செவ்வாய், 30 டிசம்பர், 2014

மத நம்பிக்கை தவறில்லை...ஆனால் மதம் பிடித்த மத நம்பிக்கை ஆபத்தானது...


      மங்களூரு அருகேயுள்ள புத்தூரில் அமீர்கானின் பிகே படம் பார்க்கத் தன் பெற்றோர்களுடன் போன இளம் பெண்ணை, படத்தினிடையே போலீசார்கள் வந்து வெளியே வர அழைத்ததும், பயந்து போனார்.  போலீசார்கள் பெண்ணையும், பெற்றோரையும் விசாரித்த பின் அவர்களுடன் தியேட்டருக்கு வெளியே வந்ததும் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆட்களைப் பார்த்துத் திடுக்கிட்டு அவர்களும் போலீசாரைப் பார்க்க, போலீசார் கூடி நின்றவர்களிடம் :நீங்கள் நினைத்தது போலத் தனியாக ஒரு முஸ்லிம் இளைஞனுடன் படம் பார்க்கவரவில்லை. இந்தப் பெண் இவரது பெற்றோருடன்தான் படம் பார்க்க வந்திருக்கின்றார்.  எனவே எல்லோரும் பிரச்சினையேதும் உண்டாக்காமல் கலைந்து போங்கள்” என்று சொல்லி எல்லோரையும் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.
 
பெண்கள் மேல் இவ்வளவு அக்கறையோ என்றெல்லாம் எண்ணி ஏமாற்றமடைய வேண்டாம்.  நூற்றுக்கணக்கான அவர்களில் இந்துக்களும் உண்டு.  முஸ்லிம்களும் உண்டு. அவர்கள் தங்களது வாட்ஸப்பில் ஒரு இந்துப் பெண் முஸ்லிம் இளைஞனுடன் பிகே படம் பார்ப்பதாகச் செய்தி வந்ததும் ஓடிவந்தவர்கள்.  அதெப்படி ஒரு இந்துப் பெண் முஸ்லிம் பையனுடன் அல்லது ஒரு முஸ்லிம் பெண் இந்து பையனுடன் படம் பார்க்க அனுமதிப்பது? நம் மதம் அதை அனுமதிக்காதே. அதே நேரத்தில் மாரல் போலீஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் சாலை விபத்தில் அடிப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இதேபோல் வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு மற்றவர்களை வரவழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல உதவுவார்களா? என்று கேட்டால், “இல்லை அதைப்பற்றி எல்லாம் மதநூல்களில் அதிகம் பேசப்படவில்லை அல்லது மதத்தலைவர்கள் பேசுவதில்லை.  ஒருவேளை அவர்கள் உயிர் ஊசாலாடும் அவரை அலைபேசியில் படம் பிடித்து யூட்யூபிலோ, முகநூலிலோ பதிவு செய்யலாம்.  அவ்வளவே.  மதங்கள் மாறிவிட்டன.  அவை இப்போதெல்லம் இறையுணர்வையும், அன்பையும், உதவி மனப்பான்மையையும் வளர்ப்பதில்லை.  அதற்குப் பதிலாக பிற மதத்தவர்பால் வெறுப்பையும், விரோதத்தையும்தான் வளர்க்கிறது. 


மதம் பிடித்த தீவிர மதவாதிகள் அதனால்தான் தாம் எம்மதமும் சம்மதமே எனும் உயர்ந்த உள்ளம் படைத்த இந்தியர்கள் என்பதைக் காட்ட மறந்து, மத தீவிரவாதச் செயல்களுக்கு உதவி செய்யத் துணிகிறார்கள்.  இவற்றை எல்லாம் எதிர்ப்பவர்கள் தான் நம் நாட்டில் அதிகம்.  அதில் ஐயமில்லை.  எதிர்த்துப் பேசும், எழுதும் நம்மைப் போன்றவர்களை விட எண்ணிக்கையில் குறைவான அவர்கள் காட்டும் ஆவேசமும், ஆர்வமும் ஏனோ நம்மால் காட்ட முடியவில்லை. அப்படி எவரேனும் மதவேறுபாடுகளை முறியடிக்க ஏதேனும் செயல்களைச் செய்ய நேர்ந்தால், மத தீவிரவாதிகள் புத்தூர் தியேட்டருக்கு வெளியே ஒன்று திரண்டது போல் திரண்டு அதை முறியடித்து விடுகிறார்கள்.


