படம் இணையம்.
பிரகாஷ் ராஜ், சமீபத்தில் நடித்த ஒரு
நகைக்கடை விளம்பரத்தின் உபயத்தில் பரபரப்பாகி சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும்
உள்ளாகியிருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். பெண்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லப்பட்ட
விமர்சனம். எதிர்ப்பு விளம்பரத்திற்கல்ல அதில் நடித்த பிரகாஷ்ராஜிற்கு என்பதை அறிந்த
போது ஆச்சரியமாக இருந்தது.
அந்த விளம்பரத்தில் சொல்லப்படும்
வசனம்/கருத்து பிரகாஷ்ராஜ் அவர்களின் தனிப்பட்டக் கருத்தாக இருந்திருந்தால்
விமர்சிக்கலாம். ஆனால், அதுவும் கூட அவர் பொது இடத்தில் முன்வைத்தால். விளக்கம்
கீழே. ஆனால், அவர் தனது வருமானத்திற்காக நடித்த ஒரு விளம்பரத்தில், அதன் இயக்குனர்
அவரை இயக்கியதை அவர் செய்திருக்கின்றார். அவ்வளவே. இதனை இத்தனை உணர்வு பூர்வமாக
அணுக வேண்டுமா? அணுகுவதில் அர்த்தம் உள்ளதா?
நடைமுறை அந்த விளம்பரத்தில் வருவது போலத்தானே உள்ளது.
பிரகாஷ் ராஜ் அந்த வர்த்தக விளம்பரத்தில்
நடித்திருக்கக் கூடாது என்றால் அதை ஒரு கோணத்தில் சரி என்றாலும், மற்றொரு
கோணத்தில் பார்த்தால், வர்த்தகம்/வணிகம் என்று வந்து விட்டால், பெரும்பான்மையான வர்த்தகங்களில்/வணிகங்களில்
நெறி முறைகள்(எதிக்ஸ்) புறம்தள்ளப்பட்டு லாபம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். அதுதான்
வர்த்தக உலகம். பிசினஸ் இஸ் பிசினஸ். நோ
செண்டிமென்ட்ஸ்.
திரைப்படங்களில் பெண்களை
இழிவுபடுத்தும் காட்சிகள் இல்லையா? வசனங்கள் உட்பட. நம் தமிழ் திரைப்படங்களில் பெண்கள்
மிகவும் அநாகரீகமான உடைகள் அணிந்தும், சில விரும்பத் தகாத கதாபாத்திரங்களிலும்
நடிப்பதில்லையா? கல்லூரிக்கு, நடைமுறையில் இல்லாத உடைகளை அணிந்து வருவது போல், காட்சிகள் திரைப்படத்தில் இல்லையா? ஒரு
திரைப்படத்தில் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியையே அப்படி உடை அணிந்து வருவது
போலத்தானே காட்சிப்படுத்தப்பட்டது? .அப்போது அந்த நடிகைகளை, நடிகர்களை நோக்கி ஏன் கேள்விகள்
எழுப்பப்படவில்லை?
இந்தக் கோணத்தை எடுத்துக் கொண்டால், சரி,
அந்தத் திரைப்படத்தில் இயக்குனரின் சீன் அது அதனால் அப்படிப்பட்ட உடை என்று நியாயப்படுத்தினாலும்
அந்த நடிகைகள், பெண்களை இழிவுபடுத்தும், ஆசிரியர்களை இழிவுபடுத்தும் கதாபாத்திரம்
என்று சொல்லி அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கக் கூடாதுதானே? நாம் ஏன்
கேள்விகள் எழுப்பவில்லை? அவர்கள் அதை வெறும் நடிப்பு, வருமானம் என்ற கோணத்தில்தானே
செய்தார்கள் என்றால் பிரகாஷ்ராஜும் அதைத்தான் செய்திருக்கின்றார்.
இங்கு “எங்கள் ப்ளாகில்” http://engalblog.blogspot.com/2015/08/blog-post_26.html பல்சுவைக் கதம்பம் பகுதியில்
வாலியைப் பற்றிப் பகிரப்பட்டதிலிருந்து…..
கவியரங்கம் முடிந்ததும் ஒரு முதுபெரும் தமிழ்ப்புலவர் வாலியிடம் "ஐயா.. இவ்வளவு அற்புதமாக் கவியரங்கத்துல பாடுற நீங்க, சினிமாலப் பாட்டுல மட்டும் வர்த்தக நோக்கோடு செயல்படற மாதிரித் தெரியுதே.." என்றாராம்.
