புதன், 29 ஜூன், 2016

பெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்களா?

நான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல

என்னாச்சு கீதாவிற்கு? மூளையைக் காணாமல், இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாலோ??!!!

ஏற்கனவே மனசு குமார், இது கீதா இல்லையோனு குழம்பிக் கிடக்கிறார். இதுல நீ வேற......ஹும் இந்த கூகுள் ப்ளாகர் எந்த ப்ளாக் போனாலும் “நீ ரோபோ இல்லை”னு நிரூபிக்கச் சொல்லுது.

நீ ஹேங்க் மோடில் இருப்பதால், உன் சார்பில் கருத்து போடலாம் என்று தட்டினேன்.

அடப்பாவி! உன் கைவிரல் கணினியின் கீ போர்டில் பட்டதுமே ப்ளாகர் கண்டு பிடித்துவிட்டது.....இது வெர்ச்சுவல் கீதா னு...

சரி இப்ப அதுக்கென்ன?

“மூளையைக் குறைவாகப்பயன்படுத்தும் பெண்கள்” என்று நம் சகோ கூட்டாஞ்சோறு செந்தில்குமார் பதிவு ஒண்ணு போட்டிருந்தார். அதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும்.

ஹ்ஹ்ஹ நீயே மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறாய். இதுல வேற மூளையைப் பற்றி பதிவா.....நல்ல ஜோக்.....

பரவாயில்லை.

பெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்று செந்தில் சகோ ஒரு பதிவிட, பெண்ணாகிய நான் சும்மா இருக்கலாமா? அதுவும் அபயா அருணா வேறு எனது மூளை ஐன்ஸ்டீன் மூளையின் அருகில் இருப்பதாக கூகுள் சொல்லுகிறது என்று சொல்லிவிட்டார். சும்மா இருக்க முடியுமா...

சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாவது, பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட அளவில் 8% சிறியதாக இருந்தாலும் அது பெரிய விசயமே இல்லை.  ஏனென்றால், ஆண்களை விட, பெண்கள் தங்கள் மூளையை மிகவும் திறம்பட உபயோகித்து, குறைவான ஆற்றல் மற்றும், சில செல்களை மட்டுமே பயன்படுத்தி ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்து முடிக்கிறார்கள். 

ஓ அதனால்தான் பெண்களுக்கு நிறைய நேரம் இருக்கிறதா?

அப்படியல்ல. பெரும்பாலும், வீட்டு நிர்வாகம், குழந்தைகள் பராமரிப்பு எல்லாமே அவர்கள் கையில்தானே. இருவரது மூளையின் அமைப்பில் ஒரு சில வேறுபாடுகள் இருந்தாலும், இருவரது மூளைத் திறனும் ஒரே போன்றுதான் இயங்குதிறது.

ஆண்களின் ஹிப்போகேம்பஸ் பெரிதாகவும், நியூரான்ஸ் அதிகமாகவும் இருப்பதால் அறிவுத் திறன் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பெண்களின் ஹிப்போகேம்பஸும் அதற்கு நிகர்தான் என்றாலும், ஆண்களை விடச் சற்றுச் சிறிதுதான். ஆனால், அறிவுத்திறன் அதே போன்றுதான். மட்டுமல்ல சிறிதாக இருப்பதே சிறந்தது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹிப்போகேம்பஸ் தான் நினைவுத்திறனிற்கும், உணர்ச்சிகளுக்கும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

ஹிப்போகேம்பஸ் சிறிதாக இருப்பதே சிறந்தது என்றால், அதனால்தான் ஆண்களை விட பெண்களுக்கு நினைவுத்திறன் அதிகமாக இருக்கிறதோ!! பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்களோ?

ஆமாம், பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியின் பிறந்தநாள், தங்களின் கல்யாண நாள், இன்னும் ஒரு சில நாட்களை எல்லாம் மறந்துவிட்டு வீட்டில் மாட்டிக் கொள்வதைப் பற்றி அப்பப்போ விசு, வெங்கட்ஜி எல்லாரும் நகைச்சுவையுடன் சொல்றாங்களே.

பெண்கள் என்றோ வாங்கிய புடவைகளைக் கூட மறக்கமாட்டாங்க, வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மறக்க மாட்டாங்க, கணவனின் நடவடிக்கைகளைத் துப்பறியும் சங்கர்லால் மாதிரிக் கண்டுபிடித்து விடுவாங்கனு விசு தான் நிறைய நகைச்சுவையாக எழுதியிருக்கிறாரே. மதுரைத் தமிழனின் பூரிக்கட்டை அடியும் புகழ்வாய்ந்தது.
மற்றொரு விஷயம், ஆண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் ஒரு பக்கத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்களாம்.

ஹ்ஹ்ஹ்ஹ அதான் மனைவிகள், “ஹும் நான் பேயா, நாயா கத்தறேன் இந்த மனுஷன் மண்டைல ஏதாவது ஏறுதா பாரு” அப்படினு சொல்றாங்க போல.
ஆனால், பெண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் இரு பக்கத்தையும் பயன்படுத்துகிறார்களாம். அதிவேகமாக இயங்குமாம்.

