புதன், 19 ஆகஸ்ட், 2020

டிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)

 

Buy Pilgrim at Tinker Creek Book Online at Low Prices in India ...

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான திருமதி ஆனி டில்லார்ட் (Annie Dillard) ஒரு பிரபலமான இயற்கை ஆர்வலர், இறையியலாளர், கொலாஜிஸ்ட் மற்றும் பாடகரும் ஆவார். அவருடைய கட்டுரைகளெல்லாம் கவிதை அழகையும், ஆழமான தத்துவக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டவை. அவர் சொல்லிக் கேட்கும் போது புரியாத புதிரெல்லாம் எளிதாகும், எளிதென்று நாம் நினைத்ததெல்லாம் புரியாத புதிராகும் என்றும் கருதப்படுகிறது. ‘பில்க்ரிம் அட் டிங்கர் க்ரீக்’ என்பது வெர்ஜீனியாவிலுள்ள டிங்கர் கிரீக்கிற்கு அவர் மேற்கொண்ட புனித பயணத்தைப் பற்றியதுதான். இயற்கை உலகினுள் அவர் செய்த ஆன்மீக யாத்திரை. ஒரு சன்யாசிக்குத் தேவையான நிதானத்துடனும், பொறுமையுடனும் நுண்ணோக்கித் திறன் வாய்ந்த கண்களுடனும் அவர் செய்த புனிதப்பயணத்தை அவர் எழுதி முடித்த போது இதைச் சில சன்யாசிகள்தான் வாசிப்பார்கள் என்று நினைத்திருந்தாராம். ஆனால், இது எல்லோரது வரவேற்பையும் பெற்று அவருக்குப் புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

நினைவுகள் தொடர்கதை - அம்மா

  

நினைவுகள் தொடர்கதை என்ற தலைப்பைப் பார்த்ததும் கதையின் தலைப்பு போல இருக்கிறதோ? ஆனால் இது கதையல்ல நிஜம். இந்தத் தலைப்பில் ஒரு கதையும் என் ட்ராஃப்டில் முடிக்கப்படாத நிலையில்!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

தோல்வி கண்டு துவளாத மனம்

தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் தேறிய தேர்வில் தோற்ற 2% த்தில் ஒரிரு மாணவ மாணவியர்கள் உயிர் துறந்ததைக் கடந்த சில மாதங்களில் கண்ட நாம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறோம். தோல்வியையே ஏற்றுக் கொள்ளாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறதொ? என்ற வருத்தம் நம் எல்லோர் மனதிலும் பாலைவனமாய் பறந்து விரியத் தொடங்கிய வேளையில், பாலைவனச் சோலையாய் ஃபயாஸ் எனும், தோல்வி கண்டு துவளாத, 4 ஆம் வகுப்பு மாணவனின் களங்கமில்லா, உண்மையான, உணர்வு பூர்வமானத் தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகள் நம் மனதில் பூ மழையாய்ப் பெய்கிறது.


படம் - நன்றி இணையம்

மொபைலில் ‘லைவாக’ எல்லோரும் அவரவர் திறமைகளைப் பேசியும், பாடியும், வரைந்தும் காண்பிப்பதைக் காணும் நம் நாயகனான ஒன்பது வயதான முகம்மது ஃபயாஸுக்கும் ஓர் ஆசை. காகிதத்தில் பூ செய்யத் தெரிந்த தானும் தன் திறமையை எல்லோருக்கும் காண்பித்து “லைக்” வாங்க வேண்டும், பெற்றோர்களும் சகோதரிகளுக்கும் தெரியாமல் அறையின் கதவைத் தாளிட்டு, மொபைலின் முன் “லைவாக” ஒரு காகிதத்தை எடுத்து அதைக் காட்டி இப்படி ஒரு காகிதத்தை எடுத்து, அதை இப்படி மடக்கி…..” என்று விவரித்த வண்ணம் பூவை உருவாக்க முயற்சி செய்கிறான்.

