திங்கள், 27 டிசம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 5

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 5


கடைசிப் பகுதி - வயல்கள், தோப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலை

கிராமத்தை நெடுஞ்சாலையோடு இணைக்கும் திருப்பதிசாரம் முக்கியச் சாலை - முன்பு நாங்கள் முக்கால் மைல் என்று சொல்வோம். இச்சாலை நெடுஞ்சாலையோடு இணையும் பகுதியும் இதே ரோடு எங்கள் ஊர் தாண்டியதும் வீரநாராயணமங்கலம், தாழக்குடி செல்லும் ரோடாக.... பகுதியும் கீழே வருகிறது. ஒரு புறம் தேரேகால் ஓட, மறுபுறம் வயல்களும் தோப்புகளுமாக இருந்த அந்த மறுபுறம் தற்போது வீடுகளாகவும் கட்டிடங்களாகவும் மாறிவரும் நிலை. கிராமத்திலிருந்து முக்கால் மைல் ரோடு கொஞ்சமாக, சும்மா ஒரு சிறிய காணொளி கீழே

இந்தக் காணொளியில் காணொளி முடியும் பகுதியின் அடுத்து உள்ளதுதான் கீழே சொல்லியிருக்கும் காணாமல் போயிருக்கும் வாய்க்கால்.

காணாமல் போயிருக்கும் வாய்க்கால் அதன் தற்போதைய நிலை
இங்கு பார்க்க முடியவில்லை என்றால் இந்தச் சுட்டியிலும் பார்க்கலாம்
சிறிய காணொளிதான் முடிந்தால் பாருங்கள். https://youtu.be/4XEUw6LJrlM

(வண்ணாகுடி வாய்க்கால் என்று சொல்லப்பட்ட - தற்போது அப்படிச் சொல்லக் கூடாது என்பதால் அடையாளத்திற்காக இங்கு அடைப்புக் குறிக்குள்) மகன் ரசித்து விளையாடிய இந்த வாய்க்காலின் தற்போதைய நிலையை இந்தக் காணொளியில் காணலாம். நான் விக்கித்து நின்றது சத்தியம். காணொளியை எடுத்த போது, என்னை அறியாமல் கண்ணில் நீர் வந்தது. நானும் மகனும் ரசித்து விளையாடிய வாய்க்கால் என்பதற்காக அல்ல.

வயல்களும் தோப்புகளும் வீடுகளாகவும், கட்டிடங்களாகவும் ஆகி வருவதால். சில வருடங்களுக்கு முன்னால் வரையிலும் தேரேகால் வாய்க்காலிலிருந்து சாலையின் அடி வழியாகப் பசுமையான வயல்களுக்கு நீர்ப்பாசன வசதிக்காகச் சென்று கொண்டிருந்தது.

மட்டுமல்ல, ஒவ்வொரு கனமழையின் போதும் தேரேகால் வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் வரத்து சமயத்திலும் இந்த வாய்க்கால், வடிகால் வாய்க்காலாகவும் இருந்தது எனலாம்.

இந்த வாய்க்கால் தற்போது காணாமல் போயிருப்பது வருத்தமான விஷயம். (இதைப் பார்த்ததும் எதிர்கால வரைபடத்தில் இத்தேரேகால், வாய்க்கால், பழையாறு எதுவுமே இல்லாமல் ஆகிவிடுமோ? என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.)

தற்போதைய அதன் நிலையினால் வடிகாலாகச் செயல்படமுடியாமல் போனதால், சமீபத்து கன மழையின் போது வீடுகளில் தண்ணீர் புகுந்ததற்கு அதுவும் ஒரு காரணமாகச் சொல்லலாம் என்றும் தோன்றுகிறது. அப்படியான வாய்க்காலின் நிலையையும் ஏன் என்பதற்கான காரணமும் மேலே காணொளியில் காணலாம். அதற்கு அடுத்த பகுதி கீழே

