ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்-காத்திருக்கும் பதிவுகள்

அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வரும் வருடம் 2018ல் மட்டுமின்றி இனி வரும் வருடங்களிலும் எல்லோரும் மகிழ்வுடன் வாழ்ந்திடவும், பல பதிவுகள் எழுதி களிப்புடன் வலம் வரவும் வாழ்த்துகள்!!

வெள்ளி, 22 டிசம்பர், 2017

நல்ல பாம்பு ஏன் மெலிந்தது?--------.கே ஏ அப்பாஸின் பதில்-------ஒரு வரியில் ராஜினாமா

மாமனாரின் மறைவிற்குப் பிறகு அவர் வைத்திருந்த சமயம் சார்ந்த புத்தகங்கள் பலவற்றை அதில் ஆர்வமுள்ளவர் ஒருவர் (குடும்ப உறுப்பினர்எடுத்துச் சென்றார்சில புத்தகங்கள் யாரும் தொடாமல் இருந்தன. குறிப்பாக ஜனரஞ்சகப் புத்தகங்கள். அக்கலெக்ஷனில் பல கல்கி, கலைமகள், துக்ளக் இவற்றில் வந்த தொடர்கதைகள், சிறுகதைகள் இவற்றை பைண்ட் செய்து வைத்திருந்தார். தவிர ஓரிரு புத்தகங்கள் குடும்பத்தில் யாருடைய கல்யாணத்திற்கோ பரிசாகவும் வந்திருந்தன. புத்தகங்களில் சிலவற்றை நான் எடுத்து வந்தேன். மற்றதையும் எடுத்து வர வேண்டும்.

புதன், 6 டிசம்பர், 2017

அழகிக்கும் அழகி கிரீட ஆசை



கண்ணழகிக்கு திடீரென்று அழகிப் போட்டியில் பட்டம் வெல்லும் ஆசை வந்து விட்டது போலும். ஊரிலுள்ள பலரும்  ஆசைப்படும் போது என் கண்ணழகிக்கு ஏன் வரக்கூடாதா என்ன? சரி எப்படி வந்தது? அதை ஏன் கேட்கின்றீர்கள்?! 

வியாழன், 19 அக்டோபர், 2017

சொல்லுதல் யார்க்கும் எளிய……

“அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு ஒரு பிராமணனாகப் பிறக்க வேண்டும்”, இப்படி ஒரு அதிரடி ஆசையை கடந்த மாதம் வெளியிட்டு எல்லோரையும் திடுக்கிட வைத்தவர் பரத் சுரேஷ் கோபி எம்.பி அவர்கள். சிறந்த நடிப்பால் பரத் விருதை பெற்றதுடன், பி ஜே பியில் சேர்ந்ததால் எம் பி யும் ஆனவர். “அதுக்கும் மேல” 

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

வைராக்கியம்

எங்கள்ப்ளாகின் மற்றொரு தளமான நம்ம ஏரியாவில் நெல்லைத் தமிழன் அவர்கள் கொடுத்திருந்த கண்டிஷனுக்கு எழுதிய கதை. அதன் லிங்க் இதோ https://engalcreations.blogspot.in/2017/10/5_14.html

பீஷ்மரின் சபதம், தசரதர் கைகேயிக்குக் கொடுத்த வரம் இரண்டுமே மகாபாரதம் மற்றும் இராமாயணத்தின் நிகழ்வுகளுக்கு ஆணிவேர். பல சபதங்கள், உறுதிகள், ரகசியங்கள், வைரக்கியங்கள், சத்யப்பிரமாணங்கள் அடங்கியவையே பல வரலாறுகள். பொன்னியின் செல்வனில் கூட சில சத்யப்பிரமாணங்கள், ரகசியங்கள் கதைப் போக்கை மாற்றுவது போல் நம் சாதாரண மனிதர்களின் வாக்கையிலும் சத்யங்கள், சபதங்கள்,, உறுதிகள், குடும்ப நன்மைக்காக மறைக்கப்படும் ரகசியங்கள், எடுக்கப்படும் முடிவுகள் என்று சில தவறாகி…, வைராக்கியங்கள் என்று எளிதான வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடுகின்றது. அப்படி ஒரு கருவை, கதையை, என் மனதில் நெ த வின் கண்டிஷன், உணர்ச்சிகள் நிறைந்த குறுநாவல் அளவிற்கு விரித்தது. அதை முடிந்த அளவிற்குச் சுருக்கி இங்குக் கொடுத்துள்ளேன். நெ த மற்றும் கௌதம் அண்ணா, ஸ்ரீராம் மிக்க மிக்க நன்றி.

வைராக்கியம்

“அப்பா போதும்பா! நீங்க தனியா இங்க இருக்கறது. எங்களோட வந்துடுங்க.” வாசு (ராஜேந்திரன்) அப்பாவிடம் இறைஞ்சினான்.

“வேணாம்டா. இங்கேயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்”. சுவாமிநாதன் (அருள்மொழி) சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினார்.

(ராஜேந்திரனுக்கு) வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக் கொண்டான். (ஆர்த்தி) வசு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். (இவை நெல்லைத் தமிழனின் கொடுத்திருந்த வரிகள். இதைத் தொடர்ந்து நாம் எழுத வேண்டும் என்பதே கண்டிஷன். பெயர்கள், உறவுமுறைகள், மொழி நடை எல்லாம் நம் கற்பனைக்கு)

‘அடடா! நான் என்னையுமறியாமல் வாய் விட்டுவிட்டேனோ?’ என்றும் அருள்மொழி நினைத்துக் கொண்டார்.

“என்னப்பா இப்படிச் சொல்றீங்க. நீங்க ரெண்டு பேருமே எங்க கூட இருக்கத்தானே கூட்டிட்டுப் போக வந்துருக்கோம். உங்க உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல அம்மா மட்டும் தனியா உங்களைக் கவனிச்சுக்கறது கஷ்டமில்லையாப்பா கொஞ்சம் யோசிங்கப்பா”

“நாங்க இப்ப அங்க வரதா இல்லை. ஒரு வேளை நான் கண்ண மூடிட்டா? அதுக்குத்தான் அப்படிச் சொன்னேன். அவ்வளவுதான்” என்று கண்ணைத் திறக்காமலேயே பதில்..

