சனி, 19 டிசம்பர், 2015

இதுவும் கடந்து போகும்?!

Image result for basic rights
நம் நாடு பலவிதமானத் தத்துவவங்கள் நிறைந்த நாடு என்று  மேலைநாட்டவர்களும் வியந்து பார்ப்பதுண்டு. அந்தத் தத்துவங்களுள் ஒன்றான “இதுவும் கடந்து போகும்” எனும் தத்துவம், இப்போதெல்லாம் எந்த ஒரு (வேதனையான) நிகழ்வுக்கும் கொடுக்கப்படும் அறிவுரையாக, அதிகமாகப் பேசப்படுகின்றது. ஒருவேளை, அதை நடிகர் சிவக்குமார் அவர்கள் மேடைப் பேச்சு ஒன்றில் கதை மூலம் சொல்லியதாலும் இருக்கலாம்.  நமக்குப் பழக்கமான ஒன்றாயிற்றே. படித்துத் தெரிந்து கொள்வதை விட, தெரிந்து கொண்டாலும், அந்த வார்த்தகளோ, வரிகளோ, புகழ்வாய்ந்த  ஒருவரால் சொல்லப்படும் போது எளிதாக மண்டையில் ஏறிவிடுகின்றதால் இருக்கலாம்.

எனக்கு இது சிறுவயதில் சொல்லப்பட்டது. நல்ல தத்துவம்தான் என்று எடுத்துக் கொண்டாலும், எல்லாவற்றிலும், “இதுவும் கடந்து போகும்” என்று கடந்து சென்றுவிட முடியவில்லை. ஏன்? விஷயத்திற்கு வரும் முன் இதையும் இங்கு சொல்லிவிடுகின்றேன். எப்போதுமே மூக்கைத் தலையைச் சுற்றித் தொட்டுப் பழக்கமாயிற்றே!. கேளுங்கள். சென்னையில் வெள்ளம் வந்து 19, 20 நாட்கள் ஆகின்றனவா? வெள்ளம் வந்து, தண்ணீர் வடிந்த ஒரு வாரத்தில் நான் நகர்வலம் சென்றேன். எனக்கு சுற்றுவது என்பது மிகவும் பிடித்த விஷயமாயிற்றே! 

இத்தனைக்கும் நான் இருக்கும் பகுதியில் ஒரு சில இடங்களில் வெள்ள பாதிப்பு இருந்தாலும், எங்கள் பகுதியில் மட்டும் ஒரு சொட்டு வெள்ளம் கூடத் தேங்கவில்லை என்பதையும் போகிற போக்கில் இங்கு பதிந்துவிடுகின்றேன். பாதிக்கப்படாத எங்கள் பகுதிக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படுகின்றது என்பது வேறு விஷயம். நீ வாங்கிக் கொண்டாயா என்று கேட்டால், முதலில் மனசாட்சியின் வடிவில், நேர்மை எட்டிப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தவள், பின்னர், நண்பர் ஒருவரின் பரிந்துரையால், திருவள்ளுவரை வணங்கிக் கொண்டு வாங்கி, மெய்யாலுமே கஷ்டப்படும் ஒருவருக்குக் கொடுக்கலாமே என்ற ஒரு நல்ல? எண்ணத்தினால்.

நிற்க! நடை, வழி தவறிவிடாமல் விஷயத்திற்கு வருகின்றேன். அப்படியாக நடந்து சென்ற வேளையில், வீட்டிற்குள் இருக்க வேண்டிய சாமான்கள் எல்லாமே தெருக்களில், தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து, மெத்தைகள், தலையணைகள், ரேடியோக்கள், துணிகள், பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள், கூடைகள் வரை தெருவில் குவிந்து மலை போலக் கிடக்க, இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் செயலற்றுக் கிடக்க, கடைகளின் சாமான்கள் கூட வெளியில் குவிந்து கிடக்க, வெள்ளம் அடித்துச் சென்றது போக மிச்ச சொச்சங்கள் ஆங்காங்கே கிடக்க, இவற்றின் நடுவில் குடிசைப் பகுதிகள் உட்பட, ஒவ்வொரு வீட்டிற்கும், கடைக்கும் சராசரியாக 2 லட்சத்திற்கு இழப்பீடு இருக்குமோ என்று கணக்கிட்டபடியே, இவையேனும் மீட்டெடுக்க முடியும், ஆனால், அதைவிட முக்கியமாக மீட்டெடுக்க முடியாதபடி அடித்துச் செல்லப்பட்ட உயிர்களை நினைத்துப் பார்த்தேன். இதற்கு என்ன நிவாரணம் கொடுக்க முடியும் சொல்லுங்கள்? மனதை வேதனைப்படுத்தியது. வெள்ளம் நம்மை எல்லாம் கடந்து சென்றிருந்தாலும், இதுவும் கடந்து போகும் என்று ஏனோ என்னால் பாதிப்பைக் கடந்து செல்ல முடியவில்லை.