தண்ணீர் வரத்து அதிகமான  போது மேலே சொல்லியிருக்கும் அந்த வாய்க்கால் பகுதி தாண்டியதும் உடைப்பு வெட்டலாம் என்று முயற்சி செய்துபார்த்து - படத்தில் தடம் தெரிகிறது - அங்கு புதிதாக வந்து கொண்டிருக்கும் பூங்காநகர் இருக்கிறது என்பதால் (கொலாஜ் படம். குப்பையையும் பாருங்கள்.) அடுத்து நாலுவழிச்சாலை குறுக்கிடுவதால் அங்கும் தண்ணணீர் குறுக்கே பாயமுடியாமல்...அதனால் நாலுவழிச் சாலையைத் தாண்டி திருப்பதிசாரம் சாலையில் கரை உடைக்கப்பட்டது. மறுபுறம் தண்ணீர் செல்லும் இடம் இருக்கிறது. வயல்கள்தான். ஆனால் எதிர்காலத்தில் இதுவும் மாறிப் போகும் காலம் வெகு அருகில் (வயல்கள் எல்லாம் வீடுகளாக). அதுவும் நாலுவழிச் சாலை வந்துவிட்டதால் நிலங்கள் பெரிய ரேட் என்று ஊரில் சொல்லிக் கொண்டார்கள். நாலுவழிச் சாலையில் உடைப்பு சரி செய்ய ஆட்கள், அதிகாரிகள், காவலர்கள் கூடியிருக்க ஊர்மக்களும். உடைப்பு பகுதியும் காணொளியும் அடுத்து கீழே

வாய்க்காலின் மேலே நாலுவழிச்சாலை, உடைப்பு
உடைப்புப் பகுதி. காணொளிச் சுட்டி கீழே


வலப்புறம் உள்ள படத்தில் நாலுவழிச்சாலையை ஒட்டி உடைப்புத் தண்ணீர் போவது கொஞ்சமாகத் தெரிகிறதா? இப்பகுதி எல்லாம் வயல்களாக இருந்தவை. இடையில் தோப்புகள். கீழுள்ள படம் இதன் தொடர்ச்சி
இடப்புறம் உள்ள படம். நாலுவழிச் சாலையை ஒட்டிப் போகும் (இப்படத்தில் நன்றாகத் தெரியும்) தண்ணீர் சென்று முட்டுவது எங்கு என்று பார்த்தால் தெரியும். வீடுகள். நெடுஞ்சாலையுடன் இணையும் பகுதியில் புதிதாக வருகின்றன.  
நாலுவழிச் சாலை, நாகர்கோவில் திருநெல்வேலி நெடுஞ்சாலையுடன் இணையும் பகுதி வலப்புறம் உள்ள படம். நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சாலையின் இடப்புறம் கட்டிடங்கள். நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து தெரிகிறது இல்லையா. அப்பேருந்து வழியிலேயே சிறிது தூரம் சென்றால் இதோ கீழே .....எங்கள் ஊருக்குத் திரும்பும் பகுதி... ஒட்டிய பகுதியில் கடைகள் இப்போது

எங்கள் ஊருக்குத் திரும்பும் இடத்தில் முக்கால் மைல்/திருப்பதிசாரம் ரோடு தொடங்கும் இடம்,-பேருந்து நிறுத்தம் 'ஓட்டாபீஸ்' - முனையில் செங்கற்சூளை ஓடுகள் செய்யப்படும் 'பயோனிர் தொழிற்சாலை'  இப்போதும் இருக்கிறது.  ஆனால் மூடப்பட்டு இருப்பதாலும் அதை அடுத்து  கடைகள் நிறைய வந்துவிட்டதால் வெளியில் அடையாளம் இழந்து..
 
