திங்கள், 12 ஜனவரி, 2026

தலக்காடு - 7 - கீர்த்தி நாராயணர் கோவில் - 2

  தலக்காடு- 1,  2345 , 6

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

சென்ற தலக்காடு பதிவு 6ல் கீர்த்திநாராயணர் கோவிலில் முகப்பு மண்டபம் படங்களைப் பகிர்ந்திருந்தேன்! இதோ மண்டபத்துள் ஏறி நுழையப் போகிறோம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா இதோ ஏறிவிட்டோம். 

ஏறியதும் வலப்புறம் இராமானுஜர். அரசன் விஷ்ணுவர்தன் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம் இல்லையா? அவன் வைணவ மதத்திற்கு மாறிய பிறகு நிர்மாணித்த விஷ்ணு கோவில்களில் இராமானுஜர் சன்னதியையோ திருஉருவத்தையோ நிறுவினான் என்று வரலாறு. 

இடப்புறம் பெருமாளும் கீழே தாயார். வலப்பக்கம் சரியாகத் தெரியவில்லை.  இவை முகப்பு மண்டபத்தில். இனி கீழே கோவில்

முகப்பு மண்டபத்திலிருந்து இறங்குகிறோம். நேரே தெரிவதுதான் கீர்த்தி நாராயணர் மூலவர் உற்சவர் இருக்கும் கோவில். சின்ன கொடிமரம் தெரிகிறதா? வலப்பக்கம் நாங்கள் நடந்து வந்த கூடாரப் பாதை தெரிகிறதா?

முகப்பு மண்டபத்திலிருந்து இறங்கியதும், வலப்பக்கம் ஆஞ்சனேயர் என்று நினைக்கிறேன். மூடியிருந்த சன்னதியை ஒரு க்ளிக்.

இப்ப முகப்பு மண்டபத்தை உள்ளிருந்து க்ளிக்ஸ் கீழுள்ள படங்களும். இடப்பக்கம் ஆஞ்சநேயர் சன்னதி என்று நினைத்த... மூடியிருந்த சன்னதி. கொடிமரம். 

கொடிமரம் முழுவதும் தெரிகிறது இல்லையா?

முன்மண்டபத்தை உட்பக்கத்திலிருந்து இடப்பக்கம் வலப்பக்கம் க்ளிக்ஸ்
கோவிலுக்குள் ஏறப் போகிறோம் ஏறும் முன் படிகளின் சைடில் இந்த வடிவம். மறுபுறமும் இதே வடிவம்தான். இது என்ன விலங்கு? 

கோவிலின் உள்ளே போகும் முன் இடப்புறம். zig-zag வடிவம்-மடிந்து மடிந்து... நுழையும் இடத்தில் உண்டியல் தெரிகிறதா? வலப்புறம் படம் கீழே அடுத்திருப்பது.

கோவிலின் அடித்தளம் " ஜகதி " என்று அழைக்கப்படும் சுமார் ஒரு மீட்டர் உயரமுள்ள ஒரு மேடையில், முழுவதையும் பார்த்தால் நட்சத்திர வடிவத்தின் மேல் கோவில் எழுப்பப்பட்டிருப்பது தெரியும். (கீழே காணொளியில் தெரியும் என்று நினைக்கிறேன்) இக்கோவில் ஹொய்சாளர் கலையின் ஆரம்பகால வடிவத்திற்கு ஓர் உதாரணம். சோழர்களை வென்றதைக் குறிப்பிடும் வகையில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

உயரமுள்ள ஒரு மேடையில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது தெரிகிறது இல்லையா?

ஹொய்சாளர் கலையில் தூண் வடிவங்கள் கொஞ்சம் க்ளோசப்பில். லேத்தில் வெட்டி வடிவமைத்தது போன்று தூண் வடிவங்கள். சோப்ஸ்டோன் எனப்படும் மென்மையான கல்லைப் பயன்படுத்திச் செய்வார்களாம். இக்கல்லை எளிதில் செதுக்கலாமாம்.

