வெள்ளி, 3 ஜூன், 2016

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 3 - மௌனமும், ஸன்னியின் பிறந்த நாள் கொண்டாட்டமும்

வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தச் சமயம் பார்த்து வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க அவ்வளவுதான் எல்லோரும் பயந்து, உடம்பு நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். முந்தைய பதிவில் முடித்திருந்தேன்

சத்தம் எல்லாம் அடங்கி எல்லோரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் கண்ணழகி கட்டிலின் அடியிலிருந்து வெளியில் வரவும் அங்கு அவள் அம்மா கீதா இவர்களுக்காகச் செய்த கேக் எல்லாம் வைத்திருக்க, உடனே கண்ணழகி எல்லோரையும் அழைக்க...

கண்ணழகி : நண்பர்களே! நம் அருமைக் குட்டிச் செல்லம் ஸன்னிக்கு இந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி 3 வயது நிறைகின்றது. அதற்குள் அவன் ஊருக்குப் போய்விடுவான் என்பதால் நாம் எல்லோரும் இன்று அவனது பிறந்த நாளைக் கொண்டாடுவோம். சரியா.

டைகர் : அதற்கு முன் எல்லோரும் நமது மற்ற அப்பா, அம்மாக்களின் செல்லங்கள், நம் நண்பர்களின் பிரிவிற்கு ஒரு சிறிய மௌன அஞ்சலி செய்துவிட்டுப் பிறந்த நாள் கொண்டாடுவோம் சரியா.


எல்லோரையும் கீதா அடக்கி மௌனமாக இருந்துவிட்டு பின்னர் ஸன்னிக்கு ஹாப்பி பர்த்டே டு யு ஸன்னி என்று சேர்ந்து பாடி வாழ்த்தினார்கள்.

எல்லோரையும் மகிழ்வித்து நீடுழி வாழ,  ஜூன் 13, 2016 அன்று 3 வயது நிறைவடையும் ஸன்னிச் செல்லத்திற்கு எங்கள் எல்லோரது பிறந்த நாள் வாழ்த்துகளும்கண்ணழகி : நண்பர்களே ஸன்னி மல்டிகான் (Maltichon) எனும் வகையைச் சேர்ந்தவன். மல்டீஸ் (Maltese) என்ற இனமும், பைக்கான் ஃப்ரைஸ் (Bichon Frise) என்ற இனமும் கலந்து உருவான தனி வகை இனம். தோற்றத்தில் சிறியவனாகப் பொம்மை போன்று இருந்தாலும், மிகவும் அன்பானவன், எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவன், பொறுப்பானவன், நன்றாகத் தோழமையாகப் பழகுபவன், மகிச்சியானவன் பிறரையும் மகிழ்விப்பவன், நன்றாக விளையாடுபவன்..இதோ பாருங்கள் அவன் விளையாட்டை, சுறு சுறுப்பை....

மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியின் விளையாட்டை இங்கு கண்டு மகிழுங்கள். நன்றி மதுரைத் தமிழன் சகோ

ஜெஸ்ஸி : அட சூப்பரா விளையாடறானே...

சரி நாங்கள் கிளம்புகின்றோம் என்று கருவாண்டியைக் கூப்பிட அவன் ஜெஸ்ஸியுடன் தான் இருப்பேன் என்று சொல்லிவிட......ஜெஸ்ஸி, கருவாண்டி நீங்கள் முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள்.  அங்கு சந்திப்போம் என்று ஜெஸ்ஸியின் நண்பர்கள் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட இவர்களின் உரையாடல்கள் தொடர்கின்றது.

ஸன்னி : ரொம்ப நன்றி உங்கள் எல்லோருக்கும். உங்கள் அன்பு மகிழ்வாக இருக்கிறது. நான் நெகிழ்ந்து விட்டேன். ஆனால், உங்கள் ஊரில் என்ன இப்படி எல்லாம் வெடிக்கின்றார்கள்? அங்கெல்லாம் இப்படிச் சத்தமே இருக்காது தெரியுமா. இதைப் பற்றிச் சொல்லவே இல்லை நீ.  எனக்குப் பயமாக இருக்கிறது.

ஜெஸ்ஸி, ரஜ்ஜு : ஆமா எங்க ஊர்லயும் கேட்கவே கேட்காது. ஹப்பா பயந்தே போய்விட்டோம்.

