வியாழன், 10 மே, 2018

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே!

அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள். இதோ கீழே உள்ள படத்தில் போன்றவை.

இது என் பால்கனி தோட்டமல்ல! நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் சீசனின் போது எடுத்தது. 

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுபூச்சியக்காக்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்று கறிவேப்பிலையைச் சுற்றி சுற்றிப் பறந்திட, கறிவேப்பிலை, ஏன்? சுத்தி சுத்தி வந்தீகனு கேட்டது. வாச கறிவேப்பிலையே என்ற வண்ணத்துப் பூச்சிகள் கறிவேப்பிலையின் மீது அமர்ந்தன. வண்ணத்துப் பூச்சிகளைப் புகைப்படம் எடுக்க ஆசை இருந்தாலும் அருகில் சென்றால் அவை இலையின் மீது அமராமல் பறந்துவிடும் பாவம் என்று புகைப்படம் எடுக்கவில்லை.

சிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால் கறிவேப்பிலை செடியில் கரும்பச்சை நிறத்தில் புழு ஒன்று தென்பட மற்றொரு புழு இலையின் அடியில் இருந்தார். கேமரா ரிப்பேருக்குப் போயிருந்ததாலும் மொபைலில் படங்கள் சரியாக வருவதில்லை அதன் கேமராவில் ஏதோ பிரச்சனை போலும் என்று நினைத்துவந்ததாலும் படம் எடுக்காமல் இருந்த நான் இதனை வந்தது வரட்டும் என்று எடுத்தேன். நன்றாக வரவில்லை என்று தெரியும். மொபைலில் கேமராவில் என்ன பிரச்சனை? காரணம் பதிவின் முடிவில்!!! ரொம்ம்ம்ம்ப அறிவுக் கொழுந்து நான் என்பது புரியும்!! 

இதோ அம்புக் குறி இட்டுக் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதுதான் முதலில் வந்த கரும்பச்சை நிறப் புழு(க்கள்.) கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான் தெரிவார். மற்றொருவர் புகைப்படத்தில் சரியாக வரவில்லை. அதனால் இங்கில்லை


தினமும் பார்த்தாலும் அத்தனை வித்தியாசம் டக்கென்று தெரியவில்லை. 4, 5 நாட்களில் பார்த்தால் அசந்துவிட்டேன் வியப்பில். கண்ணிற்கு எதுவும் புலப்படவில்லை. புழுக்கள் என்ன ஆனார்கள்? என்று பார்த்தால் கொழு கொழுவென்று பச்சையோடு பச்சையாக இலைகளில் உட்கார்ந்து கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இலைகளைக் காணவில்லை. என்ன அழகாய் கொழு கொழுவென்று இருக்கிறார்கள் பாருங்கள்!! கேமரா என்றால் இன்னும் நன்றாக, அழகாகத் தெரிந்திருப்பார்கள். இருந்தாலும் க்ளிக்கினேன்.

அவற்றை ரசித்தேன் ரசித்தேன். அதன் அழகை ரசித்துக் கொண்டே இருந்தேன். அவை நகர்வதே தெரியவில்லை. சரி அவை சுதந்திரமாகத் தின்னட்டும் என்று படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன். மகனுக்கும் அனுப்பினேன். இந்தப் படங்களைத்தான்!! 

மகன் சொன்னான் பாவம் அம்மா. அதை ஒன்னும் செஞ்சிடாதே. சாப்பிட்டா சாப்பிடட்டுமே இப்ப என்ன? நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய்! மகனே! "ஒன்னும் செஞ்சிடாதே"?? உனக்குச் சொல்லிக் கொடுத்த எனக்கே பாடமா?”


அடுத்த 4 தினங்களில் பார்த்தால் நான் வியப்பின் உச்சியில். எல்லா இலைகளையும் நன்றாகத் தின்று செடியை மொட்டை அடித்து இருந்ததைப் பார்த்ததும், கேமராவும் ரிப்பேர் சரியாகி வந்திருந்ததால் உடனே க்ளிக்கிவிட்டேன். அப்போது இந்தக் கொழு கொழு பச்சையான புழுக்களைக் காணவில்லை. எங்கே போனார்கள்?

பாருங்கள் எப்படி சாப்பிட்டுருக்கிறார்கள் கமுக்கமாய்! ஹா ஹா ஹா

என்னாச்சு மீண்டும்? காகம் வந்து கொத்திக் கொண்டு சென்றுவிட்டதா? என்று தோன்றிட கறிவேப்பிலையை ஆராய்ந்தால் ஆஹா! அவை இலையையே கூடாரம் போல் கூடு கட்டிக் கொண்டு கருவறையாக்கிக் கொண்டுவிட்டன. இது எப்படி செய்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. அவை எப்போது செய்யும் என்று தெரியவில்லையே! அனிமல் ப்ளானெட் எல்லாம் செய்வது போல் அங்கே எப்போதும் ஓடும் கேமரா ஒன்றை வைக்க வேண்டும் போல!   

