வியாழன், 15 அக்டோபர், 2015

குடந்தை ஆர் வி சரவணனின் “அகம் புறம்” குறும்படத்தின் புறம்

படத்தின் முதன்மையான கதாபாத்திரம் - ஹும் என்னை யாருமே கண்டுக்கிடலை...ஓல்ட் இஸ் கோல்டு??!!!

     நம் பதிவர் நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் அவர்களது கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பில் வெளிவர இருக்கும் இரண்டாவது குறும்படம் தான் அகம் புறம். 

Displaying vlcsnap-2015-10-08-21h11m07s514.png
ஸ்ரீதர் (டைரக்டரின் தம்பி), ஆரூர்மூனா - யப்பா இன்னா இஸ்டைலு, பில்டப்பு!

     இப்படத்தின் கதையை நண்பர் எழுதி பல மாதங்களுக்கு முன் அனுப்ப அதில் உள்ள லாஜிக் எல்லாம் பேசப்பட்டு மெருகேற்றப்பட்டு, கதைக் களமான வீடு, அதுவும் வீடு என்றால், அது பல சாதாரணக் குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு குடியிருப்பு போன்ற அமைப்பு தேவைப்பட்டதால், தேடல் படலம் ஆரம்பித்து, நண்பர் சரவணன் அவர்களின் நண்பரின் வீடு அதற்கு ஏற்ப அமையும் என்று இயக்குநர் நினைத்ததால் இயக்குநருடன், ஆவி, அரசன், கீதா சென்று பார்த்தனர். வீடு ஓகே.  (நண்பர் வீட்டில் விருந்தோம்பல் வித் பொங்கல், சாம்பார், சட்னி, டீ, காஃபி என்று அதகளம்.) நண்பருக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

Displaying vlcsnap-2015-10-08-21h09m45s024.png
கார்த்திக் (ஆவியின் தம்பி), துளசி, கார்த்திக் சரவணன் - 3 பேரும் ஏதோ திட்டம் தீட்டுறாங்களோ!?

எங்கு கோணங்கள் வைக்க வேண்டும் எப்படி வைக்க வேண்டும் என்று ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்டது.  ஏனென்றால் அது ஒரு தனி வீடு ஆனால் அதில் அமைந்த 3 தளங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. ஒவ்வொரு தளத்திலும் உள்ள வீட்டிற்கு படிகள் எறித்தான் செல்ல வேண்டும். மட்டுமல்ல மிகவும் பழைய வீடு, படிக்கட்டுகள் எல்லாமே மிகவும் குறுகியவை. ஏறுவதற்கு மட்டுமே இடம். நிற்பதற்கு இடம் மிக மிகக் குறைவு. ஒருவர் நின்றாலே கோணம் வைப்பது கடினம்.  அப்படி இருக்க இரண்டு, மூன்று கதா பாத்திரங்கள் ஒரு ஃப்ரேமுக்குள் வர வேண்டுமே, அதை எப்படி அமைப்பது என்று கலந்துரையாடி முடிவு செய்யபட்டு, எங்கள் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அஸ்வினையும் அழைத்து வீட்டைக் காட்டி, கதையைச் சொல்லி, கோணம் எல்லாம் சரி வருமா என்று கலந்துரையாடி முடிவு செய்தார் இயக்குநர்.
Displaying vlcsnap-2015-10-08-21h07m05s428.png
துளசி அப்படி என்ன சொல்லுறாரு கார்த்திக் சரவணன்கிட்ட? கார்த்திக் ஏன் இப்படிப் பாக்குறாரு..
வீடு மிகவும் நெருக்கமாக இருப்பதால், வெளிச்சம் பத்தாது என்பதால் விளக்குகள் வாடகைக்கு எடுக்க வேண்டி வரும் என்று அஸ்வின் சொல்ல, அதுவும் முடிவு செய்யப்பட்டது. அவருடனும் கலந்துரையாடி, அதற்கான ஏற்பாடுகள் தொடங்க நினைத்த போது சிறிய தடங்கல் ஏற்பட்டுத் தள்ளி வைக்கப்பட்டது.  மாதங்கள் உருண்டோடின.

     பின்னர், சில மாதங்களுக்கு முன் அதை இயக்கலாம் என்று முடிவு செய்த நண்பர் சரவணன் அதில் பங்கு பெற்ற எல்லோரது வசதியையும் கேட்டுப் படப்பிடிப்பிற்கான தேதி முடிவு செய்ய தொடர்பு கொண்டார். குறிப்பாக வெளியூரிலிருந்து வர வேண்டிய துளசி அவரது மனைவி இவர்களின் தேதி (கால்ஷீட்!!!!!!) வசதியாக இருக்க வேண்டுமே! இருவரும் ஆசிரியர்கள். சுதந்திரதின நாள் வசதியாக சனிக் கிழமை என்று ஆனதால், ஆகஸ்ட் 15, 16 என்று முடிவு செய்யப்பட்டது.

Displaying vlcsnap-2015-10-08-21h12m13s137.png
அரசன் எதுக்குப்பா கத்திய வைச்சுருக்காரு....படம் பார்த்தா தெரிஞ்சுட்டுப் போகுது!!

     அதன் பின் எங்கள் ஒளிப்பதிவாளர் அஸ்வினைத் தொடர்பு கொண்டால், தான் ஒரு வேலையில் சேரப் போவதாகவும், அந்த வேலையைப் பொறுத்து, உறுதிப்படுத்த அவகாசம் தேவை எனவும் இயக்குநரும் நாங்களும் என்ன செய்ய என்று தெரியாமல், அஸ்வினையும் விட மனதில்லாமல் காத்திருந்தோம். இறுதியில் அவர் உறுதி அளித்துவிட்டார்.

Displaying vlcsnap-2015-10-08-21h14m51s131.png
கோகுல், இயக்குநரின் மகன் ஹர்ஷா (வளர்ந்து வரும் மிகத் திறமையான படத்தொகுப்பாளர்)

     திரைக்கதையை, இயக்குநர், “திரைக்கதை எழுதுவது எப்படி” என்று தொடர் பதிவு இடும் நம் பதிவர் நண்பர் செங்கோவி அவர்களுக்கு அனுப்பி அவருடன் கலந்துரையாடினார். எங்கள் குழுவின் சார்பில் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்! அதனைப் பற்றிய முழுவிவரமும் இயக்குநர் தனது அனுபவப் பதிவில் பகிர்ந்து கொள்வார்.

