திங்கள், 24 மே, 2021

சந்திரன் அளியன்

 


கடந்த 15 மாதங்களாக உலகெங்கும் காட்டுத் தீ போல பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கித் தாண்டவமாடும் கோவிட், இடையே அணைவது போல் பாசாங்கு செய்து பதுங்கிப் புத்துயிர் பெற்று மீண்டும் ஆக்கிரமித்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் பல பாகங்களில் பல பிரச்சனைகள் தோன்றினாலும் அவை எல்லாம் இது போல் எல்லா நாடுகளையும், சீனாவைத் தவிர (இது ஒரு வியப்புதான் – ஏன்? எப்படி?) நிலை குலையச் செய்ததில்லை. வட இந்தியாவில் கோவிட் 19 நோயால் உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது மனைவியும் பெண் குழந்தைகளும் சுமந்து வரும் காட்சியைக் காணும் போது நம் நெஞ்சில் வேல் பாய்ந்த வலி மரணம் வரை நம் ஒவ்வொருவரையும் விட்டுப் போகாது.



அது போலவே பல அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், காவல் அதிகாரிகள், எஸ்பிபி போன்ற கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரது இழப்பும் நமக்கு வேதனைதான். இதனிடையே இக்கோவிட் 19 காரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நெருக்கமான பல உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நிகழும் மரணங்கள் நமக்குப் பேரிடி போல வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு எனக்கும் இந்த கோவிட் 19 காலகட்டத்தில் கடந்த வாரம் நேர்ந்தது.

எங்களது சந்திரன் அளியன் (அளியன் என்றால் சகோதரியின் கணவர்) அவரது மறைவுதான் அது. என் ஒன்றுவிட்ட சகோதரி இந்திராபாயின் கணவர் கொச்சி களமசேரி ஹெ எம் டி யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 70 வயதைத் தாண்டிய போதும் இளமையில் இருந்தது போலவே எங்கள் உறவுகளை எல்லாம் எப்போதும் எல்லா இன்ப துன்பங்களிலும் நேரிலும் அலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுவதால் எல்லோரது அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்.

என்னைப் பொருத்தவரை என் வாழ்விலும் 1980களில் எனக்கு லா பெல்லா ஃபைனான்சியர்ஸிலும், our college லும் ஹாரிஸன்ஸ் மலையாளம் லிமிட்டெட் லும் வேலை பெற உடனிருந்து உதவியவர். 1990 களில் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை தேட பெற்றோருடனும் என்னுடனும் எப்போதும் உடனிருந்து எல்லாவற்றையும் நடத்தித்தந்தவர்.

இடையிடையே நான் மறந்தாலும் அலைபேசியில் அழைத்து நலன் விசாரித்தவர். கோவிட்டின் பிடியிலிருந்து தன்னால் இயன்றவரை தப்ப முயன்றவர்.  மார்ச் மாதம் மாரடைப்பு வந்தும் அதிலிருந்து மீண்டவர். மே மாதம் இரண்டாம் வாரம் எப்படியோ அவரை கோவிட் பிடித்துவிட வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துவந்தார். கோவிட்டின் கை ஓங்கிய போது மே 14 ஆம் தேதி களமசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மே 17 இரவு ஏற்பட்ட மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

உடல், தன்னார்வலர்ககால் களமசேரி (எல்லா மரண நிகழ்வுகளிலும் முன்னின்று நடத்தியவர் அவரது சடங்குகள் நடத்த நான்கு தன்னார்வலர்கள் மட்டும்) முனிசிபாலிட்டியில் எரிக்கப்பட்டது. 19 ஆம் தேதி அவரது அஸ்தி அடங்கிய சாம்பல் வீட்டின் தென் மூலையில் பாதுகாக்கப்படுகிறது. கோவிட்டின் தாண்டவத்திற்குச் சிறிய இடைவெளி கிடைக்கும் போது ஆலுவா அத்வைத ஆசிரமத்தை ஒட்டிய பெரியாறு நதியில் அவரது அஸ்தி கலந்த சாம்பல் கலக்கப்பட காத்திருக்கிறது. அதுவரை எல்லோராலும் அவரது ஆத்மாவின் நித்திய சாந்திக்கும் மோக்ஷ பிராப்திக்கும் பிரார்த்திக்கத்தானே முடியும். 

