முந்தைய பதிவில், வெயிலில் உலர்த்திய ரப்பர் ஷீட்டில் இருக்கும் எஞ்சிய ஈரப் பதத்தை வெளியேற்றப் புகையிட வேண்டும், அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம் என்று சொல்லி முடித்திருந்தேன். இப்போது அதைப் பற்றி.
வெயிலில் உலர்த்திய ரப்பர் ஷீட்டை புகையிட “Smoke House” என்று சொல்லக் கூடிய புகை அறையில்/கிடங்கில் ஓரிரு நாட்கள் புகைக்க வேண்டும். புகை அறையின் மேல் பாகம் திறந்தே இருக்கும். அதன் மீது கம்புகளை அடுக்கி வைத்து அதன் மீது ரப்பர் ஷீட்டுகளை இட வேண்டும்.
திறந்திருக்கும் மேல் பாகத்தில் செங்கல்கள் சரிவாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கம்புகளைக் கீழே விழாமல் வைத்து அடுக்க முடியும். அப்படி இந்த மேல்பாகத்தில் 25 கம்புகள் வரை அடுக்கி வைக்க முடியும். படங்கள் இதன் மேலே.
இந்தக் கம்புகளில் ஒரு கம்பிற்கு மூன்று ஷீட்டுகள் வீதம் 75 ஷீட்டுகள் தொங்கவிட்டு இந்தப் புகை அறையில் புகைக்க முடியும். இதோ படங்கள்.
கம்புகளில் ரப்பர் ஷீட் தொங்க விடப்பட்டிருக்கிறது
எங்கிருந்து புகை வரும் என்று உங்களுக்குச் சந்தேகம் எழலாம். அதற்கான தீ மூட்டும் சிறிய தொட்டி போன்று ஒன்று உண்டு. இந்தத் தீ மூட்டும் தொட்டியிலிருந்து அறைக்குள்ளே புகை செல்வதற்கு வழி ஒன்று உண்டு. படம் இதோ
புகை இடும் சிறிய தொட்டி/குழி
ஓட்டை வழியாகப் புகை வந்து தொங்கவிடப்பட்டிருக்கும் ரப்பர் ஷீட்டுகளில் எஞ்சியிருக்கும் ஈரப் பதத்தை வெளியெற்றுவதுடன் ஷீட்டுகளுக்கு நல்ல ப்ரௌன் நிறத்தையும் கொடுக்கும்.
ரப்பர் ஷீட்டுகளைப் புகைக்க, பலவிதமான புகை அறைகள் – Smoke houses – இருக்கின்றன. அதில் ஒரு வகை இது. படங்களைப் பார்க்கும் போதுபுரியும். இல்லை என்றால் காணொளியில் புரியும்.
நாம் காணுகின்ற இந்தத் தோட்டத்தில் இந்த வகையான புகை அறைதான். இதைப் போன்றுதான் எல்லா இடங்களிலும் ரப்பர் ஷீட்டுகள் புகையிடப்படுகின்றன என்று எண்ணுவதற்கில்லை. பல வகைகளில் இது ஒரு வகை என்று சொல்லலாம்.
இந்த வகை புகை அறையில் புகை உள்ளே செல்லும் போது 75% மட்டும்தான் உள்ளே செல்லும். சில புகையிடும் அறைகளில் 90% புகையும் சூடும் உள்ளே செல்வதால் இரு முறை அல்லது ஒரு முறை புகையிட்டாலே அது போதுமானது. அப்படிப்பட்ட புகையிடும் இடங்களும் உண்டுதான். இங்கு சொல்லியிருப்பது ஒரு விதமான புகையறை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ரப்பர் ஷீட்டுகளைக் கம்புகளில் தொங்கவிட்ட பிறகு, மேல் பாகத்தை மூட வேண்டும். மூடுவதற்கு முன் அக்கம்புகளின் மீது குறுக்கே 4, 5 கம்புகள் வைக்கப்படும்.
அதன் பிறகு அதன் மீது இடைவெளியை மூட நல்ல கனமான அட்டைப் பெட்டிகளில் இருந்து பிரித்தெடுத்த அட்டைகள் வைக்கப்படும்.
