செவ்வாய், 30 ஜூன், 2015

வாழ நினைத்தால் வாழலாம்....வழியா இல்லை ஊரினில்....

தாயோம் தேப்/ரேடியோ ஜாக்கி டென் அவர்கள்

“இறப்பு என்பது பிறந்த எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒன்று.  ஆனால், இறப்பதற்கு முன் ஒவ்வொருவரும் அவர்களுக்கேற்ற, அவர்களால் இயல்கின்ற ஒரு சாதனையேனும் செய்யாமல் இறப்பது பரிதாபத்திற்கு உரியது.  இயலாமையும், உடல் ஊனமும் எவ்வளவு தூரம் நம்மை செயலிழக்கச் செய்தாலும், தளர்வடையச் செய்தாலும், அதை எல்லாம் வென்று நாம் நினைப்பதை முடிக்கும் சக்தியை, நாம் முயன்றால் இயற்கை (இறைவன்) நமக்குத் தரத்தான் செய்யும்/செய்வார்.  ஆனால், பலரும் அந்த சக்தி நம்முள் உண்டு என்பதை உணர்வதுகூட இல்லை.”

இவ்வார்த்தைகளை வாசித்ததும், உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பிரபஞ்ச ரகசியங்களை “A BRIEF HISTORY OF SCIENCE” எனும் புத்தகத்தால் உலகிற்கு விளக்கிய புகழ் பெற்ற கணித மற்றும் இயற்பியல் மேதை ஸ்டீவன் ஹாக்கின்ஸ் வருவார்தானே?

ஸ்டீஃபன் ஹாக்கின்

ஆனால், இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் அல்ல...!!  கொல்கத்தாவில் பிரபலமான “ஃப்ரென்ட்ஸ் எஃப் எம்மில்” பிரபலமான “ஹால் ஷேடோ நா பொந்து” (தளராதே நண்பா) எனும் நிகழ்ச்சியை 2011 முதல் 2014 வரை சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி, லட்சக் கணக்கான ரசிகர்களின் மனதில்  நீங்கா இடம் பெற்ற “ரேடியோ ஜாக்கி” (ஆர் ஜே) டென் தான் அவர்.  கடந்த ஆண்டு மிகச் சிறந்த வங்க தேச வானொலி அறிவிப்பாளருக்கான விருது பெற்ற, 34 வயதான, சக்கர நாற்காலியின் உதவியால் மட்டும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்ல முடிகின்ற தாயோம் தேப் முகர்ஜி எனும் ஆர்ஜே டென்னின் வார்த்தைகள்!


25 ஆண்டுகள் பேசும் சக்தி இன்றி, தாய் தந்தையரின் உதவியால் மட்டும் தன்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தி, கட்டிலிலும், சக்கர நாற்காலியிலுமாக வாழ்ந்த தாயோம் தேப் முகர்ஜியின் வார்த்தைகள்தான் அது. 


கொல்கத்தா மாவட்ட மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிபுணரான பபித்ர தேபிற்கும், அல்பனா முகர்ஜிக்கும் மகனாய் பிறந்த தாயோம் தேபிற்கு 1 வயதானதும், டிஆர்டி என்ற அழைக்கப்படும் டோபமின், RESPONSE IN DYSTONIA எனும் கொடிய நோய் தாக்கியது.  மருத்துவரான ப்பித்ர தேப் மனம் தளராமல் நியூரோசயின்சை ஆழமாகப் படித்து ஆராய்ந்து, காரணங்களைக் கண்டறிந்து, இந்நோய்க்கான சிறந்த மருத்துவ உதவி தன் மகனுக்குக் கிடைக்க வழி செய்தார்.  அப்படி, கலிஃபோர்னியாவில் உள்ள நரம்பியல் நிபுணர் ஸாரா ஆர் செயட்டிடம் தன் மகனுக்கு சிகிச்சைப் பெற வைத்தார்.  அவரது சிகிச்சையாலும், மருத்துவ ஆலோசனையாலும் 25 வயது வரை வெளியே தள்ளி நின்ற தாயோம் தேபின் நாவை சிறிது சிறிதாக அசைத்து, வலுப்படுத்தி அவரைப் பேச வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வருடங்கள் மேற்   கொள்ளப்பட்ட முயற்சி சிறிய அளவில் பலன் கண்டது.  தெளிவில்லாத வார்த்தைகள்! சம்திங்க் இஸ் பெட்டர் தான் நத்திங்க்! மீண்டும் முயற்சி.  முயற்சி திருவினை ஆக்கும் தானே?....இறுதியில் 5 ஆண்டுகளுக்குப் பின் தாயோம் தேப் தெளிவாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.  அடுத்த வருடம் அவரது 31 வது வயதில், பேச்சாற்றல் மட்டும் தேவைப்படும், ரேடியோ ஜாக்கிகளைச் தேர்ந்தெடுக்கும் ஒரு நேர்முகத் தேர்விற்கு, சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நம் தாயோம் தேப் சென்றும் விட்டார்.  தாயோம் தேபின் தெளிவான பேச்சும் திறமை மிகு பேச்சாற்றலும்

எல்லா புதன் கிழமைகளிலும் காலை ஆர் ஜே டென்னின் குரலைக் கேட்க கொல்கத்தா நகரம் காத்திருந்தது.  கடந்த நவம்பர் மாதம் வரை 3 ஆண்டுகளில் அவரது “ஃபோன் இன் நிகழ்க்சி” ஆயிரம் தொடர்களைத் தாண்டியது.  நூற்றுக் கணக்கான பிரபலமானவர்களுடன் நேர்முகம் உரையாடல் நடத்தி எல்லோரது  மனதையும் கவர்ந்திருக்கிறார். ஆயிரக்கணக்கானவர்களுடன் எல்லா சம்பவங்களைப் பற்றியும் விலாவாரியாக விவரித்துப் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய தாயோம் தேப் இந் நிலைக்கு வர அவருக்கு உதவியது தன் 5 ஆண்டு காலத் சிகிச்சைக்கு இடையே அவர் மேற்கொண்ட பயிற்சிகளின் பலன் என்பதை எண்ணும் போது நாமும் வியந்துதான் போகின்றோம் இல்லையா!  முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் தானே!

