வியாழன், 13 அக்டோபர், 2016

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 2

மெரினா மெரினா ......சொக்க வைக்கும் மெரினா......

சமீபத்திய ஒரு மழை நாளில், அந்தி மயங்கும் மாலைப்பொழுதில். உறவினர் பெண்ணுடன் மெரினாவிற்குச் சென்றிருந்தேன். மாலை 5.30 மணி. உலக உருண்டையின் இப்பகுதியில், தற்காலிகத் தாழ்வுமண்டல அழுத்தத்தின் காரணமாக, மழை நாளாகிப் போனதால், பகலவன் சற்றுச் சோர்வாகத் தனது கடமையை ஆற்றி, தனது நாளை முடித்துக் கொண்டு நிலவிற்கும், இருளிற்கும் கொடுத்துவிட்டு, உலகின் மறு பகுதிக்குக் கடமையாற்றச் செல்வதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தாலும், கார்முகில் வானை நிறைத்திருந்ததால், பகலவனுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஓய்வு கிடைத்த மகிழ்வில் விலகிட அந்த அந்தி மயங்கும் நேரத்தைக் கடல் அலையின் ஓசையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன். 

மெரினா நங்கை அழகுதான் என்றாலும், தன்னை, தனக்குப் பிடித்த கார் முகில் சூழ்ந்திருந்தக் காரணத்தால் அன்று சற்றுக் கூடுதலாக ஒய்யாரமாக இருந்தாளோ என்று தோன்றியது. மிகவும் துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்.  வாருங்கள் குழந்தைகளே! என்னோடு விளையாட வாருங்கள்! என்று மீண்டும் மீண்டும் குதித்து வந்து அதிக தூரம் வந்துக் கரையின் மணல் மேட்டைத் தொட்டுவிட்டுச் சென்றாள். கபடிக் கபடிக் கபடி வாருங்கள்... உங்களால் என்னைக் கட்டிப் பிடித்துத் தள்ள முடியுமா? இதோ பாருங்கள் நான் உங்கள் அனைவரையும் அணைத்துச் செல்ல முடியும் என்று அவள் வந்து அனைவரையும் தழுவிச் சென்றது, அவள் கபடி விளையாடுவது போல் தோன்றியது. தினமுமே கபடிதானே!!!! 

இப்படி ரசித்துக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தால் என்னுடன் வந்த பெண்ணைக் காணவில்லை. எங்கே போயிருக்கக் கூடும்? என்று எண்ணிக் கண்ணைச் சுழற்றினால், அப்பெண் அங்கு இருக்கும்  தின்பண்டங்கள் கடையை மேயச் சென்றிருந்தது தெரிந்தது. என்னையும் அழைத்தாள். எனக்கோ இந்த ஒய்யார நங்கையை விட்டுச் செல்ல மனதில்லை. எனவே, அவள் அவளது வேலையைத் தொடரட்டும், நாம் நமது பணியைத் தொடர்வோம் என்று நினைத்து, வரவில்லை என்று கையசைத்துக் காட்டிவிட்டு, மெரினா நங்கையின் அழகை மனத்திரையில் சேமித்தால் நான் மட்டும்தானே ரசிக்க முடியும்? எனது மூன்றாவது விழியில் சேமித்தால் எல்லோரும் ரசிக்க  முடியுமே! யாம் பெற்ற இன்பம் பெறுக நம் வலையுலக நண்பர்கள் என்று சேமிக்கத் தொடங்கினேன். தொழில்நுட்பம் அவ்வளவு இல்லாத சாதாரணமான எனது நிழற்படக் கருவியில் இருக்கும் சில ஆப்ஷன்ஸை - விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்வது வழக்கம். அப்படி எடுத்தவைதான் இவை. இதோ...

இப்படம் "ஃப்ளாஷ்" உபயோகித்து "சீன்" மோடில் எடுத்த போது வந்தது. இது இப்படித்தான் வருமா என்று தெரியவில்லை. ஆனால் வந்த படம் பிடித்திருந்தது. இதோ போன்று ஒரு பாடல் காட்சி பாக்கியராஜ் இயக்கி, அவரது மகள் நடித்த பாரிஜாதம் எனும் படத்தில் வந்த நினைவு. ஆனால் அது மிக மிக உயர்தரமான ஒளிப்படக் கருவி என்பது வேறு!! எடுத்த விதமும் வேறு என்பதும் தெரிகிறது! அந்தக் காட்சியிலும் இதே கிட்டத்தட்ட இதே வண்ணம்தான் வரும் என்று நினைவு!


இனி வருபவை வேறு! ஃப்ளாஷ் இல்லாமல் நங்கையின் ஒவ்வொரு துள்ளல் மற்றும் தழுவலை அடுத்தடுத்து எடுத்தேன்.






கீழே இருக்கும்  அனைத்துப் படங்களும் "ஸாஃப்ட் மோட்" ல் எடுக்க முயற்சி செய்தேன்.  ஏதோ, திரைப்படங்களில் வரும் தேவலோகத்துக் காட்சி போல எனக்குத் தோன்றியது! இதுவும் எனக்குப் பிடித்திருந்ததால் இங்குப் பகிர்கின்றேன்.






படங்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புகைப்படம் எடுப்பதில் நிபுணத்துவம் உள்ளவர்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும்.  மீண்டும் அடுத்த, எனது மூன்றாவது விழியின் பார்வையில் சந்திப்போம்!! 

