். அதுவும் இந்த சீரியல்கள் பார்ப்பவர்கள் எல்லாம் வயதானவர்கள் என்பதாலோ என்னவோ டிவியை மிகவும் சத்தமாக வேறு வைத்துப் பாரோப்பார்கள். பொறுமையே போய்விடும்!
சில வீடுகளில் சிறுவர், தொலைக்காட்சித் தொடர் கதைகளில் அப்டேட் ஆகா இருப்பார்கள். பெரியவர்கள் உபயம்.
பதிலளிநீக்குஒரு வாட்சப் வீடியோ வந்தது. சீரியலில் வரும் கஷ்டப்படும் நாயகியைப் பார்த்து மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார். பின்னணியில் கணவன் ஆக்சிடண்டில் தீப்பற்றி எறிவான். அதைக் கூட கவனிக்க மாட்டாள் மனைவி!
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
நல்ல தலைப்பை எடுத்துள்ளீர்கள் எல்லாப் பெண்களும் உணருவர்கள் என்றால். யப்பானைப் போல பல யப்பான் நாட்டை உருவாக்கலாம். ஏன் என்றால் அங்கு நேரம் முக்கியமாக பார்க்கப்டுகிறது.. கைத்தொழில் சிறந்து விளங்கு கிறது. எந்திரன் படம் 3மணித்தியாலம் அமைந்த படம் யப்பான் நாட்டு அரசாங்கம் என்ன சொன்னது எங்கள் நாட்டில் எந்திரன் படம் ஓடுவதாக இருந்தால் நேரத்தை குறைத்து படத்தை எடிட்டிங் செய்யுங்கள் என்று சொன்னார்கள் அங்குதான் விடயம் உள்ளது நேரம்.
ஆனால் நம் நாட்டு பெண்கள் சீரியலில் வாழ்க்கையை கழிக்கின்றார்கள் உணருவார்கள் என்றால் மேலே சென்னதை உருவாக்கலாம். த.ம4
எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான்... நாங்கள் இதில் மாட்டுவதில்லை என்பதில் சந்தோசம்...
பதிலளிநீக்குதொலைக் காட்சிப் பக்கமே செல்வதில்லை சகோதரியாரே
பதிலளிநீக்குதம +1
//..இதற்கு யார் முற்றுப் புள்ளி வைப்பார்கள்?.. பெண்கள்தான் வைக்க வேண்டும்!..//
பதிலளிநீக்குவைத்தால் நல்லது தான்!..
ஆனால் - அப்படி ஒரு காலம் வரும் என்கின்றீர்களா!..
இதைக் குறித்து என்னுடைய எண்ணங்கள் வலைப்பக்கத்தில் பலமுறை எழுதி விட்டேன். ஆனாலும் சீரியல்கள் எடுப்பவர்களும் பெண்களை ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்பவர்களாகச் சித்திரிப்பதில்லை. மிக மட்டமாகவே சித்திரிக்கிறார்கள். இதற்கு ஒத்துக் கொண்டு பெண்களும் அந்தத் தொடர்களில் நடிக்க ஒத்துக்கொள்கிறார்கள். எல்லாம் பணம் தான் காரணம்! இந்தத் தொடர்களாலேயே நம் கலாசாரமும் கெட்டுக் குட்டிச் சுவராகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் தோழியைப் போல் நெடுந்தொடர்கள் பார்ப்பவர்கள் தான் நிறைய. இதில் ஆண்களும் உண்டு.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகள் ஒரு சிலவற்றைப்படித்திருந்தாலும் கருத்துச் சொன்னதில்லை. இன்று தான் முதல்முறையாகக் கருத்துச் சொல்கிறேன். :)
பதிலளிநீக்குஎனக்கு ஒரு சந்தேகம் நிஜவாழ்வில் நடப்பது தொடராகக் காட்டப் படுகிறதா? தொடரில் காட்டப்படுவது நிஜ வாழ்வில் பின்பற்றப் படுகிறதா. ?எங்கள் வீட்டில் யாராவது வரும்போது டிவி அணைக்கப் பட்டுவிடும் வயதானவர்களின் பொழுது போக்கே இந்தத் தொடர்கள் தானா. ஒட்டு மொத்தமாகப் பெண்களைக் குறி வைத்தே சீரியல்கள் வெளியிடப் பட்டாலும் ஆண்கள் பார்ப்பதில்லை என்பதை நம்பமுடியவில்லை.
