வியாழன், 24 மே, 2018

காலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்


1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் இந்நாவலை எழுதி முடிக்கத் தைரியம் தந்தது.


அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸில் எழுதிய இடுகையின் சுட்டிதான் இது. அந்தப் பதிவும் இந்த புதினத்தில் வரும் ஒரு காதாபாத்திரத்திற்கு இணையான முக்கியமான பங்கு வகிக்கிறது. அதை, நீங்கள் இந்தப் புதினத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

பரிதாபத்திற்குரிய தாயைத் தாரமாக்கிய ஈடிபஸின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது போன்ற சம்பவங்கள் அரிதிலும் அரிதாய் நிகழ்கின்ற ஒன்றுதான். என்றாலும் எல்லோரும் அது போன்ற கசக்கும் உண்மைகளைக் கண்டும் காணாமலிருக்கத்தான் விரும்புகிறார்கள். அப்படி, காலம் செய்யும் கோலத்தால் சீரழிந்து போகின்றவர்கள் செத்துத்தான் போக வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் விருப்பம்.

அதனால்தான் பல இடங்களில் கயவர்களால் கற்பு சூறையாடப்படும் அப்பாவிப் பெண்கள் போராட பயந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். போராடும் ஒரு சிலரோ போராடி வெற்றி பெற்றாலும், அதன் பின் சாதாரண வாழ்க்கை வாழவியலாமலும் பெரும்பான்மையினரின் இகழ்வைத் தாங்க முடியாமலும் தலைமறைவாகி விடுகிறார்கள். இவ்விரண்டிலும் தங்களை நுழைத்துக் கொள்ள முடியாத பெரும்பான்மையினர் மனநோயாளிகளாய் மாறி நடைபிணமாகி நம்மிடையே வாழ்கிறார்கள்.

இப்படி, தான் இழைக்காத குற்றதிற்காக யாரும் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை என்ற கருத்தை வலியுறுத்தத்தான் இப்புதினம். பசி, , காதல், பேராசை, பொறாமை, அக்கிரமம், அநீதி , கடின உழைப்பு, தியாகம், நட்பு, நேர்மை போன்றவற்றைப் பற்றிய நல்ல புதினங்கள் எத்தனையோ இருக்கின்றன. அதனிடையே, இது போன்ற கேள்விக்குறியாய் வாழ வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்வதற்குத்தான் இப்புதினம்.

“அளவிலா விளையாட்டுடைய இறைவா! நீயின்றி ஓரணுவும் அசையாது”. எனவே, இது போன்ற சம்பவங்கள் நிகழக் காரணமாகும் காலம் செய்யும் இக்கோலங்களுக்கும் காரணம் நீயே. இது நீ செய்யும் குற்றமேதான். அதனால் தான் கவிஞரின் வரிகளை கடனெடுத்து இந்நாவலின் தலைப்பாக்கி இருக்கிறேன்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் போது மனத்திரையில் நம் இதயத்தை நடிப்பாற்றலால் கொள்ளை கொண்ட திரு சிவகுமார், திருமதி சுமலதா, அமரர் மனோரமா, திரு அஜித், திருமதி ஊர்வசி, அமரர் முரளி போன்றவர்கள் வந்து போனதால்தான் அவர்களைப் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறேன்.

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எனக்கு, உறுதுணையாய் நின்று அக்கதாபாத்திரங்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து அவர்களை நம்மிடையே வாழ வைத்திருக்கும் திருமிகு தமிழ்செல்வனுக்கும் (தமிழுக்கு) எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. 

உரை எழுதித் தந்த முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, திருமதி தேனம்மை, திரு ராய செல்லப்பா ஸார் மற்றும் நூலழகு செய்த திரு பாலகணேஷ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



வரும் ஜூன் 17, ஞாயிறு அன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் (இந்தியா கேட் வடிவில் இருக்கும் கட்டிடத்தின் அருகே) மாலை 5 மணிக்கு, “காலம் செய்த கோலமடி”யின் புத்தக அறிமுக நிகழ்வு நடக்கவிருக்கிறது. திரு பாலகணேஷ் அவர்கள் அறிமுகப்படுத்த புத்தகத்தைப் பெறுபவர் திரு அரசன்.

திரு ராயசெல்லப்பா, திரு வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), திரு குடந்தை ஆர் வி சரவணன், திரு ஆவி, திரு கார்த்திக் சரவணன், திரு அரசன் உள்ளிட்டோர் புத்தகத்தைப் பற்றி அவர்கள் கருத்துகளைப் பகிர்வார்கள். இந்நிகழ்வு புத்தக வெளியீடு என்பதை விட புத்தக அறிமுகம், ஒரு பார்வை என்று கொள்ளலாம்.