(பதிவுகள் பல பகுதி எழுதப்பட்டுக் காத்திருக்கின்றன. ஆனால், எழுத முடியாத அளவிற்கு வேலைப்பளு மற்றும் மூளையும் அயர்ச்சி அடைந்துள்ளது. எனவே இதைப் பகிர்ந்துள்ளேன்!)

-----கீதா

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகப் பொழுது போகிறது!!

கட்செவிக் குழுவில் (வாட்சப்பிற்குத் தமிழில் இப்படியான அர்த்தமா? புரியவில்லை) சமீப காலமாக வரும் பல செய்திகள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் உலா வருகின்றன. 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நம் மக்களுக்கு நன்றாகப் பொழுது போகிறது. மெல்லுவதற்கு நல்ல அவல் கிட்டியுள்ளது. மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் போது கூட வரலாற்றை இப்படிப் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், இப்போது வரலாறு எல்லாம் பேசப்படுகிறது! 

யார் இப்படி எழுதி உலகம் முழுவதும் கட்செவிக் குழுவில் உலா வர வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதை உருவாக்கியவருக்கு நல்ல கற்பனைவளம். நகைச்சுவை உணர்வு. நல்ல ஆராய்ச்சி. அது மட்டுமல்ல இவ்வளவு பெரிய செய்தியை எப்படி அவர் அலைபேசியில் அடித்தாரோ. நல்ல பொறுமைதான். இதோ அந்தச் செய்தி. கொஞ்சம் சேர்க்கப்பட்டதுடன்…

“கிமு 35 ஆம் ஆண்டு…..இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்…..கிரேக்க பேரரசர் ஜூலியஸ் சீசர் மரணப்படுக்கையில் இருக்க, அவரின் உடல்நலம் பற்றி வெளியே தெரிந்தால் அண்டை நாட்டு மன்னன் கிரேக்கத்தைக் கைப்பற்ற முயலக் கூடும் என்பதால் இரகசியமாக அரண்மனையில் வைத்தியம் நடக்கிறது.

“அரசர் நலம் பெற்று விரைவில் மக்கள் முன் தரிசனம் தருவார்” என அறிவிக்கிறார் பேரரசி கிளியோபாட்ரா.  இருந்தாலும் மக்கள் மத்தியில் கவலை.

மருத்துவக் கடவுளை நோக்கி ஓடுகிறார்கள். ஒலிம்பஸ் குன்றின் அடிவாரத்தில் மக்கள் குவிகிறார்கள். இருந்தாலும் குன்றின் மேல் ஏற மக்களுக்கு அனுமதியில்லை. கீழே இருந்தவாறே சூரியனைத் தொழுகிறார்கள். ஏனென்றால் சூரியனுக்கான கிரேக்கக் கடவுள்தான் மருத்துவத்திற்கும் கடவுள்.

மந்திரி பிரதானிகளுடன், தலைமை மருத்துவக் குரு குன்றின் மேலே ஏறி, மருத்துவக் கடவுளை நோக்கிப் பூசை செய்தார். திடீரென அவர் கண்களில் பிரகாசம். மந்திரிகள் வினா எழுப்ப,

“மருத்துவக் கடவுள் என் கண் முன் தோன்றினார். மன்னர் குணமாவார் எனக் கூறினார்.”

“எங்கள் கண்களுக்குத் தெரியவில்லையே” - மந்திரிகள்

“யாருடைய மனைவி பத்தினியோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிவார்.” எனக் கூறிவிட்டு குரு புறப்பட்டார்.

மந்திரிகள் தங்களுக்குள், “இப்போது நம் கண்களுக்குத் தெரியவில்லை எனக் கூறினால் நம் மனைவி பத்தினி இல்லை என ஆகிவிடுமே. என்ன செய்வது” என்று பயந்துக் குழம்பினர். அதில் அனுபவசாலியான மந்திரி ஒருவர்,

“நாம் எல்லோருமே கடவுளைப் பார்த்துவிட்டதாகக் கீழே சென்று மக்களிடம் சொல்லிவிடுவோம்” என்று சொல்ல, எல்லோரும் கீழே வந்து மக்களிடம்,

“மருத்துவக் கடவுளைக் கண்டோம். மன்னர் விரைவில் குணமாகிவிடுவார் என்று கூறினார்.” என்று தெரிவித்தனர்.

இருந்தாலும் மக்களிடம் குழப்பம் நீடித்தது. தலைமைத் தளபதி வந்து மலையில் ஏறி தானும் கடவுளைக் கண்டதாகக் கூறினார்.

இதுதான் சாக்கு என மன்னனால் ஓரம்கட்டப்பட்டு இருந்தக் குறுநிலமன்னன் தாலாமாவல்ஸ் ஒலிம்பஸ் மலைக்கு வந்தார். மலையின் இரண்டாம் சுற்று வரை சென்றதாகவும், கடவுளைப் பார்த்தவர்கள் மன்னர் குணமாகிவிடுவார் எனக் கூறியதாகவும் சொன்னார்.
மன்னர் குணமானாரா இல்லையா….விரைவில்…

மர்மம் தொடரும்!!!! 

கிரேக்கப் புராணங்களின் படி மருத்துவக் கடவுளின் பெயர் என்ன தெரியுமா….?

