சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 3
அடுத்த
பதிவில் திருப்பதிசாரத்தின் கீழூர் மேலூர் பற்றியும், தேரேகால் எப்படி மரிந்து ஊருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது,
ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத்
தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட
படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்//
என்று
முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். இதோ மேலூர் கீழூர்.
திருவண்பரிசாரத்தின் மேலூர் கீழூர் இடையில் ஓடும் தேரேகால் வாய்க்கால் மற்றும் இணைக்கும் பாலம்
பாலத்தின் அப்புறம் தெரிவது (வெள்ளைக்கார் நிற்கிறதே) திருவண்பரிசாரத்தின் மேலூர். திருவாழ்மார்பனின் ஊர்பாலத்தின் இப்புறம் தெரிவது திருவண்பரிசாரத்தின் கீழூர்
வீட்டு வேலைகள், என் வேலைகள் என்று நேரம் சரியாக இருக்கிறது. நிறையப் படங்கள், காணொளிகள். எல்லாம் ஒழுங்குபடுத்தி, எதைப் போட வேண்டும் என்று தனியாக எடுத்து சேமித்து வைப்பதிலும், பகிர்ந்ததைத் தனியாகச் சேமிப்பதிலும் நேரம் கடந்துவிடுகிறது. இடையில் வலைப்பக்கம் கருத்துகள். சில வாசிப்புகள். பதிவு எழுதவும் நேரம் எடுப்பதால் தொடருக்கு இடையில் நிறைய இடைவெளி வந்துவிடுகிறது.
இதோ பதிவின் 3 வது பகுதி
பீமநகரி – திருப்பதிசாரத்திலிருந்து 2 கி மீ தூரத்தில் உள்ள சிறு கிராமம். 2கிமீ என்று சொன்னாலும் வயல்கள், வாய்க்கால்கள் இணைப்பதால் தொட்டடுத்த கிராமம்தான். தண்ணீர் பற்றிய பதிவுகள் முடிந்த பிறகு இக்கிராமம் குறித்தும் நான் சென்று வந்த மற்ற பகுதிகளைக் குறித்தும் படங்கள் காணொளிகளோடு வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
தாழக்குடி, வீரநாராயணமங்கலம், பீமநகரி கிருஷிப்பாலம் பகுதி வழியாக தேரேகால் வாய்க்கால் திருப்பதிசாரத்தைக் கடந்து தேரேகால்புதூரில் உள்ள குளத்தில் கலக்கிறது. தேரேகால்புதூர் எங்கள் ஊரிலிருந்து 20 நிமிட நடையில் உள்ள கிராமப் பகுதி.
இப்பகுதியில் வந்த நீர் வரத்தைப் படங்கள் எடுக்க முடியவில்லை. ஏனென்றால் எங்கள் ஊர் வழிதான் தண்ணீர் இப்பகுதிக்குச் செல்லும் என்பதால் எங்கள் ஊரில் தண்ணீர் பாயத்தொடங்கிவிட்டதால் அங்கு செல்ல முடியவில்லை. இந்தப் பகுதியில் தான் நீர் வழியில் தான் நீங்கள் வாட்சப்பில் பார்த்த நாஞ்சில் நகர் வீடியோ - பெண் குழந்தைகள் நீச்சல் அடித்து விளையாடும் காணொளிகள் - பார்த்திருப்பீர்கள். (கீதாக்காவும் சொல்லியிருந்தார்.)
தண்ணீர் அதிகரித்துக் கொண்டே வந்து பாய்ந்த முதல் நாளன்று, காலையில் மழை பெய்து ஓய்ந்து தூறிக் கொண்டே இருந்தது. முந்தைய தினம் மலைகளில் கனமழை என்பதால் தண்ணீர் வரத்து மெதுவாகக் கூடிக் கொண்டே வந்ததை சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். வீட்டைத் தொட்டடுத்து இருந்த தேரேகாலையும் பார்த்துக் கொண்டேதான் இருந்தேன்.
இருந்தாலும் நேரம் ஆக ஆக வெயில் வந்து மதியம் நல்ல வெயில் இருந்ததாலும், மலைகள் பளிச்சென்று தெரிந்ததாலும், 2 கிமீ தூரத்தில் இருக்கும் பீமநகரி வரை சென்று படம் பிடித்தால் என்ன என்று தோன்றிட 1.30 மணி அளவில் வீரநாராயணமங்கலம், தாழக்குடி ரோடில் நடக்கத் தொடங்கினேன். ரோட்டில் இருசக்கர வாகனங்கள், ஓரிரு ஆட்டோக்கள், கார்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன.
தேரேகால்புதூரிலிருந்து திருப்பதிசாரம் வழியாக வீரநாராயணமங்கலம் தாழக்குடி செல்லும் சாலையில் இடையில் பீமநகரி கிராமத்திற்குச் செல்லும் கிருஷிபாலம். போகும் போது, திருப்பதிசாரம் மேலூர் வீடுகளின் பின் பகுதியில் வழக்கமாக மரிந்து பாயும் இடத்தில் கொஞ்சம்தான் தண்ணீர் ஆற்றிலிருந்து சாலைக்கு வந்திருந்தது. மேலே உள்ள படம்.
வழக்கமாகத் தண்ணீர் மரிந்து பாயும் பகுதிகள் தெரியும் என்பதாலும், மேலூர் வீடுகளின் பின்புறம் மரிந்து பாயும் இடத்தில் வாய்க்கால் தண்ணீர் நடந்து செல்லும் அளவுதான் இருந்தது என்பதால் அதையும் கடந்து நடக்கத் தொடங்கினேன். இதோ இந்தப் படம் அதைக் கடந்து சென்ற போது எடுத்த படம்.
