வெள்ளி, 18 செப்டம்பர், 2015

ஆயிரம் கண்களால் காக்கின்றேன் நான் உனை

Image result for accident cartoon motorcycleImage result for motorbike hitting a car cartoon
படங்கள் - இணையம்.

       இறைவனைக் கண்டதுண்டா?  இறைவனைக் காண்பிக்க முடியுமா?, இளைஞனான விவேகானந்தர் தன் கண்களில் படும் எல்லா சன்னியாசிகளிடமும் இறுதியாக ஒரு நாள் அதிகாலை இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இக்கேள்விகளைக் கேட்ட போது, அவர் உதித்துக் கொண்டிருந்த சூரியனைக் காண்பிக்க உலகில் வாழும் உயிரினங்களுக்கெல்லாம் உயிர் வாழத் தேவையான நீர், நெருப்பு, மண், காற்று, வெளி போன்றவை நிலைத்திருக்க வைக்கும் அச்சூரியனைப் படைத்த, இயக்கும் ஜோதி ஸ்வரூபனான இறைவனை, விவேகானந்தர் உணர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. உடனே அவர் பரமஹம்சரைத் தன் குருவாக ஏற்று அவரது சீடனாக ஆனாராம். இனி பரமஹம்சர் எப்படி இறைவனை உணர்ந்தார் என்பது இதைவிட விசித்தரமான சம்பவம்.  அவரது கண்மூடித்தனமான தீவிர பக்திக்குமுன் வேறு வழியின்றி ஆதிபராசக்தியான காளியே அவர் முன் தோன்றி அவர் படைத்த படையலை (நிவேதியத்தை) புசித்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களைப் போன்றப் புண்ணியாத்மாக்களுக்கு இயன்ற இக்காரியங்கள் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு இயலாத காரியம் என்றாலும் நம் எல்லோரது வாழ்விலும், “கடவுள் மாதிரி அவர் வந்து என்னைக் காப்பாற்றினார்”, “என்னால நம்பவே முடியலை.  எப்படி நான் அந்த விபத்திலிருந்து உயிர் தப்பினேன்.” “டாக்டர் நீங்கள் கடவுள் மாதிரி.....” போன்ற வார்த்தைகளை குரல் தழுதழுக்க பேசிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  அப்படி நம் எல்லோருக்கும் இறைவன் இருப்பதை உணர்ந்து மெய் சிலிர்க்க வைத்த சம்பவங்கள் நம் வாழ்வில் இடையிடையே எப்போதாவது நிகழ்ந்திருக்கும்தான்.  நீங்களும் யோசித்துப் பாருங்கள். ஓரிரு சம்பவங்கள் உங்கள் நினைவிற்கும் வருகிறது தானே. 

       பல்வேறு மதங்களைச் சார்ந்து வாழும் நாம் அனைவரும் பல மொழிகளில் பல பெயர்களில் அழைக்கப்படும் எல்லாம் வல்ல இறைவனிடம் நம் தேவைகளை, நம் ஆசைகளை, நம் எதிர்ப்பார்ப்புகளைம், நம் ஏக்கங்களையும் வெளியிட்டு அவை எல்லாம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்கள் தானே.  நம் இடையே இறை உணர்வும், மூட நம்பிக்கைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே என்று நம்பி நாத்திகர்களாய் வாழ்பவர்கள் மேற்கூறியவற்றைச் சொல்லாமலும், செய்யாமலும் வாழ்ந்தாலும் அவர்களது கடின உழைப்பு, சமயோசித புத்தி, தன்னம்பிக்கை, நேர்மை, கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றில் அவர்களுக்குத் தெரியாமல் உறையும் இறைவன் அவர்களுக்கு வாழ்வில் வெற்றியே தருகிறார்.  ஆனால், அவர்கள் தங்கள் கண்களால் காணாததை ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் கடவுளை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்தான்.

       அப்படி எல்லாம் சிந்திக்க முடியாத நான் என் பிரார்த்தனைகளின் போது நீண்ட தேவைப்பட்டியலை இறைவன் முன் வைப்பது வழக்கம்.  நிவர்த்திச் செய்யப்படும் தேவைகளுக்குப் பதிலாக, புதிய புதிய தேவைகள் அவ்வப்போது பட்டியலில் இடம் பிடித்து பட்டியலின் நீளத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதுண்டு.  வாரம் ஒரு முறை வீட்டிலிருந்து 115 கிமீ தூரமுள்ள பள்ளிக்குப் போகும் போது, வழியில் 27 கிமீ தொலைவில் உள்ள வண்டூர் சிவாலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டுப் போவேன்.  அது போல வெள்ளி அல்லது சனி மாலை வீடு திரும்பும் போது பள்ளிக்கு அருகே உள்ள காவில் பகவதியை வணங்கிப் போவேன். 100கணக்கான வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்லும் பாதையில், என் பைக்கின் மீதும், என் மீதும் உள்ள நம்பிக்கையை விட நான் வணங்கும் இறைவன் ஆபத்தேதும் நேராமல் என்னைப் பத்திரமாகச் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பார் என்ற நம்பிக்கைதான் அதிகம்.  சில நேரங்களில் அந் நம்பிக்கையின் தைரியத்தில் ஓய்வு தேவையான நேரங்களிலும் வேறு வழியின்றி ஓய்வெடுக்காமல் பயணம் மேற்கொண்டதுண்டு.  அப்போதெல்லாம் ஏற்பட்ட விபத்துகளில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது இறையருளால்தான் என்று எண்ணி கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறியதும் உண்டு.