ம்பிகளுக்கு உட்புறம் கோவிலுக்குள்ளும் இதே போன்ற தூண்கள்தான். ஆனால் உள்ளே எடுக்க அனுமதி இல்லை. நான் உள்ளே செல்லும் போதே என் கையில் இருந்த கேமரா மற்றும் மொபைலை அங்கிருந்த பட்டாச்சாரியார், பார்த்திருக்கிறார். உள்ளே எடுக்கக் கூடாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அங்கிருந்த தூண்கள் அதன் மேற்புறம் எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து ஓரிடத்தில் நின்று பார்த்தேனா, பட்டாச்சாரியார் கண்ணில் நான் படவில்லை. சற்று நகர்ந்து வந்து என்னைப் பார்த்து "ஃபோட்டோ எடுக்கக் கூடாது, நீங்கபாட்டுக்கு எடுத்துப் போடறீங்க அப்புறம் மேலிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல எங்களுக்குத் தர்மசங்கடம் ஆகிறது. பிரச்சனை ஆகிறது." என்று கடுமையாகச் சொன்னதும், "நான் எடுக்கவில்லை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்" என்று சொல்லிக் கொண்டே அவர் கண் முன்னே உள்ளே வைத்துவிட்டேன். 

உள்ளே கீர்த்தி நாராயணர் மிகப் பெரிய திருஉருவம். நின்றகோலத்தில். சுற்றி வந்து வெளியில் வரும் முன் அந்த உண்டியலின் அருகில் இருக்கும் தூணில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன. ஆனால் எடுக்க முடியாதே! அக்காலத்து கன்னட வடிவம் கூடவே தமிழ் வடிவ எழுத்துகளும். நெல்லையும் நானும் அதைப் பார்த்துக் கொண்டே அதைப் பற்றிப் பேசினோம். அருகில் வேறு பணியாளர் (பாதுகாப்பாளர்) உட்கார்ந்திருந்தார். வெளியில் வந்துவிட்டோம். வந்த பிறகு வெளிப்புறம் எடுத்த படங்கள் கீழே.

ஹொய்சாளர் கலைவடிவம் பாருங்க. வேல் போன்ற வடிவம்? - கூம்பு வடிவமே அழகாக இருக்கிறது இல்லையா! ஒவ்வொரு கூம்புப் பகுதியின் மேல் உள்ள வடிவமும் கூம்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன. தூண்களின் மேலே மூக்கோணங்களைக் கவிழ்த்திப் போட்டு அடுக்கடுக்காகத் தாமரை வடிவம்? போன்றும், கீழே செவ்வக வடிவக் கற்களைப் பொருத்தி வித்தியாசமாக இருக்கின்றன. zig-zag வடிவம் ஹொய்சாளர் கலையின் புதுமை. இந்த வடிவத்தை ஓரளவு கீழே உள்ள காணொளியில் காணலாம். 

கோவில் கோபுரம் பார்த்தீர்களா?  கீழே கூம்பு வடிவங்கள் இதில் கொஞ்சம் வித்தியாசமாக.

கோயிலின் உள்ளே சன்னதியின் மேல் சாளரம்

இந்த இரு வேல் போன்ற கூம்பு வடிவங்கள் இரண்டும் வித்தியாசமாக சுற்றியுள்ள டிசைன்களும் வித்தியாசமாக இருக்கின்றன தெரிகிறதா? 

இதோ இன்னும் இரண்டு மேலே உள்ளவை போன்ற ஆனால் சற்று வித்தியாசமாக...

இதோ இரண்டு அடுத்தடுத்து. இடப்பக்கம் உள்ளதை ஏதோ செப்பனிட்டுள்ளது போல் இருக்கிறது. கலர் வித்தியாசமாக.

