எங்கள் ப்ளாக் நம் நண்பர்
ஸ்ரீராம் அவர்களின் தந்தையும், எழுத்தாளருமான திரு ஹேமாபாலசுப்பிரமணியம் – பாஹே அவர்களின்
மறைவு மனதைச் சங்கடப்படுத்தியது. தொடர்ந்து மனதை வேதனைப்படுத்தும் நிகழ்வுகள்.
நண்பர் ஸ்ரீராமின்
வீட்டிற்கு கீதா சென்றிருந்த போது ஸ்ரீராம் கீதாவுக்கு, பாஹேவின் “தூறல்கள்”
புத்தகத்தைக் கொடுக்க அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம் பல நாட்களுக்கு
இருந்தது என்றால் அது மிகையல்ல. நறுக்குத் தெரித்தார் போன்ற சுருக், பளிச் என்ற
வார்த்தைகளில் யதார்த்தக் கருத்துகள். தூறல்கள் பல நெத்திப் பொட்டில் பொளேர் என்று
அறையும் அளவிற்கு வலிமையான வார்த்தைகள். எங்கள் தளத்திலும் பதிந்திருந்தோம்.
நாங்களும் அவரை அப்பா
என்றே சொல்ல ஆரம்பித்தோம். அந்த அளவிற்கு மனதில்
பதிந்திருந்தார்/பதிந்திருக்கிறார். பாஹே அப்பாவைப் பற்றிய ஸ்ரீராமின்
பதிவுகளையும் நாங்கள் தேடித் தேடி வாசித்தோம்.
சமீபத்தில் அவருக்கு உடல்
நலக் குறைவு என்று ஸ்ரீராம் சொல்லியிருந்தார். அல்சிமர் வேறு பாஹே அப்பாவிற்கு.
அதைக் கேட்டதுமே பல
நாட்களாக அப்பாவைப் பார்த்துவிட்டு வர வேண்டும், ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும்
என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் வலுவடைந்தது. ஸ்ரீராமும் நான் மதுரைக்குச்
செல்வதாக இருந்தால் சொல்லச் சொல்லியிருந்தார். ஆனால் வீட்டின் நிகழ்வுகள் எனது
பயணத்திற்குத் தடை போட்டுக் கொண்டே இருந்தது. இப்போது, அப்பாவைப் பார்க்க
முடியாமல் போனதே என்று மனதும் தவிக்கின்றது.
பாஹே அப்பாவின் கதையையும்
கூட ஸ்ரீராம் பதிந்திருந்தார். பலரின் மனதை மிகவும் ஆழமாகத் தொட்டுப் பாதித்த கதை
அது.
மனைவியை நேசிக்கும் ஆண்களின் மத்தியில் இவர் தனித்துவமாய்,
உமையோர்பாகனாய், மனைவியின் மீது கொண்ட மட்டற்ற அன்பினால், மனைவியின் மறைவிற்குப்
பின் மனைவி ஹேமலதா தன்னுள் கலந்து இருப்பதாக, மனைவிக்கு முன்னிடம் கொடுத்துத் தன்
பெயரை ஹேமலதா பாலசுப்ரமணியம் என்று இட்டுக் கொண்டவர். தூறல்கள் புத்தகத்தையும்
என்னில் தானாக ஒன்றித்
தானே நானாக
இறுதி வரை இணைந்தும்
இன்றுள்ள நானாக என்னை
உருவாக்கி வளர்த்தலில்
பரிவு, பாசத்துடன்
முதற் பங்கேற்றும்.........
என்று தன் மனைவிக்கே படையல் என்று சொல்லி, அவர்களின் திருவடித்
தாமைரைக்கு சமர்ப்பித்தார். அந்தத் தவித்த மனது இப்போது தனது ஒரு பாகமாகிய
மனைவியுடன் சேர்ந்திட பயணம் செய்கிறது.
மனைவியுடன் சேர்ந்திட அப்பாவின் பயணமோ
இதோ இப்போது பாஹே
அப்பாவின் திருவடித் தாமரைகளுக்கு எங்கள் வணக்கங்கள், இந்தப் பதிவையும், அவரது
புத்தகமாகிய “தூறல்கள்” பற்றிய எங்கள் பதிவையும் http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/THOORALGAL.html
பாஹே அப்பாவிற்குச் சமர்ப்பிக்கின்றோம்.
“பாதைகள் தொடர்ந்து
செல்லும் –
முடிவதில்லை;
பயணங்கள்
குறுகிவிடும்-
தொடர்வதில்லை” – இது பாஹே
அப்பாவின் வார்த்தைகள்.
அப்பா, உங்கள்
பயணங்கள் இறுதியில் குறுகி, இப்போது நீங்கள் உடலளவில் எங்களை விட்டுப்
பயணித்திருக்கலாம். ஆனால், நீங்கள் உங்களின் எழுத்துத் திறமையையும், உங்கள்
எழுத்துகளையும், உங்கள் மகன் ஸ்ரீராமிடம் விட்டுச் சென்றிருக்கின்றீர்கள். உங்கள்
கனவாகிய நல்ல செய்திகளை அவர் சனிக்கிழமை தோறும் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றார். அவை
எங்கள் எல்லோரையும் வழிநடத்தி உங்கள் எழுத்துப் பயணத்தில் பயணம் செய்ய வைக்கும்.
ஸ்ரீராம்
குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஸ்ரீராமின் மனதில் மட்டுமல்ல எங்கள்/நம்
மனதிலும் பாஹே அப்பா நீங்கள் நீங்காத இடம் பெற்று எப்போதும் நிறைந்திருப்பீர்கள்.
(இணையப் பிரச்சனையினால்
செய்தி தாமதமாகத்தான் தெரிய வந்தது. இதை அடித்து வெளியிடுவதும் தாமதமாகிறது
இணையப் பிரச்சனையினால்.
இந்தச் செய்தி கூட
ப்ளாகர் டேஷ் போர்டில் சகோ கீதா சாம்பசிவம் மற்றும் கில்லர்ஜியின் தலைப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டதுதான். இணையம் போய் விட்டதால் வாசிக்க இயலவில்லை.
இப்போதுதான் வாசித்தோம். மிக்க நன்றி இருவருக்கும். இதோ இந்தப் பதிவையும் கூட
பதிவிட முடியாமல் இணையம் பிரச்சனை செய்கிறது.)
(இரங்கல் செய்திகளுக்குத் தமிழ்மண வாக்கு அளிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்)
(இரங்கல் செய்திகளுக்குத் தமிழ்மண வாக்கு அளிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்)






