சனி, 28 நவம்பர், 2015

வரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகை) படங்கள். -1

லியானார்டோ டா வின்சியின் லாஸ்ட் சப்பர்
ராஃபேலின் “ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்
ரெம்ப்ராண்டின் “அப்டக்ஷன் ஆஃப் யூரோப்

லியானார்டோ டா வின்சியின் லாஸ்ட் சப்பரும்”, ராஃபேலின் “ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸும்” ரெம்ப்ராண்டின் “அப்டக்ஷன் ஆஃப் யூரோப்”பும், ரவி வர்மனின், “தர்பைப் புல் முனை காலில் தைத்த சகுந்தலையும்” எப்போதாவது ஏதேனும் புத்தகத்திலோ, நாளிதழிலோ நாம் காண நேரும் போது அவை நம்மை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த, அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளை நம் மனதில் கொண்டு வரும்.  அது போன்ற சித்திரங்கள் பேசுவதெல்லாம் காலத்தால் அழியாத வரலாற்று உண்மைகள்.  இப்போதும் வரலாறு படைக்கும் சித்திரங்கள் வரையப்படாமல் இல்லை.  ஆனால், அவற்றை விட இப்போதெல்லாம் வரலாற்று உண்மைகளை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருப்பைவகள் என்னவோ வரலாறு ஆகவிருக்கும் சம்பவங்களைக் காண நேரும்  புகைப்படக் கருவியின் கண்களுடன் சுற்றித் திரியும் புகைப்பட நிபுணர்கள் ஒற்றி எடுக்கும் புகைப்படங்கள்தான்.

ஐலான் குர்தி
     சிரியா நாட்டு அகதிகள் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுதல்
  இவர்களைப் பார்க்கும் போது நாம் சொர்கத்தில் வாழ்கின்றோம் இல்லையா...ஆனால் கிடைத்த சொர்கத்தையும் நாம் கெடுத்துக் கொண்டிருக்கின்றோம்...

 சிரியாவிலிருந்து க்ரீஸுக்குப் படகில் தப்பிச் சென்ற போது விபத்துக்குள்ளான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது ஐலான் குர்தியின், கரையில் ஒதுங்கிய, உயிரற்ற உடலைக் காண்பித்த புகைப்படம் அது போல் ஒன்றே. சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்துத் தப்பி, ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 3 1/2 கோடி மக்களின் துயரத்தையும், உயிரைப் பணையம் வைத்து அவர்கள் மேற்கொண்ட அப்பயணத்தின் உயிர் நீத்தவர்களையும் நினைக்க வைக்கும் அப்புகைப்படம் சமீபத்தில் உலகை உலுக்கிய ஒன்றும் கூட. எப்படியோ, அப்புகைப்படம் சிரியாவின் அகதிகளைத் தங்கள் நாடுகளுக்குள் அதுவரை அனுமதிக்காமல் இருந்த பல ஐரோப்பிய நாடுகளில் மனதை மாற்றி அவர்கள் நாட்டுக் கதவுகளை சிரியா அகதிகளுக்காகத் திறக்கச் செய்தது.

ஆர்க்கோ டத்தா எடுத்த ஒரு புகைப்படம்

     அது போலவே 2004 ஆம் ஆண்டு புலிட்ஸர் விருது பெற்ற ஆர்க்கோ டத்தா எடுத்த ஒரு புகைப்படம்.  சுனாமியில் உயிரிழந்த கணவனின் சடலத்தருகே மண்டியிட்டு அழும் ஒரு பெண்ணின் அப்புகைப்படம், காண்போரது மனதில் தீக்கங்குகளை வாரி இரைத்துச் சுனாமியை நினைவுபடுத்தும் ஒன்று.

தன்னைக் கொல்ல வேண்டாம் எனக்கெஞ்சும் குத்துப்பின் அன்சாரி மற்றும் வாளுடன் இரு கைகளை உயர்த்தி எதிரிகளைக் கொல்லத் தயாராய் நிற்கும் அசோக் மோச்சி தற்போது தாங்கள் செய்த தவறை உணர்ந்து மதக்கலவரம் கூடாது என்று பிரச்சாரம். பாராட்டுவோம்.

  அது போலவே கண்கலங்கி கைக்கூப்பித் தன்னைக் கொல்ல வேண்டாம் எனக்கெஞ்சும் குத்துப்பின் அன்சாரி மற்றும் வாளுடன் இரு கைகளை உயர்த்தி எதிரிகளைக் கொல்லத் தயாராய் நிற்கும் அசோக் மோச்சியின் புகைப்படங்கள் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை நினைவுபடுத்துபவை. 

கடந்த வருடம் இவ்விருவரும் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஒரே மேடையில் தோன்றி கலவரத்திற்கெதிராகப் பிரச்சாரம் செய்தார்கள்.  செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தான் அன்று சிந்திக்காமல் செய்த தவறுக்கான பிராயச் சித்தம்தான் இப்போது தான் மேற்கொள்ளும் பிரச்சாரம் என்று அசோக் மோச்சி சொல்லி வருந்துவதைப் பார்த்த போது மதக் கலவரத்தில் பங்கெடுப்பவர்களில் பலரும் இப்படிச் சிந்திக்காமல், காளை ஈன்றது எனக் கேட்கும் போது கயிற்றை எடுத்துக் கொண்டு கன்றினைக் கட்டப் போகின்றவர்களே என்று எனக்குத் தோன்றியது.

நிக் உட் - கிம்  ஃபுக் தற்போது....
Image result for kim phuc and nick ut
கிம் ஃபுக், தற்போது, யு . என். குட்வில் அம்பாசடராக இருக்கிறார்

அது போல் 43 வருடங்களுக்கு முன், 1972 ஜீன் மாதம் 8 ஆம் தேதி வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்.  தென்வியட்நாம் ராணுவத்தின் குண்டு வீச்சில் அகப்பட்டுத் தீப்பிடித்த ஆடையை அவிழ்த்தெறிந்து நிர்வாணமாக கதறி அழுது ஓடும் ஒன்பது வயதான கிம் ஃபுக்கின் புகைப்படம். வியட்நாம் யுத்தமும் அதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா வகித்தப் பங்கையும் அதன் விளைவுகளையும், வியட்நாமியரின் துயரத்தையும் நம் மனத்திரையில் ஓடச் செய்கின்ற ஒரு புகைப்படம் அது. 

