வியாழன், 31 மார்ச், 2016

"வளரும் கவிதை" தளத்தில் தவழும் தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ்

இணைய  எழுத்தாளர் என்ன சொல்கிறார்?–

http://valarumkavithai.blogspot.com/2016/03/2.html

(2) “தில்லைஅகத்து” - துளசி-கீதா 

 
திருமிகு துளசிதரன் அவர்கள்

எங்கள் அன்பிற்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு முத்துநிலவன் ஐயா/அண்ணா
வணக்கம். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் முதலில். வலையுலகில் பல வருடங்களாக, நல்ல தமிழில் எழுதி, தமிழுக்குச் சேவை செய்துவரும், மிகவும் புகழுடன் இருக்கும் எழுத்தாளர்கள் இருக்க, நீங்கள் ஏற்றியிருக்கும் தீபத்தில் எங்களையும் மதித்து, அன்புடன் இணைத்தமைக்கு. நாங்கள் அத்தனை பெரிய எழுத்தாளரா? என்ற கேள்வி எங்கள்  மனதில் எழாமல் இல்லை. இருந்தாலும், தங்களின் அன்பான அழைப்பினை மறுத்திட முடியுமா என்பதால் தங்கள் அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டோம்.

எங்கள் தளத்தின் பார்வையாளர்கள், எங்கள் பதிவுகளின் எண்ணிக்கை, தமிழ்மணத் தரம் என்று எங்களுக்கே தெரியாத தகவல்களைக் கூட தாங்கள் நுணுக்கமாகப் பார்த்துப் பகிர்ந்திருப்பது, மிகவும் வியப்பாகவும், மகிழ்வாகவும் இருந்தது, இருக்கிறது. இதையே, எங்கள் தளம் போல் நீட்டி முழக்காமல் மீண்டும் நன்றியுடன் இங்கு நிறுத்திக் கொள்கின்றோம். (ஆனால், நீட்டி முழக்கிவிட்டோம் என்பது வேறு....)

எங்கள் சிற்ற்றிவிற்குத் தெரிந்த வரை பதில் அளிக்கின்றோம்/அளித்துள்ளோம்

 (1)   இணையத்தமிழில் நீங்கள் இணைந்த விதம் பற்றிச் சொல்லுங்களேன் ..
நாங்கள் இருவரும் கல்லூரிக்காலத்து நண்பர்கள். இருவருக்குமே எங்கள் கல்லூரிக்காலத்திலேயே, எழுத்து, நாடகத்தில் நடித்தல், நாடகங்கள் இயக்குவது, தனியோருவர் நடிப்பு, போட்டிகளில் கலந்து கொளல், வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் வழங்குதல் என்று பலவற்றிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுண்டு.
அதன் பிறகு வாழ்க்கைப் பயணத்தின் திசை மாறி, எங்கள் எழுத்தினையோ, கலைகளையோ தொடரவும், வளர்த்துக் கொள்ளவும் முடியாமல் போனது. 28 வருடங்களுக்குப் பிறகு, இருவரும் சந்தித்த போது...
சரி துளசி முதல்ல நீ சொல்லு, அப்புறம் நான் தொடர்கின்றேன்.
துளசி : தமிழில் சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதைகள் எழுத நினைத்துக் குறிப்புகள் எழுதி சேமித்து வைத்திருந்தேன். சில கதைகளும் எழுதி வைத்திருந்தேன். 80 களில் எழுதிய புதினம் ஒன்றும் முற்றுப் பெறாமல் அப்படியே இருப்பதையும் சொல்லிக் கீதாவிடம் கொடுத்தேன். அதை எல்லாம் புத்தகமாக வெளியிடலாமா என்று கீதாவிடம் பேசிய போது....

கீதா நீதானே வலைத்தளம் ஆரம்பிக்கலாம்னு சொன்னது...நீ தொடர்ந்து சொல்லு இப்ப..

கீதா: அண்ணா, நான் துளசி எழுதிய குறிப்புகளை வாசித்ததும் கதைகள் மனதில் தோன்றின. இத்தனை வருடங்களாக எனக்கும் எழுதுவதில் ஆர்வம் இருந்தும் எழுதுவதற்கானச் சூழல் அமையாதிருந்ததால், “நாம் ஏன் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது” என்று துளசியிடம் சொல்லவும், அவரிடம் இணைய வசதி இல்லாததால், எனது இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு, 2013 ஆம் வருடம், ஜீன் மாதம் 16 ஆம் தேதி துளசியின் ஜிமெயில் கணக்கில், வலைத்தளம் தொடங்கினோம்.  அந்த முற்றுப் பெறாத புதினத்தை துளசி முடித்ததும், அதையும், ஒரு சில கதைகளையும், கட்டுரைகளையும் புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது.

துளசி இப்போது நீ சொல்லு..

துளசி : நான் ஆங்கில ஆசிரியர்.  பாலக்காட்டில். எனவே எனது மாணவர்கள் அனைவரும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதால், எனது மாணவர்களும் வலைத்தளம் வாசித்தால் அவர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாமே என்று, ஆங்கில இலக்கணமும், நடைமுறையில் பேசப்படும் ஆங்கிலமும் எளிதாகக் கற்றுக் கொடுப்போம் என்று ஆங்கிலத்தில்தான் எழுத ஆரம்பித்தோம். ஆனால், இருவருக்குமே தமிழில் எழுதத்தான் மிகவும் ஆர்வம் இருந்ததால், எங்கள் கல்லூரிக் காலத்தைத் தொடரலாமே என்று தமிழில் எழுத ஆரம்பித்தோம். அப்படித்தான் எங்கள் வலைப்பயணம் தொடங்கியது.

 (2)   தங்களின் வலைப் பக்கத்திற்கு தில்லைஅகத்து குரோனிக்ள்எனப் பெயரிடக் காரணம் என்ன? 

