செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

திருநங்கைகள்- இவர்களும் நம்மிடையே வாழ வேண்டியவர்களே!

     

நான் இது வரை மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தின் போதும் சரி, பிற சமயங்களிலும் சரி, திருநங்கைகளைக் கண்டதுண்டு.  அவர்கள் கைதட்டிப் பணம் பெறுவதையும், அப்படிக் கிடைக்கவில்லை என்றால் ஏசுவதும், பணம் பெறும் வரை நின்று கொண்டு இருப்பதும், ஆண்களின் மீது இடித்தும், வசைபாடியும் பெறுவதைக் கண்டதுண்டு.  இதற்குப் பயந்தே பல ஆண்கள் அவர்கள் வரும் போதே பணத்துடன் தயாராக இருந்துக் கொடுத்துவிட்டுத் தப்பிப்பதையும் பார்த்திருக்கின்றேன். நானும் கொடுத்ததுண்டு.  மனம் யோசித்தது உண்டு இவர்களின் பிழைப்பு ஏன் இப்படியாகிப் போனது என்றும் பல சமயங்களில் இவர்களுக்காக இரக்கப்பட்டதுமுண்டு. எல்லோருமே இவர்களைக் கேலி செய்தோ, இல்லை வசை பாடியோதான் பார்த்திருக்கின்றேன்.  இல்லையேல் இவர்களை ஒரு காட்சிப் பொருள் போல் வேடிக்கைப் பார்ப்பதும் உண்டு.  ஒரு வேளை இவர்களது உடல் மொழியும், நடை உடை பாவனையும் இதற்குக் காரணமாக ருக்கலாம்.  ஆனால், ஏனோ, எனக்கு இவர்களின் மீது ஒரு தனி கழிவிரக்கம் உண்டு.

      இதுவரை தூர நின்று பார்த்திருந்த திருநங்கைகளிடமிருந்து சற்று வித்தியாசமான பாவனைகளுடன் இருந்த திருநங்கைகளை, எனது இப்போதைய பயணத்தின் போது, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், சென்னை வரவேண்டி ரயிலுக்காகக் காத்திருந்த சமயத்தில், காண நேர்ந்தது.  தாங்களுண்டு, தங்கள் வேலை உண்டு என இவர்கள் இருந்தாலும், அங்கிருந்தோர் எல்லோருமே இவர்களையே உற்று நோக்கிக் கொண்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும், எனது பார்வையும், மன நிலையும் அவர்களை அணுகலாமா, எப்படி அணுகுவது என்ற ஒரு சிந்தனையுடன் இருந்ததை அந்த 3 திருநங்கைகளில் ஒருவர் உணர்ந்திருக்க வேண்டும்.  எனது பார்வையும் ஒரு நட்பினை உணர்த்தியதோ என்னவோ, அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலித்தார்.  அதைப் பார்த்ததும், இதுதான் தருணம் என நான் அவர்களை சமீபத்து உரையாடத் தொடங்கினேன். இதுவே சற்று வித்தியாசமான சூழல் போலும். அங்கிருந்தோர் இப்போது என்னையும் வினோதமாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

      திருநங்கைகள் என்று சொல்லப்பட்டாலும், அந்தத் “திரு” என்ற சொல்லுக்கான, ஒரு அர்த்தமாகிய, இந்த சமூகத்தில், உலகில் வாழ வேண்டிய அந்தஸ்து என்பது அவர்களிடம் எந்த வடிவிலும் இல்லை. ஆனால், திரு என்ற சொல்லின் பிரிதொரு அர்த்தம் அவர்களின் முகத்தில் மிகுதியாகவே இருப்பதாகப்பட்டது.  ஆம்!  அவர்கள் அழகாக இருந்தார்கள். இல்லை ஒரு வேளை எனது கண்களுக்கு அப்படித் தோன்றியதாகவும் இருக்கலாம். உரையாடியதில் அவர்கள் மிகவும் நல்ல மனது படைத்தவர்களாகத் தெரிந்தார்கள்.  படித்தவர்கள். அவர்களது உடலமைப்பு, அவர்களை ஆண்கள் என்று பறையடித்தாலும், தங்களைப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்திருந்தார்கள். மிகவும் தன்மையாகப் பேசினார்கள். நல்ல பண்புகளும், இந்த சமூகம் தங்களைப் புறக்கணித்தாலும், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளும், சாதாரண மக்களின் இன்னல்களையும் உணர்ந்தவர்களாகவே தெரிந்தார்கள்.  சமூக அவலங்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். எனது நேரிடையான கேள்விகளுக்குக் கூட எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், கோபப்படாமல், மிகவும் நேர்த்தியாகப் பேசினார்கள்.

      பங்களூரைச் சேர்ந்தவர்கள்.  பிறப்பால் ஆண்களாக இருந்தாலும், சிறுவயது முதலேயே, பெண்களாக வாழவேண்டும் என்ற மனநிலையுடன், தங்களைப் பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு வாழ விழைந்ததாகச் சொன்னார்கள்.  மூவரின் குடும்பங்களும் பொருளாதார அடிப்படையில் மிகவும் உயர்ந்தவர்கள். இந்த மூவரில், 12 வருடங்களாக ஒரு திருநங்கையாக வாழ்ந்து வருபவரின் பெற்றோர் இட்ட பெயர் க்ளைஜர், தற்போதைய பெயர் அமீஷா. 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றவர், வீட்டிலிருந்து துரத்தப்பட்டதால் கல்வியைத் தொடரமுடியவில்லை. 8 வருடங்களாக  இன்நிலையில் வாழ்பவர் ராகுல் எனப்படும் ரம்யா.  வீட்டின் ஆதரவு இல்லாதவர்.  பெற்றோரும், சகோதரரும் மிகவும் நல்ல பதவியில் இருப்பவர்கள். பி.காம் படித்திருப்பவர். மிக நன்றாக, தூய்மையான ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தனது படிப்பிற்கான செலவை தானே ஈட்டிப் படித்தவர். இங்கு “ஈட்டி” எனப்படுவது நிஜத்தில் ஈட்டிதான்.  பணம் ஈட்டப்பட்ட முறை. படிப்பிற்குப் பிறகு, பங்களூரில் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில், ஹெச் ஆராக வேலை செய்திருக்கிறார் ஒரு வருடம். பின்னர் அலுவலகத்தில் சில சலுகைகள் இவருக்கு வழங்கப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட இவர் புறம் தள்ளப்பட்டிருக்கின்றார். தற்போது பெரும்பான்மையான திருநங்கைகள் போல வாழ்க்கை. மூன்றாமவர் பெயர் பரத்.  தற்போது பூமிகா. 5 வருடங்களாக இந்த வாழ்க்கை. படித்திருப்பது +2.  என்னுடன் முழுமையாக உரையாடிவர் ரம்யா.

