வெள்ளி, 10 ஜூலை, 2015

காக்கா முட்டை

Image result for house crowImage result for house crow eggs
                           காக்கா                                   முட்டை
இந்த இரு படங்களும் இணைத்திலிருந்து
      காலை எழுந்ததும், தினமும், எங்கள் அடுக்குக் குடியிருப்பின் மாடத்தில் (பால்கனி?!!) நின்று கொண்டு, காலை நேரத்தின் அழகையும், மரங்களையும், நாள் தொடங்குகின்றது என்று தங்களது இனிய சங்கீதக் குரலால் கீச் கீச் என்று அறிவிக்கும் பறவைகளின் சத்தத்தையும் - அப்படி ஒண்ணு சென்னைல இருக்கானு கேக்கறீங்களா? இருக்குங்க...என்னை நம்புங்க!! - கா, கா,  கா - எதிர்த்தார் போல் இருக்கும் குடித்தனக்காரர்கள் சென்னை மாநகரத் தண்ணீர் வரும் குழாயை அடித்து, பொழுது விடிவதை அலாரம் வைத்த கடிகாரம் போல் தினமும் எழுப்பும் அந்தத் தாளத்தையும், நாதத்தையும் ரசித்து அதற்கேற்ப என்ன பாடலாம் என்று என் அற்ப சங்கீத அறிவைப் புரட்டிப் போட்டு முணுமுணுத்துக் கொண்டு, அந்த சப்தம் தவிர எஞ்சி நிற்கும் காலை நேர அமைதியையும், கையில் சூடான காஃபி கோப்பையுடன் ரசிப்பது வழக்கம்.

       அற்ப அறிவில், அன்று – அதாவது இந்தப் பதிவு எழுதக் காரணமான தினம் -  காகங்கள் கரைஞ்ஞு கரைஞ்ஞு எழுப்பிய அந்தக் கரைதல் ஒலி கேட்டதும், பராசக்தி திரைப்படப் பாடல் நினைவுக்கு வந்தாலும் அது முழுவதும் தெரியாததால், நம் எட்டையபுரத்து மீசைக்காரரின் “காக்கைச் சிறகினிலே நந்தலாலா” வை பிருந்தாவனச் சாரங்கா ராகத்தில் பாடிக்கொண்டிருக்க...


அப்படிப் பாடி ரசித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர் வீட்டில் இருந்த பவளமல்லி மரத்தில் ஒரு சிறு சலசலப்பு. இரு காக்கைகள், ஜோடிகள் போலும், கூடு கட்டுமானப் பணியில் மும்முரமாக இருந்தன. நீங்கள் காக்கைகள் கூடு கட்டுவதைப் பார்த்திருக்கின்றீர்களா?  பார்த்தது இல்லை என்றால், பொறுமை இருந்தால், ரசிக்கும் மனம் இருந்தால், காக்கைகள் இனம் அழியும் முன் பார்த்து விடுங்கள். அற்புதமான  கட்டுமானப் பணி. ஜோடிகள் ஒற்றுமையாகத் தங்களின் வாரிசைப் பெற்றெடுக்க ஒவ்வொரு கம்பு, குச்சி, என்று அலகில் கிடைப்பனவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, அதை முதலில் ஒரு கிளையில் வைத்து அழுத்திப் பார்க்கும். ஒரு காகம் கொண்டு வந்து கொடுத்தால் மற்றொன்று அதைச் சரி பார்க்கும். கீழே விழுந்துவிட்டால் அதை எடுப்பதில்லை. வேறு ஒரு குச்சிதான். பலமாக இருந்தால் அதை வைத்துவிட்டு வேறு குச்சி பொறுக்கச் சென்று விடும். சற்று நேரத்தில் மீண்டும் இரு காக்கைகளும் வரும்.  எப்படி அவை ஜோடிகள் தங்களை அடையாளம் கண்டு கொள்கின்றன என்பது இயற்கையின் ரகசியங்களில் ஒன்று!

சரி! அவங்க, அவங்க வேலையைப் பார்க்கட்டும்...கூடு கட்டி முடிவதற்குள் அவங்களைப் பற்றி கொஞ்சம் நாம் பேசுவோம்.