       அது போன்ற ஒரு சம்பவம் கடந்த 13.09.2015 ஞாயிறு அன்று எர்ணாகுளத்திலிருந்து நிலம்பூர் வரும் வழியில் நடந்தது.  பொயட் தெ க்ரேட் குறும்படத்தின் முன்னோட்டக் காட்சியை ஒட்டி, 19.06.2015 க்ளாசிக் காலேஜ் நிலம்பூரில் படப்பிடிப்பு நடத்திய மாணவர்களின் பங்கேற்பு நிகழ்வின் படத்தொகுப்பு வெள்ளி இரவு, சனி பகலும், இரவுமாக நடந்து ஒரு வழியாக ஞாயிறு காலை 6 மணிக்குத்தான் படத் தொகுப்பு முடிவடைந்து அதன் முதல் காப்பி எடுக்க முடிந்தது.  மூன்று மாதமாகியும், படம் பிடிக்கப்பட்ட மாணவர் பங்கேற்பு நிகழ்ச்சிக் காணக்கிடைக்கப் பெறாத்தால், க்ளாசிக் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், முதல்வராக நடித்த டோனி சாரும் என்னிடம் கோபம் கொண்டிருக்கும் இவ்வேளையில், அன்றே அந்த டிவிடியை டோனி சாரிடம் ஒப்படைப்பது நல்லது என்று தோன்றியாதால் உடனே 180 கிமீ தொலைவிலுள்ள நிலம்பூருக்குப் பயணம் செய்ய முடிவு செய்தேன். முன்னால் குறிப்பிட்டபட என் மீதும், என் பைக்கின் மீதும் உள்ள நம்பிக்கையை விட எல்லாம் வல்ல இறைவனிடம் உள்ள நம்பிக்கையில் படத் தொகுப்பு நடந்து முடிந்த இடப்பள்ளி ஸ்டூடியோவிலிருந்து 7 மணிக்குக் கிளம்பி களமச் சேரியிலுள்ள அக்கா வீட்டிற்குச் சென்று குளித்துக் காலைச் சிற்றுண்டி உண்டு அங்கிருந்து 8.30க்குக் கிளம்பினேன்.  இடையே கண் அயர்ந்தால், சாலை ஓரம் நிறுத்தி சிறிது நேரம் வண்டியில் சாய்ந்து அமர்ந்து உறங்கிச் செல்லலாம் என்ற எண்ணத்துடன் எப்படியும் 2 மணிக்கு முன் டோனி சாரிடம் டிவிடியை ஒப்படைத்துவிட்டு வீடு சென்று நல்ல ஒரு தூக்கம் போட்டுவிடலாம் என்ற எண்ணத்துடனும் தான்.

       அங்கமாலியைத் தாண்டியதும் என் எச் 47, 4 வழிச் சாலை ஆரம்பித்தது.  எதிரே வண்டிகள் வராது.  ஏறத்தாழ 10.30 மணி அளவில் இடையிடையே கண் அயர்ந்து உறங்குகின்றேனோ என்ற சந்தேகம் வந்ததும் வண்டியை நிறுத்தி, தண்ணீர் குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தேன்.  கண் திறந்த போது என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை.  கண் திறந்த போது ஒரு கண்டெய்னர் ட்ரக்கின் பின்னால் என் பைக் மோதுகிறது.  இடக்கையின் வலப்பக்கத்தில் இருந்த பின் பக்கம் பார்க்கும் கண்ணாடி, கண்டெய்னரின் இடது ஓரத்தில் தட்டி வளைகிறது. கூடவே கைப்பிடியிலிருந்து விடுபட்ட இடக்கையின் மூட்டிற்குக் கீழ் பாகம் கண்டெய்னரில் பலமாக இடிக்கிறது.  வலப்புறம் சரியும் வண்டியும் நானும் சாலையில் விழுகிறோம்.  வலது காலில் மூட்டில் நல்ல வலி. மூட்டின் கீழ் பாகம் உராய்ந்திருக்கிறது.  பைக்கில் எங்கெல்லாமோ தட்டியதால் வலது கணுக்காலில் மேலும் கீழுமாக இரண்டு இடங்களில் சின்னக் காயங்கள்.  எழுந்து நின்ற நான் எப்படியோ, 132 கிலோகிராம் பாரமுள்ள “யூனிகார்னை” உயர்த்தினேன். 