“சரி அப்படினா நீங்க இங்க இருங்க. நாங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போறோம்.” என்று ஒரு கொக்கி போட்டான். அம்மா இல்லாமல் அப்பா இருக்கமாட்டார் என்பதால்.

அருள்மொழி கண்களைத் திறந்து ஆர்த்தியைப் பார்த்தார். ஆர்த்தியோ அவரை நேரடியாகப் பார்க்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். ஆர்த்திக்கு தன் மாமனாரின் வைராக்கியத்தின் காரணம் தெரியும். ஆனால் அது ராஜேந்திரனுக்கு தெரியாது. இங்கு என்ன நடக்கப் போகிறதோ,. ராஜேந்திரனிடம் அருள்மொழியோ, ஆர்த்தியோ ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற பதற்றத்தில் இருந்தாள் வானதி.

ராஜேந்திரன் சென்னையில் ஒரு வங்கியில் ஆஃபீஸராக வேலை பார்க்கிறான். அதே வங்கியில் ஆர்த்தியும் வேலை பார்க்கிறாள். வானதியிடமிருந்து தகவல் வந்ததும் உடனே இருவரும் வங்கியில் லீவ் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிடைத்த பேருந்தில் ஏறி அன்று காலைதான் பார்வதிபுரம் வந்திருந்தார்கள். மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு, அப்பாவும் உறங்காமல் இருந்ததால்தான், ராஜேந்திரன் மெதுவாகப் பேச்சைத் தொடங்கிட மேலே உள்ள உரையாடல்.

“என்னிக்குத் திரும்ப போறீங்க? டிக்கெட் கன்ஃபார்ம்டா இருக்கா?”

“ஏம்பா விரட்டறீங்க? என்னாச்சு உங்களுக்கு? நீங்களும் வரீங்கனா நாளைக்கே புறப்படலாம். இல்லைனா நாங்க இன்னும் ஒரு ரெண்டு, மூணு நாள் இருந்துட்டுத்தான் போவோம்.……இருக்கலாம் தானே?” கொஞ்சம் கோபத் தொனியாக இருந்தாலும் அவனுக்கு, இந்த ரெண்டு நாளில் எப்படியேனும் அப்பாவின் மனதை மாற்ற முடியாதா என்ற ஒர் எண்ணம்.

“நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினது உங்களுக்குப் பிடிக்கலை. அதை வெளில சொல்லாம வேற விதமா காட்டறாத நானும் பாத்துட்டுத்தானே இருக்கேன்? ஸாரிப்பா! நான் இன்னும் உங்க மகன் அதே ராஜேந்திரன்தான். இன்னிக்கு சாயங்காலம் டாக்டர்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டேன். போறோம். வரீங்க.” என்று அழுத்தமாகச் சொன்னவன், “அம்மா அந்த காய் லிஸ்ட கொடு.” என்று லிஸ்டை வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான். ராஜேந்திரன் போவது வரை காத்திருந்த ஆர்த்தி,

“மாமா, ப்ளீஸ் மாமா மன்னிச்சுருங்க. ப்ளீஸ்! அப்பா, அம்மா பண்ணின தப்பை நாங்க எல்லாரும் உணர்ந்துட்டோம். அவங்க உங்ககிட்ட மன்னிப்பு கேக்க வராங்க” என்று அருள்மொழியின் காலைத் தொட்டு அழுதாள். அருள்மொழி பதில் எதுவும் சொல்லாமல் மனதிற்குள், இட்ஸ் டூ லேட்” என்று நினைத்து மீண்டும் கண்களை மூடினார்.

பின்னர் அவள் வானதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “அத்தை ப்ளீஸ்! சத்தியமா அத்தை நாங்க உணர்ந்துட்டோம். உங்க மகனுக்குத் தெரியாம என் வேதனைய மறைக்க ரொம்பக் கஷ்டப்படறேன் அத்தை” என்றதும், ‘ஹையோ ஆர்த்திக்கு நான் இவரிடம் சொல்லாத அந்த ஒரே ஒரு ரகசியமும் தெரிஞ்சுருச்சோ? இப்போ அவரிடம் மன்னிப்பு கேட்கறேன்னு சொல்லி சொல்லிட்டாள்னா? நிலைமை இன்னும் மோசமாகிடுமே” என்று நினைத்து ஆர்த்தியை அணைத்து சமாதானப்படுத்தி தங்கள் அறைப்பக்கம் கூட்டிக் கொண்டு சென்றாள்.

கண்ணை மூடிக் கொண்டிருந்த அருள்மொழிக்கு வழக்கமாக மதிய உணவிற்குப் பின் வரும் உறக்கம் கூட வரவில்லை. குட்டையை ஒரு கலக்கு கலக்கினால் அடியில் இருக்கும் வேண்டாதவை மேலெழும்பி வரத்தானே செய்யும்!

31 வருடங்களுக்கு முன் கோவையில் அருள்மொழி ஒரு கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராக இருந்த போது, ஒரு நாள், காவல்துறையில் வேலை செய்த அவன் நண்பன் சத்யமூர்த்தி அருள்மொழியைச் சந்தித்தான். மும்பையில் இருக்கும் ஒரு விபச்சார விடுதியிலிருந்து மீட்கப்பட்ட 20 பெண்களில் ஒரு பெண் கோவையைச் சேர்ந்தவள் என்பதால் கோவைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அவள் பெற்றைரைத் தொடர்பு கொண்டும் வரவில்லை என்றும், படித்த பெண் போலத் தெரிகிறாள். உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். சத்யாவிற்கு தன் டிப்பார்ட்மென்ட் மீதே நம்பிக்கையில்லை,

“ம்ம் யோசிக்கணும். நாளைக்கு ஸண்டேதானே! காலைல அந்தப் பொண்ணை மீட் பண்ணலாமா? இப்ப எங்க இருக்கு அந்தப் பொண்ணு?”

“வெளில, நம்பகமான போலீஸ்காரர் பொறுப்புல. நாளைக்கு நான் காந்தி பார்க்குக்குக் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

வித்தியாசமான புரட்சி சிந்தனைகள் உடையவன் அருள்மொழி. மறுநாள் காலை 9 மணிக்கு காந்தி பார்க்கில் சந்தித்தனர். பார்த்த முதல் பார்வையிலேயே அவளிடம் இருந்த ஏதோ ஒன்று தன்னை ஈர்த்ததை அருள்மொழி உணர்ந்தான். முகத்தில் படிப்பின் களை. பார்த்தவுடன் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற தோற்றம். இவள் எப்படி இதில் சிக்கினாள்? என்று அவனுக்கு வியப்பு. அங்கு நிலவிய அமைதியை உடைத்த அருள்மொழி,

“உங்க பேரு வானதினு சத்யா சொன்னான். பேரே வித்தியாசமா, நல்லா இருக்கே!” என்று நேரடியாகவே பேசத் தொடங்கினான். அதிர்ச்சியிலும், பயத்திலும், அவமானத்திலும் அழுத வானதி கிட்டத்தட்ட மயங்கும் நிலையில் இருந்தாள்.

“தைரியமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுதீங்கனா அடுத்து என்ன செய்யணும்னு மூளை யோசிக்காது. தப்புத் தப்பாதான் யோசிக்கும்” “சத்யா அவங்க ஏதாவது சாப்டாங்களா?”

“ஐயோ அதை ஏன் கேக்கற அருள். ஒன்னும் சாப்பிட மாட்டேனுட்டாங்க. செத்துப் போய்டனும்னு வேற சொல்லிட்டுருக்காங்க.”

“இந்தாங்க தண்ணி. முகத்தைக் கழுவி கொஞ்சம் குடிங்க” என்று வானதியிடம் தான் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு, “சரி சத்யா நான் போய் டிஃபன் பார்ஸல் வாங்கிட்டு வந்துடறேன். நாம சாப்டுட்டு முதல்ல அவங்க வீட்ல கொண்டு போய் விட முயற்சி பண்ணுவோம்’ என்று சொல்லி பார்ஸல் வாங்கி வந்தான். சாப்பிட்டார்கள்.

“உங்க அப்பா அம்மா உங்களுக்கு வானதினு சரியான பேர்தான் வைச்சுருக்காங்க. அப்பா. பொன்னியின் செல்வன் ரசிகரோ? நீங்க வாசிச்சிருக்கீங்களா?” என்று அவளை கொஞ்சம் சகஜ நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தான்.

சற்றே ஆசுவாசமடைந்த வானதி, “ஆமா! சின்ன வயசுலேயே டக்னு அதிர்வேனாம். அதான் எனக்கு வானதினு பெயர் வைச்சதா சொல்லுவார். நானும் வாசிச்சுருக்கேன்.”
“உங்க க்வாலிஃபிக்கேஷன்?”

“எம் ஏ இங்கிலிஷ். டைப்ரைட்டிங்க், ஷார்ட்ஹேன்ட் தெரியும்”

“ஓ! வெரி குட்! போகும் போது பேசிட்டே போவோம்” என்று சொல்லி அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், காந்திபுரம் சென்று பேருந்தில் ஏறினார்கள்.

பேருந்தில் செல்லும் போது வானதி அவர்களிடம் மும்பையில் தனக்கு நடந்தது பற்றிச் சுருக்கமாகச் சொன்னாள். “எனக்கு மும்பையில, அப்பாவோட ஒரு ஸ்டூடன்ட், அவர் நடத்தற கம்பெனில ஸ்டெனோவா வேலை போட்டுக் கொடுத்தாரு. ஹாஸ்டல்ல என்னோட ரூம் மேட்டும் ஒரு கம்பெனிலதான் வேலை பார்த்துட்டிருந்தா. அவ உடம்பு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப அவளுக்கு உதவப் போக, அவளைத் தேடி வந்த ரெண்டு பேர்கிட்ட நான் சிக்கிக்கிட்டேன். அப்பதான் தெரிஞ்சுச்சு அவ இப்படியான தொழில் செஞ்சது. ஹாஸ்டல் வார்டன் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்துருப்பாங்க போல. அந்த இடத்துக்கு போலீஸ் வந்தாங்க.

அதுல தமிழ் பேசுற ஒரு போலீஸ்காரரும் இருந்ததால நம்ம காப்பாத்திடுவார்னு சந்தோஷப்பட்டேன். ஆனா, அவன் வேற எண்ணத்தோட எங்கிட்ட வந்தான். நான் என்னோட பலத்த எல்லாம் யூஸ் பண்ணி, எதிர்த்துப் போராடி கத்திக் கூச்சல் போட்டு எப்படியோ காப்பாத்திக்கிட்டேன். அடிச்சாங்க. மயக்கம் வந்துச்சு. சுதாரிச்சுக்கிட்டேன். திரும்பவும் போலீஸ் வந்து எங்கள மீட்டு…..இதோ இப்ப உங்க முன்னாடி இருக்கேன். .செய்யாத ஒரு தப்புக்கு உலகப் பார்வைல கேவலமான பெயர் எனக்கு” என்று சொல்லி, வந்த அழுகையைப் பேருந்து என்பதால் அடக்கிக் கொண்டாள். 

வானதியின் பெற்றோரை அருள்மொழியும், சத்யாவும் சந்தித்துப் புரிய வைக்க முனைந்த போது, வானதியின் அக்காவிற்கும், தங்கைக்கும் திருமணம் ஆக வேண்டும், வானதியை தலைமுழுகியாச்சு என்று ஏற்க மறுத்து வீட்டுக் கதவை அடித்துச் சாற்றினார்கள். வானதி உடைந்து போனாள். வழியில் கண்ட கிராம மக்களோ வார்த்தைகளை அள்ளித் தெளித்தனர். இத்தனைக்கும் ஃபோட்டோ எந்தச் செய்தித்தாளிலும் இடம்பெறவில்லை. ஊர்ப் பெயர் செய்தியில் வந்ததால் இருக்கலாம்.

அருள்மொழி வானதியை தன்னுடன் வேலை செய்த ஒரு பெண் பேராசிரியரின் வீட்டில் தங்கச் செய்தான். வானதி மிகவும் தளர்வாய் இருந்தாள். தினமும் சந்தித்தார்கள். நிறைய பேசினார்கள். நட்பூ காதலாய் மலர்ந்தது.