ஹ்ஹ்ஹ் “எப்படி நம்ம மண்டைல ஓடுறத நாம சொல்றதுக்கு முன்னாடியே இவங்க கண்டு பிடிச்சுடறாங்க. (நன்றி விசு) சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் பெண்கள் என்பது அதனால்தானோ? (வம்பு என்றும் சொல்லப்படும்!!)

ஆண்கள் கணக்கில் திறன்வாய்ந்தவர்கள் என்றாலும் ஹோம் மினிஸ்ட்ரியில் பெண்களை அவர்கள் விஞ்ச முடியாது. ஆண்கள் ஸ்பேஷியல் ரீசனிங்க் அதாவது கட்டுமானப் பணிகள், வயரிங்க் போன்ற வேலைகளிலும், பெண்கள் இண்டக்டிவ் ரீசனிங்க் – அதாவது அனுமானிக்கும்/யூகிக்கும் தற்புனைவுத் திறனிலும், சூழ்நிலைகளை எளிதாகக் கணிக்கும் திறனிலும் சிறந்தவர்களாக இருப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு சொல்லுகிறது. இந்தப் புனைவினால் வீட்டில் சில பிரச்சனைகள் உவாவதும் நடக்கிறதே. மட்டுமல்ல பெண்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவர்களாகவும், ஆண்கள் அதற்கு நேரெதிர் என்றும் ஆய்வுகள் சொல்லுகிறது.

சரி என்னதான் சொல்லவருகிறாய்?

பெண்களைப் பற்றிய ஏதேனும் சிறிய குறைபாட்டைப் பேசினாலோ, எழுதினாலோ உடனே எதிர்ப்புக் குரல்கள், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களிடமிருந்தும் எழுகிறது. ஆனால், அதே சமயம், ஆண்களைக் குறைவாகப் பேசும் போதோ, காட்சிப்படுத்தும் போதோ, பெண்கள் ஏன் குரல் கொடுப்பதில்லை. ஆண்களும் மௌனமாகத்தான் இருக்கின்றார்கள். இது ஏன் என்று என் மூளையற்ற மண்டைக்குப் புரியவில்லை. சரி அதிருக்கட்டும்...

இன்னும் நிறைய சொல்லலாம். மூளை புரியாத புதிர். அதைப் பற்றிய ஆய்வுகள் இன்று ஒன்று சொல்லும் நாளை ஒன்று சொல்லும். இப்படித் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே....

இருவரது மூளைத் திறனும் ஒவ்வொன்றில் சிறந்து, சமமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவதைப் பற்றிச் சொல்லும் போதுதான் இந்தத் தலைப்பு வருகிறது. பெருவாரியான பெண்கள் தேவையற்ற விஷயங்களில் (இது ஒரு பெரிய பட்டியல்) தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாலும், வீட்டு நிர்வாகம், குடும்பப் பராமரிப்பு என்று இருப்பதாலும், பெண்கள் ஆண்களுக்கு நிகராக மூளைத் திறன் பெற்றிருந்தாலும் அவர்கள் அத்திறனை உபயோகிப்பது குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதில் விதி விலக்குகள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

(தங்கள் தலைப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ.)

-----கீதா



சனி, 25 ஜூன், 2016

காணவில்லையே அன்றோடு... அதைத் தேடுகின்றேன் இப்போது

Image result for brain

காணவில்லை என்பது அவ்வப்போது செய்தித்தாள்கள், காவல்நிலையங்கள், தொலைக்காட்சிகள், பொது இடங்கள் என்று பார்ப்பதுதானே! ஏன் இந்த அலட்டல்

இந்தக் “காணவில்லை” என்பது அப்படிப்பட்டது அல்ல!

அப்படி என்னத்தைக்  காணவில்லை, எதைத் தேடுகின்றாய்?

ஒன்றுமில்லை...கீதாவின் மூளையைக் காணவில்லை.

என்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா?  நீ?

ஆம் நம்பித்தான் ஆக வேண்டும். இதைச் சொல்லுவதும் எழுதுவதும் வெர்ச்சுவல் கீதா!

வெர்ச்சுவல் கீதா?

அது ரகசியம். இப்போதைக்கு ஜீன்ஸ் படத்துக் கண்ணோடு காண்பதெல்லாம் ஐஸ்வர்யா ராயின் இடத்தில் கீதாவை நினைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய என் கவலை கீதாவின் மூளையைக் கண்டு பிடித்துப் பொருத்தி அவளை அமன்னிக்கவும் எழ வைப்பதுதான். இப்போது அவள் “ஹேங்க்” மோடில்.

மூளை எப்படிக் காணாமல் போகும்? அர்த்தம் வேறாகிப் போகிறதே! ஒன்றுமே புரியவில்லை.

ஐயையோ! புரியவில்லை என்று மட்டும் மாந்தர்களிடையே சொல்லிவிடக் கூடாது.  “உன் மூளை எங்கே போச்சு? முட்டாள்” என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

??????????

இப்படிக் கேள்விக் கணைகளும் கூடாது! அப்படித்தான். புரியவில்லை என்று, எப்போதோ சொன்ன அந்த வார்த்தையினால்....கேள்விகள் கேட்டதால் “அறிவு இருக்கா? மூளை கெட்ட ஜென்மம். உனக்கு மூளையே இல்லை. நோ காமன்சென்ஸ். புத்தி கெட்டவள்.  அறிவு வளரவே இல்லை.  மூளை இருந்தாத்தானே வளரும். அறிவே இல்லாத முண்டம். முட்டாள். நீ எல்லாம் என்னத்த எழுதற? அறிவுதான் இல்லை. மெமரியாவது இருக்க வேண்டாம்? அதுவும் இல்லை. இவ எல்லாம் என்னத்தப் படிச்சுக் கிழிச்சாளோ. எம் ஏ வாம்.”