ஆனால் 10, 12 நிமிட நடையில் இருக்கும் பீமநகரி கிருஷிப்பாலத்தை அடைந்ததும் தண்ணீரின் பாய்ச்சல் தெரிந்தது. படங்கள் காணொளிகள் கீழே
திரும்பிப் போகும் போது கண்டிப்பாக மேலே உள்ள படத்தில் இருக்கும் இடத்தில் தண்ணீர் அதிகமாகிவிடும் அதைக் கடந்துதான் 3 நிமிட தூரத்தில் இருக்கும் ஊருக்குள் செல்ல முடியும். ஆனால் அங்கு தண்ணீர் வர சற்று தாமதமாகும் என்பதால் அப்பாவை அழைத்து தயாராக இருக்கச் சொல்லிவிட்டு நடந்துகொண்டே இடதுபுறம் உள்ள தோப்புகள், வயல்கள், மலைகளைப் படம் பிடித்துக் காணொளிகளும் எடுக்கத் தொடங்கினேன்.
இச்சாலையில் இடப்பக்கம் முழுவதும் இடையில் வயல்வெளிகள் இருந்தாலும் முழுவதும் தோப்புகள் தான்.
(காளிகேசம் கீரிப்பாறை இருக்கும் மலைகள் கீழே உள்ள படங்கள். இவற்றின் மற்றொரு புறம் பார்வதிபுரம் பகுதியில் திருவனந்தபுரம் செல்லும் வழியில் பார்க்கலாம். அவற்றையும் படங்கள் வீடியோக்கள் எடுத்துள்ளேன்.) நடக்கும் போது இடப்புறம் எடுத்த படங்கள்.
பளிச்சென்று இருந்த மலைகளை மழை மேகம் சூழத் தொடங்கியது.
கூடவே வலதுபுறம் தண்ணீர் அதிகரித்துக் கொண்டே ஓடும் தேரேகால் வாய்க்காலையும் கவனித்துக் கொண்டே படங்கள், காணொளிகள் எடுத்துக் கொண்டே சென்றேன்.
இந்த மலை மருங்கூர் பகுதியில் இருக்கும் மலை. மருங்கூர் படங்கள் விளக்கங்கள் வரும் பதிவுகளில்
பீமநகரி க்ருஷிப்பாலம் காட்சிகள் -
காணொளிகளை யுட்யூபில் பார்க்கச் சுட்டிகளும் கூடவே கொடுத்துள்ளேன். நேரமிருந்தால் பாருங்கள்.
உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வராமல் இருக்க இந்த மதகு திறந்துவிடப்பட்டு தண்ணீர் மறுபக்கம் பாய்ந்து தோப்புகள் வயல்கள் வழி ஜடாயுபுரம் சென்று அங்கு ஓடும் பழையாற்றில் கலந்துவிடும்.
மதகுப் பகுதி சுட்டி கீழே
மேலே சொல்லப்பட்டதன் காணொளிச் சுட்டி இதோ. தேரேகால் வாய்க்காலில் தண்ணீர் வரத்து கூடத் தொடங்கியதால் ஊருக்குள் தண்ணீர் வராமல் இருக்க கிருஷிப்பாலம் மதகு திறந்துவிடப்பட்டு மறுபக்கம் தண்ணீர் பாய்ந்ததால் வயல்கள் தோப்புகளில் தண்ணீர் நிரம்பி ஓடத் தொடங்கியது.
பீமநகரி வயல் பக்கங்களில் இருந்தும் எல்லாப்பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வந்து தேரேகாலில் வந்து சேர்கிறது. சுட்டியில் கடைசியில் ஒரு பகுதியை க்ளோஸப்பில் எடுத்திருப்பேன். அதை $ இந்த குறியிட்ட சுட்டியில் பாருங்கள் விளக்கம் அங்கே.
இப்படத்தில் உள்ள தண்ணீர் பாயும் பகுதியைக் கடந்து சென்று எடுத்த காணொளியின் சுட்டி கீழே விளக்கத்துடன்.
வயல்களுக்கும் சாலைக்கும் இடையில் ஓடும் வாய்க்கால் இருப்பது கூடத் தெரியாமல் தண்ணீர் ஓடுகிறது. இத்தண்ணீரும் தேரேகாலில் கலக்கும் இடத்திலும் எல்லாம் சமமாக இருக்கிறது. மேலே டாலர் குறியுடன் விளக்க்த்திற்கான சுட்டி $ https://youtu.be/F8W1C3wxY6s $
அதற்கு மேல் பீமநகரி கிராமத்திற்குள் செல்ல முடியாது என்று தோன்றியதாலும், ஊரிலும் நீர் வரத்து அதிகரித்திருக்கும் என்பதாலும் திரும்பிச் சென்ற போது மேலே சொல்லியிருந்தபடி வரும் போது குறைவாக இருந்த தண்ணீர் அப்போது முட்டி அளவு இருந்தது. https://youtu.be/5QGxZMwJg4U இச்சுட்டியில் சற்று அருகே தெரியும் வீடுதான் என் மாமாவின் வீடு.
இதைக் கடந்து சென்றதும் அங்கு நின்று கொண்டிருந்த மூர்த்தி அண்ணன், அங்கெல்லாம் படம் பிடிச்சுட்டியா கீதா? வா இங்க பாரு கீழூர்ப்பாலத்துல தண்ணி அடைச்சுப் போகுது. படம் புடிச்சுக்க" என்றதும் க்ளிக்! இதோ அந்தப் படம்.
"கீழூர் வீடுகளுக்கப் பொறத்தால தண்ணி ஏறுது" என்று சொல்லவும் சாலையிலிருந்தே தெரிந்ததால், வீடு வாய்க்கால் அருகில் என்பதால் சென்று பின்புறம் பார்த்தால் தண்ணீர் மெதுவாகக் கூடிக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் வர இன்னும் நேரம் எடுக்கும், அது போல முன்புறம் வழியாக வரவும் கொஞ்சம் நேரம் எடுக்கும் ஏனென்றால் தண்ணீர் போக முடிந்த இடங்களில் எல்லம் புகுந்து ஓடிக் கொண்டேதான் இருந்தது.