Displaying vlcsnap-2015-09-03-14h25m53s447.png
வாத்தியார் பாலகணேஷ்...
குடந்தை ஆர் வி சரவணன் - இயக்குநரின் இயக்கம்

     வீடு மிகவும் குறுகிய தளத்துடன் இருந்தமையால், எல்லோரும் குழுமினால் ஃப்ரேம் வைப்பதுக் கடினம் என்பதால், நடிக்கும் கதாபாத்திரங்களை அந்தந்த ஷாட்கள் வரும் நேரத்திற்கு சற்று முன் வந்தால் போதும் என்று தீர்மானித்து, ஒவ்வொரு சீனுக்கான நேரமும் திட்டமிடப்பட்டது.  திட்டமிட்டபடி நடத்த இயலவில்லை என்பது வேறு விஷயம். துளசி, கார்த்திக் சரவணன், அரசன் இவர்கள் மூவரும் படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள்.

     எல்லாம் முடிவாகி, சுபதினமும் வந்தது. துளசியும் அவரது மனைவியும் கீதாவின் வீட்டில் தங்கினார்கள். மற்றவர்கள் எல்லோரும் சென்னைதானே! “ஆவி”?ஆவி கோயம்புத்தூரிலும் இருப்பார் சென்னையிலும் இருப்பார். கவலை இல்லை. அப்படியாக முதல் நாள் படப்பிடிப்பு சுதந்திர தினத்தன்று காலை 9 மணிக்கு முன் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு முடிந்தது.  

      அன்று சிறுவர்கள் வரும் காட்சிகளும், துளசி, அவரது மனைவி வரும் காட்சிகளும், கார்த்திக் சரவணன், ஆவியின் தம்பி கார்த்திக், ஆரூர்மூனா அவர்களும், குடந்தை சரவணனின் தம்பி ஸ்ரீதர் இவர்களுடன் துளசியுடனான காட்சிகளும் படமாக்கப்பட்டன. மறு நாள் காலை, ஞாயிற்றுக் கிழமை, வாத்தியார், அரசன், ஆவி, இவர்களுடன் துளசியுடனான காட்சிகளும், சிறுவர்களின் காட்சிகளும் என்று படப்பிடிப்பு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது.  

Displaying vlcsnap-2015-10-08-21h05m55s878.png
கார்த்திக் என்னாச்சுப்பா?  இப்படிப் பேயறைஞ்சாப்புல பாக்குறீங்க?!!

    பின்னர் டப்பிங்க் சென்னையில் நடைபெற்றது.  இயக்குநர் சரவணனும், கீதாவும் பாலக்காட்டிற்குப் பயணப்பட்டு துளசியின் வசனங்களைப் பதிந்து வந்தனர். தற்போது படத் தொகுப்பின் இறுதிக் கட்ட வேலைகள் ஒரு புறமும், படத்திற்கான இசை மறு புறமும் நடந்து கொண்டிருக்க, எல்லாம் முடிந்து முன்னோட்டக் காட்சி விரைவில் சென்னையில் நடை பெற உள்ளது. டீசர் வரும் வெள்ளி அன்று வெளியிடப்படும்.

     சரி இவ்வளவு சொல்றீங்களே கதை என்ன? ஒரு வரியேனும் சொல்லக் கூடாதனு நீங்கள் கேட்பது இங்கு வரை கேட்கின்றது.  மூச்! ஒரு வரிய சொல்லிட்டா அப்புறம் கதையே தெரிஞ்சா மாதிரி...என்னங்க அவசரம்? அதான் அது யுட்யூப்ல வரப் போகுதே விரைவில்! ட்ரெய்லர் நாளை 16.10.2015 முகநூலில் பகிரப்படும். 

     இக்குறும்படம் நல்ல அனுபவம்.  ஏனென்றால் குறுகிய படப்பிடிப்புத் தளத்தில் எப்படி எடுக்க வேண்டும் என்று சவாலாக அமைந்து பாடத்தைப் புகட்டிய படம் எனலாம். 

             படம் வெளியானதும் பார்த்து உங்களது அகத்தில் எழும் நேர்மையான விமர்சனங்களைப் புறத்தில் தெரிவிக்கவும் என்று கேட்டுக் கொள்கின்றோம். உங்கள் எல்லோரது ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி!!

செவ்வாய், 13 அக்டோபர், 2015

பசுமை மாறா நினைவுகளைத் தந்த புதுக்கோட்டை பதிவர் விழா - 2015



ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கின்றோம்.  கண் தெரியாத, காது கேட்காத, பேச முடியாதிருந்த அவரது சாதனை போற்றுதற்குரியது. அவரும் ஒரு நல்ல புதினம் எழுதி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  அது போல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரது வாழ்வும் வித்தியாசமான நிகழ்வுகளைக் கொண்டது.  எல்லோரும் முயன்றால் அவர்களால் மட்டும் எழுத முடிகின்ற ஒரு கதை அல்லது புதினத்தை எழுத முடியும் என்பது உலகறிந்த உண்மை. முன்பெல்லாம் எழுதுவது என்பது எல்லோருக்கும் இயலாத ஒன்று.  மிகக் குறைவான மாத, வார நாளிதழ்கள் இருந்த காலம்.  அதிலெல்லாம் அச்சடித்து வர அதிர்ஷ்டம் வேண்டும். ஆனால், இன்றோ எழுத மனமும், நேரமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எழுதக் கூடிய சூழல். நாம் எழுதுவதை பதிவிட நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவகம்! நாம் விரும்பும் போதெல்லாம் நம் விரல் தொடும் தூரத்தில் நாம் விரும்பும் பதிவுகள்.  அவற்றை வாகிக்கின்றோம்.  நம் பதிவுகளும் வாசிக்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள ஒத்துப் போகும் கருத்துக்களை உடைய நாம் எல்லோரும் நம் பதிவுகளை வெளியிட்டும், சக பதிவர்களின் பதிவுகளை வாசித்தும், அவற்றிற்குப் பின்னூட்டம் இட்டும் தமிழ் தரும் இன்பத்தை ஒரு சொட்டு விடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

பதிவுகள் எழுதாதவர்களும், வாசிக்காதவர்களும், “பதிவர்கள் பாராட்டு பெறுவதற்காக மட்டுமே ஒருவரை ஒருவர் பாராட்டிப் பாராட்டுப் பெறுபவர்கள்” என்றெல்லாம் சொல்லலாம்.  அதை எல்லாம் செவிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தமிழை நேசிப்பவர்கள் நாம்.  மனிதம் போற்றுபவர்கள் நாம்.  எல்லோரும் துன்பமின்றி வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் நாம். முன் தலைமுறையினரிடம் நன்றிக் கடன் பட்டதை மறவாமலும், வரும் தலைமுறைக்கு, நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை மறக்காமலும் இருந்து நம் படைப்புகளின் வாயிலாக எப்போதும் அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பவர்கள். ஆண்டு தோறும் விழாவெடுத்து ஆலமரமாய் வளர்ந்து வரும் பதிவர் மரத்தின் விழுதுகளையும், வேர்களையும் நம் தமிழ் மண்ணில் ஆழ்ந்திறங்கச் செய்து கொண்டிருப்பவர்கள்.
 