கண்ணழகி : சொன்னா நீங்கல்லாம் வந்துருக்கவே மாட்டீங்களே...அதை ஏன் கேட்கிறீர்கள்! இங்க அவ்வப்போது வெடித்துக் கொண்டே இருப்பார்கள். சாவுச்சங்கு ஊதினாலோ, கோயிலில் பாட்டுகள் ஒலி பரப்பினாலோ எனக்குத் தெரிந்துவிடும் அன்று வெடிச் சத்தம் இரும் என்று. என் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிடும்.

ஜூலி : எங்கள் ஊரிலும் வெடி எல்லாம் உண்டு. இந்த மனுஷங்க ரொம்ப மோசம் நம்மை எல்லாம் ரொம்பப் பயப்பட வைக்கின்றார்கள். கண்ணழகி! உங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிப்பார்களா?

டைகர்: எங்க ஊர்ல பட்டாசு சத்தம் எல்லாம் நாங்கள் இருக்கும் இடத்தில் கேட்காது. ஒரே ரப்பர் தோட்டம்தான். வீடும் அங்கங்குதான் இருக்கும். அழகான ஊர். எங்கள் வீட்டில் பின் புறம் பெரிய ரப்பர் தோட்டம், முன் புறம் பெரிய தோட்டம் எல்லாம் உண்டு. அடுத்த தடவை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள். ஜாலியா சத்தம் இல்லாமல் தோட்டத்திலேயே சுத்தலாம்.

ரஜ்ஜு : அட! இந்தத் தடவையே அங்கு போயிருக்கலாம். எங்கள் ஊரிலும் இந்த மாதிரி சத்தம் எல்லாம் கிடையாது.

கண்ணழகி : எங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிக்கவே மாட்டர்கள். அண்ணன் 2 ங்க்ளாஸ் படிக்கும் போதே நம்மை மாதிரி 4 காலுக்கு எல்லாம் இது ஆகாது என்று வெடிக்கறதே இல்லை என்று அண்ணன் சொல்லுவார்.

ஜூலி : ஆனால் ஊர் முழுக்க வெடிப்பார்களே

கண்ணழகி : ஆமாம் அப்பல்லாம் நான் சாப்பிடவே மாட்டேன்.  தீபாவளினாலே பிடிக்காது. ஆனா ப்ரௌனி பயந்தாலும் சாப்பாடு மட்டும் விட மாட்டா...

ஸன்னி : பாத்தியா ப்ரௌனியை மறந்தே போய்விட்டோம். ப்ரௌனி எங்கே? அந்த அறையிலா? கதவு மூடியே இருக்கிறது?

கண்ணழகி : ஹும். பட்டாசு சத்தம் கேட்டு அவள் அந்த அறையில் கட்டிலுக்கடியில் மூலையில் ஒதுங்கியிருப்பாள். நான் சங்கிலி இல்லாமல் இருப்பதால் அந்தக் கதவு மூடியிருக்கும்.

ஜெஸ்ஸி, ரஜ்ஜு : நீ இங்கே இரு. நாங்கள் அவளைப் பார்த்துட்டு வருகிறோம். நீ இங்கே சும்மா குரைத்துக் குரைத்து எங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாது.
எனது மற்றொரு மகள் ப்ரௌனி

ப்ரௌனியின் ரூமிற்குச் சென்றார்கள். ஹை ப்ரௌனி...எங்கருக்க? என்று கோரஸாகக் கேட்க ப்ரௌனி தன் குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு மெதுவாக வெளியில் வந்தாள். பூனையார்களைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம் உறுமினாள். அப்புறம் கீதா அவளிடம் ஃப்ரென்ட்ஸ் என்று சொல்ல அடங்கிவிட்டாள்.

டைகர் : உனக்கு உடம்பு நடுங்கவே இல்லையா....வெடிச் சத்தம் பயம் இல்லையா?

ப்ரௌனி : ம்ம் நடுங்காது ஆனால் பயம் உண்டு கட்டிலுக்கடியில் போய் படுத்து விடுவேன். கண்ணழகி தொடை நடுங்கி நடுங்கியிருப்பாளே.

ஸன்னி : இதப் பார்ரா அவள் இவளைச் சொல்லுகிறாள். இவள் அவளைச் சொல்லுகிறாள்....அது சரி ஏன் உங்க ரெண்டு பேருக்கும் பங்கிச் சண்டை

ஜூலி : ஸன்னி! அது பங்கிச் சண்டை இல்லை பங்காளிச் சண்டை...

ஸன்னி : என்னவோ ஒண்ணு....

