ஊஞ்சலாடும் எண்ணங்கள்
“குட்டி! நீ தமிழிலு எழுத்து
எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா?” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா?) மலையாள பூமியில் இருக்கும் என் அன்புத் தங்கையின் வாட்சப் கேள்வி.
என்ன இது சம்பந்தமே இல்லாமல்
இப்படி ஒரு கேள்வி? ஏதோ உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவையாய்
என்னவோ எழுதுகிறேன் என்பதற்காக நான் என்னவோ தமிழ் இலக்கியத்தையே
கரைத்துக் குடித்தவள் போல இப்படி ஒரு கேள்வி.
விளித்தேன். என்ன என்று கேட்டேன்.
“ஓஃபீஸ்ல, ஃப்ரென்ட், சம்சாரிச்சிட்டிருந்தப்ப புறநானூறுல ஒரு பாட்டு சொல்லி கேட்டப்போ, எனக்கு ஓர்மையில்லை. நீ தமிழிலு எழுதறியேன்னு உங்கிட்ட கேட்டுச் சொல்லலாமேன்னு…”
அவள் சொன்ன ஓரிரு சொற்கள் - புலவர்கள், வறுமை, பரிசில் - கொண்டு கூகுள் களஞ்சிய அலமாறியை, பக்கங்களைப் புரட்டோ புரட்டு என்று புரட்டினேன். புறநானூற்றுப் பாடல்களில் புலவர்கள் தங்கள் வறுமையைச் சொற்களில் தோய்த்து எழுதியிருந்தது தெரியவந்தது. நான் பாடல்களை இங்கு குறிப்பிடவில்லை. கருத்துகள் மற்றும் அதோடு எழுந்த என் கோக்கு மாக்கு கற்பனை மட்டும்.
முற்காலத்தில் புலவர்கள் வறுமையில் வாழ்ந்ததாகப் பல செய்யுள்கள் சொல்கின்றன. சில புலவர்கள் மன்னர்களைச் சும்மானாலும் புகழ்ந்து பாடி, “ஏதேனும் கொடப்பா” என்று பரிசில்கள் வாங்கிச் சென்றதாக எதிலோ வாசித்த நினைவு.
பரிசில்கள் கிடைக்கவில்லை
என்றால் மன்னரைத் தூற்றிப் பாடிய புலவர்களும் உண்டாம். பின்ன கஷ்டப்பட்டு ஏதோ கிடைக்குமே என்று புகழ்ந்து பாடியும் பேமென்ட் கிடைக்கலைனா வீட்டம்மாகிட்ட வசை வாங்கணுமே!
பெருஞ்சித்திரனார்
எனும் புலவர் தான் இயற்றிய பாடலைப் பெரும் வள்ளலான அதியமானைத்
தேடிச் சென்ற போது அதியமான் இவரைப் பார்க்காமல், பாட்டைக் கேட்காமல், புலவருக்குப்
பரிசிலை மட்டும் அனுப்பினானாம்.
புலவர் கொஞ்சம் மானஸ்தன்.
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்
கடைசி வரி பாருங்க நச்!
“நான் வாணிகப் பரிசிலன் அல்லேன்….வியாபாரி அல்லன் என் பாட்டை, அறிவை, புலமையைப் பார்த்து, கேட்டு, தகுதி இருக்கான்னு பார்த்து தந்தா ஓகே....இல்லைனா அட போயா! வேண்டாம்னு சொல்லிவிட்டார்.
அடுத்து, வறுமையில் வாழ்ந்தாலும் தகுதி இல்லாத மன்னரைப் பாடவே மாட்டார்களாம்.
இன்னொன்று, புலவர்கள் பாராட்டிப்
பாடும் அளவுக்கு மன்னர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனராம்.
மன்னர்களுக்கு அறிவுரை செய்த புலவர்களும் உண்டு! ஔவையார் பற்றி நமக்குத் தெரியும்.
நம்ம மனசு சும்மாருக்குமா? போக்கிரித்தனமாகக் கற்பனை செய்தது. வேண்டாத வேலை!
இப்போதைய கவிஞர்களில் சினிமா பாடல்கள் எழுதுபவர்கள் (அதிலும் ஒரு சிலர் தானோ?) சம்பாதிக்கிறார்கள். ஏனையோர் எப்படியோ? தற்போது கவிஞர்களின் நூல்கள் போணியாகிறதோ?! சரியாகத் தெரியவில்லை. நேற்று மறைந்த கவிஞர் ஜெ. பிரான்ஸிஸ் கிருபா சில திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதியிருப்பதாக ஏகாந்தன் அண்ணா தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். கிருபா கவிதைப் புத்தகங்களும் போட்டிருக்கிறார். அவர் மறைந்த நிகழ்வு ஜெமோ தளத்தில் அறிந்தது.
