வெள்ளி, 11 நவம்பர், 2016

2016, நவம்பர் 8, 9, 10…………………….!!!???

உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல்; அடுத்த அதிபர் யாராக இருக்கும்? ஹிலாரியா? ட்ரம்பா; முதல் சுற்றில், இனி ஒரு போதும் ஓடி ஹிலாரியைக் கடக்க மாட்டார் ட்ரம்ப் என்று நினைத்திருக்க, தேர்தல் நாள் நெருங்க, நெருங்க ட்ரம்ப் ஆமை ஓடி ஹிலாரி முயலைத் தோற்கடிக்க வாய்ப்பு உள்ளது போல் தோன்றிய அந்த நவம்பர் 8 ஆம் தேதி!!!.....!!!!!

அன்று வழக்கம் போல் ஒவ்வொரு வகுப்பையும் முடித்துவிட்டு இறங்கிய போது ஆசிரியர்கள் அறையிலிருந்து, ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபர் ஆகத் தேவையான 270 எலக்டோரல் காலேஜ் ஓட்டை நெருங்கிக் கொண்டிருப்பதாகச் செய்தி. மதியத்திற்குப் பிறகு ட்ரம்பின் வெற்றி உறுதியாக்கப்பட்டும் விட்டது!

Image result for trump

அப்படியாக, 70 வயதான, உலகளவில் 324வது கோடீசுவரரான, எவருடனும் கை குலுக்கப்பிடிக்காத, (அமெரிக்க அதிபர், ஏறத்தாழ 61/2 லட்டசிற்கும் மேலாகப் பிறருடன் கைகுலுக்க வேண்டுமாம்!!!) குடிக்காத, திரைப்பட நடிகரான, 1987ல் அமெரிக்காவில் அதிகமாக விற்பனையான “ஆர்ட் ஆஃப் தெ டீல்” எனும் தன் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எழுதிய எழுத்தாளருமான, மும்முறை திருமணம் செய்த ஜான் ட்ரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லாவற்றிலும் வித்தியாசமாக இருக்கும் அவர் ஒரு வித்தியாசமான அமெரிக்க அதிபராகத்தான் இருப்பார். பொறுத்திருந்துப் பார்ப்போம். அப்படி அமெரிக்கப் பரபரப்பு ஒருவழியாக முடிந்தது.
Image result for pulimurugan

கடந்த ஒரு மாதமாகப் பாலக்காடு ப்ரியா திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் மோஹன்லால் நடித்த புலிமுருகன் படத்தைப் பார்க்க முடியாத பிரச்சனைக்கு அன்று முடிவு கண்டே தீர வேண்டும் என்ற தீர்மானத்துடன் நானும், ஜோஸ் ஐயாவும் 4.45க்குத் திரையரங்கை அடைந்தோம்.  அப்போதும், நீங்கள் இன்றும் பார்க்க முடியாது என்று சொல்வது போல் நீண்ட வரிசை. அங்கிருந்த திரையரங்குக் காவலரிடம் “நின்னா டிக்கெட் கிடைக்குமா?” என்றதும், “தைரியமா நில்லுங்க, உங்களுக்குக் கிடைக்கும்” என்றார். நான் வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்குச் செல்ல, ஜோஸ் ஐயா பணத்துடன் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் கையை உள்ளே நுழைக்கும் வரை நுழைவுச்சீட்டு கையில் கிடைக்குமா இல்லையா, கை வெளியே வரும் போது சீட்டு கையில் இருக்குமா? என்று பரபரப்பு. கையில் சீட்டைப் பார்த்ததும் மனசெல்லாம் மத்தாப்பு. உள்ளே சென்றால் திரையரங்கின் திரைக்குச் சற்று தள்ளி இருக்கும் வரிசைதான் இருந்தது. மத்தியில் இருக்கைகள் ஏதேனும் இருக்குமா என்று பார்த்ததில், இரண்டு இருக்கைகள் அருகருகே இல்லாமல் சற்றுத் தள்ளி இருந்தன. அங்குச் சென்று இருக்கையிலிருந்தவரிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் நல்ல மனதுடன் இருக்கை மாறிச் செல்லவும் நாங்கள் மகிழ்ச்சியுடன் அருகருகே அமர்ந்து கொண்டோம். 25 கோடி ரூபாய் முதலீட்டில், 331 திரையரங்குகளில் வெளியிட்டு, 100 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்த மலையாளப் படம். நல்ல திரைக்கதை, வசனம், இயக்கம், லாலேட்டனின் இயல்பான நடிப்பு மற்றும் பீட்டர்ஹெய்னின் அருமையான சண்டைக் காட்சியமைப்புகளும் (ஆக்ஷன் கோரியோக்ராஃபி), தாய்லாந்து புலி, கிராஃபிக்ஸ் புலிக் காட்சிகளும் பார்ப்பவரைப் பிரமிக்க வைக்கும் அளவுக்குச் சிறந்த படமாகப் புலிமுருகனை ஆக்கிவிட்டது எனலாம். (சில மாதங்களுக்கு முன்புப் புலியாய் நடித்த விஜய் புலிமுருகனாய் நடித்திட, இப்படம் தமிழிலும் வர இருக்கிறதாம்!)