“வானதி, அருள்மொழியை மணந்தால் ஓஹோ என்று இருக்குமாம். அத்தனை நல்ல ஜாதகமாம், குடந்தை சோசியர் சொன்னார். அந்த வானதி, தான் அரசியாக விரும்பவில்லைனு உறுதி எடுத்த மாதிரி இந்த வானதி உறுதி எடுக்காம என் அரசியா வருவாங்கனு நம்பறேன்”

“சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் சொல்வதாம்!” என்று சொல்லிச் சிரித்தாள். “அந்த வானதி அருள்மொழியைத்தானே மணந்தாள். அதேதான் இங்கும்” அருள்மொழிக்கு மிகவும் மகிழ்ச்சி. “நா சைவம். நீங்க?”

“நா அசைவம் ஆனா இப்ப சைவம். சரி நான் நேரடியாவே கேக்கறேன். நீங்க என் மேல இருக்கற அனுதாபத்துனால கல்யாணம் பண்ணிக்க நினைக்கறீங்கன்னா… யோசிங்க. ஏன்னா கொஞ்ச நாள்ல சலிப்பு வரலாம்”

“உண்மைய சொல்லறேன். முதல்ல அனுதாபம். இப்ப, உங்களைப் பிடிச்சு அது அன்பா மாறிடுச்சு. என்னை நம்பலாம்.”

அருள்மொழி பொங்கலுக்கு நாகர்கோவில் சென்றபோது வானதியையும் அழைத்துச் சென்று குடும்பத்தாரிடம் இருவரும் விரும்புவது பற்றியும், பொத்தாம் பொதுவாக அவள் ஆதரவற்ற பெண் என்று மட்டும் சொன்னான். அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டாலும், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  அருள்மொழி, வானதியை ஒரு கோயிலில் வைத்துக் கல்யாணம் செய்து, கோவை வேண்டாம் என நாகர்கோவிலில், தான் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராகச் சேர்ந்தான்.

வானதியும் ஒரு நிறுவனத்தில் ஸ்டெனோவாகச் சேர்ந்தாள். சுற்றிலும் மலைகளும், நீர்நிலைகளூம், வயல்களும் சூழ்ந்திருந்த பார்வதிபுரத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். அன்பான, மகிழ்வான வாழ்க்கையின் அர்த்தமாக ராஜேந்திரன் பிறந்தான். அடுத்த மூன்று வருடங்களில் பெண் குழந்தை நந்தினி. குழந்தைகளிடம் அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தவுடன் வானதியைப் பற்றி இருவருமே சொல்ல நினைத்திருந்தார்கள். நந்தினிக்குப் பருவ வயதில் மூளைக் காய்ச்சல் வந்து இறந்து போனாள். அதன் பின் ராஜேந்திரனிடம் சொன்னால் அவனுக்கு தன் பிறப்பில் ஒருவேளை சந்தேகம் வந்துவிடுமோ என்ற தயக்கத்தில் சொல்லாமல் விட்டனர். ராஜேந்திரன் தன்னுடன் பணி புரியும் ஆர்த்தியை விரும்பி, ஒன்றரை வருடங்களுக்கு முன் கைப்பிடிக்க நினைத்த போது அவர்களிடம் சொல்ல நினைத்திருந்த போது பிரச்சனைகள் முந்திக் கொண்டன. அதனால் ஏற்பட்ட வைராக்கியம்தான் அருள்மொழியின் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

ஆர்த்தியின் பெற்றோர் தங்கள் செல்லப் பெண்ணின் விருப்பத்தை ஏற்று அருள்மொழியைக் கண்டு சம்பந்தம் பேச வந்தார்கள். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், உள்ளிருந்து வந்த வானதியைக் கண்டதும் ஆர்த்தியின் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.

“என் வைஃப் வானதி” என்று வானதியை அறிமுகப்படுத்திய அருள்மொழி வானதியிடம், “வானதி இவங்க ஆர்த்தியோட பேரன்ட்ஸ். மோகன். ரிட்டையர்ட் போலீஸ் ஆஃபீஸர். மாலினி, காலேஜ் பிரின்ஸிபல்.” என்றார்.

“ஸாரி ஸார்! இந்தக் கல்யாணம் நடக்கறது கஷ்டம்.”

அருள்மொழி திகைத்தார். “என்ன ஸார் சொல்றீங்க? காரணம்?”

“உங்க வைஃப் வானதி.” என்று சொன்னவர் தன் மனைவியிடம் மிக மெதுவான குரலில் ஏதோ சொல்ல, அவள் முகமும் சற்றுச் சுருங்கியது.

“ராஜேந்திரன் உங்க மகனா” என்று நேரடியாகவே மாலினி கேட்கவும் அருள்மொழிக்குக் கோபம் வந்துவிட, வானதி அவரது கையைப் பிடித்து அடக்கினாள்.

“ராஜேந்திரன் எங்க ரெண்டுபேருக்கும் பிறந்த மகன்தான். என் கணவருக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியும். ராஜேந்திரன்கிட்ட என்னைப் பத்தி சொல்ல நினைத்து, சொல்லலை. ஆனா, ராஜேந்திரன் எப்ப ஆர்த்தியை விரும்பறதா சொன்னானோ அப்பவே அவங்க ரெண்டு பேரையும் நேர்ல பார்க்கும் போது எல்லாத்தையும் சொல்லணும்னு நாங்க நினைச்சுருந்தோம். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. நீங்கதான் ஆர்த்தியோட அப்பாவா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கலை.”

“கல்யாணத்துக்கு மும்பைல அப்ப என் கூட வேலை செஞ்ச போலீஸ் ஃப்ரென்ட்ஸ். வருவாங்க. அவங்க உங்க வைஃபை பார்த்தா பல கேள்விகள் வரும் ராஜேந்திரன் பற்றிய டவுட்ஸ் வரும்…ஸோ..”

“என்ன ஸார்! இது. வானதி மேல எந்தத் தப்பும் இல்லாதப்ப அதுவும் இத்தனை வருஷத்துக்கப்புறம் எதுக்கு, யாருக்குப் பயப்படணும்?”