அதற்கு வாலி,
"இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குத்
தாலாட்டும் தாய்;
அங்கே நான் விட்டெறியும்
எலும்புக்கு வாலாட்டும் நாய்"
எலும்புக்கு வாலாட்டும் நாய்"
என்றாராம்.
(நன்றி ஸ்ரீராம்)
இது திரைப்பட நடிகர்களுக்கும், விளம்பரங்களில்
வருபவர்களுக்கும் பொருந்தும். அதனால்தானே
நாம் அவர்களை நடிகர்கள் என்கின்றோம்.
விளம்பரங்கள் நொடிக்கு ஒருதடவை
வருவதால் அவை மக்களின் மனதில் பதியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டால்.... விளம்பரங்கள்
ஒரு சில மாதங்கள்தான்....ஆனால், தினமும், நாள் முழுவதும் வீட்டு வரவேற்பரையில்
வந்து, பெரும்பான்மையான பெண்களை வசீகரித்துக் கட்டிப் போட்டிருக்கும், பெண்களை
வில்லிகளாகச் சித்தரித்துக் கீழ்தரமான வசனங்கள் பேசப்படும் தொடர்களை எந்த வகையில்
சேர்க்கலாம்? ஏன் எதிர்ப்புகள் இல்லை? அதிலும் வரதட்சணைக் கொடுமைகள்
காட்சிப்படுத்தப்படுகின்றனதானே!
அது நடிப்பு என்றால் பிரகாஷ்ராஜ் பேசியதும்
விளம்பரத்திற்கான நடிப்பே.
நிற்க. மற்றொரு பார்வை. இப்போது விளம்பரத்தின்
கருத்தை ஒத்த சமூகப் பார்வை. ஒரு வேளை,
பரந்த எண்ணங்கள் உள்ள ஒரு சில பெற்றோர்களுக்கு இந்த விளம்பரம் “டென்ஷனை”
ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், பொதுவாக, விளம்பரத்தில் சொல்லப்பட்டது போல்,
பெரும்பான்மையான பெற்றோர்கள், குறிப்பாக நடுத்தரவர்கத்தைச் சேர்ந்தவர்களும்,
அதற்குக் கீழே உள்ள கோட்டில் உள்ளவர்களும், பெண் குழந்தைகள் உள்ளவர்கள்,
வேலைக்குப் போகும் பெண் குழந்தைகள் உள்ளவர்களும் பேசுவதுதான். பெண் குழந்தைகள்
உள்ள எனது உறவினர்கள் பலரும் அவ்வப்போது நகைகள் வாங்கிச் சேமிக்கும் போதும் நான் கேட்டதுண்டு.
“ஏன் இப்படி நகைகளை வாங்கிச்
சேமிக்கின்றீர்கள்? அவர்களுக்கு நல்ல கல்வி கொடுத்து, நல்ல வேலைக்கு அனுப்பி,
அந்தக் குழந்தையை தன் காலில் நிற்கச் செய்து, எந்தவிதச் சூழலிலும் வாழ்க்கையைத்
தைரியமாக, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்தச் சமூகத்தில் வாழக் கற்றுக்
கொடுக்கலாமே என்றால், அவர்களின் பதில் இதுதான்.
“ஆமாமா நீ சொல்லுவ...உனக்கு ஒரே
குழந்தை அதுவும் ஆம்பளப் புள்ளை. பொம்பளப்
புள்ள உனக்கு இருந்திருந்தா, என்னதான் பெரிய படிப்பு படிச்சு, வேலைக்குப்
போனாலும், அப்ப தெரிஞ்சுருக்கும் டென்ஷன்....நீ இப்படிச் சொல்லியிருக்கமாட்ட.”
எனது மகன் எனக்குப் பெண்ணாகப்
பிறந்திருந்தால்.....மேலே சொன்னதுதான்.
அது எனது தனிப்பட்டக் கருத்து....அதை இங்குச் சொல்லிப் பயனில்லை. நடைமுறையில்
சாத்தியமில்லாது போனதால், எனக்கு மகனாகிப் போனதால், நிரூபிக்க வழியில்லை. எனவே, நான் அவர்களின் வாதம் சரிதான்
என்பேன்.