அப்படியாக ஒரு மாதம் காத்திருந்துப் புலிமுருகனைப் பார்த்த மகிழ்ச்சியில், வழக்கமாக நாங்கள் செல்லும், கோயம்புத்தூர் சாலையில் உள்ள இந்திய காப்பி உணவகத்திற்குச் சென்று சப்பாத்தி + குருமாவை உண்டுவிட்டுப் பணம் கொடுக்கும் போது அதிர்ச்சி! ரூ 500, 1000 நோட்டுகள் இனி செல்லாது, நாளை வங்கிகள், ஏடிஏம் எதுவும் இயங்காது என்று கணக்காளர் சொல்ல மேலும் அதிர்ச்சி! 8.30 மணிச் செய்தியில் பிரதமர் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பை வேண்டியிருக்கிறார் என்றும் அவர் சொல்ல, “இது எப்படித் திடீரென்று சாத்தியம்? 15 லட்சக் கோடி ரூபாய், நாட்டிலுள்ள 130 கோடி மக்களோட கையிலிருக்கற ரூ 500, 1000 நோட்டுகள ஒரே ராத்திரியில செல்லாதுனு சொல்ல முடியும்? நடக்கற காரியமா? சும்மா வதந்தியோ?” என்று நாங்கள் சொல்லிக் கொண்டே வண்டியில் ஏற, என் மனைவியிடமிருந்து அழைப்பு.
“நான் அபிராமியின் நடன ஆசிரியருக்குக் கொடுக்க வேண்டி ஏடிஎம்ல ரூ 20000 எடுத்துட்டு வந்தா இப்படி நியூஸ். இனி என்ன செய்ய?” என்று ஒரே புலம்பல். அவர் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே பேசியதால், 10 ஆம் தேதியிலிருந்து வங்கியில் பணத்தை மாற்றி வாங்கலாம், ஒரு வாரம் ரூ 10000, ஒரு மாதத்தில் ரூ 20000 வரை எடுக்கலாம், பேருந்தில் பயணம் செய்யவும், ரயில் சீட்டு எடுக்கவும், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்கவும், மருந்தகத்தில் மருந்து வாங்கவும் பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம் எனவும், இனி என்ன செய்வது என்ற குழப்பம் மாறியது.

வீட்டிற்குப் போகும் வழியில் மருந்தகத்தில் மகன் அருணுக்குத் தேவையான சில மருந்துகளை வாங்கி ரூ 1000த்தைக் கொடுத்து, மீதி ரூ 600 கிடைத்ததும் ஒரு சிறு நிம்மதி பிறந்தது. போகும் வழியில் வழக்கமாகப் பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசை. பையனிடம் ரூ 500ல் ரூ200க்கு அடித்தால் மீதி கிடைக்குமா என்றதும் காத்திருந்தால் கிடைக்கும் என்று சொன்னாலும், வரிசையில் நின்றவர்கள் ரூ 100க்கு அடிக்க ரூ 500 நீட்டியதால் எல்லோரையும் திரும்ப அனுப்பிவிட்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தப் பையன் பங்கின் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்ப வரும் போது ரூபாய் 300 கொடுத்தான். அலுவலகத்தில் நான் கொடுத்த ரூ 500 ஐச் சோதித்திருக்க வேண்டும் அல்லது அங்குப் பல 100 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டும். எப்படியோ என் கையில் 12, 100 ரூபாய் நோட்டுகளும், 3, 50 ரூபாய் நோட்டுகளும், சில 10 ரூபாய் நோட்டுகளும் இருக்க சமாதானமாகத் தூங்கினேன். மறுநாள் பள்ளியில் இந்தச் செய்திதான் ஓடியது. மாலை 6 மணி வரை எஸ்பிஐ, எஸ்பிடி வங்கிகளில் ரூ 4000 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தகவல் கிடைத்தது. முகநூலைத் திறந்தால், ஆவி ரூ 2000 நோட்டுகளை விரித்துக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்! அது போல் ரூ 2000 நோட்டு ஒன்று மாலை 5 மணிக்கு மேல் நமக்கும் கிடைக்கும்தானே என்ற மன மகிழ்வில் வகுப்பிற்குச் சென்றேன்.