எனவே அதற்குள் ஜடாயுபுரம் சென்று பார்த்துப் படங்கள், காணொளிகள் எடுத்துவிடலாமே என்று அப்பாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். மூர்த்தி அண்ணனும் ஆர்வமுடன் என்னோடு வந்து அதை எடு இதை எடு என்று சொல்லிக் கொண்டே வந்தார். ஜடாயுபுரத்தில் எடுத்துவிட்டு வரும் போது என்ன ஆயிற்று என்பதை அடுத்த பதிவில் படங்களுடன் சொல்கிறேன்.
-------கீதா
(வருத்தம். பதிவு ப்ரிவ்யூ செய்தப்ப சரியாக இருந்ததால் வெளியிட்டு விட்டு சரியாகப் பார்க்க கூட முடியாமல் அவசர வேலை வந்ததால் கவனிக்கச் சென்றுவிட்டேன். அப்புறம் வந்து பார்த்தால் பதிவில் பலவும் நான் செய்த மாற்றங்கள் சேமிக்கப்படாமல், படங்கள் சில சுட்டிகள் மிஸ் ஆகி, யுட்யூப் சுட்டிகள் ப்ரைவேட்டாகவே இருக்க, என் பெயரும் இல்லாமல் முழுமையான பதிவாக வெளியாகவில்லை. வந்திருந்த இரு கருத்துகளிலும் சுட்டிக் காட்டப்படவும் இல்லை. அதனால் மீண்டும் ரிவெர்ட் செய்து ஓரளவு சரி செய்து மீண்டும் வெளியிடல். பதிவு சரியாகப் பார்க்கப்படாமல் சொல்லப்பட்டிருந்ததை நினைத்து மனம் மிகவும் வருத்தமாகிவிட்டது. ஆர்வம் குறைகிறது என்பதையும் வருத்தத்துடன் சொல்கிறேன்.)
இயற்கை அழகு மனதை மிகவும் கவருகிறது... அருமை...
பதிலளிநீக்குநன்றி டிடி.
நீக்குகீதா
சட்னு வெள்ளம் அதிகமாகி ரோட்டுக்கெல்லாம் வந்தால் எப்படி திரும்ப வருவது?
பதிலளிநீக்குநினைத்தாலே பயங்கரமாகத்தான் இருக்கிறது.
அது சரி... வெள்ளத்தினால் பாம்புகள்லாம் வீட்டை நோக்கி வந்ததா?
சட்னு வெள்ளம் அதிகமாகி ரோட்டுக்கெல்லாம் வந்தால் எப்படி திரும்ப வருவது?//
நீக்குஅது கொஞ்சம் பழக்கம் தான் நெல்லை. தண்ணீரின் வேகத்தையும் அது பாயும் இடங்களையும் வைத்துக் கணித்தல். ஊர்க்காரர்கள் மிக மிக நன்றாகக் கணிப்பார்கள். எனக்கும் கொஞ்சம் கணிக்க வரும். இரண்டாவது தண்ணீர் தேங்கி நிற்காது. உங்களுக்குப் படங்களைப் பார்த்தாலே தெரியும். எல்லாம் ஓடிக் கொண்டே இருக்கும். நகரங்களைப் போல வடியாமல் இருக்காது. நகர வாழ்க்கைக்குப் பழகியவர்களுக்கு இது பயத்தை விளைவிக்கும் தான். ஆனால் நாகர்கோவில் டவுனும் இன்னும் ஓரிரு வருடங்களில் சென்னையைப் போன்று ஆகிவிடும் நிலை வந்துகொண்டிருக்கிறது.
எங்கள் ஊர் ஆவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். எங்கள் கிராமங்களைச் சுற்றி இருக்கும் வயல்களும் தோப்புகளும் மலைகளும் கட்டிடங்களாக மாறும் போது நீங்கள் சொல்லியிருப்பது கண்டிபாக நடக்கும்.
சாதாரண நாட்களிலேயே பாம்புகள் வரும் ஊர் எங்கள் ஊர்கள். பெரும்பாலும் தண்ணீர்ப்பாம்புகள், சாரைப் பாம்புகள்.
நல்ல பாம்பு, கட்டுவிரியன். இவை வந்ததுண்டு. இப்போது தெரியவில்லை
ஆனால் தன்ணீர் வந்தப்ப எங்கள் வீடுகளில் பாம்பு எதுவும் வரவில்லை. ஒரே ஒரு வீட்டில் மாட்டுக் கொட்டகையில் தண்ணீர் வரும் சற்று நேரம் முன்னரே சாரைப்பாம்பு வந்திருந்ததாகச் சொன்னார்கள். அது வயல் பின்புறம் என்பதால்.
மிக்க நன்றி நெல்லை
கீதா
நாங்கல்லாம் அம்பத்தூரில்/ராஜஸ்தானில்/குஜராத்தில் பாம்புகளோடு குடித்தனமே பண்ணி இருக்கோம். அதிலும் பெரிசு/பெரிசாக நிலைப்படியில் வந்து நீளமாகச் சுருட்டிக் கொண்டு படுத்துக்கும்/ராத்திரிக்கு எங்களுக்குத் துணையாக! அம்பத்தூரில் மழை பெய்தால் கட்டாயம் அதுங்க பாதுகாப்புக்காக எங்க வீட்டுக்குள் நுழைந்து ஆங்காங்கே சுருண்டு படுத்துக்கும். இப்படிச் செல்லமாக இருப்பதால் சுப்புக்குட்டிங்க என்றே அழைப்போம்.
நீக்குகீதாக்கா நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவங்களை. எங்கள் ஊரிலும் நிறைய பாம்புகள் வீட்டிற்குள்ளும் வந்து இருக்கும். ஏதோ ரெஸ்ட் எடுத்துவிட்டுப் போவதுபோல!!!
நீக்குகீதா
Avargal Unmaigal commented on "பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 2"
பதிலளிநீக்கு21 mins ago
படங்கள் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் அது சொல்லும் சேதிகள் மனதை வருத்தத்தான் செய்கிறது Be Safe
ஆமாம் மதுரை போகிற போக்கைப் பார்த்தாள் வளர்ச்சி என்ற பெயரில் மிக மிக அழகான எங்கள் ஊர்ப்பகுதிகளும் பெருநகரங்களைப் போல எதிர்காலத்தில் ஆகிவிடும் என்று தோன்றுகிறது.