   எங்கிருந்தோ ஓடி வந்த உதவி மனப்பான்மை உள்ள இருவரில் ஒரு இளைஞன் என் வண்டியைப் பிடித்து நிறுத்தி ஏதாவது சிரமம் இருக்கிறதா? ஏதேனும் மருத்துவமனைக்குப் போக வேண்டுமா என்றார்.  சாலை ஓரத்தில் ஹெல்மெட் விற்கும் ஒருவர், “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துப் போனால் போதும்” என்றார்.  சுற்றும் பார்த்த எனக்கு ட்ரக்கின் பின்னால் 10 அடி தூரத்தில் ரோடு டிவைடர் உயபோகிக்கும் பைபரால் உருவாக்கிய கூம்பு வடிவுள்ள இரண்டு வைக்கப்பட்டுள்ளது.  களைப்பில் கண்கள் அயர்ந்து வேகம் குறைந்து வந்த வண்டி கண்டெய்னர் லாரியின் பின் புறம் மோதிய போதுதான் நான் கண்களைத் திறந்திருக்கின்றேன்.  மோதிய இடம் 3 அங்குலம் வலப்புறமாகத் தள்ளி மோதியிருந்தால், க்ளச் பிடித்திருந்த என் கைவிரல்கள் கண்டெய்னரில் பலமாய் மோதி விரல் எலும்புகளுக்குச் சேதமேற்பட்டிருக்கலாம்.  அறுவைச் சிகிச்சை, மாவுக்கட்டு, படுக்கையில் ஓய்வு, என்று 6, 7 மாதங்கள் வலியுடனும், வருத்தத்துடனும் கடத்த வேண்டியிருந்திருக்கலாம்.  அது இறை அருளால் நிகழாமல், சின்னதாகச் சில காயங்கள், சிராய்ப்புகளுடன் விபத்து நடந்து முடிந்த்தை எண்ணி நெகிழ்ந்தேன்.  மனம் எத்தனை முறை இறைவனுக்கு நன்றி சொன்னது என்பது நினைவில்லை.  வீட்டை அடைந்து பைக்கை நிறுத்தும் வரை சிவ நாமம் தான்.

       இது போல்தான் 2 வருடங்களுக்கு முன்பு பெருந்தல்மன்னா அருகே, பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் இடப்புறமுள்ள ஒரு சிறிய சாலையிலிருந்து ஒரு ஆல்டோ கார்.  கார் நின்றதோ நடுச் சாலை.  நான் ப்ரேக் போட்டும் பலனின்றி என் பைக் காரின் நடுவில் மோதியது.  உடனே பைக்கிலிருந்து மேல் நோக்கி எறியப்பட்ட நான் காருக்கு மேலே பறக்கிறேன்.  முதலில் காரின் மேல்பாகம் கண்ணில் தென்படுகிறது.  பின் கண்ணில் படுவதோ ஆகாயம்.  அதன் பின் காரின் மறுபுறம் உள்ள சாலையில் உட்காருவது போல் விழுகின்றேன்.  விழுந்ததும் பின்னால் சரிகின்றேன். என் தலையிலிருந்த ஹெல்மெட் சத்தத்துடன் சாலையில் இடிக்கின்றது.  பையை முன்னால் வைத்து நீண்ட, கால் முட்டின் கீழ் வரை மறக்கும் மழைக் கோட்டைத் திருப்பிப் (பின் பாகம் முன்னிலும், முன் பாகம் பின்னிலும்) போடுவதுதான் என் வழக்கம்.  மழை வெயில் இரண்டிற்கும் மட்டுமல்ல என் ஆடையிலும், பையிலும் தூசிகள் படியாமல் போவது நல்லது என்று அனுபவ ரீதியாக உணர்ந்ததால் நான் அப்படிப் பயணிப்பது உண்டு.  நான் காரில் மோதி காருக்கு மேல் தூக்கி எறியப்பட்ட போது, அந்தக் கோட்டும், பையும் ஒரு வேளை பாரசூட் போல் மாறி இப்படி ஆபத்தில்லாமல் என்னை மெதுவாக விழ வைத்திருக்கலாம்.  என் கால்சராய் பாக்கெட்டிலிருந்த மாவுக்கல் பிள்ளையார் மேல்தான் நான் உட்கார்ந்த படி விழுந்தேன். 

