சனி, 5 மார்ச், 2016

தொடரும் வலைத்தளங்கள் – தொடர்பதிவு, பதிவர் சகோதரி திருமதி இராஜராஜேஸ்வரிக்கு அஞ்சலி


நண்பர்/சகோ மீராசெல்வகுமார் அவர்களின் அழைப்பிற்கிணங்க நாங்களும், முத்துநிலவன் ஐயா/அண்ணாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தொடர்பதிவில் எங்கள் ரிலே டார்ச்சுடன் இணைந்துவிட்டோம். மிக்க நன்றி செல்வா!

நாங்கள் தொடரும் வலைத்தளங்களை எங்கள் தளத்தின் வலது புறம் மிளிர்ந்து கொண்டிருப்பதால் பதிவில் தனியாகத் தரவில்லை. ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதத்திலும் அழகாக எழுதுபவர்கள்.

இங்கிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுதுபவர்களில் அரசியல் கட்டுரைகள் நையாண்டி, கலாய்த்தல் என்று தாக்குபவர்கள், சுற்றுப்புறச்சூழல், விலங்குகள் பற்றிச் செய்திகளும், விலங்குகள் பற்றிக் கட்டுரை தகவல் விவரணங்களும் அழகுற எழுதுபவர்கள், மரபு, புதுக்கவிதை என்று கலக்குபவர்கள், தமிழில் நாம் பிரமிக்கும் வகையில் எழுதுபவர்கள், விழிப்புணர்வுக் கட்டுரை எழுதுபவர்கள், நகைச்சுவையில் நகைக்க வைப்பவர்கள், திருக்குறளாலும் திரை இசையாலும் கவர்பவர், இசையைப் பற்றியும், பாடல்கள் பல பற்றியும் நுணுக்கமாக எழுதுபவர்கள், பயணக் கட்டுரைகளால் நம்மை பல ஊர்களுக்கு அழைத்துச் செல்பவர்கள்..

பல்சுவையில் சுவைபட எழுதுபவர்கள், திரைப்படங்கள் பற்றி பாங்குற விமர்சிப்பவர்கள், இலக்கியச் சுவையில் எழுதுபவர்கள், மொக்கையையும் ரசிக்கும் வகையில் தருபவர்கள், வித்தியாசமான சிந்தனைகளுடன் பாசிட்டிவ் செய்திகளை உலகறிய வைப்பவர்கள், ஆன்மீகம் பேசுபவர்கள், கதைகள், தொடர்கள் என்று எழுதுபவர்கள், அறிவியல் கட்டுரைகள், தகவல்களஞ்சியம் தருபவர்கள், வீறு கொண்டெழுந்து சமூகத்தைச் சாடிக் கருத்துகளை முன்வைப்பவர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் திறமையில் தனித்தன்மையுடன் ஒளிர்கின்றார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். பலபுத்தகங்கள் படைத்தவர்களும் இருக்கின்றார்கள்

எனவே இவர்கள் எல்லோரையுமே நாங்கள் குறிப்பிட விரும்புகின்றோம். தளத்தின் வலப்பக்கம் பார்க்க. இவர்களில் மூவரை இங்குச் சொல்ல விழைகின்றோம்.


திருப்பதி மகேஷ் எனும் இளைஞர். எங்கள் நண்பர். தாய்மொழி தெலுங்கு. ஆனால், தமிழ்நாட்டில் படித்தமையால் தமிழில் எழுதிவருகிறார். கண்பார்வையற்றவர். ஆனால், அவரிடம் நாங்கள் சாதாரணமானவர்களிடம் பேசுவதைப் போலத்தான் பேசுவோம். அந்தத் திரைப்படம் பார்த்தீர்களா, இந்தப் புத்தகம் வாசித்தீர்களா என்று. அவரும் தனக்குப் பார்வை இல்லை என்பது போல் பேசவேமாட்டார். நேர்மறைச் சிந்தனையுடைவர். திரைப்படத்தில் யார் எப்படி வருகின்றார்கள், எப்படி முகபாவங்கள் காட்டுகின்றார் என்பது வரை துல்லியமாகச் சொல்லி ரசிப்பவர். தன்னைச் சந்தோஷமாக வைத்துக் கொள்பவர். எப்போதுமே மகிழ்வாகப் பேசுபவர். அறிவுத் தேடல் உடையவர். அவரைப் பிரமிப்புடன் பார்க்கின்றோம்.  http://tirupatimahesh.blogspot.com/

அடுத்து சாளையக்குறிச்சி வெற்றிவேல். இவரும் இளைஞர். இலக்கிய நடையில் அழகுற எழுதுபவர். கடித இலக்கியம் படைப்பவர். இந்த இளம் வயதில் சரித்திரப் புதினம் எழுதியிருக்கிறார். பல கல்வெட்டுகள்,சரித்திரம் ஆராய்ந்து. “வானவல்லி” 4 பாகங்கள். இராஜராஜச் சோழனுக்கும் முன்பு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சோழநாட்டைப் பற்றிய கதை. சரித்திரநாவல் எழுதும் அளவிற்குத் திறமைபடைத்தவர். வானவல்லி இம் மாதக் கடைசியில் வெளியுலகைப் பார்க்க இருப்பதாகச் சொன்னார். வாழ்த்துவோம் அவரை. http://iravinpunnagai.blogspot.com/

அடுத்து புதுகை ஜெயசீலன். இறுதிவருடப் பொறியியல் மாணவர். அரசியல் கட்டுரைகள், திரைவிமர்சனம், கதை, அறிவியல் கட்டுரைகள் என்று அழகுற எழுதுபவர். அவரது துறையிலும், எழுத்துலகிலும் அவர் சாதனை புரிய வாழ்த்துவோம். http://pudhukaiseelan.blogspot.in/

தொடர்பவர்களில் ஒருசிலரைப் பல மாதங்களாகக் காணவில்லை, ஒரு வருடம் என்றும் சொல்லலாம். ஒரு சிலர் அவ்வப்போதுக் காணாமல் போனாலும் இடையில் வந்து எட்டிப் பார்த்துவிடுகின்றனர். தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் நாம் அறிந்திராதப் பாடல்கள், விளக்கங்கள் பலவற்றைச் செந்தமிழில் அழகுபடத் தந்த விஜு அவர்களைச் சமீபகாலமாகக் காணவில்லை. வேலைப்பளு போலும். அவர் மீண்டும் வருவார் என்று காத்திருப்போம்.