அப்படி ஒரு சம்பவம் கடந்த புதனன்று (17/12/2014) கொச்சியில் நடந்தது.  பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனரான ஆஷிக் அபுவும், நடிகை ரீமாகல்லிங்களும் மதம் பாராமல் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு, மததீவிரவாசிகளைத் திகைக்கவைத்தவர்கள்.  கடந்த புதனன்று இந்திய ஜனநாயக இளைஞர் அணியினர் (டிவைஎஃப்ஐ) ஜாதி, மதம் பாராமல் மணமுடிக்க விரும்புபவர்களுக்கான ஒரு வலைத்தளத்தை செக்குலர் மேரேஜ்.காம் எனும் பெயரில் தொடங்கி அதன் தொடக்க விழாவை, ஆஷிக் அபு மற்றும் ரீமாகல்லிங்களால் நடத்தினர். முதல் நாளே ஆயிரக்கணக்கானவர்கள் வலைத்தளம் வந்து தங்கள் வரவேற்பைத் தந்தனர்.  ஆனால், மறுநாள் வியாழக்கிழமை (18/12/2014) அன்று கொமோடோ அந்த வெப்சைட்டை விழுங்கி  விட்டது.  இப்போது அதில் மததீவிரவாத்தை எதிர்க்கும் எவரையும் இது போன்ற சைபர் போரால் முறியடிப்போம் என்று செய்தி மட்டும் இடப்பட்டிருக்கிறது.  இப்படி மததீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நம் செக்குலர் இந்தியாவில் கூட ஒன்றும் செய்யவியலாத நிலை.மனதுள் மிகுந்த வேதனையைத் தருகின்றது.  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இந்நிலை மாறி என்று தர்மம் வெல்லும் நிலை வருமோ?......

-

வியாழன், 25 டிசம்பர், 2014

உண்மையான டூப் போடாத ஹீரோக்கள்!!!

     

நண்பர்கள் எல்லோருக்கும் இனிய கிறிஸ்த்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

நாங்கள் இருவருமே நேரமின்மை காரணமாக வலைத்தளங்களுக்கு வருகை தர இயலவில்லை.   தவறாக எண்ண வேண்டாம்.  பொருத்துக் கொள்ளவும். நண்பர் கோவை ஆவியின் குறும்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இருப்பதால்.  நண்பர்களே!  திங்கள் கிழமையிலிருந்து  தங்கள் வலைத்தளங்களுக்கு வருகின்றோம்.

இந்தக் கிறிஸ்துமஸ், புத்தாண்டிலிருந்தாவது, மனித நேயத்துடனும், பிற உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி வாழக் கற்றுக் கொள்வோம்.  இந்த பூமியில் எல்லா உயிர்களுக்கும் வாழ உரிமை உண்டு. (இப்படி நான் சொல்லுவதற்கு நிச்சயமாக விவாதங்கள் வரலாம் அதாவது, பிற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றால், அசைவ உணவு உண்ணுபவர்களை என்ன சொல்லுவீர்கள் என்று! சைவ உணவு உண்பவர்கள் எல்லோரும் நிஜமாகவே சைவம் தானா போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். ஏனென்றால் நாம் எடுத்துக் கொள்ளும் ஆங்கில மருந்துகளில் ஒரு சில விலங்குகள் சார்ந்தவை.  மாத்திரைகளின் அட்டையில் பார்த்தால் சிவப்புக் கலர் புள்ளி இருக்கும். இப்படிப் பல பொருட்கள் மறைமுகமாக விலங்குகளைச் சார்ந்துவருவதால் இந்தக் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன.  இதைப் பற்றி என்னால் எழுத முடியும் என்றாலும் தற்போது நேரமின்மையால் எழுத இயலவில்லை.  இந்தப் பதிவும் நீண்டுவிடும்.  இந்தப் பதிவின் நோக்கமும் அதுவல்ல. எனவே பின்னர்.  இதற்கான பின்னூட்டங்களும் வரலாம்.  அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்.