----அன்புடன் துளசிதரன்



வியாழன், 10 மே, 2018

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே!

அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள். இதோ கீழே உள்ள படத்தில் போன்றவை.

இது என் பால்கனி தோட்டமல்ல! நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் சீசனின் போது எடுத்தது. 

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுபூச்சியக்காக்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்று கறிவேப்பிலையைச் சுற்றி சுற்றிப் பறந்திட, கறிவேப்பிலை, ஏன்? சுத்தி சுத்தி வந்தீகனு கேட்டது. வாச கறிவேப்பிலையே என்ற வண்ணத்துப் பூச்சிகள் கறிவேப்பிலையின் மீது அமர்ந்தன. வண்ணத்துப் பூச்சிகளைப் புகைப்படம் எடுக்க ஆசை இருந்தாலும் அருகில் சென்றால் அவை இலையின் மீது அமராமல் பறந்துவிடும் பாவம் என்று புகைப்படம் எடுக்கவில்லை.

சிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால் கறிவேப்பிலை செடியில் கரும்பச்சை நிறத்தில் புழு ஒன்று தென்பட மற்றொரு புழு இலையின் அடியில் இருந்தார். கேமரா ரிப்பேருக்குப் போயிருந்ததாலும் மொபைலில் படங்கள் சரியாக வருவதில்லை அதன் கேமராவில் ஏதோ பிரச்சனை போலும் என்று நினைத்துவந்ததாலும் படம் எடுக்காமல் இருந்த நான் இதனை வந்தது வரட்டும் என்று எடுத்தேன். நன்றாக வரவில்லை என்று தெரியும். மொபைலில் கேமராவில் என்ன பிரச்சனை? காரணம் பதிவின் முடிவில்!!! ரொம்ம்ம்ம்ப அறிவுக் கொழுந்து நான் என்பது புரியும்!! 

இதோ அம்புக் குறி இட்டுக் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதுதான் முதலில் வந்த கரும்பச்சை நிறப் புழு(க்கள்.) கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான் தெரிவார். மற்றொருவர் புகைப்படத்தில் சரியாக வரவில்லை. அதனால் இங்கில்லை


தினமும் பார்த்தாலும் அத்தனை வித்தியாசம் டக்கென்று தெரியவில்லை. 4, 5 நாட்களில் பார்த்தால் அசந்துவிட்டேன் வியப்பில். கண்ணிற்கு எதுவும் புலப்படவில்லை. புழுக்கள் என்ன ஆனார்கள்? என்று பார்த்தால் கொழு கொழுவென்று பச்சையோடு பச்சையாக இலைகளில் உட்கார்ந்து கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இலைகளைக் காணவில்லை. என்ன அழகாய் கொழு கொழுவென்று இருக்கிறார்கள் பாருங்கள்!! கேமரா என்றால் இன்னும் நன்றாக, அழகாகத் தெரிந்திருப்பார்கள். இருந்தாலும் க்ளிக்கினேன்.

அவற்றை ரசித்தேன் ரசித்தேன். அதன் அழகை ரசித்துக் கொண்டே இருந்தேன். அவை நகர்வதே தெரியவில்லை. சரி அவை சுதந்திரமாகத் தின்னட்டும் என்று படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன். மகனுக்கும் அனுப்பினேன். இந்தப் படங்களைத்தான்!! 

மகன் சொன்னான் பாவம் அம்மா. அதை ஒன்னும் செஞ்சிடாதே. சாப்பிட்டா சாப்பிடட்டுமே இப்ப என்ன? நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய்! மகனே! "ஒன்னும் செஞ்சிடாதே"?? உனக்குச் சொல்லிக் கொடுத்த எனக்கே பாடமா?”


அடுத்த 4 தினங்களில் பார்த்தால் நான் வியப்பின் உச்சியில். எல்லா இலைகளையும் நன்றாகத் தின்று செடியை மொட்டை அடித்து இருந்ததைப் பார்த்ததும், கேமராவும் ரிப்பேர் சரியாகி வந்திருந்ததால் உடனே க்ளிக்கிவிட்டேன். அப்போது இந்தக் கொழு கொழு பச்சையான புழுக்களைக் காணவில்லை. எங்கே போனார்கள்?