ஆனால், ஏனோயொர்? தற்போது புகழ்ந்து பாடி சம்பாதிக்க மன்னர்களும் இல்லையே. சரி, தலைவர்களைப் புகழ்ந்து பாடினால் ஏதேனும் கிடைக்குமோ?
ஒரு வேளை ஒன்றும் தேறவில்லை என்றால் அக்காலத்துப் புலவர்களைப் போல் தூற்றிப் பாடினால் என்ன ஆகும்?! இல்லை, தலைவர்களுக்குக் கவிஞர்கள் இடித்துரைத்து அறிவுரைகள் வழங்கினால்? கவிஞர்கள் பாடு திண்டாட்டம்தானோ?!
சத்தியமாய் இது வேறு எதுவுமில்லை, சும்மா ஒரு கோக்கு மாக்கு கற்பனை! தில்லைஅம்பலனே சரணம்! காப்பாத்துப்பா! எனக்குச் சுயமாகப் பாடல் எல்லாம் எழுதத் தெரியாது ஈசா! அதுக்காக என்னைக் கண்டுக்காம இருந்திடாதப்பா, தில்லை அம்பல நடராஜா!
சென்ற மாதம் இந்த மாதிரி வேண்டாத சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்த சமயம், ஜெமோ தளம் அடிக்கடி வாசிப்பதால், மொபைலில் ஜெமோ தளத்தின் பதிவு ஒன்றை சென்ற மாதம் கூகுள் அனுப்பியது. (கூகுளுக்குத் தெரியாம (கூகுள் ஆண்டவர்??!!!) எதுவுமே செய்ய முடியாது போல. நாம் எதைப் பார்க்கிறோமோ அதைப் பற்றி, தளங்கள் பலவற்றை மொபைலுக்கு அனுப்பிடுது!!!) அதில் கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களுக்கான விஷ்ணுபுர விருது குறித்து. இந்த விருது 2010 லிருந்து கொடுப்பதாகத் தெரிகிறது. கவிஞர்களும் தற்போது கௌரவிக்கப்படுகிறார்கள்! நல்ல விஷயம். தொடர வேண்டும்.
*************
தங்கை வாட்சப்பில் அனுப்பியிருந்த அனந்துவின் படம் அனந்துவுடனான என் முதல் அனுபவத்தை நினைவுபடுத்தியது! பலவருடங்களுக்கு முன், அன்று, என் கற்பனையில் விரிந்ததை என்னவோ அதிசயமாக மூளை சேமித்து வைத்திருந்தது!!
அனந்துவின் அப்பாயின்ட்மென்ட்
கிடைப்பது சிரமம். உங்களுக்கு எப்படியோ தெரியாது. என் அனுபவம் அது. அனந்து பெரும்புள்ளி! மிகவும்
பிராபல்யமானவர்! அப்பாயின்ட்மென்ட் கிடைத்தாலும் கெடுபிடிகள் அதிகம். பெரும் கூட்டம்
வரும் முன் அதிகாலையில் பார்த்துவிட வேண்டும் என்று அப்பாயின்ட்மென்ட் …
சரி அப்படி அப்பாயின்ட்மென்ட் எதற்கு?
அதென்ன அப்படி ஒரு கேள்வி?
பிரபலமானவரை அருகில் பார்க்க விரும்புவோம்தானே. புலம்ப வேண்டாமா? வேறெதற்கு?
ஆனால் பாருங்க, மல்லாக்கப்
படுத்துக் கொண்டு, கைகளை விரித்துக் கொண்டு, வலது கையை ஒய்யாரமாகத் தொங்க விட்டு, கண்ணை மூடிக் கொண்டு அஸிஸ்டென்ட்கள் சூழ என்ன ஒரு ரிலாக்ஸ்ட் சயனம்!
அனந்த சயனம், யோக நித்ரா வாம். நானும் இப்படி சயனிக்கத்தான் நினைக்கிறேன். முடிகிறதோ?! யோக நித்ரா என்று தூங்கிவிடுகிறேனே! மனம் உடனே சிவ யோகம் பற்றியும் பதஞ்சலி முனிவர் பற்றியும் அவர் வழியில் வந்த என் யோகா குருஜி சொன்னதிற்குத் தாவியது. சிவ யோகம் என்பது எளிதல்ல. குருஜியும் எத்தனையோ அறிவுரைகள் சொல்லிக் கற்றுக் கொடுத்தார்.
ஆதியோகி ஈசனின் அத்தனை யோக நிலையும் மனதில் ஓடியது. எப்போதும் கண்மூடி யோகநிலை! நாம் தொழுவது அவர் யோகநிலையைக் கலைக்குமோ! ஸாரி ஆதியோகி! ஹூம் எந்த சிவ யோகமும் வாய்க்கவில்லை! ஒழுங்காகப் பயிற்சி செய்தால்தானே! அதாவது மனம் ஒன்றி! அதுதானே முக்கியம்.