நீக்குBe Safe// மிக்க நன்றி மதுரை. பயணம் முடிந்து இருப்பிடத்திற்கு வந்தாச்சு!!!
கீதா
அனைத்து காணொளிகளும் பார்த்தேன், உங்கள் குரலை கடைசி காணொளியில் கேட்டேன்.
பதிலளிநீக்குதைரியமாக நீரில் நடந்து காணொளி எடுத்து வந்து போட்டு விட்டீர்கள். ஒவ்வொரு காணொளியிலும் நீரின் வரத்து அதிகரிப்பது நன்றாக தெரிகிறது.
படங்கள் எல்லாம் மிக அருமை. பசுமை கண்ணை நிறைக்கிரது.
தண்ணீர் வரத்து அதிகமாகி ரோட்டுக்கு வரும் போது நீங்கள் எடுத்து இருப்பதும், சிறிது நேரத்தில் அதிகமாக வருவதும் நன்கு தெரிகிறது.
மிக்க நன்றி கோமதிக்கா எல்லாக் காணொளிகளும் பார்த்தமைக்கு.
நீக்குஆமாம் ஓரிரு காணொளிகளில் பேசியிருந்தேன். கடைசிக் காணொளி தண்ணீர்ச்சத்தம் இருந்திருக்காது என்பதால் கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன். தண்ணீர், காற்றுச் சத்தத்தில் மற்றொன்று கேட்டிருக்காது. மெதுவாகத்தான் பேசியிருந்தேன்.
தைரியமாக நீரில் நடந்து காணொளி எடுத்து வந்து போட்டு விட்டீர்கள்.//
ஊரைப் பற்றித் தெரியும் அனுபவம் தான் காரணம் அக்கா. ஊர் மக்களும் ஆங்காங்கே நின்று தண்ணீர் வரத்தைப் பார்த்துக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆண் பசங்களும் நின்று கொண்டிருப்பார்கள்.
//படங்கள் எல்லாம் மிக அருமை. பசுமை கண்ணை நிறைக்கிரது.//
ஆமாம் அக்கா. வயல்கள் தோப்புகள், தண்ணீர்ப்பாதைகள் குறைந்து வரும் சமயத்திலும் கூட பசுமை என்றால் முன்பு எப்படி இருந்திருக்கும் என்று நாம் நினைத்துப் பார்க்கலாம். யாரோ ஒருவர் சில வருடங்களுக்கு முன் நாஞ்சில் நாட்டில் பயணம் மேற்கொண்டவர் ரயிலில் பேருந்துகளில் பயணித்துத் தான் கண்டதை வாயடைத்து வியந்ததை எழுதியிருந்தார்.
நானும் காட்சிகள் பல எடுத்திருக்கிறேன். ஒரு சேமிப்பிற்காக. எதிர்காலத்துக் குழந்தைகள் பார்க்க நேரிட்டால் ஊர் எப்படி இருந்திருக்கிறது என்று நினைக்கவேனும் செய்வார்களே என்று. எனவே இங்கும் பகிர்கிறேன்.
தண்ணீர் வரத்து அதிகமாகி ரோட்டுக்கு வரும் போது நீங்கள் எடுத்து இருப்பதும், சிறிது நேரத்தில் அதிகமாக வருவதும் நன்கு தெரிகிறது.//
ஆமாம். மிக்க நன்றி கோமதி அக்கா
கீதா
மழைமேகம் சூழ்ந்து இருக்கும் மலைகள் அழகு.
பதிலளிநீக்குதென்னைமரம் படங்கள் அழகு.
சட்டர்ஸ் என்று தண்ணீர் திரந்து விடு இடத்திற்கு பக்கத்தில் உங்கள் மாமா வீடா அப்போ நீர் வரத்து அதிகமாகும் போது ஒவ்வொரு முறையும் தண்ணீர் அந்த பகுதியில் ஓடும்தானே?
படங்கள் எல்லாம் அழகுதான், ஆனால் இந்த மழை வெள்ளம் சமயம் இயற்கையை ரசிக்க முடியாமல் கவலையாக இருக்கிறது. இப்போது நீர் வடிந்து சாலைகள் சரியாகி விட்டதா?
// ஜடாயுபுரத்தில் எடுத்துவிட்டு வரும் போது என்ன ஆயிற்று என்பதை அடுத்த பதிவில் படங்களுடன் சொல்கிறேன்.//
என்ன ஆயிற்று என்று அறிய அடுத்த பதிவை தொடருகிறேன்.
சட்டர்ஸ் என்று தண்ணீர் திரந்து விடு இடத்திற்கு பக்கத்தில் உங்கள் மாமா வீடா அப்போ நீர் வரத்து அதிகமாகும் போது ஒவ்வொரு முறையும் தண்ணீர் அந்த பகுதியில் ஓடும்தானே?//
நீக்குமாமா வீடு மதகுப் பக்கம் இல்லை கோமதிக்கா. நான் அதை எல்லாம் எடுத்துவிட்டுத் திரும்ப வரும் போது காணொளியில் பார்ப்பதும் கடைசிப் படத்தில் பார்ப்பதும் எங்கள் ஊர் அதுதான் மாமாவின் வீடு. அங்கும் தண்ணீர் பாய்ந்தது மாலையில் அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
கோமதிக்கா எங்கள் ஊரில் தண்ணீர் தேங்கி நிற்காது. பாய்வதற்கு இடம் இருப்பதால் ஓடிக் கொண்டே இருக்கும். அதனால் 3, 4 மணி நேரத்தில் முழுவதுமே வடிந்துவிட்டது. ஊர் மக்கள் உடைத்தும் விட்டார்கள். கஷ்டப்பட்டவர்கள் தண்ணீரின் பாதையில் வீடு கட்டியவர்கள்தான்.
