திங்கள், 28 ஜூன், 2021

மர்மம் – துப்பறிவாளினி – செல்லம்

 

மர்மம்

வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிருந்து ஓடுவதையும் கண்ணால் கண்டோம். உறுதியானது. நேரில் பார்த்த சாட்சி.

இது ஒரு மாதம் முன்பு. அப்போது கண்ணழகி காலையில் அடுக்களையில் மோப்பம் பிடித்து அந்தப் பாதையை அப்படியே நூல் பிடித்து குளியலறை வரை மோப்பம் பிடித்துக் கொண்டே சென்று அங்குமிங்கும் ஓடிப் பிடிக்க முயன்றாள் ஆனால் பொருட்கள் அவளுக்குத் தடையாக இருந்தன. ராத்திரி கூட ஓடியிருக்கிறாள் என்று சில தடயங்கள் அறிவித்தது.

சில பொருட்கள் அல்லது இடங்களின் முன் காவல் இருப்பாள். தலைமறைவான எலியார் எப்போது வெளியில் வருவார் என்று ஆனால் கொஞ்ச நேரத்தில் அவள் இலக்கு மாறிவிடும். இதுதாம் பூஸாருக்கும் பைரவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

அது ஒரு காலம்! நம் வீட்டுச் செல்லம் போட்டுத்தள்ளிவிட்டுக்  காவல் காப்பாள். அவர்களின் சட்டத்தில் போட்டுத் தள்ள இடம் உண்டு. பாவ புண்ணியக் கணக்கு உண்டா என்று தெரியவில்லை! இப்போது அவள் ஓடி சாகசம் செய்யும் நிலையில் இல்லை. ஏன்? தகவல் கீழே. தலைப்பு செல்லம்.

என்கௌண்டர் தொடங்கலாம் - விஷம் வைக்கலாம், ஒட்டிக் கொள்ளும் அட்டை வைக்கலாம் என்று உள்துறையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

என்கௌண்டருக்கு நான் எதிரி.  போட்டுத்தள்ள நமக்கு என்ன அதிகாரம்? எலியாருள்ளும் உயிர்தான். வெளித்தோற்றம்தான் வேறு. மனிதர்கள் யாரேனும் நமக்குத்  தொந்தரவு கொடுத்தால் சட்டத்தைக் கையில் எடுத்து நாம் என்ன போட்டுத் தள்ளுகிறோமா? அவர்கள் உலகச் சட்டம் வேறு.  என்று லா பாயின்ட், தத்துவம் எல்லாம் பேசினேன்.

அதுவும் இது உள்வீ(நா)ட்டு விவகாரம். நாம் அவரைப் பிடித்து துரத்திவிட்டு மீண்டும் உள்நுழையாமல் எல்லைப் பாதுகாப்பு போடுவோம். பார்த்துக் கொள்வோம் என்று அரசியல் பேசினேன். பொறி எங்கு கிடைக்கிறது என்று பார்த்தால் அருகில் எங்கும் இல்லை. சந்தையில் கிடைக்கும் ஆனால் சந்தை இப்போது இல்லை. இந்த கோவிட் சமயத்தில் அலைய தயக்கம்.

ஸ்காட்லாந்து யார்ட், லண்டன், ஆரேகன் என்று வெளிநாட்டு நிபுணர்களை ஏற்பாடு செய்யலாமா என்றும் யோசித்தேன்! அவர்கள் எல்லோரும் அப்பாயின்ட்மென்ட் கொடுப்பது கடினம்.

துப்பறிவாளினி

நான் தான்!!! தடயங்கள் கிடைத்தன. அதை வைத்து அவர் எங்கெங்கு செல்கிறார் எங்கு தலைமறைவாகிறார், என்னென்ன பொருட்களைத் திருடுகிறார், சாப்பிடுகிறார் என்று ஆராய்ந்தேன்.

காணாமல் போனவை : சுவாமி முன் அரிசி மாவில் போடும் கோலம் (நான் வாசலிலும் அரிசிமாவுதான். கோலமாவு என்று விற்பது வாங்குவதில்லை). விளக்குத் திரி, சுவாமிக்கு வைக்கும் வீட்டில் பூத்த மல்லிப் பூக்கள், தவறிப் போய் பீன்ஸ் காரட் ஏதேனும் ஒன்றிரண்டு வெளியில் இருந்தால் பீன்ஸ் காணாமல் போயிருக்கும். காரட் துருவப்பட்டிருக்கும். காணாமல் போனவை ஏதேனும் டப்பாவின் பின்னால் இடுக்கில் இருக்கும்.

அஹிம்சை வழியில் முதலில் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று அலசியபோது அவருக்கு வெங்காயம், பூண்டு பிடிக்காது. வெட்டி அவர் வரும் இடங்களில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தால் வரமாட்டார் என்று ஒரு தகவல். ஒரு சந்தேகம் முளைத்தது. வெங்காயம் பூண்டு போட்ட மசால் வடைக்கு ஆசைப்பட்டு வந்துதானே பொறியில் சிக்குவார்! ஒரு வேளை பூண்டும் வெங்காயமும் பச்சையாகப் பிடிக்காது போலும்! சரி வந்தது வரட்டும். அதையும் வெட்டிப் போட்டுப் பார்த்தேன்.

முதல் நாள் வெற்றி. குறிப்பாகப் பொருள்கள் எதுவும் கலைந்திருக்கவில்லை. காணாமல் போகவில்லை, கோலம் உட்பட. அவரது கக்காவும் இல்லை. ஆனால் இதில் ஒரு சங்கடம். வெங்காயம் பூண்டு மணம் ஓரிரு நாள்தான். பின்னர் மீண்டும் வருகை இருக்கும். இதற்காகக் கிலோ கிலோவாக வெங்காயம், பூண்டு வாங்க முடியுமா? நிதித் துறை பின்வாங்கியது.