கல்வெட்டு தமிழ் எழுத்துகள் தெரிகின்றன கொஞ்சம். கீழேயும். கொஞ்சம் வாசிக்க முடிகிறது இல்லையா? அகழ்ந்து எடுக்கும் போது ஒரு வேளை தொட்டடுத்திருக்கும் வைத்தியநாதேஸ்வரர் கோவில் கல்வெட்டை தெரியாமல் இங்கு கொண்டு வந்து பதித்துவிட்டார்களோ?! 

 

சுமார் ஒரு மீட்டர் உயரமுள்ள மேடையில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்று மேலே சொல்லியிருந்தேன் இல்லையா? அந்த மேடையிலேயே நடந்து படங்களும் காணொளிகளும் எடுத்த போதுதான், மேடை குறுகலாக இருப்பதால் ஆர்வத்துடன் எடுக்கும் போது அதன் விளிம்பைக் கவனிக்கத் தவறி கீழே விழும் ஆபத்தை உணர்ந்ததும் உடனே கீழே இறங்கி எடுக்கத் தொடங்கினேன். கீழிருந்து எடுத்தால்தான் சரியாக எடுக்கவும் முடியும். மேடையில் இருந்தால் வேல் போன்ற வடிவங்களை கிட்டத்தில் எடுக்கலாம் ஆனால் கோவிலின் உயரத்தை எடுக்க வேண்டும் என்றால் கீழே இறங்கித்தான் எடுக்க வேண்டும். அந்த மேடையை காணொளியில் பார்க்கலாம். கொஞ்சம் காட்டியிருப்பேன். கோயில் முழுவதும் சுற்றி கூடியவரை எடுத்திருக்கிறேன். ஆனால் நடந்து கொண்டே எடுத்ததுதான் நான் செய்த தவறு. என் நடைக்கேற்ப வீடியோ நடனம் ஆடியிருக்கிறது!

சரி நாம் கோயிலில் இருந்து வெளியே அதே முகப்பு மண்டபம் வழி வந்து வைத்யநாதேஸ்வரர் கோவிலைப் பார்க்கப் போவோம்.

 

-----கீதா

38 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....

    படங்களும் காணொளியும் அந்த இடத்தின் சிறப்பை சொல்கின்றன. வேலைப்பாடுகள், வித்தியாசமான வடிவங்கள் என அனைத்தும் நன்று. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம்! வெங்கட்ஜி

      வித்தியாசமான கலைவடிவங்கள்தான் ஜி. மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  2. முகப்பு மண்டபம் ஏதோ அரைகுறையாய் நிறுத்தியது போல இருக்கிறது.  தாராசுரத்தில் கூட கிட்டத்தட்ட - கிட்டத்தட்டதான்- இப்படி இருக்கும்!  கட்டிக் கொண்டிருக்கையிலேயே அவசரமாக அடுத்த வேலைக்கு சென்று விட்டார்களா?  'பக்கத்து ஊரில் பத்து படி அரிசி கூட சம்பளம் தர்றாங்களாம்..  வா புள்ள' என்று அங்கே சென்று விட்டார்களா என்று யோசிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். பார்த்த்தப்பவே தோன்றியது ஆனால் மண்ணுக்குள் அடியிலிருந்து அகழ்ந்தெடுத்தவையானதால் இப்படி இருக்குமாக இருக்கும் என்று நினைத்தேன்.

      //கட்டிக் கொண்டிருக்கையிலேயே அவசரமாக அடுத்த வேலைக்கு சென்று விட்டார்களா? 'பக்கத்து ஊரில் பத்து படி அரிசி கூட சம்பளம் தர்றாங்களாம்.. வா புள்ள' //

      சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  3. //வலப்பக்கம் சரியாகத் தெரியவில்லை. //