அப்புகைப்படத்தை எடுத்த நிக் உட் என்ற 21 வயது இளைஞன் உடனே அக்குழந்தையின் உடலில் பற்றிப் பிடித்த தீயை அணைத்துத் தான் அணிந்திருந்த கோட்டால் அவளைப் போர்த்தித் தன் காரில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அச்சிறுமியை உயிர்பிழைக்கச் செய்தார்.  இப்போது கானடா, டோரோண்டோவில் வாழும் கிம்ஃபுக் யுனைட்டெட் நேஷனின் குட்வில் அம்பாசிடராகவும் இருக்கின்றார்.  சமீபத்தில் ஒரு விழாவில் பங்கெடுத்த கிம்ஃபுக் மற்றும் நிக் உட்டின் புகைப்படம் நாளிதழ்களில் வெளியிடப்பட்டதைப் பார்த்த போது 1972 ஆம் வருட புகைப்படம் நம் மனதில் உண்டாக்கிய வேதனை கொஞ்சம் குறைந்தது போல் ஒரு உணர்வு. 

தொடரும் பேசும் புகைப்படங்கள்.....


 புகைப்படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து...



புதன், 25 நவம்பர், 2015

வரவு எட்டணா....செலவு ரெண்டணா....???!!!!

“மன்னாரு அண்ணே! மழை போதாதுன்னு திண்ணைல கவலையோட உட்கார்ந்திருக்கீங்க போல தெரியுது?”

“தம்பு வாடா வா. வரும்போதே நக்கலா.... நினைச்சேன் எங்கடா ஆளைக் காணலையேனு. மழைய ஏன் குத்தம் சொல்லணும்? வீட்டுக்குள்ள எல்லாம் தண்ணி வர அளவு நம்ம ஊரு நிலைமை....என்னத்தச் சொல்ல”

“ஆமாண்ணே.  நம்ப வீட்டுக்குள்ள எப்படி அண்ணே தண்ணி வந்துச்சு?  இந்தத் தெருலதான் தண்ணி தேங்கலையே அண்ணே..”

“டேய் முன்னாடிதான் தேங்கணுமா?  பின்னாடி உள்ள தெருல தான் போட் விடற அளவு தண்ணி தேங்கிருச்சே...பின் வழியா உள்ள தண்ணி வந்துருச்சு...”

“ஆமாண்ணே நான் கூட போட் விட்டேன்.  நம்ம மெயின் ரோட்டுலருந்து உள்ள வரதுக்கு ஒரு ஆளுக்கு 15 ரூபா வைச்சு...”

“அடப்பாவி! போட் விட்டது மக்களுக்கு உதவரதுக்குனு பார்த்தா நீ அதுலயும் துட்டு அள்ளுற...அதுவும் 10 நிமிஷம் கூட நடக்கற இல்லாத தூரம்...."

“சாதாரண நாள்ல ஆட்டோக்காரங்க 40 ரூபா வாங்குறாங்கல்ல....இப்ப தண்ணித் தேங்கியிருக்குதுல. ஒவ்வொரு சீசன்லயும் இப்படி அதுக்கு ஏத்தா மாதிரி சம்பாதிக்கணும் அண்ணே.....”

“அது சரி..உங்கிட்டப் பேசிப் பிரயோசனமே இல்லை.......ம்ம்ம் மக்களும் இப்படித்தான், ஆளறவங்களும் அப்படித்தான். இதோ இங்க பாரு... புகைய மட்டும் அடிச்சுட்டுப் போறாங்க. கொசு வராம இருக்க குப்பைய டெய்லி, ஒழுங்கா அப்புறப்படுத்தி சுத்தமா வைக்காம, கொண்டு கொட்டுறதையும் பொது இடத்துல கொட்டினா...?...கொசு ஒழியவா போகுது? புகை அடிச்சா நம்ம தொண்டையும், கண்ணும் எரியுது. உடம்புக்கு நல்லதே இல்லை இதைச் சுவாசிச்சா.. எல்லாமே தற்காலிகத் தீர்வுதானே தவிர முழுமையான தீர்வு எடுக்கறதே இல்லை....”

“நீங்க உடனே ஆரம்பிச்சுருவீங்களே....அது இருக்கட்டும், இப்ப உங்க கவலை என்னன்னா, உங்க வீட்டுப் பின்பக்க காம்பௌன்ட் சுவர் இடிஞ்சு விழற அளவுக்கு ஆயிருச்சு....வீட்டுக்குள்ள மேல் தளம் ஒழுகுது, எலக்ட்ரிசிட்டி லைன் எல்லாம் ஷாக் அடிக்கற நிலைமை.... சரி பண்ணனும்.....இன்னும் இப்படி நிறைய செலவு இருக்கு..... அண்ணி எல்லாம் சொல்லிச்சு..."

“ம்ம்ம் என்னால அவ்வளவு எல்லாம் செலவழிக்க முடியாதுனுதான்....”

“என்னண்ணே...நீங்க நல்ல கவர்ன்மென்ட் வேலையிலதானே இருக்கீங்க..அப்புறம் என்னண்ணே”

“டேய் என்னடா நீ? நான் என்ன கிம்பளமா வாங்குறேன்? நான் வாங்குறது சம்பளம். என் பொண்ணுங்க ரெண்டு பேரும் மெடிக்கல் படிச்சுக்கிட்டுருக்காங்க...அதுக்கு எவ்வளவு செலவு ஆகுதுன்னு உனக்குத் தெரியுமாடா...அப்புறம் கல்யாணம்...அப்புறம் எங்க வீடுதான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போலவாச்சே.......உங்கண்ணியோட தம்பிங்க, தங்கச்சிங்க எல்லாரும் இங்கதானே தங்கிப் படிச்சாங்க. இப்ப அவங்க புள்ளைங்க வேற. இங்க இருக்கறவங்களுக்கே வாயையும், வயித்தையும் கட்டித்தான் பொழைக்க வேண்டியிருக்கு.....அப்புறம் எங்க போறது நானு....”