பல முறை தவறின்றி செய்தவன்தான் என்றாலும் அன்று காணொளியில் காண்பிக்க, அதுவும் “லைவாக” செய்த பொது சரியாகச் செய்ய முடியவில்லை! தோல்வி! தோல்வி கண்ட அவன் மனம் துவளவில்லை. “இப்படிச் செய்யும் போது சிலருக்கு நல்லா வரும். சிலருக்கு நல்லா வராது. எனக்குச் சரியா வரலை. பரவாயில்ல. அப்படித்தான் சில நேரத்தில் சரியா வராது” என்று சொல்லி தன் “லைவ்வை” முடித்து அதைp பகிராமல் விட்டுவிட்டான். ஆனால் எப்படியோ அவனது மூத்த சகோதரியின் கண்ணில் அது பட, அவர்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப, ஃபயாஸின் தோல்வி கண்டு துவளாத தெளிவான தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகளும் செயலும் வைரலாகிவிட்டது.  

கேரள “மில்மா” (ஆவின் போல) அவனது வார்த்தைகளைத் தங்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்தியது. பரிசாக அவனுக்குப் பணத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியும் வழங்கியது. கிடைத்த பணத்தை முதல்வரின் கோவிட் நிதிக்கு வழங்கியதோடு மீதத்தை அவன் வீட்டருகே உள்ள ஓர் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கான செலவிற்கும் வழங்க முடிவும் செய்திருக்கிறான். அப்படி ஃபயாஸை நாயகனாக்க உதவிய குடும்பத்தினர் எல்லோராலும் பாராட்டப்படுகின்றனர்.

தோல்வி கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் எனும் உண்மையை உணர்த்திய ஃபயாஸின் செயலும் வாக்குகளும் எல்லோருக்கும் தன்னம்பிக்கையூட்டும் ஒன்றாக நிலைபெற்றிருக்க வாழ்த்துவோம்.


-----துளசிதரன்


செவ்வாய், 28 ஜூலை, 2020

ஹீரோயின் துங்கா - கறுஞ்சிறுத்தை - அக்கம் பக்கம் - 2

இன்றைய பொழுது எல்லோருக்கும் இனிதாக அமையட்டும்!
சென்ற பதிவில் மருத்துவக் குறிப்புகள் சொல்லப்படும் காணொளிகள் பற்றிச் சொல்லியிருந்தேன். 

வெள்ளி, 24 ஜூலை, 2020

அக்கம் பக்கம் – 1


யுட்யூப் சானல்கள்/வ்ளாகர்ஸ்…….

வ்ளாகர்ஸ் காணொலிகள் போடுவதில் எந்தக் குறையும் இல்லை. அதே சமயம் அதில் சொல்லப்படுவது.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

மழை …மழை….குடை….கூடவே ஒரு படகும்

கேரளாவில் மழைக்காலத்திற்கு முன் விறகுகள் சேமிப்பது, மிளகு, மல்லி, மஞ்சள், காய வைத்து பொடி செய்வது, தேங்காய் கொப்பரைகளைக் காய வைத்து எண்ணெய் ஆட்டுவது, வீட்டில் கூரை ஓடுகளைச் சரி செய்வது, மாற்றுவது, கிணற்றைச் சுத்தம் செய்வது இப்படிப்பட்ட பல வேலைகள் செய்வதுடன் பழைய குடையைப் பழுது பார்த்து வைப்பது அல்லது புதிய குடை வாங்குவது, மழைக்கான கோட் வாங்குவது போன்ற வேலைகள் அவசர அவசரமாக நடக்கும்தான். கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் ஐந்தோ, ஆறோ பேர் பயணம் செய்யத் தகுந்த படகுகள் விற்கும் கடைகள் முளைத்திருக்கிறது. இதுவரை பத்திற்கும் மேலான படகுகள் விற்பனையாகியும் இருக்கிறதாம். வாசிக்கும் போது வியப்பாக இருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு வருடமாகத் துன்புறுத்தும் வெள்ளம்! அதுதான் இந்தத் தற்காப்பு! ஆம்! மனிதன் இனி மிகவும் கவனமாகச் சிந்தித்து செயல்பட்டு வாழத்தான் வேண்டும் போலான சூழல்கள். கொரோனாவிலிருந்து தப்ப “முகக்கவசம்”! வெள்ளத்திலிருந்து தப்ப “படகு”! இப்படி காலம் செய்யும் விளையாட்டைச் சாமர்த்தியமாகத்தான் விளையாடிக் கடக்க வேண்டும்!