    உங்களுக்கே அங்கே நேரிலேயே தெரியவில்லையா?  அல்லது படத்தில் சரியாக விழவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்த்த போதும் கொஞ்சம் எட்டிப் பார்க்கணுமாக இருந்தது. படியில் அர்ச்சகர் மாமா உட்கார்ந்திருந்தார் . படத்தில் அவரும் இருந்தார் ஆனால் அவர் இல்லாமல் படத்தைக் கொடுத்தேன். நான் கொஞ்சம் தயங்கியபடியேதான் எடுத்தேன். அந்த மாமாவுடன் நெல்லை பேசிக் கொண்டிருந்ததால் நைசாக...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. உள்ளே எட்டிப் பார்க்க வேண்டியதாகவும், இங்கு ஃபோட்டோவில் கொஞ்சம் மெலிதாகத் தெரிபவர்.....வேதாந்த தேசிகரோ என்ற சம்சயம் உண்டு எனக்கு

      கீதா

      நீக்கு
  4. // வலப்பக்கம் நாங்கள் நடந்து வந்த கூடாரப் பாதை தெரிகிறதா? //

    எஸ்.  தெரிகிறது.  அந்த மண்டபம் இடப்பக்கமாக ஏதோ கைநீட்டி சொல்வது போல தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பக்கமும் கொஞ்சம் தெரிகிறது அப்பாதை....எனக்கு இரு பக்கமும் கைகளை நீட்டி இருப்பது போலத் தோன்றியது அன்று படம் எடுக்கும் போது. இப்ப நீங்க சொன்னதும் டக்கென்று நினைவுக்கு வருது!

      கீதா

      நீக்கு
  5. கதவு மூடி இருந்தாலும் காட்சி அழகாயிருக்கிறது ஆஞ்சநேயர் சன்னதி.

    பதிலளிநீக்கு
  6. கல்லடி வாங்கிய நாய் அடிதாங்காமல் முன்னங்கால்கள் மடங்கி அடித்தவரை நோக்கி திரும்பி வலியில் ஓங்கி குரல் கொடுப்பது  போல இருக்கிறது அந்த விலங்கின் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!!! நல்ல கற்பனை. நாய் இப்படித்தான் செய்யும். ஆனால் முகம் அப்படி இல்லையேன்னு எனக்குத் தோன்றியது. ஆனால் போஸ் அப்படித்தான் இருக்கு.

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
    2. வால் இரண்டு கால்களுக்கும் நடுவில் மடங்கி வேறு இருக்குமே!!!!

      கீதா

      நீக்கு
  7. // கோவிலின் உள்ளே போகும் முன் இடப்புறம். zig-zag வடிவம்-மடிந்து மடிந்து... நுழையும் இடத்தில் உண்டியல் தெரிகிறதா?  //

    படுத்தறீங்களே...   ரொம்ப நேரம் தேடியும் உண்டியல் கண்ணில் படவில்லை.  முதல்ல வளைஞ்சு வளைஞ்சு போகிற பாதையே என் கண்ணுக்கு தெரியவில்லை!!  அந்த ஸ்டூல் கால்கள் போல தெரிவதுதான் உண்டியலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் வலப்புறம் நுழையும் பகுதி வாயில் உள்ளே நீலக்கலரில்...சுவாமி படங்கள் போட்டு....ஹான் நீங்க சொல்ற அந்த ஸ்டூல் போன்று உங்களுக்கு அப்படித் தெரிகிறதா....அதேதான்...உண்டியல்

      எப்படியோ கண்ணில் பட்டுச்சே!!!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. பட்டாச்சாரியார் பாராவில் எழுத்துகள் வண்ணம் கருப்பும் நீலமுமாக இருப்பதில் ஏதேனும் குறியீடு இருக்கிறதோ?  அப்புறம் கோமதி அக்கா வந்ததும் ஸ்ரீராம் கண்டு பிடிப்பார்னு பார்த்தேன்னு சொல்லப்படாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவா...ஹிஹிஹி சிலது கவனத்ஹில் படணும் என்று!!!! குறியீடு எதுவும் இல்லை.