வியப்பு என்னவென்றால், மக்களின் முகத்தில் எந்தவிதத் துயர அடையாளங்களும் காணப்படவில்லை. எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி பலரும் வேலைகளில் மூழ்கிட, வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, குழந்தைகள் தெருவில் கிரிக்கெட்டும், குடிசைப்பகுதிகளில் குழந்தைகள் கேரம்போர்டும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த போது நம் நண்பர் மூங்கில் காற்று முரளிதரனின் கவிதை, “ஒரு மாணவனின்குரலில், இந்த மழை அறிவியலும், அரசியலும், மனிதநேயமும் கற்றுத் தந்ததே, இத்தனை பாடங்கள் போதாதா? இன்னொரு முறை சொல்லாதீர்! மழை விடுமுறையால், படிப்பு பாழாய்ப் போனதென்று!” என்று நினைத்து விளையாடுகின்றார்களோ என்று தோன்றியது.

சாலைகள் எல்லாம் வழக்கம் போல போக்குவரத்து நெரிசலில் திண்டாட, திநகர் உஸ்மான் சாலையும், பாண்டிபசாரும், ரங்கநாதன் தெருவும், துணிக்கடைகளும், நகைக்கடைகளும், உணவகங்களும், வரும் கிறிஸ்துமஸ், புதுவருட, பொங்கலுக்கான வியாபாரத்தில் மக்களின் திரளில் வழக்கம் போலத் திருவிழாக் கோலம் பூண்டிருக்கச் சாலையோரக் கடைகளிலும் கூடப் பேரங்கள் நடந்து கொண்டிருந்தன. இங்கும் மீண்டும் மூங்கில்காற்றின் கவிதை நினைவில் நிழலாடியது ஒரு பாமரனின் மழை நாட்களில், ஏழாம் நாள் (நிவாரணத்திற்காக) ஏக்கம், எட்டாம் நாள் எதிர்பார்ப்பு. ஒன்பதாம் நாள் ஒய்வு, பத்தாம் நாள் .....போங்கப்பா பொலம்பிகிட்டே இருக்க   முடியுமா? பொழைப்பை பாக்க வேணாமா? அதானே?!!!!

இந்த இடங்களிலா, 7 நாட்கள் முன்பு, அடையாறு பொங்கியது? கூவம் கரைபுரண்டது? மழையும் தாண்டவமாடி, எச்சரிக்கை மணி அடித்தது மட்டுமல்லாமல் வெள்ளமாய் வந்து ஓடுவதற்கு வழியில்லாமல் வீட்டில் ஒதுங்கி அவலத்தை ஏற்படுத்தியது? உயிர்கள் மிதந்தன? தெருக்களில் மலைபோல் குவிந்திருந்தப் பொருட்களும், குப்பைக் கூளங்களின் அடையாளமும், அரிப்பெடுத்தச் சாலைகளையும் தவிர வேறு எந்தச் சுவடும் கூட இல்லை. சூரியனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அடையாறும், கூவமும் கூட, வெள்ளத்தில் தங்கள் அழுக்குகளையும், குப்பைகளையும் களைந்து, சுத்தமாக மாறியதாக ஊடகங்களாலும், மக்களாலும் மகிழப்பட்டவை தங்கள் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தன. முகவரி தொலைந்துவிடாமல் இருக்க அழுக்கு, குப்பை என்பதுதான் இவற்றின் அடையாளம் என்று ஆகிப் போனதால் இருக்கலாம்!

சென்னை, கடலூர், நாகை மற்றும் இப்போது தென்னகத்திலும் மழையின் பாதிப்பு. இந்த பாதிப்புகளின் விளைவுகளை எல்லாம் இப்போது பீப்பும், ராஜாவும் புறம்தள்ளி ஊடகங்களில் நிற்பதைப் பார்க்கும் போது தமிழகத்தின் முக்கியமான அடுத்தக் கட்ட, ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் முன்னிருத்தப்படுவது மக்களால் மறக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கம் எனக்கு எழாமல் இல்லை.