      அப்படி நாம் புதுக்கோட்டையில் நடத்திய நான்காம் வலைப்பதிவர் விழா மிகவும் சீரும், சிறப்புடனும், (ஆமாங்க ஒரு கல்யாண வீடு போன்று, சீர்கள் என்றால் இங்கு விருதுகள் தான்!!) நம் புதுக்கோட்டை நண்பர்கள் அனைவரின் முகம் மலர்ந்த, தமிழருக்கே உரிய விருந்தோம்பல் பண்பாட்டு உபசரிப்புடனும் இனிதே நடைபெற்று முடிவடைந்தது. அவர்கள் எல்லோரையும் மிகச் சிறந்த தலைமைப் பண்புடன், அன்புடன் வழிநடத்தி இந்த விழாவை வெற்றிகரமாக நடத்திச் சென்ற திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு பதிவர்கள் அனைவரது நன்றிகள்!  பாராட்டுகள்!  வாழ்த்துகள்!
      நம் புதுக்கோட்டை நண்பர்களின் உழைப்பு, ஒற்றுமை, ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் அனைத்தும் போற்றுதற்குரியது என்றால் அது மிகையல்ல. அனைவருமே நாம் என்ன கேட்டாலும் சரி, கேட்ட உதவிகளுக்கும் சரி, முக மலர்ச்சியுடன், புன்சிரிப்புடன் அயராது பதில் அளித்து உதவியமை நல்லதொரு எடுத்துக்காட்டு.  மட்டுமல்ல நம்மிடமும் அவ்வப்போது வந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா, ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லவும், சாப்பாடு நன்றாக இருக்கின்றதா என்று கேட்டுக் கேட்டுச் செய்த விருந்தோம்பல் பாராட்டிற்குரியது.

எத்தனை முறை அலைபேசியில் அழைத்தாலும், நடுநிசியில் கூட அழைத்தாலும் குறிப்பாக நாங்கள் தொடர்பு கொண்டவர் சகோதரி கீதா அவர்கள் சிரித்துக் கொண்டே வணக்கம் என்று ஆரம்பித்து, மகிழ்வுடன், அயராது பதில் அளித்தது மட்டுமல்ல, மீண்டும் எங்களை அழைத்து எங்களை விசாரித்து தகவல்கள் கொடுத்து என்று பல முறை எங்களை நன்றிக்கடனுக்குள்ளாக்கி விட்டார்!!! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் விழாக்குழுவினர் நண்பர்கள் கஸ்தூரி, பாண்டியன், சகோதரிகள் மைதிலி, மாலதி, ஜெயா உள்ளிட்ட அனைவருமே அப்படித்தான் இருந்தார்கள்! விழாக் குழுவினர் அனைவருக்கும் எங்கள் அனைவரது நன்றிகள்! (கொசுறு: சகோதரி மைதிலி குட்டிப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தார் என்றால் கஸ்தூரி நகைச்சுவையுடன் பேசி, பதில் அளித்துக் கொண்டு, இளைஞராக, இளைஞர்களுடனும் ஓடியாடிக் கொண்டிருந்தார்!!! இவர்கள் இருவரையும் விட 16 அடி பாய்ந்தார் அவர்களது செல்ல மகள் நிறை!!!! அவர் வரைந்து, காட்டிய படங்கள், அவர் எதிர்காலத்தில் நல்ல ஒரு ஓவியராக வருவார் என்று அடையாளப்படுத்தின! எங்களுக்குக் தோழியாகிவிட்டார்!!)

ஓவிய வடிவாக்கப்பட்டப் பதிவர்களின் கவிதை வரிகள் மிக அழகாக அந்த அரங்கின் இரு புறமும் அழகுற மிளிர்ந்தது. இது பதிவர் விழாவிற்கு ஒரு பொன் தூவல், தோரணம் போல் இப்போதும் மனக்கண்ணில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. பதிவர்களை நாம் அறிவோம்.  ஆனால், அழகிற்கு அழகு சேர்த்த ஓவியர்களை மேடைக்கு அழைத்துப் பாராட்டியது இவ்விழாவை வித்தியாசப்படுத்தி மேலும் சிறப்பித்தது. இடையிடையே தமிழ்பாடல்களை மிகவும் இனிமையான குரலில் பாடி செவிக்கு விருந்து படைத்த குயில்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், முனைவர் திருமிகு சோ. சுப்பையா அவர்கள் பேசுகையில், அழகியலான “சின்னவள் சிரிக்கிறாள்” புதுக்கவிதையை வாசித்து, வலைப்பதிவர்கள் எவ்வளவு அருமையான கவிதைகளைப் படைக்கின்றார்கள் என்று அதிசயப்பட்டார். அப்போது திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்கள் அந்தக் கவிதைக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது என்று சொன்ன போது, நடுவர்கள் தேந்தெடுத்தக் கவிதைக்கு மீண்டும் ஒரு பரிசு கிடைத்தது போல் ஆனது.  திருமிகு மீரா செல்வகுமார் அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்!

மூத்தப் பதிவர்களை மேடைக்கு அழைத்துக் கௌரவப்படுத்தியது மனதிற்கு இதமாக இருந்தது.

விக்கிப் பீடியா திட்ட இயக்குநரும், வலைப்பதிவருமான திருமிகு ரவிசங்கர் விக்கிப்பீடியாவிற்கு அனுப்பப்பட வேண்டிய கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
திருமிகு எஸ் ரா அவர்கள் பேசுகையில் நமது நண்பர் பதியர் முனைவர் திருமிகு ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் வரலாற்றுச் சேவைகளைப் பாராட்டிப் பேசிய போது மிகவும் பெருமையாக இருந்தது.

இடையிடையே பதிவர்களின் சுய அறிமுகம், பாயாசத்தில் இடையிடையே சுவைக்கக் கிடைக்கும் முந்திருப்பருப்பு, உலர் திராட்சை போல் சுவையாக இருந்தது.

தமிழ் இணையக் கல்விக் கழகம் பரிசுத் தொகைக்கான நிதி உதவி அளித்தது நம் பதிவர் விழாவிற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதலாம். புதுக்கோட்டைக் கணினித் தமிழ் சங்கத்தின் உதவி நம் வலைச் சித்தர் டிடியின் திறமையும் சேர்ந்த போது விழா அண்ணாந்து பார்க்கும் உயரத்தையே எட்டிவிட்டது.