கொலாஜில் இடப்புறம் உள்ள படம்மேலே முதலில் பார்த்த முக்கால்மைல் ரோடு நெடுஞ்சாலையுடன் இணையும் இடம். இங்குதான் நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குச் செல்ல முக்கால்மைல் ரோடில் திரும்பவேண்டும், திரும்பும் இடத்தில் வீடுகள் தெரிகிறதா? அதற்கடுத்தும் வீடுகள் காலனிகள் என்று. முன்பு இடப்புறம் வயல்கள்....வலப்புறம் வாய்க்கால் இவை மட்டுமே இப்போது பெரும்பாலும் வீடுகள். .  
கொலாஜில் வலப்புறம் உள்ள படம்: தேரேகால்புதூரில் உள்ள பகுதிதான் நாஞ்சில் நகர். உங்களில் பலரும், தண்ணீர் புகுந்த போது இந்த நகரில் பிள்ளைகள் நீரில் நீந்திக் களித்த காணொளியைக் கண்டிருக்கலாம். திருப்பதிசாரம் ரோடிற்கும் தேரேகால் பகுதிக்கும் இடையில்தான் தேரேகால் வாய்க்கால். தற்போது நாலுவழிச்சாலை வழியாகவும் எங்கள் ஊருக்குச் செல்லலாம். 
கொலாஜின் கீழே உள்ள படத்தில் தெரியும், ஊருக்குத் திரும்பும் பகுதி (ஆட்டோ) தேரேகாலின் குறுக்கே போகும் நெடுஞ்சாலை. நான் எதிர்ப்புறம் வந்து ஃபோட்டோ எடுத்தேன். இப்பகுதியில்தான் தேரேகால் வாய்க்கால் பெரிய குளத்தில் சேர்கின்றது. படங்கள் கீழே

நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் தெரியும் படம் மேலே இருக்கிறதல்லவா படத்தில் திருப்பதிசாரத்தின் ரோட்டின் எதிர்ப்புறம் தான் இதோ தேரேகால் கலக்கும் பெரிய குளம். இதற்கான காணொளிச் சுட்டி 



திருப்பதிசாரம் ரோடு எங்கள் ஊரைக் கடந்து செல்லும் போது அங்கிருந்து அது தாழக்குடி ரோடு. தாழக்குடி ரோட்டில் உடைப்பு. வலப்புறம் பீமநகரி கிருஷிப்பாலம் கடந்ததும் வீரநாராயணமங்கலம் செல்லும் வழியில் ரோட்டில் கரை உடைத்துவிடப்பட்டது. தோப்பு வழி தண்ணீர் சென்றது. (தோப்பு எம் சி பாலன் அவர்களின் தோப்பு என்று சொல்லப்பட்டது.) நல்லகாலம் இங்கு வீடுகள் வரவில்லை.
இங்கும், நாலுவழிச் சாலையிலும், (ஆங்காங்கேயும், இறைச்சகுளம் பகுதியிலும் உடைக்கப்பட்டது என்று மக்கள் சொன்னார்கள்.)  புதிதாக வாய்க்காலின் ஓரங்களில், தண்ணீர் பாயும் வயல்களில் கட்டப்பட்ட வீடுகளில் தண்ணீர் மேலும் புகாமல் வடிந்துவிட்டதன் காரணம், கிராமங்களின் வயல்களும், தோப்புகளும் வடிகாலாகின என்றால் மிகையல்ல. வரும் காலங்களில் வயல்களும் தோப்புகளும் கட்டிடங்களாக மாறினால்....? சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

நான் சுகமா வெயில்ல குளிக்கிறேன். ஹப்பா இனி தண்ணி வராது. அதனால தண்ணிய பத்தின கதைய புலம்பித் தள்ளிட்டாங்களா?! இனி புலம்பல் இருக்காது. ஒரே ஒரு கவலை....இந்த 15 நாளும் அம்மா சாப்பாடு போட்டதுனால டிபன் கடைப்பக்கமே போகாம, சண்டை கடிலருந்து தப்பிச்சிருந்தேன். ஆனா இனி அங்கதான் போய் யாராச்சும் ஏதாச்சும் கொடுப்பாங்களான்னு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு மத்ததுங்களோட மல்லுக்கு நின்னு கடி வாங்கணும் போல! ஹூம்.