-------துளசிதரன்

(நட்புகளுக்கு எல்லாருக்கும் ஸாரி சொல்லிக் கொள்கிறேன்/றோம், இங்கு லாக்டவுன் இம்மாதம் 22 ஆம் தேதி வரை என்பதால் கணினி எனக்குக் கிடைக்க இரவு ஆகிவிடும். கூடவே சில வீட்டுப் பணிகள் என்பதால்  அதன் பின் என்னால் பதிவுகளுக்கு வர இயலவில்லை. துளசியின் கருத்துகளையும் பதிய முடியவில்லை. என் வழியாகத்தானே அவரது பதிவுகள், பதில்கள், கருத்துகள் எல்லாம் வருகின்றன. அதனால் அதற்கும் ஸாரி சொல்லிக் கொள்கிறேன். துளசி அவர் பதிவுகளை பேப்பரில் எழுதி அனுப்பிட அதை தட்டச்சு செய்து இங்கு ஷெட்யூல் செய்ய, அப்புறம் அதற்கு அவர் அனுப்பும் கருத்துகள் போட மட்டுமே முடிகிறது. அதுவே கூட நான் போட தாமதமாகிவிடுகிறது. இங்கு பதிவுகள் வெளியாகிறது ஆனால் உங்கள் எல்லோரது பதிவுகளுக்கும் வரலையே என்று நீங்கள் யாரும் குறையாக எடுத்துக்க மாட்டீங்க இருந்தாலும் நாங்கள் ஸாரி சொல்ல வேண்டுமில்லையா. அதான் மீண்டும் ஸாரி எல்லோருக்கும். 23 ஆம் தேதியிலிருந்து வலைக்கு வர முடியும் என்று நினைக்கிறேன். 

---கீதா )

செவ்வாய், 14 ஜூலை, 2020

பெரு லாபம் பெரு நஷ்டம்

 

வரி உட்பட ஒரு கிலோ தங்கத்திற்கு அரபு நாடான யு  எ இ ல் 27 லட்சம் ரூபாய். அதை  இந்தியாவுக்கு 15% வரி கூடாமல் கொண்டு வந்து அணிகலன்கள் ஆக்கி விற்றால் ஏறத்தாழ 7 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் ஒரு வருடத்தில் 4000 டன் தங்க நகைகள் விற்பனை செய்யப்படும் நாட்டில் 800 டன் மட்டுமே நேரான வழியில் வரி கட்டப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படியானால் பாக்கி 3200 டன் குருவிகளும் திமிங்கலங்களும் தான் கொண்டு வந்து சேர்க்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகிறது. இடையிடையே ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று பிடிக்கப்படுவதெல்லாம் கடத்தப்படும் தங்கத்தில் ஒன்றோ இரண்டோ சதவீதம் மட்டும் தான்.

கடந்த 30 ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த எமிரெட்ஸ் விமானத்தில் திருவனந்தபுரத்திலுள்ள யு,ஏ.இ தூதரகத்திற்கான ஒரு பேகேஜ் வருகிறது. இப்படி வரும் பொருட்களில் அதிகமாக இருப்பது உணவுப் பொருட்களாகத்தான் இருக்கும்.  ‘டிப்ள்மாட்டிக் பேட்’ என்றழைக்கப்படும் இத்தகைய பேகுகளை விடுமுறை நாட்களானாலும் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அன்று வந்த அந்த பேகேஜில் கோடிக்கணக்கான ரூபாய் விலைமதிப்புள்ள தங்கம் இருக்கிறது என்ற ரகசிய செய்தி விமான சுங்க சரக்கு அதிகாரி ராமமூர்த்திக்கு வருகிறது. அதைப் பரிசோதிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை. அதற்காக ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியதானது.

இடையே யு.ஏ.இ. தூதரகத்தினின்றும் பேகேஜை தரக் கோரி அழைக்கவில்லை. ஆனால் பல இடங்களிலிருந்து பல கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தன. மத்திய அமைச்சகத்தின் உத்தரவு கிடைத்தது. யு.ஏ.இ. தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் பேகேஜ் பரிசோதிக்கப்பட்டது. ஸ்டீல் கப்புகள், டோர் லாக்குகள், ஏர் கம்ப்ரெசர் போன்றவற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 30.25 கிலோ தங்கம் தங்களுக்கு அனுப்பப்பட வேண்டியவை அல்ல என்று யு.ஏ.இ. தூதரக அதிகாரிகள் உறுதியளித்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.

Kerala Gold Smuggling Case : Swapna Suresh's Conduct Suspicious ...

விசாரணை செய்த போது தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான, எப்போதும் யு.ஏ.இ. தூதரகத்தின் பேகேஜ் வாங்க வரும் சரித் என்பவர் கைது செய்யபட்டார். அவரை விசாரணை செய்த போது கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் செயற்பாட்டு முகமையாளர் (operational manager) ஸ்வப்னா சுரேஷின் பங்கும் வெளியானது. அவருடன் தொடர்புள்ள தகவல்தொழில்நுட்ப செயலாளர் சிவசங்கரை அப்பதவியிலிருந்து நீக்கவும் செய்திருக்கிறார். சந்தீப்நாயர் ரமீஸ் என்பவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி அது ஒரு காட்டுத்தீயாய் படர்கிறது. யாரெல்லாம் அகப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. இப்படிப் பிடிக்கப்படுவது ஒன்றோ இரண்டோ சதவீதம். பிடிக்கப்படாமலிருப்பது 98% அல்லது 99%.

1950 களில் ஹாஜி மஸ்தான்-னில் தொடங்கிய தங்கக் கடத்தல்கள் இப்போதும் தொடர்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் 1% வரி விதிக்கப்பட்ட 2011-2012 ல் மட்டும்தான் 42 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. மூன்று மடங்கு விலை உயர்ந்த தங்கம், 12.5% வரி விதிக்கப்பட்ட 2019ல் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் மதிப்புள்ளது மட்டும்தான். 

இதிலிருந்து ஒரு உண்மை வெளிப்படுகிறது. இறக்குமதி வரியைக் குறைத்து நேரான வழிகளில் தங்கத்தை இறக்குமதி செய்ய வழி வகுக்க வேண்டும். நம் நாட்டில் விவசாயம் செய்யப்படும் பல பொருட்களை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகளின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து வரியைக் குறைத்து இறக்குமதி வாய்ப்புகள் கொடுக்கும் அரசு, அதே போல் தங்கத்தின் இறக்குமதிக்கும் வரியைக் குறைத்தால் தங்கத்தை கடத்த வேண்டிய சூழல் ஒழியுமே? கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை 40%க்கும் மேல் உயர்ந்து, மேலும் உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதைச் செய்யாமலிருந்தால் இது போல் பொன்னாசை படர்ந்து வேலியே பயிரை மேயும் நிலையை உருவாக்கி விடும் அல்லவா?


----துளசிதரன்


செவ்வாய், 7 ஜூலை, 2020

புலவர் திருஇராமனுசம் ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய ...