தென் அமெரிக்கா மற்றும், ஐம்பெருங்கடல்களில் ஆங்காங்கே காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காக்கைகள் காணப்படுகின்றன. மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாக 20 வருடங்கள் வரை உயிர்வாழக் கூடியவை. பெண் காகங்கள் மூன்று வயதிலும், ஆண் காகங்கள் ஐந்து வயதிலும் பருவத்தை அடைகின்றன. பாவம் பெண் காக்கைகள் காத்திருக்க வேண்டும் போலும். இதுவரை உலகில் அதிக வருடம் உயிர்வாழ்ந்த காகமாகக் கருதப்படுவது அமெரிக்காவின் காடுகளில் வாழ்ந்த காகம் ஆகும். அது 30 வருடம் வரை வாழ்ந்துள்ளது. (நன்றி தகவல் களஞ்சியம்) அறிஞர்களின் கருத்துப்படி பறவைகளில் அதிக அறிவுத்திறன் பெற்ற பறவை காகம். இவற்றின் அறிவுத்திறனுக்குக் காரணம் அதன் மூளைப்பகுதியில் அமைந்துள்ள 'நிடோபோடாலியம்”.

      எங்கள் வீட்டு சமையலறைச் சன்னல் வழி என்னுடன் ஒட்டி உறவாடி, என்னிடமிருந்து தோசை, ரொட்டி (சாதம் மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிடும்.  ஒருவேளை சர்க்கரைவியாதிக் காகம்?) என்று உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிடும் காகங்கள் சங்ககால இலக்கியங்களிலும் இடம் பிடித்திருக்கின்றன, ஒரே பெருமைதான் போங்க! நம்ம ஐயன் வள்ளுவன் காகத்தின் அருமையான குணங்களில் ஒன்றான பகுத்துண்ணுதலை எப்படிச் சொல்லி இருக்கார் பாருங்க.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. குறள் - 527

முன்றுரை அரையனார், காகத்தை எள்ளி நகையாடக்கூடாது என்று பாடியிருக்கிறார்.

கள்ளி அகிலும் கருங் காக்கைச் சொல்லும்போல
எள்ளற்க யார் வாயின் நல்லுரையை.

இன்னும் பல மேற்கோள்கள் உள்ளன....

கா கா கா..

அட! காக்கா வந்துருச்சு....நம்ம கதைக்குப் போகலாம் வாங்க.

அப்படியாகப்பட்ட காக்கை ஒரு வாரம் எடுத்துக் கொண்டு  கூட்டினைக் கட்டி முடித்திருந்தது.

பக்கத்தில் இருந்த முருங்கை மரத்திலும், மற்றும் பல மரங்களிலும் காக்கைக் கூடுகள்.  ஒரே மரத்தில் பல கூடுகள். காக்கைகளுக்கு மரங்கள் தான் விருப்பம் கூடு கட்ட.  அப்படி மரங்கள் இல்லை என்றால், தொலைபேசி கோபுரங்களில் கட்டுகின்றன.  எனவே, மக்களே காக்கைகளுக்கும், பிற பறவைகளுக்கும் அவர்களது இனம் தழைத்தோங்க மனம் கனியுங்கள்!  மரங்களை வெட்டாதீர்கள் என்று தயவாய் கேட்டுக் கொள்கின்றோம்.
அடை காக்கத் தொடங்கிவிட்டது