“என் பையன் விரும்பற பொண்ணு பெரிய இடத்துப் பொண்ணு. அப்புறம் ஆர்த்திக்கு ஒரு தங்கை இருக்கா. ஸோ எனக்கு ஸ்டேட்டஸ் முக்கியம். இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கணும்னா உங்க வைஃப் கல்யாணத்துக்கு வரக் கூடாது. இல்லைனா அவங்க யார் கண்ணுலயும் படாம மறைவா இருக்கணும். அப்புறமும் நீங்க எங்க வீட்டுக்கோ, பொண்ணு வீட்டுக்கோ வரக் கூடாது. இந்தக் கண்டிஷனுக்கு ஓகேனா கல்யாணம் நடக்கும்.”

அருள்மொழி நிலைகுலைந்து போனார். வானதியோ டக்கென்று அழுத்தமாக, “ஓகே! என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும். வராது இது உறுதி. எங்களுக்குக் குழந்தைகள் வாழ்க்கைதான் முக்கியம். உங்க கண்டிஷனை ஏத்துக்கிட்ட மாதிரி, எங்களோடது கண்டிஷன் இல்ல ரிக்வெஸ்ட். தயவு செஞ்சு ராஜேந்திரன்கிட்ட என்னைப் பத்தியோ, உங்க கண்டிஷன் பத்தியோ எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்”

“வானதி! என்னம்மா இது? எப்படிம்மா நீ இல்லாம கல்யாணம்? அப்புறம் நாம நம்ம பிள்ளை வீட்டுக்கும் போகக் கூடாதுனு சொல்றாங்க. ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்மா”

“ஓகே நாங்க அப்ப கிளம்பறோம். நீங்க யோசிச்சுச் சொல்லுங்க” என்று அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், அருள்மொழி வானதியிடம் கோபமாக “எப்படி வானதி முடியும்? முகூர்த்தம், ரிசப்ஷன், குடும்ப ஃபோட்டோ, அப்புறம் அவங்களோடு போய் இருக்கணும் எல்லாத்துக்கும் நீ வேணும்னு ராஜேந்திரன் எதிர்பார்ப்பான்ல?” என்றவர் அதன் பின் பேசவே இல்லை.

“அருள் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நான் தைரியமா இதை எதிர்க்கொள்ள முடியும். நான் வருவேன், பார்ப்பேன். ஆனா என்னை வெளிப்படுத்திக்க மாட்டேன். நீங்க கொஞ்சம் எங்கூட ஒத்துழைச்சீங்கனா டாக்டரான உங்க பெஸ்ட் ஃப்ரென்டோட சப்போர்ட்ல ஒரே ஒரு நாள்தானே! ட்ராமா போட்டு ராஜேந்திரனை சமாளிச்சுரலாம். இப்ப இதெல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நம்ம பையன் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டான். அந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணிச்சு? அவ நம்ம பிள்ளைய விரும்பினது தப்பா? நிலைமை மீறிப் போச்சு. இப்ப பிள்ளைங்க வாழ்க்கைதான் முக்கியம்” என்று சொன்னாலும் அருள்மொழிக்கு வருத்தம் தணியவில்லை. 

“உன் முடிவு ரொம்ப வேதனையான முடிவு. எனக்குத் தாங்கும் சக்தி இல்லை. எனக்கு உடன்பாடில்லை” அவரது மனதில் வைராக்கியம் இறுகியது. வானதியின் உறுதி வென்றது. கல்யாணத்தை அவள் நினைத்த படியே சமாளித்து இந்த ஒன்றரை வருடமாக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லிச் சமாளித்துவிட்டார்கள்.

ராஜேந்திரனோ, தன் காதல் கல்யாணம் தன் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை அதை வெளிக்காட்டாமல் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்தான். இத்தனை நாள் இயல்பாக எடுத்துக் கொண்ட ராஜேந்திரன் இப்போது தங்களை அழைத்துச் செல்வதில் உறுதியாக இருக்கிறான் என்ற எண்ண அலைகளில் சிக்கியிருந்த அருள்மொழியை காலிங்க்பெல் இந்த நிமிடத்திற்குக் கொண்டுவந்தது. பக்கத்துவீட்டு நண்பர். ராஜேந்திரன் வந்திருப்பதை அறிந்து பார்க்க வந்திருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருக்க உள்ளே… 
 
“அத்தை, தன்வினை தன்னைச் சுடும்னு! ராஜா அடிக்கடி சொல்லுவார். சுட்டுருச்சு! என் தங்கையைக் காதலிச்ச பெரிய இடத்துப் பையன். அவளை மோசம் பண்ணிட்டு இப்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டேனுட்டான். அபார்ஷன் செஞ்சு பிரமை பிடிச்சு இருக்கா. அம்மா அப்பா, தாங்க செய்த தப்பை நினைச்சு ரொம்ப உடைஞ்சு போய் இருக்காங்க. நானும் அதுல ஒரு பார்ட் தானே. உணர்ந்துட்டோம். அவங்களும் நாளன்னிக்கு வந்து உங்க ரெண்டுபேர்ட்டயும் மன்னிப்புக் கேட்கறதா இருக்காங்க அத்தை.”

“அவங்க ராஜேந்திரன் முன்னாடி பேசினா பிரச்சனையாகிடுமே மா”

“அத்தை கவலைப் படாதீங்க. நான் ராஜேந்திரன வெளிய கூட்டிட்டுப் போய்டறேன். அம்மா அப்பா வரட்டும். அவங்க பேசட்டும். அப்படியாவது மாமா முடிவை மாத்திக்கிறாரான்னு பார்ப்போம் அத்தை…ராஜா உங்க ரெண்டு பேரையும் இங்கருந்து கூட்டிட்டுப் போகாம நகர மாட்டார்”

“ராஜேந்திரன் வந்துட்டான் போல குரல் கேக்குது கண்ணைத் துடைச்சுட்டு ஃப்ரெஷ் ஆகிடு. நாம இயல்பா இருப்போம்….எல்லாம் நல்லபடியா நடக்கும் ஆர்த்தி….”

இரு நாட்களில் ஆர்த்தியின் பெற்றோர் வந்தார்கள். தகுந்த நேரம் பார்த்து ஆர்த்தி ராஜேந்திரனை வீட்டு சாமான் வாங்க வேண்டும் என்று வெளியில் அழைத்துச் சென்றாள். அருள்மொழியிடமும், வானதியிடமும் மன்னிப்பு கேட்டு தங்கள் நிகழ்வு எப்படியான பாடத்தைப் புகட்டியது என்று சொல்லி தாங்கள் உணர்ந்ததையும் சொல்லி அழுதார்கள்.