ப்ரௌனி : அது உனக்கும், டைகருக்கும் தெரிந்துருக்குமே. நம்மவர்களில் வயதிற்கு வரும் முன்னரேயே/வரும் சமயம் ஒரு Pack ற்கு யார் தலைமை என்று முடிவு செய்வது உண்டு இல்லையா? நாங்கள் இருவருமே ஒரே வீட்டில் தானே இருக்கிறோம். எங்கள் பேக் அம்மா, அண்ணா என்று இருந்தாலும் எங்கள் இருவருக்குள் யார் தலைவி என்ற பிரச்சனை வந்தது. கண்ணழகி ஆல்ஃபா. நான் அடங்கித்தான் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு முறை எங்களுக்குள் தீவிரமாகச் சண்டை வந்த போது, அண்ணாவிற்கு, அப்போது நம் உளவியல் தெரியாததால் கண்ணழகியை அடக்கி, எனக்கு ஆதரவாகப் பேசி என்னை அவள் கடியிலிருந்துப் பிரிக்க, எனக்குத் தைரியம் வந்து விட்டது. நானும் கண்ணழகியை எதிர்க்கத் தொடங்கி விட்டேன். அதன் பிறகு நாங்கள் இருவரும் எதிரும் புதிரும்தான்.

ஜெஸ்ஸி : சே நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்திருந்தால் இப்போது எங்களுக்கும் நன்றாக இருந்திருக்கும், அம்மா, அண்ணாவிற்கும் நன்றாக இருந்திருக்கும்.

ஜெஸ்ஸி, கருவாண்டி : சரி நாம் கொஞ்ச நேரம் வெளியில் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா?

டைகர் : அதானே பார்த்தேன்.  இவர் இரண்டு பேரும் ஊர் சுற்றாமல் இங்கே இப்படி அமைதியாக இருக்கிறார்களே என்று. ஆரம்பித்துவிட்டார்கள்.
ப்ரௌனி : நான் வர மாட்டேன் வெளியே. 1, 2 போவதற்கு மட்டும் தான் வெளியே வருவேன்.

ஸன்னி : ஓ! அதான் உன்னை அம்மாவும், அண்ணாவும் “படிதாண்டா பத்தினி” என்று அழைக்கின்றார்களா.

ப்ரௌனி : கண்ணழகி ‘’”ஓடு காலி”

ஜூலி : ஹ்ஹ்ஹ்ஹ் ஏன் அவள் வீட்டை விட்டு ஓடி விடுவாளா?

டைகர் : அதை ஏன் கேட்கிறாய். அவள் 3 முறை வெளியில் ஓடிவிட அண்ணனும், அம்மாவும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

ப்ரௌனி : டைகர் உன் கதை மட்டும் என்னவாம்?  சீசன் சமயத்தில் நீ அலைந்தாயே! சங்கிலியை அறுத்து கொண்டு வெளியில் ஓடி விட்டு வீட்டிற்கு வர பயந்து ரப்பர் தோட்டத்து மரத்தடியில் செடிகளுக்கிடையில் முனகிக் கொண்டு இருந்ததை, இருட்டில் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்தார் துளசி அப்பா.

ஸன்னி : அப்போ நீங்கள் எல்லோருமே ஓடுகாலிகளா! ஹ்ஹ்ஹ

ப்ரௌனி : நான் வெளியே போக மாட்டேன். ஒரு சின்ன லாரி என் காலைப் பதம் பார்த்துவிட்டுச் சென்றுவிட இப்போதும் கால் நொண்டிக் கொண்டுதான் நான் நடப்பேன். எனக்கு சாலையில் போக்கு வரத்தைக் கண்டாலே பயம்.

ஸன்னி : ஏன் டாக்டர் அண்ணா சரி பண்ணவில்லையா?

ப்ரௌனி : அது நடந்தது நான் 3 மாதக் குழந்தையாக இருக்கும் போது. அண்ணா படித்து முடிக்கும் முன். இப்போது அண்ணா என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

ஜெஸ்ஸி : சரி நாம் எல்லோரும் சிறிது வெளியில் சென்றுவிட்டு வருவோம்.

அவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்....நீங்களும் அவர்களுடன் உலா வாருங்கள்.