இதை வாசிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் இது போல் ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்டோ உங்கள் பிரியமானவர்களின் கோவிட் மரணங்கள் வந்து உங்களை வேதனைக்குள்ளாக்குவது தெரிகிறது. அவர்களது எல்லோரது ஆத்மாக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். காலம் செய்யும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இப்படித்தான் வேதனைதான். இதுவும் கடந்து போகும் தான். காத்திருப்போம். "Time and Patience  will heal all wounds..."

கூடவே கோவிட் 19 எனும் இத்தொற்று நோய் பிடியிலிருந்து நம்மையும் நம்மவர்களையும் இவ்வுலக மக்கள் அனைவரையும் காக்க எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டிக் கொள்வோம்.


 நட்புடன்

துளசிதரன்


 

ஞாயிறு, 9 மே, 2021

இந்த அன்னையரையும் வாழ்த்துவோமே

வலையுலக நட்புகள் அனைவருக்கும் வணக்கம். சமீபமாக வலையில் அவ்வப்போது கருத்துகள் போட்டாலும் எங்கள் தளத்தில் பல மாதங்களுக்குப் பிறகு எட்டிப் பார்க்கிறோம். தொடர வேண்டும் என்றும் முயற்சி, நம்புகிறோம். இன்று அன்னையர் தினம் என்று அறிந்ததும் ஒரு பதிவு போட்டு தொடங்கலாமோ என்று எண்ணி இதோ..

எல்லாவற்றிற்கும் விவரங்கள் கொடுக்க முடியவில்லை. ஒரு சிலவற்றிற்கு மட்டும் கொடுத்திருக்கிறேன். 

அன்னையர் தினம் என்றால் அன்னையர் மட்டுமல்ல, தாயுமானவராய் இருக்கும் தந்தைகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்வோம். 

மனித குல அன்னையர் மட்டும் தானா?! தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. செல்லங்களிலும் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் உணவைத் தேடிக் கொள்வது முதல், தங்களைப் பாதுகாத்துக் கொள்வது வரையான பாடங்களைப் புகட்டுகின்றனர். தன்னையே தியாகம் செய்யும் அன்னைகளும் இருக்கிறார்கள். இதோ சில உதாரணங்கள். இய்ற்கையில் தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்!






முட்டை இட்டதும் அம்மா பெங்க்வின் ஆண் பெங்க்வினிடம் பாதுகாக்க விட்டுவிட்டு கடலில் மீன் பிடிக்க 50 மைல் தூரம் பயணம் செய்யும். அவற்றைப் பிடித்துக் கொண்டு தன் குஞ்சுகளுக்குக் கொண்டுவரும். இங்கு ஆணும் தாயுமானவர் ஆகிறார்!!!!



ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? குட்டிகள் பிறந்ததும் பாதுகாப்பிற்காக அவற்றை தாடையில் சுமந்து கொண்டு மீன் பூச்சிகள் நத்தைகள் என்று அவற்றின் உணவைப் பழக்கத் தண்ணீரில் பழக்கப்படுத்துமாம் இப்படி ஒரு வருடம் ..

ம்மா ஹார்ன்பில் தன் பசி வலி எல்லாம் மறந்து அடைகாக்கும் காலமான இரு மாதங்கள் தன் பொந்திலேயே இருந்து அடைகாத்து குஞ்சு பொரிக்குமாம்.



இதுவும் ஆச்சரியமான விஷயம். கொஞ்சம் கூட சுயநலமற்ற அம்மாக்கள் எனலாம். ஆக்டோபஸ் 50 ஆயிரத்திற்கும் மேல் முட்டையிடும். அவற்றின் மீது அமர்ந்து முட்டைகளின் கூடவே இருந்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும், 14 லிருந்து 53 மாதங்கள் வரை. அவற்றிற்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கு அவற்றின் மீது நீரோட்டங்களை வீசிக் கொண்டே இருக்கும் (வாட்டர் கரன்ட்) தனது உணவைப் பற்றிக் கூட கவலைப்படாமல். குஞ்சுகள் பொரியும் போது அம்மா இறந்துவிடுமாம்!