ஊடகங்கள் பரபரப்பிற்காகவும், டிஆர்பி ரேட்டிற்காகவும், வியாபாரத்திற்காகவும் இயங்கும் நிலையில், நீரில் மூழ்கிய பல பள்ளிகளின் சீரமைப்பு,  பள்ளிக் குழந்தைகளின் தேவைகள், பல குடும்பங்களின் வாழ்க்கை, இழப்புகளின் மீட்பு, வெள்ளத்தில் அரிப்பெடுத்துக் கற்கள் சிதறிக் கிடக்கும் சாலைகள் செப்பனிடப்படுதல், மழையில் பாதிக்கப்பட்டப் பல காப்பகங்களின் தேவைகள், சென்னையைச் சுத்தப்படுத்துதல் முக்கியமாக நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு, தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தல் என்ற நீண்ட ஆக்கப்பூர்வமான பணிகள் புறந்தள்ளப்படாமல் இருக்க வேண்டுமே என்று தோன்றுகின்றது.  பீப், ராஜா செய்திகள் எல்லாம் கண்டிப்பிற்கு உரியவையே. மழைக்காளான்கள், புற்றீசல்கள் போல் தோன்றி, அடங்கிவிடக் கூடியவற்றைக் கண்டித்துக் குரல் கொடுத்துவிட்டு, மீண்டும், மீண்டும் வளர்த்து வருவதைவிட, இதுவும் கடந்து போகும் என்று கடந்துவிட்டால் அடங்கிவிடும். ஆனால், நமக்குப் பிடித்தது என்னவோ இரு கோடுகள் தத்துவம்தான் பெரும்பாலும்.

ஆனால், நமது நீண்டகால வளர்ச்சிப் பணித்திட்டங்கள் என்பவை மழைக்காளான்கள், புற்றீசல்கள் போல் அல்ல.  எதிர்கால சந்ததியினருக்கு வேண்டிய நிரந்தரமானத் தீர்வுகள். கல்வித்துறையில் உள்ள ஊழலுக்கும், பணம் விழுங்கிகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் நல்ல தரமான தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை, அடிப்படைச் சுகாதாரம், அரசு மருத்துவமனைகளில் நல்ல மருத்துவம் நல்ல சாலைகள், நல்ல வாழ்க்கைத்தரம், என்ற நமது அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பெற ஒரு நல்ல தலைமை வேண்டும் என்று பொதுமக்கள், ஊடகங்கள், என்று எல்லோரும் ஒருங்கிணைந்து, பீப், ராஜா செய்திகளைக் குரல் கொடுத்துப் போராடி அடக்க முடியும் என்றால், அதே குரலால், போராட்டத்தால் நல்ல அரசை உருவாக்கி சாதிக்க முடியாதா என்ன?! மழைக்காளான் செய்திகளுக்கு நடக்கும் போராட்டங்கள் போல், விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்தோ, நல்ல ஊழலில்லா அரசிற்காகவோ, நமது அடிப்படை உரிமைகளுக்காகவோ குரல் எழுப்பி அதை அடையும் வரை குரல் கொடுத்துப் போராடுவது இல்லையே என்பது வேதனையே.

அடுத்த பருவ மழைக்குள், புயலுக்கு முன், சென்னையும், கடலூரும், நாகையும் ஏன் தமிழகம் முழுவதுமே வெள்ளப்பெருக்கு ஏற்படாமல், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளக் குரல் கொடுத்து இனியேனும் உயிர் இழப்புகள் இருக்கக் கூடாது என்று செயல்படலாம்.  தன்னார்வலர்கள் இந்தச் செய்திகளைப் பேசினாலும், அதிகம் பேசாமல், தங்கள் பணிகளில் குறிக்கோளாகப் பல திட்டப்பணிகளில் ஒன்றாகிய சென்னையைச் சுத்தப்படுத்தலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது மகிழ்வாக இருக்கிறது. அதைப் போல, ஆக்கப்பூர்வமானச் செயல்களுக்குத் துணை நிற்கலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது. இவ்விஷயத்தில் என்னால் இதுவும் கடந்து போகும் என்று எண்ண முடியவில்லை. என் ஆதங்கமும், நான் சொல்லியதும் தவறு என்றால் தயவாய் சொல்லிவிட்டு இதையும் கடந்து சென்றுவிடுங்கள்.

                        ---கீதா

படம்: இணையத்திலிருந்து


வியாழன், 17 டிசம்பர், 2015

வரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள் - 3

வெற்றுக் கைகளால் தன் எதிரிகளுடன் சண்டையிட்ட மனிதன் பிற்காலத்தில் ஆயுதம் கையிலேந்திய போது ஆயுதம் இல்லாத அவனது எதிரிகள் எதிர்க்க முடியாமல் திகைத்திருக்கலாம். கூர்மையான வாள் ஏந்தியவன், வில்லும் அம்புமாய் தன் எதிரே நிற்கும் எதிரியைக் கண்டுத் திகைத்திருக்கலாம்.  பின்னர் அதே வில்லும் அம்பும் ஏந்தியவன் தன் முன் துப்பாக்கியுடன் நிற்கும் எதிரியைக் கண்டுத் திகைத்திருப்பான்.  அப்படி ஆய்தங்கள் படிப்படியாய் உருமாறி அணு ஆயுதமான போது எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்கி வல்லரசாக படாதபாடு படத் தொடங்கின.  அப்படி வல்லரசான நாடுகளில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவையே நிலைகுலையச் செய்த ஒரு புதிய போர்முறை உதயமாகியிருக்கிறது உலகில் என்பதைப் பறைசாற்றும் புகைப்படம் இது. மனித வெடிகுண்டு!
 