      படிக்கும் காலத்தில் நடந்த சிலவற்றைச் சொல்லுவதற்கில்லை.  அதை எழுதினால் சில பிரச்சினைகள் வரக்கூடும்.  மதிப்பெண்கள் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு சில தகாத உறவுகள் போன்ற இன்னல்கள் இருந்திருக்கின்றது.  

    இவர்களுக்கு குரு ஒருவர் இருப்பாராம். அவர் இவர்களுக்காக, ஒருவருக்கு 2 லட்சம் செலவழிப்பாராம். இவர்கள் அவருக்கு அதை 4 லட்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம். இவர்கள் மிகவும் அழகாக வேண்டும் என்பதற்காக, 41 நாட்கள் யாரையும் காணாமல், ஒவ்வொரு நாளும் ஒரு திருநங்கை இவர்களுக்கு முதலில் மஞ்சள் அரைத்து உடம்பு முழுவதும் பூசுவார்களாம். பின்னர், 10, 15 அடி தூரத்தில் நின்று கொண்டு, கொதிக்கக் கொதிக்கத் தண்ணீரை இவர்கள் மீது வீசிக் கொட்டுவார்களாம், பிறப்பு உறுப்புகள் உட்பட. இவர்கள் அலறுவார்களாம். அதன் பின் படுக்க வைத்து தூய்மையான சந்தனம் இழைத்து அதை உடம்பு முழுவதும் பூசுவார்களாம்.  வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடுவார்களாம்.  இப்படி 41 நாட்கள் செய்த பிறகு உடம்பிலுள்ள முடிகள் எல்லாம் போய்விடுமாம்.  41 நாட்கள் முடியும் அன்று, இவர்களை பாலூற்றிக் குளிக்க வைப்பார்களாம். இதற்குப் பெயர் ஜல்சா. 

    அன்று வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு அலங்காரம் செய்வது போல் இவர்களுக்கும், அணிகலன்கள், மெட்டி, கொலுசு அணிவித்து, இவர்களுக்குச் சேவை செய்த திருநங்கைகளுக்கு தங்கத்தில் சிறியதாக ஏதாவது பரிசு அளிப்பாராம் குரு.  அதைப் போல் அந்த சேவை செய்த திருநங்கைகள் இவர்களுக்குப் பரிசு அளிப்பார்களாம். பின்னர் அன்று செருப்பு தைப்பவர் ஒருவரை அழைத்து வந்து இவர்களுடன் முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடக்குமாம்.  இதற்கு என்றே செருப்பு தைப்பவர்கள் குழு இருக்கின்றதாம்.  வருபவர் இவர்களுக்கு தாலி கட்டி விட்டு அன்று ஒரு இரவு தங்கிவிட்டுச் சென்றுவிடுவாராம்.  பின்னர் இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாராம்.  ஆனால் அவரது செருப்பு மட்டும் நினைவாக இவர்களோடு விட்டுச் செல்வாராம்.  இதற்குப் பெயர் தந்தா என்பதாம். இன் நிகழ்வுகளுடன் இவர்களுக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகள் நடத்துவதற்கும் சேர்த்து குரு 2 லட்சம் செலவழிப்பாராம்.  இவர்கள் அவர்க்கு அதை 4 லட்சமாகத் திருப்பித் தரவேண்டுமாம். இன் நிகழ்வுக்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொரு ஆணுடனும் இரவுகள் கழித்து பணம் சம்பாதிக்கலாமாம். மனதளவில் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். தங்களை பெற்றோரும், இந்த சமூகமும் ஒதுக்குகின்றதே என்ற ஒரு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள்.

      இவர்களிடம் நான் கேட்ட கேள்வி, ஏன் இப்படிப்பட்ட ஒரு அவல நிலை? எதற்காக இப்படி வாழ வேண்டும்?  இப்படித்தான் வாழ வேண்டுமா?  ஏன் உங்களுக்கு இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவந்து, உங்கள் படிப்பை உபயோகப்படுத்தி உங்கள் காலில் நிற்க முயற்சிக்கலாமே. 

“எங்களுக்கும் ஆசை இருக்கின்றதுதான் மேடம்.  சொல்லப் போனால், நான் நன்றாக ஆங்கில வகுப்புகள் எடுப்பேன்.  நடன வகுப்புகள் எடுப்போம்.  ஆனால், எங்களை யாரும் சேர்த்துக் கொள்வதில்லை. எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  நாங்கள் எதிர்ப்பார்ப்பது எங்களிடமும் அன்பு செலுத்தும் ஆண் துணை கிடைப்பாரா என்றுதான்” என்றார்.  தற்போது அவர்களை பங்களூரில், செல்வந்தர் ஒருவர் – ஷிவானி – அவரும் இவர்களைப் போன்றவர்தானாம்.  ஆனால், ஆணுடைதான் அணிந்திருப்பாராம் - இவர்களைத் தத்தெடுத்து, கவனித்துக் கொள்கின்றாராம்.  ஆனால், இவர்கள் பிச்சை எடுத்துத்தான் பணம் ஈட்டுகின்றனராம். “மேடம் நீங்கள் இதை எழுதுவதினால், எங்களுக்கு யாராவது ஏதாவது வேலை கொடுப்பார்களா?  எங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமா?” என்று கேட்டார். 

