புதன், 31 ஆகஸ்ட், 2016

பூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்

Image result for merging of banks in sbi
Around 45,000 employees in the five associate banks of the SBI were set to go on strike from Tuesday, opposing the government's decision to merge State Bank of Bikaner and Jaipur (SBBJ), State Bank of Travancore (SBT), State Bank of Patiala (SBP), State Bank of Mysore (SBM) and State Bank of Hyderabad (SBH) with the ...SBI  (படமும், செய்தியும் இணையத்திலிருந்து)

“பொண்ணு +2 ல நல்ல மார்க் வாங்கி பாசாயிட்டா! இந்தா ஸ்வீட் எடுத்துக்க”

“அது சரி. அடுத்து என்ன ப்ளான் பண்ணியிருக்கீங்க? நர்சிங்க் கோர்சுக்கு விடுங்க.  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனினு போயி லட்சக்கணக்கா சம்பாதிச்சு சுகமா வாழட்டும்.”

“அப்படி எல்லாம் ஆசை இருக்கு. பணத்துக்கு வழி இல்லையே!”

“எஜுகேஷனல் லோனுக்கு அப்ளை பண்ணுங்க. பிரச்சனை இல்லாம கிடைக்கும். வேலை கிடைச்சப்புறம் சம்பளத்திலிருந்து கடனை மீட்டிக்கலாம்”

“அதெல்லாம் நம்மள மாதிரி சாதாரண ஆளுங்களுக்குக் கிடைக்குமா?”

“கிடைக்குமாவா? சாதாரண நடுத்தரவர்க்கத்துக்காகத்தான் இந்தக் கடனுதவி திட்டத்தையே அரசும் வங்கிகளும் சேர்ந்து கொண்டு வந்துருக்கு.”

இப்படி யாரெல்லாமோ சொல்லித்தான் மாவேலிக்கரை அருகே ச்சாருமூடைச் சேர்ந்த மூலம் குழியில் கிருஷணங்குட்டிக்கும், தன் மகளை நர்சிங்க் கல்லூரியில் சேர்க்கத் துணிவு வந்திருக்கிறது. ஒரு நர்சிங்க் கல்லூரிக்குச் சென்று மகளை சேர்க்க ஏற்பாடு செய்தபின், அருகிலிருந்த ஒரு வங்கிக்கும் சென்று கடனுக்கு விண்ணப்பித்தும் இருக்கிறார்.  எப்படியோ 2007 ஆம் ஆண்டு, ஸ்டேட் பெங்க் ஆஃப் திருவிதாங்கூர் கடனாய் தந்த ரூ1,80,000 உடன் தன் கையிலிருந்ததையும் சேர்த்துத் தன் மகளை நர்சிங்க் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தார்.

படித்து முடித்ததும் அவரது மகளுக்கு வேலையும் கிடைத்திருக்கலாம். அவருக்குக் கிடைத்த ஊதியத்திலிருந்து கடன் தொகையில் சிறிதளவு மீட்டியும் இருக்கலாம். இதனிடையே நர்சிங்க் படித்த மகளுக்கும், அவளது தங்கைக்கும் திருமணமும் செய்து வைத்திருந்திருக்கிறார். உடல் ஆரோக்கியம் நலிந்ததால், ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் மனைவியின் தையல் தொழிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

இடையிடையே எப்போதாவது தான் வாங்கிய கடனைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்க வழியில்லை. கல்விக் கடன் திட்டத்தில் எடுத்ததுதானே. மகளுக்கு வேலை கிடைத்து அவள் திரும்பச் செலுத்தினால் போதும் என்று நினைத்திருக்கலாம். மகளுக்கும் குழந்தைகள் குடும்பம் என்று வேலைக்குப் போக முடியாமல் சூழலோ? வேலைக்குப் போய் கிடைத்த ஊதியம் கடனை முழுதுமாக அடைக்கத்துத் தீர்க்கப் போதுமானதாக இல்லாத சூழலையோ ஏற்படுத்தியிருக்கலாம். எப்படியோ எடுத்தக் கடன் தொகையில் சிறிதளவுதான் அவர்களால் அடைக்க முடிந்திருக்கிறது.