ஆச்சி மனோரம்மாவிற்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, பதிவுலகம், கலை உலகில் கொடிகட்டி வாழ்ந்த பத்மஸ்ரீ மனோரமா அவர்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தியது.

வர இயலாத பதிவர்கள் காண்பதற்காக நேரடி ஒளிபரப்பை உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளில் உள்ள பதிவர்கள் கண்டு களிக்க முடிந்தது.  விழா நடந்து கொண்டிருந்த போது கில்லர்ஜி அழைத்து எங்களிடம் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். தம்பி ரூபனும் அழைத்துப் பேசினார். விசு அவர்களும் சொன்னார்கள் முழுமையாகக் காண முடிந்தது என்று.

காலை இடைவேளையில் மிக மிக அருமையான சுவையுடன் கூடிய  காய்கறி சாறு/ரசம்??(சூப்) வழங்கப்பட்டது. மதிய உணவும் சுவையாக இருந்தது.

புத்தக வெளியீட்டில் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் புத்தகம் “வித்தகர்கள்”, மற்றும் மலேசியா தவரூபன் எழுதிய “ஜன்னல் ஓரத்து நிலா” வும் வெளியிடப்பட்டன.

பதிவர்கள் கையேடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.  மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.  அதில் சில சிறிய குறைகள் இருக்கலாம். ஆனாலும், அதைப் பெரிது படுத்தாமல் இந்த முதல் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

புத்தக விற்பனைக்குப் பல புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டது.

மூத்த பதிவர்களான, புலவர் இராமானுசம், பழனி கந்தசாமி ஐயா, திருமிகு ஜிஎம்பி,(வழக்கம் போல் குடும்பத்துடன் வருகை தந்திருந்தார்), சீனு ஐயா, திருமிகு இராய செல்லப்பா, திருமிகு ரமணி அவர்கள், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, திருமிகு கரந்தை ஜெயக்குமார், திருமிகு கர்நல் கணேசன் அவர்கள், தமிழ் இளங்கோ ஐயா, திருமிகு முரளிதரன், திருமிகு கவியாழி கண்ணதாசன், வாத்தியார் பாலகணேஷ், திருமிகு ஜோதிஜி, சேட்டைக்காரன் திருமிகு வேணுகோபாலன்,  கூட்டாஞ்சோறு செந்தில், மணவை திருமிகு ஜேம்ஸ், ஆவி, சீனு, அரசன், குடந்தையார், திருமிகு முனைவர் ஹரணி, தருமி அவர்கள், விதைக்கலாம் குழுவினர், சோலச்சி, வைகறை, அன்பேசிவம் சக்தி, திருப்பதி மகேஷ், திருமிகு பகவான் ஜி, திருமிகு தமிழ்வாசி, திருமிகு ஏகாந்தன், அன்பே ஆண்டவன் எஸ் ஆனந்தக் கிருஷ்ணன், வெல்லூர் திருமிகு இராமன், திருமிகு ஜக்கி சேகர், திருமிகு மதுமதி, ஆரூர்மூனா, சகோதரிகள் உமையாள் காயத்திரி, தென்றல் சசிகலா, “பாட்டி சொல்லும் கதைகள்” திருமதி ருக்மணி சேஷசாயி அம்மாள், கலைஅரசி போன்றவர்களுடன் மிகக் குறைந்த நேரத்தில் பேசினாலும், பேசியவை எல்லாம் மனத்திரையில் கல்வெட்டுகளாய் காலமெல்லாம் வாழும்.  சந்தேகமே இல்லை.

ஆனாலும், வரவியலாத பல பதிவர் நண்பர்களில் சுப்புத்தாத்தா, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், கார்த்திக் சரவணன், தலைநகர் வெங்கட்ஜி, மலர்வண்ணன், கவிப்ரியன், சகோதரர் விஜு ஜோசஃப், நண்பர் தளிர் சுரேஷ், திவான், மேலையூர் ராஜா, கிங்க் ராஜ்,  திருமிகு சென்னைப்பித்தன், நண்பர் வலிப்போக்கன், சகோதரிகள் தேனம்மை, கீதா சாம்பசிவம், மஹேஸ்வரி பாலசந்திரன், அனு ப்ரேம், ராஜேஸ்வரி, போன்ற, கண்டு பேசக் காத்திருந்த பதிவர்கள் பலரும் வராதது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது.

நண்பர்கள் கில்லர்ஜி, ரூபன், தஞ்சையம்பதி திருமிகு துரைசெல்வராஜு, பரிவை சே குமார், தனிமரம் நேசன், கோயில் பிள்ளை, யாழ்பாவாணன், சொக்கலிங்கம், கவிஞர் பாரதிதாசன், யாதவன் நம்பி, நம்பள்கி, வருண் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, மேற்குக் கடற்கரை நண்பர்கள் மதுரைத் தமிழன், விசு, (இருவரையும் சந்தித்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கண்டு பேச ஆவல்தான்) நண்பர் கோ...கோ அல்லவா இவரை நாம்தான் சென்று சந்திக்க வேண்டும்...!!! சகோதரிகள், க்ரேஸ், அம்பாள் அடியாள், இனியா, இளமதி, ஏஞ்சலின், துளசிகோபால், அருணாசெல்வம், சித்ரா சுந்தர், கோமதி அரசு போன்றவர்களை எப்போது பார்ப்போம் என்ற எண்ணமும் பெரிதாகிறது செய்கின்றது.  காத்திருப்போம் நம்பிக்கையோடு.  காலம் கனியும். 

நம் நண்பர்கள் பலரும் விழா பற்றி, நிகழ்வுகளைப் பற்றிப் புகைப்படங்களுடன் எழுதுவார்கள் என்பதால் நாங்கள் இப்படி எழுதி முடித்துக் கொள்ளுகின்றோம்.

குறை இருந்தால் சொல்லுங்கள், சொல்லுங்கள் என்றுக் கேட்டுக் கொண்டே இருந்த விழாக் குழுவினருக்கு, நண்பர் அன்பே சிவம்/சக்தி அவர்கள், பதிவர் அறிமுகத்திற்காக மேடை ஏறிய போது சொல்லியதையே இங்கு வழி மொழிகின்றோம். “ஏதேனும் ஒருகுறை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சொல்லுகின்றேன் என்று சொல்லி ஒரு குறையும் சொல்ல முடியவில்லை என்பதுதான் குறையே”.