    அப்போது ஓடிவந்த பலரும், எழுந்து நின்ற என்னை அருகிலிருந்த என்னைப் பிடித்துச் சென்றனர். உடலெங்கும் வலி.  கையிலும் கால்களிலும் அங்கிங்கு சிராய்ப்புகள்.  கூடி நின்ற எல்லோருக்கும் அதிசயம்.  இறையருளால்தான் நான் இப்படிப்பட்ட விபத்திலிருந்து தப்பினேன் என்றார் ஒருவர்.  நான் அவர்களிடம் என் ஹெல்மெட்டைக் காண்பித்து, அதன் பின் பாகத்தில் அடிப்பட்ட இடத்தையும் காண்பித்து உயிர்காத்தது அந்த இறைவனும் ஹெல்மெட்டும் தான் என்றேன்.  முன் சக்கரம் வளைந்த என் வண்டியை ஒரு பெட்டி ஆட்டோவில் ஏற்றி ஒரு பணிமனைக்குக் கொண்டுச் சென்றேன்.  இது போல் ஓரிரு விபத்துகளிலிருந்தும் இறையருளால் இதன் முன் தப்பி இருக்கிறேன்.  எல்லாம் வல்ல இறைவன் இதுவரை காத்தது போல் இனியும் காப்பார் என்ற நம்பிக்கையில் என் நம்பிக்கையில் என் பயணத்தை இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.  ஒவ்வொரு முறை விபத்து நேர்ந்த பின்னும் என் வேகம் குறைகிறது.  தேவையான அளவு ஓய்வு எடுத்த பின்புதான் பயணிக்கின்றேன்.  

    ஆனால், எப்படியோ, இதெல்லாவற்றிற்கும் மேலாக இது போன்ற சம்பவங்கள் இறையுணர்வை வெகுவாக வளர்க்கச் செய்கின்றது.  என்பதற்காக “சக்திமான்” காப்பார் என்று நம்பி உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து, “சக்திமானே என்னைக் காப்பாற்று” என்று தாவிய குழந்தையின் மன நிலைதான் எனக்கு என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம்.  இறையருள் என்பது ஒரு கவசம் போல் எப்போதும் நம்மைக் காக்கின்ற ஒன்று.  இறையருள் பெற இறையுணர்வு எப்போதும் நம் மனதில் நிறைந்திருக்க நாம் எல்லா வழிகளிலும் முயல வேண்டும். இறைவன், “எப்போது நான் இருக்கிறேன் உன் அருகே உனைக்காக்க”, என்பதை உணர்த்தும் சம்பவங்களை அடையாளம் கண்டு, இறைவனுக்கு நன்றி கூறி, நம் வாழ்வின் இறுதிவரை இறை தொடர்பைப் பலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இராமகிருஷ்ண பரமஹம்சராகவோ, விவேகானந்தராகவோ ஆக முடியாத நம் போன்றவர்களுக்கு, இது போன்ற பலப்படுத்தல்தான் நோயற்ற வாழ்வுக்கு, நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு எப்படி உதவுகிறதோ, அது போல் உதவி, பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க உதவும் சக்தியாக நமக்கு அமையவிருப்பது என்பதை மறக்கக்கூடாது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய அவசியமில்லை - 2 + வலைப்பதிவர் விழாவிற்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள்

முந்தைய பதிவுக் கட்டுரையின் தொடர்ச்சி....

புதிய ஒரு மொழி கற்பவர்கள் முதலில் அம் மொழியிலுள்ள, நம் மொழியில் இல்லாத ஒலிகளை எழுப்ப பழகிக் கொள்ள வேண்டும்.  தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் உள்ளன. 30 வித்தியாசமான ஒலிகளை நுரையீரலிலிருந்து நாம் வெளியேற்றும் காற்றை நாக்கு, மூக்கு, பல் மற்றும் உதடுகளின் உதவியால் வித்தியாசமான ஒலிகளாக மாற்றி தமிழ் மொழியை பேசிக் கொண்டிருக்கின்றோம்.  இதில் 12 உயிர் எழுத்து ஒலிகளை எழுப்பும் போது, காற்று வாயினுள் எங்கும் தடைபடாமல் சுதந்திரமாக வெளியேறுகிறது.  ஆனால், ஆங்கில மொழியில் இதற்குச் சமமான A E I O U  எனும் எழுத்துக்களிலிருந்து உருவாகும் 12 வவ்வல் ஒலிகளும், 8 Diphthong  (2 வவ்வல் ஒலிகள்  சேர்த்துச் சொல்வது) இதில் நாம் பேசாத ஆனால் நம்மால் முயன்றால் எளிதாக எழுப்ப முடிகின்ற 8 ஒலிகளை நாம் முதலில் உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ் ஒலிகள் அடங்கிய வார்த்தைகளைப் பல முறை உச்சரித்து, அவற்றை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

/ə/ - about – நடு நாக்கை உபயோகித்து வாயை அதிகம் திறக்காமல் சொல்லப்படும் “அ” சப்தம்.

ə:- Turn - ə அந்த சப்தத்தைக் கொஞ்சம் நீட்டிச் சொல்லும் சப்தம்.