Gathering | Albany NY a.k.a. Smalbany

புலவர் இராமானுசம் ஐயா அவர்களை வலைப்பூவில் அறியாதவர்கள் இல்லை எனலாம். வயது காரணமாக இயற்கை எய்தினார் என்பதை நாங்கள் எல்லோரும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொளகிறோம். 

புலவரை  ஓரிருமுறை நேரில் அவரது வீட்டில் நம் நட்புகளுடன் சந்தித்திருக்கிறோம். கில்லர்ஜி அப்போது ஒரு முறை வெளிநாட்டிலிருந்து வந்த போது அவர் அழைப்பின் பேரில் சென்னை, வேலூர் நட்புகள் சிலருடன் சந்தித்தித்திருக்கிறோம். நிறைய விஷயங்கள் பேசியதும் உண்டு. நல்ல மனிதர். 

எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

செய்தி சொன்ன எங்கள் ப்ளாக் ஸ்ரீராமிற்கு மிக்க நன்றி

ஞாயிறு, 5 ஜூலை, 2020

கல்லாகும் பெற்ற மனங்கள் நடத்தும் கௌரவ கொலைகள்


“பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு” எனும் பழமொழி வீண் மொழி ஆகிவிட்டதோ எனும் ஐயம் சில சம்பவங்கள் நிகழும் போது நமக்குத் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அப்படி அல்ல. ஒவ்வொரு குழந்தையையும் கை வளர்கிறதா, கால் வளர்கிறதா? என்று ஆசையுடனும், பாசத்துடனும்தான் எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை வளர்த்து  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நல்லவர்களாக வளர்க்க, அவர்கள் அவ்வப்போது செய்யும் தவறுகளுக்குத் தண்டிப்பதுண்டு. அதன் பின் அதற்காகக் கலங்குவதும் உண்டு. அவர்களுக்கு நல்ல கல்வி நல்கக் கஷ்டப்படுவதில் ஆனந்தப்படுவதுண்டு. வேலை கிடைக்க இருப்பதையெல்லாம் விற்பதுண்டு. நல்ல மணவாழ்க்கை அமைத்துக் கொடுக்க வாழ்நாள் முழுவதும் கடனாளியாய் வாழ்வதுமுண்டு. அதனால்தான் நாம் “பெத்தமனம் பித்து” என்கிறோம்.

தன் பிள்ளை ஒரு கொலையே செய்து வந்தாலும் ‘என் பிள்ளை அப்படியெல்லாம் செய்ய மாட்டான். எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது’ என்று சொல்லி தன் பிள்ளைக்காகக் கடைசிவரை உள்ளதை எல்லாம் விற்று நீதிமன்றத்தில் போராடி அவனது தண்டனையைக் குறைக்க ஓடுபவர்கள்தான் பெற்றோர்கள்.

அப்படிப்பட்ட பெற்றோர்கள்தான் ராஜனும், சின்னசாமியும், சாக்கோ ஜானும். ஆனால், தன் 22 வயதான மகள் ஆதிரை, பிரிஜோஷை மணக்கப் போகிறாள் என்பதை அறிந்ததும், மலப்புரம் அரிக்கோடைச் சேர்ந்த ராஜன் ஒரு கொலைகாரனாகவே மாறிவிடுகிறார். அதுவும், தான் ஆசையாய் பாலூட்டி, சோறூட்டி வளர்த்த தன் மகளையே கொன்று!