மனித வெடிகுண்டு எப்போது, எங்கிருந்து, யாரையெல்லாம் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வெடிக்கும் என்று தெரியாத நிலை. அதற்காக மனிதர்களைத் தயாராக்க அரசியலோ, தேர்தலோ, அரசோ, தனிநாடோ இவையொன்றும் தேவையில்லை. மத, இன, மொழிவேற்றுமை எனும் சிறிய தீப்பொறி போதும். அத்தீப்பொறியைக் காட்டுத்தியாய் மாற்ற முடியும் தீவிரவாதிகளால்!  அப்படிப்பட்டத் தீவிரவாத தீப்பொறி பலவிதமானக் கனவுகளைச் சுமந்து பறந்த சாதாரணம் மனிதர்கள் பயணித்த விமானத்தின் 9/11/2001 அன்று ஏறி அவ்விமானத்தையே ஏவுகணையாக்கி அமெரிக்காவில் உயர்ந்து நின்ற இரு கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து 2976 பேர் உயிரிழந்த அந்தக் கொடுமையை நினைக்கச் செய்யும் இப்புகைப்படம் இது போன்ற விபத்து எங்கும் எப்போதும் நிகழலாம் எனும் கசப்பான உண்மையை உணர்த்திக் காண்போரை எல்லாம் நிம்மதி இழக்கச் செய்கிறது.
 Image result for dust lady
“டஸ்ட் லேடியாக” சிலை போல் நிற்கும் இவரது பெயர் “மார்சி பார்டர்” (42 வயது)(Marcy Borders – 42) பயணிகள் விமானம் வேர்ல்ட் ட்ரேட் செண்டர் கட்டிடத்தில் மோதும் போது அதன் 81 வது மாடியுலுள்ள பேங்க் ஆஃப் அமெரிக்காவில் பணியாற்றியவர். எப்படியோ உயிர் தப்பி, அருகிலிருந்த கட்டிடத்தின் வரவேற்பறைக்குச் சென்ற அவரை அங்கிருந்த “ஸ்டான் ஹோண்டா” என்பவர் புகைப்படம் எடுத்திருக்கிறார்.  அந்தப் புகைப்படம்தான் இது. அவ்விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள மார்சிக்கு 10 ஆண்டுகள் ஆனது. அப்படி இது போன்ற விபத்துகளில் உயிர் பிழைப்பவர்களில் எவ்வளவு துயரத்துடன் வாழ்கிறார்கள் என்பதற்கானச் சான்றாகும் புகைப்படம் இது.  சிலமாதங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மார்சி உயிரிழந்தார்.  இது போன்ற ஆயிரக்கணக்கானோர் இப்படிப்பட்ட விபத்துகளிலிருந்து  உயிர்த் தப்பி இதேபோல் பலவித இன்னல்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மக்களுக்காக “இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்” நிறுவப் போராடுவோருக்குப் பயந்து சிரியாவிலிருந்து க்ரீஸ் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தங்கள் நாட்டையும், வீட்டையும், உற்றார் உறவினர்களையும் துறந்து ஓடும் மனிதர்கள் உயிரைப் பயணம் வைத்துப் படகேறி மறு கரை சேர்ந்துத் தங்களுக்கு அடைக்கலம் தரும் நாட்டைத் தேடி ஓடுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக ஆகும் போது, ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் ஐயம்.  சில நாட்டு எல்லையைக் கடக்க அனுமதிக்காத நிலையில், எப்படியேனும் அத்தடையை மீறி, அந்நாட்டிற்குள் நுழைய முயலும் பரிதாபத்திற்குரிய மக்கள். 
 