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
சில நேரங்களில் நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் மனவருத்தமும் ஆர்வமும் குறையத் தேவையில்லை பல நேரங்களில் பல பதிவர்களுக்கு இப்படிபட்ட சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. எனக்கு அப்படி பல சமயங்களில் நடத்து இருக்கிறது சில சமயங்களில் சேமிக்காமல் இருப்பதால் பல பதிவுகள் பதிவதற்கு முன்மே அழிந்து போய் இருக்கின்றன. அதனால் மமனம் தளராமல் வேறு ஒரு பதிவையோ அல்லது ஒரு துணுக்கு படத்தையையோ போட்டுவிட்டு சென்றுவிடுவேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரை.
நீக்குகீதா
அழகான தோப்புக்கள். இவை அனைத்தும் பத்திரமாக இருக்கணுமேனு கவலையாகவும் இருக்கு. அந்த மழை, வெள்ளத்தில், பெருகும் வெள்ளத்தில் தனியாகப் போய்ப் படங்கள் எடுத்ததை நினைத்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கு. அதிலும் நீங்க அதிக உயரம் இல்லை. திடீர்னு தண்ணீர் பெருகிவிட்டால் பிரச்னை. ஆனால் உங்களுக்கு நீச்சல் தெரிந்திருக்கும். எல்லாப் படங்களும் அருமையாக எடுத்திருக்கீங்க. யூ ட்யூப் காணொளிகளைச் சாவகாசமாய்ப் பார்க்கணும்.
பதிலளிநீக்குஅழகான தோப்புக்கள். இவை அனைத்தும் பத்திரமாக இருக்கணுமேனு கவலையாகவும் இருக்கு.//
நீக்குஆமாம் கீதாக்கா எனக்கும் அந்த ஆதங்கம் உள்ளது அதனால்தான் நிறைய படங்கள் காணொளிகள் எடுத்துப் பதிகிறேன்.
//அதிலும் நீங்க அதிக உயரம் இல்லை. திடீர்னு தண்ணீர் பெருகிவிட்டால் பிரச்னை. ஆனால் உங்களுக்கு நீச்சல் தெரிந்திருக்கும். //
ஹஹாஹா ஆமாம்...ஆனால் அத்தனை பயமில்லை கீதாக்கா அப்படி பயம் என்றால் போயிருக்க மாட்டேன். இதைக் குறித்து கீழும் கருத்துகள் கொடுத்திருக்கிறேன். நீச்சல் தெரியும்தான்...ஆனால் சுனாமி போன்று வந்தால் கஷ்டம்தான்...
எல்லாப் படங்களும் அருமையாக எடுத்திருக்கீங்க. //
மிக்க நன்றி கீதாக்கா.
மெதுவாக நேரம் கிடைக்கும் போது காணொளிகளைப் பாருங்கள்
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபடங்கள் மிக அருமையாக இயற்கை வளத்துடன் இருக்கிறது. மலையும், மழை மேகம் சூழ்ந்த படங்களும், தென்னை, வாழை என பசுமையான மரங்களும் பார்க்கவே கண்கொள்ளா காட்சி.
ஆனால் பயங்கர மழை வந்தால் இந்த தண்ணீர் சூழும் இடங்கள்தான் பயத்தை ஏற்படுத்துகிறது.
கொஞ்சம் வெய்யில் வந்தவுடன் தைரியமாக ரோடில் நடந்து சென்று வாய்க்கால் நீர் சூழும் இடங்களை பார்வையிட்டு படமெடுத்திருக்கும் உங்கள் மன தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. என்னதான் நீங்கள் பாய்ச்சலின் அளவை கணித்து சென்றால் கூட திரும்பி வீட்டுக்கு வருவதற்குள் வெள்ளம் அதிகமாகி விட்டால் என்ன செய்வது என்ற கவலை உங்களுக்கு வரவில்லையா? ஆனால் பழக்கம்தான் காரணம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது.
நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போது, இந்த மழை காலத்தில், வீட்டு ஓனர் குடும்பத்துடன் என்னையும் வெள்ளம் பார்க்க வருகிறீர்களா என அழைத்துச் செல்வார்கள். அதிசயமாக நிரம்பும் வைகை ஆற்று நீர் வேறு பாதை மாற்றி, நாங்கள் இருந்த பகுதிக்குப் பின்புறம் பாய்ச்சலாக பாய்ந்து வரும்.(நாங்கள் இருப்பது சற்று மேடான பகுதி. வெள்ளம் அவ்வளவாக புகுவதில்லை.) நீங்கள் சொல்வது போல் முழங்காலுக்கும் மேலாக நீரில் சிறிது தூரம் நடந்து செல்வோம். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு பின் அங்கெல்லாம் செல்ல முடியாது, இடுப்புக்குக் மேலாகவே வேகமாக நீர் பாயுமென என அந்த ஓனரம்மாவே சொல்லி விடுவீர்கள். அந்த முழங்கால் தண்ணீரே இருபக்கமும் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து நிறைத்திருக்கும். அவர்கள் நீரை எப்படி வெளியேற்றுவார்கள் என்றால் நீரின் அளவு குறைந்த பின்தானாம்..அது வரை அவர்களின் சாப்பாடு, இருக்க இடம் எல்லாம் ? தான். அதற்கும் மேலுள்ள வீடுகள் என்ன கதியோ.? நினைக்கவே பாவமாக இருக்கும் எனக்கு. இதைப் பார்க்க அழைத்துச் செல்கிறார்களே என்ற எண்ணமும் வரும். அங்கு சென்ற புதிதில் ஓரிரு முறைதான் அப்படி.. அப்புறம் நீர் திருப்பி விடும் இடம் மாறி விட்டது என்றார்கள்.உங்கள் பதிவை படிக்கையில் எனக்கு அந்த நினைவு வந்தது.
