மாலை மலர் ‘தீபாவளி மலரில் (நன்றி: மாலை மலர்) கலைவாணரைப் பற்றிய சுவாரசியமான சம்பவங்களைப்
படித்தவுடன், ‘மதுரை வீரனில்’ இளவரசி அவர் மனைவியை ‘அத்தை’ என்றதும், “அத்த நீ செத்த” என்று ரைமிங்க் நகைச்சுவையில் கலக்கியது நினைவுக்கு வந்தது. நாகர்கோவில்,
ஒழுகினசேரியில் பிறந்து (முத்து தியேட்டர் அருகில் தான் அவரது வீடு) வில்லுப்பாட்டுக்காரராக
தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்து, “இந்தியாவின் சார்லி சாப்ளின்” என்று பாராட்டப்பட்டு கலையுலகில் கொடிகட்டிப்
பறந்தவர்.தன்னுடைய தனித்தன்மையுள்ள நகைச்சுவையால், கருத்துக்களையும் அள்ளித் தெளித்தவர். பெரும்பாலும் தனது வசனங்களைத் தானேதான் எழுதும்
வழக்கம் கொண்டவர். என்.எஸ்.கே. எங்கள் ஊர்காரர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்குப்
பெருமைதான். (நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவளுடன் நாகர்கோவிலில் தனது (துளசிதரன்) கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தவர். ஆதலால் எங்கள் ஊர்)
கலைவாணரும் பழைய சோறும்
சினிமாவில் நகைச்சுவை மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர்
கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன். அவரது
வாழ்க்கையிலும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் உண்டு.
அதில் ஓரிரு சம்பவங்கள்...
கலைவாணர் ஒரு நாள் காலையில் தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக்
கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த
அவரது நண்பரும், முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன்,
“என்னங்க, உங்க மனைவி மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா? பழைய
சோறு சாப்பிடுறீங்க!” என்றார்.
கலைவாணர் எதுவும் பேசாமல், வேலைக்காராரைக் கூப்பிட்டு, “இந்தா..இந்த ஒரு
ரூபாய்க்கு (ஒரு ரூபாய் அப்போது...இப்போது மதிப்பு ??) பழைய சோறு வாங்கிட்டு வா.” என்றார்.
ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்கார்ர், “ ஐயா, நானும் எங்கெங்கோ
அலைஞ்சிட்டேன், ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல” என்றார்.
“கேட்டீங்களா நடராசன். எவ்வளவு பணம்
கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்.
அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி,
மதுரமும் அசந்து விட்டார்.
[வாழ்க்கையை எந்தக் கோணத்தில் எப்படிப் பார்த்தார் என்.எஸ்.கே என்று
தெரிகிறது. அதாவது, பழைமை மறக்கக் கூடாது
என்பதுதான் அது. ]
பெரியார் பக்தி
1947 ஆகஸ்ட் 15 முதல் சுதந்திர நாள் என்பதற்காக கலைவாணரை சென்னை வானொலி நிலையம்
அழைத்திருந்தது. நிகழ்ச்சி
சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின்
வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம் பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர்.
கலைவாணருக்கு வந்ததே கோபம். பெரியார்
பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம் பெறாது என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிலையத்தினர் மறுபடியும் பெரியார் பெயரையும்
இணைத்து நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.
[எங்கு ஒரு அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர்]
கலைவாணரும் அண்ணாவும்
கலைவாணர் சிலை திறப்பு விழா பேரறிஞர் அண்ணா தலைமையில் நடந்தது. கலைவாணர்
சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில், அண்ணா கூறியதாவது :-
"கலைவாணர் கலையுலகதிற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் நம்முடையை தொண்டுகளைச்
செய்ய வேண்டும். அதற்கு இந்தக் கலை ஒரு விழிகாட்டியாக அமையவேண்டும் என்ற முறையில்
கலைத் துறையைத் தேர்ந்த்தெடுத்தார். அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு
மட்டுமல்லாமல், கலைத்துறைக்கே, நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப்
பெற்றுத் தந்திருக்கிறது. நகைச்சுவை பாத்திரமென்றால்,
ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது
நகைச்சுவைப் பாத்திரம் நடக்கின்ற பொழுது இடறிக் கீழே விழுவார்கள்...அது நகைச்சுவைப்
பாத்திரம். இப்படி இருந்ததை மாற்றி,
நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிறிது நற்பயனைப் பெறத்தக்க ஒரு
பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ் கிருஷ்ணன் என்று
அண்ணா தனது பேச்சில் குறிப்பிட்டு பாராட்டினார்.
அன்று முதல்
அன்று முதல்
இன்று வரை
நகைச்சுவையில் தனி இலக்கணமே வகுத்தவர் என்று
அண்ணாவால் சொல்லப்பட்டு, அந்த நகைச்சுவையாலேயே தன்னைப் பொது வாழ்க்கையில் ஒரு
இன்றியமையாத நபராக ஆக்கிக் கொண்டவர் கலைவாணர்.
சொல்லப் போனால் இவரது நகைச்சுவை பாதிப்பு அன்று டணால் தங்கவேலுவிடமும் இருந்தது
என்றும் சொல்லலாம். இன்று ‘சின்னக் கலைவாணர்’ என்று அறியப்படும் விவேக் வரை கலைவாணரின்
தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை பாதிப்பு, காலம் கடந்து வந்து நிற்கிறது என்றால் அது பெருமை
மிக்க ஒரு விஷயம் மட்டுமல்ல அது எந்த அளவு நகைச்சுவை உலகை பாதித்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது!