புதன், 2 அக்டோபர், 2019

அப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்


அப்புவாகிய நான் / கோயில் பிரசாதம்

எங்கள் ப்ளாகில் கேவாபோக பகுதியில் வெளியான கதை. மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும். இங்கு சேமிப்பிற்காக.

நான் அப்பு! வயது 5. என் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா முதல் ஊரார் அனைவருக்கும் நான் செல்லம். என் அக்கா, அண்ணாவுடன் நான் அடிக்கும் லூட்டி இருக்கிறதே! சில சமயம் எல்லோரும் எங்களை கோபித்துக் கொள்ளும் அளவிற்குச் செல்லும். செல்லமாகத்தான்!




என் ஊரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே! எனக்கு என் ஊரை ரொம்பப் பிடிக்கும். ஊர் மிகவும் சிறியதுதான் ஆனால் மிகவும் அழகாக இருக்கும் தெரியுமா? ஊரைச் சுற்றி ஆறு, வாய்க்கால், தோப்புகள், வயல்கள் என்று பச்சைப் பசேலென்று இருக்கும். அருகில் மலைகள் வேறு. மழை நன்றாகப் பெய்யும். ஊரின் நடுவில் அழகான, பெரிய, ரொம்பப் பழமையான கோயில். தெப்பக் குளமும் அத்தனை அழகு! நான் நன்றாக நீந்துவேனாக்கும்! நீங்கள் சின்னியை பார்த்தால் அவளிடம் மட்டும் சொல்லி வையுங்கள். சின்னி யாரென்று உங்களூக்குத் தெரியாதே! பின்னர் சொல்கிறேன்.




எங்கள் ஊர்க் கோயிலுக்கு எங்கிருந்தெல்லாமோ மக்கள் வருவார்கள். வெள்ளைக்காரர்கள் கூட வருகிறார்கள். அவர்களுடன் நானும் நடந்து எல்லா இடங்களுக்கும் செல்வேன். அதனால் வருகிறவர்கள் எல்லோருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். கோயிலை ஃபோட்டோ எல்லாம் எடுப்பார்கள். என்னையும் கூட எடுத்து ஏதோ ஃபேஸ்புக்காமே அதில் கூடப் போட்டார்களாமே! நீங்கள் என்னைப் பார்த்தீர்களோ? ஓ! உங்களுக்கு என்னைத் தெரியாதே! இப்போது என்னைப் பற்றிச் சொல்லிவிட்டேன் இல்லையா? அடுத்த முறை அவர்கள் என் ஃபோட்டோவைப் போடும் போது என்னைப் பாருங்கள்! அவர்கள் மீண்டும் வரும் போது “அப்பு எங்கே” என்று என்னைக் கேட்டு வரவழைப்பார்கள். இப்போதெல்லாம் எனக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் கூட நன்றாகப் புரிகிறது.


எனக்கு எங்கள் கோயில் ரொம்பப் பிடிக்கும். ஏன் சொல்லுங்கள்? எல்லாம் தினமும் மூன்று வேளையும் கிடைக்கும் பிரசாதம்தான் காரணம். அத்தனைச் சுவையாக இருக்கும். என் அம்மா, அப்பா கூட என்னைக் கலாய்ப்பார்கள். “வீட்டுல திங்கறது போதாதுனு கோயில்ல போயும் கொட்டிக்குது பாரு! சரியான அலவலாதி” என்று! அதென்னவோ தெரியவில்லை. எனக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டாலும் கோயில் பிரசாதம் சாப்பிடவில்லை என்றால் என்னவோ போலிருக்கும். சில சமயம் பிரசாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவேன். பிரசாதம் கொடுக்கும் நேரம் எல்லாம் எனக்கு அத்துப்படியாக்கும்!


நீங்களும் எங்கள் ஊர்க் கோயிலுக்கு வாங்க. கோயிலில் இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள். என்னுடன் வந்தால் பிரசாதம் நிறைய கிடைக்கிறதாம், கூட வருபவர்கள் சொல்லிக் கொள்வார்கள். நான் உங்களுக்குத் துணையாக வந்து ஊரெல்லாம் சுற்றிக் காட்டுவேன். நீங்கள் அப்புறம் உங்கள் ஊருக்குப் போகவே மாட்டீங்க. அதுவும் என்னை விட்டுப் போக மாட்டீங்க! கண்டிப்பாக போட்டோ எடுப்பீங்க!




எங்க ஊர்ல சத்தமே அவ்வளவா இல்லாம அமைதியா இருக்கும். வண்டி எல்லாம் உள்ளே வராது. எல்லாம் ஊருக்கு வெளியே நடக்கும் தூரத்தில நின்று விடும். அங்குதான் போய் எல்லோரும் ஏறிக்கொள்வார்கள். எங்க ஊர் வண்டிகளும் அங்க ஒரு பெரிய ஷெட் இருக்கும் அங்கதான் நிறுத்தனும். எங்க ஊர்ல புகையே இருக்காது.  சைக்கிள்தான் நிறைய. என் அப்பா என்னை சைக்கிள்ல பின்னால உட்கார வைச்சு ஓட்டிட்டு போவார். எனக்கு ரொம்பப் பிடிக்கும். முக்கியமா ஒன்னு சொல்லனும். எங்க ஊர்த் தலைவர் என்னை தட்டிக் கொடுத்து சொல்லுவார். “இவென் ரொம்ப வித்தியாசமா இருக்கான்லா. வெளிய ஒரு எடத்துலயும் ஒன்னுக்கு அடிக்கறதே இல்லைல்லா”ன்னு.


தெருவுல குப்பையே இருக்காது. எல்லாம் அவரவர் வீட்டுக்குப் பின்னாடி உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டிடனுமாம். அன்னிக்கு நான் ஒரு கவரை எடுத்துப் பார்த்தேன். என் அண்ணன் வந்து அதைப் பிடுங்கி அந்த தொட்டில போட்டான். ப்ளாஸ்டிக் எல்லாம் தெருவுல உள்ள பெரிய  சிமென்ட் தொட்டிக்குள்ள போடனுமாம். எங்க வீட்டுல பேசிக்கொள்வார்கள் “மத்த ஊர்ல எல்லாம் மாடு ப்ளாஸ்டிக்கை திங்காமே. பாவம்” னு. எனக்கு எங்க ஊர் மாடுகளைப் பார்த்தா பயமா இருக்கும். பெரிசா இருக்கும். ப்ளாஸ்டிக்னா என்ன? எனக்குத் தெரியலையே. விஷமா? ஒன்று சொல்ல மறந்துட்டேனே. எங்க ஊர்ல பட்டாசு வெடிக்கும் பழக்கமே கிடையாதாக்கும்! எல்லாமே எங்க ஊர்த் தலைவர் போட்டிருக்கும் எழுதப்படாத சட்டம்னு எங்க வீட்டுல பேசிக்கொள்வார்கள். சட்டம்னா என்ன? உங்க ஊர் எல்லாம் இப்படி இருக்குமா? 


இடையில் அத்தையின் வீட்டில் விசேஷம் என்று நாங்கள் அத்தை இருக்கும் ஊருக்குப் போனோம். சென்னையாம் அதன் பெயர். ஆனால், எனக்கு அது பிடிக்கவே இல்லை. ஒரே சத்தம், வண்டிகள், புகை, அழுக்கு, வெயில், தண்ணீரே இல்லை. இரண்டு ஆறுகள் பார்த்தேன். ஐயே! அதுவா ஆறு!? எங்கள் ஊர் ஆற்றை வந்து பாருங்கள். அதை விடுங்கள், அத்தையின் வீட்டருகில் கோயில் இருந்தும் கோயிலில் பிரசாதமே தரலை. எனக்குப் பிடிக்கலை. எனக்கு நண்பர்களும் இல்லை. எங்கள் யாருக்குமே நகரம் பிடிக்கவில்லை. அண்ண்னும், அக்காவும் நரகம்னு சொன்னாங்க. எங்கள் ஊருக்கு எப்போது வரப் போறோம் என்று ஆகிவிட்டது. விசேஷம் முடிந்து ஊருக்கு வந்ததும்தான் நிம்மதியாக இருக்கிறது.


ஹான்! சின்னியைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேனே. மேற்குத் தெரு எங்கள் தெருவிற்கு நேரெதிர்த் தெரு. அங்கு வெளியூர்க் குடும்பமாம். ஹிந்திக்காரர்களாம். எனக்குத்தான் ஹிந்தி புரியுமே. அவர்கள் வீட்டுப் பெண் தான் சின்னி! நல்ல சுருட்டை முடியோடு பார்க்க பொம்மை மாதிரி அழகாக இருக்கிறாள்னு அவள் பெயர் சின்னியாம்! எனக்கு நல்ல தோழிதான். நான் அவளை விளையாடக் கூப்பிடுவேன். ஆனால், அவளது அம்மா அப்பா அவளை விட மாட்டார்கள். அவள் திண்ணையில் இருக்கும் அழி வழியாக என்னை எட்டிப் பார்ப்பாள்.


அந்தத் தெருவில் இருக்கும் பாண்டியும் எனக்கு நல்ல தோழன்தான். ஆனால், ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் என்னைக் கண்டால் டூ விடுறான். நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன் தெரியலை. சின்னி அவனுடன் மட்டும் தான் விளையாடனுன்னு நினைக்கிறானோ? அவனுக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு ஊரார் பேசிக் கொள்வார்கள். அவனுக்குக் கோயில் பிரசாதம் கொடுக்கவே மாட்டார்கள். நான்தான் அவன் பாவம் என்று கோயில் பிரசாதம் அவனுக்கும் கொடுப்பேனே! அப்புறம் ஏன் என்னிடம் டூ என்று தெரியவில்லை! என் அம்மா அப்பா கூடக் கோபப்படுவார்கள். பாண்டியனோடு விளையாடாதே என்று. ஆனால் நான் அதற்கெல்லாம் கவலையேபடுவதில்லை. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்.


இப்போது மார்கழி இல்லையா? கோயிலில் பிரசாதம் களை கட்டும். அதுவும் கோயில் மடப்பள்ளி எங்கள் வீட்டிற்கு அருகில் என்பதால் அந்த மணம் அப்படியே கட்டி இழுக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும். நான் வீட்டில் கொஞ்சம்தான் சாப்பிடுவேன். எல்லோர் வீட்டு வாசலிலும் அழகாகக் கோலம் போடுவார்கள். விளையாட்டுப் பிள்ளை நான் மிதித்துவிடுவேனோ என்று என்னை “ஏய் தள்ளிப் போ” என்று சொல்லுவார்கள். நான் ரொம்ப நல்ல பிள்ளையாக்கும். இப்போது பழகிவிட்டது. புரிந்து கொண்டு மிதிக்காமல் போவேனாக்கும்.


சற்றுப் பொருங்கள். கோயிலில் மணிச் சத்தம் கேட்கிறதே. உங்களோடு பேசிக் கொண்டிருந்ததில் கவனிக்கவே இல்லை. அடடா! அதற்குள் உச்சிக்கால பூஜை ஆகிவிட்டதா? பிரசாதம் கிடைக்குமே! பிரசாதம் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.


ஓடுகிறேன்…………


“அப்புவை காங்கலை? என்னாச்சுடே? அவனுக்குப் பிரசாதம் கொண்டாந்தேன்”


ஆ! இது கோயில் அண்ணன் குரல். நான் எங்கிருக்கிறேன்? ஏன் என்னால் எழ முடியவில்லை?


“அப்பு அப்பு! பிரசாதம் திங்கப் போகாம இன்னும் படுத்துக் கிடக்க.” அம்மாவின் குரல்.


ஓ! நான் ஓடலையா? என்னாச்சு எனக்கு?


‘அப்பு……அப்பு… ஏண்டா அப்படிப் பாக்கே.” அம்மாவின் கவலைக் குரல். என்னைத் தடவிக் கொடுக்கிறாள். 


“ஐயோ இங்கன வாங்களேன்! நல்லாத்தானே இருந்தான். வாலை ஆட்டமாட்டேங்கான்…..காதும் ஆடலை….ஐயோ ஒன்னுக்கு வேற அடிக்கான்.....அப்பூஊஊ டேஅப்பு இந்தாப்பு” 


அம்மாவின் கையில்………கோயில் பிரசா…………


-----------கீதா


படங்கள் கர்ட்டசி இணையம்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

என் கண்ணில் பாவையன்றோ.......

https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html  இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழுத வைத்து ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்தும் எபி மற்றும் ஸ்ரீராமிற்கு மனமார்ந்த மிக்க நன்றிகள் பல.

“நான் உன் மடில சித்த படுத்துக்கட்டுமாடி கோமளா? நேக்கு ஆசையா இருக்கு!”

“எங்கிட்ட என்ன கேள்வி இது? படுத்துக்கலாமே. ஒங்க மடிதானே இது”

கல்யாணமான புதுசுல பதினஞ்சே வயசான கோமளா எம்புட்டு வெக்கத்தோட பதில் சொல்லிண்டே நான் படுத்துக்கறதுக்கு வாகா மடிய வச்சுண்டு என்னை படுக்க வைச்சுண்டா.

நான் இப்படி எத்தனையோ நாள் மனசு சோர்ந்து போறச்சேயும், களைப்பா இருந்தப்பவும் அவ மடில ஸ்வாதீனமா படுத்துண்டுருக்கேன். அவளும் எத்தனை ஆதுரத்தோட என் தலையை வருடிக் கொடுத்துருக்கா. தாய்க்குப் பின் தாரம் னு சொல்லறது சரிதான் போல. அம்மாவோட மடி எத்தனை சுகமோ அதே போலத்தான் இவளோட மடி. அந்த நாளெல்லாம் நினைச்சுண்டா எம்புட்டு சந்தோஷம் வரது. அப்போ படாத கஷ்டமா? எம்புட்டு கஷ்டம் வந்தாலும் கோமளா இருக்கான்னு ஒரு தைரியம் அந்தத் தைரியத்துல ஒரு மனக்களிப்பு. அதுல எல்லாத்தையும் கடந்து வர முடிஞ்சுதே.
  
அப்படிப்பட்டவள் தனக்குனு ஏதாவது கேட்டுருக்காளோனு நினைச்சுப் பாக்கறேன். ம்ஹூம் என் நினைவுக்குத் தெரிஞ்சு ஒண்ணுமே இல்லை. நானோ, குழந்தைகளோ வாங்கிக் கொடுக்கறதுதான். ஆனா அதை எம்புட்டு சந்தோஷமா வாங்கிப்பள். அந்த முகத்துல நிஸ்சலனமான சந்தோஷத்தப் பாக்கணுமே. ஒரு குத்தம் குறை? சொன்னதே இல்லையே.

பாவம். எத்தனைக் கஷ்டப்பட்டிருக்கா. அந்த நாள்ல பெரிசா இருந்த என் குடும்பத்துல வாக்கப்பட்டு அந்தச் சின்ன வயசுலயும் என் அம்மா, அப்பா, அவா அம்மா அப்பா, என் தங்கை, தமக்கைகள் அவா பிரசவம், ஆதரவு இல்லாத சித்தினு எல்லாரையும் கவனிச்சுண்டு, அரவணைச்சுண்டு, அம்புட்டு வேலையும் பாத்துண்டு, இதுக்கு நடுல நா “நேக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டி” “டி எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை” அப்படி இப்படினு சொல்லிண்டு, அவளை சுகிச்சதுல பொறந்த குழந்தைகளையும் கவனிச்சுண்டு எல்லாரோட ஆசைக்கும் ஏத்தபடி சமைச்சுப் போட்டுண்டு, குழந்தைகள், பெரியவா எல்லாருக்கும் இசைஞ்சுண்டு, மனுஷா இருந்தா பிரச்சனைகள் வருமில்லையோ அதையும் சமாளிச்சுண்டு இருந்தாளே தவிர தனக்குனு ஆசை எதுவும் இருந்ததா கூடக் காட்டிண்டதேயில்லையே..

குழந்தைகள் கூடக் கேட்டா, “ஏம்மா எங்களுக்கெல்லாம் விழுந்து விழுந்து உழைக்கிற. எங்க ஆசை அது இதுனு செஞ்சு கொடுக்கற. உனக்குனு ஏதாவது ஆசை இருக்கா இல்லையா? சொல்லுமா நாங்க அதை நிறைவேத்தறோம்”

“நேக்கு எதுக்கு? நீங்க எல்லாம் இருக்கும் போது நேக்கு என்ன வேணும் சொல்லுங்கோ? இதுவே பரம சொர்க்கம். பகவானுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டவளாக்கும்.

ஆர் கண் பட்டுதோ. அப்படி இருந்த எங்க குடும்பத்துல இப்படி ஒரு வேதனை வரணுமா? முதல்ல பெரிய பொண் போய்ச் சேர்ந்தா. அப்புறம் மாப்பிள்ளை. அந்தக் குழந்தைகள் எங்ககிட்ட வளர ஆரம்பிச்சுது. அப்புறம் ரெண்டாவது மாப்பிள்ளை. அப்போ அவா குழந்தைகள் வளர்ந்துட்டா. அப்புறம் ரெண்டாவது பொண்ணும் போய்ச் சேந்ததும் குழந்தைகள் எங்களோட வந்துட்டா. அடுத்தாப்புல மாட்டுப் பொண்ணும் போய்ச் சேர்ந்தா. எல்லாரும் 50 வயசுக்குள்ள போய்ச் சேந்துட்டா. பேரன் பேத்திகளை வளத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. பிள்ளை, பிள்ளை வயித்துப் பேரன், மாட்டுப் பொண், குழந்தைகளோட நாங்க இருக்கோம். மத்த பேரன் பேத்தி எல்லாம் அடுத்தாப்புலதான் இருக்குகள்.  

பாட்டிக்கு 80 வயசாம். கொண்டாடணும்னு குழந்தைகள் எல்லாம் வந்துருத்து. அதுகளே கேக் எல்லாம் பண்ணி கோமளவல்லி ஸ்ரீநிவாஸன்னு பேர் எல்லாம் எழுதி வைச்சுதுகள். எங்க ரெண்டு பேரையும் மாலை மாத்திக்கச் சொல்லிக் கொண்டாடி, பாட்டிய எனக்குக் கேக் ஊட்டச் சொல்லி, என்னை பாட்டிக்கு ஊட்டச் சொல்லினு… அப்போ இவ வெக்கத்தைப் பார்க்கணுமே. என் மனசும் அந்தக் காலத்துக்குப் போயிடுத்து. வடை பாயாசத்தோட சாப்பாடு. அமளி துமளி. குழந்தைகள் எல்லாம் ஆர்ப்பரிச்சா. குதூகலிச்சா. அடுத்த தலைமுறை குழந்தைகள்! பாட்டி கிட்ட கேட்டா.

“பாட்டி! நீ உனக்குனு எதுவுமே கேட்டதில்லையாமே. எங்ககிட்டயும் எதுவுமே கேட்டதில்லையே பாட்டி. எங்களுக்கெல்லாம் பாத்து பாத்து செஞ்சுருக்கியே. இன்னிக்கு உனக்கு பர்த்டே. சொல்லு உனக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்? என்ன ஆசை சொல்லு பாட்டி.”

“உங்க தாத்தாகிட்ட கேளுங்கோ”

“ஓ! பாட்டி நீ தாத்தாக்கு என்னவோ அதுதான் நேக்கும்னு சொல்லுவ! ஒத்துக்கறோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு பாட்டினு கேட்டா… இப்பவும் தாத்தாதானா?.”

“நேக்கு ஒண்ணுமே வேண்டாம் கோந்தே. எல்லாம் பகவான் கொடுத்துட்டாரே. உங்களை எல்லாம் விட வேற என்ன வேணும் சொல்லுங்கோ? எங்கிட்ட இத்தனை பாசமான உங்க எல்லாரையும் விட விலை ஒசந்தது என்ன இருக்கு சொல்லுங்கோ இந்த லோகத்துல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“இல்ல பாட்டி இப்பவாவது உன் ஆசை என்னனு சொல்லு ப்ளீஸ்” 

குழந்தைகளுக்கு நன்னா தெரிஞ்சு போச்சு. பாட்டி எல்லார் முன்னாடியும் சொல்லமாட்டானு. குழந்தைகள் எங்கிட்ட தனியா கேட்டதுகள். அவகிட்ட தனியா கேட்டதுகள்.

நேக்கு சொல்றதுக்கு என்ன வெக்கம்? நான் அதுகள் கிட்ட சொன்னேன். “பாவம் உங்க பாட்டி. அவளை என் மடில படுத்துக்க வைச்சு ஆதுரத்தோட தடவிக் கொடுக்கணும். அவ கைய பிடிச்சுக்கணும். இத்தனை நாள் எம்புட்டு சமாளிச்சுருக்கனு.

இவ என்ன சொல்லப் போறாளோனு நான் பார்த்துண்டே இருந்தேன். இவள் சின்ன வயச நினைச்சுண்டாளாம். “நீங்க எல்லாம் சிரிக்கப்படாது. உங்க தாத்தா மடில நா ஆசையா படுத்துக்கணும்” என்று சொன்னாளாம். நான் பாக்கறேன்னு தெரிஞ்சதும் மொகத்தை வேற மூடிண்டுட்டா. முகத்தைப் பார்க்கணுமே. வெக்கத்துல சேப்பா ஆயிடுத்து.

எல்லாம் சேந்து ஒரே கத்தல். ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொன்னோமாம். ஹனிமூன் கப்பிள் அட் 80னு வேற பட்டம் சூட்டிடுத்துகள். அவாளுக்கு நன்னா தெரியும் அவா பாட்டி அவா முன்னாடி என் மடில படுத்துக்க மாட்டானு.

பாட்டிக்குத் தாத்தாவோட தனியா போணும்னு ஆசை இருக்கும்னு எல்லாம் சேந்து திருநெல்வேலிக்கு ரயில்ல டிக்கெட் புக் பண்ணி போற இடத்துல எல்லாம் எங்களைக் கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி, கையில கொடுத்ததுகள்.

“பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்ச ஊர்கள். நீ அடிக்கடி சொல்லுவியே, உனக்கும் தாத்தாவுக்கும் கல்யாணம் ஆன ஊர் திருநாங்கோயில் அதான் மேல திருவேங்கடநாதபுரம்னு……  அந்த ஊருக்கும், தாத்தா ஊரான திருக்குறுங்குடிக்கும்…  உன் ஊரும் தான். ரெண்டு பேரும் கஸின்ஸ் தானே. ரெண்டு பேரும் போயி திருநாங்கோயில்ல தரிசனம் முடிச்சு உன் கல்யாண நாளை நினைச்சுண்டு…  அங்க தாமிரபரணி ஆத்தங்கரை உண்டே  அங்க தாத்தா மடில படுத்துக்கோ. அட! இங்க பாரு பாட்டிக்கு வெக்கத்த…ஹை என்ன சந்தோஷமா?”  

கையில் கேமரா வேற கொடுத்து நாங்க தனியா இருக்கற ஃபோட்டோ வேணும்னு கண்டிஷன் எல்லாம் போட்டு, கட்டிப் பிடிச்சுண்டு, முத்தம் கொடுத்து, “எஞ்சாய் தாத்தா பாட்டி” னு சொல்லி ரயில் ஏத்தி விட்டதுகள். இவள் வெக்கப்பட்டுண்டே என் கையை பிடிச்சுண்டு ரயில்ல ஏறினா.

ஒரு வாரம் ஊர்ல இருந்துண்டு, பகவான் தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிச்சுண்டு, பழசெல்லாம் நினைச்சுண்டு பேசிண்டு, இதோ திரும்பவும் குழந்தைகள்ட்ட போயிண்டுருக்கோம். இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது என் மடில அவளா படுத்துண்டுருப்பளோ? இல்லியே. சரி அவதான் படுத்துக்கலை. நானாவது அவளை படுத்துக்கோனு இழுத்துப் படுத்துக்க வைச்சதுண்டோ? வைச்சாலும், அவள் எங்க படுத்துண்டா? என்னைதான் படுத்துக்க வைச்சுப்பள். என்னமோ தெரியலை. எத்தனை உரிமை கொண்டாடியிருக்கேன் நான். ஆனா அவள்? பாவம்!

என்னதான் அவள் சந்தோஷமா இருந்தாலும் குழந்தைகள் எல்லாம் சின்ன வயசுலயே போய்ட்டாளேனு வலியும், வேதனையும் அவ மனசுல வாட்டிண்டுதான் இருக்குன்னு எனக்கு நன்னாவே தெரியுமே. ஆனா, என் மடில படுத்துக்கணும்ன்ற ஆசைய இத்தனை வருஷமா அவ மனசுல பூட்டி வைச்சுருந்துருக்காளே. அவளுக்கு இல்லாத உரிமையா? அதான் இத்தனை வருஷமா என் மடில படுத்துக்காதவள் இன்னிக்கு “உங்க மடில சித்த படுத்துக்கட்டுமா”னு கூடக் கேக்காம அப்படியே படுத்துண்டு அவ ஆசையை நிறைவேத்திண்டுட்டா! எதுக்குக் கேக்கணும்? அத்தனை ஆசை எம்மேல! நீ எழுந்ததும் நிறைய பேசணும்டி கோமு என்று நினைத்தபடியே அவள் மேல் ஆதுரத்துடன் கையை வைத்துத் தடவிவிட்டார், பாட்டியின் உயிர் அவர் மடியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவதை அறியாமல்.
------கீதா

ஞாயிறு, 28 ஜூலை, 2019

காசு வரை பிள்ளை


https://engalblog.blogspot.com/2018/07/blog-post_10.html அருமையான தலைப்பிற்கும், கேவாபோக பகுதியில் அங்கு வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபிக்கு. 

இங்கு எங்கள் தளத்திலும் இது ஒரு சேமிப்பாக......


“அப்பா! அம்மாவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. எல்லாமே நார்மல். பெரிசா ஒன்னுமில்லை. ஹார்ட்தான் கொஞ்சம் வீக்கா இருக்கு. ட்யூ டு ஏஜ் னு டாக்டர் சொல்லிட்டார்”

“இறைவா!” என்று கண்ணை மூடிக் கொண்டு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டார் வேதமூர்த்தி. “கணேசன், ராஜா, லலிதா எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டியா சுந்தர்!? அம்மா மூணு நாளா சரியா பேசமுடிலைல. அதனால எல்லாரையும் பாத்து பேச ஆசைப்படுவா”

“சொல்லியாச்சுப்பா. எல்லாரும் ஈவ்னிங்க் வீட்டுக்கு வந்துருவோம்னிருக்காங்க”

மாலை அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்ததும் எல்லோரையும் பார்த்து சந்தோஷப்பட்டார். உள் ரூமில் படுக்க வைத்து மீனாட்சி உறங்கியதும், தான் வருவதாக வேதமூர்த்தி சொல்லவும் கதவை மூடி வைத்துவிட்டு எல்லாரும் ஹாலில் கூடினர். எல்லோரும் என்றால் வேதமூர்த்தியின் மூன்று பிள்ளைகள், மருமகள்கள், மகள், மாப்பிள்ளை. அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. எப்படித் தொடங்குவது? யார் தொடங்குவது என்று இருக்கலாம்.

முதலில் மூத்தவன் சுந்தர்தான் தொடங்கினான். “இந்த 3 நாள் அம்மா ஆஸ்பத்திரியில இருந்ததுக்கு 2 லட்சம் செலவாகியிருக்கு. இதோ மெடிக்கல் பில் எல்லாம்.”

மீண்டும் அமைதி. “சரி இப்ப என்ன சொல்ல வர? நாங்க மூணு பேரும் ஷேர் பண்ணிக்கணும்னு சொல்ல வரியா?” பெண் லலிதா அமைதியைக் கலைத்தாள்.