பாருங்கள் எப்படி சாப்பிட்டுருக்கிறார்கள் கமுக்கமாய்! ஹா ஹா ஹா

என்னாச்சு மீண்டும்? காகம் வந்து கொத்திக் கொண்டு சென்றுவிட்டதா? என்று தோன்றிட கறிவேப்பிலையை ஆராய்ந்தால் ஆஹா! அவை இலையையே கூடாரம் போல் கூடு கட்டிக் கொண்டு கருவறையாக்கிக் கொண்டுவிட்டன. இது எப்படி செய்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. அவை எப்போது செய்யும் என்று தெரியவில்லையே! அனிமல் ப்ளானெட் எல்லாம் செய்வது போல் அங்கே எப்போதும் ஓடும் கேமரா ஒன்றை வைக்க வேண்டும் போல!   

எப்படி இருக்கிறது பாருங்கள். புழு இருப்பது தெரிகிறதல்லவா? இலையையே கூடாரம் போல் செய்து கருவறையாக்கிக் கொண்டு!!!
இது மற்றொருவரின் கருவறை


சரி அடுத்து எப்படியும் வண்ணத்துப் பூச்சி வருமே அதைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து.....!காத்திருந்தேன். என்று எப்போது ப்ரௌன் நிறமாகியதோ? பச்சை ப்ரௌன் நிறமாகியிருந்தது. உள்ளுக்குள் இருக்கா என்றும் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்த்து அதற்குத் தொந்ததரவு கொடுக்க வேண்டாமே என்று தோன்றிட விட்டுவிட்டேன். நாள் பார்த்தால் கூடு வெற்றிடமாகத் தோல் மட்டும் இருந்தது போல் தோன்றிட தொட்டுப் பார்த்தேன். வெறும் கூடு மட்டுமே இருந்தது. வண்ணத்துப் பூச்சி பிறந்து பறந்து போய்விட்டது போலும். வண்ணத்துப் பூச்சி வெளியில் வருவதைப் பார்க்க இயலவில்லை என்று. வருத்தமாகிவிட்டது! அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!! ஹா ஹா ஹா…  

கூடு மட்டும். பூச்சியைக் காணவில்லை

ஓ! பட்டர்ஃபளை பட்டர் ஃப்ளை! ஏன் விரித்தாய் சிறகை!

இந்த வருடம் சீசன் தொடங்கட்டும்! விடுவேனா? இம்முறை என் கறிவேப்பிலை பூக்கத் தொடங்கிவிட்டது! எனவே வண்ணத்துப் பூச்சிகள் நிச்சயமாக வரும். இம்முறை ஆதியிலிருந்து எடுத்திட வேண்டும். விடமாட்டேன்! விடமாட்டேனாக்கும்!! 

  மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலை. (பொத்தி வைச்ச கறிவேப்பிலை மொட்டு!!!) இரவில் எடுத்த புகைப்படம். நேற்று ஒரு சிறு குளியல் அவளுக்கு

இது பகலில் எடுத்தேன் மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலையை. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இல்லையா? குளித்தும் அதற்குள் தூசி படிந்து அழுக்காகிவிட்டாள். குளிப்பாட்ட வேண்டும். பூ பூக்கும் ஓசையைக் கேட்கக் காத்திருக்கிறேன்

தற்போது என் கேமரா முழுவதும் பழுதடைந்துவிட்டது. எனவே மொபைலில் தான் எனது மூன்றாவது விழி படங்கள் எல்லாம் எடுக்கிறேன். இதோ இந்த கடைசி இரு படங்களும் மொபைலில் தான் எடுத்தேன். கேமரா இல்லாதது ஏதோ போல இருக்கு. மொபைலில் சில நன்றாக வருகின்றன. சில படங்கள் நன்றாக வருவதில்லை. என் மொபைலும் மொபைல் கேமராவும் அத்தனை ஹை டெக் இல்லை.

என் மொபைல் கேமராவில் என்ன பிரச்சனை இருந்தது? மொபைலில் கேமரா சரியில்லை படங்கள் எல்லாம் ஏதோ புகை மூடியது போல வருகிறது என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் திடீரென்று மூளையில் பல்பு எறிந்திட கேமராவை பார்த்தால்.....அதன் மேல் ஏதோ இருப்பது போல் புலப்பட.....அறிவுக் கொழுந்தே புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டிர்யிருப்பாங்க அதுகூடவா உனக்குத் தெரியாது? தெரியலை? அதை ஒன்றரை வருஷமா அகற்றாமலேயே இருந்திட்டு மொபைல் கேமரா சரியில்லை சரியில்லை அப்படினு புலம்பிக்கிட்டு...என்னா அறிவு!! ஹிஹிஹிஹிஹி!!! பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா!!!