இந்த நிஜ ஹீரோக்களைப் பாருங்கள்! இவர்கள் எல்லோரும் மனிதர்களாகிய நம் எல்லோருக்கும் முன்பே இந்த உலகில் தோன்றியவர்கள்.  பரிணாம வளர்ச்சியில் மனிதர்களாகிய நாம் தான் இறுதிக் கட்டத்தில் உருவானவர்கள்.  பரிணாம வளர்ச்சியில் ஆறறிவு , பகுத்தறிவு, நல்லது கெட்டது ஆராயத் தெரிந்தவர்கள் என்று நம்மை நாமே பெருமை பேசிக் கொண்டு மார் தட்டிக் கொண்டாலும், சாதி, மத வெறி, பண வெறி, அந்தஸ்து வெறி பிடித்து அலைகின்றோம். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.   நாய் புத்தி, நரித்தந்திரம், எருமைச் சோம்பேறி என்பது மனிதர்களாகிய நாம் உருவகப்படுத்தியதுதான்.  நமது அறியாமையை வெளிப்படுத்துவதுதான் அல்லாமல்  அவை அப்படிப்பட்டவை அல்ல.  அப்படிப்பார்த்தால் ஒரன்ங்கட்டான், சிம்பன்சி, கொரில்லா குரங்குகள் , டால்ஃபின்கள் நம்மை விட அதி புத்திசாலிகள்.  பல கடினமான கணக்குகளைக் கூட எளிதாகத் தீர்க்கும் திறன் படைத்தவையாம். உணர்வுகள் மிக்கவர்கள்.  ஏன் நாம் அவர்களை நம்முடன் ஒத்துப்பார்ப்பதில்லை?! 

எனவே, தயவு செய்து யாரையும் நாய், நரி, பன்றி, எருமை என்று வசை பாட வேண்டாம். அது விலங்குகளைக் கேவலப்படுத்துவது மட்டுமல்ல, நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வதும் ஆகும். இப்போது இந்த நிஜ டூப் போடாத ஹீரோக்களைப் பாருங்கள்!! அவர்களையும் வாழ்த்திப் போற்றுவோம்!











இத்துடன் இங்கு நிறுத்திக் கொள்கின்றோம்.  காணொளிகள் பல இருந்தால் பல சமயங்களில் அவை அப்லோட் ஆக சமயம் எடுக்கலாம்.  அதனால்.

எல்லோருக்கும் எங்கள் இனிய கிறித்துமஸ் வாழ்த்துக்கள்! 

காணொளிகள்: நன்றி: யூட்யூப்.