இந்தப் பதிவை எழுதிவரும் இந்தத் தருணத்தில், நாங்கள் சமீபத்தில் கண்ட வலைத்தளங்களை இங்கு பகிர நினைத்து எழுதத் தொடங்கிய வேளையில்,

இந்தச் செய்தி கலங்கடித்தது. நம் அனைவரது மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய ஆன்மீகத் தென்றல், திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்கள் 9-2-2016 அன்று இறைவனடிச் சேர்ந்ததாக அவரது வலைத்தளம் “மணிராஜ்” ல் அவரது மகன்கள் மற்றும் மகள் அறிவித்திருக்க மனம் கலங்கிவிட்டது. பிறிதொரு சமயத்தில் பிற வலைத்தளங்களைப் பகிர்கின்றோம். பொருத்துக் கொள்க.

பல ஆன்மீகப் பதிவுகள், பல திருத்தலங்களைப் பற்றியும், விழிப்புணர்வுப் பதிவுகள் என்றும் அழகான தமிழில் எழுதிவந்தவர் சகோதரி இராஜராஜேஸ்வரி உடல்நலக் குறைவால் இருந்தார் என்பது அறிந்திருந்தோம். இப்போது இறைவனடியில். சகோதரி அவரது ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம். http://jaghamani.blogspot.com/2016/03/blog-post_92.html









                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             


வெள்ளி, 4 மார்ச், 2016

கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்??!!!!....நமது ஊடகங்களின் நம்பகத்தன்மை?

Sataparna Mukherjee
படம்-நன்றி டைம்ஸ் ஆஃப் இண்டியா

தங்கள் பெயர் ஊடகங்களில் வரவேண்டும் என்பதற்காக மக்கள் ஊடகங்களை அணுகிச் சில செய்திகளை, பெருமைகளைக் கொடுக்க, நம் ஊடகங்களும், பரபரப்பிற்காகவும், பரபரப்புச் செய்திகளை முதலில் யார் வெளியிடுகின்றார்கள் என்ற போட்டியிலும், விற்பனைக்காகவும்  செய்திகளை ஆராய்ந்து உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு விடுகின்றார்கள். பின்னர் அது தவறான செய்தி என்றவுடன், அதை யார் கண்ணிலும் படாதவாறு ஒரு சிறு குறிப்பாக வெளியிடுதல் என்பதும் நடக்கின்றது. உட்டான்ஸ் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை போலும்.

அப்படிப்பட்டச் செய்தி ஒன்று 4 தினங்களுக்கு முன் அதாவது ஃபெப்ருவரி 29 அன்றிலிருந்து மார்ச் 2 ஆம் தேதி வரை சாதாரண ஊடகங்கள் என்றில்லாமல் கொஞ்சம் புகழ் வாய்ந்த ஊடகங்களிலும் வெளியானது.

டிஎன்ஏ இண்டியா, த டைம்ஸ் ஆஃப் இண்டியா, மும்பை மிரர், ஜீ ந்யூஸ், த பெட்டர் இண்டியா, டெக்கான் க்ரோனிக்கிள், ஹிந்துஸ்தான் டைம்ஸ்

செய்தி இதுதான். மேற்கு வங்காளத்திலுள்ள, மத்யாம்க்ராம் எனும் கிராமத்தில் உள்ள செயின்ட் ஜூட் எனும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான சத(ட)பர்னா முகர்ஜிக்கு நாசாவின் கோடார்ட் இன்டெர்ன்ஷிப் ப்ரோக்ராம், கோடார்ட் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்பேஸ் ஸ்டடிஸில் ( NASA Goddard Internship Programme under the Goddard Institute for Space Studies (GISS).) கிடைத்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்ததாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்தப் பெண் டைம்ஸ் ஆஃப் இண்டியாவிற்கு அளித்த பேட்டியில், இந்த நிகழ்வின் ஆரம்பம் சென்ற வருடத்து மே மாதம் என்றும், தான் சமூகவலைத்தளம் ஒன்றில் ஒரு குழுவில் இருப்பதாகவும், அதில் பல விஞ்ஞானிகளும் இருப்பதாகவும், ஒரு நாள் அந்தக் குழுவில் தான் “ப்ளாக் ஹோல் தியரி” பற்றித் தனது கருத்துகளைப் பகிர்ந்ததாகவும், உடன் அதிலிருந்த விஞ்ஞானி ஒருவர் நாசாவின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தைத் தந்து அதில் அவளது ஆய்வுக் கருத்துகளைப் பதிவிடச் சொன்னதாகவும், அதன் அடிப்படையில் தனது ஆய்வுக் கட்டுரை, 'Black Hole Theory' and how it could be used to make a 'time machine'  ஐப் பதிந்ததாகவும் அதனால் இந்த இன்டெர்ன்ஷிப் கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறாள்.

NASA's GIP ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகளில் மிகச் சிறந்த, 5 மாணவ, மாணவிகளைப் பள்ளிக் கல்விக்குப் பிறகுத் தேர்ந்தெடுத்து அவர்களதுக் கல்விச் செலவுகள் முழுவதும் ஏற்றுக் கொள்கின்றது. அந்த வகையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவள் ஆராய்ச்சிப் பட்டம் பெறும் வரையிலான அனைத்துச் செலவுகளையும் நாசா ஏற்றுக் கொண்டதாகவும்,  ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளதாகவும், அதனால் லண்டனிலுள்ள நாசா சென்டரில் ஆராய்ச்சி மாணவியாக வேலை செய்யப்போவதாகும் அதற்காக, வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி பயணம் செய்ய இருப்பதாகவும் சொல்லியிருக்கிறாள். இப்படிப் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், இது ஒரு தவறான பொய் செய்தி என்று அப்போதே ஊடகங்களின் இணையதளத்தில் இதை வாசிக்க நேர்ந்த வாசகர்கள் பலரும் பல ஆதாரங்களைத் தெரிவித்துள்ளார்கள். தற்போது நாசாவின் நிதி நிலைமை இது போன்று வெளிநாட்டு மாணவ மாணவிகளை எடுக்கும் நிலையில் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் சுட்டியைச் சொடுக்கினால் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கும்.


மறுப்புச் செய்தி. on March 3, Huffington Post India had it: “We have no record of [the girl in question] being granted an internship, scholarship or any form of academic or financial assistance from our institute. Furthermore, the Goddard Institute for Space Studies has no facilities in London and all of our internships are awarded to students who live within 50 miles of our location in New York City. The application deadline for our 2016 students closed March 1. We have not made any selections yet.”