“எங்களால இப்ப முடியாது. குழந்தைங்க படிப்பு அது இதுனு. நிறைய செலவு இருக்கு” – மூன்றாவது மருமகள்

“எங்களாலயும் இப்ப முடியாது.” இது இரண்டாவது மருமகள், மகன்.

“அப்ப நாங்க இப்ப 2 லட்சம் செலவு செஞ்சுருக்கோமே அதுக்கு என்ன சொல்லறீங்க? எங்களுக்கு மட்டும் செலவு இல்லையாக்கும்? பெரிய பையன் இன்னும் செட்டில் ஆகலை. அவன் படிப்பு செலவே ஒரு தொகை ஆகிருச்சு. அடுத்து ரெண்டு பேரு. ஏங்க சும்மா வாய மூடிட்டுருக்கீங்க. சொல்ல வேண்டியதுதானே." – இது மூத்த மருமகள் சுந்தரின் மனைவி.

“அண்ணி. அப்பாகிட்டயே சொல்லிடலாம். இத்தனை செலவாச்சுனு”

மீனாட்சியின் தேவைகளைக் கவனித்துவிட்டு எழுந்து வந்தவரின் காதில் இந்த உரையாடல்கள் விழவும், மீண்டும் உள்ளே சென்றார்.  பண விஷயம் பற்றிப் பேசப்பட்டது மீனாட்சியின் காதில் விழவில்லை என்பதை அறிந்து அவர் மனதில் ஒரு சமாதானம். நல்லகாலம் மருந்துகள் அவளை அசத்தியிருக்கிறது.

“சரி..பணத்தைப் பத்தி அவர்கிட்ட சொல்லிடலாம்.….அப்புறம்? இப்ப ரெகுலர் செக்கப்னு சொல்லிருக்காங்கல்ல. யாரு இவங்களை இங்க வைச்சுக்கறதாம்?”

மீண்டும் அமைதி.

“இப்படி இருந்தா எப்படி? ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆகணும்.” என்று லலிதா சொல்லவும் பெரிய மருமகள் முந்திக் கொண்டாள். 

“நான் வேலைக்குப் போயிட்டிருக்கேன். அதனால…..” என்று இழுத்தாள்.

இரண்டாவது மருமகளும், மூன்றாவது மருமகளும் அதே காரணத்தையும் இன்னும் ஏதோ பல காரணங்களையும் எல்லோரும் சொன்னார்கள்.

“அண்ணா, அப்ப யாரு பாத்துக்குவாங்க? பாவமில்லை?” - இது லலிதா.

“ஏன் நீ தான் கொண்டு வைச்சுக்கயேன்”

“என்ன அண்ணா இப்படிச் சொல்லற. நீங்க மூணு பேரும் இருக்கறப்ப பொண்ணு நான் கொண்டு வைச்சுக்கிட்டா நல்லாருக்காது. என் அத்தையும், மாமாவும் எங்கூடத்தானே இருக்காங்க”

“பொண்ணுனா அம்மா அப்பாவை பாத்துக்கக் கூடாதாக்கும்? மாப்பிள்ளை நீங்க இதுக்குப் பதில் சொல்லுங்க. நாங்க இப்ப எங்க பொண்டாட்டிங்களோட அம்மா அப்பாவை பார்த்துக்கலை?”

பதிலில்லை.

“அண்ணா ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டு, இங்க நல்லதா நம்ம வீட்டுப் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து வைச்சா?”

“இங்க வீட்டு விலையும் சரி, வீட்டு வாடகையும் சரி…உள்ள ரூபாய் அத்தனையும் போகும். கைவிட்டுப் போட வேண்டி வரும். அப்புறம் ஹாஸ்பிட்டல் செலவு யாரு பாப்பாங்க.? நீ கொடுப்பியா? உங்களுக்குத்தான் இன்னொரு வீடு இருக்குதே அதைக் கொடேன்”

உள்ளே சென்றிருந்த சுந்தரின் மனைவி, “ஏங்க கொஞ்சம் இங்க வரீங்களா? காப்பி கலந்திருக்கேன் எல்லாருக்கும்…” என்று கூப்பிட்டாள். கூப்பிட்டது காபி எடுத்துக் போக அல்ல என்பதும் சுந்தருக்குத் தெரியாதா என்ன?

“அத்தையையும் மாமாவையும் நாம பாத்துக்கிட்டா நாளைக்கு நாமதான் பாத்துக்கிட்டோம்னு ஊர்ல உள்ள வீட்டை நம்ம பேருக்கு மாத்திக்கலாம்ல. அதையும் இப்ப சொல்லிடுங்க …அப்படி இல்லைனா உயில் எழுதச் சொல்லுங்க”

“ம்”

சுந்தர் ஸ்னாக்ஸுடன் ஹாலுக்கு வந்தான். “நாங்க அம்மா அப்பாவை பாத்துக்கிட்டா அவங்க காலத்துக்குப் பிறகு அவங்க வீட்டை நாங்க எடுத்துக்குவோம்.”

மற்ற இரு மருமகள்களும், “அதெப்படி? எங்களுக்கும் அதுல பங்கு உண்டுல்ல?”

சுந்தரின் மனைவி காபியுடன் வந்தாள், “அத்தைக்குத்தான் ஒன்னுமில்லைல. அவங்க ஊர்லயே இருக்கட்டும்”

இப்படிப் பணம்தான் பேசப்பட்டதே ஒழிய அங்கு அம்மா அப்பா என்ற நேயம் எதுவும் பேசப்படவில்லை.

இன்று இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் வேதமூர்த்தியும், மீனாட்சியும்தான். பிள்ளைகள் எது கேட்டாலும் பணத்தினால் மட்டுமின்றி உடல் உழைப்பாலும் செய்து கொடுத்துவந்தனர்.