பொறுமையுடன் வாசித்துக் கருத்திட்ட, கருத்திடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மன்னிப்பு சொல்லிக் கொள்கிறேன். முடித்துவிட வேண்டும் என்பதால் இப்பதிவும் படங்களுடன் பெரிதாகிவிட்டது. இனி வரும் பதிவுகளைச் சிறிதாகத் தர முயற்சி செய்கிறேன். மீண்டும் ஸாரி, நன்றி!

----கீதா

26 கருத்துகள்:

  1. அழகான விவரிப்பு...

    // வயல்கள் எல்லாம் வீடுகளாக // எதிர்காலம் சிரமம்...

    முந்தைய பதிவில்(#) இணைப்பாக கொடுத்த காணொளிகளை பார்த்து விட்டேன்... இன்றைய பதிவில் உள்ளதை பார்க்க முடியவில்லை... காரணம் அதே அதே(#)...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டிடி. மிக்க நன்றி டிடி. நாளை காலை ஷெட்யூஸ் செய்திருந்தேன் ஆனால் தேதி 27 என்று கொடுத்திருந்திருக்கிறேன். பப்ளிஷ் ஆனதே தெரியாமல் ஹாஹாஹா...அப்புறம் மீண்டும் பதிவு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கப் போன போது ஆஹா பப்ளிஷ் ஆகி உங்கள் கருத்தும் கண்டு...உடனே காணொளிகளையும் பப்ளிஷ் செய்துவிட்டேன் டிடி. மிக்க நன்றி

      முந்தைய பதிவில்(#) இணைப்பாக கொடுத்த காணொளிகளை பார்த்து விட்டேன்...//

      மிக்க நன்றி டிடி.

      ஆமாம் டிடி நான் ஊரை விட்டு வந்து 34 வருடங்கள் ஆகிறது இத்தனை வருடங்களில் வயல்கள் அழிந்து வந்திருக்கும் வீடுகள் மெதுவாகத்தான் என்றாலும் இனி வேகமெடுத்துவிடுமோ என்ற பயம் எழுந்துள்ளது.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
    2. இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

      நீக்கு
    3. காணொளிகள் பார்ப்பதற்கு மிக்க நன்றி டிடி..

      கீதா

      நீக்கு
  2. இன்னும் ஒருதலைமுறை தாண்டியபின்....

    இன்னும் எஞ்சியுள்ள வயல்களெல்லாம் வீடாகவும், ரோடாகவும் மாறியபின்....

    இயற்கையை அழித்ததால் நோய்வாய்பட்டு நிற்கும் அந்த புதிய தலைமுறைக்கு....

    இப்பதிவானது....

    இயற்கையின் அற்புதத்தையும், இயற்கையோடு ஒன்றிவாழ்வதால் ஏற்படும் நன்மைகளைபற்றியும் ஓங்கி உரைத்துநிற்கும் என்பது மட்டும் உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சகோ.

      இயற்கையோடு ஒன்றி வாழ்வது நல்லதுதான் அதே சமயம் நம் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. இரண்டையும் பாலன்ஸ் செய்து வாழ்வது முக்கியம்தான்

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    உங்களது ஊரின் நிலைகளை, மழை காலத்தில் வாய்க்காலில் பெருகி வரும் தண்ணீர் அதன் போக்கில் செல்ல முடியாமல், ஆங்காங்கே முளைத்திருக்கும் வீடுகளின் தடையால், எப்படி திசை திரும்பி போகிறதென்பதை அருமையாக விவரித்து விட்டீர்கள். நானும் பதிவு வெளி வந்தவுடனே வந்தேன். காணொளிகளை சரிவர பார்க்க இயலவில்லை. சரி.. நம் கைபேசியில் தாமதமாகத்தான் தெரியுமென நினைத்து விட்டேன்.இப்போது வந்த போது காணொளிகள் அனைத்தும் தெளிவாக தெரிகின்றன.