வடகரையைச் சேர்ந்த பிரிஜேஷ் ஒரு இராணுவ வீரன். அழகும், ஆரோக்கியமும், வாழத் தேவையான வருமானமும், ஒரு வேலையும் உள்ளவன். ஆதிராவுடன் பேசிப் பழகி அவளுக்கு நல்ல ஒரு துணையாவேன் என்று நிரூபித்தவன். அதைத்தான் அரசு  மருத்துவமனையில் பணிபுரியும் ஆதிரையும் அவனிடமிருந்து எதிர்பார்த்தாள். ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு இறைவன்தான் மனிதகுலத்திற்கு’ என்று போதித்த ‘ஸ்ரீ நாராயணகுருவைப் போற்றும் கேரளத்தில் அவள் அவளது சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வீட்டாருக்கு அது மட்டும் பெரும் பிரச்சனை ஆனதும், ஆதிரைக்கு அவ்வளவு பெரும் பிரச்சினை அல்லாத சாதிக்காக பிரிஜேஷைப் பிரியவோ அது போலவே பிரிஜேஷும் சாதிக்காக ஆதிரையை இழக்கவோ தயாராக இல்லை. எனவே வீட்டாரின் எதிர்ப்பைப் புறக்கணித்து இருவரும் உத்திரப்பிரதேசம் சென்று ஒன்றாக வாழத் தொடங்கிவிட்டார்கள். போலீஸ், புகார் இப்படி சில மாதங்கள் கடந்தன.

காவல்துறை அதிகாரி, ராஜனுடன் பேசி எப்படியோ அவர்கள் திருமணத்திற்கு ராஜனை சம்மதிக்க வைத்தும்விட்டார். அவரே பிரிஜேஷையும், ஆதிரையையும் வரவழைத்து ஒரு நாள் திருமணத்திற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். கல்யாண நாளுக்கு முதல் நாள் ஆதிரை அவளது வீட்டிலும் பிரிஜேஷ் அவனது வீட்டிலும். ஒரு நாள் தானே அடுத்த நாள் ஒன்றாவோம் என்ற எண்ணம் இருவருக்கும்.

ராஜன் திருமணத்திற்குச் சம்மதித்தது உதட்டளவில் மட்டுமே என்பது மீண்டும் அவர் ஆதிரையை வீட்டில் மிரட்டத் தொடங்கியதும் அவளுக்குப் புரிந்தது. ஆத்திரத்தில் ஆதிரையை நோக்கி ‘உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்றதும்தான் சாதிவெறி தன் தந்தையை கொலைகாரானாக்கவும் தயங்காது என்பது அவளுக்குப் புரிந்தது. தன்னுயிரைக் காத்துக்கொள்ள பக்கத்து வீட்டிற்கு ஓடி அங்கு அடைக்கலம் புகுந்தாள். அப்போதும், கத்தியுடன் தன்னைக் குத்த வரும் ராஜனைப் பார்த்து, “என்னைக் கொல்லாதீர்கள் அப்பா” என்றாளே ஒழிய “நான் பிரிஜேஷை மறந்துவிடுகிறேன்” என்று மட்டும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நிச்சயமாக அவள் மரணத்திலிருந்து தப்பியிருப்பாள்.

தன் உயிரின் உயிரான மகளைக் கொல்கிறேனே எனும் எண்ணத்தை விட பட்டியல் சாதிக்காரனோடு வாழப்போகும் இவளைக் கொல்லத்தான் வேண்டும் எனும் எண்ணம்தான்  அத்தந்தையின் மனதைக் கல்லாக்கி கத்தியால் ஆதிரையைக் குத்தச் செய்து கொலைகாரனாக்கிவிட்டது. பசி வர பத்தும் பறந்து போகும் என்பது போல் சாதி வர, பெற்று வளர்த்த பிள்ளை மேலுள்ள பாசமே பறந்துவிட்டது. இது போலதான் சின்னசாமிமியும், என் மகள் கௌசல்யா பட்டியல் சாதியைச் சேர்ந்த  சங்கருடன் வாழ்வதா? முடியாது. கூடாது. அங்கு கொல்லப்பட்டது கௌசல்யா அல்ல சங்கர். இதே போலதான் சாக்கோ ஜானும்.