சரி அடுத்த அஹிம்சை நடவடிக்கை. கடலைமாவு, பாராசிட்டமால், (எலியாருக்கும் ஜுரம் வருமா அல்லது ஜுரம் வரவழைக்குமோ?!!) தக்காளிச்சாறு என்று ஏதோ சில குறிப்பிட்ட அளவு கலந்து உருட்டி மணிக் கொழுக்கட்டை சைசில் லட்டு பிடித்து வைக்கச் சொல்லி ஒரு தகவல். உங்களுக்குக் கூட லட்டு பிடித்து தந்ததில்லை ஆனால் எலியாருக்கு லட்டு பிடித்தேன். ஹூம் நான் செய்த லட்டு பிடிக்கவில்லை போலும் எலியார் சீண்டவில்லை. அவருக்கும் நம்ம டெக்கினிக்குகள் தெரியாமல் இருக்குமா என்ன?! தப்பித்துத் தலைமறைவானார்.

இத்தனைக்கும் வீட்டிலுள்ள ஒட்டைகள் எல்லாம் அடைத்தாயிற்று. நாங்கள் ஒவ்வொரு செக் ஆக வைக்க வைக்கத் தடயங்கள் மாறிக் கொண்டே இருந்ததால் எப்படி வந்து எங்கு சென்று ஒளிகிறார், தலைமறைவாகிறார் என்று ரொம்பக் குழப்பமாக இருந்தது. மூளையில் பளிச். கண்ணழகி குளியலறை வரை நூல் பிடித்துச் சென்று முகர்ந்தது நினைவுக்கு வர…

குளியல் அறையில் இருக்கும் அந்தக்கால முறையில் சுடுதண்ணீர் போடும் சிமென்ட் தொட்டி உட்புறம் ஒரு பானை இருக்கும் (பானை இன்பில்ட் போன்று வெளியில் எடுத்துக் கழுவி எல்லாம் செய்ய முடியாது) அடியில் விறகு வைக்க வெளியிலிருந்து ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அதற்குள் லைட் அடித்துப் பார்த்தால் சாம்பல் மண் என்று ஒரு பக்கத்தில், ஓட்டையும் இருப்பதாகத் தெரிந்தது. ஓ! இதுதானா! என்று வெளிப்புற ஓட்டையை தகரம், கல் என்று மூடி கம்பிகள் இல்லா  சிறையாக்கினோம்.

இரவு குளியலறைக் கதவின் தாழ்ப்பாளைச் சரிசெய்து நன்றாக மூடி விட்டோம். மறுநாள் குளியலறையைத் திறந்த போது எலியாரின் துவம்சம் தெரிந்தது. துடைப்பக்கட்டை, மாப்பர் எல்லாம் கீழே விழுந்து குவளை எல்லாம் புரண்டு இருந்தது. அவரது கக்கா வேறு. அடப்பாவி! சிறைக்கதவை உடைத்து தப்பித்துவிட்டாரா? ஆராய்ந்தால் அவை எல்லாம் சரியாகத்தான் இருந்தன.

குளியலறையில் இருக்கும் பரண் கண்ணில் பட, அதில் வீட்டு உரிமையாளர் கச்சடா சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார். சரி அதில்தான் தலைமறைவாகி இருக்க வேண்டும் என்று ஒரு யூகம்.

மறுநாளும் இதே போல் பாதுகாப்பு செய்ய எலியார் உள்ளே துவம்சம் செய்திருக்க சுவாமி முன்னான கோலம் அழிந்திருக்கவில்லை. சரி அவர் ராஜ்ஜியம் குளியலறையோடு என்பது தெரிந்திட, எப்படியாவது வெளியேற்றலாம் என்று நினைத்து வழக்கம் போல சுவாமி முன்  கோலம் போட்டுவிட்டு  மொட்டைமாடி சென்று வந்து பார்த்தால் சுவாமி முன்  போட்டிருந்த கோலம் அழிந்திருந்தது.

எனக்கு ஆச்சரியம். என்னடா இது ஒரு 10 நிமிடத்தில் இப்படியா என்று தோன்றிட கணவர் சொன்னார் ஒரு வேளை பல்லியாக இருக்கலாம். அரிசிமாவைச் சாப்பிட்டது பல்லியாரா? எலியாரா? எனக்கோ, குளியலறைக் கதவு திறந்திருந்ததால், “இரண்டு நாள் என்னை அடைத்து வைச்சீங்கல்ல. பாருங்க நான் இப்ப அடுக்களையில் புகுந்துட்டேன் என்று கோபத்தில் எலியார் சவால் விடுவது போல் இருந்தது.

மீண்டும் இரவு குளியலறைக் கதவை மூடி வைத்துப்படுத்தோம்.  மறுநாள் பொருட்கள் எல்லாம் அப்படியேதான் இருந்தது. அவரது கக்காவும் இல்லை. அப்போ அடுக்களையில்தான் தலைமறைவு.

உன் அஹிம்சை செல்லாது, மறைமுக என்கௌண்டர் தான் சரி என்று எலியாருக்கான விஷ கேக்குகள் – பச்சைக்கலரில் எள்ளு கடலைமிட்டாய் போல இருப்பது - வாங்கிவந்து வைத்தார் கணவர். நானோ, “பிள்ளையாரப்பா எலியைப் பிழைக்க வைத்துவிடு. உனக்கு தேங்காய் உடைச்சு கொழுக்கட்டை, மோதகம் எல்லாம் செஞ்சு தரேன்” என்று!!! வேண்டுதல் வைத்தேன்! எலிக்காக வேண்டிக் கொண்டவர் யாரேனும் இருந்தால் என் குழுவில் இணையலாம்!