      “நான் வேலை வாங்கித் தரமுடியும் என்று என்னால் எந்த உறுதியும் கொடுக்க முடியாது.  ஏனென்றால், நான் அந்த அளவிலான நிலையில் இல்லை. ஏதோ எழுதுபவள். இதையும் எழுதுகின்றேன்.  யாராவது இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு வேலை தர முன்வந்தால், நான் மிகவும் மகிழ்வேன்” என்றேன். அவர்களின் விருப்பம் நிறைவேறினால் மிகவும் நன்று.

      நான் அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும் அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும். முயன்றுதான் பாருங்களேன்.  இப்படிக்கு ரோஸ் எனும் நிகழ்ச்சியை நடத்திய ரோஸ், மிகப் புகழ் வாய்ந்த நடனமணியான நர்த்தகியைப் போல ஒரு உயர்வான வாழ்க்கையைத் தேடிக் கொள்ளலாமே.”

      “கண்டிப்பாக மேடம், நீங்கள் சொல்லுவது போல முயற்சிக்கின்றோம். நீங்கள் இப்படி, எங்களையும் மதித்து, அன்புடனும், அக்கறையுடனும் பேசுவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்களுடன் தொடர்பில் இருங்கள்.  அவ்வப்போது இது போன்று எங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் மேடம்”  என்று சொல்லித் தனது அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

      இவர்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தினரே! இவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். வாழ உரிமை உள்ளவர்களே! நாம் இவர்களைப் புறக்கணிக்காமல், இவர்களையும் ஏற்றுக் கொண்டு, இவர்களை ஆதரிக்கும் விதத்தில், அவர்களது திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அளித்து ஒரு சமூக அந்தஸ்து அளிக்கலாமே. அரசும் சில நல்ல திட்டங்கள் வகுத்திருக்கின்றதுதான்.  ஆனால், அதிகம் பேசபடுவதில்லை. மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில், மனதளவில் பயிற்சி கொடுத்து, தாழ்வு மனப்பான்மையை அகற்றி வேலை, கல்வி, வேலை வாய்ப்புகளும் கொடுத்து, தன்னம்பிக்கையும், தன் காலில் நிற்கும் அளவிற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கி அவர்களையும் நம்மிடையே வாழ வழிவகுக்கலாமே. 

-கீதா57 கருத்துகள்:

 1. நடுச்சாமத்துல பதிவு போட்டால் ? மனுசன் தூங்க வேண்டாமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹஹஹ் என்ன செய்ய, ஆமாம் உங்கள யாரு தூங்க வேண்டாம்னு சொன்னது!?ஹஹஹ்...நாங்க பேய்னு தெரியாதா உங்களுக்கு....அடடா....

   இங்கு பணிச் சுமை சற்று கூடுதலாகிவிட்டது...அதாங்க...

   மிக்க மிக்க நன்றி நடு ராத்திரி இந்தப் பேய்களுடன் நடமாடும் ஜி பேய் ஓடி வந்து மொய் வைத்ததற்கும்.........

   நீக்கு
 2. வணக்கம்
  அண்ணா.

  ஒரு திருநங்ககை எப்படி ஆகின்றால் என்ற தகவலை தங்களின் பதிவு வழி விரிவாக அறிந்தேன் அதிலும்
  கொதிக்கும் சுடுதண்ணீரை 10.15. அடி துாரத்தில் நின்று ஊற்றுவது வேதனையான விடயந்தான் மற்றும்
  செருப்பு தைக்கும் ஒருவனை முதலில் மணந்து தாலி கட்டும் நிகழ்வும் அவரின் செருப்பு நினைவோடு வாழ்வதாக சொன்னீர்கள் இது ஒரு புது மையான விடயம்

  உண்மையில் நல்லா படித்த திருநங்கையர்கள் எத்தனை பேர் இவர்களை சமுகம் மதித்து நடக்க வேண்டும் அவர்களுக்கான அங்கீகாரம் கொடுத்தால் வேறு தொழில் செய்து வாழ வேண்டிய நிலை வராது மிகத் தெளிவாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா த.ம2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கு....எனக்கும் இதுப் உதிய விடயங்களே அவர்களிடம் பேசிய போது தெரிந்து கொண்டது....இது பங்களூரைச் சேர்ந்த திருநங்கைகளின் வாழ்வு,...தமிழ் நாட்டில் வேறு கலாச்சாரம் இருக்குமோ என்னவோ....பார்த்தால்தான் தெரியும்....

   நீக்கு
 3. இறைவனின் குழந்தைகள் அவர்கள் ..பேட்டியை படிச்சப்போ மனசு வலிச்சது.

  கடந்த மாதம் இதே விஷயத்த பற்றி சமீபத்து படம் சர்ச்சை நேரத்தில் எழுத நினைத்தேன் ! அப்படியே விட்டுட்டேன் ..உங்களைப்போல நிச்சயம் என்னால் எழுத முடியாது ...இன்று டேஷ்போர்டில் பார்த்ததும் ஆச்சர்யமெனக்கு ..மிக அருமையாக அவங்க வலிகளை கூறியுள்ளீர்கள் .பாரதி என்பவர் முதல் திரு நங்கை பாதிரியார் இவரம் போராடித்தான் இந்த இடத்தை பிடித்தாராம் ..