      //அப்புறம் கோமதி அக்கா வந்ததும் ஸ்ரீராம் கண்டு பிடிப்பார்னு பார்த்தேன்னு சொல்லப்படாது!//

      ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்!!!

      கீதா

      நீக்கு
    2. பாருங்க கீஸ் படுத்தும் பாடு...த் து வரும் எழுத்துகள் எல்லாம் ரொம்ப கவனமா அடிக்கணுமா இருக்கு...கவனத்தில் ...ஹில்னு வந்திருக்கு!!!!

      கீதா

      நீக்கு
  9. காணொளியை ரசித்தேன்.  கோவில் வெளிப்ரகாரத்தைப் பார்த்துக் கொண்டே சுற்றும்போது அங்கு நின்று படம் எடுத்துக் கொண்டிருந்த பையன் மேல் மோதி கீழே தள்ளி விடவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....நல்லகாலம் இல்லை ஸ்ரீராம் அங்கு பையன் நின்றிருப்பது தெரிந்ததும் கொஞ்சம் கவனம் சிதறியதில் அங்கு அது வீடியோவில் தெரிந்திருக்கும். கட் பண்ணிவிட்டுத் தொடரலாமா என்று நினைத்து ஆனால் விலகிச் சென்று எடுத்துவிட்டேன்!!!!

      காணொளியை ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. படங்கள் யாவும் அற்புதம்.  கட்டிடக்கலை பிரமிக்க வைக்கிறது.  ஒரு மனிதன் நிற்பது போலவும் அவன் உடலின் நடுப்பகுதி வேல் அமைப்பிலும் இருப்பது போன்ற செதுக்கல்கள் ஆங்காங்கே தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      ஆமாம் கட்டிடக் கலை ரொம்ப ஈர்க்கும். இது ஆரம்பக்கட்ட ஹொய்சாளர் கலை. பேளூர், எல்லாம் பார்த்தால் பிரமாதமாக இருக்கும்.

      ஒரு மனிதன் நிற்பது போலவும் அவன் உடலின் நடுப்பகுதி வேல் அமைப்பிலும் இருப்பது போன்ற செதுக்கல்கள் ஆங்காங்கே தெரிகின்றன.//

      ஓ உங்கள் கற்பனையும் சூப்பர். ஒவ்வொருவரின் கண்ணிலும் என்னென்ன தோன்றுகிறது இல்லையா,

      கீதா

      நீக்கு
  11. கூம்பு அல்லது ஈட்டி போன்ற சிற்பம் அரச முத்திரை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு அரசர் மாறும்போதும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்த அரசரின் முத்திரையாகிறது என்று தோன்றுகிறது.

    படிக்கட்டில் உள்ள மிருகம் யாளியின் சிதைந்த உருவமைப்பு என்று தோன்றுகிறது.

    தூண்கள் உண்மையிலையே ஒருபெரிய லேத்தில் கடையப்பட்டவை என்று தோன்றுகிறது. ஏனெனில் லேத்தில்லாமல் செய்யும்போது ஓவாலிட்டி வந்துவிடும். ​
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெ கே அண்ணா. பாருங்க, நான் வேல் போன்று என்று மனதில் தோன்றிய போது இல்லை இன்னும் வேறு சொல்.... சொல்....அதைச் சொல் என்று மனம் யோசித்ததே அல்லாமல் இந்த ஈட்டி நினைவுக்கு வரவே இல்லை பாருங்க, ஈட்டி வடிவம்!!!

      படிக்கட்டில் உள்ள மிருகம் யாளியின் சிதைந்த உருவமைப்பு என்று தோன்றுகிறது.//

      எனக்கும் யாளியின் ஒரு வகையா இருக்குமோ என்று தோன்றினாலும். இப்ப நீங்க சொல்லியிருப்பதும் யோசிக்க வைக்கிறது. ஆனால் முகம் ரொம்பவே சரியாக இருக்கிறதே....எனக்கு எறும்புண்ணி போலவும் தோன்றியது, Dashhund நாய் வடிவம் போலவும் தோன்றியது....

