இந்தப் பதிவு பிறக்கக் காரணமான, தற்கொலை
செய்து கொண்டு இம்மண்ணை விட்டுப் பிரிந்து காற்றோடு காற்றாகக் கலந்த அந்த இளம்
பெண்ணிற்கு எனது இரங்கல்கள். இந்தப் பதிவு ஆலோசனைகளோ, அறிவுரைகளோ வழங்கும் பதிவு
அல்ல.
எனது அனுபவங்களினாலும், உளவியல்
பார்வையினாலும் எனது இந்தச் சிறிய தலைமைச் செயலகத்தில் பதிந்த சில கேள்விகளால்
உருவான எனது எண்ணம்: எல்லாவற்றிற்கும் காரணம் நம் தலைமைச் செயலகம்தான் என்பதைச்
சொன்னால், இதை வாசிக்க நேரும் அறிவியலாளர்கள், இந்தச் செயலகத்தின் வேலைப்பாடுகள் சீரிய
நிலையில் நடக்க ஏதேனும் வழிமுறைகள் உண்டெனில், உரைத்தால், அந்தக் குறிப்புகள்,
குறிப்பாக இளையவர்களுக்கு, தற்கொலை எண்ணம் எப்பொழுதாவது மனதில் எட்டிப் பார்த்துச்
சென்று சலனத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களுக்கு அந்தக் குறிப்புகள் உதவியாக இருக்குமே
என்ற ஒரு நல்ல எண்ணத்தில்தான்.
எனது மகன் வட அமெரிக்க கால்நடை மருத்துவ உரிமம்
பெறுவதற்காக, கானடா சென்றிருந்த போது மகனின் இடத்தில் மருத்துவப் பணிக்குச்
சேர்ந்தவள் அந்த இளம் பெண். ஆர்வமுடன் தான் அவள் சேர்ந்திருந்திருக்கின்றாள்.
கால்நடை மருத்துவத்தை மிகவும் நேர்மையாக, ஆத்மார்த்தமாகச்
செய்யும் அந்த இரு கால்நடை மருத்துவகங்களும் ஏறக்குறைய வெளிநாட்டு கால்நடை
மருத்துவகங்களுக்கு நிகரான சிகிச்சை அளித்து வருவதால், நாலுகால் செல்லங்களின் வரவும்,
அறுவை சிகிச்சைகளும் சற்று அதிகம். மருத்துவகத்தில் வேலை சற்றுக் கூடுதல்தான். இரு
முதன்மை மருத்துவர்களும் இந்த மருத்துவகங்களை இந்த அளவிற்குக் கொண்டு வர, ஆரம்பக்
காலகட்டத்தில் உறக்கம் தொலைத்து உழைத்தவர்கள்.
மகன் செய்துவந்த பணியை அப்பெண் செய்து
வந்திருந்திருக்கின்றாள். இரவு நேரப் பணிகளும், அறுவை சிகிச்சைகளும், போதிய தூக்கமின்மையும். ஆனால், ஒரு நல்ல மருத்துவராக உருவாக வேண்டும்
என்ற குறிக்கோள் இருந்தால், ஆரம்ப நிலையில், இது போன்றச் சூழ்நிலைகளைத் தவிர்க்க இயலாது.
ஆனால், நம் ஊரில், பெண் கால்நடை மருத்துவர்கள் – க்ளினிஷியன்ஸ்- குறிப்பாக அறுவை சிகிச்சை
செய்யும் பெண் கால்நடைமருத்துவர்கள் மிக மிக மிகக் குறைவு.
மீண்டும் மகன் இங்கு வந்து அதே
கிளினிக்கில் சேர்ந்ததும், முதன்மை மருத்துவர் என் மகனிடம் அவள் கொஞ்சம்
கஷ்டப்படுவதாகவும், அவளை வழிநடத்தவும் சொல்லியிருக்கிறார்.
மகன், ஒரு நாள் அப்பெண்ணை எனக்கு
அறிமுகப்படுத்தினான். நல்ல உயரமாக, மெலிந்து பார்ப்பதற்குச் சக்தியற்றவளாக
இருந்தாலும், அவள் உடலை விட, அவளது கண்கள் ஏதோ ஒரு வருத்தத்தையும், சோர்வையும்
வெளிப்படுத்தியது தெரிந்தது. சில சமயங்களில் இரவுப் பணி, பகல் நேரப் பணி என்று
தொடரும் என்பதினால் இருக்கலாம் என்று நினைத்தேன். நான் மகனிடம் கேட்டதற்கு அவன்
சொன்ன பதில் இதுதான். “அவள் சற்றே கஷ்டப்படுகின்றாள்”. அவளை நான் பலமுறை சந்தித்திருந்தும்,
அவளைப் பற்றிய பேச்சுகள் எங்களிடையே எழுந்ததில்லை.
மகனுக்கு நார்த் கரோலினா பல்கலைக்கழக
கால்நடை கல்லூரியில் எக்ஸ்டேர்ன்ஷிப் கிடைக்கவே அவன் சென்ற வெள்ளியன்று
புறப்பட்டான். செவ்வாயன்று, நமது நேரம் மாலை 4.00 மணி அளவில், மகன் கல்லூரிக்குப்
புறப்படும் முன் என்னை ஸ்கைப்பில் அழைத்து, “அந்தப் பெண் தற்கொலைசெய்து
கொண்டுவிட்டாள்” என சொல்லவும் அதிர்ச்சியடைந்தேன்.
மகனுக்கு அமெரிக்க திங்கள் இரவு அதாவது, நமக்கு,
செவ்வாயன்று காலை மின் அஞ்சல் கொடுத்திருக்கின்றாள் “ஆல் தெ பெஸ்ட்” சொல்லி. மகன் அவர்கள்
நேரப்படி செவ்வாய் அதிகாலை அவள் அஞ்சல் பார்த்து பதில் கொடுக்கும் முன் இந்தச் செய்தி உதவியாளரிடமிருந்து
வந்திருக்கின்றது.
“இது ஒரு ஸ்டுப்பிட் டெசிஷன். எனக்கு ஒரு
பக்கம் வருத்தம் இருந்தாலும் செம கோபம்தான்.
ம்ம்ம்ம்... எனிவே த ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி டாமினேட்ஸ் எவ்ரிதிங்க். நோ
சொல்யூஷன்ஸ். கான்ட் ஸே எநிதிங்க் மோர்” -
மகன்
உதவியாளரிடமிருந்து நான் அறிந்தது: அவள்
செவ்வாய் காலை வழக்கம் போல் மருத்துவகத்திற்கு வந்து வேலைகளைக் கவனித்து, இரண்டு
மணி நேரம் கணினி முன் அமர்ந்து ஏதோ வேலை செய்துவிட்டு, 11 மணியளவில் வீட்டிற்குச்
சென்று உடன் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றவள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தற்கொலை
செய்து கொண்டுவிட்டாள் என்ற செய்தி அவளது பெற்றோரிடமிருந்து உதவியாளருக்கு
வந்திருக்கின்றது. அதுவும் மருத்துவகத்திலிருந்து மயக்க மருந்து எடுத்துச் சென்று
அதைத் தனக்கே செலுத்திக் கொண்டு....
அப்படி என்றால் அந்த இரண்டு மணி நேரம் அவள்
கணினியில் என்ன செய்தாள் என்பது, அவள் அந்தக் கணினியின் ஹிஸ்டரியை அழிக்காமல்
இருந்திருந்தாள் என்றால், அதைப் பார்த்தால் தெரிந்து விடலாம். அந்தச்
சமயத்தில்தான் அவள் மகனுக்கு அஞ்சல் கொடுத்திருந்திருக்க வேண்டும். ஒருவேளை தற்கொலை
செய்து கொள்ள முடிவு செய்து மயக்க மருந்து, அதன் அளவு பற்றித் தேடியிருக்கலாமோ
என்றும் தோன்றியது.
என் மகனிடம் இருந்தும், புதன் அன்று அவளது
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது அவளது தந்தையிடம் இருந்தும் நான் அறிந்தது:
ஒரே மகள் பெற்றோருக்கு. பெற்றோர் அவளுக்கு
மிகுந்த ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். ஆனால், அவள் சொல்லிவந்தது தான்
தகுதியற்றவள். தனக்கு எதையுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னால் எதையுமே நன்றாக,
சரியாகச் செய்ய முடியவில்லை என்று. ஒரே குழந்தை என்றால், உடன் பிறந்தோர் இல்லாததால்,
நட்புகள் இல்லை என்றால் மன அழுத்தத்திற்கு/சிதைவுக்கு ஆளாகும் என்பதெல்லாம் சொல்லப்பட்டாலும்,
விவாதத்திற்குரியதே.
அவள் மன அழுத்தத்தில் இருந்திருக்கின்றாள்.
முதன்மை மருத்துவரும், மகனும் அவளிடம் ஆறுதலாகவும், ஊக்குவிக்கும் வகையிலும்
பேசியிருந்திருக்கின்றார்கள். முதன்மை மருத்துவர் அவளைச் சிறப்புப்
பயிற்ச்சிக்கும் அனுப்பியிருந்திருக்கின்றார். அவளைச் சில காலம் ஓய்வு எடுத்துக்
கொள்ளுமாறும் சொல்லியிருந்திருக்கின்றார்கள்.
என் மகனும் அவளுக்குத்ட் தொடர்ந்து ஆலோசனைகள் கொடுத்து, அவளை ஊக்குவித்து, அவளைச்
சுய பரிசோதனை செய்துபார்த்துக் கொள்ளவும் சொல்லியிருந்திருக்கின்றான். அதாவது, அவளது
திறமைகளை அவளே கண்டறிந்து – மெடிசினா, அறுவைசிகிச்சையா - எது நன்றாக வருகின்றது,
எது அவளுக்கு ஏதுவாக இருக்கின்றது என்பதை அறிந்து, அதை மேம்படுத்திக் கொள்ளுமாறு.
முதன்மை மருத்துவரும் அவளை இந்த மருத்துவக
வேலை கடினமாக இருந்தால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாத வேறு மருத்துவகத்தில், மருத்துவராகவும்
வேலை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆனால், அப்பெண்ணோ இந்த வேலைதான் பிடித்திருக்கின்றது என்றும்
சொல்லியிருக்கின்றாள். மருத்துவருக்கு அவளை வேலையை விட்டு நீக்கவும் தயக்கம்.
ஒருவேளை அதுவே அவளுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, மன அழுத்தம்
விளைவித்துவிடுமோ என்று.
பிடித்துச் செய்யும் வேலையென்றாலும் அவளது
மன அழுத்தத்தை அவளால் சரியாக நிர்வகிக்க முடியாததால், அவள் மீண்டும் மீண்டும் தான்
தகுதியற்றவள் என்று சொல்லி வந்ததால், அவளை நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனையைப்
பெறச் சொல்லியிருந்திருக்கின்றார் முதன்மை மருத்துவர். அவளும் ஒரு சில மாதங்களாக மனஅழுத்தத்திற்கான
மருந்தும், மனநல ஆலோசகரிடம் ஆலோசனைகளும் எடுத்துக் கொண்டிருந்திருக்கின்றாள்.
என் மகன் அவளுக்கு மிகவும் ஆறுதலாகவும்,
ஆதரவாகவும், நல்ல வழிகாட்டியாகவும், இருந்து வந்ததாக அவளது தந்தை பாராட்டிச் சொன்னார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் கோர்வையாக்கி காட்சிகள்
மனத்திரையில் விரிந்த போதுதான் எனக்குப் பளிச்சிட்டது. 9 ஆம் தேதி அதிகாலை மகன்
புறப்படல். அதன் பின் முதன்மை
மருத்துவரும் அவரது தாயின் உடல்நிலை சரியில்லாததால் வெளியூர் பயணம். மருத்துவகம்
அவளது பொறுப்பில். உதவியாளர் இருந்தாலும் அவளால் ஈடுகொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டிருக்க
வேண்டும். தனிமை. மன அழுத்தம் கூடியிருந்திருக்கலாம். அதனால்தான் இந்த முடிவோ
என்றும் தோன்றியது.
அவளாள் மருத்துவகத்தின் பரபரப்பிற்கு
ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை விட அவளுக்குள் ஏற்பட்ட அந்தத்
தாழ்வுமனப்பான்மைதான் அவளை இந்த முடிவிற்குத் தள்ளியிருக்க வேண்டும் என்பது எனது
கணிப்பு.
இறுதிச்
சடங்கில் கலந்து கொண்டுவிட்டு வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது, மன அழுத்தம்,
தற்கொலை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து கணினியின்
முன் அமர்ந்தால், சீனுவின் ஒரு பதிவு http://www.seenuguru.com/2015/10/ITmentalcare.html வாசித்தால் “அட! கிட்டத்தட்ட நாம் தொட நினைக்கும்
சப்ஜெக்ட்”!