-------கீதா



வியாழன், 3 மே, 2018

மனதைக் கலங்கடித்த காணொளி


இன்று காலையில் வெங்கட்ஜி அவர்களின் பதிவாகிய மனதை விட்டு அகலாத காட்சி… யை வாசித்துவிட்டு வேதனைப்பட்டு அங்கு நான் கொடுத்திருந்த கருத்து இதுதான். மாமியார் மருமகள் சண்டை, இப்படி அடிப்பது துரத்துவது எல்லா இடங்களிலும் ப்ரவலாகக் காணப்படும் ஒன்று என்றாலும் கூட இங்கு விட வட இந்தியாவில் ரொம்பவே அதிகமாக நடக்கும் போலத் தெரிகிறது....பாவம் அக்குழந்தை. இந்த அனுபவங்கள் அக்குழந்தைக்கு நல்ல பாடங்களைப் புகட்டினால் நல்லது. வேதனைதான். 

அதை வாசித்து வேதனைப்பட்டு கருத்து அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு வீடியோ ஒன்று வந்தது. இது எங்கு நடந்த சம்பவம் என்று தெரியவில்லை என்றாலும் எங்கள் ஊரில் செய்திகளில் முதன்மையாகப் பேசப்பட்ட கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவமும் வேதனை அளித்தது. வெங்கட்ஜி எழுதியிருந்த நிகழ்வே வேதனை என்றால் இது அதைவிடக் கொடுமையானது. மனதை மிகவும் பாதித்த ஒன்று. காணொளியை இணைத்துள்ளேன். உங்களுக்குப் பார்க்கும் மன தைரியம் இருந்தால் பாருங்கள்.  

எனக்கு அந்தக் காணொளியை முழுவதும் பார்க்க இயலவில்லை. கொஞ்சம் பார்த்ததுமே மனம் வேதனை அடைந்திட கண்ணில் நீர் நிறைந்து கோபம் தலைக்கேறியது. இப்படிப்பட்டவர்கள் நாளைக்கு அவர்களின் குழந்தைகளால் அடித்துத் துன்புறுத்தப்படுவார்கள்தானே என்றும் தோன்றியது. எத்தகையக் கொடுமைக்காரியாக இருந்திருக்க வேண்டும் அப்பெண்? மனதில் கொஞ்சம் கூட ஈவு , இரக்கம் இருந்திருக்காதா? இப்படியானவர்களை என்ன செய்யலாம்? 

பாலக்காட்டில், புதுப்பரியாரம் எனும் இடத்தில் 80 வயது மூதாட்டி தன் சொத்தைத் தன் மகனின் பெயரில் மாற்றிய பின் மருமகள் அத்தாய்க்கு உணவு சரியாகக் கொடுக்காமல், அடித்துத் துன்புறுத்துவதை அருகில் இருந்தோர் ரகசியமாக வீடியோ எடுத்து வீடியோவை வைரலாக்கிட, செய்தி பரவியது இந்தக் காணொளி பாலக்காட்டில் நடந்த சம்பவத்தின் வீடியோ இல்லை ஆனால் வேறு எங்கோ நடந்தது என்றாலும் பாலக்காட்டிலும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் நடந்தது. அதுவும் செய்திகளில் வந்தது.

படுக்கையில் இருக்கும் மாமியார் கழித்த மலத்தை அவர் மகன் எடுத்துச் சுத்தம் செய்யலை என்றும் மாமியார் சொன்னபேச்சு கேட்கவில்லை என்பதற்கும் அடிக்கிறார்களாம் அப்பெண். 

நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்றும். நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்றும் தான் பிரார்த்திப்போம். ஆனால் இந்தக் காணொளியைச் சிறிது கண்டதுமே இறைவனிடம், அந்த ஜீவனுக்கு விடுதலை அளித்துவிடு. இங்கு இப்படித் துன்புறுவதை விட இக்கொடுமையிலிருந்து காப்பாற்றிவிடு என்று பிரார்த்திக்கத் தோன்றியது.  கருணைக் கொலை பற்றி இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதை மனம் ஏற்க முடியாத நிலையில் இப்படியானவற்றைப் பார்க்க நேரிடும் போது இப்படிப் பாவப்பட்ட ஜீவனாக வாழ்வதை விட மரணம் அடைவதே மேல் என்று தோன்றத்தான் செய்கிறது. நம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையில் இப்படியான எண்ணங்கள் தோன்றுகிறது.