கிறித்தவ மதத்திலும் சாதியுண்டு என்பதை உணர்த்திய சம்பவம் இது. உயர் சாதியிலிருந்து கிறித்தவ மதம் தழுவிய தன் மகள் நீனா, பட்டியல் சாதியிலிருந்து கிறித்துவ மதம் தழுவிய கெவின் ஜோஸஃபை மணப்பதா? கூடாது. அங்குக் கொல்லப்பட்டது கெவின். கேரளத்தில், ராஜன் என்பவர் ‘தீயா’ எனும் பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். சின்னசாமிமியும் பிற்பட்ட சமூகத்தைக் சார்ந்தவர். ஆனால் சங்கரும், பிரிஜேஷும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்.

சின்னசாமிமி மற்றும் சாக்கோ ஜான் போல ராஜனுக்கும் கொஞ்சம் ஆள் பலமும், பண  பலமும் இருந்திருந்தால் கண்டிப்பாக பிரிஹேஷ்தான் கொல்லப்பட்டிருப்பார். பெரியாரும், ஸ்ரீநராயணகுருவும் சாதியை ஒழிக்கப் போராடியது தமிழகத்திலும் கேரளத்திலும் உயர்ந்த சாதிகளுக்கும் பிற்பட்ட சாதிகளுக்கும் இடையிலிருந்த இடைவெளியைக் குறைத்ததென்னவொ உண்மைதான்.

ஆனால், பிற்பட்ட சாதிக்கும் பட்டியல் சாதிக்கும் இடையே உள்ள இடைவெளி குறையவே இல்லை என்பதைத்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஒரு காலிலிருந்து ஆனைக்கால் வியாதி மறுகாலுக்கு மாறியது போல், முற்பட்டவர்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி இல்லாமற் போன அதே நேரத்தில், பிற்பட்டவர்களுக்கும் பட்டியல் சமூகத்தினருக்கும் இடையே இருந்த இடைவெளி இல்லாமற் போவதற்குப் பதிலாக இடைவெளி பெரிதாகிவிட்டது.

ஆனால் இச்சம்பவங்களிலிருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு உள்ள சாதி வெறி அந்த அளவுக்குப் புதிய தலைமுறைகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் காலப் போக்கில் இவை எல்லாம் மாறலாம். இவற்றையெல்லாம் மாற்ற விடக் கூடாது என்பவர்களது எண்ணிக்கை கூடாதிருந்தால் மட்டுமே அதற்குச் சாத்தியப்படும். அதற்கு இடையிடையே இதை எதிர்த்துக் குரல் கொடுத்துக்  கொண்டே இருக்க வேண்டும். காலம் எல்லாவற்றிற்கும் மருந்தாகும்தானே! Time and patience will cure everything. காத்திருப்போம்.

பின் குறிப்பு : இம்மூன்று கொலை வழக்குகளிலும் சின்னசாமிமியும், ராஜனும், சாக்கோ ஜானும் தண்டனையிலிருந்து தப்பியிருக்கிறார்கள். குற்ற உணர்வுடன் இனி அவர்களுக்குச் சிறைக்கு வெளியே வாழக் கிடைத்திருப்பது விடுதலை என்று சொல்ல முடியாது. அது உண்மையிலேயே அவர்களுக்குக் கிடைத்த ஆயுள் தண்டனைதான். இவர்களைப் போல் அல்லாது பிள்ளைகளின் ஆசைப்படி சாதி பாராது மணமுடித்து வாழ அனுமதித்த எத்தனையோ புரட்சிக்காரர்களான பெற்றோர்கள் நம்மிடையே பேரக்குழந்தைகளின் சிரிப்பில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை நாம் இங்கு பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தே ஆக வேண்டும். 