ஹங்கேரி நாட்டுச் சானலில் பணிபுரியும் ஒரு பெண், அந்நாட்டு எல்லையில் அகதிகளைத் தடுக்கும் காவல்துறையினரின் தடையை மீறிக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுபவர்களைத், தன் காலால் தட்டி விழச் செய்யும் கொடுமையைக் காண்பிக்கின்றது இப்புகைப்படம். அதுமட்டுமின்றி இப்படி எல்லா அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதற்கு எதிராக ஒரு நிகழ்ச்சியையும் அவர் பணியாற்றிய சானலில் ஒளிபரப்பச் செய்தாராம் அந்தப் பெண். மனிதாபிமானமற்ற இச் செயலால் அப்பெண்ணிற்கு அவ்வேலையை இழக்க நேர்ந்தது. அடைக்கலம் தேடிவருவோரின் எண்ணிக்கை அதிகமானால், அடைக்கலம் கொடுப்போருக்கு ஏற்படும் அதிர்ச்சியைக் காட்டுகின்றது இப்படம்.  எனினும் பாதுகாப்பாக பயமின்றி வாழ்வோர்கள், பாதுகாப்பின்றி பயத்தோடு அடைக்கலம் தேடி வருவோர்க்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது அவர்களது கடமை. அதை அவர்கள் அடைக்கலம் தேடி வருவோருக்குச் செய்யும் உதவியாக கருதக் கூடாது.

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முஹம்மது கசூரியின் “நைதர் எ ஹாக்-நார் எ டவ்-அன் இன்சைடர் அக்கவுண்ட் ஆஃப் பாகிஸ்தான் ஃபாரின் பாலிசி” எனும் புத்தகத்தின் வெளியீடு மும்பையில் “அப்செர்வர் ரிசர்ச் ஃபௌண்டேஷன்”ன் சேர்மேனும், பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளருமான, சுதீந்தர குல்கர்னி, நடத்தக் கூடாது என எச்சரிககி விடுத்திருந்தது சிவசேனா.
 Image result for khurshid kasuri
அதையும் மீறிப் புத்தக வெளியீட்டிற்குக் சென்ற குல்கர்னியைக் காரிலிருந்துப் பிடித்து வெளியே இழுத்துக் கரி எண்ணயை அவரது தலையில் ஊற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.  அவ்வெதிர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் இப்புகைப்படம். விரோதமுள்ள இரு நாடுகளுக்கிடையே எப்போதும் விரோதத்தை வளர்த்துக் கொண்டே போவதை விட, இப்படி இரு நாடுகளுக்குமிடையே நட்பை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அளித்து அவற்றை நடத்தி விரோதத்தைக் குறைத்துக் கொள்வதுதானே இரு நாடுகளுக்கும் நல்லது.

“நீங்கள் எல்லோரும் இனி என் சகோதரர்களே, கடந்த 3 ஆண்டுகள் மனக்கசப்புடன் வாழ்ந்துவந்தேன். இப்போது என் வாழ்வு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது.  விரைவில் என் வேலையில் மீண்டும் சேர்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும்.  இப்பேருதவியை வெளி நாட்டிலுள்ள முகம் தெரியாதவர்களிடமிருந்து கிடைக்கப் பெறுவேன் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.  இது என்னுடைய இரண்டாம் பிறவியே”.
 
ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் காப்டனான அப்துல் ரஹீமின் வார்த்தைகள் இவை. 3 ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்திற்கடியில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வதில் நிபுணரான இவர், பாகிஸ்தான் எல்லை அருகே, 30 கண்ணி வெடிகளைச் செயலிழக்கச் செய்த பின்னர், 31 வது கண்ணிவெடியைச் செயலிழக்கச் செய்ய முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் இரு கைகளின் மணிக்கட்டிற்குக் கீழே உள்ள பாகத்தை இழந்தவர்.  கடந்த ஏப்ரல் மாதம் கொச்சி அமிர்தா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சில், பைக் விபத்தில் மரணமடைந்த ஏலூரைச் சேர்ந்த தைப்பரம்பில் டி இ ஜோசஃபின் கைகள் மாற்று அறுவைச் சிகிச்சையின் மூல அப்துல் ரஹீமிற்குப் பொருத்தப்பட்டு, அவருக்கு இரண்டாம் பிறவி அளித்த போது கூறிய வார்த்தைகள்தான் இவை.  ஜோசஃபின் மனைவிக்கும், மகளுக்கும் மாற்று அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், உயிர் பெற்று எழுந்த ஜோசஃபின் கைகளை உயர்த்தி நன்றி சொல்லும் இப்படம், மனித நேயத்தையும் மருத்துவ உலகின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சியையும், அன்பு ஆதரவு, கனிவு, கருணை போன்றவற்றிற்கு இன, மொழி, சாதி, மத பேதமில்லை என்பதையும் பறை சாற்றுகின்ற ஒன்று. வாழ்த்துவோம் இதற்குக் காரணமானவர்களை எல்லாம்.
Image result for most popular photograph of chennai floods
Image result for most popular photograph of chennai floods
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
இனியேனும் இல்லாமல் போன ஏரிகளையும், குளங்களையும், கால்வாய்களையும், ஆறுகளையும் உயிர்ப்பித்து இயற்கையோடு ஒன்றி வாழ உறுதி எடுப்போம். 