    இப்படி ஒவ்வொரு குச்சியாகக் கொண்டுவந்து, முட்டைகளின் கனம் தாங்குமா என்று, அழுத்தி அழுத்திப் பார்த்து, அழுத்தி வைத்து பரிசோதனை செய்து கூட்டைக் கட்டி முடித்துவிட்டு, அவ்வப்போது வந்து, வந்து, பல கோணங்களில் அமர்ந்து, அமர்ந்து பார்த்து, அடுத்த கட்ட பரிசோதனை செய்துவிட்டுச் சென்று விடுகின்றன. பின்னர் இனியதொரு நாளில் (அதற்குத் தெரியும்!) முட்டை இடும் காகம் வந்து முட்டை இட்டுவிட்டுச் சென்று விடுகின்றது. 3 லிருந்து 5 வரை இடும். நான் கண்ட இந்தக் காகம் 4 முட்டை இட்டிருந்தது. இப்போது காகம் வந்து அடை காக்கத் தொடங்கிவிட்டது. இடையில் அதுக்கு மட்டும் பசிக்காதா என்ன? பசினா பத்தும் பறக்கும் இல்லையா அதனால அதுவும் பறந்து போய்டும். அந்த சமயத்தில்தான் பள்ளிவிட்டு வரும் சிறுவர்களில் இருவர், இந்தக் கூட்டைக் கவனித்துவிட்டு பக்கத்து விட்டு மேல் தளத்தின் மீது ஏறி நின்று கொண்டு, 


“ஹை! ஏ! முத்து, அங்க பாருடா 4 காக்கா முட்டை”

“யே!....ராசு, காக்கா முட்டை படத்துல அந்தச் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை ரெண்டும் காக்கா முட்டையைத்தானே குடிப்பானுங்க? நாமளும் எடுத்துக் குடிச்சுப் பாப்பமா?”

“அப்ப, நீயி கீள போயி அந்தக் கூட்டுக்கு நேரா உன் கர்சீஃப பிடிச்சுட்டு நில்லு. நான் இங்கருந்து எடுக்கப் பாக்குறேன். கீள விளுந்துச்சுனா நீ பிடிச்சுக்க.  உடையாம பாத்துக்க”

நான் எனது வீட்டு மாடத்திலிருந்து புகைப்படம் எடுக்க முயன்ற போதுதான் இவர்களைப் பார்க்க நேர்ந்தது.  அவர்கள் கத்திப் பேசியதால் எனக்குக் கேட்கவும் முடிந்தது. எனக்கு மனது வேதனையாக இருந்தது. 

“எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் காக்கை கூடு கட்டி முட்டை இட்டிருக்கிறது.  இந்த 4 முட்டைகளிலும் எத்தனை காணாமல் போகப்போகிறதோ, உடையப் போகிறதோ...  அந்த முட்டைகள் உடைந்தால், இல்லை இந்தப் பையன்கள் குடித்துவிட்டால், கரு இறந்துவிடுமே! பாவம் காக்கை!” என்று நினைத்தவாறே

முதலில் அவர்களுடன் அவர்கள் போக்கிலேயே விளையாட நினைத்தேன். 

“டேய் பசங்களா, நீங்க ரன் படம் பாத்தீங்களா?”

“பாத்தோம்..க்கா...”  (அட! என்னையா அக்கானாங்க? பாத்தா வயசு தெரியலையா என்ன...? இல்லை காகா ந்றதுதான் ..பாத்தோம்..”.க்கா” னு வந்துருக்கும் வாயில....”)

“அதுல விவேக் கூட காக்கா பிரியாணி சாப்ட உடனே அவரு குரல் “காகா” நு மாறிடுமே!  அப்படி மாறிடப் போகுதுடா பாத்துடா...அதனால வேண்டாம்டா..”

“யக்கா என்னக்கா .....புளியங்கொட்டைய தின்னா வவுத்துல புளியமரமா முளைக்குது?”  - ராசு...

செம பல்பு!..வாங்கினேன்!

      “யக்கா அவன் கிடக்கான்....இதுக்கு பதில் சொல்லு...கோழி முட்டை சாப்டறோம்...”கொக்கரக் கோ” நா கத்துறோம்?” - முத்து

      ஏற்கனவே பல்பு வாங்கிய எனக்கு அவர்கள் பல்பு வாங்க அருமையான பிடிமானம் கிடைத்த சந்தோஷம்...

“டேய் என்னடா பேசுறீங்க....சேவலா முட்டை போடும்? உங்க வீட்டுல? கொக்கரகோன்னா கத்துறீங்க?”

இருவரும் அசடு வழிய....