எல்லோருமே சிதம்பர ரகசியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  பௌதீகத்தின் அடிப்படையிலான ப்ளாக் ஹோல் கோட்பாடும், தில்லை/சிதம்பர ரகசியத்தின் கோட்பாடும் ஒரே கோட்பாட்டைப்பற்றித்தான் பேசுகின்றன. அந்த அண்டவெளியின் இயக்கத்தில்தானே இவ்வுலகே அமைந்திருக்கிறது. அந்த அண்டவெளி சக்தியின் அகத்திலிருந்து வந்தவர்கள் என்ற அர்த்தத்தில் “தில்லைஅகத்து” என்று, எங்கள் குறும்படங்களைப் பற்றி வெளியிட தொடங்கியிருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் எண்ணங்களைப் பதிவிட முடிவு செய்ததால் “தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ்” என்று இப்போது எழுதிக் கொண்டிருக்கும் வலைத்தளத்தை ஆரம்பித்தோம்.

“தில்லைஅகத்து” வலைத்தளத்தில் முதல் குறும்படமாகிய “மஹாமுடி த க்ரேட்” படத்தின் நாடக வடிவத்தை, ஆங்கிலத்தில் “How to Analyze A Visualized Drama and Achieve English Proficiency” என்று புத்தகமாக, அதில் மாணவர்கள் செயல் முறை வடிவில் ஆங்கிலம் கற்கும் முறைகளையும் சொல்லி, மாணவர்களுக்கு வேண்டிப் புத்தகமாகவும் வெளியிட்டேன். அடுத்து எடுக்கப்பட்டப் படங்களும், “கார்ப்பெண்டர் த க்ரேட்”, “பொயட் த க்ரேட்”, இனி வரப் போகும் படங்களும், “செயின்ட் த க்ரேட்” (கேரளத்தைப் பர்றிய விவேகானந்தரின் கருத்து), “வாரியர் த க்ரேட்” (இராவணன் பற்றியது) இந்த 5 கதைகளும் புத்தகமாக வெளிவரும்.

க்ரோனிக்கிள்ஸ் என்று பெயர் வைத்ததன் காரணம்,  ரிச்சர்ட் ஸ்டீல், ஜோசஃப் ஆடிசன் எனும் பல வருடத்து நண்பர்கள் இருவரும், “த ஸ்பெக்டேட்டர்” எனும் இதழ் தொடங்கி அதில் எழுதி வந்தனர்.  நாங்களும் இருவரும் சேர்ந்து எழுத நினைத்ததால் “தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ல்ஸ்” என்று பெயரும் வைத்து விட்டோம்.  இதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதிய நினைவு.

 (3) நட்புரீதியாக இருவர் சேர்ந்து செயல்படும் படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள். வலையுலகில் நீங்கள் இருவரும் இருப்பது, மகிழ்வுக்கும், பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரிய உயர் பண்பாடாக நினைக்கிறேன். இதில் உங்கள் சாதகமென்ன பாதகமென்ன?

முதலில் இருவர் சேர்ந்து எழுதுதல் என்பதற்கு வலையுலகில் முன்னோடி, எங்கள் அறிவுக்கு எட்டியவரை “எங்கள் ப்ளாக்” என்று நினைக்கின்றோம். நாங்கள் அதன் பின் வந்தவர்களே.

எங்கள் இருவரின் நன்றி, தாங்கள் இதனைப் பின்பற்றுதலுக்கும் உரிய உயர் பண்பாடாக நினைத்துப் பாராட்டியமைக்கும்.  நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களையும் புரிந்து கொண்டு, வலை உலகில் எல்லா சகோதர சகோதரிகளும் எங்களுக்கு ஆதரவு தந்து, எங்களை இவ்வளவு தூரம் வளர்த்தமைக்கு உங்கள் எல்லோருக்கும், தமிழ் வலையுலகிற்கும் எங்கள் நன்றிகள் பல சொல்லிக் கொள்கின்றோம்.

இரு ஆண்கள், இரு பெண்கள் சேர்ந்து பணியாற்றுவது உண்டு நீங்கள் உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல். ஆனால், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து எழுதுவது என்பதில் சில பிரச்சனைகள், சவால்கள் வரத்தான் செய்யும், அது எத்தனை வயதாக இருந்தாலும்.  அதையும் சமாளித்துக் கடந்து, நாங்கள் எங்கள் நட்பைத் தொடர்ந்து, எழுதிக் கொண்டும் வருகின்றோம், இனியும் எழுதுவோம் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதுவதில் சாதகங்கள்தான் இருக்கின்றன.  ஒருவர் எழுத முடியாத நேரத்தில் மற்றவர் எழுதலாம். இருவரது கருத்துகளும், எண்ண அலைவரிசையும் ஒன்றிப் போவதால் பிரச்சனைகள் இல்லை. அப்படியே வேறுபட்டாலும், இருவரும் கலந்துரையாடி, மற்றவரது கருத்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். கருத்து இடுவதில் கூட பல சமயங்களில் ஒத்தக் கருத்தாக இருக்கும். நாங்களே வியந்து போன தருணங்கள் உண்டு.

கீதா: கருத்து இடுவது பெரும்பாலும் ஒருமித்து இருந்தால் அப்படியே போட்டுவிடுவோம்.  சில சமயங்களில் துளசியின் கருத்து தனியாகவும், எனது கருத்தைத் தனியாகவும் பதிவதுண்டு. நான் மட்டும் கருத்திடுவதும் உண்டு என் பெயரிட்டு. அது பெரும்பாலும் என்னைப் பற்றிய அல்லது என் மகனின் தொழில் சம்பந்தப்பட்ட, சென்னையைச் சார்ந்த நிகழ்வாகவோ, விசயமாகவோ, எனக்குத் தெரிந்த நிகழ்வு, விசயமாகவோ இருக்கலாம். பாதகங்களைப் புறக்கணித்து சாதகங்களையே எடுத்துக் கொள்கின்றோம்.

தொடரும்.....


வெள்ளி, 18 மார்ச், 2016

நானும் எனது எஜமானியம்மாவும்

எனக்கு 62 வயது ஆகின்றதாம். பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சமீபகாலமாக வராதவர்கள் வந்திருந்தார்கள். 62 வயது ஆகிவிட்டதா அதற்குள்? என் எஜமானியம்மாவும் அவரது கணவரும் அப்போது சிறியவர்கள். அவர்களது மூத்த மகளின் கல்யாணம் இப்போதுதான் நடந்தது போல் இருக்கின்றது. கொள்ளுப் பேரனே பிறந்தாயிற்று. முன் வாசலில் பந்தல் போட்டு அமர்க்களமாக நடந்தது. இப்போது அப்படி நடக்குமா?