  நான் முன்பு சு சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி கதை படித்தே மிக வருத்தப்பட்டேன் .பாவம் .மூன்றாம் பாலினம் என்று இடத்தை ஒதுக்கினால் மட்டூம் போதாதது .அவர்கள மரியாதையுடன் பாசத்துடன் அன்புடன் அணுகனும் .மீடியாவில் இவர்களை எள்ளி நகையாடாமல் இருந்தாலே போதும் .
  பாராட்டுக்கள் சகோதரி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரி! //உங்களைப்போல நிச்சயம் என்னால் எழுத முடியாது // ஐயையோ சகோதரி அப்படிச் சொல்லாதீர்கள்....நீங்கள் எவ்வளவு அழகாக எழுதுகின்றீர்கள்! நாங்கள் உங்கள் பதிவுகளைப் பற்றிச் சொல்லி வியப்பதுண்டு.

   எப்போதும் போல் புதிய விடயங்களுடன் உங்கள் கருத்து.....குறித்துக் கொண்டோம்...

   பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரி!


   நீக்கு
 4. ஒரு பகுதி சிவனாகவும்,
  மறு பகுதி சக்தியாகவும்
  காட்சி தந்த அர்த்தநாரீஸ்வரின் அவதார புருஷர்(ஷி)களாக
  பிறப்பினை பெற்ற இவர்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, வேலை, கல்வி, வேலை வாய்ப்புகளும் கொடுத்து, தன்னம்பிக்கையும், தன் காலில் நிற்கும் அளவிற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கி அவர்களையும் நம்மிடையே வாழ வழிவகுப்போமே!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான கருத்திற்கு! எல்லோருக்குள்ளும், இரு வித உணர்வுகளும் இருக்கும்தான். ஆனால் எந்த உணர்வுகள் மேலிடுகின்றதோ நாம் அதுவாகிப் போகின்றோம்...எல்லாமே இந்த ஹார்மோன் களின் தாக்கத்தினால் ஏற்படுவதே.....

   நீக்கு
 5. இந்தப் பதிவின் மூலம் அவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கட்டும் ..
  த.ம.4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! கிடைத்தால் நல்லதே!

   நீக்கு
 6. திருநங்கைகள் - இவர்களும்
  நம்மிடையே வாழ வேண்டியவர்களே! - அதற்கு
  நம்மாளுகளும் ஒத்துழைக்க வேண்டுமே!
  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒத்துழைப்பார்கள், புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்...மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு.

   நீக்கு
 7. பிழை இவர்களல்ல
  இவர்கள் இயற்கையின் பிழை
  படைத்தவனின் கவனக்குறைவால் கிழிந்த ஓவியங்கள்
  தம ௫

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம ௫
   இது என் கணினியில் ஏற்பட்ட (ஏற்கனவே ஏகப்பட்ட தவறுகள் இருக்கே) ஷ் (வாயை மூடிப் பேசவும்) தவறு மற்றும் திமிரு (அப்படியும் ஒரு படம் வந்திருக்கே)
   நிற்க விஷயம் என்னன்னா நான் 5 என்று பதித்தது 5 ஆனால் ௫ இந்த ரு அல்ல ௫ ஆக வந்திருக்கிறது.

   நீக்கு
  2. ஹஹ்ஹ பரவாயில்லை நண்பரே! தமிழ் தட்டச்சில் இதெல்லாம் சகஜமப்பா.....பரவாயில்லை....தங்களின் கருத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அது போதும்....ஆம் இயற்கையின் பிழைதான்..மிக்க நன்றி தங்கல் கருத்திற்கு!

   நீக்கு
 8. மிகச் சிறப்பான கட்டுரை. பல சமயங்களில் இவர்களில் சிலர் மீது கோபம் வந்தாலும், இவர்களை நினைத்து வருத்தம் தான். பல திறமைசாலிகள் இவர்களில் உண்டு. பதிவில் சொன்னவர்களுக்கும் இக்கட்டுரை மூலம் நல்லது நடக்கட்டும்....

  த.ம. +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டிற்கு மிக்க நன்றி வெங்கட் ஜி! ஆம் எனக்கும் தோன்றியதுண்டுஒரு சில சமயங்களில் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று. இவர்களில் ஒரு சிலர் அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்கள்தான் அப்படி நடந்து கொள்கின்றார்கள். மற்றவர்கள் அப்படி நடந்து கொள்வதில்லை என்றுதான் தோன்றுகின்றது. இவர்களுடன் பேசிய போது....

   நீக்கு
 9. திருநங்கைகளும் வாழ்வதற்கு முற்றிலும் தகுதியானவர்களே
  நாம்தான் அவர்களை ஏதோ ஒரு வேடிக்கைப் பொருளாக, பார்த்து
  கேலி பேசி அவமதித்து வருகின்றோம் . இந்நிலை மாற வேண்டும்
  சகோதரியாரே
  இதில் கொடுமை என்னவென்றால், அவர்களின் குடும்பமே அவர்களைப் புறக்கணிப்பதுதான். திருநங்கையாகப் பிறந்தது அவர்கள் குற்றமல்லவே,
  பெற்றோர்களாலேதானே இவர்கள் இப்படிப் பிறக்கிறார்கள்,
  அவர்களே தங்கள் குழந்தைகளை வெறுத்தால்,,,,,, வேதனைதான் மிஞ்சுகிறது சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் உண்மையே இவர்களின் குடும்பங்கள் இவர்களைப் புரிந்து கொள்ளாமல் விலக்குவதுதான் கொடுமை. அவர்கள் இவர்களைத் தங்களுடன் வைத்திருந்தால், இந்த இழிவான நிலை ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு நல்ல பிறர் மதிக்கத் தக்க வகையில் உருவாக்கலாம்....மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 10. அன்புள்ள அம்மா,

  திருநங்கைகள்- இவர்களும் நம்மிடையே வாழ வேண்டியவர்களே! ஒர் அருமையான பதிவு. நீங்கள் சொல்வதைப் போல நானும் இவர்களைப் பார்த்திருக்கிறேன்; பேசவேண்டும் என்று யோசித்ததுண்டு. ஆனால் பேசியதில்லை!