நீங்கள் சொன்ன இங்கும், நீர் வரத்து அதிகமானால் தாழ்வான வீடுகளில் வசிப்பவர்களுக்கு எவ்வளவு கஸ்டம்? வாய்காலின் அருகிலேயே இருக்கும் நீங்களும் அப்போது நீர் வடியும் வரை எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பீர்களோ? நினைக்கவே மனதுக்கு வருத்தமாக உள்ளது.
காணொளிகளை இன்னமும் பார்க்கவில்லை அப்புறம் பார்த்து விட்டு வருகிறேன். உங்கள் ஊர்களைப் பற்றி நல்ல விவரணையாக எழுதி வருகிறீர்கள்.உங்களுடனேயே பயணிக்கும் உணர்வு வருகிறது. நேற்று இரவு பதிவை பார்க்கும் போது இல்லை என வந்தது. அதுதான் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்களா.?கனிணியில் பல சித்து வேலைகளை செய்து பதிவிடும் நீங்களே வருத்ப்பட்டால் , நானெல்லாம் எங்கே போவது? பிறகு கண்டிப்பாக வருகிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னதான் நீங்கள் பாய்ச்சலின் அளவை கணித்து சென்றால் கூட திரும்பி வீட்டுக்கு வருவதற்குள் வெள்ளம் அதிகமாகி விட்டால் என்ன செய்வது என்ற கவலை உங்களுக்கு வரவில்லையா? ஆனால் பழக்கம்தான் காரணம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது.//
நீக்குஉங்கள் வைகை நினைவும் கிட்டத்தட்ட இங்கு போலத்தான் கமலாக்கா. மேட்டுப் பகுதியில் நீர் ஏறவில்லை.
எங்கள் ஊருக்குள்ளும் வடக்குத் தெருவில் நீர் வந்து மேற்குத் தெரு நுழைந்து பின் பகுதியிலேயே வயல்பக்கம் ஓடிவிடும். குளத்து நீரும் பெருகுவதால் கோயிலிலும் நீர் புகும்.
கவலை இல்லை அக்கா. பழக்கம் ஒரு காரணம். அப்படி அபாயம் என்றால் எச்சரிக்கை கொடுக்க ஆட்கள். நான் காணொளி எடுப்பதைப் பார்த்ததும் தண்ணீர் வழியே அழைத்துச் செல்லவும் ஆட்கள் ரெடியாக இருந்தார்கள். நான் தான் என் உடை, கேமரா, மொபைல் பத்திரமாக இருக்க வேண்டுமே என்று செல்லவில்லை!!!
அத்தனைக் கஷ்டம் இல்லை கமலாக்கா. இதைப் பற்றியும் பதிவில் சொல்கிறேன் கமலாக்கா. நீர் வடிய அதிக நேரம் எடுக்கவில்லை.
மெதுவாகப் பாருங்கள் கமலாகா காணொளிகளை.
நேற்று இரவு பதிவை பார்க்கும் போது இல்லை என வந்தது. அதுதான் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்களா.?
ஆமாம் அக்கா அவசர வேலை...வேலைப்பளு எனவே பதுவு வ்னததும் செக் செய்ய முடியவில்லை. அது ஒழுங்காக வந்திருக்கிறது என்று நினைத்து காலையில் பார்த்து கமென்ட்ஸ்கு கருத்து கொடுக்கலாம் என்று நினைத்துவிட்டேன் பின்னர் கோமதிக்கா பதிவுக்கு எபி க்கு கருத்து கொடுக்க வந்தப்ப இங்கு பார்க்க நேரிட்டது அப்பதான் தெரிந்தது பதிவு முழுமையாக இல்லை என்று.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
மிக அருமையான படங்கள்' ஊர்தான் எத்தனை அழகு!!!
பதிலளிநீக்குநீரைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி. அது ஆபத்தாய் மாறாத வரையில்!!!
காணொளிகளை மெதுவாய்ப் பார்க்கிறேன் கீதா.
முதலில் உயரமாக நின்ற தென்னை மரங்கள் நீரில் பாதியாக நிற்பது நீரின் வேகத்தைக் காட்டுகிறது.
இத்தனை வெள்ளத்தில் எப்படித்தான் ஊர் வந்து சேர்ந்தீர்களோ. இப்போது
மீண்டும் மழை வரலாம் என்று சொல்லி இருக்கிறார்களே.
நல்ல வேளை அப்பாவை அழைத்து வந்தீர்கள்.
ஆமாம் வல்லிம்மா ஊர் ரொம்ப ரொம்ப அழகுதான்.
நீக்குஉண்மைதான் ஆபத்தாய் மாறாத வரை நீர் பார்க்க மகிழ்ச்சிதான். இதுவரை எங்கள் ஊரில் நீர் ஆபத்தாய் மாறியதில்லை. ஆனால் எதிர்கால்த்தில் அதற்கு நிச்சயமாகக் கோபம் வரும் வாய்ப்பு இருக்கிறது. எல்லா இடங்களும் அடைந்து வருவதால்.
ஒரு வேளை மக்கள் வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவே ஆற்றையும் வாய்க்காலையும் குறுக்கி சுற்றிலும் சுவர் எழுப்பவும் சான்ஸ் இருக்கு. அழகே போய்விடும்! எல்லாம் கன்க்ரீட் காடாகிவிடும். உஷ்ணம் அதிகம் தெரியும் இப்படி ஒவ்வொன்றாய்...
இத்தனை வெள்ளத்தில் எப்படித்தான் ஊர் வந்து சேர்ந்தீர்களோ. இப்போது
மீண்டும் மழை வரலாம் என்று சொல்லி இருக்கிறார்களே.
நல்ல வேளை அப்பாவை அழைத்து வந்தீர்கள்.//
அம்மா இந்தத் தண்ணீர் எல்லாம் தேங்கி நிற்காது. ஓடிக் கொண்டே இருக்கும் நீர். உடனே வடிந்துவிட்டது. டேம் தண்ணீர் நிறுத்தப்பட்டதும் அடுத்த நாளே தேரேகால் சொங்கி போல் ஆகிவிட்டது. அப்படமும் போடுகிறேன். ஒரே நாளில் தண்ணீர் வடிந்து நான் ஜடாயுபுரம் பீமநகரி மருங்கூர் எல்லாம் சென்று படம் எடுத்திருக்கிறேன் அதுவும் டேம் திறந்ததால் இரண்டாவது நாள் அதிகரித்தது அவ்வளவே.