“தம்பு! உங்கண்ணன் இந்த மாதிரிச் சொல்லிக் காட்டுறதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...அவங்க அம்மா இங்கதானே இத்தன நாள் இருந்தாங்க...இப்ப மழை வந்த உடனே இங்க ஒழுகுது, தண்ணி உள்ள வந்துரும்னு உடனே அவங்க பணக்கார மக வீட்டுக்குப் போயிட்டாங்கல்ல.. இதுக்குத்தான் நான் உங்கண்ணன அவங்க அம்மாகிட்ட பணம் கேக்கச் சொன்னா... உங்கண்ணனுக்கு அப்ப மட்டும் காது செவிடாகிடும்...”

“டேய் தம்பு உங்கண்ணியக் கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு...அம்மா எல்லாம் தரேனு சொல்லிருக்காங்க...”

“அட! அம்மா எல்லாருக்கும் கொடுக்கறாங்களா.....ஹை! அப்ப எனக்கும் கிடைக்கும்!!..”

“அடேய்! இது என் அம்மா....என்னைப் பெத்த அம்மா...”

“......ஆ! அப்படியே இருக்கட்டும்... அப்ப உங்களுக்கு என்ன கவலை.  அதான் உங்கம்மா தரேன்னு சொல்லிட்டாங்களே...”

“தரேன்னு சொல்லிட்டாங்க. ஆனா, என்ன செலவாகும்னு பட்ஜெட் போட சொல்லிருக்காங்க. அதான் கவலையே....”

“ஹஹஹ அண்ணே இத மாதிரி ஒரு நல்ல சான்ஸ் இல்லவே இல்ல அண்ணே.....கணக்குப் போடறது என்ன கஷ்டமா என்ன? போடும் போது கூடவே போட்டுக்கங்க.  உங்களுக்கும் சேர்த்து...”

“அடப் பாவி! இந்த மாதிரி அம்மாக்கிட்டயே பொய் கணக்குச் சொல்லணும்னு ஐடியா கொடுக்க எப்படிடா உனக்கு மனசு வருது?”

“என்னண்ணே... நீங்க.... காந்தி, காமராசர் கணக்குக் காலத்துல இருக்கீங்க! 5+5=10, 5-4=+1 சேமிப்பு அப்படினு. இந்தக் காலத்துத் கணக்குத் தெரியாதவரா இருக்கீங்களேண்ணே....5+7=10, 5-4= -2 னு சொல்லி அதையும் +2 ஆக்கித்தான் பழக்கம். இதுதான் இங்க நடக்குது.."

“டேய்!  நான் நம்ம “கணக்குப் பிள்ளை” நண்பர்கிட்ட கணக்குப் போடச் சொல்லி அம்மா கிட்டக் கொடுத்துட்டு, அப்புறம் செலவாகுற கணக்கையும் கொடுக்கலாம்னு பார்த்தா...நீ சொல்லுற கணக்கு எல்லாம் என் கணக்குப் பிள்ளை போட மாட்டாரு...அவரு நேர்மையான கணக்குப் பிள்ளை..”

“தெரியுமே...அப்ப வேற கணக்குப் பிள்ளையப் பாருங்க...நாட்டுல தப்புக் கணக்குப் போடற கணக்குப் பிள்ளையே இல்லாத மாதிரி பேசுறீங்களே. பின்ன என்னண்ணே.....அம்மாதான் நிறைய பணம் சேர்த்து வைச்சுருக்காங்கல்ல... எப்படியும் அவங்க காலத்துக்கு அப்புறம் உங்க எல்லாருக்கும் வர வேண்டியது தானே. இப்பவே உங்க எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதுதானே...அத எதுக்கு இப்படிக் கணக்குப் பார்த்துப் பதுக்கி வைக்கணும்?..”

“தம்பு!  நீ நினைக்கிற அம்மா இல்ல எங்கம்மா.  நேர்மையானவங்க...எல்லாத்தையும் இப்பவே கொடுத்துட்டா எல்லாரும் வீணா செலவழிச்சுடுவாங்கனுதான், அப்பப்ப என்ன தேவையோ அதைக் கரெக்டா கணக்குப் பார்த்துக் கொடுத்துடுவாங்க. எவ்வளவு நல்ல விஷயம்! அது மட்டுமில்ல. அவங்க நிறைய ஏழைங்க படிப்புக்கும் உதவறாங்க. ஆனா, நான் கவலைப்படறது எதுக்குனா....”

“தம்பு! நீ சொல்லறதத்தான் நானும் ரெண்டு நாளா சொல்லிக்கிட்டுருக்கேன் உங்கண்ணங்கிட்ட. சொன்னா கேட்டாத்தானே. அவங்க யாருக்கோ கொடுப்பாங்களாம். அதெல்லாம் கணக்கு கிடையாது....எங்களுக்குத் தரும்போது மட்டும் கணக்கு. இவரு என்னடானா, “வீடு சரி பண்ணாட்டியும் பரவால்ல நான் அம்மாகிட்ட பொய் கணக்குக் கூட்டிச் சொல்ல மாட்டேன் அப்படினு பிடிவாதம் பிடிக்கறாரு..”

“அண்ணே! என்னண்ணே.  இப்படிப் பொழைக்கத் தெரியாதவரா இருக்கீங்க...கொஞ்சம் லட்சங்கள் கூட்டிச் சொல்லி பட்ஜெட் கணக்கு போடறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லண்ணே. அம்மா என்ன போகும் போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறாங்க. அடப் போங்கண்ணே.ஒழுங்கா நான் சொன்ன மாதிரி பட்ஜெட் போடுற வேலையப் பாருங்க....”

“இல்ல தம்பு...எங்கம்மா பாவம்...நேர்மையான அம்மாவுக்குப் பொறந்த நான் அவங்கள ஏமாத்த மாட்டேன்...”

“தம்பு!  இவரு வேலைக்கு ஆகமாட்டாரு. நீ ரிப்பேர் பண்ணுற ஆளுங்களப் பாருடா. பேசி முடிச்சுக் கூட்டிட்டு வா..”