Meerkats - கீரிப்பூனை
இவை கூட்டுக் குடும்ப உதாரணம். குட்டிகளைப் பேணுவது அவற்றிற்குத் தேவையான நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பது சகோதரிகளும் அத்தைகளுமாம்


Earwigs - விட்டில் பூச்சிகள் / மூலைவிட்ட பூச்சிகள்
பல இனங்களில் பூச்சிகளில் இல்லாத தாய்க்கவனிப்பு இவற்றில் காணப்படுகிறது. இவற்றின் பெண் பூச்சிகள் முட்டைகளைப் பொரித்த பிறகும் இள உயிரிகளை இரண்டாவது தோலுரிப்பு வரை காப்பாற்றுகின்றன. (முதிரும் முன்பாக 5 முறை தோலுரிக்கின்றன)

இவை சில உதாரணங்கள். எப்போதோ இப்படி ஒரு பதிவு எழுத எடுத்து வைத்திருந்த படங்கள் நினைவுக்கு வர தேடி எடுத்து இங்கு பகிர்ந்துள்ளேன்.

நன்றி அனிமல் ப்ளானட், விக்கி, கூகுள்

----கீதா

புதன், 19 ஆகஸ்ட், 2020

டிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)

 

Buy Pilgrim at Tinker Creek Book Online at Low Prices in India ...

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான திருமதி ஆனி டில்லார்ட் (Annie Dillard) ஒரு பிரபலமான இயற்கை ஆர்வலர், இறையியலாளர், கொலாஜிஸ்ட் மற்றும் பாடகரும் ஆவார். அவருடைய கட்டுரைகளெல்லாம் கவிதை அழகையும், ஆழமான தத்துவக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டவை. அவர் சொல்லிக் கேட்கும் போது புரியாத புதிரெல்லாம் எளிதாகும், எளிதென்று நாம் நினைத்ததெல்லாம் புரியாத புதிராகும் என்றும் கருதப்படுகிறது. ‘பில்க்ரிம் அட் டிங்கர் க்ரீக்’ என்பது வெர்ஜீனியாவிலுள்ள டிங்கர் கிரீக்கிற்கு அவர் மேற்கொண்ட புனித பயணத்தைப் பற்றியதுதான். இயற்கை உலகினுள் அவர் செய்த ஆன்மீக யாத்திரை. ஒரு சன்யாசிக்குத் தேவையான நிதானத்துடனும், பொறுமையுடனும் நுண்ணோக்கித் திறன் வாய்ந்த கண்களுடனும் அவர் செய்த புனிதப்பயணத்தை அவர் எழுதி முடித்த போது இதைச் சில சன்யாசிகள்தான் வாசிப்பார்கள் என்று நினைத்திருந்தாராம். ஆனால், இது எல்லோரது வரவேற்பையும் பெற்று அவருக்குப் புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

நினைவுகள் தொடர்கதை - அம்மா

  

நினைவுகள் தொடர்கதை என்ற தலைப்பைப் பார்த்ததும் கதையின் தலைப்பு போல இருக்கிறதோ? ஆனால் இது கதையல்ல நிஜம். இந்தத் தலைப்பில் ஒரு கதையும் என் ட்ராஃப்டில் முடிக்கப்படாத நிலையில்!

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

தோல்வி கண்டு துவளாத மனம்

தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் தேறிய தேர்வில் தோற்ற 2% த்தில் ஒரிரு மாணவ மாணவியர்கள் உயிர் துறந்ததைக் கடந்த சில மாதங்களில் கண்ட நாம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறோம். தோல்வியையே ஏற்றுக் கொள்ளாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறதொ? என்ற வருத்தம் நம் எல்லோர் மனதிலும் பாலைவனமாய் பறந்து விரியத் தொடங்கிய வேளையில், பாலைவனச் சோலையாய் ஃபயாஸ் எனும், தோல்வி கண்டு துவளாத, 4 ஆம் வகுப்பு மாணவனின் களங்கமில்லா, உண்மையான, உணர்வு பூர்வமானத் தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகள் நம் மனதில் பூ மழையாய்ப் பெய்கிறது.


படம் - நன்றி இணையம்

மொபைலில் ‘லைவாக’ எல்லோரும் அவரவர் திறமைகளைப் பேசியும், பாடியும், வரைந்தும் காண்பிப்பதைக் காணும் நம் நாயகனான ஒன்பது வயதான முகம்மது ஃபயாஸுக்கும் ஓர் ஆசை. காகிதத்தில் பூ செய்யத் தெரிந்த தானும் தன் திறமையை எல்லோருக்கும் காண்பித்து “லைக்” வாங்க வேண்டும், பெற்றோர்களும் சகோதரிகளுக்கும் தெரியாமல் அறையின் கதவைத் தாளிட்டு, மொபைலின் முன் “லைவாக” ஒரு காகிதத்தை எடுத்து அதைக் காட்டி இப்படி ஒரு காகிதத்தை எடுத்து, அதை இப்படி மடக்கி…..” என்று விவரித்த வண்ணம் பூவை உருவாக்க முயற்சி செய்கிறான்.