படங்கள்: இணையத்திலிருந்து

                 


செவ்வாய், 15 டிசம்பர், 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய் - 3



என் துக்கம் தீர அழுதுவிட்டு வருகின்றேன் என்றேன் இல்லையா. எத்தனை அழுதாலும் தீரப்போவதில்லை. சரி என் கதைக்கு வருகின்றேன். உங்களை நான் போரடிக்கின்றேனோ? இன்றோடு முடித்துக் கொண்டுவிடுகின்றேன். எனவே கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.

முடங்கிக் கிடந்த என்னை உயிர்ப்பிக்கின்றேன் என்று சொல்லி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லுவார்கள்.  அறிக்கை விடுவார்கள். ஆனால், இது வரை முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதே உண்மை.  கோடிக்கணக்கில் பணம் கொட்டினார்கள்.

2004 ஆம் ஆண்டு எனது (இயற்கை) அன்னை தனது சுனாமி எனும் அவதாரத்தால் வெகுண்டு எழுந்தாள் இல்லையா? அப்போது கூட, என்னை ஒதுக்கி, யாரும் கொண்டாடவில்லை என்றாலும் கூட, நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நான் ஆந்திராவில் 310 கிமீ தூரத்திற்கு பெட்டா கஞ்சம்(Pedda Ganjam) எனும் பகுதியிலிருந்து சென்னை வரை, என் அன்னையைக் கூட எதிர்த்துப்  பல மீனவர்களையும், குறிப்பாக வடக்கு மண்டலில் உள்ள கிராமங்களையும், காப்பாற்றிய வீராங்கனை, ஹீரோயின் நான் தெரியுமா?

ஆனால், சென்னையில் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என் உடல் பாகத்தை நீங்கள்தான் நசுக்கி விட்டீர்களே. என் பெருமை அறிந்த டாக்டர் திரு இராமலிங்கேஸ்வர ராவ் அவர்கள், கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஆய்ந்து, சுனாமியில் நான் செய்த வீர சாகசத்தைப் பெருமைப்படுத்தி, எனது முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, என்னை வேதாரண்யம் வரை வளர்த்தால், நான் ஒரு பஃபர் சோன் (Buffer zone) ஆக்ச் செயல்பட்டு, எதிர்காலத்தில் தமிழ்நாடு பலவித இயற்கை ஆபத்திலிருந்து காக்கப்படும் என்று சொல்லிப் பெருமையைச் சொன்னார்.

நான் முன்பே சொன்னேன் இல்லையா தென்சென்னையில் நான் நல்ல வடிநீர்க்கால்வாய் என்று, தென்சென்னைப் புறநகர் பகுதியில் ஜி எஸ் டி சாலையின் கிழக்குப் பகுதியில் எனது பெரிய சகோதரிகளாகிய ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் இதில் வரும் அதிக அளவு நீர், எனது சிறு சகோதரிகள் கால்வாய்கள் மூலம் பள்ளிக்கரணை கைவேலியை வந்து சேரும்.

ராஜிவ் காந்தி சாலை அருகே/பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் மடு பகுதியின் தென்புறத்தில் தனியார் சிலர், 40 அடி அகலத்துக்கு சிமென்ட் சாலைகள் போட்டு, நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடிகாலான ஒக்கியம் மடு பகுதியை, வன துறையிடம் ஒப்படைப்பதற்கு, பொதுப்பணி துறை தயங்கி வருகிறது. ஒக்கியம் மடுவை ஆக்கிரமித்துள்ள சாலையில், தனியார் கல்லூரி வாகனங்கள் நிற்கையில், அங்கு ஆக்கிரமிப்புக் கூடாது என்ற அறிவுப்பு வேறு வைத்துள்ளார்கள்.

      கைவேலியிலிருந்து என்னை வந்தடையும் நீர் என்னிலிருந்து சிறிது அடையாறுக்கும், மற்றொரு பகுதி முட்டுக்காடு வழியாகச் சென்று கடலில் சங்கமிக்கும்.  எவ்வளவு கன அடி தெரியுமா? வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி. ஆனால், இப்போது தென்சென்னைப் புறநகர் பகுதியை எனதன்னை பதம் பார்த்தாளே, எதனால்? அந்தப் பகுதியில் நீங்கள் எல்லோரும் எங்கள் மேல் ஆக்ரமித்து உங்கள் சுயநலத் தேவையைப் பூர்த்தி செய்ததனால். நானும் பேணப்படவில்லை. வெள்ள நீர் கடலில் கலப்பது பாதிக்கப்பட்டது. பல அடைப்புகளினால், தடுப்புகளினால். உங்கள் வீடுகளில் நுழைந்தாள்.

