வியாழன், 28 ஏப்ரல், 2016

எங்கள் பேட்டையில் தேர்தல்

படம் இணையத்திலிருந்து - நான் போட்டியில் இல்லை உங்களுக்கு அடிமை என்று படுத்திருப்பவர் சொல்கிறார்!!!

எங்கள் பேட்டையில் ஆட்சி மாறப் போகிறது. அடுத்த தலவன்/தலைவி யார் என்று தேர்தலுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றது.

குறுநில மன்னனைப் போல் பல சிறு சிறு பேட்டைகளைத் தனது ஆட்சியில் வைத்துக் கொண்டு பெரிய பேட்டையின் தலைவனாக ஆண்டு வந்த தனியொருவன், மனித வில்லனால் அடித்து வீழ்த்தப்பட்டு இறந்த பின் மற்றொரு இளவல் ஆட்சியைக் கைப்பற்றியதாக எழுதியிருந்தேன்.

பின்னர்தான், இளவல் அல்ல இளவரசி என்பது தெரிய வந்தது.  எங்கள் பேட்டையின் அடுத்த தலைவி ஆயிற்றே. அவளையும் கவனிக்க வேண்டுமே என்று அவளுக்கு ரொட்டித் துண்டுகள், பிஸ்கோத்துகள் என்று கப்பம் கட்டிவருகின்றேன்.

ஆனால், ஒரு வயதே நிரம்பியிருக்கும் இந்த இளவரசி லேசுப்பட்டவள் அல்ல. நானும் கண்ணழகியும் செல்லும் போது, கண்ணழகி தனக்குப் போட்டியாக வந்துவிடுவாளோ என்று நினைத்திருப்பாள் போலும், தன்னை வீரம் மிக்கவளாகக் காட்டிக் கொள்ள, கண்ணழகியை வம்புக்கிழுத்துக் கொண்டிருந்தவள் ஒரு நாள் உறுமிக் கொண்டு நேரில் மோதியவள் பின்னால் சென்றுச் சிறியதாய்க் கடித்தும் விட்டாள்.

கண்ணழகியின் வீரம், தன் மானம் என்னாவது? விடுவாளா? என் பிடியிலிருந்துக் கழன்று, உறுமிக் கொண்டு அவளை விரட்டி அடிபணிய வைத்ததிலிருந்து இப்போது அந்தக் குட்டி இளவரசி எங்களைப் பார்த்ததும், வெகு தூரம் சென்று மறைந்திருந்து எங்களைக் கண்காணிக்கின்றாள்.

கண்ணழகியிடம் அடங்கிவிட்டாலும், தனது பேட்டையை விரிவுபடுத்தும் வேலையில் இருக்கின்றாள். பல அல்லக்கைகளைத் தன் கைக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றாள். தற்போது 4 பேட்டைத் தெருக்கள் அவள் கைவசம். எங்கள் பேட்டை இளவரசி மூக்கழகி எனலாம். அத்தனை அழகு! கம்பீரம்! நான் ஒழுங்காகக் கப்பம் கட்டுவதால் இப்போது என்னுடன் கூட்டணி அமைத்துவிட்டாள்.

அதுவல்ல பிரச்சனை. இப்போது எங்கள் பேட்டைக்குப் பெண் ஒருத்தி தலைவி ஆனதால், தனியொருவனின் கீழ் அடங்கியிருந்த அடுத்த பேட்டைக்காரார்கள் இப்போது வீறு கொண்டெழுந்து, எங்கள் பேட்டையின் தலைவியுடன் மல்லுக்கு நிற்கின்றனர்.

காரணம் வேறு ஒன்றுமில்லை. அந்தப் பேட்டையின் தலைவி, தனியொருவன் இருந்த வரையில் அடங்கி இருந்தவள் இப்போது எங்கள் தனியொருத்தி வந்துவிட்டதால் போட்டி. இரு பெண்கள் ஒரே பேட்டைக்குத் தலைவிகளாக இருக்க முடியுமா? அப்புறம் வரலாறு என்னாவது?