அப்போதுதான் பெருமளவு புகை உள்ளேயே தங்கும். புகை முழுவதும் உள்ளே தங்குவது சிரமம் என்றாலும் கொஞ்ச நேரமேனும் உள்ளேயே தங்க இப்படியான ஏற்பாடுகள் மிக மிக அவசியம்.
மேற்புறம் அட்டைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது
கனம் குறைவான, மெல்லிய காகிதங்கள் போன்றவை சரிவராது. காற்றில் பறக்கக் கூடும் அல்லது தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு.
அப்படி இடைவெளிகளை மறைத்து அட்டைகளை இட்ட பின் அதன் மீது சாக்குகளும் இடப்படுகிறது.
நாற்புறமும் சிறிதளவு தொங்கிக் கிடக்கும் வகையில் இடப்படுகின்றன. இந்த அளவு புகை அறைக்கு ஏறத்தாழ 10 சாக்குகள் போதுமானது. இரு வரிசைகளாக ஒரு வரிசைக்கு ஐந்து சாக்குகள் வீதம் பத்து சாக்குகள் இடும் போது மேல்பாகம் பெருமளவில் மூடப்பட்டு விடுகிறது.
அட்டைகளை இட்ட பின் அதன் மீது சாக்குகளும் இடப்படுகின்றன. நாற்புறமும் திறிதளவு தொங்கிக் கிடக்கும் வகையில் இடப்படுகின்றன
இப்படி எளிதாக, விலை அதிகம் இல்லாதப் பொருட்களை வைத்து மூடித்தான் விவசாயிகள் செய்வது வழக்கம். அது போலத்தான் இங்கும் செய்யப்படுகிறது.
தீ மூட்டியதும் அந்தச் சூடு அறைக்குள் செல்ல வேண்டும் என்பதால் இந்த தீ மூட்டும் இடமான இந்தக் குழித் தொட்டியை, சிறிய இரும்புத் தகடாலோ தகரத்தாலான அடைப்பாலோ மூட வேண்டும். மூடிய பின்னும் இடை வெளி வழியாகப் புகை வெளி வர வாய்ப்புண்டு என்பதால் அதையும் கற்கள் கொண்டு அடைக்க வேண்டும். அப்படி அடைத்தாலும் கூட ஓரளவு புகை வெளிவரத்தான் செய்யும்.
தீ மூட்டப்பட்டு அந்தப் புகை, புகை அறைக்குள் செல்ல வேண்டும் என்று அதை இரும்புத் தகடாலோ தகரத்தாலோ அடைத்து அதன் மேல் சாக்கையும் போட வேண்டும். மேற்புறமும் கற்கள் கொண்டு அடைத்தாலும் அதன் பின்னும் கூட ஓரளவு புகை கீழும் மேலும் வரத்தான் செய்ய்யும்.
இப்படித் தினமும் ஒரு முறை என்று, 3, 4 நாட்கள் தீ இட்ட பின்பு, புகை அறையின் மேலே இருக்கும் சாக்குகளையும்,
அட்டைகளையும் அகற்ற வேண்டும். அகற்றிய பின் ஒவ்வொரு கம்பிலும் 3 என்று 25 கம்புகளில் தொங்கவிடப்பட்டுள்ள
75 ரப்பர் ஷீட்டுகளையும், எப்படி தீ மூட்டும் முன் அடுக்கி வைத்தோமோ அதே போன்று ஒவ்வொரு கம்பாக வெளியில் எடுக்க வேண்டும். ஒவ்வொரு ரப்பர் ஷீட்டும் எடுக்கப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
புகையிட்ட பிறகு வெளியில் எடுக்கப்பட்ட ரப்பர் ஷீட்
ஒவ்வொரு ஷீட்டின் எடையும் ஏறத்தாழ 500 கி முதல், 600-650
கி வரை இருக்கும். அடுத்து இந்த ஷீட்டுகளை விற்பனை நிலையங்களுக்குக் கொண்டு சென்று விற்கலாம். ஒரு கிலோ ரப்பர் ஷீட்டுக்கு, மார்ச் மாதம் 23, 25 தேதிகளில் ரூ 142 கிடைக்கும். ஏறத்தாழ இரு ஷீட்டுகள் ஒரு கிலோ வரை வரும்.