மிக்க நன்றி அம்மா
கீதா
தைரியம்தான் உங்களுக்கு. தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டிருக்கும் பொழுதே பணம் எடுக்க சென்றிருக்கிறீர்களே..??!!
பதிலளிநீக்குஹாஹாஹா பானுக்கா இது நான் பிறந்து வளர்ந்து அனுபவப்பட்ட இடம். தண்ணீர் பற்றி தெரியும் என்பதால். வேறு இடம் அனுபவம் இல்லாத இடம் என்றால் கண்டிப்பாக இப்படிச் சென்றிருக்க மாட்டேன்.
நீக்குநான் எடுத்தது ஊர்க்காரர்கள் பலருக்கும் தெரியும். அவர்களே சொல்லியிருப்பார்களே. நான் அந்த ஊர்தான் என்பதால் எதுவும் சொல்லவில்லை. இதே இது நீங்கள் யாராவது அங்கு வந்திருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக எச்சரிக்கை விடுத்திருப்பார்கள்!!
மிக்க நன்றி பானுக்கா
கீதா
தோப்புகளும், வயல்களும், நீர் நிலைகளும் என்று பசுமையான காட்சிகள். அழகான இடங்கள். அழகில்தான் ஆபத்தும் இருக்கிறது இல்லையா? ஆனால் அது மக்களின் மடமையால் வருவது.
பதிலளிநீக்குஅழகான இடங்களின் ஆபத்து பற்றி நீங்களே சொல்லிட்டீங்க அதே அதே மக்களின் மடைமைதான் முழுக்காரணமும்.
நீக்குஇப்பதிவில் கடைசி காணொளி பார்த்தீங்கன்னா (கறுப்பு கலர் ஹைலைட் ஆகியிருக்கும் யுட்யூப் சுட்டி.) அதுல ரெண்டு செல்லங்கள் வரும்!!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
படங்கள் தெளிவாய் இருக்கின்றன. செல்லா, கேமிராவா? விளக்கங்களும் நன்று.
பதிலளிநீக்குவெகு சாதாரண கேமரா ஸ்ரீராம். சோனி சைபர் ஷாட் DSC-W830. 9k. பழசும் கூட. அவ்வளவே ஸ்ரீராம். லேட்டஸ்ட் ஸ்மார்ட் மொபைல்களில் ஹெச்டிஆர் இருக்கிறதே அதை சூஸ் செய்தும் எடுக்கலாம் ஸ்ரீராம். மொபைல்களில் சில லைட்டிங்க் எஃபெக்ட்ஸ் கொடுக்கவும் ஆப்ஷன்ஸ் இருப்பது தெரிகிறது.
நீக்குடிஎல் எஸ் ஆர் என்றால் படங்கள் இன்னும் நன்றாக வரும்தான். எஃபெக்ட்ஸ் ஆப்ஷன்ஸ் கொடுத்தும் எடுக்கலாம்.
என் கேமராவை விட, ராமலக்ஷ்மி, வெங்கட்ஜி, கோமதிக்கா இவங்க ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்து பிரமிப்பதுண்டு. அசாத்தியமா எடுக்கறாங்க.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஆ... இங்கேயும் கீரிப்பாறை... இங்கேயும் கீரி காணோம்! JC சார்... கொஞ்சம் கவனிங்க...
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஆமா எங்க ஊர் கீரிப்பறையை இனிதான் பார்க்க வர வேண்டும்...ஜெகே அண்ணா கருத்து பார்க்கிறேன். வருகிறேன் எங்க ஊர்லருந்து பஸ் பிடிச்சு வரணுமே!
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
மரிந்த , தொட்டடுத்த - இதெல்லாம் உங்கள் (ஊர்க்காரர்கள்) பழகிய பிரயோகங்கள்! கிருஷி பாலம் என்கிறீர்கள். தார் சாலைதான் தெரிகிறது!
பதிலளிநீக்குஹாஹாஹா ஸ்ரீராம் ஆமாம் எங்கள் ஊர்ப் பிரயோகங்கள். "டே மக்கா அங்கன உங்கவீட்டு தொட்டடுத்து வெள்ளம்/தண்ணி மரிஞ்சு பாய்யில்லா" இப்படித்தான் எங்கள் நட்புகளுக்குள் பேச்சு இருக்கும்!!!!
நீக்குஸ்ரீராம் மேலிருந்து எண்ணிக் கொண்டே வந்தால் (இரு படங்கள் சின்னதாக இருப்பதை ஒன்றாகக் கணக்கிட்டு) 13 மற்றும் 14 வது படம்- பீமநகரி க்ரிஷிப்பாலமம் காட்சிகள்னு நீலக்கலர் தலைப்பிட்டு கீழே இருக்கும் முதல் இரு படங்களில் அதுதான் பாலம். இரண்டவது படத்தில் பலத்தின் இப்புறம் ரோட்டை ஒட்டி மதகு/மடை திறந்து மூடும் இரும்பு ஷட்டரும் தெரியும் பாருங்க. அது திறக்கப்பட்டு எதிர்ப்புறம் தண்ணீர் செல்வதுதான் அதை அடுத்துள்ள மூன்றாவது படம்.
காணொளிகள் நேரம் கிடைக்கும் போது பாருங்க அப்ப இன்னும் சரியா தெரியும் ஸ்ரீராம்
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
ஆமாம் வரவர எழுத நேரம் சரியாக அமையவே மாட்டேன் என்கிறது. அப்படியே போய்விடுகிறது. எந்நாலும் தொகுக்கவும் முடியவில்லை.
