விண்ணிலிருந்து
30 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகில் வீழ்ந்த ஒரு நட்சத்திரம்! அது வீழ்ந்த இடம் தேவகோட்டை!
30 வயதானாலும் குழந்தை! ஆனால் நினைவாற்றல் மிக்க குழந்தை. ஊராருக்குச் செல்லக் குழந்தை.
இந்த வயதிலும் தனது பெரிய வீட்டிலே உருண்டு, விளையாடி, வளர்ந்த குழந்தை. அப்பெரிய வீட்டில்
தனக்கென ஒரு உலகில் வாழ்ந்த குழந்தை. அவ்வீடுதான் அவள் உலகம்! தன் மனதிற்கினிய சகோதரரின்
அன்பினில் வளர்ந்த குழந்தை. தாயுடனேயே இருந்த குழந்தை.
அந்தச்
சகோதரர் தன் குழந்தைகளையும் விட இவளைத்தான் அதிகமாக நேசித்தார். வெளிநாட்டிலிருந்தவரை
அவர் ஒவ்வொரு முறை ஊருக்குப் பேசும் போதும் எல்லோரையும் விட அதிக முக்கியத்துவம் கொடுத்து
தன் தங்கையிடம் பேசும் போது, அவளிடம் என்ன வேண்டும் என்றால் அக்குழந்தை கேட்பது ஒன்றே
ஒன்றுதான் “நைட்டி”. அவள் உடுத்துவதற்கு எளிதாக இருந்ததால் வீட்டில் அதை மட்டுமே உடுத்தி
வந்ததால் அவளுக்குத் தெரிந்த அதை மட்டுமே சொல்லத் தெரிந்த குழந்தை. அதற்காக, வித விதமாக
வாங்கி வந்துக் குவித்தவர் அந்தச் சகோதரர். தனக்குத் தெரிந்த வரையில் வாசலில் ஒரு கோலம் என்று கிறுக்கினாலும், அழகான ஓவியம் என்று ரசிப்பார் அந்த சகோதரர். சகோதரராக, தந்தையாகப்
பார்த்துக் கொண்டவர். தனது மனைவி இறந்த பிறகு தன் குழந்தைகளை விட, இக்குழந்தைக்காகவே
இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காதவர் அந்தச் சகோதரர். தன் தாயின் காலத்திற்குப் பிறகு
அக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டிருந்தவர்.
தன்
வீடு என்று சொல்லிக் கொண்டு வீட்டில் வளைய வந்தவள். சென்ற 10, 15 நாட்களாக சகோதரரையே
சுற்றிச் சுற்றி வந்தவள். அவர் தரையில் அமர்ந்தால் அவர் மடியில் படுத்து விளையாடிவள்.
அவர் மெத்தையில் அமர்ந்தால் அவர் அருகில் அவருடன் அமர்ந்து விளையாடியவள். இறுதி வரை
அவரது கையைப் பற்றிக் கொண்டு “என்னை விட்டுப் போயிடாதண்ணா” என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த நட்சத்திரம் இறுதியில் ,பாசக்கார அண்ணனாய், தந்தையாய் இருந்தவரின் கையை விட்டுப் பிரிந்து மீண்டும் விண்ணிற்கே சென்று அங்கிருந்து ஒளி வீசத் தொடங்கிவிட்டது!
அவள்
ஆசைப்பட்ட சிறு சிறு ஆசைகளைக் கூட ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும், காலம் இருக்கிறதே
என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் இதோ இன்று தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக அழுது கொண்டிருக்கிறார். அவளின் ஆசைகளில் ஒன்றான ரயிலில் செல்லும் ஆசையை இராமேஸ்வரம்
வரை அவளை அழைத்துச் சென்று நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தது நிறைவேறாமல், எல்லோரையும் விட தன்னிடம் இத்தனை அன்பு கொண்டிருந்தவள் தன் குழந்தைகளின் திருமணத்தைப்
பார்க்காமல் போய்விட்டாளே என்று அழுது கொண்டிருக்கிறார். அவள் அவரிடம், "இந்தா இதை யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்துக் கொள்" என்று கொடுத்த ஊக்கையும்(Pin),
அவள் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும், அவளுடனான ஒவ்வொரு கணப்பொழுதையும், நினைவலைகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டு மருகிக் கொண்டிருக்கும் அக்குழந்தையின் அன்பு சகோதரர் வேறு
யாருமல்ல நம் அன்புப் பதிவர் கில்லர்ஜி.
இறுதிவரை
விடை தெரியாமல் வாழ்கிறேன் என்று விழித்துக் கொண்டிருக்கும் கில்லர்ஜிக்கு “விடை” கொடுத்துச்
சென்றுவிட்ட அவரது அன்புச் சகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவள் விண்ணிலிருந்து நட்சத்திரமாய் ஒளிர்வாள்!
அவர் கொடுத்திருக்கும் "விடை"யில் உங்களுக்கான,
உங்கள் வாழ்விற்கான விடை இருக்கிறது கில்லர்ஜி! ஆம்! அவளைப் போன்ற குழந்தைகள் இவ்வுலகில், நம் அருகில் அதுவும் வசதியற்ற, ஆதரவற்ற நிலையில் ஏராளம் பேர், இருக்கின்றனர். அவர்களுடன் நீங்கள் வாழ்வின் ஒரு சிறு பகுதியைச்
செலவிடலாம். உங்கள் அன்பை அவர்களுக்கு அளிக்கலாம்! உங்கள் தங்கை, அக்குழந்தை விரும்பிய, நீங்கள் நிறைவேற்றவில்லை என்று மருகும் அவ்வாசைகளில் ஒரு சிலதேனும் இந்த நட்சத்திரக்
குழந்தைகளுக்கு நிறைவேற்றலாம். இந்த நட்சத்திரங்களில் உங்கள் தங்கையாகிய அக்குழந்தை
நட்சத்திரத்தைக் காணலாம். விண்ணிற்குச் சென்ற அந்த நட்சத்திரம் இந்த நட்சத்திரங்களில்
ஒளிர்கிறாள் என்று நீங்கள் கண்டு உணர்ந்து மகிழலாம்! உங்களுக்கும் மன நிறைவு கிட்டும்!
இதற்கு
முன் இப்படிப்பட்டக் குழந்தைகளைப் பற்றி நான் இட்ட பதிவுகளில் ஒன்றிலேனும் கில்லர்ஜி
இக்குழந்தை பற்றிக் குறிப்பிட்டிருந்தால், அக்குழந்தை இப்பூமியில் இருந்த போதே நான்
நேரில் சென்று கண்டிப்பாகச் சந்தித்திருப்பேன். அதுவும் நான் 4 மாதங்களுக்கு முன் அவர்
ஊராகிய தேவகோட்டையின் அருகிலிருக்கும் திருப்பத்தூர் வரை சென்றிருந்தேன். ஆனால், கில்லர்ஜியோ,
அக்குழந்தையை என்னிடம் நேரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மனதில் நினைத்திருந்ததாகச்
சொன்ன போது என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. இப்படிப்பட்டக் குழந்தைகள் என் மனதினை
ஈர்ப்பதாலும், பாதிப்பதாலும், அதுவும் நம் அன்பர்களில் ஒருவரின் ரத்தபந்தம் என்பதாலும்
விளைந்த ஒன்று!
---கீதா