அதன் பிறகும் பல நல்ல நிகழ்வுகள் பல, துக்கம் சில நடந்திருந்தாலும், எனக்குப் பல நல்லவையே நினைவில் உள்ளன. எஜாமானியம்மாவின் இரு மகள்களின் கல்யாணம், குழந்தைகள், மகன்களின் கல்யாணங்கள், புதுவரவுகள், சீமந்தம், குழந்தைகள், அவர்களது பிறந்தநாள் விழாக்கள் என்று எப்போதும் ஏதேனும் ஒரு நிகழ்வு, மகிழ்வாக இருக்கும். நானும் இளமையுடன், பொலிவுடன் மகிழ்வாக இருந்தேன்.

ஒவ்வொரு பண்டிகைக்கும், வெளியூரில் வசித்துவந்த மகன்களும், குழந்தைகளும் சிறியவர்களாக இருந்ததால், குடும்பத்துடன் வந்துவிடுவார்கள். எல்லோரும் சேர்ந்துதான் தீபாவளி, பொங்கல் என்று கொண்டாடுவார்கள்.

சுற்றிலும் மாமரங்கள், வேப்பமரம், தென்னை மரங்கள், கொய்யா மரம், சப்போட்டா மரம், மாதுளை மரம், வாழைமரம், நெல்லிக்காய் மரம், அடுக்கு மல்லி, மல்லி, கனகாம்பரம்,  செம்பருத்தி, மஞ்சள், இஞ்சி, கறிவேப்பிலை, எலுமிச்சை மரம், பவழமல்லி, தித்திப்பூ, பன்னீர்பூ, மருதாணி என்று. கிணற்றில் வற்றாத நீர். இப்போதும் கிணறு உள்ளது நீருடன். சேந்துவார் இல்லாமல்.

பண்டிகைகள் மட்டுமின்றி, கோடை விடுமுறையிலும் வெளியூரிலிருந்த குழந்தைகள் வந்துவிடுவார்கள். உள்ளூர் குழந்தைகளும் சேர்ந்து கொள்ள, குழந்தைகள் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓடியாடி விளையாடுவார்கள். குழந்தைகள் கிணற்றினை வியப்பாகப் பார்ப்பார்கள். மரங்களில் ஏறி விளையாடுவதும், குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பழரசத்தை எடுத்துக் குடித்துவிட்டுப் பாட்டிலில் நீரை நிரப்பி வைத்துவிடுவதும், ஒளிந்து விளையாடுகின்றோம் என்று தலையணைகள், மெத்தைகள், போர்வைகள் எல்லாம் கலைத்து விடுவதும், வாசலில் இலைகள், மண், தீப்பெட்டிகள், விளையாட்டுச் சாமான்கள் என்று பரப்புவதும் அதகளப்படும். தாத்தாவுடன் சீட்டு விளையாட்டும், கேரம் போர்டும் அமர்க்களப்படும்.

அவர்களின் குறும்புகள், சேட்டைகளைப் பெரியவர்கள் சமாளிப்பதும், கண்டிப்பதும், சிரிப்பும், கும்மாளமும் என்று பொழுது போவதே தெரியாது. எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். எனக்கும் மிகவும் மகிழ்வாக இருக்கும். குழந்தைகள் அனைவரும் ஒரே குடும்பம் போலத்தான் இருந்தார்கள். எல்லோரும் கிளம்பியதும் எனக்கும் வெறிச்சென்று இருக்கும். களை இழப்பேன்.

எல்லா குடும்பங்களிலும் இருப்பது போல், மாமியார், மருமகள்கள், மகன்கள் குடும்பத்திற்கிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும் பெரிதாக ஏதுமில்லாமல் எல்லோரும் குழந்தைகளால் மகிழ்வாகவே இருந்து வந்தார்கள். வருவோரும், போவோரும் என்று பல நாட்கள். 

நவராத்திரி கொலுவே திருவிழா போல நடந்துவந்த நாட்களும் நினைவில் நிழலாடுகின்றது. வாசலடைத்துப் பெரிய கோலம் போடப்படும். பொங்கல் என்றால் பல நிறங்களில் பொடிகள் தூவிய கோலங்கள் அழகுபடுத்தும். நானும் அலங்காரத்துடன் மிக அழகாக இருப்பேன்.  எல்லோரும் என்னை அப்படி ரசிப்பார்கள். வாஞ்சையுடன் இருப்பார்கள்.

இப்படி இருந்தால் கண் பட்டுவிடும் போல. குழந்தைகளும் வளர்ந்தார்கள். பெரிய வகுப்புகளுக்குச் சென்றதால், படிப்பின் சுமை கூடியது. மகன்களும் வேலை மாற்றம், ஊர் மாற்றம், பதவிகள் என்று, கூடுவது சற்றுக் குறைந்தது. என்றாலும் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது.
தனித் தனிக் குடும்பங்களாக வாழ்ந்ததால், எல்லோரது சிந்தனைகளும், பழக்கவழக்கங்களும், அவரவர் இருந்த ஊர்கள், அனுபவங்கள், சூழல்களுக்கு ஏற்ப மாறத் தொடங்கின. குழந்தைகளின் சிந்தனைகள் உட்பட.

வருடங்கள் செல்லச் செல்ல வீட்டு நிகழ்வுகள் பலவும், பெரியவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளை வரவழைத்தன. குறிப்பாக..

4, 5 வருடங்களுக்கு முன் எஜமானியம்மாவின் ஒரு மகன் திடீரென்று இறந்துவிட மெதுவாகப் பிரச்சனைகள் தலை தூக்கத் தொடங்கின. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, இவர்கள் மனதில் இத்தனை நாட்கள் எரிமலை போல் கனன்று கொண்டிருந்த எண்ணங்கள் குழம்பாக வெளிவரத் தொடங்குகிறது என்று.

இப்போது வீட்டை என்ன செய்வது? தங்கம், வெள்ளி எல்லாம் பிரிக்கலாமே. அப்பெண்ணிற்குப் பாகம் கொடுக்க வேண்டாமா? வயதான பிறகும் எஜமானியம்மா இன்னும் காதிலும், மூக்கிலும், கழுத்திலும் இத்தனை நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? பிரித்துக் கொடுக்க வேண்டியதுதானே என்று இறந்து போன மகனின் மனைவியை மையமாக வைத்து, இந்த நிகழ்வைச் சாக்காக வைத்து, மற்றவர்கள் தங்கள் பங்கிற்காகப் பேசத் தொடங்கினர்.