எதிர்பாராமல், திடீரென, சில நாட்களுக்கு முன், வங்கியிலிருந்து கிருஷ்ணன் குட்டிக்கு வந்த பதிவுத் தபாலில் உடனே ரூ 3, 82,731 செலுத்தி கடனைத் தீர்க்காவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்ற செய்தியைக் கண்டதும் செய்வதறியாது திகைத்தார். அதன்பின் போலீசார்களின் மிரட்டல். போதாதற்கு தாலுகா அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் வீடு பறிமுதல் செய்யப்படப் போவதாகவும் அறிவித்தனர். 

இதனிடையே வங்கிக் கடன்களுக்கு உடனடி தீர்வு காணும் அதாலத், மாவேலிக்கரையில் நடப்பதை அறிந்து அங்கும் போனார். மீட்டப் பெறாமல் இருக்கும் கடன்களை திரும்ப வசூல் செய்யும் நோக்குடன் நடத்தப்பட்ட அந்த அதாலத்திலும் அவருக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. பதிலுக்கு தன் வீடும் இடமும் எல்லாம் பறிமுதல் செய்யப்படத்தான் போகின்றன என்ற அதிர்ச்சி தரும் செய்திதான்  கிடைத்தது. பாவம் கிருஷ்ணன் குட்டியால் விஜய் மல்லையா எல்லாம் ஆக முடியாது.!

கடைசியாக, கடனை அடைக்க ஏதேனும் வழி உண்டா என்று மகள்களையும், மருமகன்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு ஆராய்ந்திருக்கலாம். வழி ஏதும் இல்லை என்றதும் ஒரு வேளை தான் தற்கொலை செய்து கொண்டால் தன் மனைவி மக்களுக்கு வீடும், இடமும் கைவிட்டுப் போகாது என்று நினைத்திருக்கலாம். எல்லோரும் உறங்கிய பின் வீட்டின் பின்புறமிருந்த மாமரத்தின் கிளைகளில் ஒன்றில் கயிற்றைக் கட்டி தூக்குப் போட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இப்படித்தான் நம் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான பாவம் விவசாயிகள். விவசாயக் கடனெடுத்து திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

2007 ஆம் ஆண்டு கிருஷ்ணன் குட்டி எடுத்த ரூ 1,80,000 கடனுக்கு 2016 வரை (சிறிய தொகை திரும்ப அடைத்தும் கூட) முதலும் வட்டியும் சேர்த்து ரூ 3,82,731. 7 ஆண்டுகளில் தனியார் வங்கிகள் தாங்கள் பெறும் டெப்பாசிட்டுகளை 2 மடங்காக்கித் திரும்பத் தருகின்றன. இங்கு 9 ஆண்டுகளில் கல்விக் கடனுக்கு எடுத்தத் தொகை 2.1 மடங்கு ஆகியிருக்கிறது. இதை கல்வி கற்க கிடைக்கும் உதவியாக எப்படிக் கருத முடியும்.  12.5% மேல் வட்டி வசூலிக்கப்படும் இது வங்கிக்கு லாபம் உண்டாக்க உதவும் ஒரு திட்டமே தான். இப்படிப்பட்ட சதி செய்தபின், அரசும் வங்கிகளும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்களுக்கும் ஏதோ பேருதவி செய்வதாக, பீற்றிக் கொள்ளுதலில் அர்த்தமில்லை. 

இதனிடையில் தான் இது போன்ற லட்சக்கணக்கான சாதாரண மனிதர்கள் வாங்கும் தொகைக்குச் சமமான தொகையை கடனாய்ப் பெற்று கண்மூடித்தனமாகச் செலவு செய்து கடனைத் திரும்பச் செலுத்தாமல் விஜய் மல்லையா போன்றவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்கிறார்கள்.
அவர்களுக்குக் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாத வங்கிகள், கிருஷ்ணன்குட்டி போன்றவர்களை மிரட்டி அவர்களைத் தற்கொலை செய்துக் கொள்ளத் தூண்டுகிறார்கள். தற்கொலை செய்துகொண்டாலும் அவர்களது வீட்டை ஏலம் போட்டு விற்றுக் கடனை வசூலித்துத் தங்கள் திறமையைக் காட்டுகிறாரள். இது போன்ற அடித்தட்டு அக்ரமங்கள் மட்டுமல்ல மேல்தட்டில் நஷ்டத்தை ஈடுகட்ட SBT போன்ற லாபம் ஏற்படுத்தும் பல வங்கிகளை விழுங்கத் தேவையான நடவடிக்கைகளை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதில் இவையும் அடக்கம்.  State Bank of Bikaner and Jaipur and State Bank of Mysore State Bank of Patiala, State Bank of Hyderabad, SBI யுடன் ஒன்றாக்கிட/இணைக்கப்பட உள்ளன.