“அப்போலோ”!!!!

இதனை மக்கள் எல்லோரும் ஒவ்வொரு குழுவிற்காகச் சொல்லச் சொல்ல இந்தச்செய்தி மீண்டும் எங்கிருந்து தொடங்கியதோ அந்த இடத்திற்கே… மருத்துவக் குருவின் செவிக்கே சென்றதாம்….

சீசரின் காலத்தில் தோன்றிய இச்செய்தி செவி வழியாக, வழி வழியாகச் சொல்லப்பட்டு இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் கட்செவி வழியாக மீண்டும் முக்கியமானவர்களின் கட்செவியில் வந்து விழ….கவலை தோய்ந்த முகத்தில் கூடச் சிரிப்பு அரும்பியதாம்.!!!!

“தம்பி அந்த சிவகார்த்திகேயன் தம்பிய நர்ஸ் கெட்டப்புல அப்போலோ ரெண்டாவது ஃப்ளோருக்கு அனுப்பி என்னனு பார்க்கச் சொல்வோமா” இது யாருடைய வசனமாக இருக்கும் என்று நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள்!!

“நீண்டகாலம் தங்கியிருக்கணுமா??? அப்போலோக்காரன் சொத்தையே எழுதி வாங்கிருவானே??
ஆனா, அதுல பாருங்க உள்ளார போயிருக்குறது அப்போலோவையே………………….சரி விடுங்க…. செம்ம டிவிஸ்ட்ல..”

எப்படியோ மக்களுக்கு நல்ல பொழுது போக்கு.

(இதன் உரிமையாளருக்கு நன்றி..)

---கீதா





ஞாயிறு, 2 அக்டோபர், 2016

நிழற்படங்களும் எனது எண்ண அலைகளும்



சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றிற்கு மண்டபத்தில் உள்ள அறைகளுக்குப் பூட்டு வேண்டும் என்று எங்கள் உறவினர் கேட்க, வெளியில் வாங்க வேண்டாம் எங்கள் வீட்டில் இல்லாத பூட்டா, சாவியா என்று வெற்றுச் சவடால் விட்டு வீட்டிற்கு வந்து பூட்டுகளையும், சாவியையும் எடுக்க முனைந்தால், பல வருடங்களாகப் புழங்கி வந்த பூட்டுகள் என்னை நோக்கி, "எனக்கு ஏற்ற சாவி எது என்று கண்டுபிடி  பார்க்கலாம். உனக்கு ஒரு சவால்" என்று என்னைப் பார்த்துக் கெக்கலித்தன. ஒரு நான்கு பூட்டுகள், அதற்கேற்ற சாவிகள் கண்டு பிடித்துத் தேற்றி விட்டேன். ஹும் இன்னும் தேடிப் பிடித்துக் கொண்டே இருக்கிறேன்!! 

பூட்டுகளை அதற்கேற்ற சாவிகளுடன் தனித்தனியாக வைத்துக் கொள்வது எனது வழக்கம். யாரேனும் கேட்டால் கொடுத்துவிடுவேன். ஆனால் மீண்டும் வரும் போது பூட்டு அல்லது சாவிகள் மட்டும் வரும். இல்லை என்றால் சோடி சேராத பூட்டும், சாவியும் வரும். அப்படியாகச் சேர்ந்தவைதான் இவை அனைத்தும்! புத்தகங்கள், சிடிக்கள் கொடுத்தால் எப்படி ஒழுங்காகத் திரும்பி வராதோ அப்படித்தான் இவையும். இதை எழுதி வெளியிடுவதற்குச் சேமித்து வைத்திருந்த சமயத்தில் நண்பர் கோ அவர்களின் பதிவு  டைட்டானிக் சாவிகள்!! வாசிக்க நேர்ந்தது. வெனிஸ் நகரில் பூட்டுகளினால் விளைந்த மூடநம்பிக்கையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நண்பர் விவரித்திருக்கிறார்.  


இந்தத் தடுப்பு எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் காவல்நிலைய சோதனைச் சாவடி அருகே இருந்தது. எனக்கு இதனைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. சென்னை மாநகர போக்குவரத்துக் காவலுக்கும் மலபார் தங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுந்தது. உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்களேன். 

இதைப் பார்த்ததும் ஹும் நம் மக்கள் திருந்தப் போவதே இல்லை என்று தோன்றியது. படித்தவர்களும் இங்கு குப்பை எறிகிறார்கள்.  மாநகராட்சியும் எச்சரிக்கை விடுத்ததோடுத் தன் கடமை முடிந்தது என்று நினைத்திருக்கிறது போலும். அந்த எச்சரிக்கப் பலகையில் உள்ளது போல் மாநகராட்சி எந்தத் தண்டனையும் கொடுக்கவில்லை. மட்டுமல்ல இந்தக் குப்பை எங்கள் பகுதி காவல் நிலையத்து மதிற்சுவர் அருகில்!!! 