பல முறை தவறின்றி செய்தவன்தான் என்றாலும் அன்று காணொளியில் காண்பிக்க, அதுவும் “லைவாக” செய்த பொது சரியாகச் செய்ய முடியவில்லை! தோல்வி! தோல்வி கண்ட அவன் மனம் துவளவில்லை. “இப்படிச் செய்யும் போது சிலருக்கு நல்லா வரும். சிலருக்கு நல்லா வராது. எனக்குச் சரியா வரலை. பரவாயில்ல. அப்படித்தான் சில நேரத்தில் சரியா வராது” என்று சொல்லி தன் “லைவ்வை” முடித்து அதைp பகிராமல் விட்டுவிட்டான். ஆனால் எப்படியோ அவனது மூத்த சகோதரியின் கண்ணில் அது பட, அவர்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப, ஃபயாஸின் தோல்வி கண்டு துவளாத தெளிவான தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகளும் செயலும் வைரலாகிவிட்டது.  

கேரள “மில்மா” (ஆவின் போல) அவனது வார்த்தைகளைத் தங்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்தியது. பரிசாக அவனுக்குப் பணத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியும் வழங்கியது. கிடைத்த பணத்தை முதல்வரின் கோவிட் நிதிக்கு வழங்கியதோடு மீதத்தை அவன் வீட்டருகே உள்ள ஓர் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கான செலவிற்கும் வழங்க முடிவும் செய்திருக்கிறான். அப்படி ஃபயாஸை நாயகனாக்க உதவிய குடும்பத்தினர் எல்லோராலும் பாராட்டப்படுகின்றனர்.

தோல்வி கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் எனும் உண்மையை உணர்த்திய ஃபயாஸின் செயலும் வாக்குகளும் எல்லோருக்கும் தன்னம்பிக்கையூட்டும் ஒன்றாக நிலைபெற்றிருக்க வாழ்த்துவோம்.


-----துளசிதரன்


செவ்வாய், 28 ஜூலை, 2020

ஹீரோயின் துங்கா - கறுஞ்சிறுத்தை - அக்கம் பக்கம் - 2

இன்றைய பொழுது எல்லோருக்கும் இனிதாக அமையட்டும்!
சென்ற பதிவில் மருத்துவக் குறிப்புகள் சொல்லப்படும் காணொளிகள் பற்றிச் சொல்லியிருந்தேன். 

வெள்ளி, 24 ஜூலை, 2020

அக்கம் பக்கம் – 1


யுட்யூப் சானல்கள்/வ்ளாகர்ஸ்…….

வ்ளாகர்ஸ் காணொலிகள் போடுவதில் எந்தக் குறையும் இல்லை. அதே சமயம் அதில் சொல்லப்படுவது.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

மழை …மழை….குடை….கூடவே ஒரு படகும்

கேரளாவில் மழைக்காலத்திற்கு முன் விறகுகள் சேமிப்பது, மிளகு, மல்லி, மஞ்சள், காய வைத்து பொடி செய்வது, தேங்காய் கொப்பரைகளைக் காய வைத்து எண்ணெய் ஆட்டுவது, வீட்டில் கூரை ஓடுகளைச் சரி செய்வது, மாற்றுவது, கிணற்றைச் சுத்தம் செய்வது இப்படிப்பட்ட பல வேலைகள் செய்வதுடன் பழைய குடையைப் பழுது பார்த்து வைப்பது அல்லது புதிய குடை வாங்குவது, மழைக்கான கோட் வாங்குவது போன்ற வேலைகள் அவசர அவசரமாக நடக்கும்தான். கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் ஐந்தோ, ஆறோ பேர் பயணம் செய்யத் தகுந்த படகுகள் விற்கும் கடைகள் முளைத்திருக்கிறது. இதுவரை பத்திற்கும் மேலான படகுகள் விற்பனையாகியும் இருக்கிறதாம். வாசிக்கும் போது வியப்பாக இருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு வருடமாகத் துன்புறுத்தும் வெள்ளம்! அதுதான் இந்தத் தற்காப்பு! ஆம்! மனிதன் இனி மிகவும் கவனமாகச் சிந்தித்து செயல்பட்டு வாழத்தான் வேண்டும் போலான சூழல்கள். கொரோனாவிலிருந்து தப்ப “முகக்கவசம்”! வெள்ளத்திலிருந்து தப்ப “படகு”! இப்படி காலம் செய்யும் விளையாட்டைச் சாமர்த்தியமாகத்தான் விளையாடிக் கடக்க வேண்டும்!