செய்தி மறுக்கப்பட்டப் பின்னும் அந்தப் பெண் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே சொல்லுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. எதற்காக இந்தப் பெண் இப்படிச் செய்ய வேண்டும்? அறியாமையா இல்லை அறிந்தே செய்கின்றாளா? ஒரு சிலர் தனது லட்சிய கனவு உலகில் இருக்கும் போது இது போன்று சில பிரமைகளில் பேசுவதுண்டு. அது போன்றா? எதுவாக இருந்தாலும், எங்கள் ப்ளாகின் பாசிட்டிவ் செய்திகளில் இடம் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனது அந்தப் பெண்ணிற்கு.

இது போன்று, “த ஹிந்து”வில் கூட 2014 மே மாதம் வெளியாகியிருக்கிறது ஒரு செய்தி. அதாவது தமிழ்நாடு அண்ணா பல்கல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கு, அமெரிக்காவிலுள்ள, கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள, இளம்கலை பொறியியல் படித்து முடிக்கும் முன்பே கிடைத்துவிட்டதாகவும் அந்தப் பெருமைக்குக் காரணம் தனது ஆய்வான, "inner structure of the electron” என்பதுதான் என்றும் சொல்ல அந்தச் செய்தி வெளியானது. பின்னர், அந்தச் செய்தி, “which isn’t possible because the electron is a fundamental particle and doesn’t have an inner structure”  என்றும் மறுக்கப்பட்டிருக்கிறது.

இப்படித்தான், எனது மகனின் கல்லூரி வகுப்பில் படித்த ஒரு மாணவி, பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் கற்க முடியாமல், தேர்ச்சிப் பெற முடியாமல் முதல் வருடத்திலேயே இருக்க நேர்ந்ததால், (கால்நடைப் படிப்பில் அரியர்ஸ் வைத்துக் கொண்டு அடுத்த வருடத்திற்குச் செல்ல முடியாது.) தற்கொலை செய்து கொண்ட போது, நம் ஊடகங்கள், அவள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புதுக் கதையே புனைந்திருந்தார்கள். அவளது பெற்றோர் எவ்வளவு வருத்தப்பட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பாவப்பட்ட அந்தப் பெற்றோர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இப்படித்தான் ஊடகங்கள் பல செய்திகளை உறுதிப் படுத்திக் கொள்ளாமல், பரபரப்பிற்காக ஊடகத் தர்மத்தை மீறி வெளியிட்டு விடுகின்றன. இதன் அடிப்படையில் ஒரு சில திரைப்படங்கள் கூட மலையாளத்தில் வந்திருக்கின்றன. இப்படியிருக்க, நாம் ஊடகச் செய்திகளை, எப்படி, எவ்வளவு நம்புவது?  என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியே. ஹும் ஒன்றும் புரியவில்லை. அனுபவமுள்ள சகோக்கள்/நண்பர்கள் சே குமார், கூட்டாஞ்சோறு செந்தில் போன்றோர் சொல்லலாம்.

(பின் குறிப்பு: சென்னையில் தரமணியில் வசிக்கும் கீதா என்பவரின் நாலுகால் செல்லம் கண்ணழகியும், கேரளா மாநிலத்து நிலம்பூர், கருநேச்சியைச் சேர்ந்த துளசிதரன் என்பவரின் நாலுகால் செல்லம் டைகரும், கரந்தையைச் சேர்ந்த ஜெயக்குமார் அவர்களின் செல்லம் ஜூலியும், லண்டனைச் சேர்ந்த ஏஞ்சலின் அவர்களின் செல்லம் ஜெசியும், அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் மதுரைத் தமிழனின் நாலுகால் செல்லமும் நாசாவின் செவ்வாய் கிரகப் பயணத்திட்டத்தில் இடம் பெறப் போவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கானப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நாசாவின் இந்தத் தேர்ந்தெடுப்பிற்கு, இந்தச் செல்லங்களின் குறும்புகள், சேட்டைகள், துருதுருப்பு மற்றும் ஆரோக்கியம்தான் காரணங்களாம். ஒரு கொசுறுச் செய்தி. மதுரைத் தமிழன் தமிழக அரசியல் கட்சிகளைக் கிழி கிழி என்று கிழிப்பதால், இங்குள்ள கட்சிகள் அவரதுச் செல்லத்தை அனுமதிக்கக் கூடாது என்று தடை கோரியிருக்கின்றனவாம். ஆனால், மதுரைத் தமிழன் அவரது செல்லத்தை, தான் பயணம் செய்வது போன்று, பெயரை மாற்றி மாறு வேஷத்தில் அனுப்பிவிட வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.)


 ------கீதா


ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பண்பாட்டுத் தூதுவர்கள் – வெ. இறையன்பு

Image result for tamilnadu tourism symbol

courtesy - google

பதிவுகள் பல, அதுவும் அறிவியல் பதிவுகள், பொது அறிவுப் பதிவுகள் பல பாதி எழுதப்பட்டு இருக்கின்றன. எதையும் மனம் ஒருமித்து எழுதி முடித்துப் பதிவிட முடியாத சூழல். எனவே, இன்று நான் வாசிக்க நேர்ந்த, என்னக் கவர்ந்த ஒரு நல்ல தொகுப்பின் சிறு பகுதியை பதிகின்றேன். இந்தப் பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் முன்னாள் மாணவர் சங்கமும், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கமும் சேர்ந்து வெளியிட்டுள்ளது.

திருமிகு வெ இறையன்பு அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த போது ஆற்றிய பல சொற்பொழிவுகளின் ஒரு பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களைப் “பண்பாட்டுத் தூதுவர்கள்” எனச் சொல்லி, சுற்றுலாத்துறைக்கு அவர்கள் எவ்விதம் உதவ  முடியும் என்று அவர்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சொன்னதின் சுருக்கத்தை இங்குப் பகிர்கின்றேன்.

இறையன்பு அவர்கள் சுய முன்னேற்றம், ஆளுமையை மேம்படுத்தல் பற்றி மிகவும் நேர்மறைக் கருத்துகளைப் பேசியும், எழுதியும் வருபவர். இதனை நான் ஒரு வின் வின் சிச்சுவேஷனாக, நேர்மறை எண்ணமாகவே பார்க்கின்றேன். மிக அருமையானச் சொற்பொழிவு. இதோ அவரது வார்த்தைகளில்....