பதிலளிநீக்குஅதை ஏன் கேக்கறீங்க ஸ்ரீராம். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது
நீக்குகீதா
கொஞ்சம் இல்லை, நிறையவே கஷ்டமாக இருக்கிறது எனக்கு. தொகுக்கவென நிறைய ஆரம்பிச்சுட்டு எல்லாம் பாதியிலே! தினம் உட்காரணும்னு நினைச்சாலும் முடியலை. மனது பதிவதில்லை.
நீக்குகீதாக்கா எனக்கும் நிறையவே தான்...ஆனால் சொல்லும் போது கொஞ்சம் என்று சொல்லியே பழகிவிட்டது ஹாஹாஹா!!
நீக்குநாளை முதல் இன்னும் வேலைப்பளு. பாதியில் இருப்பவை நிறைய இருக்கிறது. கதைகள் உட்பட. மனம் லயித்தால் மட்டுமே கதைக்குள் சென்று அதை எழுதும் போது எப்படி எழுத நினைத்தோம் என்பதை மீண்டும் நினைவுகூர்ந்து கதையை முடிக்க முடியும். எப்போது முடிக்க முடியுமோ தெரியவில்லை. பெரிய புள்ளிகள் செய்வது போல நாம என்ன ரூம் போட்டா செய்ய முடியும்!!!!!!
கீதா
எவ்வளவு அழகான இடங்கள் என்று முதல் இரண்டு படங்களிலேயே நினைக்க வைக்கிறது. பாலத்தின் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று வேறுபடுத்திக் காட்ட ஒரு ஆட்டோவை நிறுத்தி புகைப்படம் எடுத்திருப்பது சிறப்பு!
பதிலளிநீக்கு//பாலத்தின் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று வேறுபடுத்திக் காட்ட ஒரு ஆட்டோவை நிறுத்தி புகைப்படம் எடுத்திருப்பது சிறப்பு!//
நீக்குஆட்டோக்காரர் அங்கு வண்டியை நிறுத்திய போதுதான் எடுத்தேன்!!! நன்றி ஸ்ரீராம்
ஆமாம் ஸ்ரீராம். மிக மிக அழகான இடம். விட்டு வர மனமே இல்லை உண்மையைச் செல்ல வேண்டும் என்றால். அமைதியாக எந்தவித டென்ஷனும் இல்லாமல், இயற்கையோடு நடந்து கொண்டு தினமும் அவ்வப்போது மலைகளைப் பார்த்துக் கொண்டு, கொக்கு வகைகள் வாத்துகள், நிறைய மீன் கொத்திப் பறவைகள், குருவிகள், மைனாக்கள், ஓடைகள் தாமரைக் குளங்கள் என்று இதனூடே நடைப்பயிற்சி என்று அத்தனை எனர்ஜெட்டிக்காக இருக்கலாம். பரபரப்பு இல்லாத அமைதியான வாழ்க்கை. இதே போன்றுதான் கடம்போடுவாழ்வு கிராமமும். அங்கும் 4 நாட்கள் இருந்தேன் அப்படங்களையும் அந்தப் பதிவு எழுதும் போது பகிர்கிறேன்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
காணொளி பார்த்தேன். வெள்ளத்தின் வீர்யம் புரிந்தது. ஒருத்தர் செருப்பைக் கழட்டிட்டு தண்ணீர்ல இறங்கப் பார்க்கிறார். அதையும் படமெடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நெல்லை. ஆமாம் அவரை எடுக்க நினைத்து அவர் அனுமதியுடன் என்று நினைத்து அப்புறம் ஏனோ விட்டுவிட்டேன். ஊருக்குள் எந்தவித பயமும் இல்லாமல் நடக்கும் புகைப்படங்கள் காணொளிகள் இருக்கின்றன. அதே போல இதில் கடைசிக்கு முந்தைய காணொளியில் தண்ணீரில் தான் நிற்கிறேன் எனபதைத் தன்னுடன் வந்தவரை வீடியோ எடுக்கச் சொல்லி அந்த நண்பர் எடுத்துக் கொண்டிருப்பார் முடிந்தால் பாருங்கள். (பாராவுடன் இருக்கும் காணொளி).
நீக்குமிக்க நன்றி நெல்லை
கீதா
படங்கள் மிகவும் தெளிவாக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்....
மிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குகீதா
காணொளிகளை முழுமையாகப் பார்த்து நனைந்தேன். காணொளி பார்த்த மூன்றாவது ஆளாம் நான். காணொளிகள் எடுக்கப் பயன்படுத்திய கேமராவின் பெயர் என்ன?
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா காணொளிகள் பார்த்தமைக்கு.
நீக்குகேமரா மிகவும் சாதாரண கேமரா தான் ஐயா. சோனி பாக்கெட் சைஸ்!! சைபர் ஷாட் வகை.
நன்றி ஐயா
கீதா
தொடர்ச்சியாக பதிவு எழுத முடியாமல் தாமதமாகிறதே என்று வருத்தப்பட வேண்டாம் சகோதரி .... ஏனென்றால் இந்த கஷ்டம் தங்களுக்கு மட்டுமல்ல.... சென்ற நவம்பர் மாதமானது எல்லோரையும் பதிவு எழுதவிடாமல் இழுத்தடிக்கத்தான் செய்துள்ளது... காரணம் புரியவில்லை... லக்கனம் சரியில்லை என்று நினைக்கிறேன்....
பதிலளிநீக்குலக்கனம் சரியில்லை என்று நினைக்கிறேன்...// ஹாஹாஹாஹா....சிரித்துவிட்டேன் சிவா சகோ.
நீக்குதொடர் பதிவு எனும் போது அதுவும் சுட சுடப் போட வேண்டிய பதிவு. இப்போது தண்ணீரைப் பற்றி மக்கள் மறந்து போயிருப்பாங்க ஸோ ஆர்வமும் தண்ணீர் வந்த பதிவுகள் ஆறிப் போயிருக்கும் இல்லையா...அதனால் சொல்லியிருந்தேன்.
எல்லோருக்குமே இருக்கும் தான் நேரப் பற்றாக்குறை.
மிக்க நன்றி நாஞ்சில் சகோ
கீதா