“சரி பசங்களா....அதை விடுங்க......“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் கொஞ்சு” னு சொல்றதக் கேட்டுருக்கீங்களா. உங்க அம்மாக்கு நீங்க செல்லப் பிள்ளைங்கதானே? உங்கள உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டுப் பெத்து பாத்துக்கறாங்க! அதே மாதிரிதாண்டா......காக்கைக்கும்......நீங்க முட்டைய எடுத்துக் குடிச்சீங்கனா குஞ்சு வராது இல்லையா? அதனாலதான் சொன்னேன்.  அந்தக் காக்கா முட்டையை ஒண்ணும் பண்ணாதீங்கனு. குஞ்சு வரட்டும்......பாவம் அந்தக் காக்கா......அங்க பாருங்க... அம்மா காக்கா வந்துருச்சு... அடை காக்க......போங்க. வீட்டுக்குப் போயி கோழி முட்டை இருந்துச்சுனா அதச் சாப்பிடுங்க.....நீங்க நல்ல பசங்க தானே”  என்று சொல்லவும், அவர்களும் “சரிக்கா” என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்....

எனக்கோ, காக்கா முட்டைகளைக் காப்பாற்றிய மகிழ்வு.  இன்னும் சில நாட்களில் சின்னஞ் சிறு குஞ்சுகள் கரைஞ்ஞு கரைஞ்ஞு கரையும் அந்த இனிய குரலைக் கேட்கலாமே என்ற ஆர்வம் மேலிட என் வீட்டிற்குள் வந்து இப்போது தினமும் அந்தக் கூட்டையே எனது மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன்...குஞ்சுகளுக்காக!


(பின் குறிப்பு : அந்தச் சிறுவர்கள் செல்லும் முன் கேட்ட அடுத்த கேள்வி..

“அப்ப கோழி முட்டையயும் குடிச்சா குஞ்சு வராதுல்லக்கா...அப்ப அது மட்டும் சரியா?”....

இதற்கு நான் அவர்களுக்கு அளித்த பதிலை ஒரு பதிவாக இடுகின்றேன்....)

------கீதா

48 கருத்துகள்:

  1. சுவையான தகவல்களுடன் கூடிய பதிவு. எப்படியோ இப்போதக்கு அவைகளைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டீர்கள். அபிமன்யு மனைவியின் கர்ப்பத்தைக் காத்த கண்ணன் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...பெரிய வார்த்தைகள்....

      நீக்கு
  2. சகோ துளசி & கீதா,

    இன்று காலை வீட்டிலிருந்தும், 'வாக்' போகும்போதும் காக்கை கரைந்தது. "எந்த விருந்தினர் வரப்போகிறார் ??? " என நினைத்துக்கொண்டே இருந்தேன், இப்போ பதிவின் வழியா அவரே வந்துட்டார்.

    ஹ்ம்ம் !! அடுத்த பதிவாக என்ன(பதில்) வரப் போகிறது !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கும்,,,,ரசனைக்கும்..

      நீக்கு
  3. காகங்களை பற்றிய தகவல்களுடன், தங்களது அனுபவங்களை அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். நல்ல வேளை அந்த சிறார்களிடமிருந்து முட்டைகளை காப்பாற்றி விட்டீர்கள்.

    அடுத்த பதிவையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பயபுள்ளைங்க எவ்வளவு வெவரமாயில்லே இருக்காங்க...

    அடுத்த பல்பை ஆவலுடன்... அவர்களுக்கு என்று சொல்ல வந்தேன்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ ஆமாங்க அந்த பசங்க செம கில்லாடிங்க...நிறைய பல்பு வாங்கிட்டேன் எனக்கு அடுத்த மாசம் பல்பே வீட்டுக்கு வாங்க வேண்டாம்...மிக்க நன்றி டிடி

      நீக்கு
  5. முட்டைகள் காப்பாற்றப்பட்டது மகிழ்வளிக்கின்றது
    நன்றி சகோதரியாரே
    தம =1

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! இந்தியாவுல சுத்திக்கிட்டே கருத்தும் போடறீங்க சூப்பர்..

      நீக்கு
  7. தலைப்பை பார்த்ததும் காக்கா முட்டை படத்தைப் பற்றிய பதிவாக இருக்கும் வாசிக்க ஆரம்பித்த நான்,
    காக்காவின் கூடு கட்டும் திரமையை பார்த்து வியந்து போயிட்டேன்!
    நீங்க வர்னித்த விதம் மிகவும் கவர்ந்தது மேடம்!