ரேடியோ ஜாக்கி எனும் இந்த சிகரம் ஏறி தன் வெற்றிக் கொடியை நாட்டிய அவர், இனியும் இரண்டு சிகரங்கள் ஏறி தன் வெற்றிக் கொடிகளை நாட்டத் துடிக்கின்றார்.  முதல் சிகரம் ஒரு திரைப்படம்!.  ரூபம் சர்மாவின் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்! இந்த செப்டம்பர் மாதம் அதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. பிரபல நாடகக் கலைஞரான ரிபிக் சோனியின் ஒரு நாடகத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார்.

அடுத்த சிகரம் ஒரு புத்தகம்!. ஆங்கில இலக்கிய பட்டதாரியான டென், விவரிக்கும் கதைகளை அவரது நண்பர் சுபஜித் குப்தா எழுதி தொகுக்கின்றார்.  மின் நூலாக இக்கதைத் தொகுப்பு வெளி வர இருக்கிறது.

கடந்த வருடம் எதிர்பாராமல் மாரடைப்பால் இறக்க நேரிட்ட தன் தந்தை இதை எல்லாம் கண்டு மகிழத் தன்னுடன் இல்லையே என்று நினைத்து அவர் வருந்துகிறார்.  தன் சாதனைகளை கடந்த வருடம் வரை தன்னுடன் இருந்து கண்டு மகிழ்ந்ததை எண்ணும் போது மனதின் கனம் லேசாகிறதுதான்.  இருந்தாலும் தந்தையின் இழப்பு தாயோம் தேபிற்கு பேரிழப்பே!

இனியுள்ள வாழ்வில் அவர் மீண்டும் எல்லோரையும் வியக்க வைக்கும் வித்த்தில் சாதனைகள் பல புரிந்து வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.  அதற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.!

படங்கள் : கூகுள்

ஞாயிறு, 28 ஜூன், 2015

வையத்துள் வாழ்வாங்கு வாழும் அம்மையார்

 

“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நல்ல காரியம் செய்தாலும் எல்லாத்தையும் அறுவடை செஞ்சுக்கிட்டுப் போயிடறாங்க இந்த அம்மா” என்று தன் புத்தக வெளியீட்டு விழாவில், நகைச்சுவை இழையோடும் தனது பாணியிலேயே, மிகவும் பெருமிதத்துடன், இவ்வார்த்தைகளை உதிர்த்தவர்........ வருகின்றோம் சற்று கீழே

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்பது வள்ளுவனின் வாக்கு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்தப் பதிவிற்காக அதைச் சற்று மாற்றி, ஏதோ எங்களுக்குத் தெரிந்த எழுத்தில் வெளிக் கொணர்ந்தால்? என சிந்தித்ததின் விளைவு.. – தமிழ் சான்றோரும், வள்ளுவரும் மன்னிப்பார்களாக – இது குறள் அல்ல...

அன்னையின் புகழ் கேட்ட மகன்
சொன்னான்
சான்றோராகிய - இவ்
அன்னைக்கு மகனாய் பிறந்திட
என்ன தவம் செய்தனன் நான்.

அம்மா என்பதற்கும், தாய் என்பதற்கும் ஒரே அர்த்தம் கொள்ளப்பட்டாலும், இரண்டிற்கும் இடையில் ஒரு சிறிய நூலிழை வித்தியாசம் இருப்பதாகப்படுகின்றது. எல்லா அம்மாக்களும் தாயாகிவிட முடியாது. ஏனென்றால் எல்லா அம்மாக்களுக்கும் தாய்மை உணர்வு என்பது இருப்பதில்லை.  தாய்மை உணர்வு என்பது மிகச் சிறந்த உணர்வு.  தான் பெற்ற பிள்ளைகளிடம் மட்டுமின்றி இந்த உலகத்தில் இருக்கும் அனைவரிடமும், எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி  அன்னமிடும் ஒரு அன்னைக்கு ஏற்படும் உணர்வு. ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்து தன் பிள்ளைகள் அனைவரும் தானே செம்மையாய் வளர வைத்த தாய்! அவர் வேறு யாருமல்ல, நம் நண்பர் திரு விசுவாசம் (விசுAwesome) அவர்களின் தாய், திருமதி எஸ்தர் கார்னிலியஸ்!  ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் நண்பர் விசு அவர்தான். 

நண்பர் விசுவிற்கே சற்று பெருமை கலந்த பொறாமைதான்!  தன் தாயை நினைத்து. ஏனென்றால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் என்ன பேசினாலும், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், விசுவைக் கொஞ்சம் பின்னே தள்ளி அவரது அன்னையைப் பற்றி எல்லோரும் பேசி முன்னிருத்தி விடுவதால்! அப்படிப்பட்ட தாய்.... கணவரை இழந்த பின் விடுதியில் சேர்க்கப்பட்டக் குழந்தைகளில் ஒருவரான விசுவிற்கு, பொரி(ருள்) விளங்கா உருண்டைகளைக் கொடுத்து, வாழ்க்கையின் பொருளை விளக்கி, வாக்கையை அர்த்தமாக்கி, உன்னதமான வாழ்க்கைப் பாடத்தைப் புகட்டிய அந்த தாய்.....

எஸ்தர் கார்னிலியஸ் அவர்கள் மதுரையில், தென் இந்திய கிறித்தவ மதகுரு/பாதிரியார்/பாஸ்டர் குடும்பத்தில் பிறந்தமையால், சிறு வயது முதலே நல்ல பண்புகளையும், நல்லொழுக்கத்தையும், மதக் கோட்படுகளையும் கற்று வளர்ந்தார்.  அக்கால கட்டத்திலேயே, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர். பருவ வயதிலேயே, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.  குறிப்பாக பார்வை இழந்த குழந்தைகளுக்கு. பல கிராமங்களுக்கும் சென்று சேவை செய்தது மட்டுமல்லாமல், பார்வை இழந்த குழந்தைகளையும், பேசும் திறன், கேட்கும் திறன் இழந்த குழந்தைகளையும் அழைத்து வந்து அதற்கான பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைத்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றியவர்.  கல்லூரியில் படித்த போதே, தான் செல்லும் தேவாலயத்தின் அருகில் இருந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த மக்களின் காப்பகத்தில் மனித நேயச் சேவை செய்யத் தொடங்கினார். அவரது மன உறுதியை நிரூபிக்கும் வகையில் இரு நிகழ்வுகள்.