“ஓகே! அண்ணி!  நீங்க சொல்லிட்டீங்கல்ல...அப்புறம் என்ன!? இன்னைக்கே ஆளைப் பார்த்துட்டாப் போச்சு...அண்ணி...என்னைய மறந்துடாதீங்க....எனக்கும் சேர்த்துக் கணக்குப் போட்டுருங்க.....”
“தம்பு!....எல்ல்ல்லாத்துக்கும் சேர்த்தே.. கணக்குப் போட்டுறலாம்...என் தம்பி..கணக்குப் பிள்ளை... இருக்கான் கணக்குப் போடறதுக்கு.”

“அடப்பாவிங்களா! வீட்டுக்குள்ளயே இப்படினா...நாடு? இப்படிக் கணக்குப் பிள்ளைங்க இருக்கறதுனாலதான் நாடு உருப்படாமப் போகுது....”(தனக்குள் எங்க அம்மா அவங்க காலத்துக்கு அப்புறம் எல்லாம் அனாதைப் பிள்ளைங்களின் படிப்புக்கு உதவும் ட்ரஸ்டிற்குனு அவங்க எழுதி வைச்சுருக்கறது இதுங்களுக்குத் தெரியாம இருக்கறதுதான் நல்லது) என்ற மன்னாரு என்ன செய்வதென்றுத் தெரியாமல் கவலையுடன் முழித்துக் கொண்டிருக்கின்றார். அவர் எதிர்த்தால், மறுத்தால் திண்ணைதான் கதி என்று அவருக்குத் தெரியாதா என்ன...!!
___________________________________________________________________________________________________________
கட்டமைப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க, 8,481 கோடி ரூபாய் தேவை
 மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க, சேத மதிப்பீடுகள் குறித்து, நேரடியாக ஆய்வு செய்ய, தமிழகத்திற்கு மத்திய குழுவை, உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.  'வெள்ள சேதம் குறித்து, நேரில் ஆய்வு நடத்த, மத்திய அரசு சார்பில், உயர் அதிகாரிகள் குழு விரைவில், தமிழகத்துக்கு அனுப்பப்படும்; இந்த குழு அறிக்கை தந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' எனவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: பதிவிற்கும் இந்தச் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை....
____________________________________________________________________________________________________________

இன்றைய எங்கள் பதிவிற்கும், 10 நாட்களுக்கு முன் நம் நண்பர் டிடி கடவுளைக் கண்டேன் http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/All-is-god.html. என்ற தொடர்பதிவில் குறிப்பிட்டிருந்த குறள்களின் ஒருவரி அர்த்தத்திற்கும் ஒரு சிறிய தொடர்பு இருப்பது போல் எனக்குப் பட்டதால் இங்கு அதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

அருமையான திருக்குறள்கள். ஐயன் அப்போதே எப்படி எல்லாம் உலகியல், சமூகம், அரசியல் குறித்து எல்லாம் எழுதியிருக்கின்றார் என்ற வியப்பு. அந்தத் திருக்குறள்கள் பற்றியோ, அதன் அதிகாரம் பற்றியோ இங்கு நான் சொல்லப் போவதில்லை. குறள்கள் என்ன, அதன் தொடர்பான திரைப்படப்பாடல்களை (அவர் குறிப்பிட்டிருந்தாலும்) எப்படித் தொடர்புப்படுத்த உள்ளார், எப்போது பதிவு போடப் போகின்றார் என்று காத்திருக்கும் உங்களில் நாங்களும் அடக்கம்.

நாங்களும் தொடர்பதிவில் இருந்ததால், (இருந்தால்) எங்கள் பதிவை இடும் முன் வேறு எந்தத் தொடர்பதிவையும் பார்ப்பதில்லை என்பது நாங்கள் பொதுவாகக் கடைப்பிடிக்கும் ஒரு நியதி என்பதால், டிடியின் பதிவையும் பார்க்கவில்லை.

டிடி என்னை அழைத்து, “பதிவு பார்க்கலையா?” என்று வினவ, நான் எங்கள் நியதியைச் சொல்ல, அவர், “நான் ஒரு போட்டி வைச்சுருக்கேன்.  10 திருக்குறள் சும்மா ஒரு வரியில் குறிப்பு மட்டும் கொடுத்து, அதுக்கான பாடல் பெயர் மட்டும் கொடுத்துருக்கேன். அந்த 10 குறளும் எந்த அதிகாரம்னு கண்டுபிடிக்கணும். 2 பேர் சரியான விடை சொல்லிருக்காங்க. நீங்களும் முயற்சி செய்யுங்களேன். நீங்க தொடர்பதிவில் இருந்தா என்ன. இதை மட்டும் வாசிங்க.” என்று சொல்லவும், உடனேயே, நானும், அட! இது ஒரு நல்ல போட்டியாக இருக்கின்றதே என்று எண்ணி டிடியைப் பாராட்டிக் கொண்டே வாசித்தேன்.
சில நிமிடங்களிலேயே விடையையும் கண்டுபிடித்துவிட, அவரது தளத்தில் பதிந்துவிட்டு, டிடியையும் அழைத்து விடை சொன்னதும் அவரோ என்னைப் பாராட்டிக் கொண்டே இருக்க, அன்று குளிர்ந்த நானும், சென்னையும் இன்னும் குளிரிலிருந்து வெளிவரவில்லை! ஒருவேளை, கீதா கூட விடை கண்டுபிடித்துவிட்டாளே என்றுதான் சென்னையில் இப்படி மழை பெய்தது போலும்! இயற்கைக்கே பொறுக்கவில்லை!

“ஐயோ டிடி இது ஒன்றும் பெரிய விசயமே இல்லை” என்று சொல்லியும், இரண்டு நாள் முன்பு பேசும் போதும் அவரது வியப்பைச் சொன்னார். பாராட்டினார். எனக்கு இன்னும் புரியவில்லை இதைக் கண்டுபிடித்ததனால் அப்படி என்ன நான் புத்திசாலி என்று. 

நம் விஜு சகோ, முத்துநிலவன் அண்ணாத்தே, பாலமகி சகோ எல்லாம் அதை வாசித்த உடனேயே சொல்லியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நன்றி டிடி ஒரு அதிகாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவியதற்கு.