இது போன்ற பூநாகங்கள் வாழும் பூக்களாம் வங்கிகள் பூத்துக் குலுங்கி நிற்கும் நம் நாட்டில் சாதாரண மக்கள், மணமில்லா இக் காகிதப்பூக்களை நுகர்கிறேன் பேர்வழி என்று அதனுள் ஒளிந்திருக்கும் பூநாகத்தை நுகர்ந்து மரணத்தைத் தழுவாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.

(கீதாவின் பதிவுகள் காத்திருக்கின்றன என்று சொல்லியிருந்தேன். இன்னும் தயாராகவில்லை....வேலைப்பளு காரணமாக....)

29 கருத்துகள்:

  1. கொடுமை.. கொடுமை.. கண்கள் கசிகின்றன..

    பூநாகங்கள் வாழும் பூக்கள் என்ற வார்த்தை பொருத்தம் தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  2. தம 1

    மல்லையாக்களுடன் மோத வழியில்லை...
    மக்களை புதைக்கிறார்கள்....

    பதிலளிநீக்கு
  3. இந்தியாவில் உள்ள சட்டங்கள் ஏழைக்குதான் என்பதை இந்த ஏழை தெரியாமல் இருந்திருக்கிறார் பாவம்

    பதிலளிநீக்கு
  4. Survival of the fittest என்ற வாசகம் என்றும் எல்லா இடத்திலும் எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
  5. படிக்கும்போதே கடன்காரர்களாக ஆக்கப்படும் துயரம். வாராக் கடன்கள் பல கோடிகள்....

    பதிலளிநீக்கு
  6. வட்டி வீதம் எவ்வளவு என்று கூடத்தெரியாமல் கடன் வாங்குகிறார்கள் திருப்பிக் கட்ட முடியாதபோது கூக்குரலா. எல்லோரும் மல்லையா மாதிரி நினைக்க முடியுமா கடனைத் திருப்பிக் கட்டவேண்டும் என்னும் தார்மீகப் பொறுப்பே அவரைத் தற்கொலைக்குத் தள்ளி இருக்கிறது தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் தன் பொறுப்பை பிறர் மீது சுமத்தும் அறியாத்தனம் என்றே தோன்று கிறது

    பதிலளிநீக்கு
  7. வந்த கடன்
    வராக் கடன்
    வங்கிக்கு
    கடன் படாது
    வாழ முயன்றால்
    பிறருக்கு
    நாம் அடிமை இல்லை!

    சிந்திப்போம்
    செயலாற்றுவோம்

    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
  8. அரசு வங்கிகளே இப்படி என்றால் தனியாருக்கு சொல்லவா வேண்டும் ?

    வங்கிகள் இணைப்பு முடிந்த பின் ,தனியார் வங்கிகளை ஊக்குவித்து அரசு வங்கிகளை நொடிக்கச் செய்யும் வேலையை துவங்குவார்கள் .தற்போது ,bsnl யை வளரவிடாமல் நொடிக்கச் செய்துக் கொண்டு இருப்பதைப் போல ,வங்கிகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சியின் முதற்படி இது !டாடா ,அம்பானி ,அதானி ,மல்லையாக்களின் கைப்பாவை அரசு இது !

