கடந்த
ஜூலை 2 ஆம் தேதி மதியம் வயநாடு நூல்புழா பஞ்சாயத்தில் குற்றிச்சாடு கிராமத்தைச்
சேர்ந்த 23 வயதுள்ள பாபுராஜ் காட்டினுள் விறகு சேகரிக்கப் போயிருக்கின்றார்.
இரவாகியும் திரும்பாது போக அவரைப் பல இடங்களில் தேடியும் காணவில்லை. மறுநாள் தேடிச் சென்றவர்கள்
கண்டதோ அவரது தலை பாகம் மட்டும். புலி அவரது உடல் பாகம் முழுவதும்
தின்றுவிட்டிருந்தது.
கடந்த ஃபெப்ருவரி 9 ஆம் தேதி இதே
பஞ்சாயத்தைச் சேர்ந்த மூக்குத்திக் குன்று புத்தூரைச் சேர்ந்த 62 வயதுள்ள
பாஸ்கரனைக் கொன்று தின்று இருந்த்து. நான்கு தின்ங்களுக்குப் பிறகு அங்கிருந்து 2
கிமீ தொலைவிலுள்ள நீலகிரி மாவட்டம் பாட்ட வயலில் உள்ள தேயிலைத் தோட்ட்த்தில் வேலை
செய்து கொண்டிருந்த 32 வயதுள்ள மகாலட்சுமியையும் கொன்றதால், ஃபெப்ருவரி 18 ஆம்
தேதி தமிழ்நாட்டு வனவிலாகாவினர் அப்புலியைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது இதோ
மீண்டும் வேறு ஒரு புலி மனிதர்களைக் கொல்லத் தொடங்கி இருக்கிறது. இப்புலியும் அதிகம் தாமதியாமல்
கொல்லப்படும்தான். மீண்டும் சில மாதங்களுக்குப் பின் வேறு ஒரு புலி தென்படலாம்.
நூல்புழையைச் சேந்த ஏதேனும் ஒரு மனிதர் அதற்கு உணவான பின் அதுவும் கொல்லப்படலாம்.
இது தொடர்கதையாக முதுமலைக் காடுகளில் புலிகள் இல்லை என்ற நிலை நாளடைவில்
ஏற்படலாம்.
Belinda wright
“வயநாடு
மாவட்டத்தில், உள்காடுகளில் புலிகள் வாழும் இடங்களில் ஏற்படும் மனித நடமாட்டம்,
புலிகளை அங்கிருந்து வேறு இடம் தேடிச் செல்ல வைக்கிறது. இதற்குக் காரணமாகிறவர்கள் வேறு
யாருமல்ல அங்கு சுற்றுலா விடுதிகள் நடத்துபவர்களே! இது இங்குமட்டுமல்ல. வட இந்தியக் காடுகளிலும் நடக்கும் ஒன்றுதான்.”
சில நாட்களுக்கு முன் பாலக்காட்டில் வனவிலங்குகளின் தோல் மற்றும் அவையவங்கள் கடத்தல்
பற்றிய தன் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு வகுப்பு கேரள காவல்துறை அதிகாரிகளுக்கு
எடுக்க வந்த பெலிண்டா ரைட்டின் வார்த்தைகள் தான் இது.
லாப நோக்குள்ள சிலருக்கு அதிக லாபம்
கிடைக்க அவர்கள் செய்யும் இது போன்ற தவறுகளுக்கு பலியாடாவது வன விலங்குகளும் வனத்தைச்
சார்ந்த இடங்களில் வாழும் பாவம் மனிதர்களும்.
உண்மையான இக்காரணம் உலகம் அறியாமல் இருக்க அவர்களது லாபத்தின்
ஒருவிகிதம் அரசியல்வாதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைப்பதுதான். காட்டிலிருந்து நாடேறும் புலிகளுக்கு அதற்கான
காரணத்தை நம்மிடம் சொல்ல முடியாவிட்டாலும் அவர்கள் சார்பில் பெலிண்டா சொல்வதை நாம்
உதாசீனப்படுத்த முடியாதுதானே.
புலிகள்
தினமாகக் கொண்டாடப்படும் இன்று (29/7/2015) உலகப் புகழ் பெற்ற எம்மி அவார்ட்
உள்ளிட்ட 14ற்கும் மேலான விருதுகள், புலி மற்றும் யானை பாதுகாப்பு நடவடிக்கைகள்
எடுக்க காரணமானதால், பெற்றவர்தான் பெலிண்டா ரைட்.