நீங்களும் அது எந்த அதிகாரம் என்று கண்டுபிடித்து டிடியின் தளத்தில் விடை சொல்ல முயற்சி செய்யுங்களேன்.  

----கீதா


ஞாயிறு, 22 நவம்பர், 2015

உயிரா மானமா - 2

படம் இணையத்திலிருந்து

கேரளாவில் சமீபத்தில் தேர்தல் நடந்த 879 பஞ்சாயத்துகளிலும், 147 ப்ளாக் பஞ்சாயத்துகளிலும், 14 ஜில்லா பஞ்சாயத்துகளிலும் வெற்றி பெற்றவர்களில் தலைவர்கள், உப தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.  அடுத்த 5 வருடம் அவர்கள் ஆள்வார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அள்ளுவார்கள்.  இதில் தோல்வியுற்றவர்களின் எண்ணிக்கை வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட மூன்றோ, நான்கோ மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். அதில் எல்லோருக்கும் தோல்வியுற்றதில் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.  அதை எல்லாம் காலப்போக்கில் மறந்து, அவர்கள் எல்லோரும் முன் போல் வாழத் தொடங்கிவிடுவார்கள். 

ஆனால், வயநாடு, மானந்தவாடியைச் சேர்ந்த பயியம் பள்ளி P.V. ஜான் (67வயது) தோல்வியில் மனமுடைந்து, கடந்த, நவம்பர் 8 ஆம் தேதி, மானந்தவாடியில் உள்ள இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் ப்ளாக் கமிட்டி அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.  தன் தற்கொலைக்குக் காரணம் சொல்லி, அருகே, ஒரு கடிதமும் அவர் எழுதி வைத்திருந்தார்.

797 வாக்குகள் இடப்பட்ட மானந்தவாடி நகர், 34 ஆம் வார்டில், காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜானுக்குக் கிடைத்ததோ 39 வாக்குகள் மட்டும். அவரை எதிர்த்து நின்ற சுயேச்சை வேட்பாளரான ஜாய் 346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதை ஜானால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஜான் தன் தோல்வியையும் அதற்குக் காரணமானவர்களையும் மட்டும் நினைத்து வேதனைப்பட்டு, ஆத்திரப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  ஆனால், அவர் தன் மனைவி மரியாம்மாவை, மகன் வர்கீசை, மகள்களைப் பற்றி நினைக்கவே இல்லை. 

அது போல், கடந்த 5 ஆம் தேதி திருச்சூர் பாலராமபுரம் ரெயில்வே க்ராசிங்கில் 7 ஆம் வகுப்பில் படிக்கும் 12 வயதான ரமேஷுக்கு அறிவுரை கூறி முத்தம் கொடுத்து வேகமாக வரும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார், புதுக்காட்டில் வாழும் தென்காசியைச் சேர்ந்த கலா (40வயது).  தாயைக் காப்பாற்ற நினைத்து, ரமேஷ் தன் தாயைப் பிடித்து இழுத்த போதும், அவனை உதறித் தள்ளிவிட்டு ரயிலின் முன் குதித்திருக்கிறார் கலா. ஓய்வு பெற்ற தாசில்தாரான கணவர் அவரைப் பிரிந்து சென்றதால் அவருக்கு ஏற்பட்ட வருத்தமும் ஆத்திரமும்தான் அவரை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கின்றது என்று ஒரு காரணம் சொல்லப்பட்டாலும், 12 வயதான ரமேஷை தன் மரணம் எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் தன்னை உதறித் தள்ளிச் சென்றக் கணவனின் மீதுள்ள ஆத்திரத்தால், தன் மகனை உதறித் தள்ளித் தற்கொலை செய்து கொண்டார்.  

இது போலவே கடந்த 1.11.2015, ஞாயிறு அன்று வேறொரு சம்பவம் நடந்தது.  கடந்த 3 வருடங்களாக எங்கள் பள்ளியில் - CFDVHSS, மாத்தூர் – மாணவிகளின் தற்காப்புக்காக கராத்தே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்க, ஆலத்தூர் குருகுலம் பள்ளியில் கடந்த 10 வருடங்களாக கராத்தே ஆசிரியாராகப் பணிபுரியும் சூரஜ் (42 வயது) எல்லா சனிக்கிழமைகளிலும் வருவருதுண்டு.

எல்லா வருடமும் 50 மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்க ரூ 25000 செலழித்து, பாலக்காடு ஜில்லா பஞ்சாயத்துதான் இவ்வகுப்புகளை நடத்த உதவுகிறது. சூரஜ் பாலக்காடு ரைஃபிள் க்ளப்பில் உறுப்பினர் மட்டுமல்ல, பயிற்சியாளரும் கூட.  காவல்துறையினருக்கும் இடையிடையே கராத்தே வகுப்புகள் எடுப்பவரும் கூட.  அதுமட்டுமன்றி தியான வகுப்புகளும் நடத்தி வருபவர்.  கடந்த சில மாதங்களாக அவரது மாணவிகளில் சிலர் அவருக்கு எதிராகக் காவல்துறையில் புகார் கொடுத்ததானால், காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

தன்னிடம் கராத்தே பயிலும் மாணவ மாணவிகளிடையே அவர் காண நேர்ந்த சில தவறான செயல்களுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள்தான் அவருக்கு எதிராகப் புகார் கொடுக்கக் காரணம் என்றும், அப்படியல்ல அவர் தனது மாணவிகளில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அம்மாணவி காவல்துறையினரிடம் புகார் கொடுத்ததாகவும் இரு வேறு கருத்துகள் இங்கு இப்பகுதியில் நிலவுகின்றது. எப்படியோ இடையிடையே நிகழ்ந்த காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அவரை வேதனைப்படுத்தியிருக்கலாம்.  இதனிடையே அம்மாணவி மகளிர் உரிமை பாதுகாப்புக் கழகத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்.  அதனால், குருகுலம் பள்ளி நிர்வாகம் சூரஜை பள்ளியிலிருந்து வேலை நீக்கம் செய்துவிட்டது.