    பதிலளிநீக்கு
  9. 'நியாயம், சட்டம் எல்லாம் ஏழைகளுக்கும் ஏதிலிகளுக்கும்தான். நான் பி.எஸ்.ஸி படித்தபோது, என் அண்ணனின் வகுப்பு நண்பன் (அவன் அப்போவே இந்திரா காங்கிரஸ்) ஒரு ஃபார்ம் காட்டி, காங்கிரஸ் லோன் மேளா நடத்துகிறது. இந்த ஃபார்மில் கையெழுத்திட்டால் 3000 கிடைக்கும். திருப்பிக் கட்டவேண்டாம். எல்லா லோனையும் தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்று சொன்னான். பெரும்பாலான கடன்'கள் யாருக்குப் போகவேண்டுமோ அவர்களுக்குப் போவதில்லை. அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுத்து வங்கியைத் திவாலாக்குகிறவர்கள் தப்பித்துவிடுவதால், அவர்களுக்குக் கவலையில்லை. எத்தனை % லோன் திரும்ப வசூலிக்கப்பட்டது என்று கணக்கு காண்பிப்பதற்கு ஏமாந்தவர்களைப் படுத்தியெடுக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  10. பூ நாகங்கள் இதற்கு முன் கனவுகளை அழித்த கதை தெரியும். உயிரையே வாங்கினது
    இப்போது தெரிகிறது. வெந்த அந்தத் தந்தைக்கு யார் ஆறுதல். அந்தக் குடும்பத்துக்குத் தான்
    என்ன செய்ய முடியும். மீதம் இருக்கும் கடனை அடைக்க முடியாமல்
    மீண்டும் விரட்டப் படுவார்களோ.

    பதிலளிநீக்கு
  11. ஆசிரியர் அவர்களுக்கு, எல்லோரையும் போல என்னால் கருத்து சொல்ல இயலவில்லை. காரணம், ஒரு தனி நபரிடமோ, தனியார் வங்கியிலோ அல்லது ஒரு கந்து வட்டி கெடுபிடி ஆசாமியிடமோ கடன் வாங்கும் ஒருவர் இந்த கடனை எப்படியாவது கட்டி முடிக்கப் பார்க்கிறார். அதே நபர் அரசு வங்கியில் வாங்கிய கடனை உடனே அடைக்க நினைப்பதில்லை. அதிலும் கல்விக்கடன், விவசாயக் கடன் போன்ற கடன்களை வாங்குபவர்கள், அரசாங்கம் இந்த கடன்களை தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடத்துகின்றனர். இதனால் ஒரு லட்சம் ரூபாய் கடன், அசல் மற்றும் வட்டி இவற்றை ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து கட்டாததால் ஐந்து லட்சம், ஆறு லட்சம் என்று எகிறி விடுகிறது. கேட்பவர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

    மேலே சொன்ன குடும்பத்தாரும் இப்படித்தான் தவறான கணக்கு போட்டு ஏமாந்து இருப்பார்கள்; வருத்தமான நிகழ்வுதான். நானும் ‘வங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?” என்ற பதிவு ஒன்றை எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. இலவசமாய் கல்வியைத் தரவேண்டியது அரசின் கடமை
    ஆனால் அரசோ லாபம் பார்க்கத்தான் நினைக்கிறது.
    அண்மையில் வெளியிடப்பெற்ற புதிய கல்விக் கொள்ளையினைப் படித்தீர்களா,
    மேலும், ( 4.21(5) )பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான தற்போதுள்ள,கல்விக் கடன் திட்டத்தை மேலும் செம்மைப் படுத்த, இத்திட்டத்தில் மாற்றம் செய்து, குறைந்த வட்டி, திரும்பிச் செலுத்த தற்போதுள்ள ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டு உயர் கால அவகாசம் போன்ற ஒத்திசைவான தளர்ச்சி மிக்க வசதிகள் செய்து தரப்படும்என்றுதான் அறிவிக்கிறது

    ஒரு அரசின் கடமை தன் மக்களுக்குக் கல்வியை, தாராளமாய், இலவசமாய் வழங்குவதுதானே தவிர, தனியார் மயத்தை ஊக்குவிப்பது பெரிதும் பாதகமல்லவா.

    படித்த பிறகும் உரிய வேலை வாய்ப்பின்றி, தகுந்த ஊதியமும் இனறி அல்லல்படும் மாணவர்களை, படிக்கும் காலத்திலேயே கடனாளியாகவும் மாற்றுதல் தகுமா.

    பதிலளிநீக்கு
  13. இந்த அனுபவம் என் நண்பனின் மகனுக்கும் நடந்தது. நல்லவேளையாக விபரீதங்கள் எதுவும் நடக்காமல், வேலை கிடைத்து விட்ட காரணத்தினால் அவன் கடன் தொங்கியைத் திருப்பிக் கட்டி விட்டான். சட்டங்கள் வெளியில் சொல்லப்படுவது பாதி.. உள்ளே இருக்கும் பூதங்கள் மீதி..