    படத்தின் பாதிப்பால் சிறுவர்களில் திட்டத்தை நீங்க திசை திருப்ப எடுத்த முயர்ச்சி
    ஹஹஹ ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மஹேஷ் தங்களின் கருத்திற்கும் ரசிப்பிற்கும்....

      நீக்கு
  8. ஆகா எதையோ எதிபார்த்து வந்தால்

    வெகு அருமையான பதிவு
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  9. வணக்கம்,
    அருமையான பதிவு,
    அடுத்து என்ன என்பதையும் அறிய காத்திருக்கிறோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. காக்கா முட்டை ...மிகவும் சுவையான பதிவு...

    பதிலளிநீக்கு
  11. முதல் படம் காகமும் கூட்டில் முட்டைகளும் நீங்கள் எடுத்ததா ? அருமை. சில நாட்களுக்கு முன் எங்கள் ப்லாகில் ஸ்ரீராம் காகம் பற்றி விரிவாக எழுதி இருந்தார். அவர் சொல்லாத விஷயம் காகம் கூடு கட்டுவது. இருந்தாலும் இந்தக் காகங்கள் கட்டும் கூடு வானம் பார்த்ததாகவே இருக்கிறதே கூரை இல்லையே . கூடு கட்டுவதில் தூக்கணாங் குருவிக்கு இணை இல்லை என்பேன் . வித்தியாசமான பதிவு .ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் அந்த முதல் இரு படங்களும் இணையத்திலிருந்து. அதை எழுதி இருந்தேன் விடுபட்டுவிட்டது. அதைக் குறிப்பிட்டுவிட்டேன்.

      ஆம் நண்பர் ஸ்ரீராம் காகம் பற்றி விரிவாக எழுதியிருந்தார். அருமையாகவும் எழுதியிருந்தார்.
      உண்மைதான் சார் கூடுகட்டுவதில் தூக்கணாங்க் குருவிக்கு ஈடு இணை கிடையாதுதான் சார்.

      இன்னுரு பறவை ஆப்பிரிக்க காடுகளில் பெரிய வீடு அளவிற்கு அறைகள் வைத்துக் கூடு கட்டுமாம். அந்த வீடு வெயிலுக்கும் நன்றாக இருக்குமாம், குளிருக்கும் நன்றாக இருக்குமாம். அப்படி ஹைடெக்காகக் கட்டுமாம். அதை அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து அவ்வாறு மனிதர்கள் வாழவும் வீடு கட்ட முடியுமா என்று பார்த்து வந்தததாகச் சொல்லப்பட்டிருந்தது. 6 வருடங்கள் இருக்கும் த ஹிந்துவில் சனிக்கிழமை வரும் ரியல் எஸ்டேட் அடிஷனல் பேப்பரில் வந்திருந்த நினைவு....

      நீக்கு
  12. சுவையான தகவலுடன் கூடிய பகிர்வு...
    காக்கா முட்டை அருமை.

    பதிலளிநீக்கு
  13. அந்த திரைப் படத்தில் - பசங்க காக்கா முட்டையை உடைத்துக் குடிக்கும் போதே என் மனம் பதறியது..

    இதப் பார்த்துட்டு - காக்கா முட்டைய உடைக்கிறதுக்கு எத்தனை பசங்க கெளம்பப் போறானுங்களோ.. அப்படின்னு பதற்றமா இருந்தது..

    நீங்கள் - ஒரு காக்கையின் வம்சத்தைக் காப்பாற்றி இருக்கின்றீர்கள்.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

    இருந்தாலும் - ஸ்ரீ சனைச்சர ஸ்வாமி நிச்சயம் மகிழ்ந்திருப்பார்...

    அழகான பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான, அழகான, கருத்துள்ள பின்னூட்டம் ஐயா! ஓ உங்களுக்குத் தோன்றியதா அப்போதே...

      மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான பின்னூட்டதிற்கு...