கீதா தன் மெமரியைக் கூட்ட, மூளைத் திறனை வளர்க்க என்ன செய்யலாம் என்று மூளையைத் தேய்த்துக் குழப்பிக் கொண்டாள்.

மெமரி பளஸ் சாப்பிடலாமா? ம்ம்ஹூம். அந்தக் கீரையின் பெயரென்ன? ம்ம்ம் வல்லாரைக் கீரை! சாப்பிட்டால் ஞானியாம். போன பிறப்பு, அடுத்த பிறப்பு எல்லாம் தெரிந்துவிடுமாம். இந்தப் பிறப்புக் கதையே தேறமாட்டேன் என்கிறது. இதில் இது வேறா!  சரி, பேசீச்சம் பழம், தேன்? ஏற்கனவே இனிமையானவள். நோ!

வால்நட்டில் ஒமேகா 3 இருக்கிறது.  மூளைக்கு நல்லது.

ஓகே! ஆனால் விலை மிகவும் அதிகமாயிற்றே!

ஃப்ளெக்ஸ்/ஆளி விதையிலும் இருக்கிறது. சரிதான்.

அதென்னவோ தெரியவில்லை. நகரத்து பணக்கார மாந்தர்களின் கண்களில் படாமல், சீந்தப்படாமல் எங்கோ மூலையில் கிராமங்களில் விலை குறைவாக இருந்தவை எல்லாம் இப்போது இயற்கை, சித்த மருத்துவர்களின் விளம்பரங்களினால் புதிய ட்ரென்ட்! சிறு தானியங்கள் நகரத்தில் பெரிய பெரிய கடைகளில் மினு மினுப்புடனும், ஆர்கானிக் என்ற முத்திரையுடனும் க்ரீடம் சூட்டப் பெற்று, குதிரைக் கொம்பின் விலையில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும்படியாக இருக்கின்றன.

ஹூம் பணம் உள்ளவர்கள் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்தால் போதும் என்று பொருளாதார விற்பன்னர்களும் ஆட்சியாளர்களும் நினைத்துவிட்டார்கள் போலும். ஒரு வேளை அவர்கள் மட்டும்தான் மக்களோ?

இப்படி எல்லாம் மூளையைக் கசக்கினால்.....  அப்போ என்னதான் வழி? கூகுள் ஏஞ்சல் ஏதாவது வழி சொல்லும் என்று தட்டினாள். நிறையவே வழிகளைக் கொட்டிக் காட்டியது.  மாஓஜாங்க் டைட்டான்ஸ், சுடோக்கு...

அட! சுடோக்கு! அடுக்கினாள். சொடுக்கினாள். முடுக்கினாள்....

அடுப்புல வைச்சுருக்கறதக் கூட மறந்துட்டு அப்படி என்ன கேடு கெட்ட வேலை. தீயுது.

ஹும் இதுவும் வேலைக்காவாது. என்ன செய்யலாம். எப்படியாவது சரி செய்ய வேண்டும்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். மூளையைக் கண்டான் கணினியைப் படைத்தான்! கணினியின் செயல்பாட்டில் கேடு வந்தால் செர்வீஸ் செய்வதில்லையா, மெமரியைக் கூட்ட கூடுதல் மெமரி கார்ட் போட்டு,  அது போல....ஆஹா நல்ல ஐடியா...

நரம்பியல் நிபுணரிடம் சென்றாள்.

வயது 51 ஆகிவிட்டதால் மூளை பழசாகிவிட்டதாம். செர்வீசுக்குப் போக வேண்டுமாம். மருத்துவரிடம் செர்வீஸ் செண்டர் இல்லாததால் மருத்துவர் பரிந்துரைத்த செர்வீஸ் செண்டரில் கொடுத்தாயிற்று.

ப்போது செர்வீஸ் செண்டரில் கொடுத்த மூளையைக் காணவில்லை. இதுதான் கீதாவின் மூளை காணாமல் போன பிரச்சனைக் கதை.

சரி எப்படிக் கண்டு பிடிப்பாய்,  வெர்ச்சுவல் கீதா?

அதற்கென்றுத் தனி எண் எல்லாம் உண்டு. ஒரு வேளை மாறிப் போய்விட்டதோ? மாறிப் போயிருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது?

செர்வீஸ் சென்டரில் இப்போதைக்கு இதில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் என்று சில மூளைகளைக் காட்டினார்கள்.

அடடா அப்படியென்றால் பலருக்கும் பழசாகி, மழுங்கிவிடுகிறது போலும்!

ஐயோடா சாமி! அது பிரதமர், முதல்வர், அரசியல்வாதி இல்லை ஏதேனும் சாமியார்களின் மூளையாக இருந்துவிட்டால்...இல்லை யார் எழுதுவதும் இலக்கியமே இல்லை என்று சொல்பவரின் மூளையாக இருந்துவிட்டால். ஐயகோ கொடுமை!