(விடுபட்ட பின் குறிப்பு:  மதுரைத் தமிழன் மாறுவேடத்தில் வந்திருந்தாரா என்பது யாருக்கேனும் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்...எங்களுக்குத் தெரிந்தவரை வரவில்லை...) 


வியாழன், 8 அக்டோபர், 2015

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இவ்வெழுத்தாளர்களுக்கு -2 !!

எழுத்தாளர்களில் நல்ல ஒரு சதவிகிதத்தினர் சமூகநலனை மனதிற் கொண்டு எழுதுபவர்களே. கலை, கலாச்சாரம், கல்வி, விளையாட்டு, அரசியல் அடாவடிகள், மூட நம்பிக்கைகள், சாதி மதக் கலவரங்கள் என்று சமூகத்தோடு தொடர்புடையவற்றைப் பற்றி அவர்கள் எழுதுவதுண்டு.  அவர்களது இனம், மொழி, மதம், அரசியல் தொழில் வாழ்க்கைச் சூழல், இறையுணர்வு போன்றவைகள் இடையிடையே அவர்களது கருத்துகளின் கழுத்தைப் பிடித்து இறுக்கும் என்றாலும், அவர்களது படைப்புகள் எல்லாம் பெரும்பாலும் மனிதம் போற்றுபவையாகவே இருக்கும். அதே நேரத்தில், எல்லாக் காலகட்டத்திலும் அதிகார வர்கத்திற்குப் பயந்தும், பணம் மற்றும் பதவிக்காக மட்டுமே எழுதும் எழுத்துத் தொழிலாளர்கள் இப்போது நம்மிடையே இருப்பது போல் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள். 


அப்படி, எழுத்துத் தொழிலின் எல்லா தொழில்நுட்பங்களையும் கற்று, காற்றுள்ள போதே அதற்கேற்பத் தூற்றி, லட்சாதிபதியானவர்களில் ஒருவர்தான் அமிஷ் திரிபாதி.  சிவபெருமானைப் பற்றிய மூன்று புதினங்கள் எழுதி வெற்றி வாகை சூடிய அவர், இப்போது ராமனைப் பற்றிய “சயோன் ஆஃப் இக்ஷ்வாகு” (Scion of Ikshvaku) எனும் புத்தகத்தை வெளியிட்டு புரட்சியே செய்திருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, இதுவரை, இப்புத்தகத்தின் 25 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டிருக்கிறது.  ராமனுக்குப் பெருமை சேர்க்க கடிவாளமின்றி ஓடிய அவரதுக் கற்பனைக் குதிரை, ராவணனை தசரத சக்கரவர்த்திக்கு வரி வசூலிக்கும் ஒரு வைசிய வியாபாரியாக மாற்றியதை நினைக்கையில் மனதிற்கு மிகுந்த வலி ஏற்படுகிறது.  இந்தியாவில் ராம ராஜ்யம் கொண்டுவர இருப்பவர்களின் மனதைக் கவர இப்படியெல்லாம் எழுதுவது அவசியம் என்று நினைத்திருக்கலாம்.

Mohammed Akhlaq
முகமது அக்லாக்

ஆனால், உத்தரப்பிரதேசம் தாத்ரியில் பசுவின் இறைச்சி உண்டதால்  கொலையே செய்யப்பட்ட, பாவம் அந்த முகமது அக்லாக்கிற்கு (50வயது), ராம ராஜ்ஜியமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவில் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் தெரியாமல் போய்விட்டது. இதனிடையே நுழலும் தன் வாயால் கெடும் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு என்பவர், தாத்ரியில் நடந்த அந்தப் படுகொலை பற்றிப் பேசுகையில், தான் பசு இறைச்சிச் சாப்பிடுவது உண்டு என்றும், இனியும் சாப்பிடத்தான் செய்வேன் என்றும் சொல்லி புலி வால் பிடித்திருக்கிறார்.  பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் பசு இறைச்சி சாப்பிடும் அவரது கொடும்பாவியை எரித்திருக்கிறார்கள். 

டாக்டர் கே எஸ் பகவான்.

இப்படி உயிருக்கு அஞ்சாது தன் அபிப்ராயங்களைச் சொல்லுபவர்களுக்கிடையில், கட்ஜு போன்ற நீதிபதிகள் மட்டுமல்ல சில எழுத்தாளர்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்தான் டாக்டர் கே எஸ் பகவான். அது போலவே இந்து மத தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, டாக்டர் கல்புர்கி போன்றவர்கள். இவர்களெல்லாம் பெரியார் சொன்னது போல் இறைவன் பெயரால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று சாதி பேசி, மனிதர்களிடையே காட்டப்படும் அநீதிகளுக்கும், அக்கரமங்களுக்கும் எதிரே குரல் கொடுத்தவர்கள்.

பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டால் புண்ணியம் பெருவீர்கள், தோல்வியாதிகள் நீங்கும் என்றெல்லாம் எல்லாம் வல்ல இறைவன் சொல்லவே மாட்டார். அப்படி ஏதேனும் இறைவன் சொல்கிறார் என்றால் அது சுயநலவாதிகளான சில மனிதர்களால், அவர்களது நன்மைக்காக உருவாக்கப்பட்ட இறைவனாகத்தான் இருப்பார் என்ற உண்மையை கர்நாடக மக்களிடம் சொன்னவர்கள்தான் இவர்களெல்லாம்.

இமயம் முதல் குமரி வரை சாதி சம்பிரதாயம் பரவத் தொடங்கிய 12 ஆம் நூற்றாண்டிலேயே, அதை எதிர்த்துக் குரல் கொடுத்த பசவன்னா வாழ்ந்த கர்நாடகத்தில்தான், டாக்டர் கல்புர்கி, இது போன்ற கருத்துக்களைச் சொன்ன ஒரே காரணத்திற்காகக் கொல்லப்பட்டிருக்கிறார். பசவன்னாவின் படைப்புகளை 18 பாகங்களாக வெளியிட்டு அவரது கனவான சாதியில்லா சமூகம் வளர வேண்டும் என்று விரும்பிய டாக்டர் குல்பர்கி, பசவன்னாவை இழிவுபடுத்திவிட்டார் என்றுக் குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டது வியப்பளிக்கிறது. 