விஷக் கேக்கில் ஒரு முனை மட்டும் மிஸ்ஸிங்க். அதுவும் மிகச் சிறிதளவே. என் பிரார்த்தனை பலித்ததோ? அந்தச் சிறிய அளவை ஒரு வேளை பல்லியார் சாப்பிட்டிருப்பாரோ? இல்லை எலியாருக்கு விஷக் கேக்கும் பழக்கமாகி சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் ஆகிவிட்டாரா, அல்லது தெரிந்து சீண்டவில்லையா?

குளியலறையில் எந்தத் தடயமும் இல்லை. கோலம் மட்டும் அழிந்திருக்கிறது. ஆனால் அரிசி மாவு வைத்திருக்கும் கிண்ணத்தில் மாவில் எந்தத் தடயமும் இல்லை. கக்கா கூட இல்லை. பல்லியார்தான் கோலத்தைக் கலைத்திருப்பாரோ? எலியார் பரணில் இருக்கிறாரா? ஒரே மர்மமாக இருக்கு.

தலைமறைவாகிய பெண். வயது 6 மாதம். கொழு கொழு உடம்பு. கண்டால் துப்பறிவாளினி எனக்குத் தகவல் சொல்லிடுங்க!  அடையாளம் - அவர் வால் நுனியில் ஒரு சிறு வெட்டுக்காயம் இருக்கும்.

செல்லம்:

செல்லத்திற்கு வயது 12 முடிந்து 4 மாதங்கள். 10 நாட்களுக்கு முன் தொடங்கியது மூச்சுவிடச் சிரமப்படுகிறாள். பலசமயங்களில் முகத்தை உயரே தூக்கிக் கொண்டு மூச்சு விடுகிறாள். மார்புப் பகுதி பெரிதாகி வீங்கியது போல் இருக்கு. பல்மொனரி எடிமா. நுரையீரல் உள்ளே அல்லது வெளியே நீர் கோர்த்திருக்கலாம். மருத்துவரை வீட்டிற்கு வந்து பார்க்கச் சொல்லி மகன் அவரோடு பேசினான். ஹார்ட் ஃபெயிலியர் என்றான் மகன். இசிஜி, எக்ஸ்ரே எடுக்கச் சென்றால் செல்லம் ஒத்துழைக்கவில்லை. மகனும், பரவாயில்லை விடு என்று மாத்திரை சொன்னான். கொடுத்து வருகிறோம்.

இவளை ரெஸ்டில் இருக்க வை என்று சொல்கிறான்!! எப்படி?

மகனிடம் சொன்னேன். “என்னடா இவளுக்கா ஹார்ட் ஃபெயிலியர்? என்ன டயக்னாசிஸ் செய்யற? மாடி ஏறுகிறாள், தெருவில் செல்லங்கள் போனா ஒடிச் சென்று குரைக்கிறாள் வம்பு வளர்க்கிறாள்! உள்ளே வந்ததும் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு மூச்சு விடச் சிரமப்படுகிறாள்! 

அவன் சிரித்துவிட்டான். “ம்மா ரொம்ப முடியலைனாதான் அடங்கி ஒடுங்கி இருப்பாங்க இல்லைனா கடைசி வரை அப்படித்தான் இருப்பாங்க. எனிவே அவள் காலம் முடியப் போகிறது. அவளை நிறைய கொஞ்சு, தடவிக்கொடு, சந்தோஷமாக இருக்கட்டும் என்றான்.

அவள் கஷ்டப்படாமல் தன் இறுதி மூச்சு வரை சந்தோஷமாக இருக்கட்டும்!

(சில காரணங்களினால் (செல்லம் காரணமல்ல) மீண்டும் இணையம் பக்கம் வரமுடியுமா என்று தெரியவில்லை. முடிந்தால் நேரம் கிடைத்தால் இடையில் வருகிறேன். )

-----கீதா

சனி, 26 ஜூன், 2021

கல்வியால் ஆய பயனென்கொல்?

 

(இது  கொஞ்சம் பெரிய சீரியஸ் பதிவுதான். மன்னிக்கவும். முடிந்தால், ஆர்வமிருந்தால் வாசியுங்கள். )

சாதிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கான பதிவு (பெற்றோரும் வாசிக்கலாம்) என்று, மதுரைத்தமிழனின் அருமையான சமீபத்திய பதிவின் தொடர்பாக என் எண்ணங்கள் பதிவாக….

பயணக்கட்டுரைகள், நகைச்சுவை, ஜனரஞ்சகமான பதிவுகள், அனுபவப்பதிவுகள், புத்தகங்கள் பற்றிய பதிவுகள், சமையல், கதைகள், என்று என்னை ஈர்க்கக் கூடியவற்றின் இடையே கொஞ்சம் சீரியசான கல்வி, உளவியல் என்று வந்தா நமக்குத்தான் உடனே ஆர்வம் மேலோங்கிவிடுமே.

இப்பதிவே கூட கோர்வையாக, சரியாக எழுதியிருக்கிறேனா என்பது எனக்குச் சந்தேகம்தான். சரி புலம்பலை விட்டு பதிவிற்கு வருகிறேன்…

மதிப்பெண்ணிற்கு அப்பாற்பட்டு விரிவான அறிவு தேவை என்று அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் அப்பதிவு ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அவர்களும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களின் அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்களும் இறுதி வரை மாணாக்கர்தாம்.

விசாலமான அறிவுவளர, குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும், ஆசிரியர்களும் சரி, பெற்றோரும் சரி. அதுதான் முதல் படி. அதுதான் சிந்தனையைத் தூண்டும். சீரியசிந்தனைகள் அதாவது தருக்கச் சிந்தனைகள் (logical thinking) எத்தனை முக்கியமோ அதைப் போல வித்தியாசமாகச் சிந்தித்தல் லாட்டரல்திங்கிங்க்தான் ஒருவரைத் தனித்தன்மை உடையவராகக் காட்டும்.

விடை தெரியவில்லை என்றால் பொதுவாக, குழந்தைகளைக் குட்டி, அதிகப்பிரசங்கித்தனமா கேக்காத, தொணதொணன்னு, அடுத்த க்ளாஸ் போறப்ப படிப்ப, தொந்தரவு செய்யாத, சொல்லிக்கொடுத்தது புரியலையா? அப்படியே மனப்பாடம் செய், என்று சொல்லி முடக்கப்படுகிறார்கள் கட்டிப் குழந்தைகளின் ஆர்வமும், தைரியமும் அடக்கப்படுகின்றன.

இது ஒரு வகை என்றால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் ரொம்ப புத்திசாலி என்று பிரகடனப்படுத்தி ஓவராகத் தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் வயதுக்கு மீறி என்ன பேசினாலும் அதை ரசித்து, பெருமையாகச் சொல்லி அதுவும் இப்போது காணொளியாக வேறு போடுகிறார்கள். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று.

எல்லாப் பெற்றோரும் கல்வி அறிவோ, பண வசதி படைத்தவர்களாகவோ இருப்பதில்லை என்பதால் இங்கு ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமாகிறது. (கல்வி அறிவும், வசதியும் உடைய பெற்றோருக்கும் இது பொருந்தும்.)

குழந்தைகள் கேள்விகேட்கும் போது ஆசிரியரும் சரி, பெற்றோரும் சரி, விடை தெரியவில்லை என்றால், “தெரியவில்லை” என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, “நான் பார்த்து தெரிந்துகொண்டு விளக்குகிறேன்” என்று சொல்லி அதைச் செய்யவும் வேண்டும். குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை, ஈடுபாடு வரவேண்டும். கற்றலில் (இந்தச் சொல் மிக முக்கியம்) ஈடுபாடு ஏற்படும் படியான சூழலை விதைக்க வேண்டும். இது தொடக்கப்பள்ளியில் ஒரு விதையாக மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அடுத்து இடைநிலைப் பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியிலும் பராமரிக்கப்பட்டால் தானே நல்ல பூத்துக்குலுங்கும் மரமாகும்.

ஆசிரியர்களும் சரி பெற்றோரும் சரி, “இதுகூடத் தெரியலையா, முட்டாள், ஒண்ணுக்கும் உதவாக்கரை, என்னத்தபடிச்ச? நீயெல்லாம் எதுக்குப் பிறந்த, எதுக்கு ஸ்கூலுக்கு வர, எருமை, நாயி, பேசாம மேய்க்கப் போ,” இப்படியான சொற்கள் வீசப்படும் சூழலை புறம் தள்ள வேண்டும். இவை கற்கும் ஆர்வத்தையும் கற்பதையும் முடக்குபவை.

சில குழந்தைகள் இதை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவார்கள். ஆனால் எல்லாக்குழந்தைகளுக்கும் மனம் ஒரே போன்று அல்ல. தொட்டாலே உடையும் கண்ணாடி போன்ற மனதுடைய குழந்தைகள் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்வார்கள். சில குழந்தைகளின் ஒழுக்கத்தையும், ஆளுமை வளர்ச்சியையும் உரசிப்பார்க்கும்.

ஆசிரியப்பயிற்சியில் கல்வி உளவியலின் (Education Psychology) பங்கு மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின் மனமுதிர்ச்சி ப்ளஸ் கற்றல் திறன் வேறுபடுவதால் மிக மிக அடிப்படைத் தேவையாகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயச் சூழல் மாறுபடுவதாலும், அதுவும் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்பவும் -  சமூகவலைத்தளங்கள், இணையம், கையடக்க அலைபேசி என்று தொழில்நுட்பமும், மின்னியல் பொருட்களும் சல்லிசமாக இருப்பதால், பிஹேவியரல் அடிக்ஷன் (behavioural addiction) ஏற்படுவதால் - கற்றல் உளவியலில் மேம்பாடு செய்யப்பட வேண்டியது இன்றியமையாத அடிப்படைத் தேவை.  ஆசிரியர், மற்றும் பெற்றோர் அவர்களைச் சிறப்பாகக் கையாளும் திறன் பெற்றிருப்பதோடு, ஒழுக்கம் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

ஒரு குழந்தை சாதிப்பதற்குப் – புகழ் பெறவேண்டும் என்றில்லை, கல்வியில் முதலிடம் பெறவேண்டும் என்றில்லை, எந்தத் துறையானாலும் செய்வதை செம்மையாகச் செய்வது, நேர்மையாகச் செய்வது, நல்ல ஒழுக்கத்துடன் மனித நேயத்தை இழக்காமல் செய்வது  என்பதுதான் மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கான உளவியல், அவர்களது ஆளுமைத் திறனை வளர்ப்பது, சூழல் என்பவை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூழல் சரியில்லை என்றால் கற்பது என்பது மிகக்கடினம்.

பாடங்களை மனப்பாடமாய்ப் படிக்கும் திறன் கூடுதல் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி, மெடல் என்று வாங்கிவிட முடியும். ஆனால் அவர்கள் படித்ததை ஆழ்ந்து கற்றார்களா என்றால் அது பெரிய கேள்விக்குறி.

மேலே சொன்ன கருத்தில் இரு விஷயங்களைச் சொல்ல வேண்டும். சாதனை அல்லது வெற்றி (இரண்டிற்கும் சிறு வித்தியாசம் உண்டு என்றாலும்) இவற்றிற்கு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம் என்றாலும் அந்த இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நேர்மையானதாக, நல் வழியில் எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும்.

ஆம்பிஷன் – Ambition – தவறில்லை. ஆம்பிஷியஸ் – Ambitious என்பதும் நல்லதுதான் ஆனால் எப்படியேனும் (இந்த வார்த்தை மிக மிக முக்கியம்) அடைய வேண்டும் என்று வெறித்தனத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு மனிதனின் குணங்களையும், நல்ல பண்புகளையும் வீழ்த்தி ஆளுமைத் திறனைச் சிதைக்கவும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கவனம் மிகத் தேவை. வெற்றி, சாதனை என்பதை விட வாழ்க்கையின் எந்தச் சூழலையும் மனம் தளராமல் எதிர்கொள்ளும் திறன் தான் முதலில் போதிக்கப்பட வேண்டும்.