ஹூம்! உம் ஃப்ரென்ட் ஆதியோகி கண்டு கொள்ளவில்லை! தாமோ? என்று அனந்துவிடம் புலம்பினால் பதில் சொல்வாரோ? மேலே நோக்கிக் கண்ணை மூடிக் கொண்டு நம்மைத்தான் பார்க்கவே இல்லையே பதில் வராது என்றே நினைத்தேன். இருந்தாலும்….
புலம்பினேன்! உலக யோகம் வேண்டிப்
புலம்பத் தொடங்கவில்லை! அனந்துவாவது யோகநித்திரைக்கு அருள் செய்வாரோ என்று! நீங்கள் கண்டிப்பாக நம்ப மாட்டீகள் தெரியும். நானுமேதான். (அருளினாலும் நீயல்லவா பயிற்சி செய்ய வேண்டும்!! என் மனசாட்சி!) மனம் தாவியது.
எங்கு? அனந்து யோகநித்திரை என்றதும், திருமெய்யத்துக்கு. அங்கு சத்யமூர்த்தியும் யோகநித்திரையில்தான். அங்க ஒரே இடத்திற்குள் அடுத்தடுதாற்போல் ரெண்டுபேருமே இருக்கிறார்களே சத்யகிரீஸ்வரர்(சிவன்), சத்யமூர்த்தி! திருச்சுற்று இருவருக்கும் சேர்த்துதான். விண்ணப்பம் ஈசியா கொடுத்துவிடலாம்! ஆனால் பாருங்க நம்ம மனுஷங்கள் ரெண்டு பேருக்கும் நடுல மதிற்சுவர் கட்டிப் பிரிச்சுட்டாங்க என்ன சொல்ல? நல்லகாலம் சுசீந்திரத்தில் பிரிக்கவில்லை! சுசீந்திரம் போன மனது உடனே மீண்டும் அனந்துவிடம் வந்து நின்றது.
விண்ணப்பத்தைக் காது கொடுத்துக்
கேட்டாரோ, தெரியவில்லை. எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. சரி, எப்போது வேண்டுமானாலும் பார்த்துச்
செய்யட்டும், ஆதியோகியிடமும் சிபாரிசு செய்யட்டும், சொல்ல வேண்டியதைச் சொல்லி வைப்போம் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன் அரங்கத்து……
பார்த்தீர்களா, அனந்துவிடமிருந்து
அடுத்து ரங்குவிடம் தாவிவிட்டேன். ரங்குவாச்சும் கொஞ்சம் சைடுல திரும்பி சயனம்! பூலோகத்தர்! நித்திரைன்னு எல்லாம் சொல்லப்படாததால் கண் மலர்ந்து நம்மைப்
கொஞ்சம் பார்க்கறாற் போல இருக்கிறாரேன்னுதான்….திருஇந்தளூர் பரிமள ரங்கு விடம் கூட மனம் தாவியது ஆனால் அவர் நெடுந்துயிலாம்! திருமங்கை ஆழ்வாரே கோச்சுக்கிட்டு நிந்தா துதி பாடியிருக்க நம்மளை பார்த்துவிடப் போகிறாரா என்ன?
அனந்து முன்னே நின்று கொண்டு சத்தியகிரீஸ்வரர், சத்தியமூர்த்தி, பரிமளரங்கு, ரங்குவை எல்லாம் நினைக்கலாமா? அதனாலென்ன? எல்லாரும் ஒன்றுதானே. இப்போதைக்கு அனந்துவிடமே சொல்லிடலாம்….டக்கென்று மூளையில் பளிச்!
ஓ! யோக நித்திரையாச்சே!! கலைக்கக் கூடாது! எதுவும் வேண்டக் கூடாது, புலம்பக்
கூடாது என்று பாட்டி சொல்லிக் கேட்டதுண்டே!
ஓ! அனந்து! உன் யோக நித்திரைக்குத்
தொந்தரவு தரமாட்டேன்! ஸாரி அனந்து! மன்னித்துவிடு! சத்தியகிரீஸ்வரர், சத்திய மூர்த்தியும் யோகநிலை! பரிமள ரங்குவோ ரொம்ப ரெஸ்டிங்க்! ரங்குவிடமே சொல்லிக் கொள்கிறேன்!
அட! ஏதோ கேட்கிறதே! இத்தனை பேரை பார்க்கலாம்னு சொன்னதும் அனந்து ரெஸ்பாண்டெட்? (இதான் டெக்னிக்?...பாத்துக்கோங்க!)
“என்ன புலம்பப் போற? இந்த மாசக் காப்பி பொடி வாங்க
வழி செய்துடுப்பான்னுதானே!!!”
ஹோ ! என்ன குறும்பு பாருங்க! வெரி நாட்டி!
--------கீதா
ரொம்ப நாள் கழித்து எங்கள் வலைத்தளத்தைத் தூசிதட்டியிருக்கிறோம்/றேன்.