/ɪə/- இயா – Here,  

/eɪ/- எய் – Take,

/eə/ - எய – there, 

/ʊə/ - உஅ – Your,

/əʊ/ - ஒவ் – No (நோவ்), 

/ɔɪ/ - Boy ஆ வையும் ஓ வையும் சேர்த்து உச்சரிக்கும் போது அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலி

அதே போல் க்ச்ட்த்ப்ற் எனும் வல்லினத்திற்குச் சமமான Plosives ங்ஞ்ண்ந்ம்ன் எனும் மெல்லினத்திற்குச் சமமான Nasals, ய்ர்ல்வ்ழ்ள், எனும் இடையினத்திற்குச் சமமான Fricatives  ஆங்கிலத்தில் உண்டு என்றாலும், தமிழில் உள்ள ல, ள, ழ எனும் மூன்று இடையினத்திற்கு ஒரே ஒரு /l/ ல எனும் lateral சப்தம் மட்டும் தான் ஆங்கிலத்தில் இருக்கிறது. அது வித்தியாசமான இரு விதத்தில் Dark “l” ஆகவும், கிளியர் “l” ஆகவும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால், “வ்” எனும் இடையினத்திற்குப் பதிலாக, இரண்டு வித்தியாசமான ஒலிகள் ஆங்கிலத்தில் உள்ளன.  /v/- Victory எனும் போது உச்சரிக்கப்படும் /v/ - “வ” – கீழ் உதட்டை மேல் பல்லில் தொட்டு, காற்றைப் புறம் தள்ளி உச்சரிக்க வேண்டும்.  அதே சமயம், /w/- “வ” – ஒலியை உதடுகளை பல்லில் தட்டாமல், வட்டவடிவாக்கி காற்றைப் புறம் தள்ளி உச்சரிக்க வேண்டும்.

    18 மெய்யெழுத்துக்களுக்குப் பதிலாக 24 Consonant sounds ஆங்கிலத்தில் உள்ளன.  தமிழ் மொழியில் இல்லாத ஒலிகள் /w/- தவிர, /g/ - Gun,  /θ/ - Thin  “த”  எனும் ஒலியை நுனி நாக்கைப் பற்களின் பின் புறம் தொட்டுக் காற்றை வெளியேற்றி உச்சரிக்க வேண்டும். அதே சமயம் நாம் உச்சரிக்கும் “த” ஒலி நுனி நாக்கை பற்களின் மேல் அண்ணத்தில் தொடுவதால் உண்டாகிறது.  ð – This – “த” ஒலியை கொஞ்சம் அதிகமான சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.

/s/ -  “ஸ்” Sin, /z/ - Zoo, “ஸ்” சத்தத்தைக் கொஞ்சம் நீட்டி அதிகமான சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.  /ʃ/ - ஷ – Ship, /ʒ/ - Measure - ʃ ஷ சத்தத்தை நாவின் பின் புறத்தை உயர்த்திக் கொஞ்சம் அதிகமான சத்தத்தில்தான் உச்சரிக்க வேண்டும்.  /dʒ/ - ஜ – Judge.


       இப்படித் தமிழில் இல்லாத ஒலிகளை உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  30 ஒலிகளில் மட்டும் பேசிப் பழகும் நாம், ஆங்கிலத்தில் உள்ள 44 ஒலிகளையும் உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  ஆரம்ப பள்ளிகளில் 44 ஓசைகள் அடங்கிய ஆங்கில வார்த்தைகளை மாணவர்கள் உச்சரிக்கத் தேவையான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.  ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளித்து வெற்றி கண்ட பின் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நல்லது.

      ஆங்கில மொழிக்கு 44 வித்தியாசமான ஒலிகளை, வித்தியாசமாக உச்சரிப்பது எவ்வளவு இன்றியமையாததோ, அது போல் தான் வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஆங்காங்கே, “சிலபிள்”களில் அழுத்தம் (Stress) கொடுப்பதும்.  உயிரெழுத்தை (Vowels and Diphthongs)  மையமாகக் கொண்டு உருவாகும் ஒலிகளின் கூட்டம்தான் சிலபிள் என்று சொல்லப்படுகிறது.  உதாரணமாக “Take” என்பது ஒரு சிலபிள் வார்த்தை.  அதே சமயம் “Taking” என்பது “Take – ing” எனும் 2 சிலபிள் வார்த்தை.

      ஆங்கிலத்தில் “Bio” எனும் வார்த்தையை உச்சரிக்கும் போது “Bio” என்று முதலில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.  அதே சமயம், அது “Biology” என்றாகும் போது ‘Bio விலுள்ள அழுத்தம் அடுத்த சிலபிள் ஆன ‘Ology க்குத் தாவுகிறது.  மீண்டும் இவ்வார்த்தையை “Cal” சேர்த்து விரிவாக்கி “Biological” ஆகும் போது ‘Ology  யில் இருந்த அழுத்தம் ‘logical க்குத் தாவி Bio’logical ஆகிறது. (‘பயோ, ப’யோலஜி, பய’லாஜிக்கல்) இப்படி அழுத்தமும் (Stress) உச்சரிப்பைப் (Pronunciation)  போலவே மிகவும் முக்கியமான ஒன்று. இதற்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.  அப்படி ஆங்கிலத்தில் உச்சரிக்கும் வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய சிலபிள் எது என்று அறிந்து பேசிப் பழக வேண்டும்.  கொடுக்கப்படும் பயிற்சிகளும் அதற்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும்.