இப்படித்தானே, கொங்கு நாட்டவரின் வரலாற்றுச் சிறப்பை உலகறியச் செய்த பெருமாள் முருகன், “சாமிப் பிள்ளைகளைப்” பற்றிப் பேசியவுடன், அவர் கொங்கு வெள்ளாளர்களின் விரோதியானார். இப்படி, முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தகர்கள் கண்டிப்பாக இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிலவச் செய்துவிடுவார்கள் சந்தேகமே இல்லை.  சாதிகள் ஒழியாது!!! கட்சிகளாய் மாறிவிட்ட சாதிகளை இனி ஒழிக்கவே முடியாது. முன்பெல்லாம் சாதி சம்பிரதாயம் பாராட்டிய உயர் சாதியினரான பிராமணர்கள் மற்றும் ஷத்திரியர்கள் என்ற நிலை போய் இப்போது அது பிற்பட்டவர்களும் பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். அப்போதுதானே, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேல்தான் நாங்கள் என்று சொல்லித் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.  அப்படி நடக்கும் போது, அவர்களுக்கு மேல் முற்பட்டோர் என்ற ஒரு வர்கம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வது போல்தானே ஆகிறது.  ஏன் இப்படி நம் தலையில் நாமே மண் அள்ளிப் போட வேண்டும்? என்பதை எப்போது உணர்வார்களோ? 
bபசவன்னா

சாதியை ஒழிக்க முயன்ற பசவன்னாவின் சிஷ்ய கோடிகள் கர்நாடகத்தில் லிங்காயத்துகள் ஆனது போல், கேரளத்தில் சாதியை எதிர்த்த எழுத்தச்சனின் சிஷ்யர்கள் எழுத்தச்சன் எனும் சாதியினர் ஆகியிருக்கிறார்கள்.  “ஒரு சாதி, ஒரு மதம், ஒரு இறைவன்” என்று சொன்ன ஸ்ரீநாராயண குருவோ பிற்பட்டவர்களான ஈழவ சாதியினரின் குருவாக மட்டும் ஆக்கப்பட்டும் இருக்கிறார்.  ஒரு போதும் இந்து மதத்தில் சாதியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்ததால் தானோ என்னவோ சாதிக்கு வித்திட்ட மனுஸ்மிருதியை எரித்த டாக்டர் அம்பேத்கர் லட்சக்கணக்கான தன் சிஷ்யர்களை எல்லாம் சாதி பேசாத, சாதி பாராத புத்த மதத்தவர் ஆக்கியேவிட்டார். 

இஸ்லாம் மதத்தில் உடலெடுத்திருக்கும் மத தீவிர வாதிகளின் இயக்கமான பொக்கோஹராம் இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் போன்றவை போல் இந்தியாவிலும் உடலெடுத்திருக்கும் இந்துமத தீவிரவாதிகளின் இயக்கங்கள் டாக்டர் கல்புர்க்கிக்குப் பின், டாக்டர் கே எஸ் பகவானை கொல்லப்போவதாய் மிரட்டி இருக்கிறார்கள்.  இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவதோ 1982ல் சங்கராச்சாரியாரைப் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் தான்.  இதுவரை 18 பதிப்புகள் வெளியான அப்புத்தகம் இந்தி, ஆங்கிலம், தமிழ், மளையாளம், மராத்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இங்குதான் ராமராஜ்ஜியம் கொண்டுவர முயல்பவர்களின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்து போகிறேன்.  “தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே” (தியானித்து உன்னுள் உறையும் இறைவனைக் காண்க) எனும் சைவ சித்தாந்தத்திலிருந்து உயிர்பெற்ற “அத்வைத” தத்துவத்தை (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே) வட தேசத்தில் பரப்பிய சங்கரர் எப்படிச் சாதியை உருவாக்கியவராக மாற்றப்பட்டிருக்கிறார் பாருங்கள்.

வட இந்தியாவிலுள்ள மீம்சார் கோயிலில் 14 ஆம் நூற்றாண்டில் வேதங்களையும், புராணங்களையும் சம்ஸ்க்ருத மொழியில் மொழியாக்கம் செய்த போது எவ்வளவு சாமர்த்தியமாக நம் முன்னோர்கள் அருளிய தத்துவங்களுக்கு இடையே தங்களது இனத்திற்கு நன்மை பயக்க வேண்டியவைகளைத் திணித்திருக்கிறார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஆதிசங்கராசாரியாரின் தத்துவங்களுக்கிடையேயும் சாதி சம்பிரதாயத்தை திணித்து விட்டார்களே! அவர்களது திறமையையும், சம யோஜித புத்தியையும் பாராட்டியே தீரவேண்டும்.!

புத்தகம் எழுதியதோடு நிறுத்திவிடாமல் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கே எஸ் பகவான் பகவத் கீதையைப் பற்றிப் பேசுகையில், 9 ஆம் அத்தியாயத்தில், 32 ஆம் ஸ்லோகத்தில், ஸ்ரீகிருஷ்ணன்,  “எல்லா பெண்களும், எல்லா சூத்திரர்களும், எல்லா வைசியர்களும், பாவம் செய்தவர்களே என்று சொல்லுவதாகவும், உண்மையிலேயே பதினாராயிரம் பெண்களுடன் வாழ்ந்த ஸ்ரீகிருஷ்ணன் தான் பாவி என்றும் சொல்லிவிட்டார். போதாதற்கு வால்மீகி அவர் எழுதிய ராமாயணத்தில் ஓரிடத்திலும் ராமனை இறைவனின் அவதாரம் என்று சொல்லவே இல்லை என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார். கூடவே ராமன் நாட்டை ஆண்டது 12 பிராமண ப்ரோகிதர்களின் உதவியோடு அவர்களது அறிவுரைப்படி என்றும் சொல்லியிருக்கிறார்.

இப்படிச் சொன்ன அவரை எப்படிக் கொல்லாமல் விடுவது? சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்றீனுக்கும், இஸ்லாம் மத தீவிரவாதிகள் “பத்வா” அறிவித்து அவர்களைக் கொல்லக் காத்திருப்பது போல், 37ஆண்டுகள் மைசூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய் பணியாற்றிய, ஏராளமான ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பு நடத்திய, மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவரும், சமூக சீர்திருத்த வாதியுமான மனிதம் போற்றும் டாக்டர் கே எஸ் பகவானையும் கொல்லப்போவதாக இந்துமத தீவிரவாதிகள் மிரட்டியிருக்கிறார்கள்.  அச்சமின்றி நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கர்ஜிக்கும் இந் நக்கீரன் பகவானைப் பாராட்டுவோம்.