    பதிலளிநீக்கு
  14. அடித்தட்டும் மக்களுக்கு எதிரானதே
    அரசாங்கம் என்பதை எல்லாத் துறையும்
    நிரூபித்து வருகின்றன
    படிக்கக் கண் கலங்கியது

    பதிலளிநீக்கு
  15. மிகுந்த வேதனை அளிக்கிறது, நாடு செல்லும் நிலை கவலையளிக்கிறது. மீண்டும் மீண்டும் நேர்மையை தொலைத்து எப்படியாவது பணத்தை சம்பாதி. இல்லையென்றால் மரணத்தை எடுத்துக்கொள் என்பதுபோல்தான் இன்றைய காலம் உள்ளது. வரும் காலம் எப்படியிருக்குமோ என்ற பயம் நிரம்பியிருக்கிறது.
    நல்லதொரு பதிவை தந்ததற்கு நன்றி நண்பர்களே.
    த ம +1

    பதிலளிநீக்கு
  16. ஏழைகளிடம் பிடுங்கும் வங்கிகள் பணக்காரர்களுக்கு பல்லக்கு தூக்குகின்றன!

    பதிலளிநீக்கு
  17. செய்தியைப்படிக்கும் போது மனம் துயரம்கொள்கின்றது வங்கிகள் கடன் தருவதன் மூலம் தலையை கொய்கின்றது!

    பதிலளிநீக்கு
  18. //sivamgss@gmail.com is already subscribed to the mailing list of Thillaiakathu Chronicles//
    அப்படினு சொல்லுது! ஆனால் பதிவுகள் அப்டேட் ஆவதே இல்லை. எங்கள் ப்ளாகிலிருந்து வரேன். :)

    வங்கிக் கடனில் நாங்களும் கொஞ்ச நாட்கள் தவித்தோம். அதன் பின்னர் சாப்பாடு இருக்கோ இல்லையோ கடன் முதலில் என்று கடனைக் கட்டிவிட்டோம். அதுக்கப்புறமாத் தான் அப்பாடா! :)

    பதிலளிநீக்கு
  19. தேசிய"மா"யம் என்பது இதான்...!!
    பல வருடங்களுக்கு முன், பெரியார், "இங்க ஏன்டா இப்படி கெடந்து சாவுறீங்க, சிங்கப்பூர் மலேசியான்னு போய் கவுரமா பொழைச்சுக்கோங்க.."ன்னு சொன்னதை மீண்டும் நினைவு படுத்தும் நேரம் வந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  20. வங்கிப் பணியாளர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் என்ன ?
    கல்விக்கு வட்டிக்கு கடன் வாங்க வேண்டுமா என்ன ?
    இன்னும் பிரமணிய சிந்தனையின் மிச்சம் நமது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை.

    மூலம் நோக்கி நகர்ந்து நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் உயர் கல்வி வரை இலவசம் என்று அறிவிப்பதெ ஆகும் ...

    இலவசமாய் கல்வி நிலையங்களை நடத்த இயலாத நாட்டில் மேடையில் தோன்றும் ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவரும் கருப்பு ரிப்பன் ஒன்றை சட்டையில் அணிந்து வரவேண்டும் என்பது முதல் கோரிக்கையாக வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. //கல்விக்கு வட்டிக்கு கடன் வாங்க வேண்டுமா என்ன ?
    இன்னும் பிரமணிய சிந்தனையின் மிச்சம் நமது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை.//
    இதை இப்போது தான் பார்க்கிறேன். எந்த பிரமணிய சிந்தனையில் கல்விக்கு வட்டிக்குக் கடன் வாங்கிப் படிங்கனு சொல்லி இருக்கு என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்! :) என் உறவினர்களில் பலரும் பொறியியல் படிக்கையில் வங்கிக்கடன் பெற்றே படித்தனர். அதற்குக் காரணம் கட்டணம். மிக அதிகக் கட்டணம். அனைத்தும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணம். முதலில் இந்தக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தச் சொன்னால் வங்கிக் கடன் வாங்காமலேயே படிக்கலாம். இதையும் ஏதேனும் பிரமணியச் சிந்தனை தான் சொன்னது என்பீர்கள்! எங்கள் வீட்டில் வங்கிக்கடன் பெற்றுப் படித்தவர்கள் அனைவரும் இரண்டே வருடங்களில் கடனைத் திரும்பச் செலுத்தி விட்டார்கள். திரு தமிழ் இளங்கோ சொல்லி இருப்பது தான் உண்மையான நிலைமை!