இப்போதும் கூட மீனாட்சிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது ஊரில் உள்ள மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் பெரிய மகனுடன் பேசி இங்கு வந்தனர். பில் பற்றி பேசியது மட்டுமே அவர் கேட்டது. அவர் உள்ளே சென்றுவிட்டதால் நல்லகாலம் இவர்களை வைத்துக் கொள்வதைப் பற்றி பேசியது வேதமூர்த்தியின் காதில் விழுந்திருக்கவில்லை.

பில் பற்றி பேசப்பட்டது கேட்காதது போல் ஹாலுக்கு வந்தார் வேதமூர்த்தி. 

“சுந்தர்! நான் கேக்கணும்னு நினைச்சேன். டென்ஷன்ல கேக்க விட்டுப் போச்சு. மெடிக்கல் பில் எவ்வளவு ஆச்சு?” வேதமூர்த்தி கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்தனர்.

“எங்கிட்ட அமௌன்ட் பத்தி சொல்ல உங்களுக்கு மனசு ரொம்பக் கஷ்டப்படும்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் எவ்வளவோ செலவு இருக்கும். இந்தக்காலத்துல ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவாகுது. அதனால எவ்வளவு ஆச்சுனு சொல்லுப்பா”

சுந்தருக்கு கொஞ்சம் குற்ற உணர்வு வந்ததுதான். ஆனால் தனது மனைவியை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது. மெடிக்கல் பில்லை நீட்டியதும் வேதமூர்த்தி அதற்குச் செக் எழுதிக் கொடுத்தார்.

“அடுத்த செக்கப் தேதி டாக்டர் எழுதிக் கொடுத்துருக்காரா?”

“ஆமாப்பா. இதே தேதி அடுத்த மாசம்.”

“ஆனா, நான் பிள்ளைங்க எல்லாரும் ஊருக்குப் போறோம்.” இது சுந்தரின் மனைவி. முந்திக் கொண்டாள்.

“அதனாலென்னம்மா. நீங்க போய்ட்டு வாங்க”

“அப்பா நாங்களும் வெக்கேஷனுக்கு பிள்ளைங்கள கூட்டிட்டு ஊருக்குப் போறோம்பா.”

“இந்தச் சின்ன வயசுலதான் ஊருக்கு எல்லாம் போய்ட்டு வரமுடியும் போய்ட்டு வாங்கப்பா சந்தோஷமா”

இதென்ன இவர் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டாரா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி பேசுகிறாரா? என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அம்மாக்குத்தான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்களேப்பா. ஊர்லயே பாத்துக்கலாம். அப்புறம்….அப்பா அந்த வீடு அம்மா பேர்லதான் இருக்குல்ல? அம்மாக்கு ஒன்னுமில்லைதான்….இருந்தாலும்… உயில் எழுதிரலாமாப்பா?”

“……………………………………………………………..   எழுதிடலாம்.. நாளைக்கு ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணனுமே கிடைக்குமா”

“டிக்கெட் புக் பண்ணியாச்சுப்பா தத்கல்ல. நாளைக்குக் காலைல ட்ரெயின்…”

“…………………………………………………………………..”
ரயிலில் வேதமூர்த்தியின் மடியில் மீனாட்சி படுத்திருக்க, வேதமூர்த்தி முந்தைய நாள் நடந்த இத்தனையையும் வேதனையுடன் நினைத்தார். ‘நல்ல காலம் மீனாட்சிக்கு நேத்து பிள்ளைங்க பேசினது எதுவுமே தெரியாது. பாவம். மருந்து சாப்பிட்டதுல நல்ல தூக்கம்” மீனாட்சியின் தலையை வருடிக் கொடுத்தார்.

“எதுக்கு இப்பவே ஊருக்குப் போகணும். இங்க எல்லாரும் இருக்காங்கல்ல…மனசு தெம்பாயிடும்” என்று சொன்னவளை, “ஊர்ல வேலை இருக்குதுனு” சொல்லி எப்படியோ சமாளிச்சுக் கூட்டி வந்தாச்சு. இதோ இப்பவும் நல்ல தூக்கம் தான். எப்படி ஒரு நிம்மதியான தூக்கம்! தெரியாமலே போகட்டும். வேதனை என்னோடயே போகட்டும். இறைவா! எங்க குழந்தைங்கள தண்டிச்சுராதப்பா! அவங்க எல்லாருக்கும் நல்ல மனசைக் கொடு.. எனக்கு முன்னாடி மீனாட்சிய கூப்பிட்டுரு. அவளால இந்த வேதனை எல்லாம் தாங்கிட்டு தனியா இருக்க முடியாது. இல்லைனா எங்க ரெண்டு பேரையும் ஒரே சமயத்துல அழைச்சிடு.” வேதமூர்த்தி கண்ணை மூடிக் கொண்டு மீனாட்சியின் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.

வேதமூர்த்தியின் மொபைல் அடிக்கவும் பார்த்தால் பெரிய பேரன். 

“ஹை! தாத்தா! எப்படி இருக்கீங்க? பாட்டி எப்படி இருக்காங்க?”

“பரவால்லடா என் பேராண்டி... செல்லம். நீ எப்படி இருக்கடா?”