      நீக்கு
  14. நானும்தான் பார்க்கிறேன் கூடு கட்டக் குச்சிகளைச் சேகரிக்கும் காக்கைகளை.ஆனால் அதை நீங்கள் எழுதியதைப் படித்த பின் ஒரு புது ரசனையுடன் பார்ப்பேன்!அடுத்த பதிவை எதிர் நோக்கி.....

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    அண்ணா

    காக்கா முட்டைக் கதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தம்பி ரூபன் தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  16. எப்படியோ காகத்தின் கருவை காப்பாற்றி விட்டீர்கள் பாராட்டுக்கள் எங்கள் வீட்டு புன்னை மரத்திலும் காக்கை கூடுகள் உண்டு. பதிவு எழுதத்தான் இதுவரைத் தோன்றியதில்லை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் சுரேஷ் தங்கலின் கருத்திற்கு...உங்களைப் போல எங்களுக்கும் சில எழுதத் தோன்றியதில்லையே நண்பரே....

      நீக்கு
  17. காக்கா முட்டை
    சிறுவர் எண்ணங்களும்
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  18. ஆஹா ! நல்ல விஷயம் செஞ்சிருக்கீங்க கீதா ..உங்க உரையாடல் படிச்சி பல்ப் மேட்டர் எல்லாம் படிச்சி தும்மி தும்மி சிரிச்சேன் :) ...எங்க வீட்டுக்கு உணவு சாப்பிட வராங்க ..ஹெல்த் அன்ட் சேப்டி காரணத்தால் (ஜெசி அண்ட் பிரண்ட்ஸ் )இருப்பதால் கூடு கட்டல..

    @Thulasi மகளுக்கு எக்ஸாம்ஸ் அண்ணா .இப்போ முடிந்துவிட்டது ..அடுத்தது இங்கே சம்மரில் வரும் pollen allergy எனக்கு வந்திருக்கு ..இங்கே வெயிலுக்கு pollen இப்போ ரொம்ப பறக்குது ..antihistamines உண்பதால் அதற்கும் drowsiness..அதான் கொஞ்சம் சரியானதும் வரேன் எல்லார்பக்கமும் ..
    ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் மிக்க நன்றி சகோதரி....தாங்கள் ரசித்துப் படித்தத்ற்கு..

      பரவாயில்லை...உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள். தங்கள் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. இப்போது தேவலாமா?

      நீக்கு
  19. காக்காமுட்டை சிறுவர் உலகம் வித்தியாசமானது கீதா! ரசித்து சிரித்து சிலமாதங்கள் ஆகிவிட்டது[[[[[[[[[[[[[[ புளியங்கொட்டை தின்றால்[[[[[[[[[[[[[[[[[[[[[[[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும் ரசித்ததிற்கும்....

      நீக்கு
  20. காக்கை முட்டைகளைக் காப்பாற்றியதற்கு நன்றி. இங்கே ஶ்ரீரங்கத்தில் என்ன சாப்பாடு போட்டாலும் காக்கை என்னமோ வரதில்லை. என்னனு புரியலை. மற்றப் பறவைகள், அணில்கள் எல்லாம் வரும். குரங்கார் வந்தால் போச்சு! எந்தப் பறவைகளுமே தலை காட்டாது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு...ஏன் காக்கை வருவதில்லை?! ஆச்சரியமா இருக்கே. அங்க ஏதாவது கருப்பா ரிப்பன், இல்லை துணி எதாவது இருக்கோ? குரங்கார் இங்கயும் வருவார்...வந்தால் காக்கைகள் கரைந்து கரைந்து தீர்த்துவிடும்....