மற்றொரு மகனின் குடும்பத்தில் பிரிவினை ஏற்பட, குடும்பங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகமாகி, சண்டைகள் என்று இடைவெளி ஏற்படத் தொடங்கியது. பிரிய நினைத்தப் பெண் குட்டையில் கல்லை எறிந்துவிட்டுப் போய்விட்டாள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், இரு குழுவானார்கள் குடும்பத்தார்கள். எஜமானியம்மாவும், பிரிவு ஏற்பட்டக் குடும்பத்து மகனும் குறியானார்கள் ஒரு குழுவிற்கு. இதற்கிடையில் எஜமானியம்மாவின் கணவர் இறைவனடி சேர்ந்தார். எரிமலையாய் கனன்று கொண்டிருந்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கின. குடும்பங்களுக்குள் இடைவெளி அதிமாகியது.

தற்போது என் எஜமானியம்மாவுக்குச் சதம் அடிக்க இன்னும் 10 வருடங்கள் உள்ளன. இந்தப் பங்குப் பிரிப்பில் எல்லாம் தன்னை இணைத்துக் கொள்ளாத மருமகளை எஜமானியம்மா அழைத்து, “நீ பல வருடங்களுக்கு முன், எதிர்காலத்தில் இந்தக் குடும்பத்தில் பிரிவினை வரும். வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள், பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியது இப்போது நடக்கின்றதே.  எப்படிக் கணித்தாய்?”

“இது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. மனித மனங்கள், எண்ணங்கள் வெளிப்படும் போது அவற்றைப் படிக்கத் தெரிந்தால் போதும்.” இது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. அப்போதே தெரிந்திருந்தாலும் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாதுதான். 

என் எஜமானியம்மா ராணி போன்று கம்பீரமாக எல்லோரும் அவரது சொல்லின் கீழ் இருந்த காலம் அது.

என் எஜமானியம்மாவின் கணவர் உயிரோடு இருந்த போது அவர்கள் இருவரையும் பார்த்துக் கொள்ள மாட்டோம் என்று சொன்னவர்கள், கணவர் இறந்த பிறகும் எஜமானியம்மாவைப் பார்த்துக் கொள்ள மனமில்லாதவர்கள், இதுவரை வராதவர்கள் இப்போது வந்திருந்தார்கள். அம்மாவின் பொருட்களைப் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவரது கணவரின் பணமும் பிரிக்கப்பட்டது.  என் எஜமானியம்மா பேச்சற்று பரப்பிரம்மம் போல் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்து என்னைப் பற்றிப் பேசினார்கள்.

இருவர் மட்டும் - தனியான மகனும், கணித்துச் சொன்ன மருமகளும் (அவர் குடும்பம்) மட்டும் இவற்றிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டார்கள் எதுவும் வேண்டாம் என்று.

இப்போது புரிந்தது. பொலிவிழந்து, களை இழந்து, மயான அமைதியுடன் யாருமற்ற அனாதையாக இருக்கும் எனது மரணம் நெருங்கிவிட்டதாக. நல்ல நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கின்றேன். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நான் யாரென்று. ஆம்! என் எஜமானியம்மாவையும், அவரது குடும்பத்தாரையும் காத்து வந்த, இப்போது எனது மதிப்பால் காக்ககப்போகும் வீடு. என் மீது அவர்களுக்கு வாஞ்சை அல்ல. என்னால் வரும் பணம்தான் வேண்டும் என்பதும் புரிந்து போனது.

எல்லோரும் சென்ற பிறகு, என் எஜமானியம்மா மெதுவாகக் கேட்டார், தனியாக இருக்கும் மகனைப் பார்த்து.

“எல்லோரும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போகிறார்களே. இந்த வீட்டையும் விற்கப் போகிறார்களா? யார் என்னைப் பார்த்துக் கொள்வார்கள்?  யாருடன் இருக்கப் போகிறேன்? அதைப் பற்றி யாரும் பேசவில்லையே”

நான் அமைதியாக இருக்கின்றேன் என் மீது இறங்கப் போகும் புல்டோசரின் கரங்களை எதிர்நோக்கி.

---கீதா 



திங்கள், 14 மார்ச், 2016

ஹச்சிகோ

 எங்கள் முந்தைய பதிவான நட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்! ற்கு மதுரைத் தமிழன் கொடுத்திருந்தப் பின்னூட்டம் இது.

எனது கவலை எல்லாம் அந்த மனிதர் வயதானவராக இருக்கிறார் தீடிரென்று இறந்து போனால் இந்தே பெங்குவினுக்கு எப்படி தெரியும் அல்லது புரியும் இந்த பெங்குவினிற்காகவது இந்த மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

வாசித்ததும் எனக்கு ஆச்சரியம். பதிவை எழுதிக் கொண்டே நானும் எனது மகனும் பெங்க்வினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இதே எண்ணம் என் மனதில் ஓடிட நான் மகனிடம் வருந்தினேன். இவர்கள் நிறைய நாட்கள் இருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டேன். பேசிவிட்டு, எனக்கு எழுந்த எண்ணத்தைப் பதிவின் இறுதியில் சேர்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டே, இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் வெளியிடும் முன் படங்களை இணைத்து வெளியிடும் போதும் சேர்க்காமல் விட்டு விட்டேன்.


பல வருடங்களுக்கு முன் ஜப்பானில் நடந்த உண்மையான நிகழ்வின் நாயகனான ஹச்சிகோ எனும் நாலுகால் செல்லத்தைப் போன்று உள்ளது இந்த பெங்க்வின் நிகழ்வும் என்று நானும் மகனும் பேசியதால், இந்த எண்ணத்தைப் பதிவாக எழுதிவிடலாமே என்றும் தோன்றியது.  இப்போது பெங்க்வின் மனதை நெகிழ்த்தியது போல் ஹச்சிகோ மனதை நெகிழ்த்தியது அவனைப் பற்றி அறிந்த போது, பல வருடங்களுக்கு முன்.