அந்தக் காப்பகத்தில், பர்மாவிலிருந்து வந்த அகதிகளில் இருந்த, தனது வயதை ஒத்த, பார்வையற்ற ஒரு இளம் பெண், பார்வை இழந்த வயதான மூதாட்டி, மற்றும் மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் என்று எல்லோருக்கும் தனது சேவையை தொடர்ந்து செய்து வந்த நிலையில், ஒரு நாள் நடு நிசியில், சில சமூக விரோதிகள் பார்வையற்ற அந்த இளம் பெண்ணை விபச்சாரத்திற்கு விற்பதற்காகக் கடத்த முயன்ற போது, அங்கு உருவான குழப்பமான சூழலையும், குரல்களையும் தன் அறை ஜன்னலின் வழி கண்ணுற்று, உடன் தன் வாழ்வை பணயம் வைத்து, காப்பகத்தை நோக்கித் தைரியமாக ஓடி, குரல் கொடுத்து எல்லோரையும் உதவிக்கு அழைத்து, சமூக விரோதிகளிடம் இருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார். பின்னர் அப் பெண்ணைப் பார்வையற்றோருக்கானப் பள்ளியில் கல்வி பயில வைத்து ஆசிரியராக உதவியர்.

அடுத்த நிகழ்வு, அங்கிருந்த பார்வை இழந்த இளம் சிறுவர்களை, திருநெல்வேலியில் இருந்த பார்வை அற்றோருக்கான பள்ளியில் சேர வைத்தது. தனக்கு வந்த கனவில், கடவுள் தன்னைப் பார்வை அற்றவர்களுக்குச் சேவை செய்ய பணித்ததாகப் பொருள் கொண்டு தனது கனவில் சொல்லப்பட்ட பொருளை நனவாக்கி, தன் வாழ்வை இச் சேவைக்காக அர்பணித்துக் கொண்டவர்.

அவர், IELC – Indian Evangelical Lutheran Church  ஆசிரியராகவும், பாதிரியாராகவும் இருந்த கார்னிலியஸை மணந்து, மதுரையிலிருந்து கணவரின் ஊரான ஆம்பூர் வந்து, அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்தாலும், ஆம்பூரைச் சுற்றியிருந்த கிராமங்களில், மாற்றுத் திறனாளிகளாக இருந்த குழந்தைகளுக்குத் தன் சேவையைத் தொடர்ந்தார். 1971 ஆம் வருடம், அவ்வாறாக கிராமங்களுக்குச் சென்று வருகையில், ஒரு தினம் கணவர் கார்னிலியஸ் மாரடைப்பால் இறந்துவிட, எஸ்தர்  உறுதுணை இல்லாமல்,  தவித்தார்.  அதே வருட இறுதி நாளான டிசம்பர் 31 அன்று இரவு நேரத்தில், புதிய வருடம் பிறப்பதற்கு முன், தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், கணவனை இழந்து, மனமொடிந்து, வாழ்வில் அடுத்து தன் பாதை என்ன என்று தெரியாமல் தவிக்கும் தனக்கு, வாழ்க்கைப் பாதையைக் காட்டிட, கடவுள் முன் மண்டியிட்டு மன்றாடிய போது, அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு குழந்தை தள்ளப்பட்டு அம்மையாரின் மடியில் வந்து அமர, “குழந்தாய்” என்று விளித்து அந்தக் குழந்தையை உற்று நோக்கிய போது, பார்வை இழந்த குழந்தை என்று அறிந்ததும், பார்வையற்ற குழந்தைகளுக்குக் கற்பித்தல் மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு தாயாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் சித்தம் எனக் கொண்டு, தன் வாழ்க்கைப் பாதையைக் காட்டிய கடவுளுக்கு நன்றி உரைத்த அதே நேரம், ஆலயத்தின் மணி ஒலித்து புதிய வருடம் பிறந்ததாக அறிவிக்கவும், அந்த புதிய வருடத்திலிருந்து, கிடைத்த அந்த ஒரு குழந்தையை ஆரம்பமாக வைத்துக் கொண்டு, குழந்தையை தனது குழந்தையாக எண்ணிக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைக்கே தனது வாழ்க்கை என்று உறுதி செய்து கொண்டு, தனது அடுத்தகட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று ஆரம்பித்த சேவை இதோ இன்று வரை, 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், தற்போது அவர் தொலை தூரத்தில் வாழ்ந்தாலும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

அன்று முடிவு எடுத்தவுடன், தனது 9 குழந்தைகளையும் வெவ்வேறு சிறந்த பள்ளி விடுதிகளில் சேர்த்துவிட்டு, குழந்தைகளைப் பிரியும் ஒரு தாய்க்கான மன பாரத்துடன் கண்ணீர் சிந்தினாலும் மறு புறம், கடவுளின் சித்தத்தை மனதில் உறுதி செய்து கொண்டு, மாற்றுத் திறனாளிக் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகக் கருதி அவர்களுக்காக வாழத் தொடங்கினார். பார்வையற்ற குழந்தைகளுக்கான பயிற்சி எடுத்துக் கொண்டு, 1972 ஆம் வருடம், பர்கூரில் இக் குழந்தைகளுக்கான பள்ளியைத் தொடங்கினார்.  ஒரு குழந்தையுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி இன்று பல ஆயிரம் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி, அவரது சேவை ஆலமரமாக விழுதுகள் ஊன்றி வளர்ந்துள்ளது. ஏற்கனவே அம்மையாருக்கு அமெரிக்கன் கல்லூரியில் படித்த சமயமே, உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியருக்கானப் பயிற்சி அனுபவம் இருந்ததால், தான் தொடங்கியப் பள்ளியின், முதல் தலைமை ஆசிரியப் பொறுப்பேற்று அதனைச் சிறப்புற வழி நடத்தினார். சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியிலும், லண்டனிலும் சிறப்புப் பயிற்சி பெற்று, அக் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் புகட்டாமல், வாழ்க்கைப் பாடமாகிய, வாழும் வாழ்க்கையின் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார்.