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றால் அவர்களும் அவர்களது மூளையைத் தேடிக் கொண்டிருக்கின்றார்களாம்.

என்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா? ஹஹஹஹ் அது இருந்தால்தானே காணாமல் போவதற்கு. அப்படியே இருந்திருந்தாலும் இவளது மூளையை எல்லாம் யாரு திருடப் போகிறார்கள் என்ற குரலும் கேட்கிறது அகத்திலிருந்து.

"கிழே கிடந்துச்சு இது உங்க மூளையா பாருங்க" என்று சமூக வலைத்தளங்களில் வலம் வருவதாக தோழி அபயா அருணா நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார். ஒரு வேளை அது கீதாவின் மூளையோ என்று பார்த்தால்.....அந்த மூளை சத்தியமாக கீதாவின் மூளை இல்லை என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். ஹிஹிஹி...

நீங்கள் எல்லோரும் உங்கள் மூளையைப் பத்திரமாகத்தானே வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? செர்வீஸ் செண்டர் எல்லாம் ஃபுல்லாக இருக்கிறதாம். தொலைத்துவிடாதீர்கள். சகோதர சகோதரிகளே, கீதாவின் மூளையைத் தேடிக் கண்டுப்பிடித்துத் தருகிறீர்களா...

(மிக்க நன்றி அபயா அருணா. அங்குப் பின்னூட்டம் இட வந்து இட முடியாமல் இங்கு மொக்கைப் பதிவாய் மாறியதற்கு)

------கீதா

(படம் இணையம்)



சனி, 4 ஜூன், 2016

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 4 - செல்லங்கள் விடை பெறுகின்றார்கள்

அவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்...என்று முடித்திருந்தேன் சென்ற பதிவை...

அவர்கள் உலா செல்ல நினைத்து ப்ரௌனியின் அறையை விட்டு வெளியில் வந்து கண்ணழகி இருந்த இடத்திற்கு வந்தனர்.

ஸன்னி : சரி கண்ணழகி, ஜெஸ்ஸியும் கருவாண்டியும் வெளியில் போய் வரலாமா என்று கேட்கிறார்கள். நீ என்ன சொல்கின்றாய்?

கண்ணழகி : போய் வரலாம்தான் ஆனால் நம்மவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் எங்கள் பேட்டையிலும் பக்கத்துப் பேட்டையிலும்.  அதான் யோசிக்கின்றேன்.

ஜெஸி/ரஜ்ஜு : சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் ஒரு சில சாலைகளின் வழியாகச் செல்ல வரி உண்டு தெரியுமா?

ஜூலி : ஹேய் இங்கும் டோல் கேட் உண்டு. சில சமயங்களில் சின்ன தூரத்திற்கே 3, 4 டோல் இருக்கிறது. அவ்வழி செல்ல பணம் கட்ட வேண்டும்.

ஸன்னி : ஓ அப்படியென்றால், நம் பேட்டையிலும் சாலை வழி செல்ல நம்மவர்களுக்கு வரி செலுத்த வேண்டுமோ. அதைத்தான் அம்மா, கப்பம் கட்டுகின்றேன் என்று சொல்லி எழுதுகின்றார்களோ?

கண்ணழகி : ஆமாம்! கப்பம் கட்ட வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் கத்திக் கொண்டு வருவார்கள். அம்மா எங்க பேட்டையையே அடக்கி வைச்சுட்டாங்க தெரியுமா. யாரும் இப்ப நாங்க வாக்கிங்க் போகும் போது சண்டைக்கு வருவது இல்ல. மட்டுமல்ல எங்கள் பேட்டையிலும் தேர்தல் முடிந்துவிட்டது. மூக்கழகிதான் தலைவி!!

ஸன்னி : ஹ்ஹ அப்போ அம்மா நல்லா லஞ்சம் கொடுத்து எல்லோரையும் அடக்கி வைத்திருக்காங்கனு சொல்லு. அம்மா பேட்டையையே அடக்கி வைத்துவிட்டார்களே அப்புறம் என்ன

டைகர் : ஹை ஸன்னி உன் அப்பாவின் வாசனை அடிக்கின்றதே!! ஹ்ஹ்ஹ

கண்ணழகி : ஆமாம்! ஏதோ அரசியல் வாசனை அடிக்கின்றதே. ஹிஹிஹி அது சரி ஸன்னி, நீ எந்த அம்மாவைப் பற்றிச் சொல்லுகின்றாய்?

ஸன்னி : ஓ! நீ அந்த அம்மாவை நினைத்துவிட்டாயா? ம்ம் அவர்கள் கூட சமீபத்தில் காவல் துறையில் இருக்கும் நம்மவர்களைக் கொஞ்சிய புகைப்படம் பார்த்தேனே. நான் சொன்னது உன் அம்மாவை. ஹ்ஹ்ஹ்ஹ....(என்று மிகவும் பெருமையாக ஒரு லுக் விட்டான் எல்லோரையும். பார்த்து!!!

ஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரும் கண்ணழகியுடன் நடந்துகொண்டிருந்தாலும் உள்ளூர ஒரு சிறு பயம்தான்.  பேட்டை அல்லக்கைகள் தலைவியுடன் ஓடி வந்து வம்பு பண்ணுவார்களோ என்று.