பெரிய பேட்டை பிரிந்து நிற்கின்றது. நானும் கண்ணழகியும் கடக்கும் போது அந்தப் பேட்டையின் தலைவியான இளவரசியும், அவளது அல்லக்கைகள் 3 இளவல்களும், 5 பெரியவர்களுமாய் 9 பேர் எங்களைக் கண்டதும் கத்திக் கொண்டு, பாய்ந்து ஓடி வருவதைப் பார்க்க வேண்டும். அழகோ அழகு!

கண்ணழகி விடுவாளா? அவளும் உறும, நான் அவர்களுடன் ஒரு சமரசம் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் கப்பம் கட்ட ஆரம்பித்தேன். 

இந்தப் பேட்டையினர் சற்று வீராப்பு உள்ளவர்கள் போலும். என்னிடம் சமரசத்திற்கு இன்னும் அதிகம் எதிர்பார்த்தனர்.  அவர்களை அடக்க என்ன வழி என்று யோசித்து, பெரிய கப்பம் கட்டினேன். வந்தது வினை.

தங்களுக்குள் அந்தக் கப்பத்தைப் பங்கு பிரிப்பதில் சண்டை வந்து இப்போது அந்தப் பேட்டையின் கட்சியில் சிறு பிளவு. பிளவுபட்ட அந்த அல்லக்கைகள் தனியாக ஒரு கட்சி அமைத்திருப்பதாகத் தெரிகிறது.  பிரிந்தவர் எங்கள் பேட்டைத் தலைவி மூக்காயியுடன் கூட்டணியா இல்லை அடுத்த பேட்டையுடனா, இல்லை தனியாகவா என்று இன்னும் தீர்மானமாகவில்லை.

எங்கள் பேட்டையிலும் இந்தக் கப்பம் பங்கில், பிரிவினை இல்லை என்றாலும் சிறு சலசலப்புத் தோன்றியுள்ளது. 

இத்தனை நாட்கள் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அடங்கி ஒடுங்கி இருந்தவர்கள், சமீபத்திய மழை வெள்ளத்திற்குப் பிறகு பக்கத்துப் பேட்டை, அருகிலுள்ள பேட்டைகளில் இருந்து வந்த புதியவர்களுடன் நட்புறவும் வைத்துக் கொள்ள, அல்லக்கைகளும் பெருகி,  இப்போது தனிக் கட்சி, தனிப் பேட்டை என்று மொத்தம் 5 ஆகப் பிரிந்து நிற்கின்றார்கள்.

நான் எத்தனைப் பேட்டைகளுக்குக் கப்பம் கட்ட முடியும்? எல்லாம் அந்தத் தனியொருவன் அடிபட்டு இறந்ததால் வந்தது. 3 பேட்டைகளுடன் சமரசம். அதில் இரு பேட்டைகளில் ஒரு பேட்டைக் கட்சி எங்கள் பேட்டைத் தலைவி மூக்கழகியுடன் இணைந்து விட்டார்கள்.

மற்றொரு கட்சி பக்கத்துப் பேட்டையின் போட்டி இளவரசியுடன் கூட்டணி. இணையாத பேட்டைக் கட்சி, இப்போது பிளவு பட்டு நிற்கும் பக்கத்துப் பேட்டை இரு கட்சிகள், எங்கள் பேட்டை மூக்கழகிக் கட்சி. ஆக மொத்தம் இப்போது 4 பேட்டைக் கட்சிகளுக்குள் போட்டி.

என்ன? நம்ம தமிழ்நாட்டுத் தேர்தல் மாதிரி ஒரே குழப்பமாக இருக்கிறதா? நம் தேர்தல் கட்சிகள் காமெடிக் கூத்துகளை அரங்கேற்றுவது போல் எங்கள் பேட்டையிலும் காமெடிக் கூத்துகள் அரங்கேறும்.