எப்படி இருக்கிறது பாருங்கள். புழு இருப்பது தெரிகிறதல்லவா? இலையையே கூடாரம் போல் செய்து கருவறையாக்கிக் கொண்டு!!!
இது மற்றொருவரின் கருவறை


சரி அடுத்து எப்படியும் வண்ணத்துப் பூச்சி வருமே அதைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து.....!காத்திருந்தேன். என்று எப்போது ப்ரௌன் நிறமாகியதோ? பச்சை ப்ரௌன் நிறமாகியிருந்தது. உள்ளுக்குள் இருக்கா என்றும் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்த்து அதற்குத் தொந்ததரவு கொடுக்க வேண்டாமே என்று தோன்றிட விட்டுவிட்டேன். நாள் பார்த்தால் கூடு வெற்றிடமாகத் தோல் மட்டும் இருந்தது போல் தோன்றிட தொட்டுப் பார்த்தேன். வெறும் கூடு மட்டுமே இருந்தது. வண்ணத்துப் பூச்சி பிறந்து பறந்து போய்விட்டது போலும். வண்ணத்துப் பூச்சி வெளியில் வருவதைப் பார்க்க இயலவில்லை என்று. வருத்தமாகிவிட்டது! அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!! ஹா ஹா ஹா…  

கூடு மட்டும். பூச்சியைக் காணவில்லை

ஓ! பட்டர்ஃபளை பட்டர் ஃப்ளை! ஏன் விரித்தாய் சிறகை!

இந்த வருடம் சீசன் தொடங்கட்டும்! விடுவேனா? இம்முறை என் கறிவேப்பிலை பூக்கத் தொடங்கிவிட்டது! எனவே வண்ணத்துப் பூச்சிகள் நிச்சயமாக வரும். இம்முறை ஆதியிலிருந்து எடுத்திட வேண்டும். விடமாட்டேன்! விடமாட்டேனாக்கும்!! 

  மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலை. (பொத்தி வைச்ச கறிவேப்பிலை மொட்டு!!!) இரவில் எடுத்த புகைப்படம். நேற்று ஒரு சிறு குளியல் அவளுக்கு

இது பகலில் எடுத்தேன் மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலையை. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இல்லையா? குளித்தும் அதற்குள் தூசி படிந்து அழுக்காகிவிட்டாள். குளிப்பாட்ட வேண்டும். பூ பூக்கும் ஓசையைக் கேட்கக் காத்திருக்கிறேன்

தற்போது என் கேமரா முழுவதும் பழுதடைந்துவிட்டது. எனவே மொபைலில் தான் எனது மூன்றாவது விழி படங்கள் எல்லாம் எடுக்கிறேன். இதோ இந்த கடைசி இரு படங்களும் மொபைலில் தான் எடுத்தேன். கேமரா இல்லாதது ஏதோ போல இருக்கு. மொபைலில் சில நன்றாக வருகின்றன. சில படங்கள் நன்றாக வருவதில்லை. என் மொபைலும் மொபைல் கேமராவும் அத்தனை ஹை டெக் இல்லை.

என் மொபைல் கேமராவில் என்ன பிரச்சனை இருந்தது? மொபைலில் கேமரா சரியில்லை படங்கள் எல்லாம் ஏதோ புகை மூடியது போல வருகிறது என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் திடீரென்று மூளையில் பல்பு எறிந்திட கேமராவை பார்த்தால்.....அதன் மேல் ஏதோ இருப்பது போல் புலப்பட.....அறிவுக் கொழுந்தே புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டிர்யிருப்பாங்க அதுகூடவா உனக்குத் தெரியாது? தெரியலை? அதை ஒன்றரை வருஷமா அகற்றாமலேயே இருந்திட்டு மொபைல் கேமரா சரியில்லை சரியில்லை அப்படினு புலம்பிக்கிட்டு...என்னா அறிவு!! ஹிஹிஹிஹிஹி!!! பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா!!!

-------கீதா



68 கருத்துகள்:

  1. குழந்தையைப் பாராட்டியே ஆக வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா வாங்க கரந்தை சகோ!!! பாராட்டிற்கு மிக்க நன்றி ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  2. முடிவில் சொன்னது இதுவாகத்தான் இருக்குமென்று கணித்தேன்.

    நானாக இருந்தால் கருவேப்பிள்ளையை வீணாக்கி இருக்கமாட்டேன்.

    இரண்டு ப்ளேட் "திண்டுக்கல் தலைப்பாகட்டி" பிரியாணி வாங்கி பக்கத்தில் வைத்தால் கீழே இறங்கி போய்விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி!! தலைப்பாகட்டி அத்தனை மோசமோ?!! பட்டுப்பூச்சி புழு கூட அதனைச் சீண்டாதோ? ஹா ஹா

      பாவம் ஜி வேஸ்ட் இல்லை...கறிவேப்பிலையை அதுதானே தின்றது...போகட்டும்...பாருங்க கடைசில படம் இப்ப எப்படி வளர்ந்திருக்குனு

      நீக்கு
  3. கைத்தட்டி விசில் அடிச்சேன்...! அங்கு கேட்டதா...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா டிடி வாங்க....அடிச்ச விசில் காது பிளக்கக் கேட்டது!!! நீங்கள் அடிச்சதை மனக்கண்ணில் பார்த்தேன் சிரித்துவிட்டேன்....மிக்க நன்றி டிடி

      நீக்கு
  4. அங்கே கோமதி அரசு அவர்களுடைய பதிவில் மணிப்புறாவும் குஞ்சுகளும்..
    இங்கே வண்ணத்துப் பூச்சியின் வளர்பிறைப் படங்கள்..

    ஆகா.. அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை அண்ணா...ஆமாம் மணிப் புறாவும் குஞ்சுகளையும் கண்டு ரசித்தேன் நேற்று மாலை...

      இங்கும் ரசித்தமைக்கு மிக்க நன்றி துரை அண்ணா

      நீக்கு
  5. >>> புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டியிருப்பாங்க!.. <<<

    அது கூடத் தெரியாம!?...