சிறுபான்மை விவசாயிகள் ரப்பர் ஷீட்டுகளைக் கொண்டு சென்று விற்கும் விற்பனை நிலையம் இதோ படத்தில். இப்படிப் பெறும் ரப்பர் ஷீட்டுகளை, கட்டு கட்டாக ஒவ்வொரு கட்டிற்கும் 50 கிலோ என்று கட்டி வைப்பதுண்டு.
ரப்பர் ஷீட்டுகளை விலைக்கு எடுக்கும் கடை
ரப்பர் வேளாண்மை அதிகமாக நடக்கும் கேரளத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் ரப்பர் வேளாண்மை நடத்தும் ஒரு விவசாயியின் வீட்டில் எப்படி ரப்பர் வேளாண்மை நடத்தப்படுகிறது என்பதைத்தான் நாம் இங்கு மூன்று பகுதிகளாகப் பதிவுகளிலும், காணொளிகளிலும் கண்டோம். இத்துடன் ரப்பர் வேளாண்மை பற்றிய பதிவு முடிவடைகின்றது.
காணொளிகளைப் பார்த்த, பதிவுகளை வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
பின் குறிப்பு : புகைப்படங்கள் எடுக்காமல் காணொளிகள் மட்டுமே எடுத்ததால், காணொளிகளில் இருந்து முடிந்த வரையில் படங்கள் எடுத்து சேர்த்திருக்கிறேன். காணொளியைக் கண்டால் முழுவதும் புரியும். 11 நிமிடக் காணொளிதான். முடிந்தால் பாருங்கள்
புகைபோடும் கலையை நன்றாக உல் வாங்கிக்கொண்டு எழுதி இருக்கிறீர்கள். நான் இரண்டு மூன்று முறை படித்தால்தான் எப்படி என்று புரியும் போல. காணொளியும் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநேரடியாகச் செய்து பழக்கம்தான். அதனால் எழுத முடிந்தது. காணொளி பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்ஜி.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
ஆனாலும் நிறைய வேலை வாங்கும் போல. இவ்வளவு உழைப்புக்கு ஒரு கிலோவுக்கு 142 ரூபாய் என்பது குறைவு போல எனக்குப் படுகிறதே...
பதிலளிநீக்குவேலையும் உழைப்பும் அதிகம்தான் எல்லாத் தொழில்களுக்கும் இருப்பது போல. ஒரு கிலோவிற்கு ரூ 142 ற்கு மேல் கிடைக்க வேண்டும். இல்லையேல் மற்ற நெல், வாழை, காய்கறிகள் பயிறிடும் விவசாயிகள் போல் நஷ்டம்தான். விவசாயிகள் இதைத்தானே செய்ய முடியும். ஒன்றுமில்லாததற்கு ஏதோ கிடைக்கிறதே என்ற வகையில். அரசு, ஒரு கிலோவிற்கு ரூ 170 என்று நிர்ணயித்துள்ளது. பதிவு செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ, 200 கிலோவிற்கு பில் பதிவு செய்து விண்ணப்பித்தால் அந்த மீதமிருக்கும் அதாவது ரூ 170 ல் குறைவான தொகை வங்கிக் கணக்கிற்கு வரும். இதெல்லாம் ஒரு 30 சதவிகித விவசாயிகளுக்குக் கிடைக்கும். அவ்வளவே.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
ரப்பர் வேளாண்மை நல்ல விவரமாக இருக்கிறது.
பதிலளிநீக்குபொறுமையாக படிபடியாக அனைத்தையும் படங்களுடன் விளக்கி சொன்னது அருமை.
காணொளியில் அருமையாக பேசி இருக்கிறீர்கள் சகோ.
பதிவையும், காணொளியையும் கண்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.
நீக்குதுளசிதரன்
ரப்பர் பற்றிய விவரங்கள் சொல்லிய விதம் அருமை.
பதிலளிநீக்குகாணொளி பிறகு காண்கிறேன். இணையம் பிரச்சனை.
நேரம் கிடைக்கும் போது இணையம் சரியாகும் போது பாருங்கள் கில்லர்ஜி. பதிவைப் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குதுளசிதரன்
படிப்படியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... அருமை...