இப்படி எழுத்தாளர்களைக் கொன்றும், கொலை செய்வோம் என்று மிரட்டவும் செய்யும் எழுத்துச் சுதந்திரம் இல்லாத இந்நாட்டில் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற விருதுகள் வேண்டவே வேண்டாம் என்று 6 கன்னட எழுத்தாளர்கள் கன்னட சாகித்திய பரிஷத்திற்கு அவைகளை திரும்பக் கொடுத்தே விட்டார்கள்.  அதுபோலவே சாகித்திய அகாடமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்களான உதய் ப்ரகாஷும், நயந்தாரா செகாலும், அசோக் வாஜ்பேயும் அவர்களது விருதுகளைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். இப்படி எழுத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதும், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களைக் கொல்லுவதும் தான் ராமராஜ்ஜியம் என்றால் அப்படிப்பட்ட ராமராஜ்ஜியம் இந்தியாவில் வராமல் இருப்பதே நன்று. கூடவே காவல் துறையின் பாதுகாப்புடன் வாழும் டாக்டர் கே எஸ் பகவானுக்கு மன நிலை பிறழ்ந்த மத தீவிரவாதிகளிடமிருந்து ஆபத்தேதும் வராதிருக்க வேண்டும்.

புதன், 7 அக்டோபர், 2015

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா! -1

“கேக்கற செய்திய நம்பறதானு தெரில....அவன் இறந்துட்டான்னும் சொல்லிக்கறாங்க...”

“அடப்பாவி!”......தொடர்ச்சி இதோ....

“ம்ம்ம் என்னத்த சொல்ல.  இது நம்ம ராஜ்ஜியம் இல்லையே...”

இப்படியாக வருத்தத்துடன் நாட்கள் கடந்து இரு புலியார்களும் சாதாரண நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

“சரி வேற என்ன நாட்டு நடப்பு? என்ன நியூஸ் நீதான் மனுஷங்க வம்புக்கு அலைவியே”

“அந்த வம்பும் உனக்கும் வேண்டித்தானே இருக்கு.  இந்த ஊருல ஒருத்தர் எழுதாறார் இல்லை?  வெங்கட்ஜி னு அவரு போட்டுருந்தாராம்...புதுக்கோட்டைனு ஒரு ஊராமே அங்க இந்த எழுதற மனுசங்க எல்லாம் மீட்டிங்க் போடுறாங்களாம்.”

“ஏய் இது பழைய நியூஸ். ஆங்க் வெங்கட்ஜி நல்லா ஃபோட்டோ புடிப்பாரு தெரியுமா? ம்ம் அதுக்குனு இப்ப உடனே போய் அலங்கரம் பண்ணிக்காத.  அவரு வரும் போது நம்மள ஒரு ஃபோட்டோ எடுக்கச் சொல்லிட்டா போச்சு. ச்சே விஜய் இல்லாம போய்ட்டான். ம்ம்ம்...  சரி விஷயத்துக்கு வர்ரேன். அதுக்கு அப்புறம் வேற நியூஸ் எல்லாம் கேட்டுச்சு. காடு ரொம்ப முக்கியம் அப்படினு போட்டி எல்லாம் வைச்சு,  இந்த மாதிரி காட்டை எல்லாம் மனுஷங்க அழிக்கறாங்க.  பூமி சூடாகுது.  நாலு காலுங்க எல்லாம் வாழ இடம் இல்லாம அலையுதுங்க பாவம் அப்படினு நம்மளுக்கு சப்போர்ட் பண்ணி நிறைய பேரு எழுதிருக்காங்க அது தெரியுமா?”

“ஆரம்பிச்சுட்டியா திரும்பவும் காடு காடுனு....ஹும்...”

“நீ சொகுசுக்குப் பழகிட்ட.  இங்க சுதந்திரக் காத்து இல்ல.  நாத்தக் காத்து. நமக்கு சப்போர்ட் பண்ண நிறைய பேரு இருக்காங்க. அப்புறம் இந்த விழாவை நடத்தறதுக்கு, நம்ம காட்டு ராஜா மாதிரி அங்க முத்துநிலவன் அப்படினு ஒரு பெரியவரு இருக்காராம்.  அவரு வேற நம்மள அழைச்சுருக்காரு அது தெரியுமா உனக்கு?”

“என்னது மனுஷங்க நம்மள அவங்க மீட்டிங்குக்கு அழைச்சுருக்காங்களா..யேய் அப்ப நம்ம உஷாரா இருக்கணும். கூப்பிட்டுட்டு நம்மள சுட்டுறப் போறாங்க....

“ஹ்ஹ்ஹ் ஆமா கண்டிப்பா சுடுவாங்க நம்மள....ஆனா துப்பாக்கியால இல்ல.  கேமரா, அது ஏதோ செல்ஃபோனாமே இங்க கூட நிறைய பேரு நம்மள எடுக்கறாங்க இல்ல.....அத வைச்சு சுடுவாங்க....சுட்டுப் பேப்பர்ல எல்லாம் போடுவாங்க. சும்மா எப்ப பாரு மனுஷங்கள இப்படிச் சந்தேகப்படுறியே.  இங்க பாரு அந்தப் பெரியவரு எப்படிப் பாடி அழைச்சுருக்காருன்னு.....ஆனா கொடுத்து வைக்கலையே..போக முடியாதே.....

புலியெனப் புறப்பட்டு வா!
சிங்கமென சீறி வா!
அலைகடலென ஆர்ப்பரித்து வா!
(ஆனா மனுசனா மட்டும் வந்துறாதே!) – என்றழைக்கும் அரசியல் பாணியில் அல்ல நண்பர்களே!  (நன்றி முத்துநிலவன் ஐயா)

அந்தக் கடைசி வரி பாத்தியா....மனுசனா மட்டும் வந்துறாதே!!! அப்படினு. அதுவும் அவங்க நாட்டு அரசியல் பாணில இல்லாம நம்மையும் அன்போடு நண்பர்களே! அப்படினு அழைச்சுருக்காரு பாரு.”

“மாட்டிக்கிட்டியா...மனுசனா மட்டும் வந்துறாதே!  அப்படினா அவரே மனுசங்க எல்லாம் மோசம் அப்படினுதானே சொல்லிருக்காரு?!! பிரியாணி போடுறாங்களோ அதான் இப்படி நாக்கத் தொங்கப் போட்டுட்டுப் பாட்டைக் காமிச்சுப் பேசற....”

