வியாழன், 28 ஜூலை, 2016

தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி...

ஒருவழியாய், ராமன் குட்டி எனும் அச்சோதனைச் சாவடி அதிகாரி என் கையிலிருந்த என் கல்லூரி அடையாள அட்டையைப் பரிசோதித்த பின் அவர்களிடம், “நீங்கள் நினைப்பது போல் திருடன் அல்ல இவர். நடந்தே கொல்லூர் மூகாம்பிகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்”. என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பினார். அப்பகுதியிலுள்ள வீடுகளில் அரபு நாடுகளுக்குச் சென்றவர்களின் குடும்பங்களிலுள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வாழும் வீடுகளை அறிந்து, இரவு நேரங்களில் அவர்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடையிடையே நடப்பதால், இளைஞர்கள் கூட்டணி அப்பகுதியில் புதிய மனிதர்களைக் கண்டால் இப்படிக் கூட்டமாகக் கூடி, விசாரித்து அடி உதை கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பார்களாம்.  எப்படியோ, நான் அதிலிருந்துத் தப்பியதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும், அந்த ராமன் குட்டிக்கும் நன்றி சொன்னேன்.

இடையிடையே, அன்றிரவு, அந்த நாட்களில் பிரபலமான சித்ரா பாடிய “ஆயிரம் கண்ணுமாய் காத்திருந்னு நின்னே ஞான்” (ஆயிரம் கண்களால் உன்னைக் காக்கிறேன் நான்) என்ற பாடலை திரு ராமன் குட்டி பாடிக் கொண்டே இருந்தார். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் நீர் நிரைவதுண்டு. அன்று அவர் பாடிய போது என் உடல் சிலிர்த்தது. இறைவன் நேரடியாக நம்மைக் காக்க வரமாட்டார். ஆனால், அவரது உதவி இது போல் ஏதாவது ஒருவரது உருவில் நமக்குத் தேவையான நேரத்தில் கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை!

“நாளையும், நீங்கள் இன்று கடந்த தூரத்தைப் போல கடந்து மஞ்சேஸ்வரம் செக் போஸ்டை அடைய வேண்டும். அங்கு நீங்கள் தங்குவதற்கு அனுமதிக்க அங்குள்ள அதிகாரிகளுக்கு நான் ஒரு கடிதம் தருகிறேன்” என்று சொல்லி ஒரு கடிதமும் தந்தார். அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த போது, ஜாஃபரும், ஃபைசலும் சின்ன குற்ற உணர்வுடன் வந்து என்னுடன் பேசினார்கள். நான் ஓடாமல் ஒரு நிமிடம் தாமதித்திருந்தால் அவர்கள் என்னை அடித்திருக்கலாம். அதன் பின் இதை விட அதிகமான குற்ற உணர்வுடன் என்னிடம் வந்து பேசியும் இருந்திருக்கலாம். இதுதான் மனித இயல்பு.

ராமன்குட்டி சாருக்கு நன்றி சொல்லி, அதிகாலை 6 மணிக்கு அங்கிருந்துக் கிளம்பினேன். அவருக்காகவும் அதன் பின் பிரார்த்திக்கத் தொடங்கினேன். வழியில் பலமுறை தடுத்து நிறுத்தப்பட்ட போது அவர் தந்த கடிதம் மிகவும் உதவியாக இருந்தது. இரவு 7 மணிக்கு மஞ்சேஸ்வரம் சோதனைச் சாவடியை அடைந்து அக்கடிதத்தைக் காட்டிய பின் அவர்கள் காட்டிய இடத்தில் நிம்மதியாகத் தூங்கினேன். மஞ்சேஸ்வரம் தாண்டிவிட்டால் பிறகு கர்நாடகா. அங்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று ராமன் குட்டி சார் சொல்லியிருந்தார்.

மறுநாள், மஞ்சேஸ்வரத்திலிருந்து புறப்பட்டேன். கர்நாடகா மங்கலாபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கணபதி கோயிலை அன்று இரவு அடைந்து பூசாரியிடம் அங்கு தங்க முடியுமா என்று கேட்டேன். தங்க முடியாது என்றார். கோயிலை வலம் வந்து கொண்டிருந்த இளங்கலை முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த சந்தோஷ் எனும் இளைஞன் 13 வயது சிறுவன் ஒருவனை அழைத்து விவரம் சொல்ல, எனக்குத் தெரிந்த கன்னடத்தில் (நான் பிறந்து வளர்ந்த ராசிங்கபுரத்தில் 85% கன்னடம் பேசுபவர்கள்) அச்சிறுவனிடம் விவரம் சொல்லி, ஒரு சைவ உணவகத்திற்குச் சென்று உணவுண்டு, அவன் அழைத்துச் சென்று காட்டிய, சாவடி போல் தோன்றிய அறையில் தூங்கினேன்.

10 ஆம் நாள், குந்தபுரா அருகே பிரம்மவரா எனும் ஊரிலுள்ள மல்லிங்கேஸ்வரர் கோயிலில் இரவு தங்க அனுமதி கேட்டேன். அங்கே வாமன சாமி என்றொருவர் தங்கியிருக்கிறார். அவர் 7 மணி அளவில் அங்கு வருவார். அவருடன் தங்கிக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். கோயில் குளத்தில் குளித்து வந்த போது, வாமனசாமி அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார். நான் அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டு வருகிறேன் என்றதும், “உங்களுக்கும் சேர்த்துதான் உலை வைத்திருக்கிறேன். நான் சமைப்பதை என்னுடன் உண்பதில் ஆட்சேபனை இல்லை என்றால் சாப்பிடலாம். கஞ்சிதான். கடையிலிருந்து வாங்கிய ஊறுகாய் இருக்கிறது. அரிசியை நான் கடையிலிருந்துதான் வாங்குகிறேன்”, என்றார்.