புதிதாக வருகிற பயணிகள், மாநகரங்களிலும், நகரங்களிலும் கட்டடக் காடுகளில் காணாமல் போய்விடாமல் வர்கள் அடைய வேண்டிய விலாசத்திற்குப் பத்திரமாக அழைத்துச் செல்பவர்கள் நீங்கள். இரவானாலும், பகலானாலும், மழையானாலும், வெயிலானாலும், பசியையும் மறந்து, தூக்கத்தையும் தொலைத்து அடுத்தவர்களுக்காக உழைக்கும் உத்தமர்கள் நீங்கள். உயிரையும் பொருட்படுத்தாமல் பெரிய வாகன்ங்கள் செல்ல மறுக்கின்ற சந்துகளில் எல்லாம் பயணித்துச் சவாரியை உரிய இடத்திற்குச் சென்று சேர்ப்பிக்கிறவர்கள் நீங்கள்.

எதிர்பார்க்கிற சவாரி சிலநேரம் கிடைக்காமலும், சரியான வாடிக்கையாளர் அமையாமலும் அவதிப்படுகிறவர்கள் நீங்கள். எத்தனையோ இடங்களில் பணத்தைத் தவற விட்டவர்களும் கறாராகப் பேரம் பேசுவது உங்களிடம்தான். அவசரத்தில் பயணிகள் தவறவிட்ட பணத்தை அப்படியே எடுத்துச் சென்று சேர்க்கின்ற பெருந்தன்மை உங்களிலும் பலருக்கு உண்டென்பதை நான் அறிவேன். (எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் செய்திகளில் பெரும்பாலும் தவறாது இடம் பெறும் ஒன்று). நேர்மை தவறாமல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாய்மையுடன் உழைப்பவர்கள் நீங்கள்.
உங்களை வாழ்த்துவதோடு உங்கள் பணியை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும் என்பதையே என் வேண்டுகோளாக வைக்க எண்ணுகிறேன்.

மகத்தானப்பணி: எத்தனையோ இடங்களிலிருந்துத் தமிழகத்திற்குச் சுற்றுலா வரும் பயணிகளை அழைக்கும் திருமுகமே உங்களதுதான். நீங்கள் நடந்து கொள்ளும் வித்த்தைப் பார்த்துதான் தமிழ்நாட்டைப் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் மனதில் வரைகிறார்கள். புன்னகையுடன் நீங்கள் வரவேற்று, அன்புடன் உபசரித்து, ஆதரவாக அமர வைத்து, நயமாகப் பொருட்களை வாகனத்தில் வைத்து, நேர்த்தியுடன் அவர்களை அழைத்துச் சென்றால் நம் மாநிலம் சிறந்த மாநிலம் எங்கிற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும். அரசு வகுத்துள்ள கட்டணத்தை மட்டும் நீங்கள் வசூலித்தால் அவர்கள் அடுத்த பயணத்தையும் உங்கள் வண்டியிலேயே தொடர விரும்புவார்கள். ஒரு மாநிலத்தைப் பற்றிய மிக்ச் சிறந்த விளம்பரம் இங்கு வந்தவர்கள் வாய்மொழி மூலம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும் அபிப்ராயங்கள், அவற்றைக் கட்டமைக்கும் மகத்தான பணி உங்களிடம் இருக்கிறது.

தூய்மையும், வாய்மையும்: தோற்றத்தில் பொலிவு, உடையில் தூய்மை, சுத்தமான ஆட்டோ, மணம் வீசும் சூழல் என்று அவர்களை வசீகரிக்கும் வகையில் நீங்கள் இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு நம் மாநிலத்தில் தங்கும் நாட்களும் அதிகரிக்கும். உங்கள் நாகரிகம், அன்பான சொற்கள், பண்பாடு உங்களை நம் மாநிலத்தின் தூதுவர்களாக, தமிழக்ச் சுற்றுலாவுக்கே நல்ல முகமும் கிடைக்கும், முகவரியும் கிடைக்கும்.

பழகுவதில் இனிமை: உங்கள் ஆட்டோவில் பலவித காரணங்களுக்காக ஏறுபவர்களிடம் எரிச்சலைக் காட்டினால் கூட அது அபசகுனமாகப்படும். அன்புதான் துன்பத்தைக் குறைக்கும் நிவாரணம். நெர்மையோடு நடப்பது தொடக்கத்தில் சிரமங்களைத் தரும். பண இழப்பு ஏற்படும். அடுத்தவர்களைப் பார்த்து நாமும் வரம்பு மீறலாம் எங்கிற ஆசையைத் தூண்டும். ஆனால், நாளாக நாளாக வேலை செய்யும் சஞ்சீவினியப் போன்றது நேர்மை. உங்கள் வாகனம்தான் சிறந்த முறையில் செலுத்தப்படுகின்ற ஆட்டோ என்பதை அறிந்து ஒரு முறை வந்தவர்கல் திரும்பத் திரும்ப அழைப்பார்கள். காட்டுகிற கரிசனம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். வாகனத்தில் அமர்வோர் நம்மை மறக்கக் கூடாது எங்கிற திடமான உள்ளத்துடன் நாம் அவர்களிடம் பழக வேண்டும்.

உடலை உறுதியாக்குவோம்: நல்ல பழக்கங்களாலும், வியர்வை வடிய வடிய சேர்க்கிற பணத்தைத் தீயப்பழக்கங்களான மது, புகை போன்றவற்றில் செலவழித்து உடலை பலவீனப்படுத்திக் கொள்ளக் கூடாது. இல்லத்து இனிமை மறைகிறது. குழந்தைகளோடு இருக்கிற நெருக்கமோ குறைகிறது. அத்தனை நலன்களையும் உறிஞ்சி விடுகிறது. எனவே உங்களை பலவீனப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

சேமிக்கப் பழகுவோம்: பணத்திற்கு ஒரு குணம் உண்டு. அது எப்போதும் வந்து கொண்டே இருப்பதில்லை. வருகிற நேரத்தில் சேமித்து வைக்காவிட்டால் வராமலேயே போய்விடுகிற இயல்பு அதற்கு உண்டு. அதனை மதிக்கிறவர்களிடம்தான் அதுவும் சேருகிறது. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் நல்ல கல்வியை பயில்வதற்கும், உயர்ந்த பணிகளில் அமர்வதற்கும் உறுதுணையாய் இருக்கும். எனக்குத் தெரிந்து இது போன்று சேமித்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொற்யியல் கல்லூரிகளில் படிக்க வைப்பதை அறிவேன். நம் அடுத்த தலைமுறை நம்மை விஞ்சிச் செல்வதுதான் முன்னேற்றம். அதற்கு சுஉயக்கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம்.