  அவர்களைக் கண்டு ... திருநங்கைகள் மூவரிடம் உரையாடி அவர்களின் நிலையை அனைவரும் அறியச் செய்யதது... மிகவும் மனதைப் பாதித்தது. பல புதிய செய்திகளை... அவர்களைப்பற்றி அறியச் செய்தீர்கள்.
  திருச்சியில் சமீபத்தில் திருநங்கைகள் பற்றி ஒரு நாடகம் பார்த்தேன்... திருநங்கையாக நடித்தவரை நாடகத்தில் பார்த்தபோது அழுகை வந்தது. அவர்கள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள்... பெற்றோர்களே அவர்களை விரட்டுகின்ற சூழல்... கொடுமையிலும் கொடுமை... “நான் என்ன தவறு செய்தேன்?” என்று அவர்கள் கேட்பது.

  ‘அலி’ என்று கேவலமாக சொல்கின்ற நிலைமாற்றித் ‘திருநங்கை’ என்று கௌரவமாக அழைப்பது சற்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விசயம்.

  ’சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழைகள் நாங்கள்... காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும்’ என்பார் நா.காமராசன்.

  அருமையான பதிவு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   //‘அலி’ என்று கேவலமாக சொல்கின்ற நிலைமாற்றித் ‘திருநங்கை’ என்று கௌரவமாக அழைப்பது சற்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விசயம்..//

   அலி என்ற வார்த்தை கேவலமானது அல்ல..

   அலி என்ற சொல் தேவாரத்திலும் திருவாசகத்திலும் காணப்படுகின்றது. ஆணல்லன் பெண்ணல்லன் அலியும் அல்லன் - என்று இறைவனை வர்ணித்துப் போற்றுகின்றனர் - சமயக் குரவர்கள்..

   ஆனால் கேடுகெட்ட மனிதர்களால் அந்த வார்த்தை அலங்கோலப்படுத்தப்பட்டு விட்டது...

   திருநங்கை என்பதும் அழகுதான்.. தொடர்வோம்.. அவர்களின் துன்பம் தீர்ப்போம்!..

   நீக்கு
  2. மணவை ஜேம்ஸ் ! நண்பரே //சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழைகள் நாங்கள்... காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும்’ என்பார் நா.காமராசன்.// அருமையான வரிக்ள்...

   மிக்க நன்றி !

   நீக்கு
 11. இப்பதிவின் மூலம் அவர்களின் உள்ளங்கள் மாறினால் சரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! மிக்க நன்றி டிடி! பார்ப்போம்....நல்லது நடக்கிறதா என்று...

   நீக்கு
 12. திருநங்கைகளாக மாறும்போது அவர்கள் அனுபவிக்கும் வேதனையை முன்பே அறிந்திருக்கின்றேன். ஆயினும் - தாங்கள் பதிவில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் புதியவை.

  அவர்கள் தொல்லை செய்கின்றார்கள் என்ற சூழ்நிலையை இதுவரையிலும் கண்டதில்லை.

  அவர்களுடனான அன்பின் தொடர்பு வளர வேண்டும். திருநங்கைகளின் துயர் தீர வேண்டும் என்பதே எனது ஆவல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! அவர்களின் வேதனை வேதனையே! எனக்குமே இந்தத் தகவல்கள் புதியதே...

   இங்கு ரயில்களில் முன்பு நடந்ததுண்டு. இப்போது இல்லை.

   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 13. மிகச்சிறப்பான பகிர்தல்...அவர்களும் மனிதர்களே....!!!
  உங்களின் கருத்துரையாடல் அருமை... சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  தம+1

  பதிலளிநீக்கு
 14. மனம் கனக்கிறது. வேறு என்ன சொல்ல முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும் முதல் வருகைக்கும்!

   நீக்கு
 15. முதலில் அவர்களும் நம்மைப்போல ஒரு ஜிவராசிதான் 80தை நாம் அனைவருமே ஏற்கும் மனநிலைக்கு வரவேண்டும்.

  இரண்டாவது இவர்களை காட்சிப்பொருள் போல நாம் பார்ப்பதை நிறுத்தி அவர்களும் ஒருவகையான மனிதர்கள் 80 நினைக்கவேண்டும் நான் இதைப்படித்து விட்டுசெசொல்கிறேன் என நினைக்க வேண்டாம் இயல்பாகவே நான் இவர்கள் மீது பரிதாபப்பட்டதுண்டு அப்படி நினைக்க மறுப்பவர்கள் நமது வீட்டில் நமது சகோதரன் ஒருவன் இப்படி பிறந்து விட்டால் என்ன செய்வோம் 80தை நினைவு கூறவேண்டும் மேலும் இறை நம்பிக்கை மறுபிறவி, போனபிறவியில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளை நாமே இப்படிப்பிறந்து விட்டால் 80தையும் நினைவில் கொள்க

  மூன்றாவது அரசாங்கம் இவர்களது வாழ்வாதாரத்திற்க்கு வழி வகை செய்து அவர்களும் சமூக அங்கத்தினர்தான் 80தை முன்னிருத்துவதற்க்கு வரவேண்டும்.

  நான்காவது இவர்களை காண்பவர்களுக்கு 6 அறிவு வேண்டும் அப்பொழுதுதான் இவர்களின் வாழ்வுக்கு வழி பிறக்கும்.