எங்கள் ஊரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு எப்படியோ தற்போது ஊடகங்கங்களும் அதை வெளியிட இப்போது, அவ்வூர் பஞ்சாயத்து, எம் எல் ஏ, சமூக நலச் சங்கங்கள் எல்லாம் கூடி விட்டதாகத் தெரியவந்தது. நல்லதொரு வழி பிறக்கும் என்று தோன்றுகிறது. அம்மூதாட்டி இக்கொடுமையிலிருந்து விடுதலை அடைந்து நல்ல முறையில் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

இப்படி மருமகள் மாமியாரைக் கொடுமைப்படுத்துவதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறதாம். மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துவதையும் நாம் அவ்வப்போது கேள்விப்படத்தான் செய்கிறோம். இப்படிக் காலம் காலமாக நடந்து வரும் மாமியார் மருமகள் பிரச்சனை, கொடுமை இவற்றிற்கு முடிவே பிறக்காதா? இல்லையா என்று தோன்றுகிறது. 


பகிரப்பட்ட காணொளி வேறு ஆனால் கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவம்தான்...பாலக்காட்டிலும்.... மன திடம் இருந்தால் பாருங்கள்

----துளசிதரன்



வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்


பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில் சக கைதிகளாலும், அதிகாரிகளாலும் நேசிக்கப்படும் மிக நல்ல உள்ளம் கொண்ட அலெக்ஸை அவரது மகன் வெறுக்கிறான். அலெக்ஸ் சிறைக்கு வரக் காரணம் என்ன என்ற மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர் பரோலில் வெளியே வந்து எப்படி தன் உறவினர், சுற்றத்தினரை எதிர்கொண்டு முடிச்சுகளை அவிழ்க்கிறார் என்பதுதான் கதை என்று சொல்லப்படுகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

சரி அப்படியானால் எதற்கு இதைப் பற்றி? வேறு ஒன்றுமில்லை. இப்படி மெகா ஸ்டார் மம்முட்டியின் படத்தைச் சொல்லி, சிறு இடைவெளியில் 6 வருடங்களுக்கு முன், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், சாமானியனான நான் எங்கள் குழுவின் உதவியுடன் எடுத்த பரோல் எனும் குறும்படத்தைப் பற்றியும் (இங்கு முன்பு சொல்லியிருந்தாலும்) இப்போது இங்குச் சொல்லி, பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற ஒரு சிறு விளம்பரத்திற்காக என்றும் சொல்லிக் கொள்ளலாம்!

எனது குறும்படத்தில் சொல்ல முயற்சி செய்திருப்பது இதுதான். நொடிப் பொழுதில் குற்றம் புரிந்துவிட்டுப் பின்னர் அதற்காக வருந்தி, உறக்கத்தைத் தொலைத்து தவிக்கிறார்கள் பெரும்பான்மையான கைதிகள். செய்த குற்றத்தினால் அவர்களின் மனசாட்சி அவர்களை வதைத்துவிடுகிறது. சிறைத் தண்டனையை விட அவர்களின் மனசாட்சி அவர்களின் உறக்கத்தைப் பரித்து அவர்களை வதைப்பது மிகப் பெரிய தண்டனையே. இதைப் பெரும்பான்மையான கொலையாளிகள் தங்கள் சக கைதிகளிடம் சொல்லி அரற்றுவார்கள் என்பதையும் கேட்டதுண்டு. குற்றம் புரிந்த நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்!

அப்படித் தாங்கள் செய்த தவற்றை நினைத்து மருகி, திருந்தி வருபவர்களை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லைதான். மாற்றுத் திறனாளிகளையும், மனநோயாளிகளையும் கண்டு இரக்கப்படும் நாம், ஒரு சில நொடித்துளிகளில் உணர்ச்சிவசப்பட்டுக் குற்றம் இழைத்துச் சிறைக்குச் சென்று அப்புறம் வருந்தித் திருந்தி வெளியில் வந்தாலும் அவர்களின் மீதான நம் பார்வை வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நாம் அவர்களை ஏற்கத் தயங்கத்தான் செய்கிறோம். இவர்களும் ஒரு வகையில் மன ஊனம் அடைந்தவர்கள்தாம்.

உடலில் ஏற்படும் நோய் குணமாக நாம் அதற்கான காலம் கொடுத்து அந்நோயைக் குணப்படுத்துவது போல நொடியில் உணர்ச்சிகள் பிறழ்வதால்  மனதில் ஏற்படும் இவ்வகையான ஊனம் குணமாக அவகாசம் கொடுப்பதில்லை. அவர்கள் திருந்தி, அவர்களுக்கு உரிய தண்டனையை அனுபவித்த பிறகு அக்காலம் முடிந்து வெளியில் வரும் போது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் ஏற்றுக் கொண்டு நல்வழிப்படுத்தி அவர்களும் இச்சமூகத்தில் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட உதவிடலாமே. அவர்களும் இச்சமூகத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டுதானே! அவர்களது வாழ்க்கையிலும் வெளிச்சத்தை இச்சமூகம் கொண்டுவரவேண்டும் என்பதே படத்தின் கரு.

