“உலகம்
ஜன்னல் வழியாகத்தான் எனக்கு அறிமுகமானது” இதுதான், எழுத்தாளர் எஸ் ரா – எஸ் ராமகிருஷ்ணன்
அவர்களின் புத்தகமான “தேசாந்திரி” யில் முதல் வாக்கியம். நம் எல்லோருக்குமே அப்படித்தான் என்றாலும் அதன் வழி
நாம் எதைப் பார்த்தோம் என்பது வேறு!! நமது பார்வையிலிருந்து எதைக் கற்றோம் என்பதும்
வேறு!
சில
மாதங்களுக்கு முன் இரு நபர்களிடம் பேச நேர்ந்தது. இருவரிடமும் ஒரே கேள்விதான் கேட்டேன்.
“தீபாவளி
எல்லாம் நல்லாக் கொண்டாடினீங்களா? நல்லபடியாகப் போச்சா?”
ஒருவர், “அதை ஏன் கேக்கறீங்க மேடம், என்னத்த சொல்லறது?
நான் எல்லாம் எங்கேங்க தீபாவளி கொண்டாடறது?” என்று மிகவும் சோகத்துடன் பதிலளித்தார்.
மற்றொருவர்,
“சூப்பரா போச்சு மேடம். நல்லா எஞ்சாய் பண்ணினேன் மேடம்” என்று நிகழ்வைப் பற்றி விவரித்தார்.
இருவரின் பதில்களிலும் எவ்வளவு வேறுபாடு!
இரண்டாமவர்
மிக மிக நேர்மறை எண்ணம் கொண்டவர். எப்போதும் மகிழ்வாக இருப்பவர். தன்னை மகிழ்வாக வைத்துக்
கொள்பவரும் கூட. தான் பார்த்த படங்கள், தொலைக்காட்சியில் பார்த்ததானாலும் சரி, திரையரங்கில்
பார்த்ததானாலும் சரி அதைக் குறித்து விவரிப்பார். குறும்படம் பற்றி பேசுவார். நீங்கள்
இந்தப் படம் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்பார்.
நான்
மேற்சொன்ன இருவருமே பார்வையற்றவர்கள். ஆனால், இரண்டாமவரின் பதிலைப் பார்த்தீர்கள் அல்லவா??!!
அவர், தான் பார்வையற்றவர் என்பதை மறைக்க கண்ணாடி கூட அணிவதில்லை என்பது அவர் தானும்
எல்லோரையும் போலத்தான் என்ற அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு!
இரண்டமவரை
நாம் எல்லோரும் அறிவோம். வலைப்பதிவர். அவருக்கு. என் மகனின் வயதுதான் ஆகிறது.
அவர்
என்னிடம், தான் படத்தில் ரசித்த காட்சிகள், பயணத்தில் ரசித்த இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள்
என்று அனைத்தையும் விவரிப்பார். அவரது பயணக் குறிப்புகளை வாசித்தீர்கள் என்றால் ஏதோ
அவர் நேரில் கண்டது போலவே இருக்கும். அவர் பார்வையற்றவர் என்பது எனக்கு முதலில் தெரியாது.
எனவே எனக்குச் சிறிது கூட ஐயம் ஏற்படவேயில்லை.
அவர்
பார்வையற்றவர் என்பதை அறிய நேர்ந்த போது நான் வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். அலைபேசியில்
பேசிக் கொண்டும், அவரது எழுத்துகளை வாசித்துக் கொண்டும் இருந்த நாங்கள் அவரை முதன்
முதலாக விசு அவர்களின் புத்தக வெளியீட்டின் போது வேலூரில் நேரில் சந்திக்க நேர்ந்தது.
துளசிக்கு அடுத்து அமர்ந்திருப்பவர்தான் மகேஷ் அடுத்திருப்பவர் அவரது தம்பி, முத்துநிலவன் அண்ணா
அவர்
வேறு யாருமல்ல திருப்பதி மகேஷ். அவர் தனது பெற்றோருடன் திருப்பதியில்தான் வசிக்கிறார்.
தாய்மொழி தெலுங்கு என்றாலும் பள்ளிப்படிப்பை அவர் சென்னையில், அடையாரில் உள்ள பார்வையற்றோருக்கான
பள்ளியில் படித்ததால் தமிழ் நன்றாகவே பேசுவார், எழுதுவார். தமிழில் ஆர்வம் உள்ளவர்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அவரது வலைத்தளம் http://tirupatimahesh.blogspot.com
நேரில்
சந்தித்த பின்னர் எங்களது நட்பு இன்னும் விரிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள்
இருவரும் அலைபேசியில், ஸ்கைப்பில் அளவளாவது உண்டு. அப்படி ஒரு முறை அவரை அழைத்த போது,
“மேடம்
ஒரு மணி நேரம் கழித்து பேசட்டுமா? வேற ஒன்னுமில்லை, டிவில ஒரு படம் பார்த்துட்டுருக்கேன்,
ரொம்ப நல்ல சீன் போய்ட்டுருக்கு என்பார் இல்லையென்றால் டிவியில் மகாபாரதம் பார்த்துட்டுருக்கேன்.
பார்த்துட்டு வரேன் மேடம்” என்பார். எனக்கு வியப்பு ஏற்பட்டதில்லை. அதுதான் மகேஷின்
பார்வை!!!
வலைத்தளங்கள்,
புத்தகங்கள் வாசிப்பார். அதை விமர்சிப்பார். கணினி தொழில் நுட்பம் குறித்து அவரிடம்
தெரிந்து கொள்ளலாம். அத்தனையும் விவரிப்பார். பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர்.