பல கிராமங்களுக்கும் சென்று இது போன்ற குழந்தைகளின் குடும்பத்தின் பின்புலம் அறிந்து,  கண் பார்வை, செவித்திறன், பேசும் திறன் இல்லாமல் இருப்பது தலைவிதி என்று கருதி கல்வி அறிவு புகட்டாமல் இருந்த அக்குழந்தைகளின் பெற்றோருக்குக் கல்வி அறிவின் பெருமையைப் புரிய வைத்து பள்ளியில் சேர வைத்து அக் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாதையை வழி வகுத்துக் கொடுத்தவர். 

6 வருடங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, கண்காணிக்கும் மேலதிகாரியாகப் பணியாற்றி பின்னர் IELC மறுவாழ்வு மையத்தின் மேலதிகாரியாகப் பணியாற்றியவர். இப்பணியை இன்னும் விரிவாக்கிட, கிராமங்களுக்குச் சென்று தான் அறிந்து கொண்ட மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் குடும்ப சூழலைப் பற்றி, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் வாழ்ந்த, இக் குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நிதி உதவி செய்யும் பரந்த மனம் படைத்தோரைத் தொடர்பு கொண்டு, “ஒரு குழந்தையைத் தத்தெடுத்தல்” எனும் திட்டத்தை நிர்வகித்து, கல்வி நிறுவனத்தில் பணி புரிவோர், அமைப்பின் நிர்வாகக் குழு மற்றும் குழந்தைகளைத் தத்தெடுத்து நிதி உதவி செய்வோர்களுக்கு இடையில் பாலமாகச் செயல்பட்டு, திட்டமிடுதல் முதல், குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து வாய்ப்பு நலன்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் முதன்மை வகித்தார். பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கும் பயிற்சி அளித்து, இப்பணியில் ஈடுபடுத்தி இச் சேவை தொடர வழி வகுத்துள்ளார். இப்படிப் பல நிகழ்வுகள், அவரது முயற்சிகள், சேவைகள் என்று அவரது வாழ்வில் நிரவிக் கிடக்கின்றன. அவை எல்லாவற்றையும் இங்கு விவரிக்க வேண்டுமெனில் பல பதிவுகள் தேவை என்பதால் சுருக்கமாக, சிறிய பகுதியை மட்டுமே இங்கு பதிந்துள்ளோம்.

9 குழந்தைகளைப் பெற்றெடுத்து, கணவனை இழந்த இந்தத் தாய், ஒரு பெண்ணாக, ஒரு பெண்ணால், இந்த சமூகத்தில், இது போன்ற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு வாழ்வளிக்கும் அமைப்பை உருவாக்கி, தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல முடியும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்றால் மிகையல்ல. தான் பெற்ற குழந்தைகளுக்கு சீரான வாழ்வை அமைத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், நூற்றுக் கனக்கான மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து வழி காட்டி, அவர்கலுக்கும் நல் வாழ்வு வாழ வழி அமைத்துக் கொடுத்த ஒரு புரட்சிப் பெண்ணே.  அவரது பெயரில் அந்தப் பள்ளியில் ஒரு கட்டிடமே இருக்கிறது தற்போது.

அம்மையார் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மனித நேயத்துடன் சேவை செய்ய வேண்டும்!  அன்று வழிகாட்டிய அந்த இறைவன் இன்றும், என்றும் வழி காட்டிடுவார், அம்மையாருக்கு!  வாழ்க! திருமதி எஸ்தர் கார்னிலியஸ் அம்மையார்! வளர்க அவரது திருப்பணி!

பின் குறிப்பு: “விசு, துளசியின் வேண்டு கோள்.....எங்களின் அடுத்த இடுகை உங்கள் தாயைப் பற்றியது.....எழுதலாம் இல்லையா?”

“என்ன நீங்க ரெண்டு பேரும் கூடவா? சேந்துட்டீங்களா.....எல்லோரடயும் சேர்ந்து இப்படி என்னையக் கவுத்துட்டீங்களே! நான் என்ன பண்ணினாலும் எல்லாரும் இந்த அம்மாவைப் பத்திதான் பேசுறீங்க...!! இப்ப கூட பாருங்க....இந்தியாவுலருந்து வந்து சரியா தூங்க கூட இல்ல......வீட்டுக்குள்ள இந்த அம்மா நுழையும் போதே, “பாவம் இந்தியாவுல இருக்கற குழந்தைங்க....ஒரு அம்பதாயிரம் கொடு” ன்னு சொல்லிக்கிட்டேதான் நுழையறாங்க......” என்று அவர் அவரது பாணியில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவரது தாயைப் பற்றிய பெருமை மிளிர்கிறது....”

தன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த விசு, செல்லும் முன், அவரது அம்மாவால் ஆரம்பிக்கப்பட்ட, (ஆம்பூர்/பர்கூர்) இந்தியாவிலேயே முதன் முதலாகப் பார்வை அற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றான இந்தப் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பயணம் செய்வதிலுள்ள சிரமத்தை நேரில் கண்டு வருந்தி அவர்களுக்காக ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்ய முன் தொகை கொடுத்து பதிவு செய்துவிட்டுத்தான் சென்றார்.  பிறருக்கு உதவும் மனம் படைத்த சிலர் இதை அறிந்த உடனே ஆட்டோ வாங்கத் தேவையான 2 1/2 லட்சத்தில் மீதமுள்ள தொகையை தந்து உதவவும் முன் வந்திருக்கிறார்கள்.  இதற்குத்தான் தாயை போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்று சொல்வார்களோ!!!?.......

விசு அவர்களின் புத்தக வெளியீட்டு காணொளிகள். இதில் அவரது தாயாரைப் பற்றி பேசிய பகுதிகள் உள்ளன.