நவம்பர் 1 ஆம் தேதி கைது செய்யப்படலாம் என்று யாரோ சொல்லக் கேட்ட அவர் கடந்த 31.10.2015 சனியன்று இரவு ஆலத்தூர் குருகுலம் பள்ளி சென்று, அங்கு கடந்த 10 வருடங்களாக மாணவ மாணவிகளுக்குக் கராத்தே பயிற்சி அளித்த மைதானத்தின் அருகே இருந்த ஒரு மரத்தின் கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  தன் மரணத்திற்குக் காரணமான மாணவ மாணவிகளின் பெயரையும், பள்ளி நிர்வாகத்தின் செயலையும் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்தார்.  தன் மரணத்திற்குக் காரணமாகின்றவர்களைப் பற்றி மட்டும் எண்ணிய அவர் தனது 35 வயதுள்ள மனைவி ஜிம்ஸியைப் பற்றியோ, 4 வயது மகன் த்யான்மகேஸ்வர் பற்றியோ, தன் வயதான பெற்றோர்களைப் பற்றியோ, தான் அத்தனைக் காலம் பெற்ற தன் கராத்தே அறிவு மற்றும் அனுபவங்களைப் பெறக் காத்திருக்கும் மாணவ மாணவியர்களைப் பற்றியோ சிந்திக்கவே இல்லை. 

இப்படி, ஒரு பிரச்சனை ஏற்படும் போது அப்பிரச்சனையைப் பற்றி மட்டும் எண்ணித் தன் கடமைகளை மறந்து, தன் மரணம் தன்னை நேசிப்பவர்களுக்கு எற்படுத்தப் போகும் துன்பங்களையும், துயரங்களையும் மறந்து, தங்கள் மானப்பிரச்சியனையாகக் கருதி, அப்பிரச்சினையிலிருந்துத் தப்ப அல்லது, அப்பிரச்சினை ஏற்படக் காரணமானவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட ஒரே வழி என்ற அறிவற்ற எண்ணங்களால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதே வழி என முடிவு செய்து, இது போல் தற்கொலை செய்துகொள்பவர்களின் மேல் நமக்கு ஏனோ பரிதாபப்படத் தோன்றுவதில்லை. இவர்களும் சுயநலவாதிகள்தான்.

அதே நேரத்தில் “போனால் போகட்டும் போடா” என்றும் “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”..... என்று தங்களதுப் பிரச்சினைகளை எதிர் கொண்டுப் போராடி வாழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நம்மால் எண்ணாமலும் இருக்க முடியவில்லை. இறந்த குழந்தையின் ஜாதகம் பார்ப்பது போல் இனி அதைப் பற்றிப் பேசிப் பிரயோசனமில்லைதான்.

படம் இணையத்திலிருந்து

இப்போது தற்கொலைகள் அதிகரித்து வருவதாகத்தான் புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கோணத்தில், இந்நிகழ்வுகள் நமக்குத் தெரியப்படுத்துவது என்னவென்றால், நம் மக்களுக்கு நல்ல மனவளப்பயிற்சி மிகவும் அவசியம், அதுவும் சிறிய வயதிலிருந்தே என்று. 

ஆனால், என்னதான் மனவளப்பயிற்சி, நல்ல சூழிநிலை கொடுக்கப்பட்டு வளர்ந்தாலும், அதையும் மீறித் தற்கொலைகள், மனநிலைப் பிறழ்வுகள் நடக்கவும் வாய்ப்புண்டு. அது நமது மனதின் (மூளைதான்) இரு பகுதிகளுக்கு இடையே நடக்கும் போராட்டங்களினால், அதாவது, நல்லது சொல்லும் ஹீரோவிற்கும், கெட்டதைச் சொல்லும் வில்லனுக்கும் இடையில் நடக்கும், மூளையில் ஏற்படும் வேதியியல் – ரசாயன நிகழ்வுகளில் வில்லன் வென்றுவிடுவதால் என்று அடிக்கடிச் சொல்லும் கீதாவின் கருத்தையும் மனதில் கொள்ளத்தான் வேண்டுமோ என்றும் தோன்றுகின்றது.

இங்கு இறந்தவர்களைப் பற்றிப் பரிதாபப்படுவதைவிட, நம் மனம் எண்ணுவது இருப்பவர்களின் நல்வாழ்விற்காகத்தான்.

எது எப்படியோ, ஜான், கலா மற்றும் சூரஜின் குடும்பத்தினருக்கு இவர்களது மரணத்தால் நேர்ந்த, நேரவிருக்கும் மன வருத்தத்தையும், வாழ்வின் யதார்த்தங்களையும் எதிர்த்துப் போராடி வாழத் தேவையான மன உறுதியையும், மன வலிமையையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு அருளட்டும். 


பின் குறிப்பு: இணையம் மிகவும் பிரச்சனையாக இருப்பதால், இன்னும் சில நாட்களுக்கு இணையத் தொடர்பு இல்லாமலும் போகலாம் எங்கள் தளத்தின் சென்னை தலைமையகத்தில். அதனால் நண்பர்களே தங்கள் தளங்களுக்கு வர இயலவில்லை. அதனால் மறந்துவிடாதீர்கள் ஓகேயா?! இணையத் தொடர்பு சரியானதும் மீண்டும் சந்திப்போம். இணையத் தொடர்பு கிடைத்த சமத்தில் பதிவேற்றம் செய்து ஷெட்யூல் செய்து வைத்திருக்கின்றோம். மிக்க நன்றி.

புதன், 18 நவம்பர், 2015

மாண்புமிகுத் தலைவர்களுக்கு ஒரு கடிதம்

பாவம் குதிரையும் தண்ணீரில்

அன்பார்ந்த தலைவர்களுக்கு வணக்கம். என்ன மழை எல்லாம் ஓய்ந்துவிட்டது இனி அறிக்கை எதுவும் விட வேண்டிய அவசியம் இல்லை என்றுக் களிப்புடன் இருக்கின்றீர்களா? மன்னிக்கவும். இன்னும் ஓயவில்லை என்று ப்ராபபிலிட்டி தியரிப்படி, வானிலை ஆராய்ச்சி மையம் சொன்னது அதிசயமாகப் பலித்திருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதோ மூன்றாவது நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். 