இதற்குத்தான், பல சாதாரணக் குழந்தைகளுக்குக் கற்றலுக்கான, நல்ல ஆளுமைத் திறனை, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள,  வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்ள சூழல் இல்லை என்பதால் பள்ளி, கல்லூரி, ஆசிரியர்களின் பங்கு மிகமிக இன்றியமையாததாக ஆகிறது.

குழந்தைகள் உளவியல், கல்வி உளவியல் பயிற்சி பெற்று கவுன்சலிங்க் செய்து வரும் நட்பு ஒருவர் கேட்ட கேள்வி, “எப்படி ஆசிரியர்கள் கல்வி உளவியல், குழந்தைகள் உளவியல் பயிற்சி பெறாமல் ஆசிரியர்களாகிறார்கள் என்பது ஆச்சரியம். கூடவே வேதனை. படித்த பெற்றோரும் குழந்தைகளைக் கையாளத் தெரியாமல்….என்னிடம் உளவியல் கவுன்சலிங்கிற்கு வரும் பல குழந்தைகளைப் பார்க்கும் போது வரும் ஆதங்கம் இது, என்றார்.

ஆசிரியர்கள் பலரும் பாடத்திட்ட வளர்ச்சிக்கும், காலக்கட்டத்திற்கும் ஏற்ப மேம்படுத்திக் கொள்ளாமை, ஆசிரியப்பயிற்சி சரியான விதத்தில் கொடுக்கப்படாமை, அப்பயிற்சியை உணர்ந்து கல்லாமை, அதை நடைமுறைப்படுத்தாமை, மதிப்பெண்களுக்கு மட்டுமே பயிற்றுவித்தல், ஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாதல், பொறுமை இல்லாமை என்று பல காரணங்கள்.

இதில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களில் சாதிப்போர் அதிகம் ஆனால் இவர்கள் முட்டாள் என்று கைவிடப்பட்டு ஒதுக்கப்படும் போது வாய்ப்புகள் இல்லாமல் சுருங்கிப் போகிறார்கள். (கற்றல் குறைபாடு என்று நான் இங்கு குறிப்பிடுவது ஸ்பெஷல் குழந்தைகள் அல்ல.)

ஆசிரியப்பயிற்சி என்பதே சும்மா சான்றிதழ் பெறுவதாக, பல ஆசிரியர்களும் சான்றிதழ் வைத்திருக்கிறார்கள். ஆனால், கற்பித்தலில் பூஜ்ஜியமாக இருக்கிறார்கள், சிலர் ஒழுக்கத்திலும் மோசமாக இருக்கிறார்கள் என்பது மிக மிக வேதனையான, ஆதங்கப்பட வேண்டிய விஷயம், என்பதை நான் இங்கு வேதனையுடன் பதிவு செய்கிறேன். சமூகவலைத்தளங்களுக்கு, இணையத்திற்கு அடிமையான ஆசிரியர்கள் பலரின் செயல்பாடுகள்தான் என்னை அப்படி எழுத வைத்தது. (பதிவுலகில் உள்ள ஆசிரியர்கள் என்னை மன்னிக்கவும்.)

ஆசிரியர் என்பவர், மாணவர்களை மையமாகக் கருத்தில் கொண்டு, கருணையுடன், நட்பாக, மெய்யியலாளராக, நல்லவ வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள். இது பெற்றோருக்கும் பொருந்தும். Friend, Philosopher, Guide

இதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பெரிய கட்டுரையாக தொடராக உதாரணங்களுடன் எழுதலாம். அத்தனை இருக்கிறது. இங்கு இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

நன்றி மதுரைத்தமிழன்.


-------கீதா 

சனி, 19 ஜூன், 2021

யுகசந்தி


இந்தத் தலைப்பே என்னை ஈர்த்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய இக்கதை எனக்குப் பிடித்த மிகச் சிறப்பான கதைக்கருவைக் கொண்ட கதைகளில் ஒன்று. உங்களில் பலரும் வாசித்திருப்பீர்கள்.

ஒரு யுகம் முடிந்து மறு யுகம் தொடங்கும் போது அதாவது காலகட்டம் முடிந்து மற்றொரு காலகட்டம் தொடங்கும் போது நம்மை அறியாமலேயே உள் நுழையும் மாற்றங்கள், எண்ணங்கள், பார்வைகள்… காலம் மாறிக் கொண்டு இருக்கிறது. அதற்கேற்ப எண்ணங்களும் மாறுகிறது, என்பதாகச் சொல்லப்படும் கதை. மனிதர்களும் மாறுகிறார்கள்.  அதுவும் இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் கண்டிப்பாக நிறைய மாறியிருக்கிறது என்று சொல்லலாம். நல்ல விதமான மாற்றங்கள் அது. ஆனால் மாற்றங்களை ஏற்க மனப்பக்குவம் வேண்டுமே.

பாட்டி கௌரி தான் பிரதான கதாபாத்திரம். 

பாட்டியின் ஆஸ்தான நாவிதனுக்குப் பிறக்கும் மூன்றாவது குழந்தை ஆண்குழந்தை என்பதைக் கேட்டதும், “நீ அதிர்ஷ்டக்காரன்தான்...எந்தப்பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா?"

"காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா; உன் அப்பன் காலமும் உன் காலமும் தான்இப்படிப் பொட்டி தூக்கியே போயிடுத்து... இனிமே இதொண்ணும் நடக்காது.... புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா... பொம்மனாட்டிகள் லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே....ம் ...எல்லாம் சரிதான்; காலம் மாறும் போது மனுஷாளும் மாறணும்.... என்ன, நான்சொல்றது?"