வியாழன், 25 ஜூன், 2015

Poet The Great-குறும்படத்தின் முன்னோட்டக் காட்சி நிகழ்வும் வெளியீடும்

 
க்ளாசிக் கல்லூரி முதல்வர் திரு சோனி அவர்கள் ஊடகங்களுக்கு ஆங்கிலத்தில் அறிவித்தலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை, மாணவ மாணவிகளுக்கு நிகழ்த்திக் காட்டுதல்.
  
POET THE GREAT” எங்களது ஐந்தாவது குறும்படத்தின் முன்னோட்டக் காட்சி, க்ளாசிக் காலேஜ், நிலம்பூர், மலப்புரம் மாவட்டத்தில் 19-06-2015 அன்று நடைபெற்றது. 
நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தவர், நாடகங்களிலும், தொடர்களிலும், திரைப்படத்திலும் நடித்த, நிலம்பூர் ஆயிஷா  எனும் பழம் பெரும் நடிகை.  அவரது காலகட்டத்திலேயே புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட ஒரு பெண். மிக மிக எளிமை.  நம் பக்கத்து விட்டுப் பெண்மணி போன்ற ஒரு தோற்றம் மட்டுமல்ல எல்லோருடனும் எளிமையாகப் பழகும் பெண்மணி. நாங்கள் இங்குக் கொடுத்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தாலேயே உங்களுக்குத் தெரியும் நாங்கள் சொல்லுவது சரிதான் என்று. 
குத்துவிளக்கேற்றும் திரு சோனி அவர்கள்  க்ளாசிக் கல்லூரியின் முதல்வர் மட்டுமல்ல இந்தக் குறும்படத்தின் கதாநாயகனான எழுத்தச்சன் கதாபாத்திரத்தில் நடித்தவர். மிக மிக அருமையான மனிதர்!
தயாரிப்பாளர் குறும்பட டிவிடியை ஆயிஷா அவர்களிடம் வழங்கினார்.
குறும்படத்தின் டிவிடியை நிலம்பூர் ஆயிஷா அவர்களிடம் வழங்குதல்
ஆயிஷா அவர்கள் கதாநாயகன், முதல்வர் திரு சோனி அவர்களிடம், க்ளாசிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்று டிவிடியை வழங்குகின்றார்.
  மிக அழகான ஆங்கில உச்சரிப்பில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி லுபின் வரவேற்புரை வழங்கினார். 
விழாவைத் தொகுத்து அளித்து, எழுத்தச்சனைப் பற்றி மலயாளத்தில் ஒரு அறிமுகம் வழங்கி, வாழ்த்துரையும் வழங்கிய திரு பிஜு பி டி அவர்கள்.  இவரும் க்ளாசிக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்
விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமை உரை ஆற்றும் திருமதி ஜோசி அவர்கள்.  PTA(Parent Teacher Association) தலைவி
நடிகை, நிலம்பூர் ஆயிஷா அவர்கள் சிறப்புரை ஆற்றுகின்றார்.  ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தைச் சார்ந்த, பெண்களுக்கு அவ்வளவாகச் சுதந்திரம் இல்லாத காலகட்டத்திலேயே புரட்சிகரமான சிந்தனைகளுடன், இப்போது இருப்பது போல் எந்தவிதமான ஆதரவோ,  ஊடகத் தொழில்நுட்பமோ வளர்ந்திராத காலகட்டத்தில் தன் சமூகத்திற்கு எதிராக வெளியே வந்து, போராடித் தனது திறமையை உலகிற்கு அறிவித்தவர்.  பாராட்டப்பட வேண்டியப் பெண்மணி.  அவரைப் பற்றி மேலும் அறிய இந்த விக்கி சுட்டியைச் சொடுக்கவும். https://en.wikipedia.org/wiki/Nilambur_Ayisha  அவருக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து, எதிர்கால சந்ததியினர் தங்களது கலை திறமையைத் தைரியமாக வெளிக் கொணர்ந்து மிளிர வெண்டும் என்று எல்லோரையும் ஊக்குவித்து சிறப்புரை ஆற்றினார். 

க்ளாசிக் கல்லூரி ஆசிரியர் திரு ஷாஜி அவர்கள் வாழ்த்துரை வழங்குதல்

க்ளாசிக் கல்லூரி ஆசிரியர் திரு ஷெரில் பாபு அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்
க்ளாசிக் கல்லூரி ஆசிரியை ஸ்ரீலதா அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்
க்ளாசிக் கல்லூரி ஆசிரியர் திரு ப்ரசாத் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி நமிதா தாஸ்,   நல்ல ஆங்கிலத்தில் நன்றி உரை வழங்க, விழா இனிதே முடிந்து, படம் திரையிடப்பட்டது.