அக்கிடோ ப்ரீட்: வலது புறம் இருப்பவை ஜப்பானின் வடக்குப் பிரதேச வகை. இடது புறம் இருப்பவை அமெரிக்க அக்கிடோ சாதிவகை

ஹச்சிகோ. 1924 ஆம் வருடம் டோக்யோ பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறை பேராசிரியர் Hidesaburo Ueno, ஹச்சிகோ என்று பெயரிடப்பட்ட, அக்கிடோ எனும் பெரிய சாதிவகைச் (Akito breed) செல்லத்தை வளர்த்து வந்தார்.


ஒவ்வொரு நாளும் ஹச்சிகோ தன் எஜமானரை வழி அனுப்பி, அவர் திரும்பும் வேளையில் ஷிபுயா ரயில் நிலையத்தில், அந்த ரயில் வரும் சரியான நேரத்திற்குச் சென்றுக் காத்திருந்து அவரை வரவேற்று, தவறாது, 1925 ஆம் வருடம் பேராசிரியர் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுக் கல்லூரியிலேயே இறந்த முன் தினம் வரை அழைத்து வந்திருக்கிறான். இறந்த அன்று அவர் திரும்பவில்லை.


ஆனால், ஹச்சிகோ அவரை எதிர்பார்த்து ரயில் நிலையத்தில் காத்திருந்திருக்கிறான். இப்படி ஒரு நாள் அல்ல, 9 வருடங்கள், அவன் இறக்கும் வரை காத்திருந்திருக்கிறான்.

பேராசிரியரும், ஹச்சிகோவும் இப்படி இருப்பதை ஷிபுயா ரயில் நிலையத்தின் வழி பயணம் செய்யும் பல பிரயாணிகளும் பார்த்திருந்ததால், அவர்களை எல்லாம் இவன் தனது காத்திருப்பால் ஈர்த்திருந்திருக்கிறான். என்றாலும் அங்கிருந்த ரயில்நிலையத்தின் பணியாளர்கள் இவனைக் கண்டுகொள்ளவில்லை முதலில்.


அகிட்டோ வகைச்சாதியைப் பற்றி நன்றாக அறிந்திருந்த, பேராசிரியரின் மாணவர் ஒருவர், ஹச்சிகோ, ரயில் நிலையத்தில் இப்படிக் காத்திருப்பதைப் பார்த்து அவனைப் பின் தொடர, ஹச்சிகோ, பேராசிரியரின் தோட்டத்தை முன்பு பராமரித்தவரின் வீட்டிற்குச் செல்லுவதைப் பார்த்து அந்தப் பணியாளரிடம் ஹச்சிகோவின் கதையை அறிந்து, ஹச்சிகோவின் இந்த விசுவாசத்தைப் பற்றியும், அகிட்டோ வகை சாதிச் செல்லங்களின் இந்தக் கடமை உணர்ச்சி மற்றும் விசுவாச குணத்தைப் பற்றியும் 1932 ஆம் ஆண்டு கட்டுரை வெளியிட, ஹச்சிகோ பிரபலமடைய, மக்கள் ஹச்சிகோவுக்கு அவன் காத்திருந்த வேளையில் உணவு அளித்துக் காத்து வந்திருக்கின்றனர். 

அந்த மாணவர் ஹச்சிகோவை அடிக்கடிப் பார்த்துப் பல கட்டுரைகள் வெளியிட அவனது விசுவாசமும், பற்றுதலும் நாடு முழுவதும் பரவ, அவன் மிகவும் புகழ் பெற்று, விசுவாசத்திற்குத் தேசீய சின்னமாகக் கொண்டாடப்பட்டான். குடும்பத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவனை எடுத்துக்காட்டாக, பெற்றோரும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தனர்.

ஹச்சிகோ இறப்பதற்கு ஒரு வருடம் முன்னர்



அவனது உருவம் போல ஒரு வெண்கலச் சிலை 1934 ஆம் வருடம் செய்து ஷிபுயா ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டு அவன் முன்னிலையிலேயே திறப்புவிழா நடத்தித் திறந்து வைத்தனர். அந்தச் சிலை இருக்கும் வழி ஹச்சிகோ எக்சிட் என்றும் பெயரிடப்பட்டது.

இதன் நடுவில் உள்ள செய்தியைப் படித்தால் மனம் கனத்துவிடுகிறது

ஹச்சிகோ 1935 ஆம் வருடம் மார்ச் 8 ஆம் நாள், சிபுயாவில் ஒரு தெருவில் இறந்துக் கிடந்திருக்கிறான். அவனது எஜமானரின் மனைவி மற்றும் ரயில் நிலையப் பணியாளர்கள் அவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.


அவனது மயிர்த்தோல் “டாக்சிடெர்மி” செய்யப்பட்டு, அதாவது உயிருடன் இருக்கும் நிஜ உருவம் போல் செய்யப்பட்டு தேசிய அரும்பொருட்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். 


அவன் உடல் எரிக்கப்பட்டச் சாம்பலை பேராசிரியரின் கல்லறைக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்து கல்லறை எழுப்பியுள்ளனர். ஹச்சிகோ இறந்த தினம், மார்ச் 8, ஒவ்வொரு வருடமும் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

Hachi A Dog's Tale - அமெரிக்கத் திரைப்படம்

ஹச்சிகோ பற்றிய திரைப்படம் ஜப்பானிய மொழியில் 1987 ல் எடுத்திருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2009ல் ஹச்சி-எ டாக்’ஸ் டேல் (Hachi  A Dog’s Tale) என்று எடுக்கப்பட்ட அமெரிக்கப் படமும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஹச்சிகோ பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். அந்த நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட மேற்சொன்ன படமும் கூட பார்த்திருப்பீர்கள். பார்த்ததும் நீங்கள் நாலுகால் செல்லங்களின் பிரியர் என்றால் நிச்சயமாக கண்ணில் கண்ணீர் வந்திருக்கும். இந்தப் படத்தைப் பார்த்ததும் மனம் என்னவோ செய்திட என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

டிண்டிம் பெங்க்வின் நிகழ்வை வாசித்ததும், ஹச்சிகோ நினைவு வர, டிண்டிமும், டி சுசாவின் காலத்திற்குப் பிறகு இத்தனை தூரம் நீந்தி வருவானோ? தேடுவானோ? தவிப்பானோ? பாவம் குழந்தை. எப்படி உணர்வான் என்று தோன்றி மனம் மிகவும் வேதனை அடைந்தது. டிண்டினும், டி சுசாவும் இன்னும் பல ஆண்டு காலம் வாழ வேண்டும் அந்த அன்பிற்காகவேனும்.