இந்த அதிரடி நடவடிக்கையினால் மது விற்கப்படும் லிவரேஜர் கார்ப்பரேஷன் டெப்போக்களில்/கிளைகளில் கூட்டமே இல்லையாம்! 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு “க்வாட்டரேனும்” கிடைக்காதா என்று ஏக்கத்துடன் சில குடிமகன்கள் பார்த்துக் கொண்டிருக்க, ரூ 100 நோட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு க்வாட்டர் வாங்கி, அந்தக் குடிமகன்களை ஏளனத்துடன் பார்த்துக் கொண்டு வீர நடை போட்டுச் சென்ற காட்சிகளும் நடை பெற்றதாம். அங்கும் சில தந்திரசாலிகள் ரூ 100 நோட்டுகளுடன் ரூ 1000த்திற்கு ரூ 800ம், ரூ 500 க்கு ரூ 400ம் கொடுத்து லாபம் கண்ட காட்சிகளும் அரங்கேறியதாம். பெரிய பெரிய நகைக்கடைவியாபாரிகளும், ஹவாலாக்களும் இப்படியான வியாபாரம் நடத்திய செய்திகளை வாசித்தபோது, இந்தச் சாதாரண மக்கள் நடத்தியது ஒன்றும் பெரிய வியப்பான நிகழ்வு இல்லைதான்.
இந்த அதிரடி நடவடிக்கையால் நிகழ்ந்த சில சுவாரஸ்யங்கள். திருவனந்தபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் மூன்று கோணிப்பைகளில் ரூ 69,320க்கு நாணயங்களைக் கொடுத்துத் தன் இடத்தைப் பதிவு செய்து வாங்கியிருக்கிறார். கர்நாடகா கோலாரில், ஒரு எம் எல் ஏ, கிராமத்திலுள்ள எல்லோருக்கும் ரூ 3 லட்சம் வீதம் கடனாகப் பொதுக் கூட்டம் கூட்டிக் கொடுத்திருக்கிறாராம். ஊடகங்களில் மேடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நோட்டுகளின் படங்கள் வெளியானதும், வருமானவரித் துறைக்கு அவரைப் பிடித்து வரி வசூலிக்க எளிதாகிவிட்டது. ஒரு சில அரசியலாளர்களைத் தவிரேல்லோருமே கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்தைந்த முடிவு நல்லதே என்று சொல்லுவதைக் கேட்கும் போது இந்திய அரசையும், மக்களையும் நினைத்துப் பெருமைப்பட கிடைத்த இந்த அரிய வாய்ப்பை எண்ணி உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்.

Image result for rs 2000 note

பள்ளியிலிருந்து மாலைதான் வெளியேற முடிந்தது. வழியில் இருந்த வங்கிகளில் இரும்புக் கதவு பாதிக்குக் கீழ் இறக்கப்பட்டிருக்க, ஒரு வங்கியில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கக் கண்டதும் அங்கு நானும் சென்று எனது ஆதார் அட்டையின் நகல் எடுத்துக் கொடுத்து வங்கியில் தந்த விண்ணப்பத்தை நிரப்பி, நான் வைத்திருந்த பழைய நோட்டுகளின் எண்களை எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். வரிசையில் எனக்கு முன்னால் ஒரு முதியவர் ரூ 500 மாற்றிக் கொண்டு சென்றார். இன்றைய செய்தி, தலச்சேரியில் ஒருவர் வரிசையில் நின்றவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார் என்றும், மற்றொரு முதியவர் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து இறந்தார் என்றும் கேட்டதும், இப்படி, கையில் அகப்பட்டுப் போன 1000, 500 ஐ மாற்றுவதற்குப் படும் சிரமங்களை நினைக்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலையைச் செம்மைப்படுத்த, கறுப்பு, ஊழல் மற்றும் குழாய்ப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை, நோய் அகல கசப்பான மருந்தை எடுத்துக் கொள்வது போல் எல்லா இந்தியர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கை இன்னும் பல சட்டத்திட்டங்களோடு அமல்படுத்தபட்டால்தான் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும். பண ரீதியாக இல்லாமல் எல்லாமே அட்டை அல்லது காசோலை, அல்லது இணையவழியில் சரியான ஆதாரங்களுடன், கணக்குவைத்துக் கொள்ளப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் வலுவாக அமலாக வேண்டும்.