           மாணாவ, மாணவிகள் அவர்களது கல்லூரி முதல்வர் திரு சோனி சார் அவர்கள் இதில் எழுத்தச்சனாக, கதாநாயகனாகத் திரையில் தோன்றியதும், கைதட்டி ஆரவாரம் செய்தனர்.  படம் முடிந்தபின் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஆங்கிலத்தில் பேசி நடத்தினோம். படம் பிடித்திருந்ததா, எந்தக் கதாபாத்திரம் பிடித்திருந்தது, எந்தக் காட்சி, எந்த வசனம் பிடித்திருந்தது என்பதை அவர்களிடம் கேட்டு அவர்களை ஆங்கிலத்தில் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னோம்.  அவர்களிடம் முதலில் ஒரு சிறு தயக்கம் இருந்தாலும், பின்னர் அழகாக பதிலுரைத்தனர்.  
படம் பார்க்கும் முன், உரையாடல்,படத்தைப் பற்றிய சுவரொட்டியைப் பார்த்து உரையாடல், 
குழு சார்ந்த கலந்துரையாடல் என்ற நிகழ்வுகளை மாணவ மாணவிகளை ஆங்கிலத்தில் உரையாட, பேச வைத்து ஊக்கப்படுத்தினோம்.  அனைத்து மாணவ மாணவிகளும் திறமையானவர்கள் என்பதையும் அறிய முடிந்தது.
பின்னர் படம் பார்த்தபின் குழு சார்ந்த உரையாடல்,
   டயரி எழுதுதல், இரண்டாம் ஆண்டு பிகாம் மாணவி
மாணவ, மாணவிகளை, படத்தில் பங்கு பெற்றவர்கள் சிலரிடம் நேர்முகக் காணல் போன்றவற்றையும் ஆங்கிலத்தில் பேசவைத்தோம்.  
அன்றைய நிகழ்வு முழுவதும் மாலை 6 மணியளவில் இனிதே முடிவடைந்தது. க்ளாசிக் கல்லூரி முதல்வர் முதல், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் வரை அனைவரும் எங்களுக்கு மிகவும் ஆதரவளித்து, உற்சாகம் அளித்து, விருந்தோம்பல் செய்து மகிழ்ந்ததை நினைத்து நாங்களும் மிகவும் மகிழ்ந்தோம்.  எங்கள் குழுவினர் அனைவரும் எங்கள் மனதார்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் கல்லூரி சார்ந்த அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.  எங்கள் வாழ்வில் மறக்க முடியாத மிக நல்லதொரு அனுபவமாக அமைந்தது என்றால் மிகையல்ல.  க்ளாசிக் கல்லூரி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் குழு அனைவரதும் மனமார்ந்த வாழ்த்துகள்! 

குறும்படத்தின் சுட்டி இதோ இங்கு.....
https://www.youtube.com/watch?v=Ma6nYO5k4Eg (Poet the Great with tamil subtitile - 1)  https://www.youtube.com/watch?v=daoNCAIbXv8  (Poet the Great with tamil subtitile - 2) 


பின் குறிப்பு: மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வுகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.  அந்தத் தொகுப்பு விரைவில் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும்.  இந்த நிகழ்வின் காரணமாகப் பிரயாணத்தில் இருந்தமையால் நண்பர்களின் வலைத்தளங்களுக்கு வர இயலவில்லை.  பல இடுகைகள் விடுபட்டுள்ளன. இன்றிலிருந்து மீண்டும் வலைத்தளம் வந்து எல்லா பதிவுகளையும் வாசிக்கின்றோம். 

திங்கள், 15 ஜூன், 2015

உத்ரா! குட்டிப் பெண்ணே! உன் குரலால் மயக்கிவிட்டாயடிக் கண்ணே!

Image result for uthra unnikrishnan

     இந்தப் பதிவை நான் சைவம் படப் பாடல்களைக் கேட்டதும், உத்ரா பாடியிருக்கும் பாடல் காட்சியைப் பார்த்ததும் எழுதத் தொடங்கி, அதற்குக் கண்டிப்பாக அவளுக்கு அவார்ட் கிடைக்கும் என்பதையும் எழுதி, பிசாசு படம் பார்த்ததும் மீண்டும் எழுதி, முடிக்காமல், இப்போது மூன்றுமணி எனும் மலையாள சீரியலின் டைட்டில் பாடலாக இந்தக் குழந்தையின் பாட்டு வருவதைக் கேட்டதும், எப்படியேனும் முடித்து, இந்தக் குழந்தையைப் பாராட்டியே ஆக வேண்டும் என்ற ஒரு உத்வேகத்திலும், நான் அப்போது சொன்ன அவார்ட் அவளுக்குக் கிடைத்தது குறித்த மகிழ்விலும், காதில் ஹெட் செட் வைத்துக் கொண்டு இந்தச் சிறு குழந்தையின் இனிமையான குரலில், உணர்வுகளோடு, அனுபவித்துப் பாடிய அந்தத் தேன் குரல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே எழுதி முடித்தேன்.

     உத்ரா உன்னிக் கிருஷ்ணன்! பிரபல கர்நாடக சங்கீதப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆன திரு உன்னிக் கிருஷ்ணன் அவர்களின் செல்லப் புதல்வி! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!  புலி எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்!  ஆம்!  16 அடி அல்ல இந்தக் குட்டிப் பெண் பல உயரங்கள் பாய்ந்துவிட்டாள், தந்தையை விட, இந்த மிகச் சிறிய வயதில்! என்ன தவம் செய்தனை உன்னிக் கிருஷ்ணா!  என்று பாட வேண்டும் போல் உள்ளது.  அந்த அளவிற்குத் தன் குரலால் மயக்கிக் கட்டிப் போட்டுவிட்டாள். 
Image result for uthra unnikrishnan 
 பல வருடங்கள், பல கர்நாடக இசைப் பாடகர்கள் எனது மானசீக குருவாக இருந்தார்கள், நான் ஏகலைவியாக. அதில் திரு உன்னிக் கிருஷ்ணனும் உண்டு.   சில நாட்களுக்கு முன், திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் என்னைக் கவர்ந்த “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்” பாடலை, அதனைப் பாடியவர்களை என் மானசீக குருவாக வைத்துக் கொண்டு நான் ஏகலைவியாகக் கற்றுக் கொண்டேன்.  அதனைப் பாடி பதிவும் செய்தேன். தற்போது எனது மானசீக குருவாகிப் போனாள் இந்தக் குட்டிப் பெண் உத்தரா உன்னிக் கிருஷ்ணன். தந்தையும் எனது மானசீகக் குரு, அவரது பெண்ணும் இப்போது! அவளது பாடல்களைக் கேட்டுக் கற்றுக் கொண்டிருக்கின்றேன்!
சைவம் படத்தில் அழகு பாடல்