பிச்சை எடுத்துப் பிழைக்கும் அவருடன் நான் இருந்த அந்த இரவு என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவுதான் இக்குறும்படங்கள். அவரதுக் குடும்பத்தைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. 10 வருடங்களுக்கு முன் மாவேலிக்கரைக்கு அருகே தன் பெயரிலிருந்த இடம் மற்றும் வீட்டை மனைவியின் பெயரில் எழுதிக் கொடுக்கச் சென்ற போது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்ததாகவும், அதுவே கடைசி என்றும் சொன்னார். அச்சமயத்தில் அவர் திருச்சி தாயுமானவர் கோயிலில் தங்கியிருந்தாராம். மலையாளம், தமிழ், கன்னடம், துளு, இந்தி மொழிகளில் சரளமாகப் பேசினார். நானும் என் மனம் திறந்து பலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். என் ஜென்ம நட்சத்திரம், பிறந்த இடம் பற்றிக் கேட்ட அவர் இடையே என் கை ரேகைகளையும் பார்த்தார். “ஆன்மீக வாழ்க்கை அல்ல, இல்லற வாழ்க்கைதான். விதி ரேகை பலமாக இருப்பதால் இறையருள் உண்டு என்றார்”. பிறகு “கடந்த 15 வருடங்களாக ஆன்மீக சுகம் தேடி அலையும் என்னிடம் பல இடங்களில் பலர் சொன்ன விஷயங்களையும், நான் அறிந்தவைகளையும் உங்களிடம் சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது”, என்றவர் கூறியவைகளை முதலில் அவரை மகிழ்விப்பதற்காகக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், அவை எல்லாம் என்னுள் பசுமரத்து ஆணி போல் பதிந்துவிட்டது. அவை சரிதானா என்று என்னால் இயன்றமட்டும் நீண்டகாலம் பரிசோதித்துப் பார்த்து அவை எல்லாம் உண்மைக்குப் புறம்பல்ல என்றும் உணர்ந்தேன்.

“எப்போதாவது சீர்காழி சட்டநாதன் கோயிலுக்குப் போங்கள். அப்போது அக்கோயிலுக்கும், கேரளாவிற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு விளங்கும்”.

“மார்த்தாண்டவர்மா “படையோட்டம்” நடத்தி பறிமுதல் செய்த, என்றென்றும் காக்கப்பட வேண்டிய, நம் முன்னோர்கள் சன்மானமாக வழங்கிய ஓலைச் சுவடிகளை எல்லாம் எரித்துச் சாம்பலாக்கி, விலைமதிக்கவியலா ஆபரணங்களை எல்லாம் பத்மநாபரின் காலில் புதைத்தும் விட்டார்.”

“கேரளத்தில் வைணவம், சைவத்தை முழுதுமாக விழுங்கிவிட்டது. பிரணவ மந்திரத்தைத் தந்தைக்கு உபதேசித்து குருவான, குருவாயூரப்பன், உடுப்பியில் சிவ சுதனான சுப்ரமணியன் உடுப்பிக் கிருஷ்ணனாக மாறியது போல், முருகன் திருப்பதியில் திருமாலாய் ஆனது போல், முருகன் உன்னிக் கிருஷ்ணனாக மாறியது ஓர் உதாரணம். அது போல் கர்நாடகத்தில் வைணவம் வளராததற்குக் காரணம் பசவண்ணாதான்”.

“வட இந்தியாவில் உள்ள கோயில்களில் சமஸ்க்ருதம் தெரியாதவர்களை அடித்து விரட்டுவார்கள். பலரும் நெற்றியில் நாமம் போட்டு வாயே திறக்காமல் இருப்பார்கள். நாமம் போட்டவர்களை அங்குள்ளவர்கள் ஏனோ தொல்லை செய்வதில்லை. நாமம் போடாதவர்களைப் போடச் சொல்லி வற்புறுத்துவதும் உண்டு. இதற்கெல்லாம் பின்னில், சைவத்தை வேறோடு பிடுங்கி எறிய முயலும் சிலர் இருக்கிறார்கள் என்பது உறுதி”. இது போன்ற அவரது வார்த்தைகள் ஏனோ என் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.
கொல்லூர் மூகாம்பிகை கோயில் இணையத்திலிருந்து
அப்படி 12 ஆம் நாள் இரவு 7 மணி அளவில் நான் கொல்லூரை அடைந்தேன். கால் பாதத்தில் பல இடங்களில் ரத்தம் கசிய மூகாம்பியைக் கண் குளிரக் கண்டேன். என்ன வேண்டுவது என்று தெரியாமல் கண்களில் நீர் கசிய நின்றேன். அன்று 5 ரூபாய் அறையில் தங்கினேன். அடுத்த நாள் முழுவதையும் கோயிலில் செலவிட்டேன். மதிய உணவு அன்ன தானம். அடுத்த நாள், காலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்ததால், சிரமமின்றி நடக்க முடிந்தது. வண்டி ஏறினேன். நான் ஒரு நாள் கடந்த தூரத்தை, பேருந்து ½ மணிநேரம் ¾ மணி நேரத்தில் கடந்தது. அடுத்த நாள் நவம்பர் 30 ஆம் தேதி, 10 மணிக்கு வீட்டை அடைந்தேன். மதியம் 12 மணிக்கு ஒரு தந்தி! தாத்தாவிற்கு சீரியஸ் என்று. மாலை 6 மணிக்குத் திருவல்லா வண்டி ஏறினோம். மறுநாள் காலை 9 மணிக்கு வீட்டை அடைந்தோம். முந்தைய இரவு 11 மணி அளவில் தாத்தா இறைவனடி சேர்ந்திருந்தார்.  அன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்குகள் முடிந்தன.

