புதன், 27 ஜூலை, 2016

தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 1

படம் இணையத்திலிருந்து

அப்படியாக அந்த நாளும் வந்துவிட்டது! 29.07.2016 வெள்ளி அன்று என்று தீர்மானமாகி இருந்த, எங்கள் குறும்படமான “செயின்ட் த க்ரேட்” ன்  முன்னோட்டக் காட்சி, அது நிகழவிருந்த விவேகானந்த படன கேந்திரத்தின் சிற்பியான திரு பாஸ்கர பிள்ளை அவர்களின் வசதிக்காக 28.07.2016 வியாழன் அன்று காலை 10 மணிக்கு, அதே விவேகானந்த படன கேந்திரத்தில் நடத்தப்படவிருக்கிறது. அன்று இரவே “செயின்ட் த க்ரேட்” குறும்படம் யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு வரும்.

எழுத்தார்வம் மிக்க உங்களைப் போன்றவர்களின் நட்பு கிடைக்கப்பெற்ற நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்.  அதனால், மனதில் உள்ளதை எல்லாம் உங்களுக்குச் சலிக்காத(?) விதத்தில் பகிர்ந்து கொள்ள, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வீணாக்கிவிடக் கூடாது என்று நினைப்பவன். அது போலத்தான் இப்போதும். இதை இப்போது உங்களோடு பகிந்து கொள்ளாவிட்டால், பின்னர் இது போல ஒரு பொன்னான நேரம் இனி கிடைப்பது சிரமம். அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

நம் எல்லோரது வாழ்விலும் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றில் சில நாம் ஒரு போதும் சிந்தித்துக் கூடப் பார்த்திராத பல தீர்மானங்களை நாம் எடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் என்னை இப்படிக் குறும்படம் எடுக்கும் ஒருவனாக மாற்றிவிட்டது. (இதுக்குப் பேரு குறும்படமா?....குறும்படமும் இல்லை டாக்குமென்ட்ரியும் இல்லை ஏதோ ஒரு புராண நாடகம் மாதிரி இல்ல இருக்கு!) மாஹாமுடி த க்ரேட், கார்பெண்டர் த க்ரேட், பொயட் த க்ரேட். இதோ இப்போது செயின்ட் த க்ரேட்!  இதற்கிடையில் வரலாற்றுப் (ஹிஸ்ட்டாரிக்கல்) பேர்வழி என்ற பெயர் வரக்கூடாதே என்பதற்காக பரோல் மற்றும் பரோட்டா கார்த்திக்.  முடியவில்லை! அடுத்த வருடம் ஒன்று! அவ்வளவே! அதன் பின் எடுக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. எடுக்கக் கூடிய சூழலும் உண்டாக வாய்ப்பில்லை. (நம் வலையுலக நண்பர்கள் யாராவது குறும்படம் எடுக்க நினைத்தால் ஒரு டீக்கடைக்காரராகவோ, ஒரு பூக்கடைக்காரராகவோ நடிக்க ஒரு வேளை வாய்ப்புக் கிடைக்காமலா போகும்!!)

இனி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். 01.06.1985 முதுகலை ஆங்கில இலக்கிய தேர்வுகளை எழுதி, நாகர்கோயில் எஸ் டி இந்துக் கல்லூரிக்கும், கல்லூரி விடுதிக்கும் வேதனையுடன் விடை சொல்லி நிலம்பூர், கேரளாவை நோக்கிப் பயணமானேன். பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டை அடைந்த மணப்பெண்ணைப் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ராணுவ வீரனான மணமகனுக்கு நேர்ந்தால் அந்த மணப்பெண் அவ்வீட்டில் எப்படி வாழ்வாளோ அப்படி நான் நிலம்பூரில் வாழ்ந்த காலம். எப்போதெல்லாம் இது போன்ற வேதனைகள் நேர்ந்ததோ அப்போதெல்லாம் இறையுணர்வும், பக்தியும் உச்சத்தில் ஏறிவிடும் எனக்கு.

எம் ஏ முடித்தவனை அடுத்த நாளே யாராவது வந்து அழைத்துச் சென்று உயர்ந்த உத்தியோகத்தில் அமர்த்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் மாதங்கள் பல கடந்த பின்னும் வீட்டிலிருந்த என்னை பரிதாபத்தோடும், அதிசயத்தோடும் பார்க்கத்  தொடங்கினார்கள். இனி இப்படி அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது. அழுகின்ற குழந்தைக்குத்தானே பால். அழுது அடம்பிடித்து அன்னையிடமிருந்து பாலை வாங்கிக் குடிக்க முடிவு செய்து, நவம்பர் 16 ஆம் தேதி பெற்றோர் மற்றும் அக்காவின் காலில் விழுந்து வணங்கி, அனுமதி பெற்று கோழிக்கோடு பேருந்து ஏறினேன். அங்குள்ள தளி சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ கண்டேசுவரர் கோயில் சென்று வணங்கி பாத யாத்திரையைத் தொடங்கினேன். கொல்லூர் மூகாம்பிகையை நோக்கி!

ஒரு நாள் 20 முதல் 30 கிலோமீட்டர் வரை நடப்பேன். வழியில் காணும் ஏதேனும் ஒரு கோயிலில் இரவு தங்கி விடுவேன். கொல்லூருக்கு எவ்வளவு தூரம் என்று தெரியாது. எவ்வளவு நாட்கள் நடக்க வேண்டியிருக்கும் என்றும் தெரியாது. இளங்கன்று பயமறியாதே. வழியில் கண்ணில் படும் கோயில்களுக்கு எல்லாம் சென்று, பூட்டியிருந்தாலும் வெளியில் நின்று வணங்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன். எத்தனையோ நல்ல மனிதர்கள். அவர்களின் அன்பான முகங்கள் மற்றும் வார்த்தைகள் இப்போதும் மனதில் பசுமையாய் நிற்கின்றது. வடகரைக்கு அருகே ஒரு ஸ்ரீதரன். குழந்தை இல்லாத அவரது குடும்பத்தின் வேதனை எனக்கும் வேதனை தந்தது. அதன் பின் அவருக்காகவும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். (அவருக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.)

மூன்றாம் நாள் முழப்பலங்காடியில் ஒரு ஜெகன்நாதன் அங்குள்ள கோயிலில் தங்க ஏற்பாடுகள் செய்து தந்தார். கல்யாணப் பருவம் எய்தியிருந்த அவரது மூன்று பெண்களுக்கும் மணமாகி தற்போது நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.  6ஆவது நாள் காசரகோடு அருகே உள்ள செர்க்களாவை அடைந்த போது இருட்டி விட்டது. அருகே ஒரு குன்றின் மேலுள்ள கோயிலிலிருந்து ஒலி பெருக்கி வழியாகப் பாடல் சத்தம் கேட்க, வழி அருகே கூடியிருந்த சில இளைஞர்களிடம் அக்கோயிலுக்குச் செல்ல வழி கேட்டேன். “ஜாஃபரே!, ஃபைசலே! இயாள்க்கு ஆப்பாட்டு கேட்குன்ன அம்பலத்தில் போகணுமென்னு” (ஏய் ஜாஃபர்! ஃபைசல்! இந்தாளுக்குப் பாட்டு கேக்குற அந்தக் கோயிலுக்குப் போகணுமாம்!) எங்கிருந்து வருகிறாய்?....பெயர் என்ன?.....எங்கு போகிறாய்?....இப்படிக் கேள்வி மேல் கேள்வி.

கேள்விக் கேட்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்தது.  என் தமிழ் கலந்த மலையாளம் அதில் ஓர் இளைஞனை என் தோளில் தொங்கிக் கொண்டிருந்த துணிப் பையைப் பிடித்து இழுத்துப் பரிசோதித்தே தீர வேண்டும் என்று சொல்ல வைத்தது. இனியும் அங்கு நிற்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்து என்று உணர்ந்த நான், உடனே ஆட்களை விலக்கி ஓடினேன். வரும் போது, ஒரு நூறு மீட்டர் தூரத்தில், ஒரு சோதனைச் சாவடி இருந்தது நினைவுக்கு வர அத்திசையை நோக்கி ஓடினேன். “பிடிக்கு அவன!. விடறது!” (பிடி அவனை. விடாதீங்க!) என்று கூச்சலிட்டுக் கொண்டே என் பின் ஓடி வரும் இளைஞர்கள். மூச்சிரைக்க ஓடிய நான் சோதனைச் சாவடியில் அமர்ந்திருந்த அதிகாரியிடம் “Sir I am on a pilgrimage to Kollur Moogambika Temple. I am from Nagercoil, TamilNadu. I am a student doing M.A.  So, please save me”. என்று பதட்டத்துடன் சொன்னேன்…

தொடரும்.....(நாளை வெளியாகும் அடுத்த பகுதியுடன் முடிவடைந்துவிடும்)19 கருத்துகள்:

 1. காலையிலேயே அதிரடியான பதிவு!..

  அடுத்து நடந்தது என்ன?..

  ஆவலுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளை தெரிந்து விடும் ஐயா! மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 2. ஸ்வாரஸ்யமான தொடக்கம். கடைசியில் ஒரு சஸ்பென்ஸ்.... என்ன நடந்திருக்கும் என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஆவலுடன் படித்துக்கொண்டே வரும்போது இப்படி 'தொடரும்' என போட்டுவிட்டீர்களே ! பரவாயில்லை, மீதி நாளையே வெளியாகும் என்பதால் கொஞ்சம் நிம்மதி !

  பதிலளிநீக்கு
 4. நடை யாத்திரை கொல்லுர் மூகாம்பிகையை காண...ம்ம்

  தொடர்கிறேன்... நானும் உங்களுடன்

  பதிலளிநீக்கு
 5. அனுபவத் தொடரா... படம் பிறந்த கதை சுவாரஸ்யமாக இருக்கும் போல.. மொழியால் வந்த பிரச்னையோ! தொடர்கிறேன்.

  கணினிக்கு வரும்போது தம வாக்களிப்பேன்.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா பதட்டமான இடத்தில் தொடரும் ஸூப்பர்.

  குறும்படத்தில் டீக்கடை, பூக்கடை பாத்திரமேதான் வேண்டுமோ...
  நம்மிடம் இந்த பைலட், சயின்டிஸ்ட் இந்த மாதிரி கேரக்டர் தயாராக இருக்கின்றது.

  த.ம.2

  பதிலளிநீக்கு
 7. என்னதான் நடந்தது
  அறிய ஆவலுடக் காத்திருக்கிறேன் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 8. நாளை தொடர ஆவலாய் இருக்கிறேன்.
  த ம 5

  பதிலளிநீக்கு
 9. ஓ... நீங்களும் சஸ்பென்ஸ் வைக்க ஆரம்பிச்சுடீங்களா?!
  நல்லாயிருக்கு..., தொடரவும்...

  பதிலளிநீக்கு
 10. துவக்கிய சூழலும், சொல்லிச் சென்ற விதமும்
  நிறுத்திய விதமும் ஒன்றி உணர்ந்து
  இரசித்துப் படிக்க வைத்தது

  ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து...

  பதிலளிநீக்கு
 11. வெளியிடுங்கள் ஐயா! கட்டாயம் பார்க்கிறேன்.

  //அவரது மூன்று பெண்களுக்கும் மணமாகி தற்போது நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்// - இல்லை. நீங்கள் சொல்கிற நாள் கணக்குப்படி பார்த்தால், இந்நேரம் அவர்கள் பெண்கள், பிள்ளைகளுக்கும் கூடத் திருமணமாகி இருக்கும். :-P

  பதிலளிநீக்கு
 12. இன்றுதான் படிக்கத் துவங்கினேன்.. இதோ..அடுத்த பகுதிக்கு. :)

  பதிலளிநீக்கு