இவள் எங்கள் பேட்டைத் தலைவி 
இவள்தான் மூக்கழகி! வாளிப்பாக இருந்தவள். எங்கள் பேட்டைப் பைரவர்களின் தேர்தலில் மூக்கழகிதான்  தலைவியானாள்! தலைவியின் இப்போதைய நிலையைப் பாருங்கள்! பாவம். பேட்டையே அடங்கிக் கிடக்கிறது. குட்டிகள் போட்டாயிற்று. அவளுக்குச் சரியான சாப்பாடு இல்லாமல் வாடிப் போயிருந்தாள். சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த ஒரு வாரமாக அவளைக் காணவில்லை. சிலர் அவள் இறந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள். சிலர் அவளுக்கு ஏதோ நோய் என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் அவள் இல்லாதது நன்றாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால்,  கறுப்பழகி காத்துக் கொண்டிருக்கின்றாள். மூக்கழகி இல்லை என்றால் தான் தலைவியாகிவிடலாம் என்று ரவுசு பண்ணிக் கொண்டிருக்கின்றாள்!

பாவம் எங்கள் பேட்டைத் தலைவிக்குச் சொத்துச் சேர்க்கத் தெரியவில்லை! அப்பிராணி! அவளது அல்லக்கைகளையும் காணவில்லை. ஒரு வேளை தலைவி சீக்கிரம் உயிர்த்தெழுந்து வர வேண்டும் என்று அவர்கள் தெய்வமான பைரவருக்கு வேண்டிக் கொண்டு அங்கப்பிரதட்சிணம் செய்யப் போயிருக்கிறார்களோ என்னவோ??!!!! ஏதேனும் ஜோசியர் எங்கள் பேட்டைத் தலைவி பற்றி ஆரூடம் சொல்லுவாரா? சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு வேளை நாலுகால் ஆர்வலர்கள் யாரேனும் அவளை சிகிச்சைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்களோ என்னவோ. அங்கு அவள் தன் பேட்டையைத் தொடங்கிவிட்டாளோ?! இவளைக் காணவில்லை என்பது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே மர்மமாக இருக்கிறது. எனக்கும் தான். எல்லோருக்கும் அத்தனைச் செல்லம்!

Image result for street dog fighting for area
இந்தப் படம் இணையத்திலிருந்து
தெரு நாய்கள் தங்கள் எல்லையைக் குறித்துக் கொண்டு, அடுத்த பகுதி நாய்களைத் தங்கள் பகுதிக்குள் வர விடாமல், "இது என் ஏரியா உள்ள வராதே" என்பது போல் சண்டை போடுவதை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். பண்டு தொட்டே மனித சமூகம் ஒவ்வொன்றும் தங்கள் எல்லையை வகுத்துக் கொண்டுதான் வாழத்தொடங்கினார்கள். அப்படி வளர்ந்த சமூகங்கள் இன்று நாடுகளாகி, அரசியல், ஆட்சி என்று விரிந்திருக்கிறது. மேலே சொல்லப்பட்டவை ஐந்தறிவு படைத்தவை. 

ஆனால், ஆறறிவு என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதும் எத்தனைதான் மண் ஆசை என்பது பண்டு தொட்டே இருந்து வரும் ஒன்று என்றாலும், பண்பாடு, நாகரீகம், தொழில் நுட்பம் என்று வளர்ந்து பொருளாதாரமும் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும் மனிதனின் மண் வெறி மட்டும் இன்னும் அடங்கவில்லை என்பது நிரூபணம் ஆகிக் கொண்டே வருகிறது.  

இதோ நம் இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் பதட்டம். போருக்கானப் பதட்டம் எல்லையில் மட்டுமின்றி எல்லையில் இருக்கும் மாநிலங்களிலும், தலைநகரிலும் நிலவுகிறது. போர் என்றால் அதன் பின் விளைவுகளைப் பற்றி நாம் எல்லோருமே அறிவோம்.  போரில் வெற்றி, தோல்வி என்பதை விட இரு தரப்பினருக்குமே அதீத அழிவுகள் ஏற்படத்தான் செய்யும். உயிர் சேதத்திலிருந்து, பொருளாதாரச் சேதம் வரை, நடைமுறை வாழ்க்கையே மாறி, இந்தப் பேரழிவிலிருந்து இரு தரப்பினருமே மீண்டு வருவது என்பதற்குப் பல வருடங்கள் ஆகிவிடும். ஆறறிவு படைத்தவர்கள் இரு தரப்பினரும் சிந்திக்கலாம். சிந்திக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஒன்று நிகழாமல் இருக்கும் என்று நம்புவோம். 

-----கீதா






வெள்ளி, 30 செப்டம்பர், 2016

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 1




பங்களூருக்குப் பேருந்தில் சென்ற போது .....மொட்டைக் குன்று என்றாலும் அழகுதான்
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த இரு மலர்களும் பங்களூர் உறவினர் வீட்டில்
மலரே உன் இதழ் மடித்து என்ன சொல்ல வருகிறாய்?! "என்னைக் கொய்து விடாதீர்கள்" என்றுதானே?!!
மலர்ந்தும் மலராத பாதி மலர்....மலர்ந்திட்டால் பிரித்திடுவரே மாந்தர்.....மலர்ந்திட வேண்டுமோ என்று யோசிக்கின்றதோ
------------------------------------------------------------------------------------------------------------------- 
பாண்டிச்சேரிப்பயணம்
பாண்டிச்சேரிப் பயணத்தின் போது ஓடும் பேருந்திலிருந்து.............   சூரியக் கதிரில் தகதகவென மின்னிடும் காயல்

உப்பில்லாப்பண்டம் குப்பையிலே - பாண்டிச்சேரி செல்லும் வழியில் உப்பளங்கள் 
பாண்டிச்சேரி எல்லைக்கருகில் இருக்கும் சுங்கச் சாவடி - அழகுப் பெட்டகம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இதோ இவை எல்லாம் என் வீட்டருகில்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

நான் யாரென்று தெரிகிறதா? படுத்துக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு யோசித்துப் பாருங்கள்.......