அவர்கள் கல்யாணம் பேச வந்த போது வானதியைக் கண்டு ஷாக் ஆன ஆர்த்தியின் அப்பா, மும்பையில், வானதியிடம் தவறாக நடந்து கொண்டது தான் தான் என்பது வெளியில் வராமல் இருக்க கணக்குப் போட, வானதியோ தன்னிடம் தவறாக நடந்த அந்த போலீஸ்காரர் ஆர்த்தியின் அப்பாவாகிப் போனாரே என்று குடும்ப நன்மை கருதி தான் அவர்களுக்கு எந்தவகையிலும் பிரச்சனையாக இருக்கமாட்டேன் என்றது ஆர்த்தியின் அப்பாவிற்குப் புரிந்து சாதகமாகி இவளை விபச்சாரி என்று அவர் கண்டிஷன்ஸ் போட, அருளுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அதுமட்டும் ரகசியமாகவே அன்றும், இன்றும் அங்கு புதைந்து போனது.

அருள்மொழி அவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாலும், அவரது மனம் நடந்த நிகழ்வுகளின் வருத்தத்திலிருந்து எளிதாக மீளவில்லை.. தன் மனைவி அவமானப்பட்டதை  ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ராஜேந்திரன், ஆர்த்தி, வானதி இவர்களின் அன்பான வார்த்தைகள் அருள்மொழியின் வைராக்கியத்தை முறியடித்ததா? வாசகர்கள் உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

-------கீதா





திங்கள், 9 அக்டோபர், 2017

சனி, 23 செப்டம்பர், 2017

இனி அம்மாவுடன்......!

நகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்! வாழ்க்கையிலும் நாம் மேலே செல்லச் செல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களும், இருப்பவைகளும் இப்படித்தான் சிறியவைகளாக, அற்பமாகத் தெரியத் தொடங்கிவிடுகின்றதோ? விந்தையான மனம் கீழே மீண்டும் வேடிக்கை பார்த்தது.

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 11 - கா...கா...கா...என்னை கா 2

கொஞ்சம் காத்திருப்பீங்கதானே! அப்படினு சொல்லிருந்தேன்ல...அதுக்கு மிக்க நன்றி! என்னை பயமுறுத்தியவர் பூனையாராம்/பூஸாராம்!!! அவர் வேறு நான் இங்கிலீஷில் பேசுவதாகச் சொல்லியிருந்தார். ஆமாம்! நான் தமிழ்நாட்டுக் காக்கைக் குஞ்சு தமிழ்தான் பேசணும் இல்லையா. அதனால் தான் 'நன்றி' என்று சொல்லியிருக்கிறேன். 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 10 - கா....கா....கா என்னை கா! 1

"நான் வெளிய போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன். அது வரை நீ கூட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். நான் வந்த பிறகு என் முன்னால் பறக்க முயற்சி செய்தா போதும். தாந்தோன்றித்தனமா பறக்க முயற்சி செய்யாதே” னு அம்மா சொல்லிட்டுத்தான் போனாங்க. நான் கேட்டால்தானே! அதான் நான் பறக்க முயற்சி செய்து இதோ கீழே விழுந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அண்ணன் எங்கு போனானோ அவனையும் காணவில்லை. சரி அதோ ஏதோ தரை தெரிகிறதே! அங்கு போய் பார்ப்போம்னு கொஞ்சம் பறக்க முயற்சி செய்து தத்தி நடக்கத் தொடங்கின்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அமெரிக்காவில் சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்வதால், “த க்ரேட் அமெரிக்கன் கிரகணம்” என்று வரலாற்றுப் பதிவாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். 

நேற்று என் மகனுடன் பேசிய போது அவன் பேச்சில் துள்ளல், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஆர்வம், உற்சாகம் என்று பல கலவையான உணர்வுகள். சிறு வயது முதல், இப்படி அவன் பேசும் நேரத்தில் ‘ம்மா, ம்மா, ம்மா’ என்று பேச்சின் இடையே நொடிக்கொரு முறை சொல்லுவது வழக்கம். இப்போது அதன் டோன் சற்று வேறு அவ்வளவே! இந்த ‘ம்மா ம்மா’ என்று அவன் பேசியதும் சிறு வயதில் அவன் உற்சாகமாக என்னுடன் பகிர்பவை எல்லாம் நினைவுக்கு வந்தது என்றாலும் அவை மற்றொரு பதிவில்.

நேற்றைய “ம்மா ம்மா”! எல்லாம் சூரியகிரகணத்தின் தாக்கம்!!! அமெரிக்காவில் மகன் இருக்கும் மாநிலமான ஆரெகனில் தான் சூரிய கிரகணத்தின் தொடக்கம் அப்படியே அமெரிக்காவின் குறுக்காகச் சென்று கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் 3 மணிக்கு முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் நேரம் வித்தியாசப்படும்.

முழு கிரகணம் இரண்டு நிமிடம் என்றும் மொத்த நேரம் 2.30 மணி நேரம் என்றும் சொன்னான். 9.30 அளவில் தொடங்கி 12 அளவில் முடியும், அதாவது இவன் இருக்கும் மேற்குப் பகுதியில், 12 லிருந்து மூன்று மணி நேரம் கூட்டிக் கொண்டால் 3 மணிக்குக் கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் முடியும். இந்தக் கிரகணப் பாதையில் இருக்கும் இடங்களில் 50 கிமீ சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடங்களில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். வானம் மிகவும் தெளிவாக இருக்கும் என்றும் நன்றாகத் தெரிய வாய்ப்புண்டும் என்று சொல்லுவதாகச் சொன்னான். முழு கிரகணம் 10.16க்குத் தொடங்கி 2 நிமிடங்கள் நீடிக்கும் என்று கணித்திருப்பதாகச் சொன்னான்.

மகன் இருக்கும் கார்ன்வேலிஸிலும் முழு கிரகணம் தெரியும் என்றான். அதுவும் 50கிமீ சுற்றுவட்டாரம் மட்டும் தான் முழு கிரகணம் தெரியும். அதே போன்று கிரகணத்தின் பாதை தவிர பிற பகுதியில் எல்லாம் பகுதிதான் தெரியுமாம். இருந்தாலும் எல்லோருமே அதற்கான கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும் என்பதால் கல்லூரி கிளினிக்கில் அதற்கான கண்ணாடி எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். கிரகணப் பாதையில் ஒவ்வொரு இடத்திலும் காலநிலை வித்தியாசப்படுமாம்.