ஒரு வேளை ஹச்சிகோ போல் டிண்டினிற்கும் உருவச் சிலை அமைக்கப்படலாம். படம் எடுக்கப்படலாம். ஹச்சிகோ போல் பிரபலமாகலாம்.


கடந்த வருடம் 2015ல் ஹச்சிகோவிற்கு அவனது எஜமானர், பேராசிரியர் மீண்டும் அவனைச் சந்திப்பது போல உருவச் சிலையை பல்கலைக்கழக விவசாயத் துறையினர் உருவாக்கியிருக்கிறார்கள்.

விலங்குகள் மனிதர்களை விட மேலானவைதான். எனவே, நாயே, எருமை மாடு, கழுதை, குள்ளநரி என்று சொல்லித் திட்டி நாலுகால்செல்லங்களைக் கேவலப்படுத்தவதைத் தவிர்க்கலாமே.

-----கீதா  

படங்கள், தகவல்கள் - நன்றி: இணையம், விக்கி, யூட்யூப்
  





சனி, 12 மார்ச், 2016

நட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்!

இது ஒரு அற்புதமான நிகழ்வு. மனதைத் தொட்ட நிகழ்வு. இதை வாசித்த போது, உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்ற பகிர்ந்துள்ளேன். ஒருவேளை நீங்கள் ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ வாசித்திருக்கலாம். என்றாலும் நீங்கள் ரசிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பகிர்ந்துள்ளேன்.

ப்ரேசிலின் ஒரு தீவுக் கிராமமான ரையோ டி ஜனைரோவைச்  ( Rio de Janeiro) சேர்ந்தவர், 71 வயதான ஜோஆஒ பெரைரா டி சுஸா (Joao Pereira de Souza).  பகுதி நேர மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்.
When Mr de Souza first discovered the tiny penguin he was worried the starving creature would die
2011 ஆம் வருடம் ஒரு நாள், கடற்கரையில் பாறைகளுக்கிடையில் ஒரு குட்டிப் பெங்க்வின் உடல் முழுவதும் எண்ணையுடன், பசியில் வாடிக் கிடந்திருப்பதைக் கண்டிருக்கிறார் டி சுஸா.

டி சுஸா குட்டியை எடுத்துக் கொண்டுச் சென்று அதன் இறக்கைகளைச் சுத்தப்படுத்தி, தினமும் அதன் உணவான மீன் அளித்து, நன்றாகக் கவனித்து மீண்டும் நல்ல உடல்நிலை பெறச் செய்திருக்கிறார். எண்ணெயினால் ஏற்பட்டக் கறுப்பு நிறப் படிமானத்தினைச் சுத்தப்படுத்த ஒரு வாரம் ஆகியிருந்திருக்கிறது. பெங்க்வினிற்கு டிண்டிம் என்று பெயரும் சூட்டியுள்ளார். டிண்டிம் ஆண் பெங்க்வின்.
Although Dindim goes off to breed for four months of the year, he spends the rest of his time with Mr de Souza
டிண்டிம் நன்றாக உடல் நிலை தேறியவுடன் அதனை மீண்டும் கடலிற்குள் விட்டிருக்கிறார். ஆச்சரியம். நான்கே மாதங்களில் அது மீண்டும் அவரை எங்கு அது சந்தித்ததோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு உணவளித்து மீண்டும் கடலில் விட்டாலும் அது செல்லாமல் அவருடன் வீட்டிற்குச் சென்றிருக்கிறது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.
Dindim will not allow any human but Mr de Souza to pet him - if they try he tends to peck them away
இப்படியாக டிண்டிம் 8 மாதங்கள் டி சுஸாவுடன் தங்கிவிட்டு, இனப்பெருக்க காலம் வரும் சமயத்தில் தன் கோட் ஆன இறக்கைகளை மாற்றிவிட்டு மறைந்துவிடுமாம். அர்ஜெண்டைனா, சிலி கடற்கரையைத் தாண்டிச் சென்று விடுகிறதாம். 4 மாதங்கள் கழிந்த பின் மீண்டும் இவரைத் தேடி வந்துவிடுகிறதாம். இப்படி கடந்த 4 வருடங்களாக இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றதாம்.
இப்படி 5000 மைல்கள் அது நீந்திக் கடந்து வருவதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதோ டிண்டிம் நீந்திக் கடக்கும் பாதை.

டி சுஸா டிண்டிமை தன் குழந்தையைப் போல நேசிப்பதாகவும், டிண்டிமும் அவரை நேசிப்பதாகவும் நம்புகின்றார்.

ஆம்! டிண்டிம் நேசிக்கவில்லை என்றால் மீண்டும் அவரைத் தேடி வருமா அந்தக் குழந்தை?!!

ஜூன் மாதம் வந்து இவருடன் 8 மாதங்கள் அதாவது ஃபெப்ருவரி வரை இருந்துவிட்டு ஃபெப்ருவரியில் போய்விடுகிறான். ஒவ்வொரு வருடமும் அவன் அன்பு கூடிக் கொண்டு வருகிறதாம்.

டி சுஸாவைப் பேட்டி கண்ட உயிரியல் வல்லுநர், “இப்படியான ஒரு நிகழ்வை இதுவரைக் கண்டதில்லை” என்று சொல்லியிருக்கிறார். டிண்டிம், டி சுஸாவையும் பெங்க்வின் என்று நினைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
The unlikely duo are all but inseparable and enjoy spending time with one another on the Brazilian island
டி சுஸாவைக் கண்டதும் பைரவரைப் போல வாலை ஆட்டுகிறானாம், சந்தோஷத்தில் குரலெழுப்புகின்றானாம். டி சுஸாவைத் தவிர வேறு எவரையும் தொட அனுமதிப்பதில்லையாம் டிண்டிம். டி சுஸாவின் மடியில் அமர்கின்றானாம். அவர் அவனைக் குளிப்பாட்டவும், உணவளிக்கவும், அவனைத் தூக்குவதற்கும் அனுமதிக்கின்றானாம்.