வாகனத்தைச் செலுத்துவது விழிப்புணர்வோடு கையாளப்பட வேண்டிய ஒன்று. வாக்கையை ஆயுள் காப்பீடு செய்து கொள்வது அவசியம். மருத்துவக் காப்பிடும் அவசியம். குழந்தைகளின் படிப்புக்கு ஏற்ப சேகரிப்பதற்கும் ஊக்கத் தொகையுடன் கூடிய ஆயுள் காப்பீடுகள் உள்ளன. இவை எல்லாம் மறைமுகமாகச் சேமிக்க உதவுகின்றன.
குடும்பத்தைக் கொண்டாடுவோம்: நம் வாழ்க்கை காலனேரத்தைத் தாண்டியதாக இருந்தாலும் குடும்பத்திற்காக்க் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம். உங்கள் மேற்பார்வை இருந்தால்தான் குழந்தைகள் நன்றாகப் படித்து, ஒழுக்கத்துடன் வளர்வார்கள். அவர்களுக்கும் உங்கள் மீதான பிடிப்பு ஏற்படும். சீட்டு விளையாடுதல், தேவையற்ற செயல்கள், அதிகமாக சினிமா பார்ப்பது போன்றவை இல்லாமல், நேர மேலாண்மை உங்களை நெறிப்படுத்தும்.

ஆண்டுக்கிற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் ஒட்டு மொத்த உடற்பரிசோதனை செய்யப்படுகின்றது. ஆண்டிற்கொரு முறை கண்களையும் பரிசோதனை செய்து தேவைப்பட்டால் மூக்குக் கண்ணாடியை அணிவது அவசியம். சத்தான உணவு, பழங்கள், காய்கள் என்று சமச்சீர் உணவை உட்கொள்வது அவசியம். ஆட்டோ ஓட்டுவதால் வெயிற்காலங்களில் உஷ்ணம் தாக்காமல் இருக்க மோர், நுங்கு போன்றவற்றை ஆட்டோவில் எப்போதும் வைத்திருப்பது காப்பாற்றும்.

ஆங்கிலமும் அறிவோம்: தமிழத்திற்குப் பல்வேறு மாநிலங்களிலிருந்து பயணிகள் வருவதால் அவர்களிடம் உரையாட குறைந்த்து முக்கியமான 100 வாக்கியங்களையாவது ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். ஹில இடங்களில் பேச்சுமுறை ஆங்கிலம் பயிர்றுவிக்கப்படுகிறது.  உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைப்பார்கள்.

சுற்றுலா வழிகாட்டியாய் இருப்போம்: ஆட்டோ ஓட்டுநர்கள் சுர்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்கள். நம் பகுதியைப் பற்றிய முழு விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றியும் சுற்றுலா கையேடு தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓய்வு நேரங்களில் இவற்றை எல்லாம் வாசித்து எந்த இட்த்திற்கு என்ன முக்கியத்துவம், எந்தச் சாலையின் வழியாகச் செல்ல வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால், பலரும் நாடி வருவார்கள். பிறகு நம்மைப் பற்றிய தகவல்களை ஆட்டோ ஓட்டுநர்கள் குழுவாகச் சேர்ந்து இணையத்திலும் இடம்பெறச் செய்யலாம். வெளிநாட்டுப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும்.

ஆட்டொவில் செல்லும் போது அலைபேசியில் பேசுவதையோ, மோத வருகிற மற்ற வாகங்களோடு சண்டை போடுவதையோ, கோபமான சொற்களைச் சாலைகளில் செல்பவர்கள் மீது பிரயோகிப்பதையோ ஒரு போதும் செய்யக் கூடாது, அவை வண்டியில் இருப்பவர்களுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.

பல பணியைச் செம்மையாக வழிபாட்டுடன் செய்தால், மதிப்புடன், பெருமையுடன், தமிழக ஆட்டோ ஓட்டுநர்கள் தரணியிலேயே தன்னிகரற்றவர்கள் என்கிற நிலையை அடைய இன்றிலிருந்து இன்னும் தீவிரமாகப் பாடுபடுவோம்.

இப்போது அவர் சுற்றுல்லாத்துறைச் செயலராக இல்லாவிட்டாலும் அவர் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றுவது மட்டுமின்றித் தன் நண்பர்களுடன் ஓட்டுநர்களுக்குப் பயிற்சியும் கொடுக்கின்றார். (தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை உட்பட) இன்று, இந்தச் சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் பேசிய உரை இது. இதனை சிறிய புத்தகவடிவமாக அங்கு வந்திருந்த ஓட்டுநர்களுக்கு ஒரு ஜோடி உடையும், இந்தப் புத்தகமும் கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள். 

-----கீதா 

(இனி புதனன்று சந்திப்போம்.  பயணம் மேற்கொள்வதால்...)



புதன், 24 பிப்ரவரி, 2016

ஆக்ஷன் ஹீரோ பிஜு – ஒரு காவல் அதிகாரியின் கதை

Image result for action hero biju
courtesy - google

மலையாளத் திரையுலகில் இப்போது வலம் வரும் இளைய தலைமுறை சூப்பர்ஸ்டார்கள் யாருமே முந்தைய சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மோகன்லால் போன்றவர்களைக் கீழே தள்ளி அவர்கள் இருந்த இடத்தைப் பிடித்தவர்கள் அல்ல. பதிலாகத் தங்களுக்கான ஓர் இருப்பிடத்தை அதன் அருகே இட்டு அது அவர்களுக்கு நட்டமாகிவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் மிகவும் சிரத்தையோடுக் கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பவர்கள். அதனால்தான் அப்படிப்பட்டவர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி காண்கின்றது.

அவர்களில் ஒருவரான நிவின் பாலி நடித்த, தயாரித்த (வேறு இருவர்களுடன் சேர்ந்து) எஃப்ரிட் ஷைன் இயக்கிய “ஆக்ஷன் ஹீரோ பிஜு” ஒரு யதார்த்தமான காவல் உதவி ஆய்வாளரின் கதையைச் சொல்லி எல்லோரதுக் கைத்தட்டல்களையும் பெற்றிருக்கிறது.

கல்லூரி ஆசிரியராகத் தகுதி பெற்ற, வாய்ப்பும் கிடைக்கப்பெற்ற பிஜு பௌலோஸ் எனும் இளைஞர் காவல் உதவி ஆய்வாளராக ஆர்வம் கொண்டு அதற்கானத் தேர்வெழுதி அதில் முதலிடம் பெற்று உதவி ஆய்வாளராகி சமூகத்தில் தன்னால் இயன்ற மட்டும் மக்களுக்கும், சட்டத்திற்கும் பாதுகாப்பாக இருக்க எடுக்கும் முயற்சிகள்தான் இப்படம். இதனிடையே தற்காலிக வேலை நீக்கம், கல்யாண நிச்சயம், ஒரு கத்திக் குத்து, கல்யாணம், முதல் குழந்தைப் பிறப்பு இப்படி எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றது. இதற்கிடையே தன் கடமைகளைச் செய்யும் பிஜுவைக் காணும் போது இது போன்ற சிலரேனும் காவல்துறையில் உள்ளதால்தானே காவல்நிலையத்திற்குச் சாதாரண மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்கச் செல்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு பெரிய வீட்டில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும் மாங்காய்களில் ஒன்றைத் திங்க ஆசைப்படும் குழந்தை அதில் கல்லெறிய, அதைக் கண்ட வீட்டுக்காரர் தன் நாயை அவிழ்த்துவிட, அது குழந்தையை விரட்டிக் கடித்து விழுந்த குழந்தையின் கையொடிந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறது.  அச்செய்தி காவல் நிலையத்திற்கு வர, குழந்தையையும், பெற்றோரையும் மருத்துவரையும் கண்ட பின், நாய் வளர்ப்பவரின் வீட்டிற்குச் செல்ல, வீட்டுக்காரர் பங்களூரு போய்விட்டதாக மனைவியும், ஒரு அரசியல் பிரமுகரும் சொல்ல, பிஜு அவருடன் மொபைலில் தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவரைக் கையோடுப் பிடித்து நீதிபதி முன் கொண்டு சென்று ஜாமின் கிடைக்காத வழக்கில் பதிவு செய்து சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்.

தன் மனைவி குழந்தையுடன் தன் நண்பனுடன் ஓடிவிட்டதாகப் புகார் கொடுக்கும் கணவனிடம் அவரது மனைவியின் அலை பேசி எண்ணை வாங்கி, அவருடன் பேசி காவல்நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை ஒன்று சேர்க்க முயலும் போதும், ஒன்று சேர தயாராகாத மனைவியிடம் கோபப்படும் போதும் நிதினின் நடிப்பு அபாரம்.

மனைவியால் கைவிடப்பட்ட கணவனாக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு தன் குழந்தையைத் தனக்கு வேண்டும் எனும் போது அவரது மனைவி குழந்தை அவருக்குப் பிறந்ததல்ல, அவரது நண்பனுக்குப் பிறந்தது எனும் போது, பதறி அக்குழந்தையைப் பிடித்து முத்தமிட்டு, “என்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்பதற்காக இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என்று அவளிடம் சொல்லுங்க சார்” என்று சொல்லும் போது கைதட்டல் பெறுகின்றார்.

கஞ்சாவுக்கு அடிமையான மகனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தாய் தன்னை ஒரு திருடன் தாக்கியதாகச் சொல்லுவதை நம்பாத பிஜு அவரது வீட்டைச் சோதனை போட்டு அங்கு பள்ளி மாணவனான மகனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவை எடுத்து அவன் தாயிடம் காட்டுகின்றார்.  அப்போது தாய், “என் மகனை ஒன்றும் செய்யாதீங்க” என்று சொல்வதும், அதன் பின் அப்பையனைப் பள்ளியில் சென்று கண்டு நடந்ததைக் கூறும் போது அவன் கதறி அழுவதும், பிஜு அவனைத் தேற்றுவதும் அருமையான இடம். 

அவனிடமிருந்துக் கஞ்சா பள்ளிக்கு வரும் விதத்தையும், பள்ளியில் அதை உபயோகிக்கும் மாணவர்களையும் பற்றித் தெரிந்தபின் அவர்களை எல்லாம் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து, மாணவர்களின் வீட்டார்களை வரவழைத்து அறிவுரை வழங்கி அவர்களைத் திருப்பி அனுப்பும் இடம் மனதை நெகிழச் செய்கிறது. காவல்துறை அதிகாரிகளால் இது போல் சாதிக்க முடிகின்ற காரியங்களை எண்ணி நாம் வியந்தே போகின்றோம்.

இப்படிப் பல சம்பவங்கள் வாயிலாகக் காவல்துறையினர் சமூகத்திற்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது. இதனிடையே காணாமல் போகும் காவலதிகாரியின் வயர்லெஸ், எதிர்பாராமல் திடீரென வெடிக்கும் ரிவால்வர் போன்ற சம்பவங்களினால் ஏற்படும் பிரச்சனைகளும் கடந்த நாட்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

சாலையில், குடித்துவிட்டுத் தன் கைலியை அவிழ்த்துக் காட்டி ஆடிக் கொண்டிருக்கும் மனிதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.  அப்போது அங்கு வரும் பிஜுவும் போலீசாரும் அவனிடம் நெருங்க அப்போதும் பயமின்றி அவன் ஆடிப்பாடிக் கொண்டு கைலியை அவிழ்த்துக் காட்ட, பிஜு அருகிலிருந்த நாயுருவிச் செடியை ஒடித்தெடுத்து அம்மனிதன் கைலியை அவிழ்க்கும் போது, அதனுள்ளே வைத்துக் கைலியை மடித்துப் பின்புறமாய்ச் சொருகிக் கையில் விலங்கிட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லும் போது நெளியும் சுரேஷின் நடிப்பும் அபாரம். (உண்மையிலேயே அவரதுக் கால்களுக்கிடையில் நாயுருவிச் செடியைச் சொருகியிருப்பார்களோ??!!). 

500க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப்பாடல்கள் எழுதிய சுரேஷ் காவல்நிலையத்தில் “முத்தே....பொன்னே” எனும் பாடலையும் பாடிக் கைத்தட்டல் பெறுகிறார். இது போன்ற ஒரு காவல்நிலையத்திற்கு வரும் புகார்களும், அவற்றைப் பரிசீலித்துக் காலதாமதமின்றி ஒரு காவல் அதிகாரி எடுக்கும் நடவடிக்கைகளையும் காணும் போது, சாதாரணமாக நாம் திரைப்படங்களில் காணும் காவல் நிலையங்களில் காட்டப்படும் மிகைப்படுத்தல்கள் இல்லாத இந்தப் படம் அதன் காரணமாகவே நமக்குப் பிடிக்கும் ஒரு படமாகிறதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

பூக்கள் பனிநீர் பூக்கள் - ஜேசுதாஸ், வாணி ஜெயராம் - courtesy youtube

ஜெரி அமல்தேவின் இசையமைப்பில், ஜேசுதாசும், வாணி ஜெயராமும் பாடும் “பூக்கள்......பனிநீர் பூக்கள்” எனும் இனிமையான பாடல் மனதைத் தொடுகின்றது. அலெக்ஸ் புளிக்கலின் காமேரா நன்றாகவே இயக்கப்பட்டிருக்கிறது.