எனது கையிலிருந்த 3 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 2, 500ரூபாய் நோட்டுகளும் எனக்கு விடை சொல்லிப் பிரிந்தன. 20, 100 ரூபாய் நோட்டுகளும், எலக்ட்ரானிக் நோட் என்று சொல்லப்பட்ட ரூ 2000மும் என் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால், 2000 ரூபாய் நோட்டைப் பெற்றதும் அதில் எந்தச் சிப்பும் இல்லாதது சற்று ஏமாற்றத்தைத் தந்தது என்றாலும் புது நோட்டைப் பெற்ற ஆறுதலும், மகிழ்வும் இருந்தது. சிப்புடன் வருவதே அதைக் கள்ள நோட்டாக அடிக்க முடியாமல் என்பதற்காகச் சொல்லப்பட்டது!! 2016, நவம்பர் 8, 9, 10 தேதிகள் “மற்ற சாதாரண நாட்களைப் போல் அல்ல நாங்கள்” என்று மனதில் ஒரு பதிவை ஏற்படுத்திவிட்டுக் கடந்தன!

படங்கள் இணையத்திலிருந்து - நன்றி

(வேலைப்பளு காரணமாக இருவருமே இணையம்பக்கம் வர இயலவில்லை. நண்பர்கள் , சகோதரிகள் எல்லோரது பதிவுகளும் நிறைய இருக்கின்றன.  விரைவில் வந்து விடுபட்ட பதிவுகளை எல்லாம் வாசிக்கின்றோம். நிறைய இருப்பதால் மெதுவாக வாசிக்கிறோம்.)






வெள்ளி, 28 அக்டோபர், 2016

எதிர்காலத் தலைமுறைக்கு நாம் என்ன கொடுக்கிறோம்?

“என்னங்க, எப்ப கடைக்குப் போகலாம்?” மனைவியின் குரல் சமையல் அறையில் இருந்து ஒலித்தது.

மகளுக்குப் பட்டுப்பாவாடை, பையனுக்கு ஜிப்பா, தனக்குப் பட்டுப்புடவை என்று துணிப் பட்டியலும், தங்கக் காதணி, கல் வைத்த அட்டிகை என்று நகைக்கடைப் பட்டியலும் தயார் ஆகிக்கொண்டு இருந்தன. தீபாவளிப் பண்டிகை வந்து கொண்டு இருக்கிறதே!!

கணவனும் ஒரு வாரமாக இன்று நாளை என்று ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொண்டு தவிர்க்க முயற்சி செய்துதான் வருகிறான். பெரிய செலவு இல்லாமல் சிறியதாகச் செலவு செய்தால் போதாதா என்று. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் ரும். இருந்தாலும் முடியாது என்று சொல்ல முடியுமா? மனைவி, குழந்தைகள் தேவையைப் பூர்த்தி செய்வது தானே கணவனின் கடமை? “எப்படி” என்பது இல்லாமல் “எப்படியாவது” என்பது தானே வழக்கமாக உள்ளது. நடுத்தர வர்கத்துக் குடும்பங்கள் படும் பாடு இது தான். 

கணவனும், மனைவியும் தாங்கள் பெறும் ஊதியம் அனைத்தையும் நாளைய தேவைக்காக அசையா சொதுக்களாகவும், நகைகளாகவும் வாங்கிச் சேமிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இன்றய மகிழ்ச்சிக்காக வாழ மறந்து விடுகிறார்கள். இதே வழக்கமாகி, எப்படி, எங்கிருந்து சொத்து வந்து சேரும் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சுற்றம், சொந்தம், அன்பு, பாசம் எல்லாம் இந்தத் தேடலில் மறைந்து விடுகிறது. படித்தவர்களும் இதில் அடக்கம்.

இப்படிப் பார்த்துப் பார்த்துச் சேர்த்து வைத்த சொத்தைச் சரி பார்த்து 60 வயதில் “அப்பாடா” என்று உட்காரும் போது அதை அவர்கள் அனுபவிக்க முடிவதில்லை. “இனிமேல் நமக்கு என்ன இருக்கிறது, எல்லாம் நம் குழந்தைகளுக்குத்தான்” என்று யோசித்து ஓய்வெடுக்கும் நிலையில், மருமகள், மகன் காதில் முணுமுணுப்பது கேட்கிறது.