அடுத்து நல்ல கணவன், குடும்பம் அமைவது
என்பன போன்ற பல கவலைகள், இருக்கத்தானே செய்கின்றது? என்னதான் சமுதாயம் முன்னேறி
இருக்கின்றது என்றாலும், திருமணங்களில் நகைகள், பட்டுப் புடவைகள், வர்த்தகப் பரிமாற்றம்
(சொத்து, பணம் முதலியவை), வரதட்சணை, அந்தஸ்து, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என்பன
இன்னும் மறைந்ததாகத் தெரியவில்லை. தங்க நகைகள் இல்லாமல் திருமணம் நடக்கின்றதா?
இப்போது அது விற்கும் விலையில் எத்தனைக் குடும்பங்களால் ஒரு குந்துமணி அளவேனும்
வாங்க முடிகின்றது?
ஆண் பிள்ளைகள் இருக்கும்
குடும்பத்தினரோ, ஆண் பிள்ளைகளோ தனக்கு வரப் போகும் பெண் வீட்டிலிருந்து எந்த
நகையும் வேண்டாம், பணமும் வேண்டாம், பெண்ணை அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன். திருமணமும் சிம்பிளாக இருக்கட்டும் என்று சொல்பவர்கள்
எத்தனை பேர் இருக்கின்றார்கள்? ஏன் செய்தித் தாள்களில் கூட இன்னும் வரதட்சணைக்
கொடுமைகள், கொலைகள், தற்கொலைகள் என்று வரத்தானே செய்கின்றது!
(ஒரு சில விதிவிலக்குகள் இருக்கின்றார்கள்
நிச்சயமாக. அதே போன்று பெண்கள் வீட்டார், கணவனின் வீட்டிலிருந்து பணம் பிடுங்கும் கூட்டமும்
இருக்கத்தான் செய்கின்றன. அதையும் நான் அறிவேன். இங்கு நான் சொல்லி இருப்பது
பெரும்பான்மை சமூகத்தையே)
திருமண வயதில் பெண் இருந்து திருமணம்
தாமதித்தாலோ, நிகழவில்லை என்றாலோ பெற்றோர்கள் பெரும் கவலைக்கு உள்ளாவதை நான்
பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் எனது குடும்பத்திலும், நட்பு வட்டத்திலும்.
திருமணக் கவலை ஒரு புறம் இருக்க, பெண்
குழந்தைகள் வெளியில் தனியாகச் செல்ல முடிகின்றதா? பெண் குழந்தைகள் வீடு திரும்பும்
வரை கலவரப்படாமல் நீங்கள் இருக்கின்றீர்களா? தாமதமானால் நிம்மதியாக இருக்க
முடிகின்றதா உங்களால்? இப்போது நிகழும் நிகழ்வுகள் உங்கள் மனதில் நிழலாடத்தானே
செய்கின்றது? ஒரு சில பெற்றோர் வேண்டுமானால் தைரியமாக, நிம்மதியாக இருக்கலாம். ஆனால்,
பெரும்பான்மையான பெற்றோர் நிம்மதியாக இருக்க முடிவதில்லைதானே? அதையும் நாம்
டென்ஷன் என்று எடுத்துக் கொள்ளலாம் தானே? நண்பர் விசுAwesome அவர்கள் இதை அழகாகச் சொல்லி
இருந்தார். http://vishcornelius.blogspot.com/2015/08/blog-post_22.html. ஆம்! அவருக்கும் இரு பெண்-ராசாத்திகள் – முதல் டென்ஷன், இரண்டாம்
டென்ஷன் என்று!
எனவே, நம் சமுதாயம் இப்படி இருக்கும்
வரை, மாறாத வரையில், பெண்கள், திருமணம் போன்றவற்றின் மீதான சமுதாயப் பார்வை மாறாத
வரையில், நமது பார்வையும், எண்ணங்களும் மாறாத வரையில் டென்ஷன் என்ற வார்த்தை நிலவத்தான்
செய்யும். விளம்பர வசனம் தவறே இல்லை! உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றது!
----கீதா
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர்கள் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதும் அதற்கான ஏற்பாடுகள் நம் புதுகை அன்பர்களால் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது என்றும் அவ்வப்போது புதுகையிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. சந்திப்போம! இதைப்பற்றிய பதிவு, விரிவாக அடுத்து வருகின்றது...
,