கிரகணத்தின் போது புதன், வெள்ளி, செவ்வாய், மற்றும் ஜுபிட்டர் கோள்களைப் பார்க்க முடியும் என்றும் அதை எப்படி அடையாளம் காணலாம் என்றும் படங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். இதற்காகப் பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் இப்பகுதியில் அதாவது முழுமையாகத் தெரியும் பகுதியில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் போக்குவரத்து முதல், கார் நிறுத்தும் இடம் எல்லாம் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு, எல்லாம் ஒழுங்கு முறையாக நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதாம். 

வழக்கமாக அவன் காலை 6.30 மணிக்குள் கிளம்பிவிடுவான். இன்று 8 மணிக்கு கிளினிக்கில் இருந்தால் போதும் என்றும் 12 மணி வரை எந்த நாலுகால் நோயளிகளும் வர மாட்டார்களாம். இந்தக் கிரகணத்தின் போது சூரிய ஒளி மங்கி மாலை மயங்கும் நேரம் போன்றும் முழு கிரகணத்தின் போது இரவு போன்றும் ஆகிவிடுவதால் அந்த நேரத்தில் விலங்குகளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொன்னான். வீட்டில் வளர்க்கப்படும் செல்லங்களை விட இரவு நேரத்தில் சுறு சுறுப்பாக இருப்பவை, வந்த சூரியன் திடீரென்று எங்கு காணாமல் போனான் என்று குழம்புமாம். கிரகணத்தின் போது வழக்கமான வெயில் அளவிலிருந்து 10 டிகிரி குறையுமாம்.

அவர்களுக்குக் கல்லூரியில், கிளினிக்கில் எல்லாம் அரை மணி நேரம் அவர்கள் வகுப்பிலிருந்தும் ட்யூட்டியிலிருந்தும் வெளியில் வந்து பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்ததால் மகனும் மிகவும் ஆர்வமாக இருந்தான், எனக்குப் படம் அனுப்புவதாகவும் சொன்னான். இது அவன் அவனது இரவு நேரம் 11 மணிக்கு அதாவது நமது காலை நேரம் 11.30 க்குச் சொன்னவை. கிரகணத்திற்கு முன்.  இனி கிரகணத்திற்குப் பின்..

இதோ இப்போது முழு கிரகணத்தின் படம் அனுப்பியுள்ளான்.


கூடவே வாட்சப் மெசேஜும்…”ம்மா சூரியன் உலகிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிந்தது. கிரகணம் தொடங்கியதுமே கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் டிகிரி குறையத் தொடங்கியது. முழு கிரகணத்தின் போது சடாரென்று செம குளு குளு என்று இருந்தது. இரண்டு நிமிடத்திற்கே இப்படி என்றால், சூரியன் ஒரு சில மணி நேரம் முழுவதும் மறைக்கப்பட்டு சூரிய ஒளியே உலகிற்கு இல்லை என்றால் பூமியே உறைந்துவிடும் இல்லையா. ‘ம்மா’ நல்ல அனுபவம் ‘ம்மா"

நமது காலை 11.30 மணி அளவில் அதாவது அவனது இரவு 11 மணி அளவில் - பெரும்பாலும் இந்த நேரம் தான் ரூமிற்கு வருகிறான் - பேசினால் ஏதேனும் சுவாரஸ்யமான தகவல் கிடைக்கும் என்பது உறுதி. 

-----கீதா

சனி, 19 ஆகஸ்ட், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 9

இன்று மாலை நான் கோடம்பாக்கத்திலிருந்து தரமணிக்குப் பேருந்தில் ஏறுவதற்குக் காத்திருந்த சமயத்தில்தான் இன்று உலகப் புகைப்பட தினம் என்று அறிய நேர்ந்தது. வீட்டுக்குச் சென்று இன்று புகைப்படங்களைப் பகிரலாம் என்று நினைத்த சமயம், அழகான படங்கள் பகிரும் வெங்கட்ஜி, தோழி கீதாமதிவாணன், அனு, கோமதியக்கா, எங்கள்ப்ளாக் எல்லோரும் நினைவுக்கு வர, வெங்கட்ஜியின் பதிவு ஏன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே அலைபேசியில் மெயில் பார்த்தால் வெங்கட்ஜியின் புகைப்படப் பதிவு! மிக மிக அழகான படங்கள். வெங்கட்ஜி மற்றும் தோழி கீதாமதிவாணன் அவர்களின் படங்கள் போல் இருக்காது என்றாலும் எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் இன்றைய தினத்தில் இங்குப் பகிர்கின்றேன்.  


இந்த இரு படங்களும் என்ன படங்கள் என்று சொல்ல முடிகிறதா ஊகித்துப் பாருங்களேன். பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


நடைப்பயிற்சி செல்லும் போது என் செல்லம் கண்ணழகியைப் பார்த்துக் குரைக்கத் தயராக இருக்கும் செல்லம்


மரத்தின் அடியில்தான் வேர் இருக்கும்...இங்கு பாருங்கள் மரத்தின் நடுவில் கோயிலின் கூரையில் வேர் விட்டு மரமாகப் பார்க்கவே வியப்பாக இருந்ததால் உடனே க்ளிக்கினேன்!
இவ்விரண்டு படங்களிலும் இருக்கும் பூச்சியும் ஒன்றே! முதலில் உள்ள படம் தானாகவே  ஃப்ளாஷ் இயங்கி எடுத்தது. இரண்டாவது படம் நான் ஃப்ளாஷ் பட்டனை எழும்பவிடாமல் அழுத்திக் கொண்டு ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்த படம். 

எருக்கம்பூவில் வண்டு


  
இந்தக் காளானைப் பாருங்கள்! அடுக்கடுக்காகப் பூ போன்று!! என் மாமியார் வீட்டுத் தோட்டத்தில்..