மறைந்திருக்கும் மர்மம் என்ன சூரியனாரே! கார் மேகங்கள் உமைச் சிறைப்படுத்தியதோ

 பௌர்ணமி நிலவின் வெட்கம்!
           கோயில் வளாகத்தின் பசுமை அரங்கு    
            
அடுத்த விழியின் பார்வையில் சென்னையின் அழகுடன் வருகிறேன்.....சென்னையின் அழகா? அது என்ன? என்று தோன்றுகிறதா!! காத்திருங்கள்....

இப்படங்கள் எல்லாம் வெங்கட்ஜி, செந்தில் சகோ அவர்களின் படங்களுக்கு நிகர் இல்லைதான்.  எனினும், எனது ஆர்வ மேலீட்டினால் என் மூன்றாவது கண் வழிச் சிறைப்படுத்தியவை!! 

------கீதா





செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சேவையும் என் நினைவுகளும்

(நெல்லைத் தமிழன் அவர்கள் "சேவை" செய்யும் குறிப்பை எங்கள் ப்ளாகில் "திங்க" வில் கொடுத்திருந்ததால், எங்கள் தளத்தில் இதனைக் குறித்து என் நினைவுகளைப் பதிவாக்கியது நினைவுக்கு வர அதை இங்கு மீள் பதிவாகத் தருகிறேன்

சேவை! எனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தத்தைப் பற்றிய என் நினைவுகள்.

இப்போதெல்லாம், பெரும்பாலான கல்யாணங்களில், காலை உணவு அல்லது மாலையில் பரிமாறப்படும் உணவு வகைகளில் ஒன்றாக சேவை இடம் பெறுகிறது.  நன்றி: ரெடிமேட் சேவை ப்ரான்ட்ஸ். இது நொடியில் தயார் என்று எளிதாக்கப்பட்ட 5 நிமிடத்தில் தயாராகும் சேவை. அக்மார்க் மூல சேவையை அவ்வளவு எளிதாகப் பெரும் கூட்டத்திற்குச் செய்து விடமுடியாது. அதனுடைய நல்ல மணம், குணம் இந்த ரெடிமேட் சேவையில் இல்லவே இல்லை. அது தனிச் சுவை. அந்த ரெடிமேட் சேவையைச் சாப்பிட்ட போது எனக்கு மூலவடிவ அக்மார்க் சேவையைக் குறித்த என் இளமைக்கால நினைவுகள் மனதில் வந்தது. நிற்க,

இடியாப்பத்தையும், சேவையையும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு.  இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்யப்படுவது. பிழிந்து, ஆவியில் வேகவைப்பது,  மாறாகப் புழுங்கல் அரிசியில் செய்யப்படுவது, வேகவைத்துப் பிழியப்படுவது நான் குறிப்பிடும் சேவை.

எப்பொழுதெல்லாம் எனது தாய் வழிப் பாட்டி இதைச் செய்ய நினைத்து புழுங்கல் அரிசியை ஊறப் போடுகிறார்களோ அன்றேல்லாம் “ஏய் குட்டிகளா இன்னிக்கு டிபன் சேவை! எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ அறிவிப்புப் பலகையில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள் தான்.  மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள் 10 பேர். எல்லோரும் “ஹே!” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்போம்.

ஆனால் அதே சமயம் பாட்டியின் “உங்கள் சேவை” என்பதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் பதுங்குவதும் நடக்கும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில், 38 வருடங்களுக்கு முன், இந்தச் சேவையை செய்வது எவ்வளவு கஷ்டம் என்றும், செய்வதற்கு எங்களைத்தான் ஈடுபடுத்துவார்கள் என்பதும் எங்களுக்கல்லாவா தெரியும்!

அப்படியாகப்பட்டச் சேவையை எங்கள் வீட்டில் செய்யும் நாள் ஏதோ விழா எடுப்பது போல இருக்கும்!. பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோதான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில் இருப்போம்!.

இந்த இடத்திலே எங்கள் பாட்டியைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்பம் பெரிது.  நாங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக, இந்தப் பாட்டியின் (என் அம்மா வழி) அரசாட்சி,  அரசி ஆட்சியின் கீழ் இருந்தோம். உங்களுக்கே புரியும் அரசி ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று! பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான் அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப் பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terror woman to many”.   இரும்புப் பெண்மணி! அவரது பிடியில்தான் எங்கள் எல்லோரது குடும்பமும். எங்கள் குடும்பத்திலேயே மொத்தம் 18 பேர்.  அத்துடன் கொச்சியிலிருந்த பாட்டியின் தங்கையும், அவர்களது சில குழந்தைகளும் சேர்ந்தார்கள் என்றால் மொத்தம் 25 பேர் ஆகிவிடும். அதனால், பெரும்பாலும் 5 கிலொ புழுங்கல் அரிசியாவது - டொப்பி அரி என்று சொல்லப்படும் (IR20) – 4, 5 மணி நேரம் ஊறப் போடுவார்கள். இப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும்.