    என்னா அறிவு.. என்னா அறிவு.. அறிவுக் குழந்தை வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா இந்த "அறிவுக் குழந்தையை" வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!!!

      நீக்கு
  6. ஹா ஹா ஹா ஹா டிடி வாங்க....அடிச்ச விசில் காது பிளக்கக் கேட்டது!!! நீங்கள் அடிச்சதை மனக்கண்ணில் பார்த்தேன் சிரித்துவிட்டேன்....மிக்க நன்றி டிடி

    பதிலளிநீக்கு
  7. நல்லா துளிர்த்து வந்த கறிவேப்பிலை என்ன காரணம்ன்னு தெரில பட்டுபோச்சுது..

    முதல் படத்திலிருக்கும் பூச்செடி பேர் தெரில. ஆனா, சின்ன வயசில் அந்த பூவை பிச்சி அதிலிருக்கும் தேனை ருசிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி!! அது உன்னிப்பூ செடி..(கீதா மதிவாணன் அவர்களிடமிருந்து தமிழ்ப்பெயர் கற்றேன்) ஆங்கிலத்தில் லேன்டனா என்று சொல்லுவது. அதன் இலைகள் விலங்குகள் (குறிப்பாக நாய்கள்) விரும்பிக் கடிக்கும் ஆனால் அது ஸ்லோ பாய்ஸனிங்க்..

      கறிவேப்பிலை எளிதில் வளராதுதான்...நீங்கள் அதன் வேர் பகுதியில் புளித்த மோர் விட்டுப் பாருங்கள். வளர வளர நுனிக் கொப்பைக் கிள்ளி கிள்ளி எடுத்து பயன் படுத்துங்கள் நன்றாக வளர்கிறது.
      மிக்க நன்றி ராஜி

      நீக்கு
  8. ரசனையான வாழ்க்கை. ரசிக்கும்படி படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோதிஜி! ஆம் ஜோதிஜி நான் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடித் துளியையும் ரசிக்க விரும்புபவள்...

      நீக்கு
  9. என்னாது அவ பறந்து போயிட்டாவோ? கீதாவை விட்டோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. என்னா அழகு... இப்படி அழகைக் கொடுத்த கடவுள் ஆயுளைக் குறைத்து விட்டாரே அவற்றிற்கு.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடவுள் பொல்லாதவர்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா அழகுனா அழகு! ஆயுள் கம்மிதான். என்னை விட்டுப் போயிட்டா ஆமாம் எனக்குப் பார்க்க முடியலையே என்று வருத்தம்...இந்த முறை இப்போதே வண்ணத்துப் பூச்சிகள் கண்ணில் பட்டன. ரெடியாகிவிட்டேன்...மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  10. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீதாவைக் கூவத்தில தள்ளிவிடப்போறேன் இந்தப் புழுக்களை அப்பப்ப படம் பிடிச்சுப் போடுவதற்கு கர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு மேலெல்லாம் கூசுது.. எட்டித்தாவி கீழ்ப்படத்துக்கு ஓடுறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா...இதுக்கா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......நான் மிகவும் ரசித்தேன் அதிரா..அந்தப் பச்சை நிறத்தைப் பார்க்கணும். தொட்டும் பார்த்தேன் மெத் மெத்துனு இருந்தது. அத்தனை ஸாஃப்ட் ஆக்கும்....சரி சரி உங்கள் கூசுதல் புரியுது... சிலருக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்....

      நீக்கு
    2. இன்னாது இந்த மீட்டார் சே சே matter எனக்கு தெரியாம போச்சே !!!
      நான் பட்டர்ப்பலை பார்க்கில் விதவிதமா எடுத்த புழு குட்டீஸ் இப்போவே அனுப்பறேன் பூஸாருக்கு

      நீக்கு
    3. @anjel: என்னாது இது? உங்கள் ப்ளாக் ஐ ஓபன் பண்ணலாம் என்றால் அழைப்பு இருந்தால்தான் திறக்க முடியுமாமே? ஒரு அழைப்பிதழ் அனுப்புங்கள்.

      நீக்கு
  11. கறிவேப்பிலை மரம் பார்க்க ஆசையாக இருக்கு.. என்ன அழகா வளருது. இங்கு ஒருவர் வீட்டுக்குள் குட்டி மரம் வைத்திருக்கிறார்கள். நம் வீட்டில் வராது இதெல்லாம்.

    அந்த வண்ணத்துப்பூச்சி இருப்பது அவரைக் கொடியிலா? அழகான பூக்கள் வந்திருக்கு.. நானும் ஸ்னோ பீஸ் நட்டு விட்டேன்.. பார்ப்போம் எத்தனை கிலோ பிடுங்கப்போறேன் என:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் இந்தக் கறிவேப்பிலையை மாமியார் வீட்டிலிருந்து சிறிய செடியாக அதே மண்ணுடன் எடுத்துக் கொண்டு வந்து இங்கு பராமரித்து பொத்திப் பொத்தி வளர்க்கிறேன் அதிரா. நான் கறிவேப்பிலைச் செடியைத் தண்ணீர் விட்டுக் கழுவும் போது இலைகள் மணக்கும்! அப்படி மணக்கும்...

