குடிகாரக் கணவர்களிடமும், சந்தேகப்
பேர்வழிகளான கணவர்களிடமும் சிக்கித் தவிக்கும் ஏராளமானப் பெண்களைப்பற்றி கேட்டும்,
வாசித்தும், வேதனைப் படும் நமக்கு, கல்யாண வீரர்களாம், கயவர்கள் தங்கள்
மனைவியரிடம் காண்பிக்கும் காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றிக் கேட்கும் போது
உண்டாகும் இந்த வலி சகிக்க முடியாத ஒன்று.
courtesy cartoonstock.com/google
70 வயதான, திருவனந்தபுரம், முரிக்குப்புழா
புதுவல்புத்தன் வீட்டில் அலியார் குஞ்ஞு என்னும் கல்யாண வீரர், ஒரு மனைவியுடன், 5
ஆண்டுத் திட்டம் போல், 5 வருடம்தான் குடித்தனம் நடத்துவாராம். பின்னர், அந்த மனைவியை அடித்து, உதைத்து
எப்படியாவது “மொழி” சொல்லி விடுவாராம். (மொழி சொல்லல்
என்றால் விவாகரத்து செய்தல்). கடந்த 20 வருடங்களில்,
4 பேர், இப்படி அவரால் கைவிடப்பட்டு, அவர்களுடைய பெற்றோர்கள், மற்றும் சகோதரர்களுடன்
வாழ்ந்து வருகிறார்களாம். இதில் ஒரு மனைவிக்கு, இப்போது 18 வயதுதான் ஆகிறதாம். 5 ஆம் மனைவியான, ஆலுவா, குஞ்ஞுண்ணிக்கரையில்,
ஷாகிதாவை, அடித்தும் உதைத்தும், “மொழி” சொல்ல முயன்ற போது, ஷாகிதாவுக்கு உதவ அவரது உறவினரும்,
அண்டை அயல் வீட்டாரும் முன்வந்து, போலீசில் புகார் செய்து, அவரைக் கைது செய்து,
அவருக்கு எதிரே வழக்குத் தொடர வைத்திருக்கிரார்கள். இது போன்ற, அநீதிக்கும், அக்கிரமத்திற்கும்
எதிரே, நடவடிக்கை எடுக்க ஆவன செய்த அந்த நல்ல மனம் படைத்தவர்கள், பாராட்டுக்குறியவர்களே!
அலியார் குஞ்ஞைப் போல் 5 வருடம்
குடும்பம் நடத்த பொறுமை இல்லாத, பாலக்காடு, வல்லப்புழா, கிழக்கேபாட்டுத்தொடி
வீட்டில் மஜீத் (38), வட கேரளத்திலுள்ள 14 இடங்களிலிருந்து, 14 கல்யாணங்கள்
செய்திருக்கிறார். இவர், மனைவிகளை, “மொழி” சொல்லி அவர்களைத் துன்புறுத்த மாட்டாராம். பதிலுக்கு
அவரது நகைகளைக் கவர்ந்து காணாமல் போய்விடுவாராம்.
15 வது முறையாக, கொஞ்சம் அவசரப்பட்டுக் கல்யாணம் செய்யாமலேயே நகைகளைக் கவர
முயன்ற போது, போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவர், நாளிதழ்களில், “மணமகள் தேவை” விளம்பரம் கொடுத்து, அதன் மூலம்தான் தன்
கைவரிசையைக் காண்பித்து வந்திருக்கிறார், இத்தனைக் காலமாக. அப்படி இவரது விளம்பரம் கண்டு, மன்னார்காடைச்
சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணின் பெற்றோர் இவரருடன் தொடர்பு
கொண்டிருக்கின்றார்கள். தன் தாய்,
நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் இருப்பதாகவும், தன் மனைவியாகப் போகும் பெண்ணை
அவர் பார்க்க ஆசைப்படுகிறார் என்றும், அவருக்குப் பிடித்துவிட்டால், உடனே கல்யாணத்தை
வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கூறி, அவர்களை ஏமாற்றி, தன் நண்பன், பனமன்னா
சுலைமானின் காரில், அந்தப் பெண்ணை ஏற்றி, ஒரு காட்டுப் பிரதேசத்திற்குக் கொண்டுச்
சென்று, மிரட்டி நகைகளைக் கவர்ந்துச் சென்றிருக்கிறார். எப்படியோ, வீட்டை அடைந்த அந்தப் பெண், போலீசில்
புகார் கொடுக்க, மஜீதும், நண்பர்களும் கைது செய்யப்பட்டு, அவர்கள் ஒற்றப்பாலத்தில்
விற்ற நகைகளும் மீட்கப்பட்டன. இது போல்
கைது செய்யப்படாத எத்தனையோ, மஜீதுகளும், அலியார் குஞ்ஞுகளும், கேரளத்தில் தங்கள்
கைவரிசைகளைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெற்றோர்கள், அவசரப்படாமல்,
சிந்தித்து, தீரவிசாரித்து மட்டுமே பெண்களை மணமுடித்துக் கொடுக்கவேண்டும். பெண்களும்
கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்து, இது போன்ற சம்பவங்கள் அவர்களது வாழ்வில் நேராமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்களைப் பற்றிக் கேட்கவோ, காணவோ
செய்யும் போது, பொதுமக்களும் அதற்கு எதிராகப் புகார் கொடுக்கவோ, எதிர்த்துப்
போராடவோ தயங்கக் கூடாது! அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்களை வேரோடு
பிடுங்கி எறிய முடியும்!