    தண்ணீரின் தடுமாற்ற பாதைகளை அழகாக படமெடுத்து காட்டியுள்ளீர்கள். இன்னமும் கட்டுமானங்கள், சீர்திருத்தங்கள் என வந்தால் வயல்களின் நிலை கஸ்டந்தான். மக்களும், வயல்களை, அதனுடனான உழைப்புக்களை கைவிட்டு வேறு பாதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.ஒன்றும் சொல்வதற்கில்லை...

    நீங்கள் மிகவும் தைரியமாகவும், மழை வெள்ளநீரை பொருட்படுத்தாமலும், நடந்து சென்று தேரேக்கால் வாய்காலைப் பற்றியும், அது எப்படி தன் பாதையில் செல்ல முடியாமல் திணறுகிறது என்பதைப் பற்றியும் விபரமாக அழகிய படங்களுடனும், காணொளிகளுடனும் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    நல்ல பசுமையுடன் உங்கள் ஊர்கள் இப்போதும் இருப்பதை பார்த்தால் முன்பு எப்படி இதை விட செழிப்பாக இருந்திருக்கும் என்பதையும் உணர முடிகிறது. ஆனால் மக்களின் சுயநலங்களினால் தனித்தனியே குடியிருப்புகளை கொண்டு, நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதனால், பசுமைகள் இழந்துதான் போகிறது. என்ன சொல்வது?

    இறுதியில் அங்கு உங்கள் வளர்ப்பில் ஆனந்தம் அடைந்திருந்த செல்லம் இனி செய்யுமோ என நீங்கள் கவலைப்படுவது புரிகிறது. செல்லத்தின் படம் நன்றாக உள்ளது. நீங்கள் மீண்டும் ஊர் திரும்பும் நாளை அதுவும் எதிர்பார்த்தபடி காத்திருக்கும். பாவம்..!!

    பதிவுகள் பெரிதாகிறதே என கவலைப்படாதீர்கள். நல்ல விவரணையாக சுவாரஸ்யமாக சொல்லும் போது பதிவின் நீளம் தெரியவில்லை. (என் சொந்த அனுபவமா என அனைவரும் மனதிற்குள் நினைப்பது புரிகிறது. ஹா ஹா. ஹா. ) நானும் மற்ற பதிவுகளுக்கு கருத்தைக்கூட சிறிது சிறிதாக அனைவரைப் போலவும் நான்கைந்து தடவை தராமல் மொத்தமாக நீளம் பார்க்காது ஒரே முறையாக தந்து வருகிறேன்.:)) நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுமானங்கள் தண்ணீரின் போக்கைச் சீர் செய்யும் வகையில் அமைந்தால் நலல்து.

      கமலாக்கா முன்பு ஊர் இன்னும் பசுமை. வசதிகள் குறைவுதான் ஆனால் பசுமை. இப்போது வசதிகள் கூடியிருக்கிறது கொஞ்சம் வயல்கள் தோப்புகள் மாறியுள்ளன ஆனால் முற்றும் ஆகவில்லை. இப்ப இருப்பதேனும் இருந்தால் எங்கள் ஊரில் விதை ஆராய்ச்சி, மண் பரிசோதனை செய்து புதிய நெல் வகைகள் கண்டுபிடிக்கும் மத்திய அரசின். மாநில அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மையம் இருப்பதற்கு அர்த்தம் இருக்கும்

      //நல்ல விவரணையாக சுவாரஸ்யமாக சொல்லும் போது பதிவின் நீளம் தெரியவில்லை. (என் சொந்த அனுபவமா என அனைவரும் மனதிற்குள் நினைப்பது புரிகிறது. ஹா ஹா. ஹா. ) //

      ஹாஹாஹாஹாஹா ஹைஃபைவ்!!! கமலாக்கா

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  4. எதிர்காலத்தில் இந்த மழைகள் வந்தால் மக்களின் சராசரி வாழ்க்கைக்கு பாதிப்பு வரும். இந்நிலை தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் தொடர்கிறது....