    ஆனாலும் தனியாரிடம் சொல்லி மிரட்டிக் கடனைத் திருப்பிக் கேட்பது வங்கிகள் செய்யும் அராஜகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சாம்பசிவம் அவர்களே! கீழ்க்காணும் என் கருத்தைப் படிக்க வேண்டுகிறேன்!

      நீக்கு
  22. கொடுமையான நிகழ்வு! அண்மைக்கால இந்திய அரசுகளின் எல்லாத் திட்டங்களுமே மக்களிடம் இருக்கும் கடைசித் துளிக் குருதி வரை சுவை பார்ப்பதற்கான வழிகள்தாம் இதில் வங்கிகளும் விலக்கில்லை.

    கல்விக் கடன் பற்றிச் சில மாதங்களுக்கு முன் விகடனில் படித்த ஒரு குறிப்பு (point) அறிவை விழிக்கச் செய்தது! அதன் சாரம் இதுதான்:

    "கல்வியை அரசுகள் இலவயமாகத் தர வேண்டும் எனும் கோரிக்கை பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவெனில், குடிமகன்/ள் ஒருவர் படித்து முடித்து வேலைக்குச் செல்வதன் மூலம் அவர் இந்த நாட்டுக்கான தன் பங்களிப்பைச் செய்கிறார். பணியாற்றுவதன் மூலமும் பணி சாராத அவருடைய இன்ன பிற சொந்த நடவடிக்கைகள், பொதுவாழ்வு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமும் அவர் இந்த நாட்டைப் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றுகிறார். ஆக, அவருக்குப் படிப்பை இலவயமாகத் தருவது என்பது இந்த நாடு தன் வளர்ச்சிக்குச் செய்து வைக்கும் முதலீடுதானே தவிர செலவு இல்லை. அப்படியிருக்க, கல்வியைக் குடிமக்கள் தங்கள் சொந்தச் செலவின் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு நாடு வலியுறுத்துவது மக்களிடம் இரட்டை வழிகளில் பணம் பிடுங்கும் போக்கு. அது போக, கல்விக் கடன் என்கிற புதுமுறையின் மூலம் தாங்கள் இலவயமாகப் பெற வேண்டிய கல்விக்கு மக்களைச் செலவழிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அதற்காக வட்டி கட்டவும் வைக்கிறது இந்நாடு."

    இதுதான் கல்விக் கடனின் உண்மை முகம்! எனவே, கல்விக் கடனைப் பெரிய வளர்ச்சித் திட்டம் போலவோ, மக்கள் நலத் திட்டம் போலவோ போற்றுவது அறிவீனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் இங்கே பெரும்பாலான கல்லூரிகள் தனியார் கல்லூரிகளே! அவற்றின் கட்டணம் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அத்தகைய கல்லூரிகளில் சேர்பவர்களே வங்கிக் கடன் வாங்குகின்றனர் என நினைக்கிறேன். எல்லா ஏழைகளுக்கும் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? அதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றனவா? தகுதிக்கு ஏற்றபடி கிடைக்கும் கல்லூரிகளில் தானே சேர்ந்து படிக்க வேண்டி இருக்கு! எத்தனை ஏழைகள் கல்விக்கட்டணம் செலுத்த முடியலைனு மேல்படிப்பை நிறுத்த வேண்டி வருகிறது. அத்தகையோருக்கு அரசுக்கல்லூரிகளில் இடம் கொடுக்கிறார்களா? கல்வி நிலையங்கள் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டிலோ அல்லது அரசால் நடத்தப்பட்டாலோ தான் நீங்கள் சொல்வது நடக்கும். ஆனால் இங்கே கல்வி ஓர் வியாபாரம் ஆகி இருக்கிறது. முதலில் அதைச் சரி செய்ய வேண்டும் அல்லவா? அதைக் குறித்துப் பேசித் தீர்வுகள் கிடைக்குமா என்று யோசிக்கணுமே! எண்பதுகளிலிருந்து கல்வி வியாபாரம் ஆகி இருக்கிறது. முதலில் அதை மாற்ற முயல வேண்டும். ஒரு சின்ன அறையில் பாலர் வகுப்பு ஆரம்பிப்பார்கள். மூன்றே வருடங்களில் நிகர்நிலை பல்கலைக் கழகமாக மாறும்! இதை முதலில் தடுக்க வேண்டாமா? :( கல்விக்கடனை மக்கள் நலத்திட்டம் என்றோ வளர்ச்சித் திட்டம் என்றோ எங்கேயும் சொல்லவில்லை. கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் தனியார் மூலம் மிரட்டிப் பணம் பறிப்பதையும் சரி என்று சொல்லவில்லை. ஆனால் அதே சமயம் மக்களில் பலரும் வங்கிக்கடனைச் செலுத்துவதில் ஊக்கம் காட்டுவதில்லை என்பதையும் நேரில் பார்க்கிறேன். எங்க வீட்டில் என் சகோதரர்கள் அனைவருமே வங்கிப் பணி தான்! ஆகையால் இது குறித்து நன்கு தெரியும்!