பெரியோர்களில் ஆண் மக்கள் யாரும் சமையலறைக்குள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பெண்களில் வீட்டு மருமகள்கள் ஏதாவது காரணம் சொல்லி இதில் தலையிடாமல் வேறு வேலைகளுக்குப் போய் விடுவார்கள்.  இறுதியில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் தான்.  அம்மா பாத்திரம் கழுவும் வேலையிலும், பாட்டியின் தங்கை எங்களை மேய்ப்பதிலும், ஆக நாங்கள்தான் சேவை செய்வதில் “சேவை” செய்ய வேண்டும்.

“ஏய்...மாலூ இங்க வாடிக் குட்டி. அரைக்கறதுக்கு ஒரு கை கொடு.”  என் பாட்டியின் அதிகாரக் குரல் ஒலிக்கும்.  அப்போதெல்லாம் கல்லுரல்தான்.

“பாட்டி எனக்கு நாளைக்குப் பரீட்சை இருக்கு பாட்டி. படிக்கணும்”  என்று சொல்லும் போதே அவளுக்கு கால் நடுங்கிக் கொண்டிருக்கும்.

அவள் கையில் இருக்கும் புத்தகம் தலை கீழாக இருக்கும்.  அதாவது அவள் தலை கீழாகப் படிக்கிறாள் என்று அர்த்தம். அவள் விடை எழுதினால் அது அச்சு அசலாக, ஒரு வார்த்தை கூட பிசகாமல், அப்படியே புத்தகத்தில் உள்ளது போல இருக்கும். சரி அதை விடுங்கள். இப்போது எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டு காரணத்தை யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.

“கேசவா, நீ வாடா இங்க” அடுத்த அழைப்பு.  இவனுக்குக் கால் ஒருபோதும் நடுங்காது.  வாய் ஜாலத்தில் கில்லாடி!.  “பாட்டி உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, உங்களுக்கே தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு.  அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து போச்சா பாட்டி. நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணை தடவிய வார்த்தைகள் வரும். அவன் கணக்கு வேறு! அப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் வேறு யாரை மாட்டி விடலாம் என்று கணக்குப் போடத் தொடங்கி விட்டிருக்கும். அவனுக்குப் பதிலாகப் போவதற்கு வேறு ஒருவரைக் கெஞ்சுவான்.

“என்னடா, என்ன மாட்டி விடப் பாக்கறியா, அஸ்கு புஸ்கு.  போனதடவ நான் Science ல, 38 மார்க்குதான் வாங்கிருந்தேன்.  பாட்டி sign போட விடமாட்டானு தெரிஞ்சு நான் அதை 83 ஆக்கின ரகசியத்த நீ பாட்டிகிட்ட போட்டு உடைச்சைலயா!  முடியாது போ.  வேற ஆளப் பாரு” 

“ஆசை,தோசை, அப்பளம், வடை, என்னால முடியாது.  நான் தான் பாட்டிக்கு நேத்திக்கு கால் பிடிச்சு விட்டேன். அதனால வேற யாரையாவது கூப்பிட்டுக்கோ”  இது இன்னொரு நபர்.

“பாட்டி, இவங்க எல்லாரும் வந்தா நானும் வருவேன்.  இல்லனா நானும் இல்ல”  இது என்னுடைய பதில்.

அவ்வளவுதான்.  பாட்டி கோபத்தின் உச்சிக்கே போய்விடுவார்.  இடுப்பில் கைககளை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டி, கத்திக் கொண்டு கம்பு அல்லது விறகுக் கட்டையை எடுக்கச் செல்லும் போது, நாங்கள் எல்லோரும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று சேர்ந்து விடுவோம்.  Unity is Strength!!  உடனே, ஒரு அவசரகாலக் கூட்டம் எங்களுக்குள் போடப்படும்.

ரகசியமாக ஒரு சில விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதாவது, யாருக்கு அதிகமான பப்படங்கள், யார் யார் அவர்களது பங்கில், எத்தனை சதவிகித சேவையை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், யாருடைய உடையை யார் யார் ஒரு சில நாட்கள் அணிந்து கொள்ளலாம், ரிப்பன், குச்சி மிட்டாய், குச்சி ஐஸ், நெல்லிக்காய், பஞ்சு மிட்டாய், மாங்காய், வளையல்கள், மயில் இறகு, (புத்தகத்தின் நடுவில் வைத்து குட்டி போடும் இறகு), புத்தகத்தின் இடையில் மறைத்து வைத்துப் படிக்க கதை புத்தகங்கள், அந்த ரசசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சத்தியப் பிரமாணங்கள், அறிவியல் ரெக்கார்ட் நோட்டில் யார், யாருக்கு வரைந்து கொடுப்பது, இம்பொஸிஷன் எழுதுவது, வீட்டுப்பாடம் செய்து கொடுப்பது, இரவு ஒரே மின் விசிறியின் அடியில் பாட்டி நடுவிலும் எல்லோரும் அவரைச் சுற்றிதான் எல்லோருக்கும் படுக்கை என்பதால் யார் அதன் நேர் அடியில், யார் யார் எங்கு என்ற எல்லைப் பிரிவு என்று பலதும் பேசப்பட்டு, எல்லோரும் ஒத்துக்கொண்டவுடன், கையில் சத்தியம் அடித்துவிட்டுப் பாட்டிக்கு உதவச் செல்வோம். இங்குதான், இப்படித்தான் ஊழலே தொடங்குகிறதோ?!!

