இன்சுலின்
செடியைப் பற்றி முன்பே நான் எழுத நினைத்து வழக்கம் போல் முடிக்காமல், முடித்து வெளியிடலாமா
வேண்டாமா என்ற தயக்கத்தில் பரணில் போட்டு வைத்துவிட்டேன். அதாங்க ட்ராஃப்ட். காரணம்
மருத்துவர் நம்பள்கி அவர்களின் பின்னூட்டம் ஒன்று சிந்திக்க வைத்ததால், ஆதாரம் இல்லாத
மருத்துவக் கட்டுரைகளை மருத்துவர் அல்லாத நான் எழுதுவது சரியா என்ற தயக்கத்தில் அப்படியே வைத்துவிட்டேன். பின்னர் நம்
சகோ கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் தன் தளத்தில் http://senthilmsp.blogspot.com/2016/10/blog-post_3.html
இச்செடியைப் பற்றி தேவேஷ் ஹார் என்ற
மருத்துவரின் பரிந்துரையும் சொல்லி எழுதியிருக்க அப்போதும் நான் அங்கு கருத்துரை இட்டு, எழுதி முடித்து
வெளியிடலாம் என்று நினைத்து…..னைத்து…..த்து…..
இதோ
இப்போது சகோ இளங்கோ மற்றும் டிடி, தோழி நிஷா அவர்கள் கேட்டிட நான் எழுதிய கட்டுரைக்கு வருகிறேன்.
(நீங்கள் சகோ செந்திலின் கட்டுரையை வாசித்திருப்பீர்களே!)
இந்தியா
நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லப்படுவது நாம் எல்லோரும் அறிந்ததே. முன்பைவிட
நீரிழிவு நோய் தற்போது அதிகமாகப் பேசப்படுவதால் இதைப் பற்றி பெட்டிக் கடைகளிலும், தெருவோர
டீக்கடைகளிலும் கூட நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை சேர்க்கப்பட்ட காப்பி, டீ அருந்திக்
கொண்டே பேசுவதைப் பார்க்கும் போது விழிப்புணர்வு கொஞ்சம் அதிகமாகியிருப்பது போல் தெரிகிறது!!!
விளம்பரங்களும் அதிகமாகிவிட்டன. நீரிழிவு நோய் நோயல்ல, குறைபாடே!
இது
நாள்வரை அதிகம் பேசப்படாத ஆயுர்வேத, சித்த மருந்துகள் இப்போது ஆங்கில மருந்துகள் விற்கப்படும்
கடைகளில் கூட விற்கப்படுகின்றன. அதுவும் விளம்பரப் பலகைகள் மற்றும் கண்ணாடிகளில் ஒட்டப்பட்ட
விளம்பரங்களுடன், அம்மருந்தைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும்
வைக்கப்பட்டிருக்கின்றன. நகரத்து மக்கள் இதுவரை அறிந்திராத சிறு தானியங்கள், மூலிகைகள்
குறித்து தற்போது பிரபல பத்திரிகைகளில் வரும் சித்த/ஆயுர்வேத மருத்துவ கட்டுரைகளின் விளைவினால் கடைகளில் தேடத் தொடங்கியிருப்பதால் ஆங்கில மருந்துக் கடைகளும் இதனைப் பயன்படுத்திக்
கொள்ள இப்போது இப்படி விற்கத் தொடங்கிவிட்டார்கள் போலும். சித்தா/இயற்கை மருந்துகளுக்கு
இப்போது விளம்பரம் தேவைப்படும் காலமாகிவிட்டதை நினைக்கும் போது கிராமங்கள் குறுகி நம் வாழ்வியல் மாறி வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது.
அது
ஒருபுறம் இருக்க, எனது 32 வது வயதில் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் செய்த போது, 400+.
நீ ஏற்கனவே இனியவள் ஹிஹி, எனவே உனக்கு மேலும் இனியவளாக இருப்பது நல்லதல்ல என்று சொல்லிவிட
அன்றிலிருந்து இதோ இன்றுவரை ஊசிக்குச் செல்லாமல், ஒரே ஒரு மாத்திரையுடன், கட்டுப்பாடுகளுடன்,
இனிமையாக இருந்துவருகிறேன்.
இரண்டு
வருடத்திற்கு முன் எனது உறவினர் ஒருவர், நீ
என்னதான் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் 20 வருடங்களுக்கு மேல் கண்டிப்பாக நீ இன்சுலின்
சார்ந்து, ஊசிக்குச் செல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் வயதாகும் போது உன் உடல் உழைப்பு
குறைந்துவிடும் என்பது பற்றி ஏற்கனவே சிந்தித்து வைத்திருந்தாலும், அச்சமயம் இந்த இன்சுலின்
செடியைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடன் ஆராயத் தொடங்கினேன்.
Costus igneus காக்டஸ் இக்னியஸ் படம் இணையத்திலிருந்து
Costus Pictus - காஸ்டஸ் பிக்டஸ் இந்த வகைதான் எங்கள் வீட்டில் உள்ளது. பூ தான் வித்தியாசப்படுத்துவதால் படம் இணையத்திலிருந்து
ஆராயும்
போது சிறு குழப்பம் ஏற்பட்டது. கூகுள் தேவன், காஸ்டஸ் பிக்டஸ், காஸ்டஸ் இக்னியஸ் என்று
இரண்டையுமே இன்சுலின் செடி என்று காட்டினார். இரண்டுமே ஒன்றுதான் என்று சொல்லப்பட்டாலும்
இரு செடிகளின் படங்களும் சற்று வித்தியாசமாக இருந்தது, இரண்டுமே காஸ்டேசியெ (Costaceae) எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. காஸ்டஸ்
எனும் ஜீனஸ் மற்றும் வேறு வேறு ஸ்பீசிஸைச் - Specific epithet சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு இந்த ஸ்பீசிஸ் பெயரில் மாற்றம் வரும் போலும்.