தான் கேரளாவைப் பார்க்க ஆசைப்படுவதாக என்னிடம் சொல்லி அதற்கான ரயில்கள் அவரது ஊரிலிருந்து
என்னென்ன இருக்கின்றன, என்று அனைத்து விவரங்களையும் அட்டவணையைப் பார்க்கவே வேண்டாத
அளவிற்கு விரல் நுனியில் வைத்திருந்தார்.
பயணம் மேற்கொண்டு அதனைப் பதிவாகவும் எழுதினார். என்னிடம் அவர் இயற்கைக் காட்சியை
விவரித்த போது அசந்து போனேன். அவர் வலை எழுத்தை வாசித்தால் அவர் பார்வையற்றவர் என்பதை
அவர் சொல்லவில்லை என்றால் அறியவே முடியாது!
புதுக்கோட்டையில்
நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்கு அவர் திருப்பதியிலிருந்து வேலூர் வந்து, வேலூரில்
இருக்கும் நம் மற்றொரு வலைப்பதிவர், சிவசக்தி-அன்பேசிவத்தின் துணையுடன் வந்தார். அன்பேசிவம்
அவரை அழைத்து வந்தார் என்பதைவிட அன்பேசிவத்தை மகேஷ்தான் அழைத்து வந்தார் என்று சொன்னால்
அது மிகையல்ல. திருச்சியில் இறங்கியதும் எந்த நடைமேடைக்குச் சென்று புதுக்கோட்டை ரயிலைப்
பிடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முதல் நிகழ்வு நடக்கும் இடம், முகவரி என்று விவரித்து
அழைத்து வந்தது மற்றும் ரயிலில் அவர் பேசிக் கொண்டே வந்த விசயங்களை நாம் கூட அறிந்திருக்க
மாட்டோம் அந்த அளவிற்கு அவர் பல விசயங்களை மிகவும் யதார்த்த ரீதியில் பேசிக் கொண்டே
வந்தார் என்றும் அன்பேசிவம் என்னிடம் சொல்லிச் சொல்லி வியந்து போனார். நானும் அதை வழிமொழிவேன்.
மகேஷிடம்
என்ன துறை பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம். அவர் அறிந்தும் வைத்திருக்கிறார். அறிந்திராதவற்றை
நம்மிடம் கேட்டும் தெரிந்து கொண்டு அடுத்த முறை பேசும் போது கூடுதல் தகவல்கள் தருவார்.
நமக்கு வியப்பு மேலிடும். புள்ளி விவரக் கில்லாடி அவர்!
நான்
அவரிடம் பேசும் போது, “மகேஷ், நீங்கள் இந்தப் படம் பாத்தீங்களா? அந்த இடத்துல இதைப்
பாத்தீங்களா?” என்று எல்லோரிடமும் பேசுவதைப் போலத்தான் படங்கள், இடங்கள், புத்தகங்கள்
பற்றி எல்லாம் பேசுவேன். மேலும் படியுங்கள் என்று உற்சாகப்படுத்தினால் அவர் அதற்கு
மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது குறித்துப் பேசுவார். அவரிடமிருந்து இது வரை எந்த
எதிர்மறையான எண்ணமும் வெளிப்பட்டதில்லை. தான் பார்வையற்றவர் என்பதை ஒரு போதும் வெளிப்படுத்திக்
கொள்வதில்லை. அசாத்தியத் தன்னம்பிக்கையுடைய இளைஞர்.
தற்போது
ஸ்டேட் பேங்கில் வேலை கிடைத்து, பயிற்சியும் முடிந்து, சென்னை வட்டம் என்பதால் திருத்தணி
கிளையில் கிடைத்து வேலை செய்கிறார். திருப்பதியிலிருந்து தினமும் காலை 2 மணி நேரப்
பயணம், மாலை 2 மணி நேரப்பயணம். தனது புது வேலை
பற்றி அடுத்த முயற்சி எல்லாமும் அவர் பேசினார். என்னை வியக்க வைக்கும் ஓர் இளைஞர்.
சமீபத்தில்
நம் கரந்தை சகோ தன் வலைத்தளத்தில் மகேஷ் போன்ற ஒருவரான வெற்றிவேல் முருகன் என்பவரைப்
பற்றி அவரது தன்னம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் தொடராக எழுதியதை அறிந்து வியந்தோம்.
ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் அறிவோம். இன்னும் பல பார்வையற்ற ஆனால் நேர்மறை எண்ணங்களுடன்,
தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் மற்றும் வாழ்ந்து வரும் அனைவருமே இவ்வுலகைத் தங்கள்
அகக்கண் எனும் ஜன்னலின் வழியாக நோக்கியதால்/நோக்குவதால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுச்
சாதித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர்/பெறுகின்றனர். அப்பட்டியலில் நம் மகேஷும் இடம்
பெறுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை!
எல்லாப்
புலன்களும் இருந்தும் பல மனக்குறைகளுடன் வாழ்ந்து வரும் நாம், இவரையும், இவர் போன்று
வாழ்பவர்களையும் பார்த்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. மகேஷ் போன்றோரைக்
கண்டு உற்சாகமடைந்து, நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டு, நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன்
நாமும் ஜன்னல் வழி இவ்வுலகைப் பார்த்தாலும், நம் அகக்கண் வழியாகப் பார்ப்போம்.
Kindness
is the language which the deaf can hear and the blind can see - Mark Twain
The
only thing worse than being blind is having sight but no vision - Helen Keller
----கீதா