இந்தப் பாடல் எப்படி உருவாகிய விதம் தந்தையிடம் கற்று மெருகூட்டல் காணொளி
     குட்டிப் பெண் பாடிய சைவம் படப் பாடல் “அழகு” அழகு! நா முத்துக்குமார் அவர்களின் வரிகளில், மெய் சிலிர்க்க வைத்த பாடல். (சுப்புத் தாத்தாவின் ஃபேவரிட் ராகத்தில் அமைந்த பாடல்-கானடா ராகத்தில்...கொஞ்சம் காபியின் சுவை எட்டிப் பார்க்கிறதோ!!?) அவள் சுவரங்களும், ஜதியும் எப்படிப் பாடுகின்றாள் அந்தப் பாடலில்!  அந்தப் பாடலுக்குத் தேசீய விருதும் வாங்கிவிட்டாள் இந்தக் குட்டி சங்கீத தேவதை! அவள் அளித்த பேட்டியில் குழந்தை மனசு வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.  தேசீய விருது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லுவது உட்பட!  அது அறிவிக்கப்பட்ட போது அதை அவளது தாத்தா சொல்லிய போது உத்ரா கணினியில் விளையாடிக் கொண்டிருந்தாளாம்.  உன்னிக் கிருஷ்ணன் அவர்களும் ஊரில் இல்லையாம்.  தந்தை உன்னிக் கிருஷ்ணன் குருவல்ல.  டாக்டர் சுதா ராஜா தான் இவளது குரு! உத்ரா!  குட்டிப் பெண்ணே! உன்னால் உனது பெற்றோர்களுக்குப் பெருமை!
பிசாசு படத்தில் "போகும் பாதை"
      பிசாசு படத்தில் உத்ரா பாடிய பாடல் “போகும் பாதை தூரமில்லை”.  ஆம்!  குட்டிப் பெண்ணே! நீ போகும் பாதை வெகு தூரமில்லை இன்னும் பல உயரங்களைத் தொட! தமிழச்சியின் வரிகள் அருமை.  உத்ராவின் குரல் அதனை அப்படியே பிரதிபலித்து மனதை உருக்கி, நெகிழச் செய்துவிட்டது! கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல். அந்த வயலின் நோட்ஸ் ஆஹா! மனதை என்னமோ செய்கின்றது.  முன்பே ராஜா போட்டதுதான் என்றாலும்....


   தற்போது இப்போது மூணுமணி எனும் மலையாள தொடரில் மிக ரம்யமான ஒரு டைட்டில் பாடல் பாடியுள்ளாள். மன நிலை குன்றிய பெண் கதாபாத்திரத்திற்கு. காபி ராகத்தில் அமைந்த பாடல்...

   இந்த 50 வயது இளம்?! கிழவிக்கு மானசீக குருவாகிப் போனாயடிப் பெண்ணே! இளம் கிழவியின் ராயல் சல்யூட்!! தேசீய விருது வாங்கியதற்கும், இன்னும் நீ பல உயரங்களைத் தொடவும், விருதுகளைப் பெறவும், எங்களை எல்லாம் உனது இனிய குரலால், நல்ல பாடல்களால் மகிழ்விக்கவும், கர்நாடக இசை மேடைகளில் பாடி மிளிரவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! வலையுலக சார்பில்! வாழ்க நீ பல்லாண்டு குட்டி சங்கீத தேவதையே!

பின் குறிப்பு:  இதை எழுதி வைத்தும் விடுபட்டு விட்டது பதிவில் பதிய.  நண்பர் ஜோதிஜியின் பின்னூட்டம் அதை நினைவு படுத்த இதோ விடுபட்ட வரிகள்....
இன்னும் இது போன்ற பின்புலம் இல்லாத திறமை மிக்க குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குழந்தைகளின் திறமை ஆச்சரியம் அளிக்கின்றதுதான். பண்டும் இருந்தார்கள் ஆனால் அப்போது இது போன்று வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லையே. இப்போதும் கூட ஊடகங்கள் இருந்தாலும். திறமை மிக்க குழந்தைகள் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளதால் வெளி வர முடியாமல் இருக்கின்றனர் தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்......

----கீதா

படங்கள் : கூகுளில் இருந்து






ஞாயிறு, 14 ஜூன், 2015

எட்டையப்புரத்தானும்....நாங்கள் ரசித்த துணுக்கும், கவிதையும்.....


இவை அனைத்துமே பலவருடங்களுக்கு முன் கல்கியில் வெளிவந்தவை. நான் சேகரித்து வைத்திருந்த பழைய கட்டுரைகளையும், நாவல்களையும் அகழ்வாராய்ச்சி (!!!!??  ஆம் எல்லாமே மிகப் பழைய புராதான காலத்தவை போல இருக்கின்றன) செய்ததில் கிடைத்தவை.

உழைப்பைத் துதித்தவன்

தாகூரும், பாரதியும், தெய்வ பக்தியையும், மனிதாபிமானத்தையும் இணைத்ததாலேயே அவர்கள் உலக மக்களிடத்தில் ஆண்டவன் திருவுருவைக் கண்டார்கள்.  தாகூர் தமது கீதாஞ்சலியில் பின்வருமாறு பாடுகிறார்:

“தாளிட்ட அடைபட்ட கோயிலின் இருண்ட மூலையில் நீ யாரைப் பூசிக்கின்றாய்? கண்ணைத் திறந்து உன் கடவுள் உன் முன்னிலையில் இல்லை என்பதை அறிந்துகொள்.  கடினமான தரையில் வீடின்றி வாழ்வாரிடமும், சாலை அமைக்கச் சரளைக் கல் பரப்புவோரிடமும் அவன் மழையில் நனைகிறான், வெய்யிலில் காய்கிறான்!”

     பாரதியாரும் கடவுளின் திருவுருவை உழைப்பவர்களின் உருவத்தில் காணத்தான் செய்கிறார்.

அரும்பும் வியர்வை உதிர்ந்துப் புவிமேல்
    ஆயிரம் தொழில் செய்திடுவீரே!
பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேம்
     பிரம்மதேவன் கலை இங்கு நீரே!!

---------------------------------------------------------------------------------------------------------------------


பாரதியாரும் வ.வெ.சு ஐயரும் சதுரங்க விளையாட்டு விளையாடுவார்களாம்.  பாரதியாரின் காய்களை எல்லாம் ஐயர் வெகு சீக்கிரத்தில் வெட்டிச் சாய்த்து விடுவாராம்.

“ஐயரே!  இரக்கம் கொஞ்சமேனும் இல்லாமல் வெட்டுகிறீரே!  உமது நெஞ்சம் என்ன கருங்கல்லா, இல்லை இரும்பா?” எனக் கேட்பாராம் பாரதி.