இதில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.  “உங்களுக்கு ஆதரவா பெரியவங்களுமா? எதற்கு” என்று கேள்வி வரலாம்.  இவர்கள் இருவரும் எங்களுக்குத் தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்புழா பாயாசம்” மிகவும் பிரபலம்.  அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள் இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. ஏன்? எதற்கு? பதிலாக, நள்ளிரவில், கோவிலுக்கு அருகில், திறந்த வெளி அரங்கில் சினிமா போடும்போது, பாட்டிக்குத் தெரியாமல் ரகசியமாக இவர்கள் அங்கு போவதற்கு உதவ வேண்டும்.  இதில் என்ன வேடிக்கை என்றால், பாட்டி எங்களுக்கு முன்னரே அங்கு போயிருப்பார்கள். “தில்லானா மோகனாம்பாளில்” வருவது போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஊழலிலிருந்து, இப்போது திரும்ப சேவைக்கு வருகிறேன்.

பாட்டியும் நாங்களும் அரைத்து முடித்தவுடன், பாட்டி அந்த மாவை ஒரு பெரிய பித்தளை உருளியில் போட்டு வணக்குவார்கள்.  அதிலும் எங்கள் பங்களிப்பு உண்டு.  அது திரண்டு வந்தவுடன் அதை பெரிய பெரிய கொழுக்கட்டைகளாக “ஸ்..ஸ்ஸ் ஆஅ” என்று பிடித்துக் (சூட்டோடு) கொடுக்க, பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இந்தக் கொழுக்கட்டைகளைப் போட்டு மூடிவிடுவார்கள்.  அவை கொதிக்கும் போது ஒரு மணம் வீடு முழுவதும் வரும் பாருங்கள்!  அது தனிதான். 

அவை வெந்ததும் கடைசிப் பருவம், பிழிவது.  அதுதான் உள்ளதிலேயே மிகவும் கஷ்டமான வேலை.  இதைப் பிழிவதற்கென்றே சேவை நாழி என்ற ஒன்று உண்டு.  அது முக்காலி போல, நடுவில் மிக, மிகச் சிறிய துவாரங்களுடன் ஒரு கிண்ணத்துடன், மேலே ஸ்க்ரூ ஜாக்கு போல (Screw Jack)  அமைப்புடன் இருக்கும்.  இரும்பினால் ஆனதாக இருக்கும்.  அந்தக் கிண்ணத்தில் வெந்தக் கொழுக்கட்டையை ஒவ்வொன்றாகச், சூடாக இருக்கும்போதே போட்டு, ஸ்க்ரூ ஜாக்கின் ஒரு பக்கம் ஒருவர், இன்னொரு பக்கம் இன்னொருவர் கை கொடுத்து, சுற்றி, ஒருவர் மாறி ஒருவராக, எல்லா கொழுக்கட்டைகளையும் பிழிந்தெடுப்போம்.

பிழியும்போது நூடுல்ஸ் போன்று ஆனால் மிக மிக மெலிதாக வெளியில் வரும். அப்படிப் பிழியும் போது அந்த ஆவி பறக்க ஒரு மணம் வரும் பாருங்கள் அது இன்றும் இன் நினைவில் உள்ளது.  இதைச் செய்யும் போது நாக்கு நீர் விடத் தொடங்கி விடும். பின்னர் பிழிந்ததை பாட்டி ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி அதில் தேங்காய் எண்ணையைத் தெளித்து வைப்பார்கள்.  “நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த” என்று  சொல்லுவது போல, தீயாக வேலை செய்து முடிக்கும் போது, அந்த சேவையைப் பார்த்ததும், “தோள்பட்டை வலியா” போயே போச்!.  போயிந்தி! போயல்லோ!. It’s gone!  இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது, மறுபுறம் எங்களில் சிலர் 5, 6 தேங்காயை உடைத்துத் துருவி புளிசேரி செய்வதற்கு உதவுவார்கள்.

என் கல்யாணத்திற்குப் பிறகு 8 வருடங்கள் திருவனந்தபுர வாழ்க்கை. கல்யாணச் சீராக இந்தச் சேவை நாழியும் என்னுடன் வந்தது. எனது புகுந்த வீட்டவர்கள் எல்லோரும் சென்னைவாசிகள். அவர்களுக்கு இந்தச் சேவை நாழியைப் பார்த்து வியப்பு.  அதனால் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எல்லாம் இந்த சேவை தவறாது இருக்கும்.  செய்வதில் எனக்குச் சிரமம் இருந்ததே இல்லை. அச்சமயத்தில் அரைப்பான் (க்ரைண்டர்) வந்து விட்டதால் அரைப்பது எளிதாகி விட்டது.  ஆனால் இவர்கள் யாராவது சொல்லாமல் கொள்ளாமல் வந்தால் சேவை கிடைக்காது.  அப்படி இருக்கும் சமயம்தான் அந்த நல்ல இனிய செய்தி வந்தது.