எப்படியோ கேரளா காவல்துறைக்கும், உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னித்தலைக்கும் படம் மிகவும் பிடித்துப் போனது. சட்ட சபையிலுள்ள அமைச்சரது அலுவலகத்திற்கு நிவின்பாலி அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டிருக்கிறார். அப்போது, எல்லோரும் எதிர்பார்த்தது போல் ஆக்ஷன் ஹீரோ பிஜுவாகப் போலீஸ் யூனிஃபார்மில் போகாமல்,  நீல நிறச் சட்டையும், ஜீன்சும் அணிந்து நிவின்பாலியாகச் சென்றுத் தனக்குக் காக்கிச் சட்டை மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளதால்தான் அதை அணியாமல் வந்தேன் என்று சொல்லி அங்கும் கைதட்டல்களைப் பெற்றிருக்கிறார். மென்பொருள் பொறியியலாளரான அவர் நடிப்பார்வத்தில் தன் வேலையை உதறி விட்டு நடித்த முதல்படமான "மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்" அவருக்கு எதிர்பார்த்த அளவு அடுத்தடுத்துப் படங்களைத் தரத் தவறினாலும், "தட்டத்தின் மறையத்து"க்குப் பின் எல்லாம் அவரது "நேரம்"தான். எல்லோருக்கும் அவருடன் "ப்ரேமம்" (காதல்!!!) தான். 


செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

அஹிம்சையின் அளவுகோல்???!!!

அஹிம்சாவாதி காந்தி பிறந்த மண் என்று போற்றப்படுகின்ற நம் நாட்டில் அஹிம்சை பின்பற்றப்படுகின்றதா? அஹிம்சையின் அளவு கோல் என்ன? இந்தக் கேள்விகளுக்கானக் காரணங்கள், நம் நாட்டில் நடந்த, நடக்கின்ற பல நிகழ்வுகளும், எனக்கு நேர்ந்தச் சில நிகழ்வுகளும்.

இன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் மகனை அவனது கிளினிக்கில் விட்டு வருவதற்கு, டைடைல் பார்க் சிக்னலில், பழைய மகாபலிபுரச் சாலையில் வலது பக்கம் திரும்ப வேண்டி நின்று கொண்டிருந்தேன். பச்சையும் வந்தது. திரும்பும் போது பழைய மகாபலிபுரச் சாலையிலிருந்து ஒரு சைலோ வண்டி – கால் டாக்சி - வேகமாக வந்து அவனது வலதுபுறம் திருவான்மியூர் சாலையில் திரும்ப சொடக்கு போடும் நொடிதான், நான் சமாளித்துத் தப்பினேன்.

வண்டியை ஓட்டியவன் வண்டியை நிறுத்தி என்னைத் திட்டினான். என் மீது தவறு இல்லாததால் கோபம் வந்தது. நான் வண்டியை ஓரமாக நிறுத்தினேன் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள. அவனுடன் நான் சண்டை போடத்தான் வண்டியை ஓரம் கட்டியிருக்கின்றேன் என்று நினைத்து அவனும் வண்டியை ஓதுக்கிவிட்டு மீண்டும் என்னிடம் வந்து, “வண்டி ஓட்டத் தெரியாம ஏம்மா நீயெல்லாம் ரோட்டுல வர????!!!!” என்று சண்டைக்கு வந்தான். என் கோபம் மீண்டும் தலைக்கேறியது. “யாருங்க மோத வந்தது ரோட் ரூல்ஸ் ஃபாலோ பண்ணாம? நானா, நீங்களா” என்று நான் சத்தம் போட ஆரம்பித்தேன்.

விபத்து நடந்திருந்தால் எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் ஒரு கால்நடை மருத்துவனும், நானும் எங்கேனும் ஓரு மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருப்போம். இல்லை எல்லோரும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்திருப்பார்கள். இதோ இப்போது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருந்திருப்பேனா?

மகனுக்கு கிளினிக்கிலிருந்து அழைப்பு. சாலை விபத்தில், ஒரு நாலுகால் செல்லம் அடிபட்டு வந்திருந்தது என்று. அந்த நாலுகால் பாவம். வண்டி ஓட்டுநரின் கத்தலைப் புறம்தள்ளி, வண்டியை எடுத்தான் மகன்.

சிக்னலில் நிற்கும் போது, வேகமாக வந்து வண்டியை பின்புறம் இடித்து நம்மைத் தடுமாற வைத்தலும் நடக்கிறது. சரி இரு சக்கர வாகனத்தை விடுங்கள். நாலு சக்கர வாகனத்தில் சென்ற போது சிக்னலில் பச்சை விழுந்ததும், முன்னால் ஏகப்பட்ட வண்டிகள் மெதுவாக நகர, நான் வண்டியை மெதுவாக நகர்த்திய போது, பின்னால் ஒரு சுமோ வண்டி - இதுவும் கால் டாக்சிதான் - வேகமாக வந்து, இடது புறமாக முந்திச் செல்ல விழைந்தபோது  என் வண்டியின் பின்புறம் இடிக்க, என் வண்டி அதிர்ந்தது, என் கால் க்ளச்சிலிருந்து விடுபட்டுவிட்டதால்.

நான் எப்போதுமே என் முன்னால் நிற்கும் வண்டியிலிருந்து இடைவெளி விட்டு நகர்வதால் நல்ல காலம் முன்னால் செல்லும் வண்டியின் மீது இடிக்கவில்லை. உடன் சமாளித்துவிட்டேன். அந்த வண்டிக்காரன் என்னைத் தாண்டி வண்டியின் இடது புறப்பக்கவாட்டுக் கண்ணாடியையும் தட்டி உடைத்துவிட்டுச் சென்றதும் மட்டுமின்றி என்னை முறைத்துவிட்டுத் திட்டினான். “சிக்னல் விழுந்து வண்டிய எடுக்காம...நீயெல்லாம் காரோட்ட வந்துட்ட”????!!!!! என்று சொல்லிவிட்டு நகர, வன்முறை?! எனக்கு வந்தக் கோபத்தில் அவனை அடிக்க வேண்டும் போல் இருந்தது.

இப்படி இடிப்பவர்கள் “மன்னிப்பு” என்ற வார்த்தை தமிழில் இருப்பதைக் கூட மறந்து விட்டார்கள் போலும். ஒருவேளை காப்டனின் வசனம், “தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு” என்பது அவர்கள் மனதில் பதிந்திருக்கும் போல!