திங்கள், 22 டிசம்பர், 2014

பிரிவு தரும் வேதனை...பிரிந்து போகா வேதனை...பிறர் அறியா வேதனை


கீதாவின் “அந்நியர்கள்” இடுகைக்கு வந்த சகோதரி இளமதியின் பின்னூட்டத்தில், அவர், பிறந்த மண்ணையும், சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் இழந்து தூர தேசங்களில் மாறுபட்ட மத, மொழி, கலாச்சாரத்தை உடைவர்கள் இடையே வாழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுத் தவிக்கும் தமிழினத்தவர்கள் அங்கெல்லாம் “அந்நியர்களாய்” வாழ்வதைப் பற்றி எழுதியிருந்தது கண்களில் நீர் நிறைய வைத்தது. பிரிவு தரும் வேதனை எத்தகையது என்பதை பிரிந்து வாழ்பவர்களால்தான் முழுமையாக உணரமுடியும் என்றாலும், அவர்களது வேதனையை இது போல் துன்பத்தில் தோய்ந்த அவர்களது வார்த்தைகளிலிருந்து அறிய நேரும் போது நம் கண்களில் கசியும் நீர் ஏனோ உடனே நிற்பதில்லை.  நீண்ட நேரம் மனதிற்கு வலி தந்த பின்னும் அவ் எண்ணங்கள் நம் மனதை விட்டுச் செல்வதும் இல்லை.  அவர்களது அச்சத்தையும், வேதனையையும் போக்கி புதிய வாழ்வையும் சுற்றத்தையும் நட்புகளையும் தந்து அவர்களது வாழ்வை வளமாக்கி, “யாதும் ஊரே யாவரும் கேளிர்”  எனும் மன நிலையுடன் அவர்களை அவர்கள் வாழும் தேசங்களில் தமிழை சுவாசித்து வாழ வைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம். இப்படி அந்நியர்களாக வாழ்பவர்களை நினைக்கையில், சில நாட்களுக்கு முன் நான் வாசிக்க நேர்ந்த ஒரு செய்தி மனதை விட்டகலாமல் அலை மோதிக் கொண்டே இருக்கின்றது.  அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தோன்றுகின்றது.


2010 செப்டம்பர் 28.  நம் எல்லோருக்கும் எல்லா நாட்களையும் போல், வழக்கம் போல் ஒரு நாள். ஒரு செவ்வாய் கிழமை அவ்வளவே.  ஆனால், பனாமா நாட்டின் எம் வி ஆஸ்பால்ட்  வென்சர் எனும் சரக்குக் கப்பலில் தங்கள் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர்களுக்கும், பணிக்குப் பின் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவர்களது வாழ்வை விதி பந்தாடிய நாள் அது. கப்பலைத் துபாயை மையமாகக் கொண்ட குஜராத்தைச் சேர்ந்தவர்களின் ஒஎம்சிஐ ஷிப் மேனேஜ்மென்ட் கம்பெனி இயக்குவதால், கப்பலில் உள்ள ஊழியர்கள் எல்லோருமே இந்தியர்கள்.  காப்டன் சுரேஷ்குமார், ரேடியோஆஃபீசரும், செகண்ட் ஆஃபீசருமான கோட்டயம் அருகே உள்ள முல்லப்பள்ளியைச் சேர்ந்த பரியாரம் தாழத்து வீட்டின் டிபி உன்னிக் கிருஷ்ணன், செகண்ட் இஞ்சினியரான கூத்தாட்டுக் குளத்தைச் சேர்ந்த புதியாகுன்னு, ஜார்ஜ் ஜோசஃப், இவர்களுடன் வேறு 12 பேர்கள்.  ஆஃபிரிக்கா, கென்யாவில் உள்ள மோம்பாசாவில் சரக்குகளை இறக்கிய பின், தென் ஆஃபிரிக்காவில் உள்ள டர்பனுக்குப் போய்க் கொண்டிருந்த கப்பலில் இயங்க வேண்டிய 8 சிலிண்டர்களில் ஒன்று பழுதடைந்ததால், கப்பலின் வேகம் குறைவாகவே இருந்தது.  மடகாஸ்கர் தீவை நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென ஸ்பீட் போட்டில் வந்த ஏகே47 துப்பாக்கிகள் ஏந்திய கடல் கொள்ளைக் கார்ர்கள் கப்பலைச் சூழ்ந்து கயிற்று ஏணிகளை எறிந்து கப்பலில் ஏறி கப்பலை அவர்கள் சொந்தமாக்கிவிட்டதாகச் சொல்லி, எல்லோரையும் ஒரு அறையில் கட்டி இட்டனர். இடையிடையே சாட்டையால் அடித்து, அவர்களது கதறல்களை சாட்டிலைட் ஃபோன் வாயிலாக கப்பலின் உரிமையாளர்க்ளைக் கேட்க வைத்துக் கப்பலையும் ஊழியர்களையும் விடுவிக்க  5 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என்று மிரட்ட்த் தொடங்கினார்கள். 