1953ல் கல்கத்தாவில் பிறந்து இப்போது டெல்லியில் வாழும் இங்கிலாந்தைச்
சேர்ந்த இவரது தாய் ஆனி ரைட் உயர்ந்த வன இலாகா அதிகரியாக இருந்தவர். நோய்வாய்ப்பட்ட, விபத்துக்குள்ளான வன விலங்குகளைப் பாதுகாக்க சிறிய மிருகக்
காட்சிச்சாலை போன்ற ஒரு மீட்புப் புகலிடம் (Recue home)
அவரது வீட்டிலிருந்தது. அதனால், சிறு வயதுமுதலேயே வன விலங்குகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற அவர் தனது 20
வது வயதில் நேஷனல் ஜியாக்ரஃபி சானலில் ஃபோட்டோ கிராஃபர் ஆனார். அன்றிலிருந்து வன விலங்குகளின் பாதுகாப்பு
மற்றும் பராமரிப்பிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் பெலிண்டா ரைட்.
1973ல்
ப்ராஜக்ட் டைகர் தொடங்கப்பட்டது. இந்தியா
முழுவதும் உள்ள தேசிய மிருகமான புலிகளை மட்டுமல்ல, எல்லா வனவிலங்குகளுக்கும்
தேவையான பாதுகாப்பளிக்க அது காரணமானது.
அது போல் 1994 ல் WPSI ஐ (Wild life protection society of India)
உருவாக்கியவர் பெலிண்டா ரைட். எனவே, அவரது
வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்.
வனவிலங்குகள் நாடேறி மனிதர்களைத் தாக்கக் காரணம்
சமீபத்தில் மிகச் சிறிய அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கூடியது மட்டுமல்ல,
வனவிலங்குகள் வாழும் காட்டின் உட்பகுதியில் மனித நடமாட்டம் அதிகமாவதும் அதற்கான
ஒரு முக்கியமான காரணம் எனில், அதற்குக் காரணமாகின்றவர்கள் கஞ்சா போன்ற போதைச் செடிகள்
தோட்டம் உருவாக்குபவர்களானாலும் சரி, வனவிலங்குகளின் தோல் மற்றும் உறுப்புகளைக்
கட்த்துபவர்களானாலும் சரி, சந்தன மரங்களை வெட்டச் செல்பவர்களானாலும் சரி,
சுற்றுலாவின் பெயரில் ரிசார்ட்டுகள் கட்டுகிறேன் பேர்வழி என்று உட்காடுகளுக்குச் சென்று வனவிலங்குகளுக்கு
இடையூறு செய்பவர்களானாலும் சரி அவர்களுக்கு எத்தனை பண பலமும், படை பலமும் அரசியல்
செல்வாக்கும் இருந்தாலும் சரி, அவர்களை அங்கிருந்து விரட்டி வனப்பகுதிகளில் வன
விலங்குகள் வாழ வழி காண்பதுடன், வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் மனிதர்களும்
வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகாமலும் தடுக்க வேண்டும்.
வியாபம் போன்ற சம்பவங்கள் லஞ்சமும் ஊழலும்
இந்தியாவெங்கும் எவ்வளவு ஆழத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி
இருப்பது போல் இப்போது காட்டில் வாழ வேண்டிய புலியும் பிற வன விலங்குகளும் நாடேறக்
காரணமும் லஞ்சமும் ஊழலுமாகத்தான் இருக்கும். கடமை தவறிய, பணம் பெற்று வனத்தின் புனிதத்
தன்மையைக் குலைத்த அக்கயவர்கள் யாரென்று கண்டறிய வேண்டும். அப்படிப் பயிரை மேயும் வேலிகளையும் பிடுங்கி
எறிய வேண்டும். அதைச் செய்யாமல்
மனிதர்களைத் தாக்கும் வனவிலங்குகள் ஒவ்வொன்றையும் கொன்று குவித்துக்
கொண்டிருந்தால், மிருகங்கள் மட்டுமல்ல காடுகளும் இல்லாத நாட்டில் நாம் வசிக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நாடு பாலைவனமாக மாறி இறுதியில்
மனித இனத்திற்கே வாழத் தகுதி இல்லாத இடமாகிவிடும். அப்படி ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில்
நாம் ஒவ்வொருவருவரும் இதற்கு எதிராகக் குரல் கொடுப்போம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது உண்மையாகும்
வரை!
படங்கள்: நன்றி இணையம்
(கீதா இன்று பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை வலைப்பக்கம் வருவது சற்று குறைவாக இருக்கலாம். இடையிடையில் வர முயற்சிக்கின்றோம். )
(கீதா இன்று பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை வலைப்பக்கம் வருவது சற்று குறைவாக இருக்கலாம். இடையிடையில் வர முயற்சிக்கின்றோம். )