படங்களுக்கு நன்றி ஏஞ்சலின், துளசி கோபால் அக்கா, கீதா சாம்பசிவம் அக்கா, மதுரைத் தமிழன் சகோ, சகோ கரந்தையார், இளங்கோ ஐயா, ஸ்ரீராம், ஜிஎம்பி சார், டி என் முரளிதரன் சகோ

-----கீதா

http://engalblog.blogspot.com/2011/02/1.html எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் செல்லம் பற்றிய பதிவுகள்

http://sivamgss.blogspot.in/2014/02/blog-post_6626.html கீதா சாம்பசிவம் அக்காவின் செல்லம் மோத்தியைப் பற்றிய பதிவு

https://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_15.html தமிழ் இளங்கோ ஐயா -இறந்து போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. இங்கு சென்றால் ஜாக்கியைப் பற்றிய பதிவும் கிடைக்கும்

http://www.tnmurali.com/2014/06/a-poem-dedicated-to-juno.html முரளிதரன் சகோவின் செல்லம் ஜுனோவைப் பற்றிய பதிவு

http://avargal-unmaigal.blogspot.com/2013/09/blog-post_22.html மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியைப் பற்றிய பதிவு. இதில் எனக்கும் என் மகனிற்கும் மிகவும் பிடித்த நாங்கள் ரசித்தது தமிழனின் பின்னூட்டக் கருத்து. எங்கள் கருத்தும் அதே என்பதால்.

http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_15.html   ஜி எம் பி சாரின் செல்லம் செல்லி பற்றிய பதிவு


22 கருத்துகள்:

 1. பதிவர்களில் இளங்கோ அண்ணாவுக்குதான் நிறைய pet செல்லம்ஸ் போலிருக்கு ..

  இங்கே வெடி வெடிப்பது குறைவு ஆனால் நவம்பர் 5 த் guy fawkes day/bonfire day அன்று மட்டும் வான வேடிக்கையுண்டு அன்னிக்கு ஜெஸி பெட் கீழ இருப்பா ரொம்ப பயம் ..நான் நிபி என்றொரு ரஷ்யன் dwarf hamster வைச்சிருந்தோம் .அதன் வாழ்நாள் 3-4 வருஷம்தான் அவன் போனபின் தான் ஜெசி வந்தா.
  சன்னி பெர்த்டே மறக்கவே மறக்காது :) ஏனென்று அன்று சொல்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ஏஞ்சல் நிபி பற்றி ஒரு தளம் பார்த்தேன். ஹாம்ஸ்டர்...அது உங்கள் தளமா? அது போன்று மற்றொரு தளமும் உங்கள் தளமா? அதே போன்று மனதோடு மட்டும் கௌசல்யா எழுதிவருவதாகத்தான் நினைவு....அதுவும் உங்கள் தளமா....

   சன்னி பெர்த்டே மறக்காது..ஆஹா சொல்லுங்கள் அதையும்...காத்திருக்கின்றோம்...

   நன்றி ஏஞ்சல்

   நீக்கு
  2. எனக்கு 2 ப்ளாக்ஸ் மட்டுமே இருக்கு kaagidhapookal.blogspot.co.uk and my english blog http://cherubcrafts.blogspot.co.uk/
   நிபி வீடியோ இதில் ..
   http://kaagidhapookal.blogspot.co.uk/2012/02/blog-post_20.htm
   நீங்க பார்த்த ஹாம்ஸ்டர் அதிராவின் ப்ளாகில் என்று நினைக்கிறேன் ..

   சில pesticide /கெமிக்கல் விழிப்புணர்வு டாப்பிக்ஸ் மட்டும் நானும் கௌசல்யாவும் சேர்ந்து எழுதுவோம் ஆகவே எனது பங்கு அதில் சிறுதுளி மட்டுமே :)

   நீக்கு
 2. சுவாரஸ்யம்தான். எங்கள் லிங்க் கொடுத்துள்ளதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மூன்று பகுதிகளையும் ஒரு சேரப் படித்தேன்.... அவர்களின் சந்திப்பும் பேச்சும் அருமை. பட்டாசு சத்தம் கேட்டு அவர்கள் பயப்படுப்பவது பாவமாக இருக்கும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி மூன்றையும் சேர்த்து வாசித்தமைக்கு. நீளம்தான்... நன்றி கருத்திற்கு

   நீக்கு
 4. அடுத்த திருவிழாவில் ,செல்லங்களின் வீடியோ இருக்குமென எதிர்பார்க்கிறேன் என்று சென்ற பதிவில் நான் சொன்னது தீர்க்கதரிசனமாகி விட்டதே :)