“உங்க அம்மாவிற்கு இந்த வயசில் எதற்கு இவ்வளவு நகை? இந்த வயதில் இந்த மினுக்கல் தேவையா?” தானும் நாளை ஒரு வயதான அம்மாவாக மாறப் போகிறோம் என்ற நிதர்சனமான உண்மையை உணராமல் வார்த்தைகள் சீறிப்பாயும்..

“அம்மா, அப்பா சேர்த்து வைத்த சொத்து பிள்ளைகளுக்குதானே. அதற்கு எதற்கு, அவர்கள் காலம் முடியும் வரை காக்க வேண்டும். இப்போதே பிரிக்கச் சொல்லுங்கள்” அப்பா, அம்மாவின் சொத்தோ அல்லது வழி வழியாக வரும் குடும்பச் சொத்தோ இருந்தால் எப்படிப் பங்கு போடலாம் என்பதில் தான் மகன், மருமகள்களின் எண்ணம் உள்ளது. இது பல வீடுகளில் நடக்கும் யதார்த்தம். மகள்களும் கூட இப்படிப் பேசுவதுண்டு, அதே நேரம், எல்லா மகன்களையும், மருமகள்களையும், அப்படிச் சொல்ல முடியாதுதான்.

பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளின் நன்மையை மட்டும்தான் நினைப்பார்கள். இப்போது இந்த நிலை மாறி, பெற்றோர்கள் எப்போது தன் சொத்து தன்னை விட்டு போய் விடுமோ, எப்போது நம் மரியாதை பறி போகுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

மனித நேயம், மனிதாபிமானம், அன்பிற்காக உறவு, உறவிற்காக அன்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. தன்னைப் பற்றி மட்டுமே மனதில் வைத்து வாழும் மக்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த நிலமை மனித வாழ்வில் ஒரு சுழற்சி தான். இன்று மகனாக இருப்பவன்  நாளை அப்பாவாக மாறுகிறான், இன்று மகளாக இருப்பவள் தான் நாளை மருமகளாகவும், அம்மாவாகவும், மாமியாராகவும் மாறுகிறாள். 

தான் தன் பெரியோர்களை நடத்தும் விதம்தான் நாளை தனக்கு வந்து சேரும் என்பதை மறந்து விடுகிறார்கள். இன்று இவர்கள் கற்றுத் தருவதைதான் நாளை இவர்களின் மகன்களும், மகள்களும் பின்பற்றப் போகிறார்கள். அடுத்த தலைமுறையினருக்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உலகியல் பொருட்களா இல்லை ஒரு மனிதனை உயர்த்தும் நல்ல குணங்களையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையுமா? அடுத்த தலைமுறையினருகு பெற்றோர் அல்லவா எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

ஒரு முறை, ஒருவர், ஒரு கருத்து சொன்னார். காப்பியின் ருசி அதன் தன்மயில் தான் இருக்கிறது. நாம் அதைச் சாதாரணக் குவளையில் குடித்தாலும் சரி ஆடம்பரக் குவளையில் குடித்தாலும் சரி, காப்பியின் தன்மையும், சுவையும் மாறப் போவது இல்லை. என்னதான் ஆடம்பரமானக் குவளையில் இருந்தாலும் காப்பி நன்றாக இல்லை என்றால் மக்கள் அதை ருசிக்கப் போவது இல்லை. அதே போல்தான் மனித வாழ்க்கையும். நாம் காப்பி போல. நம்மிடம் உள்ள சொத்துக்கள் குவளை போல. நமது நற்குணங்களால் நம்மை நாம் நல்ல தன்மை உள்ள காப்பியாக மாற்றிக்கொள்ள வேண்டும். வெறுமனே குவளையை மட்டும் ஆடம்பரமாக ஆக்குவதால் பயன் இல்லை. நா சுவைக்க நல்ல காப்பி தேவை. அது போல நம் வாழ்வு ருசிக்க நமக்கு நல்ல குணம் வேண்டும். சொத்து தானாக வரும். வரவில்லை என்றாலும் வாழ்க்கை ருசிக்கும்.

ஆகவே விழித்துக்கொள்வோம். நம் தலைமுறையினருக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், நல்ல சுற்றத்தை வளர்த்துக்கொள்ளும் அன்பையும் கற்றுக்கொடுப்போம். பொருள்முதல்வாத இச்சையை விட மனித நேயமும் மனிதாபிமானமும்தான் ஒரு மனிதனைக் கடைசி வரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். நேரம் கை நழுவிப் போகும் முன் விழித்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

(நாலுகால் செல்லங்களுக்கும் மதிப்புக் கொடுப்போம். சுற்றுச் சூழலையும் பாதுகாப்போம்)

--கீதா