கடந்த 15 மாதங்களாக உலகெங்கும் காட்டுத் தீ போல பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கித் தாண்டவமாடும் கோவிட், இடையே அணைவது போல் பாசாங்கு செய்து பதுங்கிப் புத்துயிர் பெற்று மீண்டும் ஆக்கிரமித்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் பல பாகங்களில் பல பிரச்சனைகள் தோன்றினாலும் அவை எல்லாம் இது போல் எல்லா நாடுகளையும், சீனாவைத் தவிர (இது ஒரு வியப்புதான் – ஏன்? எப்படி?) நிலை குலையச் செய்ததில்லை. வட இந்தியாவில் கோவிட் 19 நோயால் உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது மனைவியும் பெண் குழந்தைகளும் சுமந்து வரும் காட்சியைக் காணும் போது நம் நெஞ்சில் வேல் பாய்ந்த வலி மரணம் வரை நம் ஒவ்வொருவரையும் விட்டுப் போகாது.
அது போலவே பல
அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், காவல் அதிகாரிகள், எஸ்பிபி
போன்ற கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரது இழப்பும் நமக்கு வேதனைதான். இதனிடையே இக்கோவிட்
19 காரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நெருக்கமான பல உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நிகழும்
மரணங்கள் நமக்குப் பேரிடி போல வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு
எனக்கும் இந்த கோவிட் 19 காலகட்டத்தில் கடந்த வாரம் நேர்ந்தது.
எங்களது சந்திரன்
அளியன் (அளியன் என்றால் சகோதரியின் கணவர்) அவரது மறைவுதான் அது. என் ஒன்றுவிட்ட சகோதரி இந்திராபாயின் கணவர்
கொச்சி களமசேரி ஹெ எம் டி யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 70 வயதைத் தாண்டிய போதும்
இளமையில் இருந்தது போலவே எங்கள் உறவுகளை எல்லாம் எப்போதும் எல்லா இன்ப துன்பங்களிலும்
நேரிலும் அலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுவதால் எல்லோரது அன்பிற்கும்
மரியாதைக்கும் பாத்திரமானவர்.
என்னைப் பொருத்தவரை
என் வாழ்விலும் 1980களில் எனக்கு லா பெல்லா ஃபைனான்சியர்ஸிலும், our college லும் ஹாரிஸன்ஸ்
மலையாளம் லிமிட்டெட் லும் வேலை பெற உடனிருந்து உதவியவர். 1990 களில் எனக்கு ஒரு வாழ்க்கைத்
துணை தேட பெற்றோருடனும் என்னுடனும் எப்போதும் உடனிருந்து எல்லாவற்றையும் நடத்தித்தந்தவர்.
இடையிடையே நான்
மறந்தாலும் அலைபேசியில் அழைத்து நலன் விசாரித்தவர். கோவிட்டின் பிடியிலிருந்து தன்னால்
இயன்றவரை தப்ப முயன்றவர். மார்ச் மாதம் மாரடைப்பு
வந்தும் அதிலிருந்து மீண்டவர். மே மாதம் இரண்டாம் வாரம் எப்படியோ அவரை கோவிட் பிடித்துவிட
வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துவந்தார். கோவிட்டின் கை ஓங்கிய போது மே 14 ஆம் தேதி
களமசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மே 17 இரவு ஏற்பட்ட மாரடைப்பால் இறைவனடி
சேர்ந்தார்.
உடல், தன்னார்வலர்ககால்
களமசேரி (எல்லா மரண நிகழ்வுகளிலும் முன்னின்று நடத்தியவர் அவரது சடங்குகள் நடத்த நான்கு
தன்னார்வலர்கள் மட்டும்) முனிசிபாலிட்டியில் எரிக்கப்பட்டது. 19 ஆம் தேதி அவரது
அஸ்தி அடங்கிய சாம்பல் வீட்டின் தென் மூலையில் பாதுகாக்கப்படுகிறது. கோவிட்டின் தாண்டவத்திற்குச்
சிறிய இடைவெளி கிடைக்கும் போது ஆலுவா அத்வைத ஆசிரமத்தை ஒட்டிய பெரியாறு நதியில் அவரது
அஸ்தி கலந்த சாம்பல் கலக்கப்பட காத்திருக்கிறது. அதுவரை எல்லோராலும் அவரது ஆத்மாவின்
நித்திய சாந்திக்கும் மோக்ஷ பிராப்திக்கும் பிரார்த்திக்கத்தானே முடியும்.
இதை வாசிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் இது போல் ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்டோ உங்கள் பிரியமானவர்களின் கோவிட் மரணங்கள் வந்து உங்களை வேதனைக்குள்ளாக்குவது தெரிகிறது. அவர்களது எல்லோரது ஆத்மாக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். காலம் செய்யும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இப்படித்தான் வேதனைதான். இதுவும் கடந்து போகும் தான். காத்திருப்போம். "Time and Patience will heal all wounds..."
கூடவே கோவிட் 19 எனும் இத்தொற்று நோய் பிடியிலிருந்து நம்மையும் நம்மவர்களையும்
இவ்வுலக மக்கள் அனைவரையும் காக்க எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டிக் கொள்வோம்.
துளசிதரன்