இரண்டுமே
வெளிநாட்டிலிருந்து வந்து இப்போது இந்தியாவில் இன்சுலின் செடி என்று வழங்கப்படுகிறது.
இச்செடியைக் (காஸ்டஸ் இக்னியஸ்) குறித்து ஆராய்ச்சிகள் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரிலுள்ள
கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருந்தியல் துறை மேற்கொண்டது. இலைகள் அக்டோபர்,
நவம்பர் மாதத்தில் சேகரிக்கப்பட்டு, நிழலில் காயவைக்கப்பட்டுப் பொடிக்கப்பட்டு, தண்ணீரில்
கலந்து அரைக்கப்பட்டு, முறையான அனுமதி பெற்றபின், பந்தர்கர் எனும் ஆயுர்வேத மருத்துவர்
இவ்விலைகள் இன்சுலின் செடி இலைகள் தான் என்று வழங்கிய ஆதாரத்துடன், சோதனை எலிகளுக்குக்
கொடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஆங்கில மருந்தான Glibenclamide மாத்திரைகளும் கொடுக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டதில் அதற்கு
நிகரான அளவில் இன்சுலின் இலைகள் ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் அளவினை, சாப்பாட்டிற்கு முன்,
சாப்பாட்டிற்குப் பின் குறைத்திருப்பதாக ஆய்வின் முடிவுகள் சொல்லியிருப்பதாகப் பதிந்திருக்கின்றனர்.
இதனை இந்திய மருத்துவக் கழகமும் ஆதரித்துள்ளது. இதோ அதன் முழு விவரங்கள் அடங்கிய சுட்டி.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2924971
இந்தச் செடி ஈரப்பதம் இருக்கும் இடங்களில் நன்றாக வளருமாம்.
தொடக்கத்தில் அதிகம் தண்ணீர் வேண்டியிருக்கும் என்றும் வளர்ந்ததும் ஈரப்பதம் மட்டும்
இருந்தால் போதும் என்றும் சொல்லப்பட்டது. நன்றாக உயரமாக வளரும் என்றும் சொல்லப்பட்டது.
என் உறவினர் ஒருவர் எங்கள் குடும்ப வீட்டில், சென்னையில் உள்ள மாமியார் வீட்டில் நட்டிட
இப்போது நன்றாக நிறைய வளர்ந்துள்ளது. நான் அதன் இலையின் நுனியைக் கிள்ளி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு
வருகிறேன். புளிப்புச் சுவையுடன் இருக்கிறது. இது இனிப்பு சாப்பிடும் ஆவலைக் கூடத்
தணித்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. நீரிழிவு நோயின் தொடக்க நிலையில் உள்ளவர்கள்
தவிர அடுத்த நிலையில் இருப்பவர்கள் இதை எடுத்துக் கொண்டால் நன்றாகக் கட்டுப்பட்டு ஊசி
போடும் நிலைக்கு வராமல் தடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. நான் இன்னும் மாத்திரை
எடுத்துக் கொள்ளாமல் இதை மட்டும் சாப்பிட்டுச் சோதித்துப் பார்க்கவில்லை. செய்ய வேண்டும்.
இந்த இன்சுலின் செடியைக் குறித்து சர்க்கரை நோயுள்ளவர்கள்
தங்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம். இப்போது வரும் இன்சுலின்/மாத்திரைகள்
விலங்கு சார்ந்து சிவப்புப் புள்ளி தாங்கியே வருகின்றன என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
2014 ஆம் வருடம், WHO, இனி வரும் மருந்துகள் விலங்குகள் சார்ந்தில்லாமல் தாவரங்கள்
சார்ந்தவையாகவே வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தது. எனவே இந்த
இன்சுலின் செடியும் அப்படி உருமாறி வரலாம். கொச்சியிலும், கன்னியாகுமரியிலும்ம் மங்களூரிலும்
மட்டுமின்றி பல இடங்களிலும் வியாபார ரீதியாக நர்சரிகள் வரத் தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில்
மருந்துகளும் வருவதாகச் சொல்லபடுகிறது.
என்ன மருந்து உட்கொண்டாலும், இன்சுலின் செடி மருந்தாகவே
இருந்தாலும், உணவுக் கட்டுப்படு, உடற்பயிற்தி, மனதை மகிழ்வாக வைத்திருத்தல் மிக மிக
இன்றியமையாதது.
இதனைக் குறித்து எழுதிய தகவல்களை சகோ செந்தில் அவர்கள்
மேலும் விவரங்களுடன் தனது தளத்தில் கொடுத்திருப்பதால் அப்பகுதியை இங்கு எடுத்துவிட்டேன்.
இதைப் போன்ற ஆனால் நம்மூர் செடிகளான சிறியா நங்கை, பெரியா
நங்கை பற்றி அடுத்து ஒரு பதிவில் சொல்லுகிறேன்.
---கீதா