    அரசுதான் மாற்றுவழிகளை தேடணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தில் பல ஊர்களிலும் இருக்கிறதுதான் எங்கள் ஊரில் குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது ரொம்பப் பேசப்பட்டது காரணம் இப்போது ஏற்பட்டது முன்பு இல்லை. எல்லோரும் சொன்ன ஒரே காரணம் இங்கு நாம் சொல்வதுதான்.

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      கீதா

      நீக்கு
  5. வீடுகளும் வேண்டும். வயல்களும் வேண்டும். தண்ணீரும் வேண்டும். இவை மூன்றையும் எப்படி ஒன்றோடு ஒன்று பாதிக்காமல் நிறைவேற்றுவது பற்றிய வடிவமைப்பு திறன் நமக்கு இல்லை எனலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே ஜெகே அண்ணா. எல்லாவற்றையும் பாலன்ஸ் செய்யும் வடிவமைப்பு மிக மிக முக்கியம். வயல்கள் இல்லாமல் போனால் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சாப்பாடு என்ன ஆகும் என்று தோன்றுகிறதுதான்.

      மிக்க நன்றி ஜெகே அண்ணா

      கீதா

      நீக்கு
  6. முதல் கொலாஜ் படத்தில் காணப்படும் இரண்டு சாலைகளும் ஒன்றுதானா? இல்லை, பக்கச்சாலைகளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே ஒரே சாலைதான் ஸ்ரீராம். வாய்க்காலோடு சாலை செல்கிறது என்பதைக் காட்ட எடுத்த படம். இப்படி தாழக்குடியிலிருந்து தேரேகால் வரை இந்த ரொடு, வாய்க்கால் தோப்புகள் கூடவே வரும்!!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. வண்ணாக்குடி வாய்க்கால் ஒரு உடகாரணம்.  ஒவ்வொருவரின் பால்யமும் பல இழப்புகளை இதுபோல சந்தித்துக் கொண்டுதான் வருகிறது.  மாறும் உலகில் மாறா மனஇளமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதன் நிலை என் மனதை வருத்தியது. அது வடிகாலும் கூட ஸ்ரீராம். மக்கள் மற்றும் அரசு அதை உணர்ந்து அதன் வழித்தடத்தை மட்டுமேனும் விட்டு வைக்கலாம்.

      கீதா

      நீக்கு
  8. உடைக்க ஏற்பாடு செய்யும் இடங்கள் பற்றி அந்த இடம் அறிந்தவர்களால் உணரமுடியும் அளவு எங்கல்லால், அல்லது என்னால் உணரமுடியாது.   அதுபோல சுற்றிலும் வாழ்விடங்கள் பெருகிவிட்டால் எங்கு உடைத்தாலும் அவர்களை தண்ணீர் பாதிக்கும் என்றால் எதிர்ப்பும் இருக்கும்தான்.   என்னவென்றால் இதுமாதிரி இழப்புகள் இப்போது எங்கெங்கிலும் சகஜமாகி வருகின்றன.  மக்கள்தொகைப்பெருக்கம், அவர்களின் சொந்த வீடு ஆசைகள், வாழ்விடப் பிரச்னைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம் உடைப்பு எடுப்பு என்பது அந்தந்தப் பகுதி மக்களுக்குத்தான் அறிய முடியும்.

      //அதுபோல சுற்றிலும் வாழ்விடங்கள் பெருகிவிட்டால் எங்கு உடைத்தாலும் அவர்களை தண்ணீர் பாதிக்கும் என்றால் எதிர்ப்பும் இருக்கும்தான். //

      ஆமாம் ...ஆனால் அந்த இடங்களில் வீடுகள் கட்டியோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தார்களாம் இங்கு வீடு கட்டினால் தண்ணீர் வரும் அதன் பின் கம்ப்ளெயின்ட் கொடுக்கக் கூடாது என்று.

      நீங்கள் சொல்லியிருப்பது போல் இழப்புகள் எங்கும் சகஜமாகி வருகிறதுதான்.