பெங்க்வின்கள் மனிதர்களின் நல்ல நண்பர்கள். நன்றி மறக்கும் 6 அறிவு மனிதர்கள்! பிறப்பினால் சிற்றறிவு, ஆனால் 6 அறிவையும் மிஞ்சும் இந்த டிண்டிம் பெங்க்வின் தன்னைக் காப்பாற்றிய மனிதரை மறக்காமல் நன்றி உணர்வுடன் ஒவ்வொரு வருடமும் வந்து அவருடன் 8 மாதங்கள் தங்கி அன்பு பாராட்டுகிறான், கற்காமலேயே திருக்குறள் அறிந்த இந்த டிண்டிம் பெங்க்வின்.

ரசித்தீர்கள்தானே டிண்டிமை!!?

-----கீதா

படங்கள் : நன்றி டிவி க்ளோபோ-இணையம்.




வியாழன், 10 மார்ச், 2016

செல்ஃபி/க்ரூப்ஃபி – டைஃபி????!!!!!

செல்ஃபி! இது இப்போது பிரபலமாகி வைரல் ஆகி உள்ளதாக இருக்கலாம். ஆனால், செல்ஃபி 15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருக்கிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டாக்டர் டெர்ரி ஆப்டெர் சொல்லுகின்றார்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுவதற்கு வழிமுறைகள் இருந்தால் அதை மக்கள் உபயோகப்படுத்துவதில் முனைப்புடன் இருப்பது என்பது காலம் காலமாக இருக்கிறது. இந்தவகையில் தங்கள் உருவப்படமும், அதனால் உருவாகும் தங்களைப் பற்றிய நடத்தைப் பண்பாட்டையும் முன்நிறுத்துவதை மட்டுறுத்த முடிவது மட்டுமல்லாமல் தங்கள் படம் வெளியாவதன் முக்கியத்துவமும், சமுதாயத்தில் தங்கள் பதவியும், படிநிலையும் (அந்தஸ்தும்) வெளியாவதாகவும் கருதுகின்றார்கள்.

பல கேள்விகளுக்கிடையில் சிக்கியிருந்தாலும், உலகின் முதல் செல்ஃபி என்று கருதப்படுவது, 1839 ஆம் வருடம், ஃபிலடெல்ஃபியாவைச் சேர்ந்த, அமெச்சூர் வேதியியலாளரும், புகைப்படக் கலையில் ஆர்வமும் கொண்ட, ராபெர்ட் கார்னிலியஸ் என்பவர் தன்னை எடுத்துக் கொண்ட புகைப்படம்.


தனது குடும்பத்துக் கடையின் பின்புறம் தனது புகைப்படக் கருவியை மேற்புறமாக வைத்துவிட்டு, அதன் லென்சின் மூடியை நீக்கிவிட்டு, மீண்டும் அந்த லென்சை மூடுவதற்குள், ஓடி வந்து அதன் ஃப்ரேமிற்குள் ஒரு நிமிடம் உட்கார்ந்து எடுத்திருக்கிறார். எடுத்து முடித்ததும், அதன் பின் புறம் இப்படி எழுதியிருந்திருக்கிறார். “The first light Picture ever taken. 1839.” இப்படி எடுப்பது, அதன் பின், அக் காலத்திலேயே பரவலாக இருந்திருக்கிறது.

இப்படி வெளிப்படுத்துவது என்பது, உளவியலில், நம்மை யார் என்று வெளிப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. “looking-glass self” என்பது உளவியலில் சொல்லப்படும் வார்த்தை. அதாவது, நாம் நம்மைப் பற்றிய நமது பார்வை, நாம் எப்படி இருக்கின்றோம் என்பதிலிருந்து வருவதில்லை. மாறாக இந்தச் சமூகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்பதிலிருந்து வருவது.

நாம் பிறருடைய முகத்தைக் கவனிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்தானே. பிறருடைய முகங்களைக் காண்பதில் ஆர்வம் இருப்பது போல் நம் முகத்திற்கு எத்தனை “லைக்ஸ்” வருகின்றது என்பதை அறியும் ஆர்வமும் மேலிடுவதால் சமூக வலைத்தளங்களில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறதாம். அதாவது சுய மரியாதையை மேம்படுத்துவதாக.

சுய மரியாதையை மேம்படுத்துவதால், இதன் பயன்பாடுகள் விற்பனைத்துறையில், ஊடகங்களில் அதிகம் இருந்தாலும், தற்போது பரவி வரும் வேகத்தைப் பார்த்து உளவியலாளர்கள் சொல்லுவது, செல்ஃபிக்கள் அதிகமாக வெளியானால், அது உறவுகளைக் கூடப் பாதிக்கலாம் என்றும் அதனை narcissism அதாவது “தற்காதல்” என்றும் சொல்லுகின்றார்கள்.


ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி “செல்ஃபி” என்ற வார்த்தையை 2013 ஆம் வருடத்து வார்த்தையாகச் சொல்லியிருக்கிறது. எல்லாம் இருக்கட்டும்.

தற்போது செல்ஃபி, க்ரூப்ஃபி என்று எல்லா தரப்பு மக்களிடையேயும் வைரலாகி உள்ளது என்றாலும் குறிப்பாக இளைஞர்களிடையே என்பது எல்லோரும் அறிந்ததே. 

அது தற்காதல் என்று என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், செல்ஃபி/க்ரூப்ஃபி எல்லாம் ஜாலிதான். அதுவல்ல விபரீதம். ஆனால் எதுவரை? அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? கத்திக்கு இரு பயன்கள் இருப்பது போல்? ஆனால் இப்போது சமீபகாலத்தில் இந்த ஃபிக்கள், அதனால் விளையும் விபரீதம், உயிர் கொல்லியாகவும் உருவாகி வருகின்றது என்பதுதான் வேதனை. பயமுறுத்துவதும் அதுதான்.

மும்பையில் 14 வயதுப் பையன் ரெயிலில் செல்ஃபி எடுக்கப் போக ரயிலிலிருந்து விழுந்து இறந்திருக்கிறான்.  சில கல்லூரி மாணவிகள் கடற்கரையில் பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்கப் போக கடலில் விழுந்து உயிரிழந்திருக்கிறார்கள்.