      5 லட்சத்துக்கும் மேலான வார்த்தைகள் உள்ள ஆங்கில மொழியைச் சுலபமாக, எளிதாக நம் எண்ணங்களை வெளிப்படுத்த, நாம் அன்றாடம் உபயோகிக்கும் 1000 அல்லது 1500 வார்த்தைகள் போதும்.  அவற்றை உபயோகித்து, வாக்கியங்கள், வினாக்கள் போன்றவற்றை உருவாக்கத் தேவையான பயிற்சிகளைத் தேவையின் அடிப்படையில், அதாவது வீட்டில் சாதாரணமாக உபயோகிக்கும் வாக்கியங்கள், வினாக்கள், அலுவலகத்தில், பள்ளியில், பேருந்து நிலையத்தில், வங்கியில் உபயோகிக்கத் தேவையான வாக்கியங்கள், வினாக்கள் என்று பிரிவு படுத்திப் பயிற்சி அளிக்க வேண்டும்.  இயற்பியல், வேதியியல், உயிரியல் இவற்றிற்கு செய்முறை வகுப்புகள் என்பது போல் ஆங்கிலத்திற்குக் குறைந்தது 20% வகுப்புகள் “Communicative English” க்கு ஒதுக்கப்பட வேண்டும். அதற்குத் தனியாக தேர்வும், மதிப்பெண்களும் வேண்டும்.

   இப்படிக் கொஞ்சம் சிரமப்பட்டு மாணவர்களின் மொழி அறிவை அறிந்து, தேவையெனில் ஆங்கில அடிப்படை அறிவு நல்கி, அவர்களுக்குத் தேவையான, அவர்களால் எளிதாகப் பயிற்சி செய்யக் கூடிய விதத்தில் பயிற்சி அளித்து அவர்களது ஆங்கில மொழி பேசும் ஆற்றலை வளர்க்க வேண்டும்.  இதுவரை நாம் பின்பற்றிய கல்வி முறை அவர்களது ஆங்கில மொழியாற்றலை வளர்க்கவிலை எனில் அது மாணவர்களின் குறையே அல்ல. அது அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின், அவ்வாசிரியர்கள் எதை எப்படிக் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் மொழி வல்லுனர்கள் மற்றும் கல்வி இலாக்காவின் குறையேதான்.  அக்குறையைப் போக்கத் தேவையான வழிகளை இனியேனும் ஆராய்ந்து கண்டறிந்து செயல்படுத்தி, மாணவர்களின் ஆங்கில மொழியாற்றலைச் செம்மைப்படுத்த வேண்டும். 

      இறுதியாகச் சொல்ல வேண்டும் என்றால், நமது தாய்மொழியை நாம் நன்றாகக் கற்றுக் கொண்டோம் என்றால் எந்த ஒரு மொழியையும் அதன் அடிப்படையில் நன்றாகக் கற்றுக் கொண்டுவிட முடியும் என்பது மட்டுமல்லாமல், ஒருவேளை நாம் வேற்று மொழிச் சூழலில் பிறந்து, வளர்ந்து, அந்த மொழியில் நாம் வளர்ந்தாலும், அம்மொழியே தாய்மொழியாய் ஆனாலும், நமது தாய்மொழியை மறந்திடாமல், புறம் தள்ளாமல் இருத்தல் போற்றுதற்குரிய ஒன்று.

__________________________________________________________________________________________________

நம் வலை அன்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!  பதிவர் மாநாட்டில் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

1. கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி
2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
3.பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
4. புதுக்கவிதைப் போட்டி
5.மரபுக்கவிதைப் போட்டி

போட்டிகளுக்கான மொத்தப் பரிசுத் தொகை 50000 ரூபாய்!!!!!!!!!!  
முதல் பரிசு - ரூ 5000
இரண்டாம் பரிசு - ரூ 3000
மூன்றாம் பரிசு - ரூ 2000

மேலும் போட்டிகள் பற்றிய விதிமுறைகள், விவரங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றீர்கள் தானே....இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்கள்.  

முத்துநிலவன் ஐயாவின் வலைத்தளம்   முத்து நிலவன் ஐயா அவர்களின் வலைத்தளம்..

விழாவிற்கான வலைத்தளம்  விழாவிற்கான வலைத்தளம்..

போட்டிக்கான உங்கள் கட்டுரைகள் சென்றடைய வேண்டிய இறுதித் தேதி : 30-09-2015

உங்கள் கட்டுரைகளை இந்த மின் அஞ்சல் வழி bloggersmeet2015@gmail.com அனுப்பிவிடுங்கள்!  விருதை வெல்லுங்கள்!!!