      கடைசி வரி சரியே...ஆனால் கொஞ்சம் ப்ளானிங்க் என்பது அவசியம் ஸ்ரீராம். அதாவது டவுன் ப்ளானிங்க், சிட்டி ப்ளானிங்க், கிராம ப்ளானிங்க் என்பது அவசியம் என்பதும் தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
  9. மொத்தத்தில் பார்க்கும்போது ஒரு சோறு பதம்! ஊரெங்கும், மாநிலமெங்கும் நடைபெறும் இயற்கை அழிப்பின் ஒரு சோறு பதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே. இது போலத்தான் எல்லா இடங்களிலும் ஸ்ரீராம்..

      மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்துகளுக்கு

      கீதா

      நீக்கு
  10. தெருவில் ஓய்வெடுக்கும் செல்லத்திடம் என்ன ஆனந்தம், ஒய்யாரம்!  [புகைப்படம் எடுப்பதை புன்னகையுனும், வெயிலின் கதகத உற்சாகத்துடனும் கவனிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதுக்கு ஒரேகுஷி வெயில் கண்டதும். வண்டி வந்தால் கூட நகரவில்லை. பஸ் இரு நாள் வரலையா அதுக்கு சந்தோஷம்.

      என் தோஸ்தாகிய செல்லம். வேறு என்ன பிஸ்கட் பன், ரஸ்க் போட்டு வீட்டு வாசலிலேயே இருந்தது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. கவலையாகத் தான் இருக்கு, இந்த அழகெல்லாம் காணாமல் போய்விடுமோ என்பது. எல்லாப் படங்களும் அருமை. ஃபோட்டோ ஷாப்/க்ராப்பிங் செய்திருக்கீங்களோ? சாலை சுத்தமாகக் காண முடிகிறது. காணொளிகள் பின்னர் தான் பார்க்கணும். இந்த அழகைத் தொலைக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபோட்டோ ஷாப்/க்ராப்பிங் செய்திருக்கீங்களோ?//

      இல்லை கீதாக்கா. கேமராவில் சில ஆப்ஷன்ஸ் இருக்கும் இல்லையா அதைத் தேர்ந்தெடுத்து எடுப்பதுதான். கேமரா காதலும் உண்டு. என் கேமரா மிக மிகச் சாதாரண கேமரா என்றாலும் அதில் என்னென்ன இருக்கு என்று முதலில் ஆராய்ந்து, கூகுள் செய்து இந்த மாடலில் இந்த ஆப்ஷன் என்ன எப்படி வரும் என்று தெரிந்து கொள்வதுண்டு. அவ்வளவே.

      //கவலையாகத் தான் இருக்கு, இந்த அழகெல்லாம் காணாமல் போய்விடுமோ என்பது. //

      ரொம்பவே இருக்கு கீதாக்கா.

      //சாலை சுத்தமாகக் காண முடிகிறது.//

      முன்பு இன்னும் சுத்தம். இப்போது ஊரில் நிறைய குப்பைகள் வந்துவிட்டது. இது தண்ணீர் வந்ததில் எல்லாம் அடித்துக் கொண்டு சென்று ஒதுக்கித் தள்ளியுள்ளது. நீர்நீலைகளும் எல்லா ஊர்களைப் போலும் கெட்டுக் கொண்டிருக்கிறதுதான்.

      பாதுக்காக்க வேண்டும் .

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. மிகச் சில வீடியோக்கள் மட்டும் எடிட் செய்கிறேன். இடையில் சிலதில் கை அசைந்து அலல்து வேண்டாத காட்சி வந்திருந்தாலோ...அதை கட் செய்துவிடுவேன்.

      சிறிய வீடியோக்கள் அதாவது பறவைகள் பறப்பதை இரண்டு மூன்று இடங்களில் எடுத்திருந்தால் அதை ஒன்றாகச் சேர்த்து ஒரே வீடியோவாகச் செய்துவிடுகிறேன். அவ்வளவுதான் கீதாக்கா.

      கீதா

      நீக்கு