      ஆமாம் தூண்கள் லேத்தில் செய்யப்பட்டவை தான் என்று ஸ்ரீரங்கப்பட்டினம் பதிவில் சொல்லியிருந்த நினைவு,

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  12. அனைத்து படங்களும், காணொளியும் காணொளியில் பின்னனி இசையும் அருமை.
    இராமானுஜர் தெரிகிறார். குரங்கு உள்ளே வந்து விடாமல் தடுக்க இப்படி கம்பி இடைவெளி இல்லாமல் போட்டு இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா. படங்கள் காணொளி பற்றி சொன்னதற்கு.

      இராமானுஜர் தெரிகிறார். இடப்புறம் உள்ள பெருமாள் அருகில் இருப்பவர்தான்...தெரியவில்லை

      நெல்லை வந்தால் சொல்லுவார் என்று நினைக்கிறேன். பெருமாள் இருக்கும் சன்னதியில்.

      அங்கு குரங்குகள் இருப்பதாகத் தெரியலை அக்கா. ஒரு வேளை மக்கள் கை வைக்காமல் இருக்கவும் இருக்கலாம்,

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  13. வலப்பக்கம் நாங்கள் நடந்து வந்த கூடாரப் பாதை தெரிகிறதா?//

    தெரிகிறது மத்தியில் கோயில் அருமையாக இருக்கிறது.

    கொடிமரம் முழுவதும் தெரிகிறது இல்லையா?//

    கொடிமரத்தின் மேல்பகுதியின் நிழல் கீழே விழுந்து இருப்பதும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோவிலின் பின் புறம் தான் அந்தப் பாதை 'ப' வடிவில் பாதை வரும் நடுவில் இக்கோவில் கோவில்...பார்க்க அழகாக இருக்கும்

      ஆமாம் கொடிமரத்தின் நிழலும் தெரிகிறது.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  14. முன்மண்டபத்தை உட்பக்கத்திலிருந்து இடப்பக்கம் வலப்பக்கம் க்ளிக்ஸ்//

    நன்றாக இருக்கிறது படம்.
    அடுத்து படத்தில் இருப்பது யாளிதான் வித்தியாசமான தூணில் இல்லாமல் படி மாதிரி அமைப்பில் இருக்கிறது.
    உண்டியல் தெரிகிறது. கோயில் கட்டப்பட்டதற்கு வரலாறுதெரிந்து கொண்டேன்.
    //ஹொய்சாளர் கலையின் புதுமை.//

    நன்றாக இருக்கிறது.

    //மேடை குறுகலாக இருப்பதால் ஆர்வத்துடன் எடுக்கும் போது அதன் விளிம்பைக் கவனிக்கத் தவறி கீழே விழும் ஆபத்தை உணர்ந்ததும் உடனே கீழே இறங்கி எடுக்கத் தொடங்கினேன்.//

    நல்லவேலை கவனித்தீர்கள். நானும் ஆர்வத்தில் இப்படி எடுக்க ஆரம்பித்து விடுவேன்,என் கணவர்தான் பார்த்து கவனம் என்பார்கள்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்து படத்தில் இருப்பது யாளிதான் வித்தியாசமான தூணில் இல்லாமல் படி மாதிரி அமைப்பில் இருக்கிறது.//

      ஓ அது யாளிதானா....ஜெ கே அண்ணாவும் சொல்லியிருக்கிறார்.

      உண்டியல் தெரிகிறது. கோயில் கட்டப்பட்டதற்கு வரலாறுதெரிந்து கொண்டேன்.//

      நுழைவு வாயில் இடப்பக்கம் சென்று சுற்றி அப்படியே உண்டியல் அருகில் வந்து வெளியில். இக்கோவில் சிறிய கோவில்தான். மன்னன் விஷ்ணுவர்தன் கட்டிய மற்ற கோவில்கள் இன்னும் பெரிதாக இருக்குமாம்.