      நீக்கு
    2. நீங்கள் கூறும் கருத்துக்கள் அத்தனையும் எனக்கு உடன்பாடே!

      /எல்லா ஏழைகளுக்கும் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? அதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றனவா? தகுதிக்கு ஏற்றபடி கிடைக்கும் கல்லூரிகளில் தானே சேர்ந்து படிக்க வேண்டி இருக்கு! எத்தனை ஏழைகள் கல்விக்கட்டணம் செலுத்த முடியலைனு மேல்படிப்பை நிறுத்த வேண்டி வருகிறது. அத்தகையோருக்கு அரசுக்கல்லூரிகளில் இடம் கொடுக்கிறார்களா? கல்வி நிலையங்கள் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டிலோ அல்லது அரசால் நடத்தப்பட்டாலோ தான் நீங்கள் சொல்வது நடக்கும். ஆனால் இங்கே கல்வி ஓர் வியாபாரம் ஆகி இருக்கிறது. முதலில் அதைச் சரி செய்ய வேண்டும் அல்லவா// - அதையேதான் நானும் சொல்கிறேன். ஆனால், இதைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களான ஆட்சியாளர்கள்தாம் இந்தக் கல்விக் கொள்ளையில் ஈடுபடுபவர்களில் முக்காலே மூன்று வீசம் பேர். அவர்கள் எப்படி அதைத் தடுப்பார்கள்?

      //கல்விக்கடனை மக்கள் நலத்திட்டம் என்றோ வளர்ச்சித் திட்டம் என்றோ எங்கேயும் சொல்லவில்லை// - உங்கள் கருத்தைப் படித்தபொழுது நீங்கள் கல்விகடன் திட்டத்தை ஆதரிப்பது போலத் தெரிந்தது. அதனால்தான் இந்தக் கருத்தை நீங்களும் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டேன். மற்றபடி, உங்களுக்குக் கல்விக் கடன் பற்றி அப்படி ஒரு கருத்து இல்லை எனில், கை கொடுங்கள்! நானும் உங்கள் கட்சிதான் :-)

      //மக்களில் பலரும் வங்கிக்கடனைச் செலுத்துவதில் ஊக்கம் காட்டுவதில்லை என்பதையும் நேரில் பார்க்கிறேன்// - இன்னுமா மக்கள் அப்படி இருக்கிறார்கள்! அந்தக் காலத்துப் படிக்காத மக்கள்தாம் அப்படி இருந்தார்கள். காரணம், அரசு என்பது மிகப் பெரிய நிறுவனம், நாம் ஒருவர் கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் அதற்கு ஒன்றும் பெரிய இழப்பாகி விடாது என்பதும், அரசு வங்கி என்பதே மக்களுக்கு உதவி செய்ய மக்கள் பணத்தால் நடத்தப்படுவதுதானே, நாமும் மக்களில் ஒருவர்தானே, அந்தப் பணத்தை ஏன் திருப்பித் தர வேண்டும் என்பதும் இது போன்ற இன்ன பிற மௌடீகமான எண்ணங்களும்தாம். இன்னும் நம் மக்கள் அப்படி இருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது!

      நீக்கு