20 நிமிடப் படம் தான். ஆனால் இரு பாகமாக இருக்கிறது. தங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன்.இதோ படத்திற்கான காணொளிகள். மிக்க நன்றி. 



------துளசிதரன் 

எல்லோருக்கும் எங்கள் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!




வியாழன், 15 மார்ச், 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 4


முந்தைய பகுதிகளின் சுட்டிகள்….


பாறைகள் நிறைந்த பகுதியின் தொடர்ச்சியும், கடப்பாறைப் பகுதியும், கோயிலை அடையும் பகுதியும் அடுத்த பதிவில்…என்று சென்ற பகுதியை முடித்திருந்தேன். இதோ அப்பகுதிகளின் படங்களும் அதன் கீழேயே விளக்கங்களும்.

சனி, 24 பிப்ரவரி, 2018

2 கிலோ அரிசி + 100 கிராம் மல்லிப் பொடி = மரணம்

பிஎஃப் கணக்கை முடிப்பதில் ஏற்பட்ட சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய புதுநகரம் பள்ளிக்கு என் இருசக்கர வாகனத்தில் (பைக்கில்) சென்ற போது வழியில் தேநீர் அருந்த ஒரு தேநீர் கடையில் நிறுத்தினேன். அங்கிருந்த செய்தித் தாளில், கைகள் கட்டப்பட்டுக் கண் கலங்கி நிற்கும் மதுவின் புகைப்படத்தைக் கண்டதும் என் கண்களில் நீர் நிறைந்தது. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளி செல்லும் வரை நிறைந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

திங்கள், 12 பிப்ரவரி, 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 3

முதல் பகுதி, இரண்டாம் பகுதிகளின் சுட்டிகள் இதோ...



நண்பர்கள் முன்னே….நான் பின்னே கிளிக்கிக் கொண்டு…

1263 படிகள். ஏறும் இடத்திலிருந்து நம் மூதாதையர்களின் ஆட்டம் தொடங்குகிறது. அதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். என்று முடித்திருந்தேன். நிறையவே இடைவெளி வந்துவிட்டது இந்தப் பயணப்பதிவில். இணையம் வேறு சரியாக இல்லை. படங்களைப் பதிவேற்றம் செய்வதில் ரொம்பச் சிரமமாக இருந்தது. நினைத்த போது இணையம் வரும் போகும் என்ற நிலை. நாளை சரியாகும் என்று நினைக்கிறேன்.

படியில் ஒரு தும்பி..உடனே ஒரு க்ளிக். தெரிகிறதா?

படிகளை ஏறிக் கடக்கும் போது ஆங்காங்கே நாங்கள் 5 நிமிடம் போல சற்று ஓய்வு எடுத்துவிட்டுத் தொடர்ந்தோம். அப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில், என் கேமரா ஒத்துழைத்த தருணங்களில் நான் சில காட்சிகளைப் படம் பிடித்தேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் அடையவேண்டிய கோயில் இருக்கும் மலை உச்சியைப் பார்த்தால் அது நந்தி வடிவில் இருக்கும் என்று எங்களுடன் வந்த, ஏற்கனவே 6 முறை சென்ற அனுபவம் உள்ள நண்பர் சொல்லவும் பார்த்தால் ஆம் நந்தி வடிவம்.

தோழி நளினி எடுத்த புகைப்படம். மலையின் உச்சி நந்தி வடிவில்

இவ்வடிவம் காலப்போக்கில் மழை, காற்று, வெயில் என்று இயற்கைச் சுழலில் மாறுமோ? மாறலாம். நிச்சயமாக மாறும் என்றே நினைக்கிறேன். ஆனால், அதற்குப் பல வருடங்கள் ஆகலாமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. கிளிக்கிக் கொண்டோம்.