      //நல்லவேலை கவனித்தீர்கள். நானும் ஆர்வத்தில் இப்படி எடுக்க ஆரம்பித்து விடுவேன்,என் கணவர்தான் பார்த்து கவனம் என்பார்கள்.//

      ஆமாம் அக்கா. ரெண்டாவது, அங்கிருந்து எடுப்பதும் சரியாக வராது. கேமராவில் முழுவதும் வராது. கிட்ட எடுப்பது ம்அட்டுமே வரும். ஆனால் ஆபத்து ...கீழே இறங்கினால் பாதுகாப்பு ப்ளஸ் முழுவதும் எடுக்கவும் வசதியாகவும் இருக்கும்....மாமா உங்களுக்குச் சொல்லியது நல்லாதாச்சு. நாம ஆர்வத்தில் கவனிக்கவே மாட்டோம்! இங்கு மேடை கொஞ்சம் கரடு முரடாவும் இருந்தது விளிம்பு சமதளமாகவும் இல்லை. நான் விளிம்பு வரை போன பிறகுதான் அது மண்டையில் பளிச்சிட்டு நல்லகாலம் உடனே இறங்கிவிட்டேன்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  15. கோமதி அக்கா கமெண்ட் பார்த்த பிறகு, காலை ஸ்பீக்கர் அணைத்து வைத்துவிட்டு காணொளி பார்த்தது நினைவுக்கு வந்தது. இப்போது மறுபடியும் வந்து இசையுடன் ரசித்த செல்கிறேன். துள்ளும் இசை உள்ளம் கொள்ளை கொள்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ காலைல நீங்க பாட்டு கேட்கலையா..அதான் அது பத்தி வரலையோ. யுட்யூபில் பாக்ஸில் நன்றி சொல்லியிருப்பேன் இந்தஇசை அமைத்தவருக்கு. ஃப்ளூட் ரொம்ப அழகான மோகனத்தில் ஆமாம் உள்ளம் அப்படியே அதில் லயித்துவிட்டது. மூன்று எடுத்தேன் இவருடையதையே. இது ரொம்ப நல்லா இருந்துச்சு அதனால் இதை சேர்த்துவிட்டேன்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கீர்த்தி நாராயணர் கோவில் படங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது. எல்லா படங்களையும் ரசித்தேன்.காணொளியும் நன்றாக உள்ளது. கோவில் மேடையை நட்சத்திர வடிவமைப்பில் கட்டுவதுதான் ஹொய்சாள மன்னர்களின் பாணி போலும்...! நன்றாக யோசித்து, மண்டபங்களும், தூண்களையும் விதானங்களையும் கலை வண்ணமாக படைக்கும் அவர்களது திறமைகள் மிக வியக்க வைக்கிறது. அந்தக்கால இத்தகைய சிற்பிகள் அந்தக் கலைகளை தங்கள் சந்ததியினருக்கு பரப்பியிருப்பார்களா? இல்லை அவர்களுடனே இந்தக் கலைநுணுக்கங்கள் மறைந்திருக்குமா ? எனக்குத் தெரியவில்லை. உங்களைப்போல சரித்திரம் பலவும் படித்ததில்லை அதனால்தான் கேட்கிறேன். எல்லா படங்களும் அருமையாக உள்ளது. பார்த்து ரசித்தேன் சகோதரி. பயணத்தில் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும் படங்களையும், காணொளியும் ரசித்ததற்கு மிக்க நன்றி கமலாக்கா.

      ஹொய்சாளர் கலையில் கோவில்கள் பெரும்பாலும் இப்படி மேடை மீது அமைப்பதாகத்தான் தெரிகிறது படங்களைப் பார்க்கும் போது.