தற்கொலைக்குக்
காரணங்கள் என்று சூழ்நிலைகள் பல சொல்லப்பட்டாலும், அடித்தளம் தலைமைச் செயலகத்தில் நடக்கும் ரசாயனமாற்றங்களினால் நிகழும் மன அழுத்தம் தான். ஆனால்,
மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று
சொல்ல முடியாது. நேர்மறை எண்ணங்கள் இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை. அதுவே
எதிர்மறை எண்ணங்களானால் பிரச்சினையே. இங்குதான் நான் மூளையைப் பற்றி என் சிற்றறிவிற்கு
எட்டியதைச் சொல்ல விழைகின்றேன்.
வருமுன்
காப்போம் என்று ஒரு சில நோய்களுக்கு கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள், தீர்வுகள்
சொல்லப்படுவது போல், மன அழுத்தம் வராமல் இருக்க பல வழிமுறைகள், தீர்வுகள் சொல்லப்படுகின்றனதான்.
சரியா என்று கேட்டால் ஆம் என்று பலர் சொல்லுவர் ஆனால் என் மூளை இல்லை என்று தான் சொல்லுகின்றது.
நம்
உடல் முழுவதையும் தன் கீழ் வைத்திருப்பது தனிக்காட்டு ராஜா நம் தலைமைச் செயலகம். “மனம்”
என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு, நாம் சொல்லுவது மனம் நம் கீழ் என்று. ஆனால்
அந்த மனமே அந்த மூளைதானே!
ஒரு புதிரை விடுவிக்க மூளை இருக்கின்றதா
என்று கேட்கும் நமது மூளையே ஒரு புதிர்தான். மூளையின் அமைப்பில் பல முடிச்சுகள்
இருக்கின்றனவோ இல்லையோ ஆனால் மூளையைப் பற்றிய அந்த முடிச்சுகளை இன்னும் எந்த
அறிவியலாளரும் முழுமையாக அவிழ்க்கவில்லை. அவிழ்க்கவும் இயலவில்லை என்பதுதான்
உண்மை.
மனிதனின்
ரகசியங்களைச் சேமித்து வைக்கும் அந்தப் பெட்டகத்தின் ரகசியங்களை இன்னும்
அம்பலப்படுத்த முடியவில்லை. ஆழ் மனம், மனம் கடலைப் போன்றது, மனதைப் புரிந்து கொள்ள
முடிவதில்லை என்று சொல்லுவதை விட அந்த மனதை உள்ளடக்கிய மூளையைப் புரிந்து கொள்ள
முடியவில்லை என்று சொல்லுவதுதான் சரி எனப்படுகின்றது.
மனம்
என்பதும் மூளையின் ஒரு பகுதியாக இருப்பதால்தான் தற்கொலைக்குக் காரணம் நம் மனது
என்று நாம் சொல்லுவதைத்தான் அறிவியலாளர்கள், மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள்
என்கின்றனர். மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்று நாம் சொல்லுவது, அந்த மனமும்
மூளைதானே என்று பார்க்கும் போது நம் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள்தான் என்பதுதான்
சரி. இந்த மாற்றம் எப்போது, எப்படி நிகழும் என்பது யாருக்கும் புரியாத புதிர்!
பொதுவாக,
மன அழுத்தம் என்றவுடன், மனதை அலட்டிக் கொள்ளக் கூடாது. ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். நண்பர்கள்
வேண்டும். விளையாட்டு நல்லது. பிடித்த வேலை செய்தல். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா,
தியானம், மனவளப்பயிற்சி என்று ஒரு பெரிய பட்டியலே இடப்படும். ஆனால், இந்தப் பட்டியலை
நிறைவேற்றவும் அந்த மூளை ஒத்துழைக்க வேண்டுமே! சொல்வது எளிது! அந்த மூளைதானே இவை நடக்கவும் காரணம்! இப்படி இருப்பவர்களும் தற்கொலை செய்து
கொள்கின்றார்களே!
சிறிய
வயதிலிருந்தே நல்ல சூழ்நிலை, நல்ல வளர்ப்பு முறை, வாழ்க்கையைப் பற்றி, உலகைப்
பற்றிய புரிதல் என்று குழந்தைகள் வளர்க்கப்பட்டால் அவர்கள் மனச் சிதைவுக்கு உள்ளாகமாட்டார்கள்
என்று சொல்லுவதும் ஓரளவுதான் சரி. இதுவும் ஆய்விற்குரியதே.
அதே போன்று, புறச் சூழல்கள்தான் ஒருவரது மன
நிலை பிறழக் காரணம் என்று சொல்லுவதும் முழுவதும் சரியல்ல. எல்லாமே நம் தலைமைச் செயலகம் எப்படிப் பணி
புரிகின்றதோ அதன் அடிப்படையில்தான்.