  சமூக சிந்தனைக்குறிய பதிவுக்கு ஒரு சல்யூட்

  குறிப்பு – நாங்க மொய் செய்துட்டு கருத்துரை போடவும் வருவோம், கருத்துரை போட்டாலும் வாக்கு போடவும் வருவோம் ஏன்னா நாங்களெல்லாம் தி கிரேட் தேவகோட்டை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நல்ல கருத்துக்கள்! ஜி! //அப்படி நினைக்க மறுப்பவர்கள் நமது வீட்டில் நமது சகோதரன் ஒருவன் இப்படி பிறந்து விட்டால் என்ன செய்வோம் 80தை நினைவு கூறவேண்டும் மேலும் இறை நம்பிக்கை மறுபிறவி, போனபிறவியில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளை நாமே இப்படிப்பிறந்து விட்டால் 80தையும் நினைவில் கொள்க// உண்மையே! அவரவருக்கு வலி வந்தால்தான் தெரியும்....

   மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கு.

   ஹஹஹ நன்றி நன்றி தி க்ரேட் தேவகோட்டை. நாங்களும் அப்படித்தான்ல....

   நீக்கு
 16. ////நான் அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும் அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும். முயன்றுதான் பாருங்களேன். ////

  உண்மையான வரிகள் ... இதுதான் இவர்களைப்பற்றி நான் வைத்திருக்கும் கருத்தும். இவர்களில் சிலர் அருவருப்பான சில செய்கைகளை பொது இடத்தில் செய்வதால்தான் மக்களுக்கு இவ்ர்கள் மீது ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுகிறது.

  அலி, ஒன்பது என்பதை மாற்றி திருநங்ககைகள் என்று மாற்றி சொல்வதால்மட்டும் இவர்கள் மாறிவிடப் போவதில்லை அவர்களை மற்றவர்களும் ப்ரிந்து கொண்டு சமமாக பாவித்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் பெயர் மாற்றத்தால் ஒரு பயனும் இல்லை மனம் மாற்றம்தான் பொதுமக்களிடம் தேவை.

  அருமையான பதிவு. அவர்களுடன் உரையாடி அதை நாலு பேருக்கு பகிர வேண்டும் என்ற எண்ணமே உங்கள் நல்ல உள்ளத்தை காட்டுகிறது வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தமிழா நீங்கள் சொல்லுவது போல் மனமாற்றம் தேவை.

   மிக்க நன்றி தங்களின் பாராட்டிற்கு!

   நீக்கு
 17. திரு நங்கைகளாக மாற இத்தனைக் கஷ்டங்களா. இருந்தும் ஏன் உரு மாற்றிக் கொள்கிறார்கள். இதுவரை எந்த திருநங்கையுடனோ பேச வாய்ப்பிருக்கவில்லை. நீங்கள் பார்த்தவர்கள் எல்லாம் படித்தவர்கள் போலிருக்கிறது. இவர்கள் பற்றிய ஒரு அபிப்பிராயம் எழக் காரணமே இவர்களது குண வெளிப்பாடுகள்தான். இவர்களால் சாதாரண மனிதர்கள் போல் நடந்து கொள்ள முடியாதா? இல்லை இயற்கையாகவே அப்படியா. மக்களுக்கு இவர்கள் மேல் ஒரு அவெர்ஷன் என்றால் அதற்கு இவகளே காரணம். சமூகம் அவர்களைப் புறக்கணிப்பதாக நினைக்கிறார்களே அதற்கு இவர்கள் எந்த பொறுப்பும் ஏற்பதில்லையே. என்னவோ மனதில் எழும் எண்ணங்கள் பின்னூட்டமாக வருகிறது. அது அல்லாமல் எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது அயல் நாடுகளில் இவர்களைப் போன்றோரின் நிலை என்ன என்று ஏதாவது செய்தி இருக்கிறதா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் உருமாறிக் கொள்வதற்கு காரணம் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் சார். ஹார்மோன்ஸ்.

   இவர்களால் சாதாரண மக்களைப் போல நடந்து கொள்ள முடியாதா என்றால், சிறு வயது முதலே தாங்கள் ஒரு பெண்ணைப் போல இருக்க வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ள, பருவ வயதில் இது அதிகமாகி...இப்படியாகிறது. அவர்ஷன் ஏற்பட அவர்களேதான் காரணம் அ;தைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். கோபப்ப்டவில்லை. நான் இன்னும் அவர்களுடன் தொடர்பில்தான் இருக்கின்றேன்.

   இல்லை சார் சமூகம் இவர்களைப் புறக்கணிப்பதை விடுங்கள், பெற்றோரே இவர்களைப் புறக்கணிக்கின்றாஅர்களே...அவர்களைப் புரிந்து கொள்ளாமல்...அதனால் தான் நான் சொல்லுவது, இவர்கலுக்கும், இவர்களு குடும்பத்தாருக்கும் நல்ல மனப்பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களுக்கும் ஆதரவு இருந்தால் தாழ்வுமனப்பான்மை ஏற்படாமல் தங்கள் காலில் ஊன்றி நிற்க முயலுவார்கள்...அயல் நாடுகளிலும் இது போன்ற வலிகள் உண்டு. ஆனால் இங்கு போல கிடையாது....கலாச்சாரம். அவர்கள் கலாச்சாரம் இதற்கு ஒத்துப் போவதால் அவ்வளவு தெரிவதில்லை...ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி...அதைப் பற்றி எழுத நினைத்தேன் ஆனால் இந்த பதிவு பெரிதாகிவிடும் என்பதால்....அதைப் பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகின்றேன் சார். மிக்க நன்றி!

   நீக்கு
 18. அவர்களிடம் உரையாடி சந்தோசப் படுத்திய உங்களின் மனித நேயத்தைப் போற்றுகிறேன் !
  த ம 8

  பதிலளிநீக்கு
 19. திருநங்கைகளை பற்றி அறியாத தகவல்கள்! சமூகம் அவர்களை கேவலமாக பார்ப்பதை விட்டு அவர்களுக்கும் ஓர் அங்கீகாரம் வழங்குதல் வேண்டும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு! பாராட்டிற்கும்!

   நீக்கு
 20. சமூக விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் ...
  த ம +

  பதிலளிநீக்கு
 21. திருநங்கைகள் அவமானப் படுத்தப்படுவதற்கு என்ன காரணம்? நம்மிடம் நிறைந்து இருக்கும் அறியாமை. அறியாமையால் மற்றவர்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாமை. அவர்கள் சொல்லும் அவர்கள் உணர்வுகளை "நம்ப மறுக்கும்" மனப்போக்கு. இதெல்லாமே நம் "உயர்ந்த" கலாச்சாரத்தில் நிறைந்து இருந்தது, இருக்கிறது. நாம் என்று தரத்தில் உயர்கிறோம்? இதுபோல் வித்தியாசமான உணர்வுகள் உள்ளவர்கள், உடல் குறைபாடுடன் பிறந்தவர்களை, மனக்குறைபாடுடன் பிறந்தவர்களை என்று மனம் புண்படாமல்ப் பேசிப் பழகக் கற்றுக்கொள்கிறோமோ அன்றுதான்.

  அந்த நாள் விரைவில் வருமா?

  வர வேண்டும்!

  பதிலளிநீக்கு
 22. அருமையான பகிர்வு கீதா மேடம்...
  திருநங்கைகளின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தைத்தான் பார்த்திருக்கிறோம்... அவர்கள் பிச்சை எடுப்பதையும் தெருவில் திரிவதையும்...
  ஆனால் அவர்களின் வாழ்க்கைக் கதையை அறியத் தந்தீர்கள்...
  அவர்களுடன் பேச யோசிப்போர் மத்தியில் அவர்களுடன் உரையாடிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்!

   நீக்கு
 23. மிகவும் சிறப்பான பகிர்வு என்பதால் த.ம. வாக்கும் அளித்தாச்சு... 11

  பதிலளிநீக்கு
 24. மன்னிக்கணும், உங்க பதிவை இப்போத்தான் வாசிச்சேன்..மேலே உள்ளது பொதுவான என் கருத்து..

  ***இவர்களுக்கு குரு ஒருவர் இருப்பாராம். அவர் இவர்களுக்காக, ஒருவருக்கு 2 லட்சம் செலவழிப்பாராம். இவர்கள் அவருக்கு அதை 4 லட்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம். இவர்கள் மிகவும் அழகாக வேண்டும் என்பதற்காக, 41 நாட்கள் யாரையும் காணாமல், ஒவ்வொரு நாளும் ஒரு திருநங்கை இவர்களுக்கு முதலில் மஞ்சள் அரைத்து உடம்பு முழுவதும் பூசுவார்களாம். பின்னர், 10, 15 அடி தூரத்தில் நின்று கொண்டு, கொதிக்கக் கொதிக்கத் தண்ணீரை இவர்கள் மீது வீசிக் கொட்டுவார்களாம், பிறப்பு உறுப்புகள் உட்பட. இவர்கள் அலறுவார்களாம். அதன் பின் படுக்க வைத்து தூய்மையான சந்தனம் இழைத்து அதை உடம்பு முழுவதும் பூசுவார்களாம். வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடுவார்களாம். இப்படி 41 நாட்கள் செய்த பிறகு உடம்பிலுள்ள முடிகள் எல்லாம் போய்விடுமாம். 41 நாட்கள் முடியும் அன்று, இவர்களை பாலூற்றிக் குளிக்க வைப்பார்களாம். இதற்குப் பெயர் ஜல்சா.

  அன்று வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு அலங்காரம் செய்வது போல் இவர்களுக்கும், அணிகலன்கள், மெட்டி, கொலுசு அணிவித்து, இவர்களுக்குச் சேவை செய்த திருநங்கைகளுக்கு தங்கத்தில் சிறியதாக ஏதாவது பரிசு அளிப்பாராம் குரு. அதைப் போல் அந்த சேவை செய்த திருநங்கைகள் இவர்களுக்குப் பரிசு அளிப்பார்களாம். பின்னர் அன்று செருப்பு தைப்பவர் ஒருவரை அழைத்து வந்து இவர்களுடன் முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடக்குமாம். இதற்கு என்றே செருப்பு தைப்பவர்கள் குழு இருக்கின்றதாம். வருபவர் இவர்களுக்கு தாலி கட்டி விட்டு அன்று ஒரு இரவு தங்கிவிட்டுச் சென்றுவிடுவாராம். பின்னர் இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாராம். ஆனால் அவரது செருப்பு மட்டும் நினைவாக இவர்களோடு விட்டுச் செல்வாராம். இதற்குப் பெயர் தந்தா என்பதாம். இன் நிகழ்வுகளுடன் இவர்களுக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகள் நடத்துவதற்கும் சேர்த்து குரு 2 லட்சம் செலவழிப்பாராம். இவர்கள் அவர்க்கு அதை 4 லட்சமாகத் திருப்பித் தரவேண்டுமாம். இன் நிகழ்வுக்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொரு ஆணுடனும் இரவுகள் கழித்து பணம் சம்பாதிக்கலாமாம். மனதளவில் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். தங்களை பெற்றோரும், இந்த சமூகமும் ஒதுக்குகின்றதே என்ற ஒரு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள்.***

  இதெல்லாம் படிச்சால், ஏதோ "மாஃபியா உலகம்" மாதிரி ஒண்ணு நமக்குத் தெரியாமல் இருட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று தோன்றுகிறது.

  இதெல்லாம் நான் கேள்விப் பட்டதுகூட கிடையாது. எவ்வளவு சின்ன உலகில் வாழ்கிறேன் நான்!!!

  நம்ம நாட்டில் எல்லாமே வித்தியாசமான சடங்குகளுடந்தான் நடக்குது போலும்.