      அந்தச் செடி அவரை இல்லை...அதிரா.....ஸ்னோ பீஸ் போட்டுருக்கீங்களா...ஆஹா...காய்த்ததும் படம் போடுங்கள்...அப்படியே இங்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்கள் ஹா ஹா

      நீக்கு
  12. //பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா!!!//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... நாங்கள் கமெராவுக்கு குட்பாய் சொல்லி ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு.. இப்போ எல்லாம் ஐபாட்டும் ஃபோனும் தான்:).

    இன்று இங்கு வண்ணத்துப்பூச்சி.. கோமதி அக்கா புறாக்குஞ்சு.. மனதுக்கு மிக இனிமை.

    அழகிய பதிவு தொடரட்டும் உங்கள் பணி.. ஆனா புழுக்கள் வேண்டாமே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... நாங்கள் கமெராவுக்கு குட்பாய் சொல்லி ரொம்ம்ம்ம்ம்ப நாளாச்சு.. இப்போ எல்லாம் ஐபாட்டும் ஃபோனும் தான்:).//

      ஹா ஹா ஹா ஹா எனக்கு என்னவோ கேமரா இருந்தால் தான் மனது சமாதானமாக இருக்கு. ஒரு வேளை என் மொபைல் சாதாரண மொபைல் பிக்சல் கம்மி என்பதாலோ என்னவோ தெரியலை...

      ஆமாம் கோமதிக்காவின் புறா குஞ்சுகள் செம அழகு க்யூட்....மனதிற்கு இதமா இருந்துச்சு...

      புழுக்கள் வேண்டாமே// சரி கூடியவரை போடாமல் இருக்கிறேன். ஆனால் இப்படியான பதிவுகள் போடும் போது அவையும் ஒரு பார்ட்டாகிவிடுமே...போட்டாலும் நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு அடுத்த படத்துக்குத் தாவிடுங்கோ...ஸ்ரீராம்கிட்ட கேளூங்க...எப்படித் தாவணும் என்று..பல நாட்கள் அவர் வீடு எபி க்குள்ளயே சுவர் ஏறித்தான் தாவி வருகிறார் ஹா அஹ ஹாஹாஹா

      நீக்கு
    2. //ஸ்ரீராம்கிட்ட கேளூங்க...எப்படித் தாவணும் என்று..பல நாட்கள் அவர் வீடு எபி க்குள்ளயே சுவர் ஏறித்தான் தாவி வருகிறார் ஹா அஹ ஹாஹாஹா//

      என்னிடமும் வால் இருக்கே:) மீயும் தாவுவேன்:) சரி நீங்க என்ன வேணுமெண்டாலும் போடுங்கோ மீ தாவிடுறேன்... அது என்னமோ தெரியல்ல கீதா சின்ன வயதிலிருந்தே நெளிஞ்சு நெளிஞ்சு ஊர்வன எனில் நின்ற இடத்திலேயே துள்ளுவேன்ன்... என்னால முடியவே முடியாது.. கார்டின் செய்யும் போது எப்பவாவது மண்புழு கண்ணில் பட்டிடும் எட்டிப் பாய்ஞ்சு ஓடிடுவேன் .. மற்றும்படி பல்லி ஓணான் பாம்பு... கரப்பானுக்கு கூட இந்தளவு பயப்பட மாட்டேன்ன்..

      நீக்கு
  13. ஒன்றரை வருஷமா செல் கேமிராவில் இருந்த பேப்பரை அகற்றவில்லையா? அடப்பாவமே... என்ன ஞானம்! இது மாதிரி விஷயங்களில் உங்களுக்கு நானும் குறைந்தவன் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா வாங்க ஸ்ரீராம் ஹைஃபைவ்!!! ஹை எனக்கு தோஸ்த் மற்றொரு அறிவுக் குழந்தை!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      மிக்க நன்றி நம்ம செட்டில் சேர்ந்ததற்கு ஹிஹிஹி

      நீக்கு
  14. வண்ண மலர்களினூடே வெள்ளை வண்ணத்துப்பூச்சி - அழகு. அதாவது மலர்களும் அழகு... வ.பூ யும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் ரொமப்வே ரசிக்கலாம் நீங்களும் ரசித்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  15. இலைகளைத் தின்று கொழுக்கும் புழு காரியவாதி! வேறெங்கும் போகாமல் அங்கேயே கூடு கட்டிக்கொண்ட அந்தப் புழுக்கள் சோமேபேறியா? சுறுசுறுப்பா? புத்திசாலிகளா? ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ...இப்படியும் சொல்லலாம் தான் இயற்கையின் விந்தைகளில் இதுவும் ஒன்றுதான் இல்லையா......போனால் போகட்டும்....

      நீக்கு
  16. இலைகளை சுருட்டி வைத்தது போல அழகாகக் கூடு கட்டிக் கொண்டிருக்கின்றன அவை.

    கேமிரா ரிப்பேருக்கு எவ்வளவு செலவாச்சு? நல்லாப் பண்ணிக் கொடுத்திருக்காங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிப்பேருக்கு 1300 செலவாச்சு ஸ்ரீராம்....லென்ஸ் எரர் பிரச்சனை...ரிப்பேராகி வந்ததும் கொஞ்ச நாள் ஓடியது மீண்டும் லென்ஸ் எரர் வந்தது அப்போது சார்ஜ் வாங்காமல் சரி பண்றேனு சொல்லி வாங்கி வைச்சுட்டாங்க....ஆனால் வந்த போது சரியாக மூடலை...ஸ்க்ரூ இல்லை. இருந்தாலும் யூஸ் பண்ணினேன். இப்ப ஒரேயடியா போயிருச்சு....அவங்கிட்ட சார்ஜ் வாங்காம செய்து தருவாங்கனா கொடுப்பேன் இல்லைனா அம்புட்டுத்தான்...பையன் யூஸ் பண்ணியது...அவனுக்கும் அது ஓசிதான் ஹா ஹா ஹா....அவன் காலேஜ் சேரும் போது நிறையப்பேர் சேர்ந்து வாங்கிக் கொடுத்தது. நார்மல் கேமராதான் நிக்கான் ஆனாலும் நல்லா இருந்துச்சு....எனக்கு இப்ப கை ஒடிஞ்சது போல...