நாங்கள் குடியிருந்த கிழக்கே கோட்டைப் பகுதியில், ஆனைவால் தெருவில் இருந்த சிறு உணவகம் ஒன்றில் (மெஸ்) சேவை, புளிசேரி செய்து பப்படத்துடன் தருவதாகச் சொல்லவும், அப்புறம் என்ன? திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப் போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய்! அம்பி “சேவை மாமி”  வந்திருக்கா கேட்டியா...ஒரு நாலு பார்சல் சேவை, புளிசேரி, நாலு பப்படம், பின்னே கூட ரண்டு பப்படம் கூடி எடுத்தோண்டு வா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை மாமி” ஆக்கி விட்டார். என்னை மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும்! வேறு வழி இல்லாமல் சேவை வேண்டுமே அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி வருவேன்.

அப்போது கஷ்டப்பட்டதற்குக் காரணம் இரும்பு நாழி மற்றும் கொழுக்கட்டைகளைத் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்ததாலோ இருக்கலாம்.  எனக்கு என் அம்மா கொடுத்த நாழியில் பிழிவது எளிதாகவே இருந்தது.  நான் ஒரெ ஆளாகவே செய்ய முடியும். வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டுக் குழந்தைகள், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் வளரும் இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கும் “boiled rice noodles” என்றும் இடியாப்பத்தை “raw rice noodles” என்றும் அறிமுகப்படுத்தி விட்டேன். பெயர் வேண்டுமானால் அவர்களுக்கு ஏற்றார் போல மாறலாம்.  ஆனால் சேவை சேவைதான்!!.

அப்படி இருந்த சமயம், 15 வருடங்களுக்கு முன் கணவரின் வேலை நிமித்தம் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம். சேவை நாழியை விடுவேனா?! என்னுடன் அமெரிக்கப் பயணம். செக் இன் பெட்டியில். நல்ல வேளை எந்த விமான நிலையத்திலும் இதனை ஏதோ ஒரு ஆயுதம் என்று நினைத்து என்னைச் சந்தேகப்படவோ, அதை வெளியில் தூக்கி எறியவோ இல்லை. இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட தேதிக்கு இருவாரம் முன்தான் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காலடி பதித்தோம்.

நாங்கள் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் தொட்டியின் கழிவுநீர்க் குழாயில் ஒரு சிறிய பிரச்சனை வந்தது. அதைச் சரி செய்ய வந்தவர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்.  அவர் கண்ணில் இந்த சேவை நாழி பட்டு விட்டது.  அவருக்கு இதைப் பார்த்ததும் ஒரே வியப்பு! அதைப் பற்றி விசாரித்தார்.

அவர் பேசிய ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிய கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அவருக்கு ஏற்றார் போல சொல்ல எனக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு பழகியிராததால் முதலில் தயங்கினாலும், இதன் புகழைப் பரப்பும் நோக்கம் என்னைத் தூண்டி விட, இந்தியாவின் தென் கோடியில் வழக்கத்தில் இருக்கும் சேவையின் மகத்துவத்தைப் பற்றி உலகிற்கு அறிவிப்பது எனது கடமை என்று நினைத்து பெருமையுடன் “par boiled rice noodles” என்று நாமகரணம் சூட்டி (அவரிடம் string hoppers என்றும் விளக்கம் அளித்து) அவருக்கு விவரித்தேன். அவர் ஆர்வத்துடன், இடையில் எல்லாம் சந்தேகம் எழுப்பி, கேள்வி கேட்டு (மாணவர்கள் கூட இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள்) எல்லாம் முடிந்த பின் அவர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி

“இப்போது எனக்கு அதை டெமோ செய்து காட்ட முடியுமா” என்று!  நான் மயங்கி விழாத குறைதான்.

நான் அவரிடம் “நான் டெமோ என்ன சேவையே செய்து தருகிறேன், ஆனால், நீங்கள் டெமோ பார்க்க வேண்டும் என்றால் ஒரு பாதி நாளாவது எங்களுடன் செலவிட வேண்டி இருக்கும்” என்று சொன்னதுதான் தாமதம், அவர் மயங்கியே விழுந்து விட்டார்!

இருந்தாலும் எனக்கு நம் சேவையின் மகத்துவத்தை அமெரிக்காவில் பரப்பியதில் ஒரு மகிழ்ச்சியே! வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம் சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா வரவேண்டிய நிர்பந்தம்.  வந்தாயிற்று.  அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க!!.

சேவையை மிக எளிதாகச் செய்ய “சேவை மாஜிக்” என்று சேவை செய்யும் உபகரணம் ஒன்றை, கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தியிருப்பதாக, 2008 ஆம் வருடம் அறிய நேர்ந்தது. உடனே என் அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தினேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  எத்தனை பேர் அதை வாங்கினார்களோ!! அது வெற்றியடைந்ததா தெரியவில்லை. இப்போது அது பேசப்படவில்லை. இன்னும் சந்தையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்பொதே அதன் விலை ரூ 4000 - 5000 ற்குள் என்று நினைவு. அதன் சுட்டி இதோ. 


 சேவை மாஜிக் - யூட்யூபிலிருந்து

இன்று என் வீட்டில் “இன்றைய டிபன் சேவை! எனக்குத் தேவை உங்கள் “சேவை”!  செய்வதற்கல்ல.  சாப்பிடுவதற்கு!!!


------கீதா