குழுவில், சாப்பாடு மூட்டைகளையும், கொரிக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் அடங்கிய பைகளைக் கொண்டு செல்வதை மோப்பம் பிடித்த நம் மூதாதையர்கள் அவர்களிடம் வம்பு செய்யத் தொடங்கினார்கள். வம்பு ரசிக்கும்படி இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டுமே! என் மைத்துனர், தான் சுமந்த சாப்பாட்டு முதுகுப் பையைத் தன் அருகில் வைத்து அமர்ந்திட, நாங்கள் குரங்கார்களைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க ஒரு குரங்கார் மெதுவாக வந்து மைத்துனர் வைத்திருந்த சாப்பாட்டுப் பையின் ஜிப்பை மிக லாகவமாகத் திறந்தாரே பார்க்கணும்! நான் அவரைப் படம் பிடிக்க முயற்சி செய்ததைப் பார்த்த குரங்கார் “ர்ர்ர்ர்ர்” என்றிட, நான் எங்கேனும் பிடுங்கிவிடுவாரோ என்று கேமராவை மூடி வைத்துவிட்டேன். நாம் பையை அப்புறப்படுத்த முயன்றால் குரங்காருக்கும் கோபம் வரும் என்பதால் மைத்துனர் அமைதியாக இருந்திட எங்களில் ஒருவர் கம்பைக் காட்ட குரங்கார் நகர்ந்தார். 


பாருங்கள் இந்தக் குரங்கார் உணவு கேட்டுக் கைநீட்டுகிறார்…என்ன அழகு இல்லையா? இதை அப்பவே இங்குச் சொல்ல நினைத்து விட்டேன்.

நாங்களும் நடக்கத் தொடங்கினோம். அங்கு இருந்த மரங்களில் காய்ந்த கிளைகளில் இருந்து கம்புகளை ஒடித்து எடுத்துக் கொண்டோம். மேலிருந்து கீழே இறங்கியவர்களும் எங்களிடம் கம்புகள் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். குரங்கார்கள் தண்ணீருக்கு ரொம்பவே அலைந்தார்கள் பாவம்! அங்குச் சென்ற மக்கள் சிலரிடம் வம்பு செய்திருப்பார்கள் போலும் அங்கு தண்ணீருடன் எறியப்பட்டிருந்த பாட்டில்களில் இருந்த தண்ணீரை சிலர் மூடியைத் திறந்து குடித்தார்கள். சிலர் மூடியைத் திறக்க இயலாமல் பாட்டிலின் அடியில் பல்லால் கடித்து ஓட்டை போட்டு, சொட்டும் தண்ணீரை அழகாகக் குடித்தார்கள். கண்கொள்ளாக் காட்சி!

மூதாதையர்களுக்கு ஜிப் பழகியிருப்பதால், ஜிப் என்றாலே பை என்ற நினைப்பு போலும். பேன்ட் ஜிப்பிலும் கை வைத்தார்கள்! எனவே கையில் பையிருந்தால் கம்பில்லாமல் நடப்பது உசிதமல்ல.

அழகான நீரோடை
மழை பெய்தால் ஓடும் ஆறு போலும்.

ஏறும் போது ஓர் இடத்தில் அழகான நீரோடை. உடனே ஒரு கிளிக் எடுத்துக் கொண்டேன். சற்று தூரம் ஏறியதும் வலது புறம் சல சல என்ற சத்தம் கேட்கவும் இன்னும் கொஞ்சம் ஏறித் தேடிய போது அங்கு தண்ணீர் கொஞ்சமாக ஆறு போல் ஓடுவது தெரிந்தது. மழை பெய்தால் ஓடும் ஆறு போலும். கொஞ்சம் முனைந்து இறங்கினால் அருகில் செல்ல முடியும் என்றாலும் மீண்டும் ஏறி பாதைக்கு வரும் போது சறுக்கிடலாம் என்பதாலும் நேரமும் இல்லை என்பதாலும் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். மீண்டும் ஏறத் தொடங்கினோம்.

வழியில் இப்படி ஒரு சிவலிங்கம்…கூடாரம் வைக்கப்பட்டு
ஏறும் போது எடுத்த சில காட்சிகள்…

மரத்தின் கீழே தெரிவது கடையின் கூடாரம்.. 

வழியில் கால்வாசி தூரம் கடந்த பின் கடை இருக்கிறது. மேலே கோயிலின் நுழை வாயில் வரை சற்று தூர இடைவெளியில் தோராயமாக ஒரு அரை கிலோமீட்டர் தூர இடைவெளியில் சிறிய கடைகள் இருக்கின்றன. விடுமுறை நாட்களிலும், பௌர்ணமி தினங்களிலும், விசேஷ நாட்களிலும் மட்டுமே நிறைய மக்கள் மலை ஏறுவதால் இக்கடைகள் இந்த நாட்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. கிராமத்திலிருந்து இங்கு வந்து கடையை நடத்துபவர்கள் இங்கேயே தங்கி மீண்டும் தங்கள் வீட்டிற்குச் சென்று விடுகின்றனர். கடைகள் சிறிய கூடாரம் போல் இருக்கிறது. ஸோலார் பேனலை வெளியில் வைத்து சூரிய ஒளி சேமித்து இரவு நேரங்களில் சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தால் கடைகள் சிறு வெளிச்சத்தில் இயங்குகின்றன என்று சொன்னார்கள். எப்படிப் பொருட்களைக் கொண்டு வருகின்றார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