  பதிலளிநீக்கு
 5. செல்லங்களின் சந்திப்பு பிரமாண்டமாக இருக்கின்றதே எனது வாழ்த்துகளும்.
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 6. ஆஹா தாங்களும் என்னை போல செல்லப்பிராணிகளின் காதலரா..??அருமையான பதிவு சகோ.எனது செல்லப்பிராணியின் பெயர் ஹனி.இது தான் எங்கள் வீட்டின் இன்னொரு மகள்.அதன் ஒவ்வொரு செயலையும் இரசிப்போம்.எனது முகநூல் பக்கத்தில் அவளை குறித்து புகைப்படம் அனைத்தையுமே நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
  மனிதர்களிடம் இல்லாத சில சந்தோஷங்கள் மற்றும் மனநிறைவு செல்லப்பிராணிகளிடமே உள்ளது.நாங்கள் எப்போதும் அவளுடன் விளையாடிக் கொண்டே இருப்போம்.எல்லா சுப நிகழ்ச்சிக்கும் புத்தாடை வாங்கி விடுவோம்.எங்கு சென்றாலும் அவளை அழைத்துச் சென்று விடுவோம்.நன்றி சகோ.அருமையான பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 7. செல்லங்களின் சந்திப்பு, பிறந்த நாள் கொண்டாட்டம் அழகு அழகு....

  பதிலளிநீக்கு
 8. சுவாரஸ்யம்! நிறைய தகவல்களோடு செல்லங்களின் சந்திப்பு இனிமை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 9. எனக்கென்னவோ நீங்கள் very partial towards Sunny என்று தோன்றுகிறது. அவனைச் சுற்றியே எழுதியது போல் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் செல்லம் சன்னி பந்துடன் விளையாடும் அழகை வீடியோவில் பார்த்து மனம் மகிழ்ந்ததால் அதை கொஞ்ச்ம ஸ்பெஷலாக கவனித்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன் மற்றவர்களின் செல்லப் பிராணிகளை போட்டோவில் மட்டும் பார்த்து இருக்கிறார்கள் ஆனால் சன்னியை வீடியோவில் பார்த்ததால் அது கூட நேரடியாக பழகியடு போன்ற ஒரு உணர்வு அவர்களுக்கு தோன்றியதால் இப்படி எழுதி இருக்கலாம்

   நீக்கு
  2. மதுரைத் தமிழனுக்கு மிக்க நன்றி. யெஸ் உங்கள் கருத்து சரியே.!

   ஜிஎம்பி சார், உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதாவது ஸன்னியைச்சுற்றியே பதிவு என்பதை. மன்னிக்கவும் சார், ஆனால் பார்ஷியல் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது சார். பின்னூட்டத்திற்கு மதுரைத் தமிழனின் பதிலுடன் இதையும் சேர்த்துக் கொள்ளூங்கள் சார்.

   1. ஸன்னியின் ப்ரீட் மல்டிகான் பற்றி எனக்குத் தெரிந்திருந்தாலும், புகைப்படங்களில் பார்த்திருந்தாலும் இவ்வளவு அழகாக விளையாடும் என்பதை வீடியோவில் பார்ப்பது இதுதான் முதல் முறை. ஸன்னியை/அந்த ப்ரீடை நேரில் நான் கண்டது போல் இருந்தது அந்த வீடியோ. நீங்களும் ஸன்னியின் வீடியோவைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். ஸன்னியைப் பற்றிச் சில பதிவுகளில் மதுரைத் தமிழன் குறிப்பிட்டிருக்கிறார். மதுரைத் தமிழன் நகைச்சுவையாக எழுதுபவர் என்பதால் அவரை வலைத்தளத்தில் நாங்கள் அன்புடன் கலாய்க்கின்றோம் என்பதால் கலாய்த்தலைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்பதால் ஸன்னி வழியாக அவரையும் சற்றுக் கலாய்த்துள்ளேன்.வேறு செல்லங்களின் வீடியோக்கள் கிடைக்கவில்லை. ஏன் என் செல்லங்களின் வீடியோவும் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவற்றையும் வெளியிட்டிருப்பேன்.

   2. எனக்கு மகனின் வழி பூனைச்செல்லங்களைப் பற்றியும் தெரியும் என்றாலும் அவற்றுடன் அதிகப் பழக்கம் இல்லை. நாய்க்செல்லங்கள் தான் அதிகப் பழக்கம். நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால், அதில் ஜெஸ்ஸியைப் பற்றியும் கருவாண்டியைப் பற்றியும் நான் ஏஞ்சலினின் தளத்திலிருந்து அறிந்தவற்றைக் குறிப்பிட்டிருப்பேன்.