      நீக்கு
  17. நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் கறிவேப்பிலை போட்ட எதையும் சாப்பிட மாட்டேன்பா... நான் ரொம்ப முன் ஜாக்கிரதையாக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹ...ஹையோ ஸ்ரீராம் இப்ப அது போய் நல்லா துளிர்த்து வந்துருக்கு பாருங்க புதுசா...கடைசி ரெண்டு படம் பாருங்க..இப்ப ரெண்டு நாள் முன்ன பதிவுக்காக எடுத்தது....இப்போ ஃப்ரெஷ்ஷாக்கும் தெரியுமா...நல்ல மணம்!!! ஹான் அப்புறம் நான் நல்லா கழுவி கழுவி தான் யூஸ் பண்ணுவேன் மட்டுமில்ல செடியையும் குளிப்பாட்டுவேனாக்கும்...ஹா ஹா ஹா

      நீக்கு
  18. நானும் அம்பத்தூர் வீட்டில் விருட்சிச் செடியில் இருந்த பட்டுப் பூச்சியைப் படம் எடுத்திருந்தேன் கூட்டையும் சேர்த்து! இதே மாதிரித் தான் போனதே தெரியலை! :))))) ரோஜா மொட்டு மலருவதைப் படம் எடுக்க முயன்றூ முடியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை கீதாக்கா ஹைஃபைவ்!!! அக்கா அந்தப் படங்கள் இருந்தா தேடி எடுத்துப் போடுங்களேன்...ஒரு பதிவும் தேருமே!! ஹா ஹா ஹா ஹா ரோஜா மொட்டு மலர்வதும் எடுப்பது கடினம் தான்..கீதாக்கா...மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  19. அருமையான பாடல்களுடன் பதிவு அருமை.

    என் தங்கை அடிக்கடி அறிவுக் கொழுந்து என்று குழந்தைகளை கூப்பிடுவாள்.!

    //அனிமல் ப்ளானெட் எல்லாம் செய்வது போல் அங்கே எப்போதும் ஓடும் கேமரா ஒன்றை வைக்க வேண்டும் போல! //

    வைத்தால் நன்றாக பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை கோமதிக்கா நீங்க கண்டுபிடிச்சுட்டீங்களே!! பாடல்கள் சொல்லியிருப்பதை!!!

      //என் தங்கை அடிக்கடி அறிவுக் கொழுந்து என்று குழந்தைகளை கூப்பிடுவாள்.! // ஹா ஹா ஹா

      வைத்தால் நன்றாக பார்க்கலாம்.// ஆமாம் கோமதிக்கா

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  20. //மகன் சொன்னான் பாவம் அம்மா. அதை ஒன்னும் செஞ்சிடாதே. சாப்பிட்டா சாப்பிடட்டுமே இப்ப என்ன? நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய்! மகனே! "ஒன்னும் செஞ்சிடாதே"?? உனக்குச் சொல்லிக் கொடுத்த எனக்கே பாடமா?”//

    எனக்கு மகன் அனுப்பினான் படங்கள், இங்கு நீங்கள் அனுப்பினீர்களா படங்களை உங்கள் மகனுக்கு?

    //பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா!!!//

    கைதட்ட வேண்டுமா? எனக்கு நிறைய விஷயங்கள் சிலர் சொல்லி தெரியுது, நீங்களே கண்டு பிடித்து விட்டீர்கள் அதற்கு கைதட்டுறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மகன் அனுப்பினான் படங்கள், இங்கு நீங்கள் அனுப்பினீர்களா படங்களை உங்கள் மகனுக்கு?//

      ஆமாம் அக்கா இங்கு இப்படி. அவனுக்கு இப்போது காலையில் 6....6.30 க்கு க்ளினிக் சென்றால் இரவு 10.30....11 சில சமயம் எமர்ஜென்ஸி இருந்தால் செல்லங்களைப் பார்த்துக்கணுமே...என்று இன்டெர்ன்ஷிப் இருப்பதால் ஞாயிறும் கூட ...கூடவே நிறைய படிக்கவும் வேண்டும்...அதனால் அவனிடமிருந்து இப்போது படங்கள் இல்லை...