என்னைப் பொருத்தவரை, இது போன்று சாலை விதிகளை மீறுவதும் – (VIOLATING THE RULES – VIOLENCE) வன்முறையே. பலரும் மீறுகின்றனர். பலருக்கும் விபத்து தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், நம்மீது தவறே இல்லாத போது, நம்மையும் மீறிக் கோபப்பட வைக்கும் நிகழ்வுகள்.

சரி, இருசக்கரமும் வேண்டாம், நான்குசக்கரமும் வேண்டாம், நம் சொந்தக்காலில் நடக்கலாம் என்று நடைபாதையில் நடந்தால், அங்கும் வாகனங்கள். அசிங்கமான வார்த்தைகளைக் கேட்கும் சூழல்.

சிறிய வயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறைகள் அறியா பருவம் என்பதால் கடந்து சென்றுவிட்டன. பலவருடங்களுக்கு முன் சாலையோரம் நடந்து சென்ற போது, சைக்கிளில் கடந்து சென்ற ஒருவன் என்மீது தகாக இடத்தில் கைவைத்து.....நான் உடன் அவன் சைக்கிளைப் பிடித்து நிறுத்தி, அவன் கன்னத்தில் அறைந்தேன்.

அவன் என் வீட்டு வாசலில் குடித்துவிட்டு வந்து நின்று கொண்டுக் கத்தினான். நான் செய்தது வன்முறை என்று சொல்லப்பட்டது. “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்பது போல் அந்நிகழ்விலும் நான் செய்திருக்க வேண்டுமா?
  
இப்படிப் பல பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், நிகழும் இது போன்றவையும் வன்முறைதானே! ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் வேறு விதமாக வன்முறைகள் நிகழத்தான் செய்கின்றன. குழந்தைத் தொழிலாளிகள் என்ற பெயரில். சமூகம் மட்டுமின்றி, பெற்றோரும் கூட குழந்தை வளர்ப்பு என்ற பெயரில் வன்முறைகளைக் கையாளத்தான் செய்கின்றார்கள். ஆயுதம் எடுத்தலோ, அடித்தலோ மட்டுமே வன்முறையல்ல. வார்த்தைகளால் சுடுவதும் வன்முறைதான். Sorry cannot make a dead man alive. 

குற்றம் இழைத்தவர்களைக் காக்க வேண்டி, குற்றம் செய்யாதவர்களைச் சிறையில் அடைத்துக் குற்றம் செய்தது போல் ஜோடித்து ஒத்துக் கொள்ள வைக்க, மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையே  கையாளும் முறைகளும் வன்முறைதானே! என்கௌண்டர் என்று சொல்லிச் சுடுவதும், சர்வசாதரணமாகப் பட்டப்பகலில் நடக்கும் கொலைகளும் கூட வன்முறைதான்.

நேர்மையாக இருக்கும் பேராசிரியர், வகுப்பில் தவறு செய்த மாணவனைத் திருத்த முனைந்த போது, அந்த மாணவன் பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் அதிகாரம் விளையாடி, அந்தப் பேராசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் பேராசிரியருக்கு அவர் நேர்மையாக இருப்பதால் நிகழ்ந்த விளைவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட நாட்களே அதிகம்.

நாம் நம்மைக் காத்துக் கொள்ள சில கேடயங்களைக் கையாளும் நிலை ஏற்பட்டாலும், நேர்மையற்ற அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போகாமல் தவறுகளைத் தட்டிக் கேட்டாலும் நாம் வன்முறையாளர்கள்! முறையான சட்டத்தைப் பின்பற்றினாலும் நீதி கிடைக்காத சமூகத்தின் மீது கோபம் கொண்டு தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தவோ, நீதியோ கேட்டால் அந்நியர் அல்லது வன்முறையாளர் என்று சொல்லப்பட்டு மெய்யாகவே அந்நியர்களாகிப் போவதும் நடக்கத்தான் செய்கின்றது. அதிகாரத்திற்கும், ஊழலுக்கும் துணை போனால் நாம் அஹிம்சைவாதிகள்!

மேலே சொன்னவை ஒரு புறம் இருக்கட்டும். இயற்கை நமக்கு நன்மைதானே செய்கின்றது? அப்படியிருக்க நாம் இயற்கைக்கும் எதிராகத்தானே செயல்படுகின்றோம். நாம் நமது சுயநலத்திற்காக, அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு, மனிதன் மட்டுமே இந்த உலகில் வாழும் உயிர்  என்று எண்ணிக் கொண்டு, சாலையோர மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தல், பிற உயிரினங்களை வாழ விடாமல் செய்தல் என்பதும் கொலைக்குச் சமம்தானே? வன்முறைதானே!

எதிர்காலத்தில் உணவிற்கும், தண்ணீருக்கும், நல்ல காற்றிற்கும் வழியின்றி, உணவிற்காக, தண்ணீருக்காக மனிதனை மனிதனே அடித்துக் கொல்லும் போர்க்களமாக்கியும், நம் சந்ததியினருக்கு சவக்குழிகளையும் தோண்டிக் கொண்டிருக்கின்றோமோ என்றும் தோன்றுகின்றது. இதுவும் வன்முறைதானே!

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல் வேட்பாளராக நிற்கும் டொனால்ட் ட்ரம்ப் கூட ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களை பயங்கரவாதிகள் என்று உளறினார். 

தினமும் நமக்கு நடக்கும் பல சம்பவங்களும் வன்முறை, பயங்கரவாதம் என்பவற்றின் விளிம்பை ஒட்டித்தான் நடக்கின்றன. மேலே சொன்ன நிகழ்வுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்று எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும்தான் இருக்கின்றோம். அப்படியிருக்க, குண்டு வெடிப்பும், துப்பாக்கியால் மனிதர்களைச் சுடுவதும் மட்டும்தான் பயங்கரவாதம், வன்முறை என்று, நாம் குறிப்பிட்ட மக்களை மட்டுமே தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று சொல்லி வருவது ஏனோ?

நாம் எல்லோருமே மறைமுகமான வன்முறையாளர்கள். இல்லையெனில் வன்முறைக்குத் தள்ளப்படுகின்றோம், ஏதேனும் ஒரு விதத்தில், என்பதுதான் நிதர்சனம். அப்படியென்றால் அஹிம்சை என்றால் என்ன? நம் நாட்டில் இருக்கின்றதா? எங்கிருக்கின்றது?

---கீதா

(கீதா இந்த வாரம் முழுவதும் பிசி. கல்யாணங்கள், உறவுகாரர்கள் வருகை என்பதால் இணையம் பக்கம் வருவது சற்று கடினம். நேரம் கிடைக்கும் போது வருகின்றோம்.)