-------துளசிதரன்

(நட்புகளுக்கு எல்லாருக்கும் ஸாரி சொல்லிக் கொள்கிறேன்/றோம், இங்கு லாக்டவுன் இம்மாதம் 22 ஆம் தேதி வரை என்பதால் கணினி எனக்குக் கிடைக்க இரவு ஆகிவிடும். கூடவே சில வீட்டுப் பணிகள் என்பதால்  அதன் பின் என்னால் பதிவுகளுக்கு வர இயலவில்லை. துளசியின் கருத்துகளையும் பதிய முடியவில்லை. என் வழியாகத்தானே அவரது பதிவுகள், பதில்கள், கருத்துகள் எல்லாம் வருகின்றன. அதனால் அதற்கும் ஸாரி சொல்லிக் கொள்கிறேன். துளசி அவர் பதிவுகளை பேப்பரில் எழுதி அனுப்பிட அதை தட்டச்சு செய்து இங்கு ஷெட்யூல் செய்ய, அப்புறம் அதற்கு அவர் அனுப்பும் கருத்துகள் போட மட்டுமே முடிகிறது. அதுவே கூட நான் போட தாமதமாகிவிடுகிறது. இங்கு பதிவுகள் வெளியாகிறது ஆனால் உங்கள் எல்லோரது பதிவுகளுக்கும் வரலையே என்று நீங்கள் யாரும் குறையாக எடுத்துக்க மாட்டீங்க இருந்தாலும் நாங்கள் ஸாரி சொல்ல வேண்டுமில்லையா. அதான் மீண்டும் ஸாரி எல்லோருக்கும். 23 ஆம் தேதியிலிருந்து வலைக்கு வர முடியும் என்று நினைக்கிறேன். 

---கீதா )

செவ்வாய், 14 ஜூலை, 2020

பெரு லாபம் பெரு நஷ்டம்

 

வரி உட்பட ஒரு கிலோ தங்கத்திற்கு அரபு நாடான யு  எ இ ல் 27 லட்சம் ரூபாய். அதை  இந்தியாவுக்கு 15% வரி கூடாமல் கொண்டு வந்து அணிகலன்கள் ஆக்கி விற்றால் ஏறத்தாழ 7 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் ஒரு வருடத்தில் 4000 டன் தங்க நகைகள் விற்பனை செய்யப்படும் நாட்டில் 800 டன் மட்டுமே நேரான வழியில் வரி கட்டப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படியானால் பாக்கி 3200 டன் குருவிகளும் திமிங்கலங்களும் தான் கொண்டு வந்து சேர்க்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகிறது. இடையிடையே ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று பிடிக்கப்படுவதெல்லாம் கடத்தப்படும் தங்கத்தில் ஒன்றோ இரண்டோ சதவீதம் மட்டும் தான்.

கடந்த 30 ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த எமிரெட்ஸ் விமானத்தில் திருவனந்தபுரத்திலுள்ள யு,ஏ.இ தூதரகத்திற்கான ஒரு பேகேஜ் வருகிறது. இப்படி வரும் பொருட்களில் அதிகமாக இருப்பது உணவுப் பொருட்களாகத்தான் இருக்கும்.  ‘டிப்ள்மாட்டிக் பேட்’ என்றழைக்கப்படும் இத்தகைய பேகுகளை விடுமுறை நாட்களானாலும் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அன்று வந்த அந்த பேகேஜில் கோடிக்கணக்கான ரூபாய் விலைமதிப்புள்ள தங்கம் இருக்கிறது என்ற ரகசிய செய்தி விமான சுங்க சரக்கு அதிகாரி ராமமூர்த்திக்கு வருகிறது. அதைப் பரிசோதிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை. அதற்காக ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியதானது.