இங்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ40. குழிப்பணியாரம், கேப்பைக் கூழ், இட்லி, வடை, டீ, காஃபி, மூலிகை சூப், சுக்கு காபி என்று கிடைக்கிறது. கிராமத்து அதுவும் மலையில் உள்ள கடைகளில் கூட இலைகள் மறைந்து பேப்பர் தட்டுகள் அவதாரம் எடுத்துப் புகுந்திருப்பது தெரிந்தது. சிறிய பேப்பர் கப்புகளில் காபி, டீ, சுக்குக் காபி. மூலிகை சூப் (காபி, டீ, சுக்குக் காபி ரூ 10. மூலிகை சூப் ரூ 20) அத்தனை தூரம் தண்ணீர் எடுத்துச் செல்வது கடினமாயிற்றே! குறிப்பாக எல்லாக் கடைகளிலும் குழிப்பணியாரம் கிடைக்கிறது. படிகளின் அருகில் இருக்கும் கடைகளில், அங்கிருக்கும் படிகளில் அமர்ந்து சாப்பிடலாம். பாறைப் பகுதிகளில் இருக்கும் கடைகளில் வெளியில் சம தரையுள்ள இடம் இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி பாய்கள் அல்லது ஷீட்கள் விரித்து வைத்திருக்கிறார்கள். அங்கு அமர்ந்து உண்ணலாம். ப்ளாஸ்டிக் பக்கெட்டுகளைக் குப்பைத் தொட்டிகளாக வைத்திருக்கிறார்கள். கேமரா ஒத்துழைக்க மறுத்ததால் படம் பிடிக்க முடியவில்லை.


படிகள் முடிந்ததும் பாறைக்கற்கள் பாதை தொடங்குகிறது ஏற்றமாகத்தான். ஒரு சில இடங்களில் மட்டும் காலை பாறைக் கற்களின் மீது ஊன்றி ஏற முடியும். பல இடங்களில் கால் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டி கவனமாகக் கைகளையும் ஊன்றி நடக்க வேண்டும். பாறைக் கற்களில் நடக்கும் போதும் குரங்கார்களின் விளையாட்டு தொடர்ந்தது. இதோ சில படங்கள்.


அப்புறம் கொஞ்சம் தூரம் கை பிடித்து ஏறுவதற்கு ஏற்ப கம்பி பதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இடையில் சில பகுதிகள் உடைந்திருக்கிறது. இங்கும் காலை நாம் கவனமாக ஊன்ற வேண்டும். இல்லை என்றால் இடுக்கில் கால்கள் இறங்கிவிட வாய்ப்புண்டு. கம்பிகள் இருக்கும் பகுதி முடிந்ததும் மீண்டும் பாறைகளில் கைகளை ஊன்றியும், பிடித்துக் கொண்டும் ஏற வேண்டும்.

எங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில் சீனியர் மோஸ்ட்.

எங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில் சீனியர் மோஸ்ட். அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்து சில வருடங்கள் ஆகின்றன. மிக மிக ஜோவியலானவர். மிகவும் “ஸ்வீட்டான” மனிதரும் கூட நாங்கள் அவர் பிரச்சனைகள் எதுவுமில்லாமல் ஏற வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்க அவரோ எங்களுக்கு முன்னர் ஏறி முதலில் மலைக் கோயிலை அடைந்தவர். மலையில் ஏற முடியுமா என்று யோசிப்பவர்கள் கூட இப்பதிவைப் பார்த்து இதோ எங்கள் நண்பரைப் பார்த்து அவரைப் போல மன உறுதியுடன், உற்சாகத்துடன் ஏறிட ஒரு ஊக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


ஒரு இடத்தில் நாங்கள் அமர்ந்த போது எங்களுடனேயே எங்கள் அருகில் நண்பர் குரங்காரும் அமர்ந்தார். நீங்களும் அவருடன் பேசி, அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருங்கள்… பாறைகள் நிறைந்த பகுதியின் தொடர்ச்சியும், கடப்பாறைப் பகுதியும், கோயிலை அடையும் பகுதியும் அடுத்த பதிவில்…


ஏறுவோம்….

--------கீதா

ஊக்குக் குறிப்பு: பதிவு சிறிது என்றாலும். செல்ல முடியாத பலருக்காகவும் எடுத்த புகைப்படங்களை இங்குக் கொஞ்சம் அதிகமாகவே தந்துள்ளேன்.