-----துளசிதரன்


புதன், 1 ஜூலை, 2020

அக்கம் பக்கம்

அமெரிக்காவில் இருக்கும் என் புகுந்த வீட்டுச் சித்தப்பா மகளுக்கு அரை செஞ்சுரி பிறந்த நாள். அதற்காக அவளுக்குத் தெரியாமல் எங்கள் வட்டத்தில் (எங்கள் குழுதான் எங்கள் புகுந்த வீட்டு ஜாலி பயணக் குழு) உள்ளவர்கள் மற்றும் அவள் பெற்றோர் அனைவரையும் ஜூம் வீடியோவில் அவளை வாழ்த்த ஏற்பாடு செய்தார் குழுவில் ஒருவர். அமெரிக்கா நேரம் இரவு 12க்கு அதாவது இங்கு நமக்கு காலை 9.30க்கு. என்னால் பங்கு கொள்ள முடியவில்லை. அந்த வீடியோ முடிந்ததும் அவள் என்னை அழைக்க

செவ்வாய், 23 ஜூன், 2020

புன்னகையே பொன்நகை - பள்ளி அனுபவம்

பொன்நகை வேண்டாம் புன்னகை ஒன்றே போதும் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் அந்தப் புன்னகையை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். தொலைத்துவிடுகிறோம்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

கேரளத்தில் தேர்வுகள் - அனுபவத் தத்துவம் - செபியின் விளையாட்டு

பகிர நினைத்த செய்தி

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைந்திடட்டும். 

கேரளத்தில், மார்ச்சில் நடை பெறத் தொடங்கிய 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயத்திலே எதிர்பாராத  ஊரடங்கினால்  தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மே மாதம் 26 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு மே 26 முதல் மே 31 வரை நடந்திருக்கின்றன. தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளில், பரீட்சை எழுதும் மையங்கள் மாற்றப்பட்டு, மாற்றப்பட்ட மையம், தேதி, தேர்வு விவரங்கள் என்று எல்லா மாணவ மாணவியர்க்கும் தெறிவிக்கப்பட்டு, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு நடந்திருக்கிறது.

திங்கள், 8 ஜூன், 2020

மஞ்சளழகி - எழுத்தாளர் கடுகு - செபி செல்லம்


மஞ்சளழகி! இது இவளுக்கு நான் வைத்த பெயர். அவளது பெயர் பெருங்கொன்றை/இயல்வாகை/மஞ்சள் வாகை. அறிவியல் பெயர்: Peltophorum ferrugineum. ஆங்கிலத்தில் காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame)

திங்கள், 30 மார்ச், 2020

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4

இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் போட பல மாதங்கள் ஆகிவிட்டதால், இங்குள்ள படங்களின் குறிப்புகள் புரிந்து கொள்ள என்றால் இதற்கு முந்தைய பகுதியை ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்தால் அதன் தொடர்ச்சி இது என்று அறியலாம்.  உங்கள் விருப்பம். இதுதான் கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் கோயிலின் புகைப்படங்களின் கடைசிப் பகுதி. வேறு சில கோபுரங்கள் பின்னர் தருகிறேன். 

வெள்ளி, 20 மார்ச், 2020

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

இந்த இக்கட்டான தருணத்தில் நம் நாட்டிலும் மற்றும் உலகம் முழுவதும் மக்களைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைத்து அயராது உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவச் சேவகர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள், சேவகர்கள் அனைவரையும் நாம் மனமார்ந்து பாராட்டி வாழ்த்துவோம்! நன்றி நவில்வோம்! தினமுமே! அவர்கள் நலனுக்குப் பிரார்த்திப்போம்! அவர்கள் குடும்பம் எல்லாம் தழைத்தோங்க வேண்டும்! நம் வாழ்த்துகளும், பாராட்டுகளும் அவர்களை ஊக்கப்படுத்தவும் உதவுமே! 

மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம். விழிப்புணர்வுடன் அரசுடன் ஒத்துழைப்போம்! விரைவில் நலமே விளைந்திடட்டும்.  விளைந்திடும்!


Image result for thanking all medicos with flowers

----கீதா