“ஏய் சும்மாரு. நாம எப்படி போக முடியும்? மனுஷங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க. அங்க காட்டுல சிங்க ராஜா மீட்டிங்க் போட்டுருக்காருனு சொன்னல. அந்த மீட்டிங்குக்கும் நாம போக முடியாது நம்மள எங்க இந்த நம்ம டாக்டரும், ஆஃபீசரும் கூட்டிட்டுப் போகப் போறாங்க.  அதனால ஒரு செய்தி அனுப்பலாமானு யோசனை...மேல ஏதாவது கொக்கு இல்லைனா புறா பறக்குதானு பாரு”

“ஹும் என்ன செய்தியோ? சொல்லு பாக்கறேன்”

“நம்மள அன்போடு அழைச்சுருக்காங்க. எழுதறவங்க பலரும் நமக்கு ஆதரவா பேசறவங்க..  இந்த எங்கள் ப்ளாக் ஆளுங்க இல்ல அவங்க கூட நம்ம ஃபோட்டோ வீடியோ எல்லாம் போடுவாங்க. வெங்கட்ஜியும் அப்படித்தான். ஜிஎம்பி னு ஒரு வாலிப வயோதிகர், டிடி,(இவர் ரொம்ப ஃபேமஸ்) அப்புறம் க்ரேஸ் அக்கா, ஏஞ்சலின் அக்கா,, கீதாமதிவாணன் அக்கா, துளசிகோபால் அக்கா, செந்தில்அண்ணன், விசு அண்ணன், கில்லர்ஜி அண்ணன் அப்படினு ஒருத்தர் கில்லர்ன உடனே பயந்துராதே.  பேருதான் அப்படி. இப்படி ஒரு பட்டாளமே இருக்குது நமக்கு ஆதரவா பேச.  இவங்கள எல்லாம் சொல்லிட்டு எங்களைச் சொல்லலையேனு யாரும் கேட்டுராதீங்க நீங்க எல்லாருமே எங்களுக்கு ஆதரவாதானே எழுதறீங்க.”

“நல்ல மணக்குது......இல்ல நீ சோப் போட்டதச் சொன்னேன்....அதுசரி ஒரு முக்கியமான ஆளை விட்டுட்ட போல....ஏதோ மாறுவேஷத்துல ஓருத்தர் வராருனு நியூஸ் வந்துச்சே”

“ஏய் அது மதுரைத் தமிழன்! பரமரகசியம். வெளில சத்தமா சொல்லாத. அவரும் நம்மளப் போல புலி வேஷமா இல்ல சிங்க வேஷமா இல்ல....வேற...அவங்க மூதாதையர் வேஷமா.....தெரில. அவரு பூரிக்கட்டை அடிலருந்து தப்பிக்க இப்படி வந்தாலும் வரலாம் நம்ம கூட்டத்தோட கூட்டமா. நம்ம சிங்க ராஜா கிட்ட சொல்லணும் காட்டிக் கொடுத்துராதீங்க” அப்படினு. (நம்மளப் போலனு சொன்ன உடனே ம.தமிழன் கேப்பாரு அட நீங்களும் அப்ப மாறுவேஷம் தானா ஒரிஜினல் இல்லையா அப்படினு...நாங்க ஒரிஜினல் தமிழா! உர்ர்ர்ர்ர்)

“ஆமா...காட்டு ராஜாகிட்ட சொல்லிரணும் இல்லைனா அப்புறம் ம.தமிழன் கிட்ட மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்....ஹிர் ஹிர் ஹிர் ஹிர்...(ஒண்ணும் இல்ல இது எங்க சிரிப்பு!!). சரி அவங்க மூதாதையர்னா?”

“ம்ம்ம் அப்புறமா சொல்லுறேன். இப்ப விஷயத்துக்கு வரேன்.  நம்ம சிங்க ராஜாவுக்கு அனுப்ப ஒரு மனு தயாரிச்சுட்டேன். அவங்கள கேரளாலருந்து, துளசியோட அங்க புதுக்கோட்டைக்கு அனுப்பி அங்க ஸ்ரீமலையப்பன், மது/கஸ்தூரி விதைக்கலாம் குழுவ பார்த்து, “ஐயா அன்பர்களே நீங்க மரம் நடுறீங்கனு கேள்விப்பட்டோம். இங்கேயும் நடுங்க, எங்க காட்டுப் பக்கமும் எங்க ஏரியாவ அழிக்காம, இன்னும் காட்ட விரிவாக்குங்க. அப்படி இல்லைனாலும் இருக்கறதயாவது எங்களுக்கு விட்டுக் கொடுங்க அப்படினு உங்க அரசுக்கு கோரிக்கை வைச்சு செயல்படுத்துங்களேன். உங்களுக்குப் புண்ணியமா போகும்.”னு பேசச் சொல்லப் போறேன்”

“அதேதான்...அங்க பெரிய மனுசங்க எல்லாம் வராங்களாமே! யாராவது நம்ம கோரிக்கையைக் கேட்க மாட்டாங்களா”

“ம்ம்ம் அந்த நம்பிக்கைதான். சொல்லிட்டு அப்படியே அங்க நம்மள பத்தி எழுதினவங்கள்ல யாருக்கு முதல் பரிசு, 2வது பரிசு, 3வது பரிசு கிடைக்குதுனு பார்த்துட்டு கை குலுக்கி குல்ஃபி எடுத்துக்கிட்டு வரச் சொல்லப் போறேன். மனுஷங்க ...

"கிகிகிகி...ஏய் இரு இரு..அது குல்ஃபி இல்ல எனதருமைக் கணவர் புலியாரே!  அது செல்ஃபி”.

“சரி ஏதோ ஒண்ணு விடு...ஆமாம் அது என்ன ஒரு மா....திரி சிரிப்பு குல்ஃபினு சொல்லி?”

“அதெல்லாம் மதுரைத் தமிழன் கிட்ட கேளு..சொல்லுவாரு...."

"உர்ர் ..சரி அதெல்லாம் அப்புறம்.....ஆங்க் நான் சொல்ல வந்தது மறந்துரும்.....மனுஷங்க இந்த மாதிரி விழால என்ன பண்ணறாங்கனும் பார்க்கலாம், நம்ம மனுவ கொடுத்தா, அங்க போற நம்ம உறவுகள ஃபோட்டோ எடுத்து பேப்பர்ல போட்டு நாம படற கஷ்டத்த எழுதி, மனு பத்தி எல்லாம் போடுவாங்கல்ல? நம்ம சப்போர்ட்டர் பெரிய மனுசத் தலைகள் படிப்பாங்கல்ல?  ஏதாவது செய்ய மாட்டாங்களானுதான்..”

“ம்ம்ம்ம்ம் எனக்கு இங்கதான் பிடிச்சுருக்கு. ஹாங்க்....சரி இதெல்லாம் யாரு உனக்கு எழுதிக் கொடுத்தது?”

“அதுவா இதோ நாம பேசறத ஒட்டுக் கேட்டு எழுதுறாங்களே இவங்கதான்.  சரி நீ போய் பாரு சீக்கிரமா கொக்கு, புறா ஏதாவது பறக்குதானு....இன்னும் 4 நாள் தான் இருக்கு...சீகிரமா இதக் கொடுத்து விடணும்.”

கீதா