   3. எனது இரு செல்லங்களிலும் கூட கண்ணழகிதானே அதிகமாக வருகின்றாள். ஜூலி, டைகர் பற்றி நான் அறிந்ததை மட்டும் எழுதியுள்ளேன். இன்னும் ஜூலி, டைகர் ஜெஸ்ஸி பேசுவது போன்று எழுதியிருந்ததை கட் செய்துவிட்டேன், நான் அன்று பயணம் மேற்கொண்டு பயணத்தில் இருப்பதால்.

   4. ஸன்னி ப்ரீட் வகைகளை டாய் ப்ரீட் என்பதால் அவன் பொம்மை போன்று இருப்பதும் என்னைக் கவர்ந்ததுதான். அவன் விளையாடுவதை நான் பார்த்துப் பார்த்து ரசிக்கின்றேன் அதனால் அதன் தாக்கம் இருந்திருக்கலாம் சார்.

   நான் இந்தக் கருத்தைத் தங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் சார்.

   மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு.

   நீக்கு
 10. சன்னிக்கு நானும் என் அன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ("அடப்பாவி! இது வரைக்கும் சக பதிவர்கள் யாருக்காவது இவன் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியிருப்பானா!" என்று மற்றவர்கள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது!).

  எங்கள் வீட்டில் நான் சிறுவனாயிருக்கும்பொழுது நாய் வளர்த்தோம். டைகர் என்று பெயர். என் பெரியப்பாதான் அதைக் கவனித்துக் கொள்வார். வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்கள் திரும்பிப் போகும்பொழுது பேருந்து நிலையம் வரை சென்று தவறாமல் வழியனுப்பி வைத்து விட்டுத்தான் வரும். பிறகு இறந்து விட்டது. அதன் பின்பும் ஓரிரு நாய்க்குட்டிகள் வளர்த்தோம். அக்கம் பக்கத்திலிருப்போர் கேட்டு வாங்கிப் போய் விட்டார்கள். பூனைகள் நிறையவே வளர்த்தோம். கடந்த ஆண்டு வளர்த்த கிடாப் பூனை மிகவும் அமர்க்களமாக விளையாடும்! வியந்து வியந்து மகிழ்வோம். ஆனால், ஓரளவுக்கு வளர்ந்ததும் வீட்டை விட்டுப் போய்விட்டது. மிகவும் வருத்தமாகி விட்டது! அடிபட்டு வந்த மைனாக் குஞ்சு ஒன்றையும் வளர்த்தோம். "குக்குக்குக்கூ" என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் சிறு குழந்தை போலத் தத்தித் தத்தி ஓடி வரும். தேக்கரண்டியில் உணவூட்டிப் பார்த்துப் பார்த்து வளர்த்தோம். ஒருநாள் திடீரெனக் காணாமல் போய்விட்டது. கூண்டில் அடைக்காமல் வளர்த்ததால் பின்னாடி வீட்டுப் பூனை தின்று விட்டதோ என்னவோ தெரியவில்லை. இன்னும் மனதுக்கு மிகவும் வருத்தம் தரும் பிரிவு அது.

  செல்லப் பிராணிகள் வளர்ப்பு என்பது எவ்வளவுக்கெவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு துக்கத்தையும் தருகிறது. ஆனால், செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் வீட்டில் மகிழ்ச்சி நிலவுகிறது; குடும்பச் சண்டைகள் தவிர்கின்றன; மன அழுத்தம் குறைகிறது; எப்பொழுதும் குழந்தை போல மனதை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ரசிக்க முடிகிறது. இது போல் இன்னும் நிறைய உண்டு! தனிப் பதிவே எழுதலாம்.

  இப்பொழுதுக்கு நான் செல்லப்பிராணி ஏதும் வளர்க்காவிட்டாலும் அந்தப் பேற்றைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே, பெரியவர்களே!

  பதிலளிநீக்கு
 11. .....முத்துமாலைன்னு பேருன்னு சொல்லக்கேள்வி

  பதிலளிநீக்கு
 12. சன்னியை உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தி எழுதியதற்கும் வீடியோவை பகிர்ந்ததற்கும் மிக நன்றி

  பதிலளிநீக்கு
 13. அட, எங்க மோதி கூட வந்திருக்கானே! :)

  பதிலளிநீக்கு