      இதைத் தடுக்கவும், நான் உடனடியாக நீரை வெளியேற்றி உங்களுக்கு உதவவும், ஒக்கியம் மடுவில் கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக கடலில் சென்றடைய குறுக்குவெட்டுக் கால்வாய் அமைத்து 4,500 கன அடி நீர் வெளியேறும் வகையில் 2008 ல் திட்டமிடப்பட்டது நான் முன்னரே சொன்னேன் அல்லவா, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் என்று அதன் கீழ், உங்கள் மத்திய அரசு 54 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், அந்த வழியில் சில தனியார்கள், தீம்பார்க்கின் ஒரு பகுதி இருப்பதால், இந்தத் தனியார்களின் சுயநலத்தால், நிலம் ஆர்ஜிதம் செய்வதில் தடை ஏற்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது இந்தச் சிறப்பானத் திட்டம். இதற்கு உங்கள் அதிகாரிகள் பலர் உடந்தைகள். இதைப் பற்றி விவரித்தால் நான் கொந்தளித்துவிடுவேன் என்பதால் விவரிக்கவில்லை.

      இதன் விரிவுதான் முன்னரே சொன்ன 100 கோடி 2014 ஆம் ஆண்டில்.  அதுவும் கைவிடப்பட்டது.  நன்றாகக் கவனமாகக் கேளுங்கள் மக்களே. 2008, 2014 களில் கோடிகள். இதற்கிடையில் 2010ல் நடந்ததைக் கேளுங்கள். ஒருவேளை, நான் பொய் சொல்லுகின்றேனோ என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது பாருங்கள், அதற்காக உங்கள் அதிகாரிகள் விட்ட அறிக்கையை இதோ அப்படியே சுருக்கமாகச் சொல்லுகின்றேன். குறித்துக் கொள்ளுங்கள்.


“பொதுப் பணித்துறை சார்பில், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கும் வகையில் சென்னை நகரில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பெரிய வடிகால்களை, சென்னை முழுவதும் உள்ள 12 வடி நிலங்களை வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்து மழை நீர் வடிகால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ரூ.633 கோடியில் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தும் பணிகள், 2013-ம் ஆண்டில் நிறைவு பெறும். நிறைவு பெறும்போது, பெரும் மழைக் காலங்களில், சென்னை நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை தவிர்க்கப்படும்.” என்று என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இதனடிப்படையில் இந்த 4 திட்டங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மத்திய ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட ஆணையத்திடம் இருந்து ரூ.1447 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.633 கோடியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.814 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” இதில் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு என்பதை நான் உங்களிடம் சொல்லவில்லை. சொல்லிப் பயனில்லை என்பதால்.

2013-ம் ஆண்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் சென்னையில் மக்கள் சந்திக்கும் மழை நீர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.” இதைக் கேட்டுச் சிரிக்கின்றீர்களா? அழுகின்றீர்களா? எனக்கு அழுகைதான் வருகின்றது.

தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன். 
2010 மத்திய அரசு 123 கோடி ஒதுக்கியுள்ளது, 2014 ல் முடிக்கும்படியாக என்று அதுவும் வெள்ள நீர் வடிவதற்கு. அடுத்து 2011 ல் 111.76  கோடி, 2010 ல் இதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டு 2012 செப்டெம்பரில் முடியும் என்று. இவை தவிர எனது வடக்குப் பகுதியான கால்வாய் பகுதியில் 14.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுத்தம் செய்ய.  ஆனால், நான் தான் ஏற்கனவே பல நோய்கள் பரப்பும் துர்பாக்கியவதியாக்கப்பட்டுள்ளேனே. அதில் இறங்கி சுத்தப்படுத்தவோ, கரை உயர்த்தி எழுப்பவோ முடியவில்லை உங்கள் மக்களினால். ஏனென்றால் நான், தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன்.  போதுமா? நீங்கள் சுயநல வாதிகள். இன்னும் கேளுங்கள்

உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் பள்ளிக்கரணையில் எனது மிகப் பெரிய இயற்கைச் சகோதரி சதுப்புநிலம் இருக்கின்றாள் என்று. மற்றும் மற்றொரு சகோதரி கொடுங்கையூர் ஏரி. இவர்களது நிலை என்ன தெரியுமா?  உங்கள் நகர் குப்பைகள் எல்லாம் இவர்களை நிறைத்து அவர்களது அழகையும், பயனையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். மட்டுமல்ல இவர்கள் பக்கம் வருகின்ற நீங்கள் எல்லாம் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்கின்றீர்கள். ஹும் அவர்களது தவறா? அவர்களது அழகைக் கெடுத்து நாறச் செய்திருக்கின்றோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு வெட்கமாக இல்லை உங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ள?