வித்தியாசமான உருண்டை வடிவில் பூ தானே இது? இல்லை காயா?  முதன்முறையாகப் பார்க்கிறேன். ! தொட்டுப்பார்க்க முடியவில்லை. மரத்தில் உயரத்தில் இருந்தது.  ஜூம் பண்ணி எடுத்தேன். இது என்ன என்று அறிந்தவர்கள் சொல்லலாம்!




தாமதமாகிவிட்டதால், எல்லாவற்றிற்கும் வழக்கம் போல் கருத்துகள் எழுத நேரம் இல்லை....

------கீதா

புதன், 9 ஆகஸ்ட், 2017

அவள் ஒரு சாகஸ நாயகி!

அவளுக்கு, அவளை ரசித்து, ரஸனையான மெஸேஜுகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். வாட்ஸப்போ? இருக்கலாம். அவளுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாம். என்னிடம் சொன்னாள். அவள் ஃபோட்டோ கூட எங்கும் வந்ததில்லையே என்று எனக்குத் தோன்றியது.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும், மலர்களும் பேசினால்


அந்நியன் மரம்!!!???.... மூட மாந்தர்களே! எங்களையா வெட்டி வீழ்த்துகிறீர்கள்! உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக! ஹஹஹ!

மலர்ந்துவிட்டேன் நான்!
காத்திருக்கிறேன் 
என் தேனினைப் பருக வரும்
என் காதலன் வண்டிற்காக!
சூரியன் வந்துவிட்டான்!
காதலனே! எங்கே சென்றாய்?
என் தேனும் வற்றுகிறதே! 
 
காத்திருந்துக் காத்திருந்து 
பொழுதே சாய்ந்திட்டது
என் காதலனைக் காணாது
என் மகரந்தமும் சோர்ந்துவிட்டது!
 
நாங்கள் இயற்கையில் அமைந்த பௌ (Bow) பட்டன்கள்! எவ்வளவு அழகாய் இருக்கிறோம் இல்லையா!!
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறோம்
வாழ்வதே ஒரு நாள்!
இடையில் எங்களை 
ஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்!
நீங்கள் கட்டடங்களாகக் கட்டிக் கொண்டே போனால் நாங்கள் வளர்ந்து மலர்வதற்கு இடமே இல்லாமல் போகுமே! நீங்கள் வாழ்வதற்கு நாங்களும் மிகவும் முக்கியம் மக்களே! 
நாங்கள் மலர்வதே 
உங்களை மகிழ்விக்கத்தான்! 
உங்கள் மரணத்தில் நாங்கள் மிதிபட்டு 
மரணமடைகிறோம்!
உங்கள் திருமணத்திலும் நாங்கள் மிதிபட்டு
மரணமடைகிறோம்! 
முரண்!
 
பூப்போன்ற பூவையர் 
என்று  உவமையுடன் 
சொல்லும்  நீங்கள்
பூவாகிய எங்களைப் பிய்த்து மிதிப்பதேனோ?
பூப்போன்ற பூவையரை
 மிதித்துத் துன்புறுத்தாதீர்
என்று குரல் கொடுக்கும் நீங்கள்
இளம் பூவையர் எங்களையும்
காப்பதற்குக் குரல் கொடுங்களேன்!
பூப்போன்ற மனம்
என்று சொல்லிவிட்டு
வேதனையுறும் வார்த்தைகளை
உதிர்க்கலாமோ?
எங்களயும்தான்!
நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!

நாங்கள் வீழ நினைப்பதும் நாங்கள் பிறந்த நிலத்தில் தான் குப்பைத் தொட்டியிலல்ல…வீழ்ந்தாலும் உரமாவோம்!

உங்கள் வீடு வண்மா வேண்டுமா?! எங்களைத்தான் நாடுவார்கள் வண்ணத்துப் பூச்சிகள்! நீங்கள் அலங்காரமாக வைக்கும் ப்ளாஸ்டிக் பூக்களை அல்ல! எங்களைப் போற்றுங்கள்! உங்கள் வீட்டினை நாங்கள் அலங்கரிக்கிறோம்! 
வண்ணத்துப் பூச்சிகளுடன், புள்ளினங்களுடன்!

 நாங்கள் மிகவும் பொறுமைசாலிகள்! சரிதானே!!?

எங்களை உற்று நோக்குங்கள்! உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம்! புன்சிரிப்பாய்!!! புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா!!!

நான் பாடும் மௌன ராகம் கேட்கிறதா!!

யப்பா! என்ன வெயில்! நீங்களெல்லாம் வெயிலுக்கு ஒதுங்கிடறீங்க! எங்களையும் கொஞ்சம் நிழல்ல வையுங்கப்பா! கருத்துப் போயிடுவோம்ல!  

இயற்கை அன்னை மௌனமாக இசைத்திடும் இசையாய் நாங்கள்!

இயற்கை அன்னை எங்கள் வழியாய் புன்சிரிப்பை உதிர்க்கிறாள்! உங்களுக்கும் அது பரவட்டும்! 
நாங்கள் ஒவ்வொருவரும் மலர்கிறோம்! அருகருகே இருக்கும் எங்களுக்குள் போட்டியில்லை…பொறாமையில்லை! 

 எங்கள் இதழ்களைப் பிரிக்காமல் அழகை ரசியுங்கள்!




வண்ண வண்ண இலைகள் வடிவில் பூக்களாய்
நாங்களும் அழகுதான் இல்லையா!

எனக்குக் கவிதை எழுதத் தெரியாது! எனவே பூக்கள் பேசுவது போல என் மனதில் தோன்றிய எண்ணங்களே இங்கு! ஆயின், அருமையாகக் கவிதை எழுதுபவர்களும் நம் வலை உறவுகளில் இருக்கிறார்கள். பெண் பூக்கள் - நம் தோழி/சகோதரி தேனம்மை அவர்கள் எழுதிய இப்புத்தகத்தில் பூக்களின் உணர்வுகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். புத்தக விமர்சனத்தை இங்கு 1, (எங்கள் ப்ளாக்) 2. (வை கோ சார் ப்ளாக்) காணலாம். 
வித விதமான பூக்களை மிக மிக அழகாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்படி மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் படம் பிடித்துத் தனது தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கீதா மதிவாணன் அவர்கள் தற்போது பூக்களைப் பற்றி விவரமான தகவல்களுடன் எழுதத் தொடங்கியுள்ளார். 

-----கீதா