பாருங்கள்! இவர்களுக்குள் வயதானவர்கள் ஒதுங்கி நின்று இளவல்களுக்கு வழி வகுத்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். ஹும் நம்ம தலைவர்களும் இருக்கிறார்கள், தள்ளாத வயதிலும் ஆட்சியைப் பிடிக்கக் காத்திருக்கிறார்கள்.

நேற்று பேட்டையில் தேர்தல் நடக்கத் தொடங்கியது. அப்போது பார்த்து “மக”ராசியின் கட்சி 5 நிமிடத்திற்குச் சரவெடி வெடிக்க, கொட்டடித்துக் கொண்டு வண்டிகள் கிளம்ப, அதைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்தில் கட்டுமரத்தவரின் கட்சியும் வெடி வெடித்துக் கொடி பிடித்துத் தங்கள் வண்டிகளைக் கிளப்ப, எல்லா நாலுகால் தலைவர், தலைவிகளும், அல்லக்கைகளும் நொடியில் காணாமல் போயினர்.

Image result for street dogs fight
படம் - இணையத்திலிருந்து - குழப்பத்தில் இருக்கிறார்கள்

பாவம் அடுத்த தேர்தல் நாளுக்குக் காத்திருக்கிறார்கள். நானும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் எங்கள் பேட்டையின் தலைவனோ, தலைவியோ அவரை வரவேற்கவும் எல்லா பேட்டைகளும் ஒன்றாகிடவும்! அதுவரை என் கப்பம் தொடரும்!!

----கீதா

(இணையமும் இன்னும் சரியாகவில்லை. நாளை முதல் உறவினர் வருகை, திருமண விழாக்கள், பயணம், என்பதால் மே மாதம் 12 ஆம் தேதிக்குப் பிறகுதான் வலைப்பக்கம் வர இயலும். முடிந்தால் இடையில் ஒரு நாள்.....சந்திப்போம் மீண்டும்!)




புதன், 27 ஏப்ரல், 2016

விலங்குகளும் மருத்துவமும் 2– குரங்குகளின் கருத்தடை மருந்து – இயற்கையின் ரகசியங்கள்


இயற்கையே விந்தையானதுதான். முந்தைய பதிவில் குரங்குகள் மற்றும் சிம்பன்சீக்கள் தங்களுக்கு உடல் உபாதைகள் வரும் போது சில இயற்கை வைத்தியங்கள் செய்து கொண்டு தங்களைக் காத்துக் கொள்கின்றன என்று எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி...
இந்த சிம்பன்ஜீக்கள் மழைக்காலத்தில் அதிகமான மருத்துவத் தாவரங்களை உண்ணுகின்றன, நிமோனியா மற்றும் வேறு சில பயமுறுத்தும் தொற்றுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள. இது போன்ற செயல்களிலிருந்து, குரங்கினங்கள் தங்கள் உடல்நல உபாதைகளைக் குறித்து நன்றாகவே தெரிந்து வைத்திருப்பது போலத் தெரிகின்றது.










கொலோபஸ் குரங்கு வகை  Colobus monkeys on the island of Zanzibar 



அதே போன்று, ஜன்ஜிபர் தீவினைச் சேர்ந்த கொலோபஸ் குரங்கு வகைகள், மனிதர்கள் நெருப்பு மூட்டுவதற்கு வைத்திருக்கும் கரித்துண்டுகளைத் திருடித் தின்னுமாம். இந்தக் கரித்துண்டுகள், குரங்குகளின் உணவாகிய மாம்பழம், பாதாம் கொட்டை மரங்களின் இலைகளை உண்பதால் வரும் நச்சினை வெளியேற்ற உதவுகின்றதாம்.