நான் ஓடும் பாதையில், வெட்டுவாண்கேணி மகாத்மா காந்திநகர் பகுதியில் என்னை கழிவுப்பகுதியாகவே ஆக்கிவிட்டார்கள் செப்டிக் லாரிக்காரர்கள். தெரியுமா? என்ன ஒரு கேவலமான செயல் நீங்கள் மனிதர்கள் செய்வது. உங்கள் கழிவுகளை உங்கள் மேல் பூசிக்கொள்ளுவீர்களா. என்னை எந்த அளவிற்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் சொல்லுவதற்கு நிறையவே உள்ளது. இதற்கு முடிவில்லை.  தொடர்கதைதான்.  சுருக்கமாகச் சொன்னால் என்னை அந்த அளவிற்குப் பாழாக்கியுள்ளீர்கள்.

Image result for buckingham canal chennai

Image result for collector gajalakshmi
காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் கஜலட்சுமி 

இன்று காலை என் தோழி கீதா சொன்னாள், “பக்கிங்ஹேம் உனக்கும் விடிவு காலம் வரலாம்” என்று.  காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளர் கஜலட்சுமி அவர் பகுதியில் இருக்கும் எனது சகோதரி அடையாறின் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்துத் தள்ள ஆணை பிறப்பித்து இடித்தாராம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இங்கு சென்னைக்கு வருவாரா அவர்? ஆனால், இங்கு சென்னையில், அரசாங்கமே என்னை ஆக்ரமித்துள்ளதே எம் ஆர் டி/பறக்கும் ரயில் என்று என்னைக் குறுக்கிச் சாக்கடையாக்கிவிட்டார்களே. அதை யாரால் என்ன செய்ய முடியும்? எப்படிப் படகு விடுவார்கள்? கஜலட்சுமி கொஞ்சம் என்னையும் வந்து சீர் செய்யுங்களேன்!

இந்த லட்சணத்தில் ஆந்திராவையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையில் காக்கிநாடாவில் இருந்து பாண்டிச்சேரி வரை என்மீது பெரிய படகுகள் வியாபாரத்திற்காகவும், உல்லாசத்திற்கும் செல்லுமாம்.  அதற்கான பணிகள் இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சோழிங்க நல்லூர் பகுதியில் என் மீது என் அழுக்கை அகற்றும் படலம் ஆரம்பித்து அதற்கும் கோடிகள் இறக்கியிருக்கின்றார்களாம். அதற்குள் என் அன்னைதான் ஒரு ஆட்டம் போட்டுவிட்டாளே! உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்களில் நல்ல உள்ளங்கள் பலர் உதவியதை நினைத்து மகிழ்கின்றேன். 

மக்களே! ஒன்று மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். பேரிடர் பேரிடர் என்று உங்களுக்கு ஏற்பட்டதைச் சொல்லுகின்றீர்களே. என்னையும், எங்கள் குடும்பத்தையும் இத்தனை வருடங்களாக குப்பை, கழிவுநீர் கிடங்குகளாக்கி வைத்திருப்பதைப் பேரிடர் என்று ஏன் நான் சொல்லக் கூடாது? யோசியுங்கள். திருந்துங்கள்.  விழித்தெழுங்கள். “இத்தனைக் கோடிகள் எங்கு சென்றன? சரியானத் திட்டம் இல்லாததால் எங்கள் உயிர்கள் பல இறந்தனவே. பலர் நிர்கதியாகியுள்ளனரே. உங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாமா” என்று கேளுங்கள்.


எங்களை நீங்கள் காப்பாற்றவில்லை என்றால், எங்கள் அன்னை அகோரத் தாண்டவம் ஆடும் சமயம் நாங்களும் அவளுடன் சேர்ந்து கோரத்தாண்டவம் ஆட வேண்டி வரும். எங்களைத் தடுக்க முடியாது உங்களால். உங்களைக் காப்பாற்ற இயலாது. எங்களால் உங்களுக்கு அழிவு நிச்சயம்.  இது எச்சரிக்கை! 

பின்குறிப்பு: உபரித்தகவல்  RecallPingale: Why a Chennai IAS officer’s story is going viral


  Image result for dr vijay pingale

இவர் டாக்டர் விஜய் பிங்களே. சென்னைக் கார்ப்பரேஷன் இணைகமிஷனர். நேர்மையான அதிகாரி, சென்னை சாலைகள், பாலங்கள் முறைகேடாக கப்பட்டுள்ளன, மழைநீர் வடியும் நிலையில் இல்லை என்பதை சொல்லி அதைக் கட்டிய கான்ட்ராக்டர்களின் பெயரை அறிவித்து, அவர்களைச் சரிசெய்யச் சொல்லி, இல்லை என்றால் ரூ 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி, மேலிடத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் , 3 நாட்களில் மாற்றப்பட்டார். - நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

படங்கள்” இணையம்


---கீதா