மிரட்டல்களுக்கு கப்பல் உரிமையாளர்கள் உடனே மசியாததால், மிரட்டல்கள் 6 மாதம் வரை நீண்ட்து.  கூடவே அடியும் கதறல்களும்.  இறுதியாக கப்பல் உரிமையாளர்கள் 3 1/2 மில்லியன் டாலர் கொடுத்து கப்பலையும், ஊழியர்களையும் மீட்க முடிவு செய்தனர். இது சோமாலியாவின் அடுத்த கடற் பகுதிகளில் இடையிடையே ஏற்படும் சம்பவமே.  6 மாதமாக எஞ்சின் இயக்கப்படாமல் கப்பல் கடலில் மிதந்து இருந்த்தால், கப்பலின் இஞ்சின் சத்தம் கேட்ட பின் தான் பணம் தருவோம் என்று உரிமையாளர்கள் சொல்ல, கடல் கொள்ளையர்கள் உடனே செகண்ட் இஞ்சியரான ஜார்ஜ் ஜோசஃபை அழைத்துக் கப்பலை 10 நிமிடம் இயக்க வேண்டும் என்றும், இயங்காமல் போனாலோ, இடையே நின்றாலோ ஜோசஃப் கொல்லப்படுவார்  என்று மிரட்டி இருக்கிறார்கள்.  ஜோசஃப் எப்படியோ டீசலுக்குப் பதிலாக பெட்ரோலை உபயோகித்து ஒரு வழியாய் எஞ்சினை இயக்கித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

ஏப்ரல் 15, 2011 அன்று பணத்தைப் பெற்றுக் கொண்டு கப்பலுடன் காப்டன் உள்ளிட்ட 8 ஊழியர்களை மட்டும் திரும்ப அனுப்பியக் கொள்ளைக்கார்ர்கள் மீத்முள்ள 7 பேரை இரண்டுக் குழுக்களாக்கி ஒன்றில் உன்னிக் கிருஷ்ணனையும், மற்றொன்றில் ஜார்ஜ் ஜோசஃபையும் உட்படுத்தி சோமாலியாவில் உள்ள பாலைவனத்தில் சிறை வைத்தனர். அவர்களை மீட்க இந்தியா இந்தியச் சிறைச்சாலையில் உள்ள 147 சோமாலியக் கொள்ளைக்காரர்களை விடுதலை செய்ய வேண்டுமாம்.  அச் சிறை வாசம் 2014, அக்டோபர் 28 வரை நீடித்த்து.  பாம்புகளும், பூரான்களும், விஷச் சிலந்திகளும், கீரிகளும், ஓநாய்களும் நிறைந்த பாலைவனப்பகுதியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டியிருந்தது.  பசியைப் போக்க இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும்  கொஞ்சம் அரிசியை, சுற்றுப் புறங்களில் இருந்து சேகரிக்கும் காய்ந்த கம்புகளை உபயோகித்து சமையல் செய்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்கள்.  எப்போதாவது, கோதுமை மாவு கிடைக்கும் அவ்வளவே.  இப்படி ½ வயிற்றையும், ¼ வயிற்றையும் நிரப்பி, அவர்கள் விடுதலை ஆகும் நாட்களுக்காகக் காத்திருந்தனர். 