ஆவாஷ் அருவி - எத்தியோப்பியா

Image result for balanites roxburghii
 பாலைவனப் பேரீச்சை மரம் - (Baboons) குரங்கு வகை

எத்தியோப்பியாவில், ஆவாஷ் அருவியின் அருகில் பாலனைட்ஸ் எஜிப்டியாக்கா Balanites aegyptiaca எனும் ஒரு வகை பாலைவனப் பேரீச்சம் பழம் அதிகமாகக் காணப்படுமாம். இந்த அருவியைன் கீழே வாழும் பபூன் (Baboons) எனப்படும் மிகப் பழமையான குரங்கினம் இந்தப் பேரீச்சம் பழத்தை உண்கின்றன. இந்தக் குரங்குகள் தண்ணீரில் இருக்கும் நத்தைகளை உண்பதால் அந்த நத்தைகளின் உள் இருக்கும் புழுக்கள் இந்தக் குரங்குகளின் உடலிலும் காணப்படுகின்றன. இந்தப் பேரீச்சம் பழம் அந்தப் புழுக்களை வெளியேற்ற உதவுகின்றன.

அதே சமயம் அருவிக்கு மேலே வாழும் பபூன்ஸ் குரங்குகள் இந்தப் பேரீச்சையை உண்பதில்லை ஏனென்றால் அவை இந்த நத்தைகளை உண்பதில்லை. 

விந்தைதான் இல்லையா! இதிலிருந்து விலங்குகள் அவை தாங்கள் வாழும் இடத்திற்கு ஏற்றாற் போல் வாழ்கின்றன என்பது தெரிகின்றது.

இவற்றை எல்லாம் விட மிக ஆச்சரியமான ஒன்று என்னவென்றால், ஹௌலர் இன வகைக் குரங்குகள் இயற்கை வழி குடும்பக்காட்டுப்பாட்டை அறிந்து வைத்திருக்கின்றன என்பதே. இந்த வகைக் குரங்குகள் மத்திய, தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.


Image result for muriqui monkey of brazil
ப்ரெசீலியன் இனமான முரிக்கி - Muriqui

ப்ரேசிலில் ஹௌலர் இனப் பெண் குரங்குகள் - ப்ரெசீலியன் இனமான முரிக்கி - குழந்தை பிறந்த சில தினங்களில் ஒரு வகையான, இன்னும் பெயர் சூட்டப்படாத மரத்தின் இலைகளைக் கணிசமாக உட்கொள்ள வேண்டித் தேடிச் சென்று உண்ணுமாம். இந்த இலைகளில் ஐசோஃப்ளமைன்ஸ் எனப்படும் வேதியியல் காணப்படுகிறதாம். இந்த வேதியியல் பொருள் கிட்டத்தட்ட ஈஸ்ட்ரஜன் போன்ற தன்மை உடையது என்றும், அது கரு உருவாகுவதைத் தடுப்பதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

காஸ்ட்டாரிக்கா - ஹௌலர் 

மத்திய அமெரிக்காவில் உள்ள காஸ்ட்டாரிக்கா எனும் நாட்டில் இந்த ஹௌலர் வகையைச் சேர்ந்த பெண் குரங்குகள் கலவிக்கு முன்னும் பின்னும் ஒரு வகையான மூலிகைத் தாவரத்தை உட்கொள்கின்றன. இந்த மூலிகைத் தாவரத்தை வேறு எந்த சமயத்திலும் உட்கொள்வதில்லை.