இதை நாங்கள் முதல் மழை அடித்துப் பெய்யும் போதே எழுதியிருந்தோம் உங்களுக்கு அனுப்பாமல் வைத்துவிட்டோம். அப்போது அனுப்பியிருந்தால் ஒரு வேளை நீங்கள் இதை வாசிக்க நேர்ந்திருந்தால், உடனே பொறுப்புள்ளத் தலைவர்களாக மாறியிருந்திருப்பீர்களோ! நாங்களும் பெருமைப்பட்டிருக்கலாம்!


பெய்த மழையில் சாலைகள் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்தோட, அடைமழையில் நீங்கள் உங்கள் மாட மாளிகையிலிருந்து எப்படி இறங்கி வருவீர்கள்! “பாவம் நீங்கள்” என்ற கரிசனத்தினால், மழை சற்று ஓயட்டுமே என்று தாமதித்துவிட்டோம். தவறாகிவிட்டதோ? 

ஏற்கனவே பல சாலைகள் பழுதடைந்துச் செப்பனிடபடாமல் இருப்பவைதான். இப்போது பழுதடைந்த சாலைகளும் எல்லாம் குண்டும் குழிகளுமாய் எப்போது செப்பனிடப்படுமோ என்று காத்திருக்கும். அடுத்த மழைவரும் முன்னர்தான் செப்பனிடப்படும். அப்போதுதான் மீண்டும் சாலைகள் அரிப்பெடுக்கும். அதிலும் அள்ளலாம் நீங்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தாலும் அதையெல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு வெளியில் சொல்லமாட்டோம். எங்கள் அல்லல்களைப் புரட்சிகரமாகச் சொல்லத் தெரிந்திருந்தால் நாங்கள் இப்படி அவதிப்பட்டிருப்போமா?! நாங்களும் சரி நீங்களும் சரி எப்போதுமே இருகோடு தத்துவத்தில் வாழ்பவர்கள்தானே! நீங்கள் மகிழ்வாக இருங்கள். பாலச்சந்தருக்கு நன்றி! 

உங்கள் பங்களாக்களில் தண்ணீர் சூழவில்லைதானே? நல்லகாலம். எங்கள் தலைவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால், பின்னர் எங்களை யார் காப்பாற்றுவார்கள்? எங்கள் தலைவர்களைக் காப்பாற்றிய இயற்கைக்கு நன்றி!

ஆனால், பாருங்கள் உங்களின் உதாசீனத்தால் துன்புறும் பாமரமக்கள் நாங்கள் உங்களைக் குற்றம் சொல்லாமல் இயற்கையைக் குற்றம் சொல்லுகின்றோம். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். உங்களிடம் இத்தனை அன்பு வைத்திருக்கும் எங்களை, மன்னிக்கவும், ஓட்டுகளைப் பெற்றிருப்பதற்கு.

உங்களுக்குச் சுடச் சுடச் சாப்பாடு மூன்று நேரமும் இல்லையில்லை நான்கு நேரமும், 5 நேரமும் கிடைத்துக் கொண்டிருக்க, ஒரு நேரச் சாப்பாடு கூடக் கிடைக்காத நிலையில் இங்கு உங்கள் ஓட்டுக் கூட்டமே தத்தளிப்பதை நீங்கள் தொலைக்காட்சியிலாவதுப் பார்த்திருப்பீர்கள்தானே!

ஓ! அதற்குத்தான் நீங்கள் உணவுப் பொட்டலங்கள் கொடுப்பதாகத் தொலைக்காட்சியில் அறிக்கை விடுத்துக் கொடுத்தீர்களே! மறந்தே போனோம். மழையானதால் உங்களுக்கும் வெளியில் செல்ல முடியாதுதான்.  தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்து அறிக்கைவிடுவதில் வல்லவர்கள் நீங்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன? 

மின்சாரக் கம்பிகள் அறுந்து, மின்சாரம் தடைப்பட்டதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால், அதைச் சரிசெய்யக் கூட முடியாத நிலையில் எங்களைச் சூழ்ந்து தண்ணீர். உங்களுக்குத்தான் மின்சாரம் தடையில்லையே! உங்கள் சோறு ஆறிக்கொண்டிருக்கின்றது பாருங்கள்! இரண்டு நாட்களாகத் தக்காளியின் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?  கிலோ 140 ரூபாயாம். உங்கள் வீட்டில் தக்காளி சாம்பார்தானே?! இங்கு வரை மணக்கின்றது!

இங்கு பேருந்துகள் போவது போல வெனிஸ் நகரில் படகுகள்தான் தினமும் என்று கேட்டதுண்டு. இன்னும் சில நாடுகளில் படகுகளில்தான் ஷாப்பிங்குமாம்.  எங்களால் வெனிஸ் நகர் சென்று பார்க்க முடியுமா என்ன?  இல்லை படகு ஷாப்பிங்க்தான் செய்யமுடியுமா என்ன? ஒவ்வொரு பெரும் மழையிலும்  ஒரு சில தினங்களாவது சென்னையை வெனிஸ் நகராக்கி, அந்த அனுபவத்தையும் கொடுத்து ஆனந்தம் அடையும் உங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

ஆனால், ஒன்று பாருங்கள், அங்கெல்லாம் நல்ல தண்ணீராம்.  இங்கு எங்கள் கழிவுகளுடன்,  உங்கள் கழிவுகளும் சேர்ந்து மிதக்கும் நீரில்தான் படகுகளும், எங்கள் வீடுகளும் என்பதை இங்கு பதிய விரும்புகின்றோம். நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கச் சொன்ன ஐயனின் தேசத்தில் பிறந்தவர்கள் அல்லவா! அதனால், இப்படித்தான் சொல்லி மகிழ்வடைய முடியும் நாங்கள். நீங்களும் ஆனந்தமாகவே இருங்கள்.

தண்ணீர் சூழ்ந்த இடங்களுக்குப் பார்வையிட வந்த நீங்கள் காரின் கண்ணாடிக் கதவுகளைக் கூடத் திறக்காமல்தான்  பார்த்தீர்கள். நாங்கள் காட்சிப் பொருள்கள் என்று நினைத்துவிட்டீர்களோ! என்னவோ! நன்றாகப் பாருங்கள். இதைத்தானே நீங்கள் வீட்டின் கதகதப்பான அறைகளில் இருந்து கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில், முதல் மழையின் போதும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?!