      //கைதட்ட வேண்டுமா? எனக்கு நிறைய விஷயங்கள் சிலர் சொல்லி தெரியுது, நீங்களே கண்டு பிடித்து விட்டீர்கள் அதற்கு கைதட்டுறேன்.//

      ஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதிக்கா...சில சமயங்களில் பிறர் சொல்லித்தான் தெரியும் பல ...ஹா ஹா போனால் போகிறது இதில் என்னா ஆயிற்று இல்லையா...நமக்கு மீசை எல்லாம் கிடையாது ஹா ஹா ஹா ஹா

      மிக்க நன்றி கோமதிக்கா

      நீக்கு
  21. வண்ணத்துப்பூச்சி படம் அழகு.
    வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா....ஆமாம் கோமதிக்கா...நான் ரொம்பவே ரசிப்பேன். பல சமயங்களில் காஃபி குடிப்பது, டிஃபன் சாப்பாடு சாப்பிடுவது கூட ரூம் இலிருந்து பால்கனி செல்லும் அந்த ஒரு சிறிய படியில் அமர்ந்து செடிகள், வானம் மேகம் எல்லாம் பார்த்துக் கொண்டே காகம் வந்தால் அதற்கும் கொடுத்துக் கொண்டு அது தலையை திருப்பிப் திருப்பிப் பார்ப்பதை ரசித்து சாப்பிடுவேன்...சாப்பாட்டையும் தான்...ஹா ஹா ஹா ஹா நன்றாக இருந்தால் நானே எனக்குச் சொல்லிக் கொள்வேன்...ப்ரவால்ல கீதா நீ தேறிட்ட நல்லாவே செஞ்சுருக்கியே என்று..ஹா ஹா ஹா

      மிக்க நன்றி கோமதிக்கா

      நீக்கு
  22. இங்கு உங்கள் பதிவில் என் பதிவை குறிப்பிட்ட சகோ துரைசெல்வராஜூ , அதிரா இருவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா அவர்களுக்கும் நன்றி சொல்லிடுவோம்...

      நீக்கு
  23. அழகான படங்கள் கீதாக்கா...

    சூப்பர்..


    வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை படம் ரொம்ப அழகு...ரசித்தேன்..

    ஒரு வருசமா பாக்கலையா...அட..சரி விடுங்க இப்பயாவது பார்த்தோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு!!! படங்களை ரசித்தமைக்கு

      ஹா ஹா ஹா ஹா அதானே இப்பவாவது பாத்தமே!! லேட்டானாலும் லேட்டஸ்டா வந்துருவோம்...என்ன சொல்றீங்க அனு...ஹா ஹா ஹா

      நீக்கு
  24. படங்களும் அருமை. உங்கள் ரசனையையும் பாராட்டறேன். பால்கனி சிறிது என்று சொன்னாலும், அதில் மாமரம் ஒன்றுதான் வளர்க்கவில்லை, மற்ற எல்லாம் வளர்கிறது போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை...ரசித்தமைக்கு...பாராட்டிற்கு எல்லாத்துக்கும்

      ஹா ஹா ஹா ஹா ஹா...மாமரம் வளர்க்கலாம் ஆனால் பொன்சாய் மாதிரி வளர்க்க மனம் இல்லை. எல்லாம் வளர்க்கலை நெல்லை......சீமை பசலை என்றும் சைனா பசலை என்றும் சொல்லக் கூடிய கீரை நன்றாக வளர்கிறது. பிரண்டை வளர்கிறது. பூஷனி வளர்க்கிறேன் ஆனால் அது காய் காய்க்காயது ஏனென்றால் அது என் பெண் கண்ணழகிக்கு. பச்சை மிளகாய் வளர்ந்து பூத்திருக்கு. எலுமிச்சை வளருது. பார்ப்போம் வருதானு. பகற்காய் போட்டுருக்கேன் வருதானு பார்ப்போம்...

      நீக்கு
  25. வணக்கம் சகோதரி

    அருமையான அழகான படங்கள். வண்ணத்துப் பூச்சியை படமெடுத்து அதன் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக விளக்கி விட்டீர்கள் விளக்கிய விதங்கள் வெகு அருமை. எவ்வளவு அழகாக இலை மடித்து அதற்குள் வளர்ந்திருக்கின்றன.. இறைவன் ஒவ்வொரு உயிரையும் எப்படி பொத்தி, பொத்தி வளர்த்து விடுகிறான் இல்லையா? படைப்பின் ரகசியங்களே விந்தைதான். கல்லுக்குள் தேரை வைத்த கதையாய்...

    தங்கள் செல்லில் எடுத்த படங்களும் வெகு அழகு. அனைவருமே அனைத்தையுமே கற்று தேர்ந்திட இயலாது. எனக்கு இப்போதுதான் செல்லில் படமெடுப்பது, வாட்சப் பற்றி விவரங்கள் போன்ற பல விஷயங்கள் என் குழந்தைகள் கற்றுத் தருகிறார்கள்.
    தாங்கள் பேப்பர் இருப்பதை கண்டுபிடித்து தெளிவாக படமெடுத்ததற்கு வாழ்த்துகள்.
    நானாக இருந்தால் எத்தனை காலம் அப்படியே வைத்திருப்பேனோ?

    கறிவேப்பிலை செடி தொட்டியில் வளருமா? அம்மா வீட்டில் பெரிய மரமே இருந்தது. மண் தரையில்தான். தொட்டியில் அவ்வளவாக வராது என நர்ஸரியில் விசாரித்த போது சொன்னார்கள். எனக்கும் செடிகள் வளர்க்க விருப்பம். இடந்தான் இல்லை. பதிவு மிக அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா சகோதரி! கருத்திற்கு. எப்படியோ இது விடுபட்டு விட்டது மன்னிகக்வும் சகோதரி. இயற்கையின் படைப்பின் ரகசியங்களே விந்தைதான் ஆமாம் சகோதரி.

      படங்களைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி. //எனக்கு இப்போதுதான் செல்லில் படமெடுப்பது, வாட்சப் பற்றி விவரங்கள் போன்ற பல விஷயங்கள் என் குழந்தைகள் கற்றுத் தருகிறார்கள்.//

      நானும் ஒவ்வொன்றாகத்தான் கற்று வருகிறேன். //நானாக இருந்தால் எத்தனை காலம் அப்படியே வைத்திருப்பேனோ?// அப்படி எல்லாம் இல்லை சகோதரி...கற்கும் வேளை வரும் போது கற்றுவிடுவோம்....necessity is the mother of invention. இல்லையா..