இடையே யு.ஏ.இ. தூதரகத்தினின்றும் பேகேஜை தரக் கோரி அழைக்கவில்லை. ஆனால் பல இடங்களிலிருந்து பல கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தன. மத்திய அமைச்சகத்தின் உத்தரவு கிடைத்தது. யு.ஏ.இ. தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் பேகேஜ் பரிசோதிக்கப்பட்டது. ஸ்டீல் கப்புகள், டோர் லாக்குகள், ஏர் கம்ப்ரெசர் போன்றவற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 30.25 கிலோ தங்கம் தங்களுக்கு அனுப்பப்பட வேண்டியவை அல்ல என்று யு.ஏ.இ. தூதரக அதிகாரிகள் உறுதியளித்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.

Kerala Gold Smuggling Case : Swapna Suresh's Conduct Suspicious ...

விசாரணை செய்த போது தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான, எப்போதும் யு.ஏ.இ. தூதரகத்தின் பேகேஜ் வாங்க வரும் சரித் என்பவர் கைது செய்யபட்டார். அவரை விசாரணை செய்த போது கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் செயற்பாட்டு முகமையாளர் (operational manager) ஸ்வப்னா சுரேஷின் பங்கும் வெளியானது. அவருடன் தொடர்புள்ள தகவல்தொழில்நுட்ப செயலாளர் சிவசங்கரை அப்பதவியிலிருந்து நீக்கவும் செய்திருக்கிறார். சந்தீப்நாயர் ரமீஸ் என்பவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி அது ஒரு காட்டுத்தீயாய் படர்கிறது. யாரெல்லாம் அகப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. இப்படிப் பிடிக்கப்படுவது ஒன்றோ இரண்டோ சதவீதம். பிடிக்கப்படாமலிருப்பது 98% அல்லது 99%.

1950 களில் ஹாஜி மஸ்தான்-னில் தொடங்கிய தங்கக் கடத்தல்கள் இப்போதும் தொடர்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் 1% வரி விதிக்கப்பட்ட 2011-2012 ல் மட்டும்தான் 42 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. மூன்று மடங்கு விலை உயர்ந்த தங்கம், 12.5% வரி விதிக்கப்பட்ட 2019ல் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் மதிப்புள்ளது மட்டும்தான். 

இதிலிருந்து ஒரு உண்மை வெளிப்படுகிறது. இறக்குமதி வரியைக் குறைத்து நேரான வழிகளில் தங்கத்தை இறக்குமதி செய்ய வழி வகுக்க வேண்டும். நம் நாட்டில் விவசாயம் செய்யப்படும் பல பொருட்களை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகளின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து வரியைக் குறைத்து இறக்குமதி வாய்ப்புகள் கொடுக்கும் அரசு, அதே போல் தங்கத்தின் இறக்குமதிக்கும் வரியைக் குறைத்தால் தங்கத்தை கடத்த வேண்டிய சூழல் ஒழியுமே? கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை 40%க்கும் மேல் உயர்ந்து, மேலும் உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதைச் செய்யாமலிருந்தால் இது போல் பொன்னாசை படர்ந்து வேலியே பயிரை மேயும் நிலையை உருவாக்கி விடும் அல்லவா?


----துளசிதரன்


செவ்வாய், 7 ஜூலை, 2020

புலவர் திருஇராமனுசம் ஐயா அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய ...


Gathering | Albany NY a.k.a. Smalbany

புலவர் இராமானுசம் ஐயா அவர்களை வலைப்பூவில் அறியாதவர்கள் இல்லை எனலாம். வயது காரணமாக இயற்கை எய்தினார் என்பதை நாங்கள் எல்லோரும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொளகிறோம். 

புலவரை  ஓரிருமுறை நேரில் அவரது வீட்டில் நம் நட்புகளுடன் சந்தித்திருக்கிறோம். கில்லர்ஜி அப்போது ஒரு முறை வெளிநாட்டிலிருந்து வந்த போது அவர் அழைப்பின் பேரில் சென்னை, வேலூர் நட்புகள் சிலருடன் சந்தித்தித்திருக்கிறோம். நிறைய விஷயங்கள் பேசியதும் உண்டு. நல்ல மனிதர். 

எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

செய்தி சொன்ன எங்கள் ப்ளாக் ஸ்ரீராமிற்கு மிக்க நன்றி