தோல்வி
கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும்
பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் தேறிய தேர்வில் தோற்ற
2% த்தில் ஒரிரு மாணவ மாணவியர்கள் உயிர் துறந்ததைக் கடந்த சில மாதங்களில் கண்ட நாம்
அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறோம். தோல்வியையே ஏற்றுக் கொள்ளாத ஒரு தலைமுறை வளர்ந்து
வருகிறதொ? என்ற வருத்தம் நம் எல்லோர் மனதிலும் பாலைவனமாய் பறந்து விரியத் தொடங்கிய
வேளையில், பாலைவனச் சோலையாய் ஃபயாஸ் எனும், தோல்வி கண்டு துவளாத, 4 ஆம் வகுப்பு மாணவனின்
களங்கமில்லா, உண்மையான, உணர்வு பூர்வமானத் தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகள் நம்
மனதில் பூ மழையாய்ப் பெய்கிறது.
படம் - நன்றி இணையம்
மொபைலில்
‘லைவாக’ எல்லோரும் அவரவர் திறமைகளைப் பேசியும், பாடியும், வரைந்தும் காண்பிப்பதைக்
காணும் நம் நாயகனான ஒன்பது வயதான முகம்மது ஃபயாஸுக்கும் ஓர் ஆசை. காகிதத்தில் பூ செய்யத்
தெரிந்த தானும் தன் திறமையை எல்லோருக்கும் காண்பித்து “லைக்” வாங்க வேண்டும், பெற்றோர்களும்
சகோதரிகளுக்கும் தெரியாமல் அறையின் கதவைத் தாளிட்டு, மொபைலின் முன் “லைவாக” ஒரு காகிதத்தை
எடுத்து அதைக் காட்டி இப்படி ஒரு காகிதத்தை எடுத்து, அதை இப்படி மடக்கி…..” என்று விவரித்த
வண்ணம் பூவை உருவாக்க முயற்சி செய்கிறான்.
பல
முறை தவறின்றி செய்தவன்தான் என்றாலும் அன்று காணொளியில் காண்பிக்க, அதுவும் “லைவாக”
செய்த பொது சரியாகச் செய்ய முடியவில்லை! தோல்வி! தோல்வி கண்ட அவன் மனம் துவளவில்லை.
“இப்படிச் செய்யும் போது சிலருக்கு நல்லா வரும். சிலருக்கு நல்லா வராது. எனக்குச் சரியா
வரலை. பரவாயில்ல. அப்படித்தான் சில நேரத்தில் சரியா வராது” என்று சொல்லி தன் “லைவ்வை”
முடித்து அதைp பகிராமல் விட்டுவிட்டான். ஆனால் எப்படியோ அவனது மூத்த சகோதரியின் கண்ணில்
அது பட, அவர்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப, ஃபயாஸின் தோல்வி கண்டு துவளாத
தெளிவான தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகளும் செயலும் வைரலாகிவிட்டது.
கேரள
“மில்மா” (ஆவின் போல) அவனது வார்த்தைகளைத் தங்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்தியது.
பரிசாக அவனுக்குப் பணத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியும் வழங்கியது. கிடைத்த பணத்தை
முதல்வரின் கோவிட் நிதிக்கு வழங்கியதோடு மீதத்தை அவன் வீட்டருகே உள்ள ஓர் ஏழைப் பெண்ணின்
திருமணத்திற்கான செலவிற்கும் வழங்க முடிவும் செய்திருக்கிறான். அப்படி ஃபயாஸை நாயகனாக்க
உதவிய குடும்பத்தினர் எல்லோராலும் பாராட்டப்படுகின்றனர்.
தோல்வி
கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் எனும் உண்மையை உணர்த்திய ஃபயாஸின் செயலும் வாக்குகளும் எல்லோருக்கும் தன்னம்பிக்கையூட்டும் ஒன்றாக நிலைபெற்றிருக்க வாழ்த்துவோம்.
-----துளசிதரன்