      கறிவேப்பிலை தொட்டியில் வருகிறது சகோதரி. மண் தரையில் என்றால் பெரிதாக வரும். இதோ இப்போது நான் தொட்டியில் வைத்திருப்பது பூத்துவிட்டது. சிறியதாக நன்றாக அடர்த்தியாக வருகிறது. ஆனால் நான் பயன்படுத்தும் அளவு அதிகம். என்பதால் இச்செடி எமர்ஜென்ஸிக்குத்தான். கடையிலும் வாங்கும் நிலைதான்.

      மிக்க நன்றி கமலா சகோதரி தங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. பழக்க தோஷத்தில் ரிவர்ஸ்ல வந்து விழுந்து விழுந்து சிரிச்சேன் :)
    நமக்கு தெரிஞ்ச ஒருத்தங்க குக்கருக்குள்ள விசில போட்டுட்டு வீடெல்லாம் தேடி அலுத்து போனாங்க :) ஹாஹாஆ இது எவ்ளோ பரவால்ல


    கருவேப்பிலை செடி பட்டர்ப்லை பேபிஸுக்கு சாப்பாடு போட சொன்ன மகன் போலத்தான் என் பொண்ணும் :)
    நாலஞ்சி வயசில் எந்நேரமும் இப்படி புழு பூச்சிகளை சட்டை frock பாக்கெட்டில் போட்டுட்டு வருவா அவங்கம்மா மாதிரியே :)
    தோட்டத்தில் இருக்கிற எறும்பு கூட்டம் வீட்டுக்குள்ள வரும் இவங்க உபயத்தில் :) ஒருதரம் பார்த்து அலறிட்டேன் துணி அலமாரியில் லார்வா வச்சி இருக்கா :)
    வாட்ச் செய்யணுமாம் பட்டர்ப்பலை வெளில வரத்தை :)
    இப்படி நத்தைகளையும் பெட்டியில் வச்சிருந்தா :)
    எங்க வீட்டில் இப்பவே பூ செடி விதைகளை தூவிட்டேன் சம்மருக்கு வண்ணத்து பூச்சீஸ் வருகைக்கு தயார் .
    ஜெஸ்ஸி தான் துரத்துவா ! ஆனாலும் வருவாங்க கலர் பேபீஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///Angel10 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 11:46
      இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.///

      எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ:).. இதில் இவ என்ன எழுதினா?:) எந்த ஆசிரியர் வந்து அகற்றினார்ர்ர்ர்ர்ர்ர்?:)).. இல்லை எனில் ஜின்ஞரிடம் சொல்லிக் குடுப்பேன்ன்:))

      நீக்கு
    2. //நமக்கு தெரிஞ்ச ஒருத்தங்க குக்கருக்குள்ள விசில போட்டுட்டு வீடெல்லாம் தேடி அலுத்து போனாங்க :) ஹாஹாஆ இது எவ்ளோ பரவால்ல///

      இதுகூடப் பறவாயில்லை.. எனக்கு இப்போதான் நினைவு வருது.. என் தையல் மெசினில் ஒரு சிறிய பகுதியைக் காணம்:)).. அறை எல்லாம் தேடி தட்டிக் கொட்டி.. எங்கும் இல்லை.. சரி எங்கோ வெளியே போயிட்டுதென... ஒன்லைன் எல்லாம் தேடினேன் எங்கும் அந்தப் பார்ட் இல்லை, பின்பு கனடா மொன்றியலில் அகொம்பனி இருக்கு என இருந்துது .. நம்பர் தேடி எடுத்து அடித்தேன்.. அவர்கள் சொன்னார்கள் தம்மிடம் அந்த பார்ட் இல்லை நீங்க ஓன் லைனிலதான் தேடி வாங்கோணும் என..

      இனி எந்த ஒன்லைனில் தேடுவது என விட்டுப்போட்டு... திரும்பவும் தேடலாம் என மெசினுக்கு அருகில் போனால்.. அப் பார்ட் கழரவே இல்லை மெசினிலேயே இருந்துது ஹையோ ஹையோ:)).. இது போன வருடம் நடந்தது.

      நீக்கு
    3. //துணி அலமாரியில் லார்வா வச்சி இருக்கா :)
      வாட்ச் செய்யணுமாம் பட்டர்ப்பலை வெளில வரத்தை :)
      இப்படி நத்தைகளையும் பெட்டியில் வச்சிருந்தா :) //

      ஐயோ.... இன்னும் எந்தெந்த இடத்தில் என்னென்ன இருக்குன்னு அப்பப்போ பார்த்திருக்கணும் போலவே...!!!!