நான் சந்தித்த பல மன நோயாளிகளிடம் இருந்து
நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான்
நினைப்பதாகவும் ஆனால், பல சமயங்களில் அது முடிவதில்லை, ஏதோ தடுக்கின்றது என்று.
தன்
உடலில் தானே மயக்க மருந்தைச் செலுத்தி தற்கொலை செய்யத் துணிச்சல் இருந்திருக்கிறது
என்றால், அந்தப் பெண்ணிற்குத் தனது இயலாமையை வென்று, வாழ்க்கையை எதிர்கொண்டு
வாழும் துணிச்சல் ஏன் இல்லாமல் போனது என்பது வேதனை. ஆச்சரியம். இது எல்லா வகைத்
தற்கொலையாளர்களுக்கும் பொருந்தும்.
இங்குதான் நான் அறிந்ததிலிருந்து சொல்ல
வருவது, சில சமயங்களில் மூளையின் ரசாயன மாற்றம், அதன் ஒரு பகுதியாகிய மனம் என்று
சொல்லப்படும் பகுதியைப் புறம் தள்ளி விஞ்சி விடுகின்றது, மருந்துகள் உட்கொண்டாலும்
சரி, கவுன்சலிங்க் பெற்றாலும் சரி, இல்லை வேறு சில மனப் பயிற்சிகள், நேர்மறை
எண்ணங்கள் பயிற்சி செய்தாலும் சரி.
இந்த
உலகில் பிறந்த எல்லோருமே மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள்தான். மனநோயாளிகள்தான்.
ஆனால், மூளையில் ஏற்படும் ரசாயன நிகழ்வுகளின் தாக்கத்திலும், தாக்கத்தின்
விகுதியிலும் தான் நார்மல் மனிதர்கள், மன நோயாளிகள் என்ற பிரிவு உண்டாகின்றது. நார்மலாக
இன்று இருப்பவர்கள் நாளை மனஅழுத்தத்திற்கு உண்டாகலாம்.
மன அழுத்தம் ஏற்படலாம். அது இயல்பானதே. ஆனால் அது நம் நடைமுறை, யதார்த்த வாழ்க்கையைப் பாதிக்கும் நிலைக்கு உந்தப்பட்டால், ஏதேனும் உங்களுக்கு ஏதுவான வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் தலைமைச் செயலகத்தை
வெற்றி கொள்ள முனையுங்கள். முடியவில்லை என்றால், உடன் ஒரு நல்ல மனநல மருத்துவரை
அணுகிவிடுங்கள்! அது ஒன்றும் தாழ்வில்லை.
நார்மலாக இருப்பவர்களுக்கும், மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு ஏதேனும் ஒரு வகை
சிகிச்சை எடுத்துக் கொண்டு நார்மல் வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், அவர்களது மனம்
எனும், தலைமைச் செயலகத்தின் துறை நேர்மறையாக ஆட்சி புரிந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளே!
தலைமைச் செயலகத்தின் மனம் எனும் துறை வீழ்ந்துவிட்டால், தலைமைச் செயலகம்
கோரத்தாண்டவம் ஆடிவிடும். சீனு சொல்லியிருப்பது போல், இன்றைய நிலைமை, தலமைச்
செயலகத்தின் நலம் கவனிக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உறுதியாக,
அறுதியிட்டுச் சொல்கின்றது.
(பின் குறிப்பு: இங்கு மன அழுத்தம் என்பது
பற்றி மட்டுமே அதுவும் பொதுவாகத்தான் சொல்லியிருக்கின்றேன். இதில் பல வகைகள்
உண்டு. மாபெரும்கடல். அதில் நான் நிபுணரும் அல்ல என்பதால் அதைப்பற்றி எல்லாம்
பேசவில்லை.)
(ஸ்பா....ரொம்ப சீரியசான பதிவோ...சரி
மதுரைத் தமிழா கொஞ்சம் கலகலக்க
வைச்சு எங்களை ரிலாக்ஸ் ப்ளீஸ்...)
படங்கள்: நன்றி இணையம்.
தலைப்பிற்கு சுஜாதா மன்னிப்பாராக! சுஜாதா அவர்களுக்கு நன்றிகள் பல மானசீக அஞ்சலில் விண்ணிற்கு அனுப்பிவிட்டேன்.
-கீதா