“நான் நல்லாருக்கேன் தாத்தா. நீங்க ஊருக்குப் போயிட்டுருக்கீங்கனு தம்பியும் தங்கச்சியும் அங்க நடந்ததெல்லாம் சொல்லிட்டாங்க. கவலைப்படாதீங்க. என் படிப்பு ஓவர். அடுத்த வாரம் லேண்டிங்க். நான் உங்க கூடத்தான் இருக்கப் போறேன். எனக்கு வேலை கிடைச்சதும் எங்கூடத்தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கப் போறீங்க. ஓகே? மற்றவை நேரில்! டேக் கேர் தாத்தா…”

வேதமூர்த்திக்கு மனமும் உடலும் பரவசமாகி பல வருடங்கள் குறைந்து இளமையானது போல் துள்ளியது. "இறைவா!" என்றவரின் கண்களில் நீர் பனித்தது.. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்தார்.

----------கீதா

புதன், 3 ஜூலை, 2019

விவேகானந்தம் - குறும்படம்

அனைவருக்கும் வணக்கம்.

எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந்த நினைவு. ஆனால் தாமதமாகிவிட்டது. முகநூலில் பகிர்ந்திருந்தேன்.  பல பணிகள், பிரயாணங்கள், மகனின் மருத்துவக் கல்லூரி அட்மிஷன் மனதில் குழப்பங்கள் என்று நேரம் டைட்டாகச் செல்கிறது.

இதோ யுட்யூப் சுட்டி. மலையாள வசனங்கள் ஆங்கில சப்டைட்டிலுடன். விவேகானந்த கேந்த்ர படனம் என்ற கல்வி நிறுவனத்தை வளர்த்த ஒரு சிறந்த மனிதரைப் பற்றியது. நேரம் இருக்கும் போது பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளைப் பதியலாம்.

படத்தில் போதை மருந்து பற்றிய ஒரு உரை வரும் அதைப் பேசுபவர் தான் அம்மனிதர்  பாஸ்கர பிள்ளை சார்.  அவர் தான் இக்கல்வி நிறுவனத்தை நிறுவுபவர்.


மிக்க நன்றி

அன்புடன் துளசிதரன்

செவ்வாய், 4 ஜூன், 2019

விவேகானந்தம்


“விவேகானந்தம்” தயாராகிவிட்டது. அடுத்த வாரத்தில் முன்னோட்டக் காட்சி திரையிடப்படும் என்று நம்புகிறோம். அதன் பின் யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும். எல்லா நட்புகளும், நலன் விரும்பிகளும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படத்தைப் பார்த்து உங்கள் விலைமதிப்பற்ற கருத்துகளைப் பதிய வேண்டுகிறோம்.

இந்தப் படத்தில் நடுவில் தன் மனைவியுடன் இருப்பவர்தான் திரு கே ஆர் பாஸ்கர பிள்ளை. இப்படத்தின் ஹீரோ. கல்வி நிறுவனத்தை நிறுவுபவர். நிஜத்தில் உண்மையான கேரக்டரான அவரேதான் படத்திலும் தற்போதைய பகுதிக்கு வருகிறார்.

நான் இதுவரை எடுத்த எட்டு படங்களில், ஐந்து வரலாறு சார்ந்த படங்கள் மற்றும் இரண்டு தற்போதைய சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்தவை. ஆனால் “விவேகானந்தம்”, வரலாற்றையும், தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உள்ளடக்கிய ஒன்று.

இக்கதை, அரசு உதவி பெற்று நடத்தப்பட்ட பள்ளி ஒன்றில் 1964 ஆம் வருடம் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த,  கே ஆர் பாஸ்கர பிள்ளை என்ற ஆசிரியரைப் பற்றியது. அவர், என்னைப் போன்ற இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் போன்றவர் அல்லர். சுவாமி விவேகானந்தாவைப் பின்பற்றுபவர் என்பதால் அவரது பொன்மொழியான “எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை உழைமின்!” என்பதற்கு ஏற்ப தன் குறிக்கோளை அடையும் வரை அயராது உழைத்தவர். அவர் உருவாக்கிய கல்வி நிலைய வளாகத்துள் ஒரு மாணவன்/மாணவி தனது இருபது வருட கல்வியையும் தொடர்ந்து பெறமுடியும். அதாவது, எல்கேஜி யிலிருந்து மேல்நிலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி வரை பெற்று விடலாம். ஏறத்தாழ 7000 மாணவ மாணவிகள் இந்தப் படன கேந்தரத்தில் கல்வி பயிலுகின்றனர்.

ஆம்! மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வையுடனான அண்ணாமலை கல்வி நிறுவனங்கள், அழகப்பா கல்வி நிறுவனங்கள், விஐடி கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை ஸ்தாபித்தவர்களுக்கு நிகராகப் போற்றப்பட்டு என்றென்றும் நினைவில் வைத்திருக்கப்பட வேண்டியவர்.

தொடக்கப் பள்ளியைத் சொந்தமாக்கிய பின், 50 வருடங்களுக்குள், பல கல்வி நிறுவனங்கள் அடங்கிய ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா என்று தற்போது அறியப்படும் கல்வி நிறுவனத்தை தனது அயராத உழைப்பால் நிறுவி நிலை நிறுத்தியவர்.

இப்படம், அப்படி வளர்ந்த ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா வைப் பற்றிப் பேசுகிறது. கூடவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நிலவும் மிகப் பெரிய ஆபத்தான போதைப் பொருள் பற்றியும், அதிலிருந்து மாணவர்களை மீட்க சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. 

அப்படியாக, இப்படம் “விவேகானந்தம்”, அதன் வரலாறு மற்றும் தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறது. நான் காணும் இவ்விரண்டைப் பற்றியும் கண்டபின் இது போல் உங்களிடம் பகிராமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் இப்படம். படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவிக்க மறந்துவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் யூட்யூப் சானல் Thulasidharan thillaiakathu https://www.youtube.com/channel/UCQ6LZoqGiZ_chztaUkuexlQ



மிக்க நன்றி அனைவருக்கும்!

அன்புடன்
துளசிதரன்