      நீக்கு
    4. ஏஞ்சல் வாங்க வாங்க! உங்களை ரொம்பவே எதிர்பார்த்தேன் பட்டர்ஃப்ளை பேபிஸ் பதிவாச்சே....ஹையோ நீங்க சொல்லிருக்கற அத்தனை லூட்டியும் நானும் என் மகனும் சேர்ந்தே செஞ்சுரூக்கோம். என் பையன் எள்ளுனா எண்ணெயா நான் நிப்பேனாக்கும். அவன் ஒரு எறும்பை வாச் பன்றான்னா நான் உடனே சாக்கலெட் அல்லது சர்க்கரை ஏதாவது தின்பண்டத்தை ரெடியா அவன் கிட்ட கொடுப்பேன் உடனே அவன் சொல்லுவான் அம்மா நான் இதைத்தான் கொடுக்கணும்னு நினைச்சேன் பாவம் பாரு எறும்பு என்று சொல்லிப் போடுவான் உடனே வரும் பாருங்க எங்கருந்து வருமோ அத்தனையும் வரிசையா வீட்டுக்குள்ள வரும்...அது போல குட்டி குட்டி பூச்சிகளோட முட்டைகளைக் காப்பாத்தறேன்னு நத்தை எல்லாம் வீட்டுக்குள்ள...பல்லி முட்டையை பாதுகாப்பது...என்று ஏகப்பட்டது. கரப்பான் பூச்சியைக் கூட கொல்லாமல் வீட்டை விட்டு ட்ரெய்னேஜுக்குள்ள இருக்கட்டும் கொன்னுடாத என்பான்..

      மிக்க நன்றி ஏஞ்சல் உங்கள் பெண்ணை ரொம்ப ரசித்தேன்..

      நீக்கு
    5. குக்கருக்குள்ள விசில் ஹா ஹா ஹா ஏஞ்சல் நானும் இப்படித் தேடியதுண்டு...அதிரா ஹா ஹா ஹா ஹா நீங்கள் என் செட்டுதானா...ஸ்ரீராம் கூட நம்ம செட்டுத்தான் ஹைஃபைவ் போட்டுக்குவோம் என்ன...ஹா ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. வணக்கம் சகோதரி

      பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாய் இருக்கிறது. குக்கருக்குள் விசில் போட்டு விட்டு தேடிய கதை... ஹா ஹா ஹா ஹா சுவாரஸ்யம்.

      பாகல் கொடி வகை இல்லையா? எப்படி படர்கிறது? நானும்் வைத்தேன். சரிபான பராமரிப்பு இல்லை. ஒரே ஒரு காய் மட்டும் எனக்காக காய்த்துள்ளது.

      தங்களின் செடி வளர்க்கும் ஆவல் பார்க்க கேட்க இனிமையாய் உள்ளது. உங்களிடம் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. ஹா ஹா ஹா ஹா ஆமால் எங்கள் ஊரில் சொல்லுவது "ஒக்கல்ல (இடுப்பு) பிள்ளைய வைச்சுக்கிட்டு ஊரெல்லாம் தேடினாளாம்..." நானும் இப்படிக் குக்கருக்குள் விசிலை விட்டு தேடியதுண்டு...அதை ஏன் கேக்கறீங்க...

      பாகல் கொடி வரும். ஆமாம் பராமரிப்பு தேவை. கொடி கட்டுவது என்று.

      // உங்களிடம் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். // சகோதரி நானே கற்றுக் குட்டி...ஒவ்வொருவரிடமும் நான் கற்றுக் கொண்டு வருகிறேன்...நீங்கள் இப்படிச் சொல்லியிருப்பது மகிழ்வாக இருந்தாலும்....நானும் கற்றுக் குட்டிதான்..

      கீரை முதல் விளைச்சல் மிக மிக நன்றாக வந்தது. ஆனால் அப்புறம் போட்டவை வரவில்லை.

      கீதா

      நீக்கு
  28. இயற்கை அழகே அழகு,தோட்டம் சிறியதாய் இருந்தால் என்ன,
    பெரியதாய் இருந்தால் என்ன,தோட்டம்தோட்டம்தானே,,,?
    புளுபூச்சிகள் அண்டி வாழவும் இடம் வேண்டும்தானே,
    ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்க்கை,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விமலன் சகோ தங்களின் கருத்திற்கு...
      ஆமாம் புழு பூச்சிகளும் வாழத்தானே வேண்டும். ஒன்றை ஒன்று சார்ந்தத்துதான் வாழ்க்கை ஆம் சகோ...மிக்க நன்றி அழகான கருத்திற்கு

      நீக்கு
  29. என் புள்ளையைக் கருவேப்பிலைக் கொத்து மாதிரி வளத்தேன் ..... (காமெடியையும் சேர்த்துச் சொல்கிறேன் )இப்பதான் இதுக்கு அர்த்தம் புரிஞ்சுது .
    பாடல்கள் +போட்டோ அழகு . பதிவும் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அருணா....ஹா ஹா ஹா ஹா..

      .அழகே அழகு எல்லாம் அழகு நு சொன்னதுக்கு மிக்க நன்றி....

      நீக்கு
  30. குழந்தைகளின்மூலமாக நாம் கற்போது அதிகம் அதிலும் பயனுள்ளவையே.

    பதிலளிநீக்கு
  31. யாஷிகா காமெராவின் லென்ஸ் கவரை எடுக்காமல் க்ளிக் செய்தவர்கள் இருக்கிறார்கள் கீதா. நான் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான படங்களை எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  32. கருவேப்பிலையை நாட்கணக்கில் உத்து உத்துப் பார்த்துக்கொண்டிருந்ததைப்போல இல்லாவிட்டாலும், வாங்கிய புதிதிலாவது அந்த அப்பாவி மொபைலை முன்னேபின்னே திருப்பிக் கொஞ்சம் உத்துப் பார்த்திருக்கலாமே! அது என்ன அப்படி ஒரு பாவம் செய்துவிட்டது? புரியாமத்தான் கேக்குறேன்..!

    பதிலளிநீக்கு