இறங்கியவர்கள் கூட உங்களுக்கு நோய் வந்துவிடக்கூடாது என்று காலில் பூட்ஸ் அணிந்து வந்தீர்கள். இத்தனைப் பாதுகாப்பு எடுத்துக்கொள்ளும் உங்கள் மனதில், நாங்கள் இப்படித்தான் ஒவ்வொரு மழையிலும் அல்லாடுகின்றோம் என்பதும், தினமுமே கழிவுநீருக்கிடையில்தான் வாழ்கின்றோம் என்பதும் ஏனோ பதிவதில்லை. இதுவும் கடந்து போகும் எனும் தத்துவத்தில் நீங்கள் எங்களையும் கடந்து சென்றுவிடுகின்றீர்கள் போலும்! நல்ல தத்துவம்தான்!  மகிழ்வாக இருங்கள்!

இதோ, தெருக்களில் குப்பைகள் அழுகியக் குப்பைகள் இரைந்து கிடக்கின்றன. வரவிருக்கும் விஷக்காய்ச்சல்கள் பலவற்றிற்கும் நீங்கள் தயாராக இருக்கின்றீர்களோ இல்லையோ,  ஆனால், நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி விஷக்காய்ச்சல் பரவில்லை, நாங்கள் அதைத் தடுக்க ஆவன பாதுகாப்பு முறைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தாலும், அந்தக் காய்ச்சலால் இறந்த, இறக்கும் உயிர்கள் பேசப்போவதில்லைதான். என்றாலும், சடலங்கள், உண்மையை வெளி உலகிற்கு உரைக்காமலா போகும்?! அப்படியும் இல்லை என்று சொல்லிச் சடலங்களுக்கு மாறுவேடம் அணிவித்துவிடாதீர்கள். 

நீங்கள் எல்லோரும் உலக அரங்கில் பேசும்போது, நம் தேசத்திற்கு அழகாக மாறுவேடம் இட்டுக் காட்டிவிடுகின்றீர்கள்! கில்லாடிகள்தான் நீங்கள்! ஆனால், பாருங்கள்! அங்கிருந்து இங்கு வருபவர்கள் நம் தேசத்தின் அழகை அவர்கள் ரசிப்பதற்கிடையில் நீங்கள் காட்டிய மாறுவேஷம் கலைவது தெரிந்து, அங்கு சென்று பேசுவது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். 

திரைப்படங்கள் சில நம் ஊரின் உண்மையானத் தோற்றத்தை உலக அரங்கில் வெட்டவெளிச்சமாக்கி விருதுகள் பல அள்ளுகின்றனதான்.  நீங்களும் கை தட்டிப் பெருமைப்படுகின்றீர்கள்! இப்போதைய நிகழ்வுகள் கூடப் படமாக்கப்படலாம். எங்களைக் காட்சிப் பொருளாக்கி, விருதுகள் பெற்று அதைப் பெருமையுடன் பேசி மகிழும் நீங்கள் நியாயமாக எங்களுக்கல்லவா விருதுகள் தரவேண்டும்! அப்போதும் நாங்கள் பாமரமக்கள்தான். நாங்கள் எங்கள் ஓட்டுகளுடன், இலவசமாக உங்களுக்கு இந்த மகிழ்வையும் தருகின்றோமே!  மகிழ்வாய் இருங்கள்!

எங்களால், நிவாரணம் என்று உங்களுக்குப் பணமும் கிடைக்கின்றது பாருங்கள்! எங்கள் ஓட்டுகளுக்காக நீங்கள் தரும் இலவசங்களுக்கு எங்கள் கைமாறு இது! அதற்காகவாவது இந்த மழைக்கு நன்றி சொல்லுங்கள்! தானைத் தலைவர்களே மகிழ்வாக இருங்கள்!

இந்த வெள்ளத்திற்கும், ஊழலுக்கும் நாங்களும் ஒரு காரணம் ஆகிப்போனோம்தான். பொறுப்பில்லாமல் இருக்கின்றோம்தான்.  அரசன் எவ்வழி அவ்வழி நாங்கள் என ஆகிபோய்விட்டோம். என்ன செய்ய? 

கடிதத்தை முடிக்கும் முன் எங்களிடமிருந்து ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் அறிக்கைவிடும் போது வெள்ளம் என்று இயற்கையை, இயற்கைச் சீற்றத்தைக் குறை சொல்லாதீர்கள். இந்தச் சீற்றத்தின் விளைவுகள் எதனால் என்று நீங்கள் அகழ்வாராய்ந்தால், அதன் "மூலம்" உங்களிடமிருந்துதான் என்பதை அறிவீர்கள்.

பல ஏரிகளும், குளங்களும், ஆற்றுப் படுகைகளும், விளை நிலங்களும் உங்கள் கைகளில் சிக்கி, மணல் வாரப்பட்டு, கண்ணாடிக் கட்டிடங்களாக, பலமாடிக் கட்டிடங்களாக உருமாறியதன் விளைவை நீங்களா அனுபவிக்கின்றீர்கள். சரியான கழிவுக் குழாய்கள் இல்லை, கழிவுக்குழாய்கள் குப்பைகளால் அடைந்திருக்க, மழைநீர் வடிகால்வாய்கள் இல்லை. விளைவை நாங்கள் பாமரமக்கள்தான் அனுபவிக்கின்றோம். இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் புதிதல்லவே. நீங்கள், “மூலம்” எது என்று ஆராயாமாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் சுயநலவாதிகள். நீங்கள் சுயநலவாதிகளாக இல்லாதிருந்தால் இன்று தமிழகம் இயற்கைச் சீற்றத்திலும், (இரு) தண்ணீரிலுமே தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது. தயவாய்......இயற்கையைப் பழிக்காதீர்கள்! நாங்களும் பழிக்க மாட்டோம்.

இப்படிக்கு,

ஒவ்வொரு முறையும் “அம்மா, தலைவா” என்று உரக்க உரைத்து உங்களை நம்பி ஓட்டளிக்கும் அப்பாவிப் பாமரமக்கள்.

கீதா 

படம்: இணையத்திலிருந்து.