ஐயர் சிரிப்பாராம், “ஐயா, சண்டை போடுகின்றோம், போர்க் களத்திலே வந்து ஒப்பாரி பாடுகிறீரே, எதற்கு?” என்று கிளறி விடுவாராம் பாரதியாரின் கோபத்தை.

பத்துமுறை வெல்லும் ஐயர் பூரிக்க மாட்டார்.  பத்து முறை தோற்று ஒரு முறை வென்றாலும் போதும், பாரதிக்கு மகிழ்ச்சி வெள்ளமாகப் பொங்கிடுமாம்.

----------------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்க, இங்கிலாந்து, இந்திய அதிபர்கள் கடவுளைச் சந்திக்கிறார்கள்.

கடவுளிடம் அமெரிக்க அதிபர் கேட்கிறார்.  “அமெரிக்க மக்கள் எப்போது முழு மகிழ்ச்சி அடைவார்கள்?”

 “ஐம்பது ஆண்டுகளில்” என்கிறார் கடவுள்.

அமெரிக்க அதிபர் “ஐம்பது ஆண்டுகளா” என்று அழுதபடி செல்கிறார்.

அடுத்து இங்கிலாந்து அதிபர் தன் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவது எப்போது என்று கடவுளைக் கேட்கிறார்,

“நூறு வருடங்களில்” என்கிறார் கடவுள்.  அந்த அதிபரும் அழுதபடி செல்கிறார்.

இறுதியாக இந்திய அதிபர், “இந்தியர்கள் முழு மகிழ்ச்சி அடைவது எப்போது?” என்று கேட்கிறார்.

கடவுள் அழுதபடி அந்த இடத்தை விட்டு மறைகிறார்.

இது நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், பல வருடங்களுக்கு முன்னர் கல்கியில் வெளிவந்த இந்தத் துணுக்கு இத்தனை வருடங்களாகியும் நம் நாட்டிற்குப் பொருத்தமாக இருப்பதை நினைத்தால், நம் இந்தியா வளரவில்லை என்பது புலனாகின்றது.

அப்படித்தானே நிகழ்வுகளும் இருக்கின்றன! கல்வியின் தரம் தாழ்வதிலிருந்தும், அதற்கான கட்டணம் விண்ணைத் தொடும் அளவு பெருகுவதிலிருந்தும், சாதிப் பிரச்சனைகளும், அதனால் விளையும் கொலைகளும், சச்சரவுகளும், எழுதுவதுற்குக் கூட உரிமை இல்லாத நிலைமையும் (திரு இராயச் செல்லப்பா அவர்கள் மிக அழகான ஒரு பதிவு பதிந்திருந்தார் இது குறித்து http://chellappatamildiary.blogspot.com/2015/06/blog-post_9.html) நம் அரசியல்வாதிகளின் ஆட்சியையும் நினைக்கும் போது அந்தத் துணுக்கு இன்னும் எத்தனை காலமானாலும் பொருந்துமோ என்ற வேதனையும் வரத்தான் செய்கின்றது.

---------------------------------------------------------------------------------------------------------------------

இப்போது மட்டும் ஏன்?

தொட்டிலிலே கிடந்த போது
பாலுக்கு அழுதேன்;
பால் தந்தீர்கள்.
தரையில் தவழ்ந்த போது
பொம்மைக்கு அழுதேன்;
பொம்மை தந்தீர்கள்.
பள்ளியிலே சேர்த்த போது
புத்தகத்திற்கு அழுதேன்;
புத்தகம் தந்தீர்கள்.
சின்னஞ் சிறுசினிலே
கொலுசுக்கு, வளையலுக்கு அழுதேன்;
வாங்கித் தந்தீர்கள்.
தோழியரோடு ஆடிய போது
பாவாடை தாவணிக்கு அழதேன்;
தந்து மகிழ்ந்தீர்கள்.
கலைகளை ரசித்த போது
வீணைக்கு அழுதேன்;
மீட்டச் சொன்னீர்கள்.
ஈரெட்டு வயது வரை எது எதற்கோ அழுதேன்;
எல்லாம் தந்தீர்கள்.
காதலித்து நின்ற போது
காதலனுக்கு அழுதேன்;
சாபம் ஏன் தருகின்றீர்கள்?
தடை ஏன் போடுகின்றீர்கள்?

-எஸ் அறிவுமணி

-----------------------------------------------------------------------------------------------------------------

புதுக் குறள் (இது “எங்கள் ப்ளாகிலும்” நண்பர் பகிர்ந்துள்ளார்....)
கோவை பழைய புத்தகக் கடை ஒன்றில் உள்ள போர்டில்

“கற்க கசடறக் கற்க கற்றபின்
விற்க அதன் எடைக்குத் தக”

     எழுத்தாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் கடைத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்த போது  பழைய கலைப் பொருட்கள் விற்கப்படும் கடையைக் கடந்து செல்லும் போது அவருக்குத் தோன்றியதான எண்ணத்தைப் பதிந்திருந்தது நினைவுக்கு வருகின்றது.  “இன்று நமது என்று சொல்லிக் கொள்ளும் பொருட்கள் நாளை யாருடையதோ?”  இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்தான்.  வீடு உட்பட......
எனவேதான் நான் எதையுமே எனது என்று சொல்லிக் கொள்வதில்லை.  பல வருடங்களாக, எனது சிறு வயது முதலே. அதைத் தனி பதிவாக எழுதுகின்றேன்.

       இப்படித்தான் பல இடுகைகளில் தனிப் பதிவு வேறொரு சமயம் என்பேன். எப்போது என்று கேட்காதீர்கள். எனக்கு மூட் வரும் போது. இன்னும் நிறைய இடுகைகள் “எங்களை எப்போது முடித்துப் பதிவிடப் போகிறாய்” என்ற ஏக்கத்துடன் என்னைப் பார்த்து முழித்துக் கொண்டிருக்கின்றன வரிசையில். நல்லநேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  இப்போதைக்கு இங்கு ஒரு “.” ஆனால் “,”வுடன்.....


-----கீதா