பதிலளிநீக்குபதிவைப் பற்றிய உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி
நீக்குதுளசிதரன்
மிக மிக பொறுமை வேண்டும் இந்த பிராசஸ் செய்வதற்கு விடவும் இதை இவ்வளவு பொறுமையாக விளக்கமாக எழுதிய உங்கள் திறமையை வியக்கிறேன்
பதிலளிநீக்குஎல்லா விவசாயத் தொழில்களுக்கும் வேண்டிய பொறுமை, நேரம், உழைப்பு இதற்கும் அவசியம்தான். நண்பர் நெல்லைத்தழிழன் ரப்பர் வேளாண்மை பற்றி எழுதச் சொல்லி ரொம்ப நாளாகிவிட, இப்போது அதற்கான நேரமும் வாய்ப்பும் வந்ததால் ஒவ்வொரு நிலையிலும் காணொளிகள் எடுத்துப் போட இயன்றது.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி அபயாஅருணா
துளசிதரன்
ரப்பர் வேளாண்மை குறித்த மூன்று பகுதிகளும் ஒரே மூச்சில் படித்தேன். எத்தனை தகவல்கள்..... ரப்பர் வேளாண்மை குறித்த விஷயங்களையும் அதில் இருக்கும் கடினமான உழைப்பையும் புரிந்து கொள்ள முடிந்தது. காணொளிகள் பின்னர் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குரப்பர் வேளாண்மை குறித்த மூன்று பகுதிகளும் ஒரே மூச்சில் படித்தேன்.//
நீக்குமிகுந்த மகிழ்ச்சி, வெங்கட்ஜி.
எல்லா விவசாயங்களையும் போல் இதிலும் உழைப்பும், வேலைகளும் உண்டுதான். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி
துளசிதரன்
வாழைத்தார் - க்கு புகைமூட்டம் போட்டு பழுக்க வைப்பது போலத்தான் இதற்கும் புகைமூட்டம் போட்டு காய வைக்கிறார்கள் என்பதனை இப்போதுதான் அறிந்துகொள்கிறேன்... நாங்கள் இதுவரை அறியாத அரிய தகவல்களை தந்ததற்கு ரொம்ப நன்றி சார்!!
பதிலளிநீக்குவாழைத்தாருக்குப் புகைமூட்டம் போடுவது சமீபகாலங்களில்தான் இல்லையா? அது கேடல்லவா?
நீக்குஆனால் ரப்பருக்கு இது மிக அவசியம்.
உங்கள் கருத்திற்கும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் சிவா.
துளசிதரன்
பதிவு வெளியான அன்றே படித்துவிட்டேன். பயணம் என்பதால் கருத்திடவில்லை.
பதிலளிநீக்குரப்பர் வேளாண்மை குறித்து பல புரிதல்களை ஏற்படுத்தியது உங்கள் பதிவு.
வீட்டிலுள்ளவர்களே பெரும்பான்மையான வேலைகளைச் செய்தால்தான் நல்ல லாபம் கிட்டும். லேபர் வைத்துக்கொண்டால் செலவு அதிகமாகிவிடும்.
உங்கள் உழைப்புக்குப் பாராட்டுகள். இந்த ரப்பர் ஷீட்டை வைத்து எப்படி மற்றப் பொருட்களைச் செய்வார்கள் என்றெல்லாம் யோசிக்கிறேன்.
பயணத்திலும் கூடப் பதிவை வாசித்தமைக்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஎல்லா வேளான்மை போல் தான், செய்யும் வேலைக்குக் கூலி என்று பல இடங்களில், மரம் வெட்டி ஷீட் ஆக்கி கொடுப்பவர்களுக்கும் தோட்டக்காரருக்கும் விற்பதில் பாதி பாதி எனும் நிலை வந்துவிட்டது. ஆம் வீட்டினர் பெரும்பான்மை வேலைகளைச் செய்யும் போதுதான் லாபம்.
இந்த ரப்பர் ஷீட் தான் டயர் கம்பெனிகள், பலூன், ரப்பர் Bands, glove, mattresses இப்படிப் பல பொருட்கள் தயாரிக்க பல செய்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் கருத்திற்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
துளசிதரன்