இந்தக் காலகட்டத்தில் இந்தக் குரங்குகளின் இனப்பெருக்கம் எதுவும் பதியப்படவில்லை என்பதால் இந்த மூலிகையைக் குரங்குகள் தங்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்துவதாக இருக்கலாம் என்று “குரங்குகளின் மருத்துவம்” என்ற புதிய வகையான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த ஆராய்ச்சியில் பல வியத்தகு ரகசியங்கள் அடங்கியிருப்பதாகவும் தெரிகின்றது. மேற் சொன்னதையும் விட ஆச்சரியமான ஒன்று என்னவென்றால், இந்த ஹௌலர் வகையினம் தங்களுக்குப் பிறக்கப் போகும் குட்டியின் பாலினையும் முடிவு செய்கின்றனவாம்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் குட்டிகள் மட்டுமே பிறக்கின்றதாம்.  பிற நேரங்களின் பெண் குட்டிகள் பிறக்கின்றன என்று 20 வருட ஆராய்ச்சிகளிலிருந்து அறிய முடிகின்றது. இந்தப் பெண் குரங்குகள் கலவிக்கு முன்னும் பின்னும் உண்ணும் ஒரு குறிப்பிட்ட அந்த மூலிகைத் தாவரம் வஜைனாவின் ம்யூக்கஸின் அமிலத்தன்மையை பாதிக்கும் தன்மை உடையனவாக இருக்கின்றன என்று சொல்கின்றார்கள்.

இந்த ஹௌலர் வகை எப்படி இப்படிக் கட்டுப்படுத்துகின்றன என்பது இந்தக் குரங்குவகைகளின் கடினமான சமூக அமைப்பிலிருந்து தெரிகின்றது. இந்த வகைக் குரங்குகளின் ஒரு குழுவின் தலைவன் பெரும்பாலும் ஆண் தான். அதனால், பெண் குரங்கு தனக்கு ஆண் குட்டி பிறப்பதனால், தன் குழுவில் தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்கின்றாதாம்.

அதே போன்று எப்போது பெண் குரங்குகளுக்குப் பற்றாக் குறை வருகின்றதோ அப்போது பெண் குரங்குகள் பெண் குட்டிகளைப் பெற்று, தங்கள் பரம்பரை வரிசையில் தங்கள் நிலையை இன்னும் சற்று அதிகமாக நிலை நிறுத்திக் கொள்ளுமாம். ஏனென்றால் பிறக்கும் பெண் குட்டிகள் அம்மாவாகுமே! இப்படி இந்த இனம் பல வருடங்கள் அழியாமல் இருக்க உதவுகின்றதாம்.


ஆப்பிரிக்கப் பெண் யானை

ஆப்பிரிக்கப் பெண் யானைகள் கரு உருவாகும் சமயத்திலிருந்து நல்ல நார்ச்சத்துள்ள உணவு முறையை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவை, பிரசவகாலம் நெருங்கும் சமயத்தில் அவைகளின் உணவு முறையை மாற்றிக் கொண்டு விடுகின்றனவாம். தங்கள் உணவு கிடைக்கும் இடத்திலிருந்து, ஒரு வகையான புதர்ச் செடியின் இலைகளையும், பட்டையையும் உண்பதற்காக, ஏறக் குறைய 17 மைல் தூரம், கனமான உடம்புடன் நடந்து சென்று உண்டுவிட்டு சில நாட்களில் பிரசவித்து விடுமாம்.

இந்த இலைகளும், பட்டைகளும் அவற்றின் பிரசவ வலியைத் தூண்டி, பிரசவம் இயற்கையாக நல்ல முறையில் நடைபெற உதவுகின்றது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். கென்யா நாட்டுப் பெண்களும் தங்கள் பிரசவ காலத்தில் பிரசவ வலியைத் தூண்டுவதற்கு இதே இலை மற்றும் பட்டைகளைலிருந்துதான் தேநீர் தயாரித்து அருந்துகின்றனர்.

விலங்குகள் விந்தையானவைதான், பாருங்கள் தாங்கள் வாழும் இடத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்கின்றன!

ரகசியங்கள் தொடரும்...

......கீதா

படங்கள் இணையத்திலிருந்து

(இணையப் பிரச்சனை தீரவில்லை. அதனால் பதிவுகளுக்கு வருவதும், கருத்துகள் இடுவதும் சற்றுத் தாமதமாகலாம்...)