3 நாள் கழித்து, அம்மாவுடன் நிலம்பூருக்குச் செல்லும் வழியில் நாங்கள் எர்ணாகுளம் களமசேரியிலுள்ள அக்கா மற்றும் மாமாவின் வீட்டிற்குச் சென்றோம். அக்கா என்னை வா என்றழைத்து பாலாடிவட்டம் சந்திப்பில் உள்ள எங்கள் உறவினர் ஒருவர் நடத்தும் நிறுவனமான “லாபெல்லா ஃபினான்சியர்ஸ்”க்கு அழைத்துச் சென்றார்கள்.. அக்கா என் வேலை விஷயமாக வந்தேன் என்றதும் நான் அதிர்ந்தேன். சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டுப் போன ஸ்டாக் கீப்பரது வேலையில் நாளையே சேர வேண்டும் என்றார்.  ரூ 450 சம்பளம்.  அப்படி அன்று முதல் இன்று வரை புகுந்த வீட்டில்(கேரளத்தில்) ஓரளவு தேவையான வருமானத்துடன் மகிழ்வுடன் வாழ்கிறேன்.
திருவெறும்பூர் கோயில் இணையத்திலிருந்து

இனி குறும்பட விசயங்கள். அந்த யாத்திரைக்குப் பின்னும் இடையிடையே பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அப்படி 1996 ஆம் வருடம் திருச்சி தாயுமானவர் கோயிலிருந்து, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு பாதயாத்திரை போனபோது, திருவெறும்பூர் குன்றேறி பூட்டிக் கிடந்த கோயில் முன் களைப்பில் சர்வாங்கமாய் விழுந்தவன் அப்படியே சிறிது நேரம் படுத்துக் கிடந்தேன். “இங்க வந்து படுங்க கொஞ்ச நேரம்”! குரல் வந்த திசையில் ஒரு பெரியவர். பலதும் பேசினோம். இடையே “சட்டநாதரைப் போய் பாருங்க. கோயிலுக்கு உள்ளே படி இருக்கு ஏறணும்”. என்றதும் வாமன சுவாமி நினைவுக்கு வந்தார். “இவ்வளவு படிச்சுருக்கீங்க. உங்க அனுபவங்களையும் நீங்க சொல்லியே ஆக வேண்டியதையும் பயமில்லாம எழுதுங்க. ஏன் முடிஞ்சா படமே பிடிச்சுக் காட்டுங்க”. என்றார். எனக்கு அது ஒரு நினைவுப்படுத்தல் போல் தோன்றியது. இதுதான் என் குறும்படங்களின் பின்புலம்.

இவ்வுலகில் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சிறிய சம்பவங்களுக்குப் பின்னாலும் இறைவன் இருக்கிறான் அல்லது இப்பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி இருக்கிறது என்பது என் நம்பிக்கை. அது எல்லோராலும் எல்லா நேரங்களிலும் உணர முடிவதில்லை. அதை உணரவும், உணர்ந்த பின் அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் சிலரால்தான் முடிகிறது. வழக்குரைஞர் காந்தி, காந்திஜியாக மாறக் காரணமாக, தென்னாப்பிரிக்க ரயில் பயணத்தில் அவர் வாசிக்க நேர்ந்த, ரஸ்கினின் முதல்…புத்தகமான “Unto this Last” இருந்தது போல், இச்சம்பவங்கள் என் வாழ்விலும் சில தீர்மானங்களை எடுக்க வைத்தது. நான் காந்தியல்ல. நான் ஆங்கில மொழி கற்பிக்கும் ஒரு சாதாரண ஆசிரியன். இடையில் மனதில் படுவதை எழுதியும், படமாக்கியும் (அவை எல்லாம் தண்ணீரில் வரைந்த கோலங்கள் என்று அறிந்தும்) திருப்தி அடைபவன். அவ்வளவே.

மிகவும் சிரமப்படுத்திவிட்டேனோ? இப்போதைக்கு இதுவே அதிகம். பிறிதொரு சமயத்தில் தொடர்கின்றேன். நேரம் வாய்க்கும் போது (25 நிமிடம்) “செயின்ட் த க்ரேட்” குறும்படத்தைப் பாருங்கள். கருத்துகளைப் பதியுங்கள். லிங்க் இதோ……






புதன், 27 ஜூலை, 2016

தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 1

படம் இணையத்திலிருந்து

அப்படியாக அந்த நாளும் வந்துவிட்டது! 29.07.2016 வெள்ளி அன்று என்று தீர்மானமாகி இருந்த, எங்கள் குறும்படமான “செயின்ட் த க்ரேட்” ன்  முன்னோட்டக் காட்சி, அது நிகழவிருந்த விவேகானந்த படன கேந்திரத்தின் சிற்பியான திரு பாஸ்கர பிள்ளை அவர்களின் வசதிக்காக 28.07.2016 வியாழன் அன்று காலை 10 மணிக்கு, அதே விவேகானந்த படன கேந்திரத்தில் நடத்தப்படவிருக்கிறது. அன்று இரவே “செயின்ட் த க்ரேட்” குறும்படம் யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு வரும்.

எழுத்தார்வம் மிக்க உங்களைப் போன்றவர்களின் நட்பு கிடைக்கப்பெற்ற நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்.  அதனால், மனதில் உள்ளதை எல்லாம் உங்களுக்குச் சலிக்காத(?) விதத்தில் பகிர்ந்து கொள்ள, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வீணாக்கிவிடக் கூடாது என்று நினைப்பவன். அது போலத்தான் இப்போதும். இதை இப்போது உங்களோடு பகிந்து கொள்ளாவிட்டால், பின்னர் இது போல ஒரு பொன்னான நேரம் இனி கிடைப்பது சிரமம். அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

நம் எல்லோரது வாழ்விலும் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றில் சில நாம் ஒரு போதும் சிந்தித்துக் கூடப் பார்த்திராத பல தீர்மானங்களை நாம் எடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் என்னை இப்படிக் குறும்படம் எடுக்கும் ஒருவனாக மாற்றிவிட்டது. (இதுக்குப் பேரு குறும்படமா?....குறும்படமும் இல்லை டாக்குமென்ட்ரியும் இல்லை ஏதோ ஒரு புராண நாடகம் மாதிரி இல்ல இருக்கு!) மாஹாமுடி த க்ரேட், கார்பெண்டர் த க்ரேட், பொயட் த க்ரேட். இதோ இப்போது செயின்ட் த க்ரேட்!  இதற்கிடையில் வரலாற்றுப் (ஹிஸ்ட்டாரிக்கல்) பேர்வழி என்ற பெயர் வரக்கூடாதே என்பதற்காக பரோல் மற்றும் பரோட்டா கார்த்திக்.  முடியவில்லை! அடுத்த வருடம் ஒன்று! அவ்வளவே! அதன் பின் எடுக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. எடுக்கக் கூடிய சூழலும் உண்டாக வாய்ப்பில்லை. (நம் வலையுலக நண்பர்கள் யாராவது குறும்படம் எடுக்க நினைத்தால் ஒரு டீக்கடைக்காரராகவோ, ஒரு பூக்கடைக்காரராகவோ நடிக்க ஒரு வேளை வாய்ப்புக் கிடைக்காமலா போகும்!!)

இனி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். 01.06.1985 முதுகலை ஆங்கில இலக்கிய தேர்வுகளை எழுதி, நாகர்கோயில் எஸ் டி இந்துக் கல்லூரிக்கும், கல்லூரி விடுதிக்கும் வேதனையுடன் விடை சொல்லி நிலம்பூர், கேரளாவை நோக்கிப் பயணமானேன். பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டை அடைந்த மணப்பெண்ணைப் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ராணுவ வீரனான மணமகனுக்கு நேர்ந்தால் அந்த மணப்பெண் அவ்வீட்டில் எப்படி வாழ்வாளோ அப்படி நான் நிலம்பூரில் வாழ்ந்த காலம். எப்போதெல்லாம் இது போன்ற வேதனைகள் நேர்ந்ததோ அப்போதெல்லாம் இறையுணர்வும், பக்தியும் உச்சத்தில் ஏறிவிடும் எனக்கு.

எம் ஏ முடித்தவனை அடுத்த நாளே யாராவது வந்து அழைத்துச் சென்று உயர்ந்த உத்தியோகத்தில் அமர்த்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் மாதங்கள் பல கடந்த பின்னும் வீட்டிலிருந்த என்னை பரிதாபத்தோடும், அதிசயத்தோடும் பார்க்கத்  தொடங்கினார்கள். இனி இப்படி அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது. அழுகின்ற குழந்தைக்குத்தானே பால். அழுது அடம்பிடித்து அன்னையிடமிருந்து பாலை வாங்கிக் குடிக்க முடிவு செய்து, நவம்பர் 16 ஆம் தேதி பெற்றோர் மற்றும் அக்காவின் காலில் விழுந்து வணங்கி, அனுமதி பெற்று கோழிக்கோடு பேருந்து ஏறினேன். அங்குள்ள தளி சிவன் கோயில் மற்றும் ஸ்ரீ கண்டேசுவரர் கோயில் சென்று வணங்கி பாத யாத்திரையைத் தொடங்கினேன். கொல்லூர் மூகாம்பிகையை நோக்கி!

ஒரு நாள் 20 முதல் 30 கிலோமீட்டர் வரை நடப்பேன். வழியில் காணும் ஏதேனும் ஒரு கோயிலில் இரவு தங்கி விடுவேன். கொல்லூருக்கு எவ்வளவு தூரம் என்று தெரியாது. எவ்வளவு நாட்கள் நடக்க வேண்டியிருக்கும் என்றும் தெரியாது. இளங்கன்று பயமறியாதே. வழியில் கண்ணில் படும் கோயில்களுக்கு எல்லாம் சென்று, பூட்டியிருந்தாலும் வெளியில் நின்று வணங்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன். எத்தனையோ நல்ல மனிதர்கள். அவர்களின் அன்பான முகங்கள் மற்றும் வார்த்தைகள் இப்போதும் மனதில் பசுமையாய் நிற்கின்றது. வடகரைக்கு அருகே ஒரு ஸ்ரீதரன். குழந்தை இல்லாத அவரது குடும்பத்தின் வேதனை எனக்கும் வேதனை தந்தது. அதன் பின் அவருக்காகவும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். (அவருக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.)

மூன்றாம் நாள் முழப்பலங்காடியில் ஒரு ஜெகன்நாதன் அங்குள்ள கோயிலில் தங்க ஏற்பாடுகள் செய்து தந்தார். கல்யாணப் பருவம் எய்தியிருந்த அவரது மூன்று பெண்களுக்கும் மணமாகி தற்போது நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.  6ஆவது நாள் காசரகோடு அருகே உள்ள செர்க்களாவை அடைந்த போது இருட்டி விட்டது. அருகே ஒரு குன்றின் மேலுள்ள கோயிலிலிருந்து ஒலி பெருக்கி வழியாகப் பாடல் சத்தம் கேட்க, வழி அருகே கூடியிருந்த சில இளைஞர்களிடம் அக்கோயிலுக்குச் செல்ல வழி கேட்டேன். “ஜாஃபரே!, ஃபைசலே! இயாள்க்கு ஆப்பாட்டு கேட்குன்ன அம்பலத்தில் போகணுமென்னு” (ஏய் ஜாஃபர்! ஃபைசல்! இந்தாளுக்குப் பாட்டு கேக்குற அந்தக் கோயிலுக்குப் போகணுமாம்!) எங்கிருந்து வருகிறாய்?....பெயர் என்ன?.....எங்கு போகிறாய்?....இப்படிக் கேள்வி மேல் கேள்வி.

கேள்விக் கேட்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்தது.  என் தமிழ் கலந்த மலையாளம் அதில் ஓர் இளைஞனை என் தோளில் தொங்கிக் கொண்டிருந்த துணிப் பையைப் பிடித்து இழுத்துப் பரிசோதித்தே தீர வேண்டும் என்று சொல்ல வைத்தது. இனியும் அங்கு நிற்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்து என்று உணர்ந்த நான், உடனே ஆட்களை விலக்கி ஓடினேன். வரும் போது, ஒரு நூறு மீட்டர் தூரத்தில், ஒரு சோதனைச் சாவடி இருந்தது நினைவுக்கு வர அத்திசையை நோக்கி ஓடினேன். “பிடிக்கு அவன!. விடறது!” (பிடி அவனை. விடாதீங்க!) என்று கூச்சலிட்டுக் கொண்டே என் பின் ஓடி வரும் இளைஞர்கள். மூச்சிரைக்க ஓடிய நான் சோதனைச் சாவடியில் அமர்ந்திருந்த அதிகாரியிடம் “Sir I am on a pilgrimage to Kollur Moogambika Temple. I am from Nagercoil, TamilNadu. I am a student doing M.A.  So, please save me”. என்று பதட்டத்துடன் சொன்னேன்…

தொடரும்.....(நாளை வெளியாகும் அடுத்த பகுதியுடன் முடிவடைந்துவிடும்)



சனி, 23 ஜூலை, 2016

கபாலி

உலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில் புதுமுகமாய் தோன்றிய ரஜனி 41 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு சரித்திரம் படைப்பார் என்று அன்று யாருமே எண்ணி இருக்க மாட்டார்கள். கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் பா, ரஞ்சித் எழுதி இயக்கிய “கபாலி” ஒரு வித்தியாசமான ரஜனியைத்தான் நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகும் கபாலியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நம் முன் தோன்றச் செய்து, அவர் தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை இழந்து கைது செய்யப்படும் காட்சி வரை படம் விறு விறுப்பாகவே செல்கிறது. விடுதலையாகி வரும் கபாலி தன் வீட்டிற்குள் நுழையும் காட்சியில் ஒளிப்பதிவாளர் முரளியும், எடிட்டர் பிரவீணும், எழுதி இயக்கிய ரஞ்சித்தும் காட்சிக்கு உயிர் கொடுத்த ரஜனியும் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்கள்.

அது போல் லோகாவை காரேற்றிக் கொல்லும் காட்சியும் கைதட்டல் பெறுகிறது. 150 நிமிடப்படத்தில் கபாலியின் காதலும், கல்யாணமும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கானப் போராட்டமும் வெற்றியும் மலேஷிய தமிழர் தலைவர் தமிழ்நேசனின் நட்பும், அதனால் நிகழும் இன்ப துன்பங்களும் மிகக் குறைந்த நேரத்தில் சொல்லிப் போன விதத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

படம் இணையத்திலிருந்து

விரசேரனாக வரும் கிஷோர் கபாலியால் சுட்டுக் கொல்லப்படும்வரை தன் வில்லன் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார். கபாலியைக் கொல்ல முயலும் யோகி ஒவ்வொருமுறையும் தோல்வியுற்று கபாலியை தாய்லாந்திலுள்ள் வில்லன் வேலுவின் வீட்டில் கண்டதும் கபாலியைச் சுடாமல் தன்னுடன் வந்தவர்களைச் சுட்டு வீழ்த்தும் போது, நாம் வியந்தே போகிறோம். வேலு கபாலியின் மகள் உயிருடன் இருக்கிறாள் என்பதும், உடனே யோகி அப்பா என்றழைத்து கபாலியை வில்லன்களிடமிருந்துக் காப்பாற்றும் இடம் அருமை. 

மகளுடன் திரும்பும் வழியில் எதிர்பாராமல் சுடப்படும் கபாலி, உயிர் பிழைத்தபின் எங்கோ உயிரோடிருப்பதாகச் சொல்லப்படும் தன் மனைவி குமுதவல்லியையைத் தேடித் தன் மகளுடன் சென்னைக்கும், அங்கிருந்து பாண்டிச்சேரிக்கும் செல்லும் போது படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் கபாலி மற்றும் யோகியுடன் அதே பதட்டத்துடன் செல்ல வைக்கும் ரஞ்சித்தைப் பாராட்டியே தீர வேண்டும்.

இரண்டு வருடம், இரண்டு மாதம், 18 நாட்கள் மட்டும் கபாலியுடன் வாழ்ந்து, 25 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தன் கணவனைக் காணும் குமுதவல்லி கதறிக் கண்ணீர் விடும் இடத்தில் ராதிகா அப்தே நம் கண்களிலும் நீரைக் கசிய வைக்கிறார், இழந்த மனைவியையும், மகளையும் திரும்பப் பெற்ற கபாலி தன் நண்பர் அமீருக்கு நிகழ்ந்த விபத்திற்குக் காரணமான டோனி லீ மற்றும் வீரசேகரனைப் பழிவாங்குமிடம் மிகவும் அருமையாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கபாலி நெருப்பாகி ரஜனி ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்க்கிறார்.

அதோடு படம் முடிந்தது என்று எல்லோரும் எழும் போது, கபாலி நடத்தும் சீர்த்திருத்தப் பள்ளியான ஸ்ரீ லைஃப் ஃபௌண்டேஷனில் படித்த டைகர் எனும் இளைஞனிடம் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியைக் கொடுத்து கபாலியிடம் அனுப்புகிறார்கள். டைகர் கபாலியைச் சுடும் காட்சி காண்பிக்க வேண்டாம் என்று ரஜனியின் மகள் ஐஸ்வர்யா சொன்னதாலோ என்னவோ வெடிச்சத்தம் மட்டும்தான் கேட்கிறது. கபாலியைச் சுட்டாலும் கபாலி சாகமாட்டார்.  கபாலி 2 வில் கண்டிப்பாக மீண்டும் வருவார்.

தமிழ்நேசனாக வரும் நாசர், யோகியாக வரும் தனிஷ்கா, அமீராக வரும் ஜான் விஜய் போன்றோர் தங்களுடைய கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள். முக்கியமான வில்லன் டோனி லீயாக வரும் தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சாவோவின் நடிப்பு சுமார்தான்.
சந்தோஷ் நாராயணனின் இசையில், ஆனந்து, ப்ரதிப் குமார், ஸ்வேதா மோஹன் பாடும் “நெஞ்சமெல்லாம் பலவண்ணம்” பாடல் சற்று இனிமையாக இருக்கிறது.

Image result for kabali
படம் இணையத்திலிருந்து
பாடல் காட்சிகளில் நடிக்க மனம் ஒத்துழைக்க மறுக்கிறது என்று ரஜனி சொன்னதற்கு நாம் அதற்குரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. காதல் காட்சிகளில் மட்டுமின்றி பல இடங்களில் ரஜனிக்கு நடிப்பின் மீதான ஆர்வம் குறைகிறதோ என்றும் தோன்றுகிறது. (அதனால்தானோ என்னவோ ரஞ்சித் ஏராளமான ரீடேக் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது) 66 வயதான ரஜனி தாடியுள்ள கபாலியாக வரும் போது ஜொலிக்கும் அளவிற்கு தாடியில்லாமல் வரும் போது ஜொலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் மிகச் சாதாரணமான, வழக்கமான ஒரு நிழல் உலகக் கதை. அவ்வளவே. ரஜனி அதில் நடித்திருக்கிறார் என்பதால் மட்டுமே இப்படம் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியாக ஒரு வழியாக கபாலி ஜுரம் குறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

(பின் குறிப்பு: "அப்பா" "சாட்டை" என்ற இரு மிக மிக நல்ல திரைப்படங்களைத் தவறவிட்டிருக்கிறேன். அவற்றைக் காண வேண்டும். )


ஞாயிறு, 17 ஜூலை, 2016

பூமித்தாயின் கண்ணீர்



பூமியில் தான் குழப்பங்கள், பிரச்சினைகள் என்றால் அண்ட விண்வெளியில் உள்ள சூரிய குடும்பத்திலும் ஒரு பிரச்சினை என்று தெரிந்த பொழுது வியப்பாக இருந்தது. என்ன பிரச்சினையாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தபோதுகுடும்பத்தின் தலைவனாகிய சூரியனிடம் பூமித்தாய் புலம்புவது கேட்டது.

தலைவனே! இது என்ன கொடுமைஇந்தக் குடும்பத்தில் இத்தனைக் கோள்கள் இருக்கும் போது நான் மட்டும்தான் இவ்வளவு பாரம் சுமக்க வேண்டுமாஎன் குழந்தைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறார்கள்நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு கொண்டுவர முடியும்.”

உன் வேதனை எனக்குப் புரிகிறதுஆனால் மற்ற கோள்களில் உனக்கிருப்பது போல் வளமும, செழிப்பும், நீரும், காற்றும், இல்லையேஏன், ஒளி கூட உனக்குத்தானே உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு சரியான அளவில் நான் கொடுத்திருக்கிறேன்அப்படி இருக்கும் போது மற்ற கோள்களிடம் எப்படி நான் கேட்க முடியும்?” என்றான் சூரியன்.

    .  அதற்குள் அங்கு செவ்வாய் கோளின் குரல்.  “பூமியே! உன் குழந்தைகள் என்று அடிக்கடிக் கூறிக் கொள்வாயே அதே குழந்தைகள் தான், என்னிடம் உன் குழந்தைகளை அனுப்ப முடியுமா என்று என் மீது அடிக்கடி, ராக்கெட் ஏவி என்னை வேவு பார்க்கிறார்கள். என்னிடம் காற்றில்லை, சூரிய ஒளி இல்லை என்பதை நம்பாமல் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறார்கள் போலும்.”


புதன் அதற்குள், “உன்னை மட்டுமல்ல என்னையும்தான் வேவு பார்க்கிறார்கள்ஏன் சந்திரன் பூமிக்கு அருகில் இருப்பதால் அங்கு ராக்கெட் அடிக்கடி விட்டுப் பார்ப்பது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டதுஅதிலும் சந்திரனைப் பார்த்து பூமியின் பிள்ளைகள் சிலர் நிலா நிலா என்று கவிதைகள் கூட நிறைய எழுதுகிறார்கள்சந்திரனுக்குப் பூமியில் நல்ல மவுசுஎன்றது.


  “நீங்கள் எல்லோரும் இப்படி என்னைப் புரிந்து கொள்ளாமல் பேசுகின்றீர்களே. வருத்தமாக இருக்கிறதுஎன் வருத்தத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல்தான், சூரியன் தலைவனிடம் வந்தேன்நான் என் குழந்தைகள் நன்றாக, செழிப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று, பசுமையையும், நல்லக் காற்றையும், சூரியனிடமிருந்து ஒளியையும், நல்ல மழையையும் கொடுத்து, நதிகள், மரங்கள், கனிமங்கள், மலைகள், ஆறுகள், நிலத்தடித் தண்ணீர், பயிரிடுவதற்கான நல்ல மண் வளம் என்று பல சொத்துக்களை என் பல சந்ததியினர் அனுபவிக்க சேர்த்து வைத்தேன்.
ஆனால், என்ன பயன்என் குழந்தைகள் எல்லாவற்றையும் உபயோகித்தால் அதைத் திரும்ப சேமிப்பதற்கும், என்னைப் பராமரித்துப் பாதுகாக்கவும், முயற்சி செய்ய வேண்டுமில்லையா? சொத்தைப் பராமரிக்காமல், பாதுகாக்காமல் அழித்து விட்டால் அடுத்து வரும் சந்ததியினர் என்ன செய்வர்என் குழந்தைகள், வளமாகிய என் சொத்தை எல்லாம் அழித்துத்தான் வருகின்றனர்











என் மீது எல்லா இடங்களிலும் கழிவையும், குப்பையையும் எறிகின்றனர்துப்புகின்றனர்சிறுநீரும், மலமும் கழித்து என்னைக் கேவலப்படுத்துகின்றனர். என் நீர் நிலைகளாகிய நதி நீரையும், கடல் நீரையும், ஏரிகளையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி, நீர் நிலைகள் குறைந்து நல்ல சுத்தமான தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாடு வந்து இன்று என் சொத்தாகிய நீரைக் குடைந்தெடுத்து, சுத்தாமாக்கி, புட்டிகளில் அடைத்து விற்கிறார்கள், கொழிக்கிறார்கள்.

 நல்ல காற்று கிடைக்க நான் வைத்திருந்த மரங்களை எல்லாம் வெட்டிக், காடுகளும், சோலைகளும் இல்லாமல் செய்து, சுத்தமான காற்று இல்லாமல் செய்து வருகின்றனர்என் குழந்தைகள் பண வெறி பிடித்து நல்ல பயிர் விளையும் நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்கி, அடுக்கு மாடி வீடுகளாகவும், பல்பொருள் அங்காடிகளாகவும் மாற்றி வருகின்றனர்விளை நிலங்களே இல்லாமல் போவதால் விளைச்சல் குறந்து உணவுப் பற்றாக் குறையும் ஏற்பட ஆரம்பித்து விட்டதுஇன்னும் சொல்லப் போனால் நான்கு சக்கர வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும், ஆலைகளும் பெருகி புகையைப் பெருக்கி, என்னைச் சுற்றிப் புகை மண்டலத்தை எழுப்பி அடைத்து விட்டனர்

அவர்களுக்குள் எனது சொத்தாகிய நிலத்தையும், நீரையும் பிரிப்பதற்குச் சண்டைஇவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாதுஇவற்றை அவர்கள் உயிர் உள்ளவரை அனுபவித்து, பராமரித்துக் கட்டிப் பாதுகாக்க மட்டும்தானே அல்லாது சுய நலத்திற்காக உபயோகித்து அழிப்பதற்கல்ல என்பது என் குழந்தைகளுக்குப் புரிய வில்லை.

பேராசையும், கொலைகளும், கொள்ளைகளும், ஊழல்களும் தலை விரித்தாடுகிறதுஎனக்கு மனிதர்கள் மட்டும்தான் குழந்தைகளாஐந்தறிவுடைய விலங்கினங்களிலிருந்து, ஒர் அறிவு கொண்ட உயிரனங்களூம், நுண்ணுயிரினங்களும்மரம் செடி கொடிகளும் என் குழந்தைகள் தான்எல்லா உயிரினங்களுக்கும் வெளித் தோற்றம், உருவம்தான் வேறுஉள்ளிருக்கும் உயிர் ஒன்றுதானே.  ஆறறிவு கொண்ட என் குழந்தைகள் மற்ற என் குழந்தைகளையும் கொன்று அழிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிகிறதே தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை
னக்கு சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் மூச்சுத் திணறுகிறது. ஓசோன் படலம் குறைந்து கிரீன் ஹவுஸ் விளைவினால் வெப்பம் கூடி என்னை தகிக்க வைக்கிறதுஎன்னுடைய நீரே எனக்குக் குடிப்பதற்கு மாசற்று, சுத்தமாகக் கிடைப்பதில்லை. எனக்கு அமைதியாக வாழக் கூட வழி இல்லாமல் போய் விட்டது. எனக்கும் வயதாகி வருகிறதுஅன்னை, அன்புடன் கொடுத்த சொத்தை எல்லாம் அனுபவித்து அழிப்பவர்கள் அன்னைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று நினைத்துப் பார்க்கிறார்களா? இல்லைநானும் பொறுமையோடுதான் இருக்கிறேன்என்று வருந்தினாள்.  