பாட்டி அந்தக்காலத்து ஆச்சாரமான மனுஷி என்றாலும் அவள் பார்வை முற்போக்காக மாறி வருவதைச் சொல்லும் இடங்கள், வசனங்கள் க்ளாஸ்!

16 வயதில் கையில் ஓர் ஆண் குழந்தையுடன் விதவையாகிவிடும் பாட்டியின் ஒரே மகனின் மூத்த மகள் கீதாவும் 10 மாதங்களில் விதவையாகிட தன்னைப் போல் ஆகிவிட்டாளே என்று வருந்தினாலும் அவளைத் தன் ஒட்டுதலில் இருத்திக் கொண்டு வளர்க்கிறாள். ஹைஸ்கூலோடு நின்றிருந்த கீதாவின் படிப்பைத் தொடர அவளை ஆசிரியப்பயிற்சியில் சேர்க்க விரும்பும் தன் மகனிடம் மகிழ்வுடன் சேர்க்கச் சொல்கிறாள்.

பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை எண்ணி மனத்துள் பூரித்தாள்...

பயிற்சி முடிந்து பல காலம் உள்ளூரிலேயே வேலை செய்தவளுக்கு நெய்வேலிக்கு வேலை மாற்றலாக அவள் தந்தை கணேசய்யர் பாட்டியிடம் அவர் கருத்தைக் கேட்க, அதைப் பாராட்டி, தான் கூடச் சென்று இருக்கிறேன் என்கிறார். காரணம் எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.

பேத்தி கீதா பல காலம் யோசித்துக் குழம்பி, பின், ஒரு முடிவை எடுக்கிறாள். அதை வீட்டினருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்துகிறாள். வீட்டில் யாருக்கும் அதை ஏற்க முடியாமல் அவளைத் திட்டுகிறார்கள். 

அப்போது பாட்டி தன் மகனைப் பார்த்து ஒரு நியாயமான, யதார்த்தமான கேள்வி கேட்கிறார். 

முடிவில் ஜெயகாந்தன் அவர்களின் வரிகள் அருமை.

பாட்டி, கீதாவின் முடிவை ஆதரிக்கிறாரா இல்லையா அவரது நிலைப்பாடு என்ன என்பதை ஜெயகாந்தனின் கதைகளை வாசித்திராதவர்கள் 

இச்சுட்டியில் வாசிக்கலாம். முதல் கதையே யுகசந்திதான். எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது சிறுகதை என்றால் 

எழுத்தாளர் வாசந்தி இதே தலைப்பில் நாவல் எழுதியுள்ளார். இந்த நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. இந்த நாவலைப் பற்றிய நம் பானு அக்காவின் அழகான விமர்சனத்தை இந்தக் காணொலியில் நேரமிருக்கும் போது கேட்டுப் பாருங்கள். இங்கு ஒரு வேளை காணொலி வேலை செய்ய மறுத்தால் கீழே யுட்யூப் சுட்டியும் தந்துள்ளேன். 

https://www.youtube.com/watch?v=p_cOJ25KMaQ 

எழுத்தாளர் வாசந்தி அவர்களின் நாவல் யுகசந்தி பற்றியது இது


 -----கீதா

ஞாயிறு, 13 ஜூன், 2021

நினைவுகள் தொடர்கதை – 1

 


ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். 

இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை  வாசிக்கும் போது அல்லது ஏதேனும் ஒரு வரி போதும், நமக்கு ஏற்பட்ட அதே போன்ற அனுபவங்களை அல்லது அதை ஒட்டிய அனுபவங்களை நம் மனதில் நினைவுப்பெட்டகத்திலிருந்து எழுப்பிவிடும்.

[எழுத முடியாததற்கு, கோர்வையாக எழுதவராதது உட்பட காரணங்கள் பல.. ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம் என்பது போல்!]

எபி யில் புதன் கேள்வி பதில்களில், பானுக்கா ஒரு கேள்வி கேட்டிருந்தார். //உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பழக்கத்தை நண்பர்களும், உறவினர்களும் கேலி செய்தாலும், விமர்சித்தாலும், நீங்கள் ரசிப்பது உண்டா?//

என் நினைவுகளைத் தூண்டிவிட்ட கேள்வி.

கூட்டுக்குடும்ப வளர்ப்பு. என் தம்பி தங்கைகள் [என் மாமா அத்தை குழந்தைகளையும் நான் அப்படித்தான் சொல்வது. ஒரே கூரைக்கு அடியில ஒரு தாய் வயித்துப் பிள்ளைகளா இருந்ததால (வடிவேலு மாடுலேஷன்)] எதிர்த்துக் கலாய்க்கத் தெரியாத என்னை ரொம்பவே கலாய்ப்பார்கள்.

சிறுவயதில் எனக்குக் கோபம் என்பதை விட மனம் சுருங்கிவிடும் எனலாம். அதன் பின் மனம் பக்குவம் பெறத் தொடங்கியதும் அவர்களின் நகைச்சுவைக் கலாய்த்தலை ரசித்தேன். ஆனால் அப்பவும் பதிலுக்குச் சொல்லத் தெரியாது.

ராத்திரி 8.30, 9 மணிக்கெல்லாம் நான் சாமியாடத் தொடங்கிவிடுவேன். கைல புக் தலைகீழா இருக்கும். பாட்டியும் மெஷின் ராட்டை ஓட்டிக் கொண்டு முழிச்சுருப்பாங்க யாரெல்லாம் படிக்கறாங்க, கொட்டாவி விடறாங்கன்னு பார்த்துக்கொண்டு.