கொள்ளைக் காரர்களின் தலைவனான காப்டன் டேவிட் எப்போதாவது அங்கு  வருவதுண்டு.  டேவிட்டிற்கு ஓரளவு ஆங்கிலம் பேச வரும். டேவிட் வரும் போது, சிறை வைக்கப்பட்ட எல்லோரையும் அவர்களது வீட்டில் உள்ளவர்களுடன் தன் கையில் உள்ள மொபைல் வாயிலாகப் பேச வைப்பதுண்டு.  அப்படி ஒரு முறை உன்னிக் கிருஷ்ணன் வீட்டார்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென அவர் அழ ஆரம்பிக்க, காரணம் வினவிய டேவிடிடம் , அழுத படி உன்னிக்கிருஷ்ணன் 2012 அக்டோபர் 18 ஆம் தேதி தன் மகளுக்குக் கல்யாணம் நடக்கவிருக்கிறது என்றிருக்கின்றார். '' அதற்கு என்ன? கல்யாணம் நடக்கட்டும். அதற்கு நீ ஏன் அழுகிறாய்” என்றிருக்கிறார் டேவிட் .  இந்தியர்களின் திருமணத்தின் போது பெற்றோர்களிடம் பிள்ளைகள் ஆசிர்வாதம் பெற வேண்டிய அவசியம் பற்றி உன்னிக் கிருஷ்ணன் சொல்லி அழுதிருக்கிறார்.  அது அந்தக் கல்நெஞ்சுக்குள் ஈரத்தை வரவழைத்திருக்கிறது.  அக்டோபர் 18, 2012 காலை அங்கு வந்த டேவிட் உன்னிக் கிருஷ்ணனை அழைத்துச் சென்று ஃபோனைக் கொடுத்து நேரம் பாராமல் பேச வேண்டியதை எல்லாம் பேசச் சொல்லி இருக்கிறார்.

விடுவிக்கப்பட்டவர்கள்-படத்தில் உள்ளவர்களுக்கும் செய்தியில் உள்ளவர்களுக்கும் சம்பந்தம் இல்லை

உன்னிக் கிருஷ்ணனின் மனைவி சோபாவின் விடா முயற்சியாலும், மேரிட்டைம் பைரசி ஹுமானிட்டேரியன் ரெஸ்பான்ஸ் ப்ரோக்ராமின் உதவியாலும் அவர்களது விடுதலைக்கான முயற்சிகள் பலன் கண்டது. அத்துடன் இண்டெர்நாஷனல் ட்ரான்ஸ்போர்ட் ஃபெடரேஷனும் –ஐடிஎஃப்- இந்திய வெளிநாட்டுத் தூதரகமும் இறுதியாக இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக, அக்டோபர் 28, 2014 அன்று விடுதலை செய்யப்பட்ட 7 பேரையும், டேவிட் புதிய ஆடைகள் அணியச் செய்து இந்தியன் எம்பசிக்கார்ர்களிடம் ஒப்படைக்க, நைரோபியிலிருந்து மும்பை வந்தடைன்ந்த உன்னிக் கிருஷ்ணனைக் காண மனைவி ஷோபா, மகள் மீரா, மருமகன் கோபக்குமார், மற்றும் மாதப் பேரனும் காத்திருந்தனர்.  அப்படி, 4 ஆண்டுகள் சோமாலியக் கடல் கொள்ளையர்கள் நடுவே உயிருக்குப் பயந்து காலம் கழித்த உன்னிக் கிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் மறு ஜென்மம் எடுத்து வாழத் தொடங்கியிருக்கிறார்.  சிறிதளவு மன நிலை தடுமாறிய நிலையில் இருக்கும் அவர் விரைவில் அவர் பழைய நிலைக்கு வர நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்.  அது மட்டுமல்ல அவருடன் விடுதலை பெற்ற மற்ற 6 பேர்களுக்காகவும் வேண்டிக் கொள்வோம். இது போன்ற சம்பவங்களைப் பற்றி அறியும் போது நமக்கு அதைத்தானே செய்ய முடியும். 

பின் குறிப்பு:  இந்த இடுகையை வாசிப்பவர்கள் இதற்கு வந்த மதுரைத் தமிழனின் நேர்மறைக் கருத்தை வாசிக்க வேண்டுகின்றோம்.  அவர் சொல்லுவது மிகவும் யதார்த்த வாழ்வுக்கு வேண்டிய ஒரு நல்ல சிந்தனை பாராட்டிற்குரியதும்.  எல்லோருக்குமே பொருந்தும் என்பதால் அதை வாசிக்க வேண்டுகின்றோம்.