ஹாங்க் ஒண்ணு சொல்ல மறந்துவிட்டோம்.  இந்தப் போட்டிகளில் வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  சரி அப்ப நாங்கனு பதிவர்கள் அற்ற சைலன்ட் ரீடர்ஸ் கேட்பது கேட்கின்றது.  நீங்களும் போட்டியில் பங்கு பெறலாமே...ஒண்ணும் இல்ல.. ஒரு வலை ஆரம்பிச்சுருங்க...பதிவர் உலகத்துக்குள்ள நுழைஞ்சுருங்க...அவ்வளவுதான்!!  கடினமா என்ன?!!!!!!!  

அனைவருக்கும் வாழ்த்துகள்!


வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய அவசியமில்லை

இந்தப் பதிவு சகோதரி தேனம்மை அவர்கள்,  தனது தளத்தில்  சனிக்கிழமை தோறும் இடும் சாட்டர்டே போஸ்டில் எனது பேட்டி இடம் பெற வேண்டிக் கேட்ட போது எழுதிய கட்டுரை.  அவர்கள் தளத்தின் சுட்டி இதோ. http://honeylaksh.blogspot.in/2015/04/blog-post_25.html மிக்க நன்றி சகோதரி தேனம்மை.  அவர்கள் அனுமதியுடன் இங்கு பதிவை இடுகின்றோம்.

     2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தாய் மொழியான தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்து மகிழும் நமக்கு, வெறும் 700 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் வாழ்ந்த சாசரால் எழுதப்பட்ட காண்டர்பரி டேல்சிலிரிந்து வளரத் தொடங்கிய ஆங்கிலம், இன்றியமையாத ஒரு மொழியாக மாறியிருப்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  தமிழகம் உட்பட இந்தியா மட்டுமல்ல, கடந்த நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலிருந்த சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், இப்போது ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. 

ஆனால், 16 ஆம் நுற்றாண்டில், ஷேக்ஸ்பியரின் கால கட்டத்தில் வாழ்ந்த ஃப்ரான்சிஸ் பேகன் போன்ற மேதைகள் ஆங்கில மொழிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்காது என்ற நம்பிக்கையில், அவர்களது படைப்புகளில் பெரும் பகுதியை க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில்தான் எழுதியிருக்கிறார்கள்.  இத்தகைய சூழலில் வளர்ந்த ஆங்கில மொழிதான் இன்று நூலக மொழி எனும் பதவியிலிருந்து, கணினி மொழி, இணைய மொழி எனும் உயர் பதவியை எட்டிப் பிடித்து உலக மொழியாய் மாறி, உலகெங்கிலும் உள்ள மக்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு மொழியாய் மாறியிருக்கின்றது.

பழைமையான க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளுக்கும், அதிகமான மக்கள் பேசும் சீன மொழிக்கும், தென் அமெரிக்காவில், ஸ்பெயினில், லாட்டின் அமெரிக்காவில் பேசப்படும் ஸ்பானிஷ், இனிமையான ஃப்ரென்ச் மொழிக்கும் கிடைக்கப் பெறாத பாக்கியம் எப்படி ஆங்கில மொழிக்குக் கிடைத்தது என்று கேட்டால், சந்தேகமே வேண்டாம், நமக்குக் கிடைக்கும் பதில்கள் இவைதான்.

16 ஆம் நூற்றாண்டு முதல், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு, வியாபார நோக்குடன் சென்று, அவற்றை எல்லாம் தங்களது சாம்ராஜ்யத்தின் பாகமாக மாற்றி, அந்நாடுகளை ஆண்ட ஆங்கிலேயர்களும், அவர்களுக்கு இருந்த மொழிப் பற்றும், ஜெர்மன், ஃப்ரென்ச்சு, டானிஷ், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் கலவையான ஆங்கில மொழி எல்லா மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைத் தன்னுள் உட் கொண்டு வளரத் தயாரானதும் அதற்கானக் காரணங்களே.  அத்துடன் 18, 19 ஆம் நூற்றாண்டுகளிலும் அதன் முன்பும், உலகில், முக்கியமாக ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும், வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்வுகளும், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், போன்ற மேதைகளால் நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அரிய நூல்களும் ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அச்சடிக்கப்பட்டு, புத்தகவடிவில் உலகெங்கும் உலா வரத் தொடங்கியதும், உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு அவற்றை எல்லாம் அறிய, ஆங்கில மொழி இன்றியமையாத ஒன்று என்பதை உணரச் செய்ததும் ஒரு காரணமே.