“பாட்டி, கீதாக்கு நெத்தில முழைச்சுருக்கு இப்படி ஏதாவது ஓரு வாண்டு, தான் படிக்கறோம்னு பாட்டிக்கிட்ட காட்டிக்க என்னைப் போட்டுக் கொடுக்கும். நான் சாமி ஆடுவதால் தலை கீழே பட்டு பட்டு நெத்தில அடியாம்! ஹூ கேர்ஸ்!

“கீதா பாத்து. எதுக்கும் முன்பக்கம் ஒரு தலைகாணி வைச்சுக்க” அப்படின்னு தலைகாணி எடுத்துக் கொடுக்கும் மற்றொரு வாண்டு.

“கீதாவ வரச்சொல்லு, வாசல்ல கோலம் போடணும்” என்று காலையில் எங்க பெரிய மாமி வந்து கேட்டால்…

“நம்ம கீதா நெத்தி முழைக்க, நிலத்தில விழுந்து விழுந்து உழைச்சு ரொம்பக் களைப்பா இருக்கா பெரியம்மா” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே ஒரு வாண்டு சொல்லும்.

“டேய் ஏண்டா அப்படிச் சொல்ற கீதாவ? அவ நல்ல புத்திசாலி தெரியுமோ”

ஹிஹிஹிஹி என்று சிரிப்புச் சத்தம் பின்னணி இசையாக… ஹூ கேர்ஸ்!

“ஆமாமா நீங்க சொல்றது ரொம்ப சரி பெரியம்மா. மார்க் எல்லாம் முக்கியமில்ல.. ஏன்னா அவ லேடி ஐன்ஸ்டீன். நோபல் லாரட் ஆக எப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணுறா தெரியுமா” என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு ஒரு வாலு சொல்லும்…

“அப்படியா”?

“ஆமாம் பெரியம்மா முன் நெத்தில முழைச்சா ஃப்ரன்டல் லோப் வொர்க் ஆகுமா? பின்பக்கம் முழைச்சா மூளைக்கு என்ன ஆகும்? சைடுல பட்டா? மூளை வொர்க் ஆகுமோ, மெமரி கூடுமோன்னு ப்ராக்ட்டிக்கலா எக்ஸ்பெரிமென்ட். தீஸிஸ் எழுதப் போறா” என்று சிரிக்காமல் சொல்லும் மற்றொன்று.

“ச்சே என்ன மண் தூசி பாரு” என்று சொல்லிக் கொண்டே ஒரு வாண்டு பெருக்கினால், மற்றொன்று தொடங்கும் முன் நானே முந்திக் கொண்டுவிடுவேன்…

“பின்னே நேத்து ராத்திரி நான் எவ்வளவு நேரம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணினேன் தெரியுமா?” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டுப் போவேன். மீண்டும் பின்னணி இசை ஒலிக்கும். ஹூ கேர்ஸ்!

வாலுங்க எல்லாம் படிப்பில் கெட்டி. நான் ரொம்பவே சுமார். ரொம்பவே சுமார்னா வெளில சொல்லமுடியாத அளவுக்குச் சுமார்!! அதுவும் கணக்கு, அறிவியல். மூச்! அதுக்கு மார்க் வரப்ப,

“நம்ம லேடி ஐன்ஸ்டீன் ஸ்கூல் ட்ராப் அவுட் ஆயிடுவா சீக்கிரம்….”

ஹூ கேர்ஸ்!

பாடத்திட்டத்தில் இருப்பதைத் திரும்ப திரும்பப் படிப்பது, எழுதுவது, மனனம் செய்து தேர்வு எழுதுவது என்பது எனக்குக் கடினமாக இருந்தது. நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்றால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் காரணம், கட்டுரை, இலக்கணம். மனனம் செய்யாமல் எழுதுவதை ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள். ஆனால் வாழ்க்கை உருண்ட போது இலக்கணம் மாறிற்றே, இலக்கியம் போனதே, பழைய கீதா என்ன ஆனாள்? எங்கே போனாள் எங்கே போனாள்? ன்னு ஆகிப் போச்சு!!! போகட்டும்.  

ஏதேனும் கதை,  கவிதை, கட்டுரை, நாடகம், எழுதுவது பற்றி யோசிப்பது, எழுதுவது என்று கொஞ்சம் கற்பனை உலகில் சஞ்சரிப்பதுண்டு. அதுவும் ஆழமான கருத்துகள், அனுபவத்தில் கற்றவை, மனித இயல்புகள், தத்துவங்கள் என்று (இப்பவும் உண்டு. அதன் பின்விளைவுகள் ஏராளம்.!!!) அதனால் படிப்பில் கவனம் குறைவு. அப்படி யோசித்துக் கொண்டிருப்பதையும் கலாய்ப்பார்கள்.  ஹாஹாஹா. ஹூ கேர்ஸ்!

“அவ தூங்கி விழுந்தாலும், ‘நான் தூங்கலை, யோசிக்கிறேன்னு’ சமாளிப்பா. தூக்கத்துல நேத்து கூட ஏதோ ஒரு கவிதை இங்கிலிஷ்ல சொன்னாளே”

“போடா, ஐன்ஸ்டீனுக்கு கவிதை எழுத வருமா என்ன?”

“அவ எழுதினது இல்லடா ஏதோ ட்ராமா எழுதறா அதுல தாகூர் போயம் ‘வெயிட்டிங்க்’ னு ஏதோ…”

அப்படி எதுவுமே நடந்திருக்காது ஆனால் அவர்களுக்கும் பொழுது போக நான் தான். ஹூ கேர்ஸ்!  

என் நட்பு வட்டம் பெரிது. சுவாரசியமாகக் கதை அளப்பேன். நாடகம், பாட்டு, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி, மூன்று கேம்ஸ் டீமில் செலக்ஷன் என்று இருந்ததால் சும்மானாலும் ஒரு கூட்டம் இருக்கும். ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை. 