      நீக்கு
  21. அந்த நாலாவது முட்டை ஏதேனும் குயிலோடதா இருக்கும். நானும் சென்னை, அம்பத்தூரில் உள்ள எங்க வீட்டில் இருந்தவரைக்கும் குயில் எப்படித் தன் முட்டையைக் காக்கைக் கூட்டில் வைக்குதுனு கவனிக்க முயன்றிருக்கிறேன். கண்டே பிடிக்க முடியலை. ஆனால் குஞ்சுகள் பொரிச்ச உடனே காக்கை இது தன் குஞ்சு இல்லைனு இனம் கண்டு குயில் குஞ்சைத் துரத்தும் பாருங்க, அப்போது எழும் அல்லோலகல்லோலம்! :( பல சமயங்களில் காக்கைகளிடமிருந்து குயில் குஞ்சைக் காப்பாற்ற முனைந்தது உண்டு. எப்படிங்கறீங்களா? காக்கைகளை விரட்டி விடுவதன் மூலம் தான்! ஆனால் காக்கைகள் நம்மைக் கொத்த வரும்! இப்போ வெறும் கூச்சல்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எப்போதேனும் மாடத்திற்கு(பால்கனி) வரும் தவிட்டுக் குருவிகளும், மைனாக்களும், தேன் சிட்டுக்களும் தான் பார்க்க முடிகிறது. வித விதமான பறவைக் கூச்சல்களைக் கேட்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பின்னூட்டம். நாங்கள் உங்களது விரிவான பின்னூட்டங்களை பிறரது தளத்திலும் கூட மிகவும் ரசிப்போம்....

      இங்க குயில் முட்டை இருப்பதாகத் தெரியல/ நீங்கள் சொல்லுவது போல குயில் முட்டையை வைக்காது...அங்கு வந்து இட்டுவிட்டுச் சென்றுவிடும்....இங்கு எங்கள் ஏரியாவில் ஏனோ குயில்களைக் காணவில்லை....அதன் சத்தமும் இல்லை...

      நீக்கு
  22. புளியங்கொட்டை தின்றால் புளியமரமா முளைக்குதுனு கேட்ட சிறுவன் அதி புத்திசாலி! ஏன்னா சின்ன வயசில் ஆரஞ்சு, சாத்துக்குடிப் பழங்கள் சாப்பிடறச்சே அதோட கொட்டைகளையும் சேர்த்து முழுங்கிட்டு, மரம் முளைக்கும்னு மத்த பசங்க சொன்னதை நம்பிய அப்பாவிங்க நானு! இதுக்காக ரொம்பவே கவலைப் பட்டிருக்கேன். அந்த மரம் வயித்திலே இருந்து எப்படி வெளியே வரும்! அப்போ ரொம்ப வலிக்குமேனு எல்லாம் யோசிச்சிருக்கேன். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேம் இங்கயும்....கொட்டைய விழுங்கிட்டா மரம் முளைச்சுருமோனு நம்பி ஏமாந்த அப்பாவி சோணகிரி நானுந்தேன்......அதே அதே.....

      நீக்கு
  23. எங்கள் வீட்டு மாமரத்தில் காக்கை கூடு எப்போதும் இருக்கும் கம்பிகள் குச்சிகள் போன்றவற்றை வைத்து கூடு கட்டுவது ஆச்சர்யம்
    நல்ல காக்கை பதிவு . சுவாரசியாமாய் சொல் இருக்கிறீர்கள்
    காக்காய் படிக்கலாம் வாங்க என்ற பதிவு நீண்ட நாட்களாக ட்ராப்டில் இருக்கிறது. முழுமை அடையாதாததால் வெளியிடவில்லை. ஓரிரு மாதங்களுக்குப் பிறகு பதிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆம் காக்கை சுவாரஸ்யமான பறவைதான்...பகிருங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றோம்....

      நீக்கு
  24. காக்கை கூடும் கட்டும் அழகு - நெய்வேலியில் பார்த்து ரசித்ததுண்டு. எங்கள் வீட்டு வாசலில் ஒரு புளியமரம் - அதில் காக்கைகள் கூடுகட்டும். அவை உணவு தேட போகும்போது கிட்டே சென்று கூட்டைப் பார்த்ததுண்டு. புளிய மரத்துலே ஏறி தான்! :) அந்த அனுபவங்கள் சுகமானவை. நெய்வெலி நினைவுகள் எழுதி நாளாச்சு - எழுதுகிறேன் விரைவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் ஜி! ஆஹா புளியமரத்துல எல்லாம் ஏறியதுண்டா...நானும் கூட மாமரத்தில் பல கிளைகள் ஏறியதுண்டு....நெய்வேலி நினைவுகளை எழுதுங்கள் காத்திருக்கின்றோம்....

      நீக்கு