ஆம், பூமித்தாய் பொறுமையானவள்தான். மனிதர்களாகிய நாம், நம் பூமித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அவளுக்குக் கோபமே வராதோ?  
சூரியன், “பூமியே! நீயும் சில சமயம் கோபப்படுகிறாயே! அப்பொழுதும் உன் குழந்தைகள் உணரவில்லையா?” என்றதற்கு

ஆம்நான் சில சமயம் கோபப்படத்தான் செய்கிறேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. இல்லையாபூகம்பமாக, சுனாமியாக, மழையாக, வெள்ளமாக, கடல் கொந்தளிப்பாக, எரிமலைப் பிழம்பாக, நிலச்சரிவாக, புயலாக, சூறாவளிக் காற்றாக, வறட்சியாக என்று பல வகைகளில் என் சீற்றத்தைச் சிறிதாக வெளிப்படுத்தி என் குழந்தைகளை மிரட்டத்தான் செய்கிறேன்

இது போன்று நான் மிரட்டும் போது, என்னைப் பராமரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலர் சிறிது நாட்கள்பூமித்தாயைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.” என்று குரல் கொடுப்பார்கள்ஆனால் அதற்கெல்லாம் என் குழந்தைகள் பயப்படுவதாகவோதாங்கள் செய்யும் தவறை உணருவதாகவோ தெரியவில்லைஎன் குழந்தைகளில் நல்ல மனதுடனும், அறிவுடனும் இருப்பவர்கள் என்னைப் பாதுகாக்கவேண்டும் என்றும், என் வளங்களை அழித்தால் அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்றும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் செய்கிறார்கள்என்ன செய்வதுஎன் குழந்தைகளை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.”

மற்ற கோள்கள் எல்லாம், “இப்படிப்பட்டவர்களை நாங்கள் எப்படி வைத்துக் கொள்ள முடியும்எதற்காக வைத்துக் கொள்ள வேண்டும்? நல்லவேளை எங்களுக்கெல்லாம் உன்னைப் போன்று நல்ல வளங்கள் இல்லாமல் போயிற்றுஇல்லையென்றால் நாங்களும் உன்னைப் போல் இப்படிப் புலம்ப வேண்டி வந்திருக்கும்.” என்றன.
ரொம்ப சொல்லிக் கொள்ளாதீர்கள்சமீபத்தில் என் குழந்தைகள் சிலர், செவ்வாய் கோளிற்குச் சென்று தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்களை 2022-23 ல் அழைத்துச் செல்வதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்களுக்குப் பயணத்திற்கான பயிற்சி அளிக்கவும் போகிறார்களாம்அதற்கு இப்போதே முன் பதிவு செய்ய வேண்டுமாம்போவதற்கான பயணச் சீட்டு பின்னர் தரப்படுமாம்அதற்கு எவ்வளவோ மில்லியன் டாலராம்ஆனால் போவதற்கான சீட்டு மட்டும்தான்வருவதற்கு அங்கு சென்ற பிறகுதான் திரும்பவும் பதிவு செய்ய வேண்டுமாம்அதற்கு தனி கட்டணம் செலுத்தி பயணச் சீட்டு பெற வேண்டுமாம்அதனால், செவ்வாய் கோளே உன்னிடமும் என் மனிதக் குழந்தைகள் வரப் போகிறார்கள்அதனால் உன் வாயை கொஞ்சம் அடக்கி வைத்துக் கொள்.”  என்றாள் பூமித்தாய்.

செவ்வாய், “ஐயோஇது என்ன கொடுமைஉன் மக்கள் என்னிடமும் வரப் போகிறார்களாஅப்படியென்றால் இன்னும் சில வருடங்களில் நானும் உன்னைப் போல் புலம்பி கண்ணீர் விட வேண்டியதுதான்தலைவா சூரியனே நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”  என்று புலம்ப ஆரம்பித்து விட்டது.

"நானும் இதைக் கேள்விப் பட்டேன்.  MARS ONE என்று அதற்குப் பெயர்போவதற்கே ஏழு மாதங்கள் ஆகுமாம்அதெல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம்போனால் முதலில் உயிருடன் போவார்களோஅப்படியே போனாலும் உயிருடன் திரும்பி வர முடியுமா அவர்களால்? வர உத்தரவாதம் உண்டா?" என்றது வியாழன். 

  "அதை ஏன் கேட்கிறீர்கள். இதற்கும் அங்கு கிறுக்குப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்நிறைய மக்கள் பதிவு செய்திருக்கிறார்களேஅவர்களை என்னவென்று சொல்வதாம்?" - நெப்டியூன், ப்ளூட்டோ

சந்திரனில் கூட நிலத்தைக் கூறு போட்டு விற்க உன் குழந்தைகள் முயல்வதாக கேள்விப்பட்டோம்.” என்று எள்ளி நகையாடியது வெள்ளிக் கோள்
எனக்கு மூச்சுத் திணறுகிறதுஎன்ன செய்வது என்று தெரியவில்லை..”  என்றது பூமி.

நிச்சயமாக நீ ரொம்பப் பொறுமைசாலிதான்நம்மை எல்லாம் படைத்த அந்த அண்டவெளி சக்தியிடம் முறையிட்டுப் பார்என்றான் தலைவன் சூரியன்.

ஆம் பூமித்தாய் ரொம்பப்  பொறுமையானவள்தான்! அவள் ஒரு நல்ல தாய்!.  நாம் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்து எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் நமக்குத் தன் வளங்களை எல்லாம் தந்து கொண்டுதான் இருக்கிறாள்நாம்தான் அழிவை நோக்கி நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருக்கிறோம்பூமித்தாய் பொறுமைசாலிதான்.!!! அவள் கண்ணீரும் வற்றி வருகிறது!

---கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

வலைப்பூ ஆரம்பித்த பொழுது எழுதிய பதிவு. எங்கள் வலைப்பூ அப்போது அறிமுகமாகியிராத காலம் ஆதலால் இப்போது மீள் பதிவு.