பதிலளிநீக்குஎன் அம்மாவிற்கு மாலையில் 7,30 லிருந்து பத்துமணி வரை இந்த தொடர்களை பார்க்காவிட்டால் மண்டையே உடைந்துவிடும். அவர்களுக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா? பார்ப்பதில் தவறில்லை! அடிக்ட் ஆகக் கூடாது என்பது என் கருத்து. ஆனால் எல்லா சீரியல்களும் ஒரே மாதிரியாக வசனங்கள் நாரசாராமாக அழுகையாக அமைவதுதான் வேதனை! நல்லதொரு பதிவு! நன்றி!
பதிலளிநீக்குஎனக்கு என்ன ஆச்சரியம் என்றால், பெண்களைக் கேவலமாக உருவகப்படுத்திக் காட்டும் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பரம ரசிகைகளாகி இருப்பதும் பெண்களே.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்! இக் கருத்தை முற்றிலும் ஆதரிக்கிறேன்
நல்ல பதிவு.......சமுக அவலத்தை சுட்டிக்காட்டுகிறது அய்யா
பதிலளிநீக்குஉருப்படியான எந்த விசயத்தையும் இந்தத் தொடர்கள் படிப்பிக்கவில்லை. கந்தசாமி ஐயா சொன்னது போன்று எனக்கும் அதே சூடான அனுபவம் தான். இதற்க்கு மாற்று என்னுடைய பேரன் தான். அவன் வந்தால் ரிமோட் அவன் கைக்கு போய்விடும்.
பதிலளிநீக்கு--
Jayakumar
வில்லங்க கோஷ்டிகளுக்கு முதலில் பதிவுக்காக எமது ராயல் சல்யூட் ஒருபுறம் சிறிய கோபமும்கூட காரணம் இந்த விடயத்தைக் குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பேன் எனது சோம்பலின் காரணமாக நாங்கள் முந்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஉண்மையிலேயே பெண்களை பல வகைகளிலும் புத்திசாலிகள் என்று உலவியல் ரீதியாக சொல்கிறார்கள் ஒருவேளை இந்த ஆய்வில் நம் தமிழ் நாட்டை புறக்கணித்து விட்டார்களோ என்று ஐயமாக இருக்கிறது.
ஏன் ? இந்த சீரியல் சீரழிவு என்னை நானே பலமுறை கேட்டுக்கொள்ளும் கேள்வி ? ஒரு எனது மனைவி இருந்திருந்தால் இதற்க்கான விடையை உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்திருப்பேன் இருப்பினும் ஒரு சந்தோஷம் சொல்லட்டுமா ? எனது இனிய மகள் சீரியல் அடிமை இல்லை.
ஒருமுறை விருந்தாளியாக சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றிருந்தேன் தமிழ் வளர்த்த மதுரைக்குத்தான் அங்கும் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் இரண்டு சீரியல் நடிகைகள் பட்டுச்சேலை உடுத்தி உ.டம்பெல்லாம் தலா 4 கிலோ நகைகள் போட்டு வலம் வந்து போனார்கள் இடைவேளையில் இந்த பெண்கள் பேசுகிறார்கள் அவங்க போட்டு இருக்கிற ஜாக்கெட் ஜரிகையை பார்த்தியா ? இவங்க போட்டு இருக்கிற சேலைப் பார்டரைப் பார்த்தியா ? எவ்வளவு அழகா இருக்காங்க ? என்னால் இகைக்கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை போனவாரம் உங்களுக்கு காது வலி வந்துச்சே அதைப்போலத்தான் எனக்கும்.
எனக்குள் எண்ணங்கள் ஓடியது இதுல ஒருத்தி மலையாளப் படத்தில் ஆபாசக் காட்சிக்காகவே கடைசிவரை உபயோகப்படுத்தியவள், மற்றொருத்தி தமிழ் படங்களில் டூ பீஸ் உடைக்காகவே கடைசிவரை உபயோகப்படுத்தியவள், இந்த வரலாறு இவர்களுக்கு தெரியுமா ? இல்லை மறந்து விட்டார்களா ? கோபத்தில் இடத்தை காலி செய்து விட்டு வெளியே கிளம்பி மற்றொருவர் வீட்டுக்கு போனேன் அங்கு போனால் அங்கும் இதே.... நான் என்ன செய்ய ?
அந்த நடிகைகள் யார் ? தெரியுமா ?
சீமா - அனுராதா
8 திக்கும் மணக்க 8
நல்ல பதிவு சகோ
பதிலளிநீக்குகழிசடைகள் கலையுலகில் வந்தால் என்ன ஆகும்...
இதுதான் ஆகும்
அன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குநான் டி.வி. தொடர்கள் பார்ப்பதில்லை. டி.வி-யில் செய்திகள், பட்டிமன்றம நிகழ்ச்சிகள் பார்ப்பதுண்டு. நேரம் கிடைக்கும் போது மானாட மயிலாட, நீயா நானா..., நல்லாப்பேசுங்க...நல்லதையே பேசுங்க.. கிரிக்கெட் போன்றவைகளை பார்ப்பதுண்டு.
பெண்கள் கவரக்கூடிய தொடர்களை பெண்கள் பார்க்கிறார்கள்...அதிலேயே மூழ்கி விடுகிறார்கள் என்பதும் உண்மையே. இதற்கு யார் முற்றுப் புள்ளி வைப்பார்கள்? பெண்கள்தான் வைக்க வேண்டும் என்று சரியாகச் சொன்னீர்கள்.
வியபாரமாகிவிட்ட ஊடகத்தில் பெண்களைக்கவரக்கூடிய தொடர்களை எடுத்தால்தான் அவர்களுக்கு நல்ல வியபாரமாகிறது என்பதால் ‘லேடிஸ் சென்டிமென்ட்’ களைத் தொட்டு எடுக்கிறார்கள். நெடுந்தொடர் என்று தேவையில்லாமல் இழுத்துக்கொண்டே செல்கிறார்கள். அதனால் எந்தத் தொடரையும் பார்ப்பது இல்லை.
“நான் வாயிலில் சென்று நின்றது கூடத் தெரியாமல் எனது தோழி தொடரில் ஆழ்ந்திருக்க, நான் அப்படியே திரும்பி விடலாமா என்று நினைத்தேன்.”
-வீட்டிற்கு வந்தவரை வரவேற்று உபசரித்து நாலுவார்த்தை பேசக்கூட முடியாத நிலையை இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எண்ணுகின்ற பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது.
நன்றி.
த.ம. 10.
அன்பின் இனிய வலைப் பூ உறவே!
பதிலளிநீக்குஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
அன்பின் இனிய வலைப் பூ உறவே!
பதிலளிநீக்குஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தற்போதைய காலகட்டத்திற்குத் தேவையுள்ள பதிவு. தாங்கள் அலசி ஆராய்ந்த விதம் அருமையாக இருந்தது. பல குடும்பங்கள் இவ்வாறான நிகழ்வுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.
பதிலளிநீக்குஎல்லாம் ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்கிவிடும் அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஆழமாய் அலசியிருக்கிறீர்கள்...சகோ. தம + 1
பதிலளிநீக்குவெகுநாள் கழித்து வந்திருக்கிறேன். வந்தவுடன் நல்ல பயனுள்ள பதிவு. நன்றி!
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட தொலைக்காட்சித் தொடரை விரும்பிப் பார்க்கிறார்களே இந்தப் பெண்கள்! அப்படியானால், தாங்களும் இப்படிப்பட்ட வில்லிகள்தான், கொடூரமானவர்கள்தான் என அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா, பெண்களை இப்படி இழிவாகக் காட்டும் இந்தக் கற்பனையை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள், ரசிக்கிறார்கள் எனக் கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். அதற்குப் பதிலும் உங்கள் பதிவிலேயே இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகளைக் காட்சி வடிவிலோ, எழுத்து வடிவிலோ, நாடகமோ, திரைப்படமோ எந்த வகையில் பார்த்தாலும், உணர்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டு அமைக்கப்படும் இந்தக் கதைகளைப் பார்ப்பவர்கள் எப்பொழுதுமே கதையில் வரும் நல்ல பாத்திரத்துடன் -பொதுவாக, அந்த ஈகைத்தனம் மிதமிஞ்சிய நாயகியுடன்- தங்களையும், எதிர்மறைப் பாத்திரத்துடன் தங்களுக்குப் பிடிக்காத, அதே உறவு நிலையில் இருப்பவர்களுடனும் பொருத்திக் கொள்கிறார்கள். அதுதான் அவர்களை இப்படிப்பட்ட கண்ணறாவிகளை ரசிக்கத் தூண்டுகிறது. அதாவது, தொடரில் மாமியர் கெட்டவள், மருமகள் நல்லவள், அவள்தான் நாயகி என்றால் அதைப் பார்க்கும் பெண்கள் தங்களை அந்த மருமகளாகவும், மாமியாரைத் தங்கள் மாமியாராகவும் தங்களையறியாமலே ஒப்பிட்டுப் பொருத்திக் கொள்கிறார்கள். இதற்கு சமூகத்தில் அவரவர் வகிக்கும் உண்மைப் பாத்திரமும் ஒரு தடையில்லை. அதாவது, முதுமை அடைந்த பெண் கூடத் தன்னை அந்தப் பாதிக்கப்படும் மருமகளாகக் கற்பிதம் செய்து கொள்ள முடியும், ரசிக்க முடியும். அவர் மாமியார் இறந்து பல ஆண்டுகள் உருண்டோடி, இப்பொழுது அவரே பெண் ஒருவருக்கு மாமியாராக இருக்கலாம். அவையெல்லாம் இங்கு இடையூறில்லை.
இது தவிர, தன்னை விட்டுவிட்டுத் தன் மகளையோ, தனக்குத் தெரிந்த பிற இளம்பெண்களையோ கூட இப்படிப்பட்ட நல்ல கதாபாத்திரங்களில் பொருத்திக் கொண்டு அவருடைய மாமியார் - நாத்தனார்களை வில்லிப் பாத்திரங்களாகக் கற்பித்துக் கொண்டு ரசிப்பதும் பலர் வழக்கம். ஆக மொத்தம், "தான் மிகவும் நல்லவன்/ள். அப்பாவி. எந்தச் சூது வாதும் தெரியாத பிறவி. ஆகவே, தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரும் தன்னை ஏமாற்றுகிறார்கள். தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தான் எப்பொழுதும் மற்றவர்களுக்கு நன்மை மட்டுமே செய்கிறோம். ஆனால், இந்த உலகம் நமக்குக் கெடுதலை மட்டுமே செய்கிறது. தன் மீது அன்பு காட்ட, உண்மையாக இருக்க இங்கு யாருமே இல்லை" என்கிற மிக மிக அடிமட்ட மனிதப் பொதுக்குணத்தை நம்பியே இத்தகைய தொடர்கள் உருவாக்கப்படுகின்றன; ரசிக்கவும் படுகின்றன. இதுதான் அவற்றின் வணிக மைய முடிச்சு! அதை மக்களுக்குப் புரிய வைத்துவிட்டால் இந்த மாயையிலிருந்து விடுபடலாம்.
பி.கு: பெண்கள் மட்டுமில்லை, ஆண்களிலும் ஏராளமானோர் தொலைக்காட்சித் தொடர் விரும்பிகள்தாம். மேலும், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மட்டுமில்லை உலகின் பல நாடுகளிலும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் மோகம் உண்டு.
பெரும்பாலான வீடுகளில் இந்த நிலை தான். பலரும் இந்த சீரியல் மோகத்தில் வீழ்ந்து விட்டார்கள். விடிவு காலம் எப்போதோ?
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் -
பதிலளிநீக்குதங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி..
வாழ்க நலம்!..
வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படுததியது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குhttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
அன்புடையீர்,
பதிலளிநீக்குதங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.
http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்
வலைச்சர அறிமுகத்தின் மூலம் தங்கள் வலைக்கு முதன்முறை வருகிறேன் என நினைக்கிறேன். பலமுறை தங்களை ஊமைக்கனவுகள் பிறகு செந்தில்குமார் வலையில் பார்த்திருக்கிறேன் என்றாலும் தொடர இன்றே வாய்ப்பு கிடைத்தது சகோவின் மூலம் என்ன செய்வது தாங்கள் குறிப்பிட்டிருந்த பெண்கள் போல சீரியல்களில் மூழ்கிப்போனவர்களாலும் இந்த பக்கங்களில் வர வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் அல்லது என்னைப்போல அலுவலக நேரத்தில் வலையில் உலவும் போது வாய்ப்புகிடைக்காமலும் போகலாம் வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் வீட்டு வேலைகளே சரியாகி விடுகிறதே.
பதிலளிநீக்குஎனக்கும் சீரியல்களில் மூழ்கிவிடுபவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை என்ன செய்ய?
சிறப்பாகத்தான் பலரும் சிரிப்பாகச்சொன்னாலும் இந்த மாதிரியான பெண்கள் திருந்துவதில்லையே.
நல்ல பகிர்வுங்க இனித் தொடர்கிறேன் நன்றி.