இதோ இந்தக் காணொளியில் பாருங்கள். பள்ளியில் ஒரு மாணவி செல்ஃபி எடுத்து மரணம்.


இந்தக் காணொளி க்ரூஃபி யினால் மரணம் ஏற்படுவது பற்றி. மொழி புரியாது என்றாலும் படங்கள் நமக்குச் சொல்லிவிடுமே.


மிக மிக மோசமான செல்ஃபி/க்ரூப்ஃபி புனேயில் நடந்த நிகழ்வு. மலை முகட்டில் ஒரு குழு அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் இடுப்பில் கைகளிட்டு இணைந்து கொண்டு செல்ஃபி எடுக்கப் போகத் தவறி கீழே அனைவரும் விழுந்து இறந்திருக்கிறார்கள்.


உலகம் முழுவதும் இந்த செல்ஃபி வைரஸ் நோய் பரவியிருந்தாலும், 2015ஆம் வருடம் அதிகமாக செல்ஃபிக்கள் எடுக்கப்பட்டதாகவும், உலகிலேயே இந்தியாதான் செல்ஃபியினால் ஏற்படும் இறப்பு விகிதத்திலும் முதலிடம் வகிக்கின்றதாகவும் செய்தி சொல்லுகின்றது. இதோ இந்தக் காணொளியைக் காணுங்கள்.


இந்த நிகழ்வையும் பாருங்கள்.  நீங்கள் ஊடகங்களிலும் வாசித்திருக்கலாம். மனிதர்களின் முட்டாள்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. முட்டாள்தனத்தால் ஆறறிவை எப்படியேனும் உபயோகித்துக் கொண்டுத் தங்கள் அழிவைத் தேடிக் கொள்ளட்டும். ஆனால், இந்தப் பாவப்பட்ட உயிரினம் என்ன பாவம் செய்தது? முட்டாள் மனிதர்களின் கையில் சிக்கி க்ரூப் செல்ஃபி/க்ரூஃபி என்ற பெயரில் உயிரை விடுவதற்கு?

மிகவும் அரிதாகிவரும், அழிந்துவரும் இனமான ஃப்ரான்சிஸ்கானா டால்ஃபின்களில் (Franciscana dolphins) இரு குட்டி டால்ஃபின்கள் கரையை நோக்கி வந்த போது இவர்கள் ஒன்றினை எடுத்துத் தங்களுக்குள் மாற்றி மாற்றிக் கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டதில் டால்ஃபின் வெகு நேரம் தண்ணீரிலிருந்து வெளியில் இருந்ததால் உடம்பில் நீர் சத்துக் குறைந்து இறந்தே போனது. மனிதாபிமானமற்ற இந்தச் செயலை என்னவென்று சொல்ல?

இளம் பெண்கள், பையன்களை இந்தச் செல்ஃபி ஃபேய் பிடித்து ஆட்டிக் கொண்டு உயிரையும் மாய்த்து எத்தனைப் பெற்றோர்களைப் பரிதவிக்க வைத்திருக்கிறது! மும்பையில் பல இடங்கள் “நோ செல்ஃபி இடங்கள்” என்று பட்டியலிடப்பட்டு எச்சரிக்கைச் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆன்ட்ராய்ட் ஃபோன்/ஸ்மார்ட் ஃபோன்களினால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை மாற்றங்களைப் பற்றி எங்கள் ப்ளாகில் பல உண்மைகளைச் சொல்லியிருந்தார்கள். http://engalblog.blogspot.com/2016/02/blog-post_17.html அதில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். 

சமீபத்தில் நடந்த திருமணத்தில் தாலி கட்டி முடிந்ததும், பையன், மற்றும் பெண்ணின் நண்ர்கள், தோழிகள் குழாம் மேடைக்கு ஓடிச் சென்று செல்ஃபி/க்ரூஃபி. மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த வாத்தியார் கொஞ்சம் சத்தம் போட, திடீரென்று ஒரு பையன், "ஹை மாமா உங்க கூட ஒரு செல்ஃபி" என்று சொல்லி எடுத்துக் கொள்ள, கோபக்கண்களின் சிவப்பு அவர் கன்னத்திற்கு வெட்கத்தின் அடையாளமாக மாறியது.

போகிற போக்கைப் பார்த்தால், ஒருவரின் மரணத்தின் போது கூட, ஐயையோ! இறந்தவருடன் இதுவரை புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையே என்று செல்ஃபி எடுத்துக் கொள்வார்களோ??!!. (இதுவும் கூட நிகழ்ந்துவிட்டதாமே!!! ஒபாமா இப்படிச் செல்ஃபி எடுத்துப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டாராம். நன்றி மைதிலி!)

இறுதியாகச் சொல்ல விழைவது இதுதான்.  தொழில்நுட்பம் மிகவும் அவசியமே!. மாற்றுக் கருத்து இல்லை. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஒரு புறம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும் மறுபுறம் அழிவிற்கும் வழிவகுக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. தொழில்நுட்பத்தில் தவறில்லை. அது நம்மை ஆட்சி செய்து அதற்கு நாம் அடிமையாவதை விட, அதனை ஆட்டுவிக்கும் சக்தி நம்மிடம், நம் கட்டுக் கோப்பிற்குள் இருக்க வேண்டும்.

வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகளுக்கு இதனைப் பற்றி அறிவுறுத்தலாம் என்றும் தோன்றுகின்றது.

செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள். மகிழுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். அதே சமயம் நீங்கள் செய்ய வேண்டியது, அறிவுபூர்வமாக, அதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, ஆபத்தான இடங்களில் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் பெற்றோரை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் எதிர்காலக் கனவுகள், இலட்சியங்களை ஒரு நிமிடம் மனதில் ஓட விடுங்கள். இந்த ஒரு நிமிட மகிழ்வு துன்ப நிமிடமாக மாறுவதை விட, இயற்கை அழைத்துக் கொள்ளும் நிமிடம் வரை, வாழ்க்கையைக் கொண்டாட இன்னும் பல நொடிகள், நிமிஷங்கள், நாட்கள், வருடங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்!

படங்கள், காணொளிகள் - நன்றி கூகுள், யூட்யூப்

------கீதா

(இது செல்ஃபிக்கு எதிரானக் கட்டுரை அல்ல.  அதனை விபரீதமாக்கி விடாமல் பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதே)