பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச்
செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில் சக கைதிகளாலும், அதிகாரிகளாலும்
நேசிக்கப்படும் மிக நல்ல உள்ளம் கொண்ட அலெக்ஸை அவரது மகன் வெறுக்கிறான். அலெக்ஸ்
சிறைக்கு வரக் காரணம் என்ன என்ற மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்தில்
அவர் பரோலில் வெளியே வந்து எப்படி தன் உறவினர், சுற்றத்தினரை எதிர்கொண்டு முடிச்சுகளை
அவிழ்க்கிறார் என்பதுதான் கதை என்று சொல்லப்படுகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்ட படம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
சரி
அப்படியானால் எதற்கு இதைப் பற்றி? வேறு ஒன்றுமில்லை. இப்படி மெகா ஸ்டார் மம்முட்டியின்
படத்தைச் சொல்லி, சிறு இடைவெளியில் 6 வருடங்களுக்கு முன், உண்மைச் சம்பவத்தின்
அடிப்படையில், சாமானியனான நான் எங்கள் குழுவின் உதவியுடன் எடுத்த பரோல் எனும் குறும்படத்தைப் பற்றியும் (இங்கு
முன்பு சொல்லியிருந்தாலும்) இப்போது இங்குச் சொல்லி, பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற ஒரு
சிறு விளம்பரத்திற்காக என்றும் சொல்லிக் கொள்ளலாம்!
எனது
குறும்படத்தில் சொல்ல முயற்சி செய்திருப்பது இதுதான். நொடிப் பொழுதில் குற்றம் புரிந்துவிட்டுப்
பின்னர் அதற்காக வருந்தி, உறக்கத்தைத் தொலைத்து தவிக்கிறார்கள் பெரும்பான்மையான கைதிகள்.
செய்த குற்றத்தினால் அவர்களின் மனசாட்சி அவர்களை வதைத்துவிடுகிறது. சிறைத் தண்டனையை
விட அவர்களின் மனசாட்சி அவர்களின் உறக்கத்தைப் பரித்து அவர்களை வதைப்பது மிகப் பெரிய
தண்டனையே. இதைப் பெரும்பான்மையான கொலையாளிகள் தங்கள் சக கைதிகளிடம் சொல்லி அரற்றுவார்கள்
என்பதையும் கேட்டதுண்டு. குற்றம் புரிந்த நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்!
அப்படித்
தாங்கள் செய்த தவற்றை நினைத்து மருகி, திருந்தி வருபவர்களை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லைதான்.
மாற்றுத் திறனாளிகளையும், மனநோயாளிகளையும் கண்டு இரக்கப்படும் நாம், ஒரு சில நொடித்துளிகளில்
உணர்ச்சிவசப்பட்டுக் குற்றம் இழைத்துச் சிறைக்குச் சென்று அப்புறம் வருந்தித் திருந்தி
வெளியில் வந்தாலும் அவர்களின் மீதான நம் பார்வை வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நாம்
அவர்களை ஏற்கத் தயங்கத்தான் செய்கிறோம். இவர்களும் ஒரு வகையில் மன ஊனம் அடைந்தவர்கள்தாம்.
உடலில்
ஏற்படும் நோய் குணமாக நாம் அதற்கான காலம் கொடுத்து அந்நோயைக் குணப்படுத்துவது போல நொடியில்
உணர்ச்சிகள் பிறழ்வதால் மனதில் ஏற்படும் இவ்வகையான
ஊனம் குணமாக அவகாசம் கொடுப்பதில்லை. அவர்கள் திருந்தி, அவர்களுக்கு உரிய தண்டனையை அனுபவித்த
பிறகு அக்காலம் முடிந்து வெளியில் வரும் போது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் ஏற்றுக்
கொண்டு நல்வழிப்படுத்தி அவர்களும் இச்சமூகத்தில் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட உதவிடலாமே.
அவர்களும் இச்சமூகத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டுதானே! அவர்களது வாழ்க்கையிலும் வெளிச்சத்தை
இச்சமூகம் கொண்டுவரவேண்டும் என்பதே படத்தின் கரு.
20 நிமிடப் படம் தான். ஆனால் இரு பாகமாக இருக்கிறது. தங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.இதோ படத்திற்கான காணொளிகள். மிக்க நன்றி.
எல்லோருக்கும் எங்கள் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!