குப்பையைக் கண்டு ஸன்னி, ஜெஸ்ஸி, ரஜ்ஜு எல்லோரும் வியந்தார்கள்.

படம்  இணையம்

அவர்கள் மூவரும் : நம்மவர்கள் எல்லோரும் இங்கு குப்பையில் மேய்கின்றார்கள். குப்பையைச் சாப்பிடுகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் அம்மா, அப்பா இல்லையா? தெருவில்தான் இருப்பார்களா? வியாதிகள் வருமே!

கண்ணழகி : ஆமாம்! பாவம் இவர்கள் எல்லாம். பார் தோல் வியாதிகள்! நீ கப்பம் என்று சொன்னாயே. அது கப்பமல்ல. அது அம்மா சும்மா அப்படிச் சொல்லுவது. குப்பையைச் சாப்பிடுகின்றார்களே என்று வருத்தப்பட்டு தினமும் அவர்களுக்கு ரொட்டி, பிஸ்கோத்து என்று கொடுப்பார்கள்.

மூவரும் : எங்கள் ஊரிலெல்லாம் வெளியில் நம்மவர்களைப் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் நம்மவர்களின் நல அமைப்பிற்குத் தகவல் சொல்லி விடுவார்கள், ஏஞ்சலின் அம்மா செய்வது போல்.

கண்ணழகி : இங்கும் நல்ல உள்ளங்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவும், இவர்களை தங்கள் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து, காப்பகம் போல வளர்ப்பதற்கும். ஸ்ரீராம் அங்கிள் கூட பாசிட்டிவ் செய்தியில் சொல்லுவாரே!

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டையில் உள்ள நாலுகால் எல்லோரும் பட்டாளமாகக் குரைத்துக் கொண்டு ஓடி வர, ஸன்னி பயந்து கீதாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டான்.  கீதா அவனைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டாள்.

படம் இணையம்

ஜெஸ்ஸி, கருவாடன், ரஜ்ஜுவைத் தேடினால் காணவில்லை. எல்லோரும் அருகிலிருந்த ஒரு வளாகத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அங்கிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். டைகரும், ஜூலியும், கண்ணழகியும் கீதாவின் மற்றொரு கையில் செயினில்.
டைகர் அவர்கள் எல்லோரையும் பார்த்துக் குரைக்க ஆரம்பிக்க, கீதா எல்லோருக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொடுக்கவும் எல்லோரும் தின்று கொண்டெ மெதுவாகக் குரைத்துக் கொண்டு பின் வாங்கினர்.

ஸன்னி மிகவும் பயந்து விட, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஸன்னி : எனக்கு இதெல்லாம் புதிதாக இருக்கிறது. நான் இனி இங்கு வரவில்லை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள்.

ஜெஸ்ஸி/கருவாண்டி : ஹை அப்போ நாங்கள் அமெரிக்கா வருகின்றோம். அமெரிக்காவையும் பார்த்துவிடலாமே!!!

ஜூலி/டைகர் : நாங்கள் எப்படி அங்கு வருவது? தனியாக...விமானம் என்றால் எங்களுக்கு மிகவும் பயம்.

கண்ணழகி : எனக்கும் பயம்தான்.  நாம் எல்லாரும் அங்கு செல்ல வேண்டும் என்றால் நமக்கு சிப் பொருத்தி விடுவார்கள். கென்னல் போன்ற பெட்டியில் நம்மை வைப்பார்கள். இங்கு அண்ணா வேலை செய்யும் க்ளினிக்கில் செய்கின்றார்கள். இங்கிருந்து நிறைய நம்மவர்கள் அமெரிக்கா, லண்டன், எல்லாம் போகின்றார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதி முறை இருக்கிறதாம் அண்ணா சொல்லுவார். யு கேயின் விதி முறைகள் சற்றுக் கடினமாம்.

ஸன்னி : இதோ எனக்கும் கூட பொருத்தித்தான் அனுப்பியிருக்கிறார்கள். நாம் எங்கேனும் போனாலும் இந்தச் சிப் வைத்து நம்மைக் கண்டு பிடித்துவிட முடியும். நமக்கும் விமானத்தில் டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டும் தெரியுமா?
ஜூலி/டைகர் : ஓ அப்படியா! முடிந்தால் வருகின்றோம். கண்ணழகி நீ போவாயா? ப்ரௌனியும் வருவாள் தானே?

கண்ணழகி : ப்ரௌனி பற்றி எனக்குத் தெரியாது.  அவள் வீட்டை விட்டே வெளியில் வர மாட்டாள். அவள் விமானத்திலா.

ஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி : ஆரம்பித்துவிட்டாயா ப்ரௌனி பற்றி. சரி நம்மைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த சந்திப்பில் பேசுவோம். அப்போ நாங்கள் எல்லோரும் இப்போது விடை பெறுகின்றோம். அடுத்த முறை எங்கு சந்திப்பது என்று முடிவு செய்வோம். தொடர்பில் இருப்போம் ஓகேயா.

கீதா எல்லோரையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் செல்ல அங்கு ஜெஸ்ஸியின் மற்ற நண்பர்களும் இருக்க எல்லோரும் இவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே மறைய, பத்திரமாக ஏற்றி விட்ட திருப்தியில், ஜூலி, டைகரையும் அவர்கள் ஊருக்கு ஏற்றிவிட்டு, மனம் கனக்க இவர்கள் வீடு திரும்பினார்கள்.