இலக்கண விதிப்படியும், ஹைக்கூ வடிவிலும் கவிதை எழுதியதுண்டு!! தமிழ் ஆசிரியை பாராட்டி ஊக்கப்படுத்தியதுண்டு. அது இறந்தகாலம். உங்களால நம்பமுடியலை இல்லையா!! ஹிஹிஹி!! நிகழ்காலம் அப்படி! என்ன செய்ய? நம்ப முடியாத அளவு அப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!! போனா போகுது விடுங்க!

குடும்பம் மட்டுமல்ல, ஊருக்கே நாட்டாமை எங்கள் பாட்டி. மற்ற பெரியவர்களில் சிலர் ஆசிரியர்கள். வீட்டில் படிப்பு. படிப்பு. படிப்பைத் தவர வேறொன்றுமில்லை. படிப்பு ஒன்றுதான் சோறு போடும் வேறு எதுவும் சோறு போடாது என்ற அந்தக்காலத்து மத்தியதரக் குடும்பத்திற்கும் கீழான குடும்பத்து சித்தாந்தம். 

கேக்கணுமா?! வாண்டுங்க எல்லாம் ஸ்கூல் விட்டதா வீடு வந்தமான்னு இருப்பார்கள். ராத்திரி முழிச்சிருந்து படிப்பாங்க. ரேங்க் வேற. அதனால் வீட்டில் நல்ல பெயர்.

நாம அப்படியா? பெரும்பாலும், கேம்ஸ், அந்தப் போட்டி இந்தப் போட்டின்னு ஊரைச் சுத்திட்டு வீட்டுக்கு 6.40 பஸ்ஸைப் பிடிச்சு 7.15, 7.30 க்கு வந்தா….அப்பவும் பாருங்க நான் ரொம்ப சமத்தாக்கும். எத்தனை பிசியா இருந்தாலும் 6.40 பஸ்ஸை மிஸ் பண்ணாம வந்துருவேனாக்கும்! அப்புறம் நடக்கறது எல்லாம் கிட்டத்தட்ட வடிவேலு காமெடி ஸ்டைல்.

“நீ போட்டிக்குத்தான் போனேன்னு சொல்ல வேண்டியதுதானே? பெரிசா உதார் விடுவியே தைரியசாலியாட்டம்"

“எவ்வளவு திட்டினாலும், அடிச்சாலும், சுரணை இல்லாத எருமை, சட்டம் பேசுற சட்டம்பி” ன்னு பாட்டியும், அம்மாவும் திட்டினப்ப இதுங்க எல்லாம், “கீதா நல்லவ. லேடி ஐன்ஸ்டீன்! அவ ஏதோ போட்டிக்குத்தான் போனா அதான் லேட்டு”ன்னு சப்போர்ட் பண்ணினாங்க" என்று நான் அப்பாவியாய் சொல்ல…….மீண்டும் சிரிப்பொலி கேட்கும். ஹூ கேர்ஸ்?! 

எவ்வளவு வைச்சு வாங்கினாலும் நான் வழக்கம் போல் சாமியாடிடுவேன். இதற்காகவே, அம்மாவை ஐஸ் வைச்சு, பாட்டிக்குத் தெரியாம கட்டங்காபி வேற குடிச்சு ராத்திரி படிக்கறமோ இல்லையோ சும்மா முழிச்சிருப்போம்னு முயற்சி எல்லாம் கூட செஞ்சேன். ம்ஹூம். சாமியாட்டம்தான்! கலாய்த்தல்தான்.

இப்போதும் கூட அவர்கள் என்னை இரவு 9 மணிக்கு மேல் அழைத்தால் மிஸ்ட் காலாகத்தான் இருக்கும். “சாமியாடிட்டியா? கம்ப்யூட்டர் பத்திரம்” ன்னு மெசேஜ் வேற. பெரும்பாலும் நானே என்னைக் கலாய்த்து முந்திக் கொண்டுவிடுவேன்!

சீக்கிரம் படுக்கச் சென்று காலையில் 4 மணிக்கு எழும் பழக்கம் அந்தச் சிறுவயதிலேயே வந்துவிட்டது. தொட்டில் பழக்கம்! பாட்டி என்னை 4 மணிக்கு எழுப்பிக் கோயிலில் கோலம் போட அழைத்துச் செல்வார். 

இத்தனை கலாய்த்தாலும் அத்தனைபேரும் என்னிடம் மிக மிக அன்பு உடையவர்கள். I AM BLESSED! எனக்கு ஏதேனும் ஒன்று என்றால் உடனே உதவிக் கரம் நீட்டிவிடுவார்கள்.

இன்னும் நிறைய உண்டு. ஆனால் எதுவும் என் தன்னம்பிக்கையைத் தளர்த்தியதில்லை. ரசித்து சிரித்துவிடுவேன். அதே வேளையில் நான் யோசித்தது, எல்லோர் மனதும் கலாய்த்தலை ஏற்கும் அளவு வலுவானதாக இருக்காது. சிலர் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கி விடுவார்கள். அது மனச்சோர்வு, மனப்பிறழ்விற்கு இட்டுச் செல்லும் ஆபத்துண்டு. எனவே கலாய்ப்பதிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுவே அப்பாடம். நினைவுகள் தொடரலாம்!!! 

(பி.கு. கல்வி, உளவியல் என்று வந்தா கருத்து கண்ணாயி ஆகிடுவோமே!!! (கருத்து கந்தசாமி ஆண்பால்!). அப்படி, மதுரைத் தமிழனின் சமீபத்தியஅருமையான பதிவு என்னைத் தூண்டியது. மதுரையும் நான் பதிவாகப் போடுவேனோ என்று சொல்லியிருந்தார். பதிவாக எழுதலாம் என்று நினைத்து எழுதத் தொடங்கி……கோர்வையாக எழுத வராததால் அதைக் கொஞ்சம் ஆறப் போட்டிருக்கிறேன். அதனால், அடுத்து எழுத நினைத்தவை இப்போது.)


-----கீதா