நம் நாட்டிலும், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் எழுதப்பட்ட அரிய நூல்களுக்குச் சமமான நூல்கள், வட மொழியிலும், திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு மொழிகளில் இருக்கத்தான் செய்தன.  ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த அவை எல்லாம் சமஸ்க்ருத மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு எல்லோரும் கற்கவோ, எல்லோராலும் கற்பிக்கப்படவோ அனுமதிக்கப்படாமல் பாழாய்ப் போனது நம் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.  அப்படித் தனி உடைமை ஆக்கப்பட்ட சமஸ்க்ருத மொழி எல்லோராலும், பேசப்படாத, வாசிக்கப்படாத காரணத்தால் அழிந்த போது, எல்லோராலும் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட ஆங்கில மொழி உலக மொழியாக வளர்ந்து விட்டது.  சமஸ்க்ருதம் மட்டுமல்ல. அது போல மக்கள் பேசாததாலும், எழுதாததாலும், அழிந்த மொழிகள் தான் ஈப்ருவும், லத்தீனும்.

20க்கும் மேலான மொழிகள் பேசப்படும் இந்தியாவில், இந்தி தேசிய மொழியாக அங்கீகாரம் பெற்ற போது, அது திராவிட மொழி பேசும் தென்னிந்திய மக்களுக்குக் கற்கவும், பேசவும் எழுதவும் சிரமமான ஒன்றானது.  எனவே, ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற நாம் ஆங்கிலத்திற்கு விடை சொல்லி அனுப்ப முடியவில்லை. ஆங்கிலம் நம்முடனேயே தங்கி விட்டது. தென்னிந்தியாவிலிருந்து, வட இந்தியா செல்லுபவர்கள் ஆங்கில மொழியின் உதவியோடுதான் தங்களது கருத்துகளை அங்குள்ளவர்களிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நிலை நம் நாட்டில் உருவானது.  

இந்தியப் பல்கலைகழகங்களில் ஆங்கில மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படுவதால் இங்கு கற்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கும் சென்று உயர் கல்வி பெறவும், வேலை வாய்ப்புத் தேடவும் முடிகின்றது.  இருப்பினும், 20 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலத்தில், ஒவ்வொரு மொழி பேசுவோரது மொழி ஆதிக்கம், அவர்கள் பேசும் ஆங்கிலத்தில் கலந்து விடுவதைத் தடுக்க, ஏனோ இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.  அல்லது எடுத்த முயற்சிகள் வெற்றி காணவில்லை என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது.  இனிமேலாவது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

உலகமயமாக்கலின் பாகமாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானதால், உலக மொழியான ஆங்கிலத்தை முறையாகக் கற்று, பேசவும், எழுதவும் வேண்டும். அதற்கு முதற்படியாக, ஆங்கில மொழியை முறையாகத் தொடக்கப்பள்ளி முதல் கற்பிக்க வேண்டும்.  பிற மொழி கற்பதால், தாய் மொழி கற்பதில் சிரமம் ஏற்படும் என்பதெல்லாம் வீண் வாதமே. இரண்டோ, மூன்றொ மொழிகளில் குழந்தைகள் சிரமமின்றி பேச முடியும்.  

உதாரணமாக, பீஹாரில், போத்கயாவில் பீடா விற்கும் லகன் எனும் 5 வயதுச் சிறுவன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலமும், கொரிய மொழியும், ஜப்பான் மொழியும் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறானாம். 6 வயது மோனு எனும் சிறுவன் ஆங்கிலம், ஜப்பான் மொழி, திபெத் மொழி மற்றும் தாய்லாந்து மொழிகளில் பேசி அவ்வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றானாம்.(!!) (பள்ளி செல்ல வேண்டிய இக் குழந்தைகள் இப்படிப் பணம் சம்பாதிக்க வைப்பது குற்றம்.  விரைவில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று நம்புவோம்.)  இதிலிருந்து 5 அல்லது 6 வயது குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய விதத்தில் மொழிகளைக் கற்பித்தால், கற்கும் சூழல்களை ஏற்படுத்தினால், அவர்கள் கற்பார்கள் என்பது உறுதியாகின்றது.

தொடரும் ...அடுத்த பதிவில் முடிகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர் விழாவிற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது. உங்கள் வருகையைப் பதிவு செய்யுங்கள். வர இயலவில்லை என்றாலும், வாழ்த்திவிட்டு, கையேட்டிற்கான விவரங்களையும், 20-09-2015 ற்குள் தயவாய் பதியுங்கள். உங்கள் விவரங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும், உங்களையும் பலரும் அறிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும். விழாவிற்கான வலைத்தளமாகிய இந்தத் தளத்தில் http://bloggersmeet2015.blogspot.com நிகழ்வுகள், தகவல்கள் அவ்வப்போது வெளியாவதால் அதைத் தொடருங்கள். தகவல்கள் அறிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கும், தகவல்கள் அறியவும், விவரங்கள் கொடுக்கவும், தங்கும் அறை தனியாக வேண்டும் என்றாலும் இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.  bloggersmeet2015@gmail.com