கரந்தை சகோ, துளசி இங்குதான் என்பதால் விசாரித்துக் கொள்ளலாம்.

மதுரை சகோ. உங்கள் செல்லப் பிள்ளை பத்திரமாக வந்து சேர்ந்தான் தானே! ஏஞ்சல் உங்கள் செல்லக் குட்டிகள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள்தானே. துளசி அக்காவையும் கேட்டுவிட வேண்டும். ரஜ்ஜு வந்து சேர்ந்தானா என்று.

ஒரு வழியாக முடித்துவிட்டேன். இன்று நானும், மகனும் பயணம். இன்னும் ஒரு வாரம்/10 நாட்கள் வலைப்பக்கத்திற்கு விடுமுறை. முடிந்தால் இடையில் எட்டிப் பார்க்கின்றேன். 10 நாட்களுக்கு நீ.................ளமான மொக்கைப் பதிவுகள் எங்கள் தளத்தில் உங்களைத் தொல்லைப்படுத்தாது. ஹிஹிஹி...


----கீதா

வெள்ளி, 3 ஜூன், 2016

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 3 - மௌனமும், ஸன்னியின் பிறந்த நாள் கொண்டாட்டமும்

வீட்டிற்குள் நுழைந்ததும் அந்தச் சமயம் பார்த்து வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க அவ்வளவுதான் எல்லோரும் பயந்து, உடம்பு நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். முந்தைய பதிவில் முடித்திருந்தேன்

சத்தம் எல்லாம் அடங்கி எல்லோரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் கண்ணழகி கட்டிலின் அடியிலிருந்து வெளியில் வரவும் அங்கு அவள் அம்மா கீதா இவர்களுக்காகச் செய்த கேக் எல்லாம் வைத்திருக்க, உடனே கண்ணழகி எல்லோரையும் அழைக்க...

கண்ணழகி : நண்பர்களே! நம் அருமைக் குட்டிச் செல்லம் ஸன்னிக்கு இந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி 3 வயது நிறைகின்றது. அதற்குள் அவன் ஊருக்குப் போய்விடுவான் என்பதால் நாம் எல்லோரும் இன்று அவனது பிறந்த நாளைக் கொண்டாடுவோம். சரியா.

டைகர் : அதற்கு முன் எல்லோரும் நமது மற்ற அப்பா, அம்மாக்களின் செல்லங்கள், நம் நண்பர்களின் பிரிவிற்கு ஒரு சிறிய மௌன அஞ்சலி செய்துவிட்டுப் பிறந்த நாள் கொண்டாடுவோம் சரியா.


எல்லோரையும் கீதா அடக்கி மௌனமாக இருந்துவிட்டு பின்னர் ஸன்னிக்கு ஹாப்பி பர்த்டே டு யு ஸன்னி என்று சேர்ந்து பாடி வாழ்த்தினார்கள்.

எல்லோரையும் மகிழ்வித்து நீடுழி வாழ,  ஜூன் 13, 2016 அன்று 3 வயது நிறைவடையும் ஸன்னிச் செல்லத்திற்கு எங்கள் எல்லோரது பிறந்த நாள் வாழ்த்துகளும்







கண்ணழகி : நண்பர்களே ஸன்னி மல்டிகான் (Maltichon) எனும் வகையைச் சேர்ந்தவன். மல்டீஸ் (Maltese) என்ற இனமும், பைக்கான் ஃப்ரைஸ் (Bichon Frise) என்ற இனமும் கலந்து உருவான தனி வகை இனம். தோற்றத்தில் சிறியவனாகப் பொம்மை போன்று இருந்தாலும், மிகவும் அன்பானவன், எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவன், பொறுப்பானவன், நன்றாகத் தோழமையாகப் பழகுபவன், மகிச்சியானவன் பிறரையும் மகிழ்விப்பவன், நன்றாக விளையாடுபவன்..இதோ பாருங்கள் அவன் விளையாட்டை, சுறு சுறுப்பை....

மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியின் விளையாட்டை இங்கு கண்டு மகிழுங்கள். நன்றி மதுரைத் தமிழன் சகோ

ஜெஸ்ஸி : அட சூப்பரா விளையாடறானே...

சரி நாங்கள் கிளம்புகின்றோம் என்று கருவாண்டியைக் கூப்பிட அவன் ஜெஸ்ஸியுடன் தான் இருப்பேன் என்று சொல்லிவிட......ஜெஸ்ஸி, கருவாண்டி நீங்கள் முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள்.  அங்கு சந்திப்போம் என்று ஜெஸ்ஸியின் நண்பர்கள் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட இவர்களின் உரையாடல்கள் தொடர்கின்றது.

ஸன்னி : ரொம்ப நன்றி உங்கள் எல்லோருக்கும். உங்கள் அன்பு மகிழ்வாக இருக்கிறது. நான் நெகிழ்ந்து விட்டேன். ஆனால், உங்கள் ஊரில் என்ன இப்படி எல்லாம் வெடிக்கின்றார்கள்? அங்கெல்லாம் இப்படிச் சத்தமே இருக்காது தெரியுமா. இதைப் பற்றிச் சொல்லவே இல்லை நீ.  எனக்குப் பயமாக இருக்கிறது.

ஜெஸ்ஸி, ரஜ்ஜு : ஆமா எங்க ஊர்லயும் கேட்கவே கேட்காது. ஹப்பா பயந்தே போய்விட்டோம்.

கண்ணழகி : சொன்னா நீங்கல்லாம் வந்துருக்கவே மாட்டீங்களே...அதை ஏன் கேட்கிறீர்கள்! இங்க அவ்வப்போது வெடித்துக் கொண்டே இருப்பார்கள். சாவுச்சங்கு ஊதினாலோ, கோயிலில் பாட்டுகள் ஒலி பரப்பினாலோ எனக்குத் தெரிந்துவிடும் அன்று வெடிச் சத்தம் இரும் என்று. என் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிடும்.

ஜூலி : எங்கள் ஊரிலும் வெடி எல்லாம் உண்டு. இந்த மனுஷங்க ரொம்ப மோசம் நம்மை எல்லாம் ரொம்பப் பயப்பட வைக்கின்றார்கள். கண்ணழகி! உங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிப்பார்களா?

டைகர்: எங்க ஊர்ல பட்டாசு சத்தம் எல்லாம் நாங்கள் இருக்கும் இடத்தில் கேட்காது. ஒரே ரப்பர் தோட்டம்தான். வீடும் அங்கங்குதான் இருக்கும். அழகான ஊர். எங்கள் வீட்டில் பின் புறம் பெரிய ரப்பர் தோட்டம், முன் புறம் பெரிய தோட்டம் எல்லாம் உண்டு. அடுத்த தடவை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள். ஜாலியா சத்தம் இல்லாமல் தோட்டத்திலேயே சுத்தலாம்.

ரஜ்ஜு : அட! இந்தத் தடவையே அங்கு போயிருக்கலாம். எங்கள் ஊரிலும் இந்த மாதிரி சத்தம் எல்லாம் கிடையாது.

கண்ணழகி : எங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிக்கவே மாட்டர்கள். அண்ணன் 2 ங்க்ளாஸ் படிக்கும் போதே நம்மை மாதிரி 4 காலுக்கு எல்லாம் இது ஆகாது என்று வெடிக்கறதே இல்லை என்று அண்ணன் சொல்லுவார்.

ஜூலி : ஆனால் ஊர் முழுக்க வெடிப்பார்களே

கண்ணழகி : ஆமாம் அப்பல்லாம் நான் சாப்பிடவே மாட்டேன்.  தீபாவளினாலே பிடிக்காது. ஆனா ப்ரௌனி பயந்தாலும் சாப்பாடு மட்டும் விட மாட்டா...

ஸன்னி : பாத்தியா ப்ரௌனியை மறந்தே போய்விட்டோம். ப்ரௌனி எங்கே? அந்த அறையிலா? கதவு மூடியே இருக்கிறது?

கண்ணழகி : ஹும். பட்டாசு சத்தம் கேட்டு அவள் அந்த அறையில் கட்டிலுக்கடியில் மூலையில் ஒதுங்கியிருப்பாள். நான் சங்கிலி இல்லாமல் இருப்பதால் அந்தக் கதவு மூடியிருக்கும்.

ஜெஸ்ஸி, ரஜ்ஜு : நீ இங்கே இரு. நாங்கள் அவளைப் பார்த்துட்டு வருகிறோம். நீ இங்கே சும்மா குரைத்துக் குரைத்து எங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாது.
எனது மற்றொரு மகள் ப்ரௌனி

ப்ரௌனியின் ரூமிற்குச் சென்றார்கள். ஹை ப்ரௌனி...எங்கருக்க? என்று கோரஸாகக் கேட்க ப்ரௌனி தன் குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு மெதுவாக வெளியில் வந்தாள். பூனையார்களைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம் உறுமினாள். அப்புறம் கீதா அவளிடம் ஃப்ரென்ட்ஸ் என்று சொல்ல அடங்கிவிட்டாள்.

டைகர் : உனக்கு உடம்பு நடுங்கவே இல்லையா....வெடிச் சத்தம் பயம் இல்லையா?

ப்ரௌனி : ம்ம் நடுங்காது ஆனால் பயம் உண்டு கட்டிலுக்கடியில் போய் படுத்து விடுவேன். கண்ணழகி தொடை நடுங்கி நடுங்கியிருப்பாளே.

ஸன்னி : இதப் பார்ரா அவள் இவளைச் சொல்லுகிறாள். இவள் அவளைச் சொல்லுகிறாள்....அது சரி ஏன் உங்க ரெண்டு பேருக்கும் பங்கிச் சண்டை

ஜூலி : ஸன்னி! அது பங்கிச் சண்டை இல்லை பங்காளிச் சண்டை...

ஸன்னி : என்னவோ ஒண்ணு....

ப்ரௌனி : அது உனக்கும், டைகருக்கும் தெரிந்துருக்குமே. நம்மவர்களில் வயதிற்கு வரும் முன்னரேயே/வரும் சமயம் ஒரு Pack ற்கு யார் தலைமை என்று முடிவு செய்வது உண்டு இல்லையா? நாங்கள் இருவருமே ஒரே வீட்டில் தானே இருக்கிறோம். எங்கள் பேக் அம்மா, அண்ணா என்று இருந்தாலும் எங்கள் இருவருக்குள் யார் தலைவி என்ற பிரச்சனை வந்தது. கண்ணழகி ஆல்ஃபா. நான் அடங்கித்தான் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு முறை எங்களுக்குள் தீவிரமாகச் சண்டை வந்த போது, அண்ணாவிற்கு, அப்போது நம் உளவியல் தெரியாததால் கண்ணழகியை அடக்கி, எனக்கு ஆதரவாகப் பேசி என்னை அவள் கடியிலிருந்துப் பிரிக்க, எனக்குத் தைரியம் வந்து விட்டது. நானும் கண்ணழகியை எதிர்க்கத் தொடங்கி விட்டேன். அதன் பிறகு நாங்கள் இருவரும் எதிரும் புதிரும்தான்.

ஜெஸ்ஸி : சே நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்திருந்தால் இப்போது எங்களுக்கும் நன்றாக இருந்திருக்கும், அம்மா, அண்ணாவிற்கும் நன்றாக இருந்திருக்கும்.

ஜெஸ்ஸி, கருவாண்டி : சரி நாம் கொஞ்ச நேரம் வெளியில் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா?

டைகர் : அதானே பார்த்தேன்.  இவர் இரண்டு பேரும் ஊர் சுற்றாமல் இங்கே இப்படி அமைதியாக இருக்கிறார்களே என்று. ஆரம்பித்துவிட்டார்கள்.
ப்ரௌனி : நான் வர மாட்டேன் வெளியே. 1, 2 போவதற்கு மட்டும் தான் வெளியே வருவேன்.

ஸன்னி : ஓ! அதான் உன்னை அம்மாவும், அண்ணாவும் “படிதாண்டா பத்தினி” என்று அழைக்கின்றார்களா.

ப்ரௌனி : கண்ணழகி ‘’”ஓடு காலி”

ஜூலி : ஹ்ஹ்ஹ்ஹ் ஏன் அவள் வீட்டை விட்டு ஓடி விடுவாளா?

டைகர் : அதை ஏன் கேட்கிறாய். அவள் 3 முறை வெளியில் ஓடிவிட அண்ணனும், அம்மாவும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

ப்ரௌனி : டைகர் உன் கதை மட்டும் என்னவாம்?  சீசன் சமயத்தில் நீ அலைந்தாயே! சங்கிலியை அறுத்து கொண்டு வெளியில் ஓடி விட்டு வீட்டிற்கு வர பயந்து ரப்பர் தோட்டத்து மரத்தடியில் செடிகளுக்கிடையில் முனகிக் கொண்டு இருந்ததை, இருட்டில் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்தார் துளசி அப்பா.

ஸன்னி : அப்போ நீங்கள் எல்லோருமே ஓடுகாலிகளா! ஹ்ஹ்ஹ

ப்ரௌனி : நான் வெளியே போக மாட்டேன். ஒரு சின்ன லாரி என் காலைப் பதம் பார்த்துவிட்டுச் சென்றுவிட இப்போதும் கால் நொண்டிக் கொண்டுதான் நான் நடப்பேன். எனக்கு சாலையில் போக்கு வரத்தைக் கண்டாலே பயம்.

ஸன்னி : ஏன் டாக்டர் அண்ணா சரி பண்ணவில்லையா?

ப்ரௌனி : அது நடந்தது நான் 3 மாதக் குழந்தையாக இருக்கும் போது. அண்ணா படித்து முடிக்கும் முன். இப்போது அண்ணா என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

ஜெஸ்ஸி : சரி நாம் எல்லோரும் சிறிது வெளியில் சென்றுவிட்டு வருவோம்.

அவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்....நீங்களும் அவர்களுடன் உலா வாருங்கள்.

படங்களுக்கு நன்றி ஏஞ்சலின், துளசி கோபால் அக்கா, கீதா சாம்பசிவம் அக்கா, மதுரைத் தமிழன் சகோ, சகோ கரந்தையார், இளங்கோ ஐயா, ஸ்ரீராம், ஜிஎம்பி சார், டி என் முரளிதரன் சகோ

-----கீதா

http://engalblog.blogspot.com/2011/02/1.html எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் செல்லம் பற்றிய பதிவுகள்

http://sivamgss.blogspot.in/2014/02/blog-post_6626.html கீதா சாம்பசிவம் அக்காவின் செல்லம் மோத்தியைப் பற்றிய பதிவு

https://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_15.html தமிழ் இளங்கோ ஐயா -இறந்து போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. இங்கு சென்றால் ஜாக்கியைப் பற்றிய பதிவும் கிடைக்கும்

http://www.tnmurali.com/2014/06/a-poem-dedicated-to-juno.html முரளிதரன் சகோவின் செல்லம் ஜுனோவைப் பற்றிய பதிவு

http://avargal-unmaigal.blogspot.com/2013/09/blog-post_22.html மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியைப் பற்றிய பதிவு. இதில் எனக்கும் என் மகனிற்கும் மிகவும் பிடித்த நாங்கள் ரசித்தது தமிழனின் பின்னூட்டக் கருத்து. எங்கள் கருத்தும் அதே என்பதால்.

http://gmbat1649.blogspot.in/2011/06/blog-post_15.html   ஜி எம் பி சாரின் செல்லம் செல்லி பற்றிய பதிவு