      சிற்பிகள் அடுத்ததலைமுறைக்கும் கடத்தியிருப்பாங்க ஆனால் காலம் மாற மாற வயிற்றுப் பிழைப்புக்காகப் பலதும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது இல்லையா? விவசாயம் செய்பவரின் மகன் விவசாயம் செய்வது மாறிவிட்டது போன்றுதான். கால மாற்றங்களில் இதுவும் ஒன்று. கலை நுணுக்கங்கள் அறிந்தவர்கள் குறைந்திருக்கலாம் ஆனால் இப்போதும் ஆர்வத்துடன் கட்டிடக்கலை படிப்பவர்கள் இதில் தேர்ந்திருக்கலாம். அக்கலை நிபுணர்கள் இப்பவும் இருக்கலாம் இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.

      அக்கா எனக்கும் வரலாறு சுத்தமாகத் தெரியாது. படித்ததும் இல்லை. என்னிடம் புத்தகங்களும் கிடையாது. நான் அவ்வப்போது பதிவிற்காக இணையத்தில் தேடித் தெரிந்து கொள்வதுதான், கமலாக்கா.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. இன்னொரு கருத்து முதலில் போட்டேனே...என்னாச்சு? மாயமாயிடுச்சா...

      கமலாக்கா அதிகம் நம் கண்ணில் படலையே என்று நினைத்தேன், நம்ம பக்கம் வந்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றிக்கா. கமலாக்கா நலம்தானே? இதுதான் முதலில் போட்ட நினைவு.

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      நான் வந்து கொண்டேதான் உள்ளேன். சில நாட்கள் பதிவுகள் விட்டுப் போகிறது. அதனையும் உடனே ஒருநாளில் கவர் பண்ணி விடுகிறேன். நானும் ஏதாவது எழுதி நாட்கள் ஆகி விட்டது.

      நலமாகத்தான் உள்ளேன். ஆனால், இந்த குளிர் காரணமாக உடம்பில் சில பிரச்சனைகள். மூன்று மாதமாக விடாமல் ஜலதோஷம் படுத்தி எடுத்து விட்டது. அதனால் ஒரு வாரத்திற்கு ஒரு முறை உடல் அலுப்பு, ஜுரம் என கூடுதல் படுத்தல். நடுநடுவே வெளியிலும் கோவில்களுக்குச் போகிறோம். இந்த தடவை இங்கு குளிர் அதிகந்தான்.. வீட்டிலிருந்தால் அதிகமாக குளிர்கிறது. வெளியில் போனால் உடனே போன ஜலதோஷம் வந்து மறுபடியும் தாக்குகிறது. தாங்க இயலவில்லை இந்த போகியோடு கொஞ்சம் குளிர் குறைந்தால் நல்லது.உங்கள் கருத்தைப் படித்ததும் நானும் பதிலை (என் புலம்பல்) தந்து விட்டேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. ஓ புரிந்து கொண்டேன் கமலாக்கா. புலம்பல் எல்லாம் இல்லை. சும்மா ஜாலியா சொல்லுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை.

      எனக்குக் குளிர் ரொம்பப் பிடிக்குமா....அதனால் ஜாலியா குளிரை ரசிக்கிறேன்!!!!! இந்த முறை சற்று கூடுதல். போன முறை என்ன இது குளிர்காலம் போலவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இந்த முறை அதற்கும் சேர்த்து வைச்சு...ஜிம்கானா தான்!!!!

      உங்க உடம்பு பார்த்துக்கோங்கக்கா. சளிக்கு நீங்க கஷாயம் குடிப்பீங்கன்னு நினைக்கிறேன் ஆவி பிடிப்பீங்கன்னு உங்களுக்குத் தெரியாததா என்ன!!! , அது தவிர தினமும் காலை நெல்லிக்காய் சும்மா லைட்டா வேக வைச்சு சாப்பிடுங்கக்கா, தினமுமே ஒன்று. முடிந்தால்....

      நன்றி கமலாக்கா...

      கீதா

      நீக்கு