  சரி, இவர்களுக்கு வேண்டியது ஒரு ஆண் துணை. ஆனால் சாதாரண ஆண் இவர்களை மணம் முடித்து வாழ முடியாது என்கிற அவல நிலை நம் நாட்டில். அதனால் "இந்தமுறையில்" இவர்களுக்குத் தேவையான ஒரு ஆண் துணையைத் தேடிக்கிறாங்க போலும்.

  எனக்கு என்ன புரியலைனா.. இவர்கள் ஆசை நிறைவேறுவது சரி, ஆனா ஒரு ஆண் ஏன் ஒரு பெண் துணையைத் தேடாமல் இவர்களிடம் போகிறான்???

  ஒரு வேளை ஒரு சில ஆண்களுக்கு இவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளத்தான் அதிக இஷ்டமா? அப்படிப் பட்ட ஆண் இவர்களில் ஒருவரை மணந்து கொண்டு வாழலாமே? அப்படி ஆகிவிட்டால் இவர்கள் இதுபோலெல்லாம் "மாஃபியா கேங்"ல வாழவேண்டிய அவசியம் இல்லையே? பாலியல் நோய்களுக்கும் பலியாக வேண்டியதில்லையே??

  இல்லைனா பெண்களுக்காக அலையும் நம் ஆண்கள், இவர்களை பெண் என்று உறவுகொள்ளப் போயி தெரியாமல் மாட்டிக்கொண்டு இவர்களுடன் உறவு வைத்துக் கொள்வார்களா??

  இந்த விசயத்தில் நாந்தான் அறியாமையின் உச்சத்தில் இருக்கிறேன் என்று இப்போது விளங்குது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹஹஹ் வருண், அவர்களிடம் நான் நேரடியாகவே கேட்டேன். நீங்கள் பிறப்பினால் ஆண்கள்..ஆனால் பெண்களைப் போன்று வாழ வேண்டும் என்ற உணர்வு...சரி ஆஅனால் ஆண் துணை வேண்டும் என்று சொல்கின்றீர்கள் உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? முடியாது. பின் ஏன் அப்படி....எங்களிடம் பெண்ணின் உணர்வுகள் அதிகமாக இருப்பதால், ஒரு ஆண் எங்களை அன்புடன் பார்த்துக் கொண்டால் போதுமானது என்ற பதில்.

   என் மகன் மருத்துவன் (கால் நடை மருத்துவன் என்றாலும், உடற் கூறுகள், உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பற்றி எல்லாம் படிப்பார்கள்.....) என்பதால் அவனிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டதுதான். இந்த ஹார்மோன் கள் படுத்தும் பாடுதான்...வருண் நாம் எளிதாகச் சொல்லி விடலாம் ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்குதான் தெரியுமோ என்னவோ....அதன் வலிகள்....

   நீக்கு
 25. திருநங்கைகள பற்றிய இவ்வளவு தகவல்களை இப்போதுதான் அறிகிறேன். நானும் இவர்களைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
  நீயா?நானா?திருநங்கைகளும் பொதுமக்களும் -
  தற்போது இவர்கள் மீதான சமூகத்தின் பார்வை சற்று மார் உள்ளது. அரசும் இவர்கள் நலனில் அக்கறை எடுக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! ஆம் தங்களின் பதிவை வாசித்தோம்....உண்மையே மாறி உள்ளதுதான். அரசும் சில திட்டங்கள் வைத்துள்ளது....எந்த காவல் நிலையத்திலும் இவர்களைப் பற்றி புகார் இல்லையாம்....நண்பர் சொல்லிய தகவல் இது. அவர் இவர்களைப் பற்றி ஒரு குறும்படம் எடுத்துள்ளார்.

   நீக்கு
 26. திருநங்கைகள் குறித்து நன்றாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. அவர்களுக்கு சில வற்றையும் சொல்லியுள்ளீர்கள்.

  நான் அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும் அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும்.///

  அருமையாக சொல்லிவுள்ளீர்கள் சகோ.

  “கண்டிப்பாக மேடம், நீங்கள் சொல்லுவது போல முயற்சிக்கின்றோம். நீங்கள் இப்படி, எங்களையும் மதித்து, அன்புடனும், அக்கறையுடனும் பேசுவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்களுடன் தொடர்பில் இருங்கள். அவ்வப்போது இது போன்று எங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் மேடம்” என்று சொல்லித் தனது அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.///

  உங்கள் அன்பு உரைகள் அவர்களுக்கு எவ்வவளவு பலத்தை கொடுத்து இருக்கும் என உணர முடிகிறது.

  இதை படிக்கும் போது எனக்கு ஒன்று தோன்றியது. சக்தி மசாலா நிறுவனம் உடல் ஊணமுற்றோரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கும் உதவி தனக்கும் பயன் செய்து கொள்கிறது. அது போல சில நிறுவனங்கள் இவர்கள் வேலைக்கு அமர்த்தி....இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து தாழ்வுமனப்பான்மையை அகற்ற வழி செய்து....அவர்கள் உடன் வேலை செய்பவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்து அதாவது அவர்களிடம் எப்படி சமமாக நடக்க வேண்டும் என சொல்லச் செய்யலாம்.

  இவர்களுக்கு இது போல் ஒரு நிறுவனம் முன் வந்து செய்யத் தொடங்கினால் நாளாவட்டத்தில் சமுதாயத்தில் இவர்களின் நிலையும், சமூகக் கண்ணோட்டமும் மாறும் என எனக்கு தோன்றுகிறது

  இவர்களுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

  அவர்களும் தங்கள் செய்கையை மாற்றி மற்றவர்கள் மதிக்கும் படி சமூகத்தில் நடக்க வேண்டும். அப்போது தான் அவர்களை மற்றவர்கள் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கவும் ,உதவலாம் என நெருங்கவும் முயல்வர்.

  நல்ல கண்ணோட்டத்தில் தாயன்புடன் நீங்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு