வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ஆவியுலக அனுபவம்

Image result for real ghostsImage result for ouija board
படங்கள் இணையத்திலிருந்து

ஆவிகளின் உலகம் பற்றி பல ஆராய்ச்சிகளும், ஆவிகளுடன் பேசியதாகப் பல அனுபவக் கட்டுரைகளும், கதைகளும் நீங்கள் கேட்டிருக்க, வாசித்திருக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் “எங்கள் ப்ளாகில்” ஒய்ஜா போர்ட் பற்றி நண்பர் ஸ்ரீராம் எழுதியதை வாசித்ததும் அதுவரை எனது நினைவலையில் எட்டிப் பார்த்து பதிய வேண்டும் என்று தோன்றாமல் என் மூளைப் பெட்டகத்தின் பரணில் இருந்த என் அனுபவத்தைக் கொஞ்சம் கஷ்டப்பட்டு மேலெடுத்து பதியலாமே என்று தோன்ற இதோ இங்கே.

நாங்கள் 8 பேர் – மாமா, அத்தை குழந்தைகள் என்று, ஒரே வீட்டில் எங்கள் பாட்டியின் (இந்திராகாந்தி) ஆட்சி – மஹாராணியார் ஆட்சியின் கீழ் வளர்ந்தோம். இந்த ஆவிகளுடன் பேசுவது பற்றி எங்கள் நண்பர்கள் பல கதைகள் விட, அந்த வயதிற்கே உரிய, எல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது.  நான் அப்போது 9 ஆம் வகுப்பு.

அதில் நாங்கள் நான்கு பேர் மட்டும் இந்த ஆவியுடன் பேசுவது பற்றி ஒரு விவாத கூட்டம் நடத்தி, வெளியில் சொல்லக் கூடாது, முக்கியமாக இந்திராகாந்தி பாட்டிக்குத் தெரியக்கூடாது என்று எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் கடன்களாகிய குச்சி மிட்டாய், பஞ்சு மிட்டாய், கலர்பென்சில், ரப்பர், ரிப்பன், வளையல், குச்சி ஐஸ், ரெக்கார்ட் படம் வரைந்து தருதல் போன்ற சில்லறை லஞ்சக் கணக்குகள், கமிஷன் எல்லாம் தீர்த்து தீர்மானித்துக் கொண்டோம். மீஷ, மேன லக்னம் பார்த்து நாள் குறித்து, எல்லோரும் உறங்கிய பின், ஆவிகள் உலா வரும் நேரமாகிய நடு இரவு 12 மணி என்று முடிவு செய்யப்பட்டது.

ஒய்ஜா அட்டை எல்லாம் என்ன என்றே தெரியாத அந்தக் காலகட்டத்தில், நண்பர்கள் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில், ஒரு அட்டையின் நடுவில் ஒரு வட்டம் வரைந்து இரு மூலைகளில் ஆம், இல்லை என்று மட்டும் எழுதினோம். அதன் நடுவில் சில கட்டங்கள் அதில் எண்கள். ஒரு டம்ளரில் தண்ணீர்.  அதுதான் மீடியம். (என்ன ஈரம் படம் நினைவுக்கு வருதா? நாங்க கதை எங்களோடதுனு எல்லாம் பிரச்சனை கிளப்ப மாட்டோம்) அறை என்றெல்லாம் இல்லாததால், திண்ணையை ஒட்டிய “நடை” எனப்படும் அறையில் விளக்கை அணைத்து விட்டு, இந்த அட்டையை வைத்து, இருட்டில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தோம். ஒரு 20 பைசா நாணயம்.  அதன் மீதுதான் விரல் வைக்க வேண்டும்.

அப்போதுதான் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது. அந்தக் கேள்வி எழுந்தது. எங்களுள், யார் ஆவியை அழைத்து,  ஆவியுடன் பேசப்போகிறார்கள்? எந்த ஆவியை அழைப்பது என்று. நான் மட்டுமே தைரியசாலி. எனவே நான் 2 ஆம் வகுப்பு படித்த போது இறந்து போன எனது அத்தையை, அத்தையின் செல்லம் நான், அழைப்பதாகச் சொன்னேன். (எங்கள் நால்வரில் இருவர் என் அத்தையின் குழந்தைகள்).

நான் கண்மூடி அத்தையை நினைத்துக் கொண்டு தியானித்து, அத்தை ஆவியை அழைத்தேன்.  டம்ளரில் இருந்த தண்ணீர் அதிர்ந்ததாகச் சொன்னார்கள் மற்ற மூவரும். அத்தை ஆவியுடன் பேசினேன்.

நாங்கள் ஏற்கனவே என்ன கேட்க வெண்டும் என்று தீர்மானித்திருந்ததால் – என்ன கேட்டிருப்போம்? - பாசாவோமா, ஃபெயிலாவோமா, நல்ல மார்க் கிடைக்குமா? நாங்கள் விரும்பியது கிடைக்குமா? இத்யாதி இத்யாதி கேள்விகள் தான். நான் அத்தை ஆவியுடன் பேசிக் கேட்க கேட்க, பைசாவின் மேல் இருந்த என் கைவிரல் அசைய பைசா நகர்ந்தது என்று மற்ற மூவரும் சொன்னார்கள். அப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பைசா நகர்ந்து எதைத் தொட்டதோ அதுதான் பதில்.

என் அத்தை மகள், “பாருடா நோ சொல்லுது அம்மா. ஆவி. அப்போ நான் ஃபெயிலா” என்று அழத்தொடங்கிவிட்டாள். பின்னர் கேள்விகளின் சரக்கும் தீர்ந்துவிட, அழைத்த ஆவியை போ என்றெல்லாம் சொல்லவில்லை. நன்றி கூட உரைத்த நினைவு இல்லை. நான் கண்ணைத் திறந்தேன். என் கைவிரல் பைசாவுடன் அட்டையை விட்டு வெளியே வந்து பௌன்ட்ரி அடித்திருந்தது. ஆவியின் உலகத்தில் இதற்கு என்ன பதில் என்று தெரியவில்லை. சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. பின்னர் கல்லூரி வந்த பிறகு இதைக் குறித்து அறிந்து கொள்ள விழைந்து வாசித்த போது...

நான் அறிந்தது, ஆவிக்கும் பேய்க்கும் வித்தியாசம் உண்டு எப்படி என்றால் ஆவி என்பது நல்லவை என்றும் பேய் என்பது கெட்ட சக்தி என்றும் சொல்லப்படுகின்றது. அப்போ பிசாசு? மிஷ்கின்தான் சொல்லிட்டாரே. ஆவிகள் ஆப்ஜெக்டிவ் பதில்கள் தான் சுருக்கமாக கொடுக்கும் போல. விரிவான விடை எல்லாம் கொடுக்காது போலும். சே! அப்போ என் கட்சி இல்லை. என் மகன் கட்சி.

ஆவி உலகத்தில் ஒளி மிகுந்த பகுதியில் இருப்பவை நல்ல ஆவி என்றும், இருள் பகுதியில் இருப்பவை பேய்கள், தீய ஆவிகள் என்றும், நல்ல ஆவிகள் மட்டுமே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் (அட அங்கும் ஜோசியர்கள் இருக்கின்றார்கள்!!) தீய ஆவிகள் சொல்வது சரியாக இருக்காது, மட்டுமல்ல குழப்பமும் விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

விலங்குகளின் ஆவிக்கு என்று தனி உலகமாம். (ஓ அங்கும் விலங்கியல் பூங்கா இருக்கு போல!!) ஆவி உலகிலும் சட்டங்கள் எல்லாம் உண்டாம். தவறு செய்தால் தண்டனை உண்டாம்! அட! ஆவிகளுக்கே தண்டனையா?!! அங்கு நல்ல ஆவிகள்தான் ஆட்சி நடத்துகின்றனவாம். அப்ப அங்கயும் தமிழ் படம் மாதிரி ஹீரோ வில்லன் எல்லாம் உண்டு போல. இந்த ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவிகள் இப்படிச் சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. 

அட!  அந்த நல்ல ஆட்சியப் பார்த்துட்டு ஆவி உலகத்தை ஒரு சுத்து சுத்திட்டு, பயணக் கட்டுரையாக ஒரு பதிவு எழுதலாமோ! +++ என்பது இருந்தால் அங்கு நிச்சயமாக –-- ம் இருக்கும் என்பதுதானே உலக நியதி! உலகமும் இரண்டும் கலந்துதானே இயங்குகின்றது! ஒன்று மட்டும் இருந்தால் இயக்கம் இருக்காது! அதனால் தான் ஆவி உலகிலும் நேர்மறை, எதிர்மறை எல்லாம் இருக்கின்றது போலும். ஒரு வேளை இதைத்தான் நம்மவர்கள், நல்லவர்கள் சொர்கத்திற்கும், கெட்டவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்று சொல்லுகின்றார்களோ?

இது அப்போதே, தெரிந்திருந்தால், நான் அன்றே எனது அத்தை ஆவியிடம் -நல்ல ஆவிங்க- இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்டிருப்பேனே! இந்த போர்டை உபயோகித்து ஆவியை அழைப்பதில் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அபாயகரமானதாம்.  எப்படியோ நாங்கள் தப்பித்தோம்.  இல்லை என்றால் அத்தை ஆவி வரவில்லை போலும். நகர்ந்தது எல்லாம் எங்கள் கற்பனையாகவும் இருக்கலாம்.

இந்த ஒய்ஜா என்பது மிகவும் பிரபலமாக இருக்கின்றது. பெரிய புள்ளிகள் எல்லாரும் கூட இதை உபயோகித்திருக்கின்றார்கள். மிகப் பிரபலமான மேலை நாட்டு கவிதாயினி, எழுத்தாளர் சில்வியா ப்ளீத் ஆவிகள் உலகில் மிக மிக ஆர்வமுடன் ஒய்ஜா போர்ட் உபயோகித்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆவி உலகில் ஆர்வமுடையவராக இருந்த இவர் தற்கொலை செய்துகொண்டார். இவரது ஆவி?

நம்மூரில் சில வருடங்களுக்கு முன் ஆவி அமுதா என்பவர் ஆவிகளுடன் மீடியேட்டராகச் செயல்பட்டு நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பெற்றுத் தருவதாகச் சொல்லப்பட்டார்.. பல பேட்டிகள். பல பெரிய புள்ளிகள் அவரைத் தொடர்பு கொண்டதாகச் சொல்லப்பட்டு பரபரப்பாகப் பேசப்பட்டார். இப்போது அவர் யோகா கற்பிப்பதாக எங்கேயோ வாசித்ததாக நினைவு.

நேற்று நான் ஆவியுடன் பேசினேன். ஆவியிடமிருந்து அழைப்பு! அட! இது நம்ம நண்பர் ஆவிங்க! (கோவை)

பின் குறிப்பு: ஆவிகள் உலா வரும் இடங்களில் உங்களுக்கும் உலா வர ஆசை என்றால் ராஜஸ்தானில் உள்ள பங்கார்ஹ் கோட்டை, குல்தாரா, மீரட்டில் உள்ள ஜிபி ப்ளாக், தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடி, குஜராத்தில் உள்ள துமாஸ் பீச், அஸ்ஸாமில் உள்ள ஜடிங்கா இன்னும் பல இடங்கள் உள்ளன நம் நாட்டில். இதே போல வெளிநாட்டில் ஆவிகள் உலா வரும் நகரில் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டால் இதோ நண்பர் கூட்டான்சோறு செந்தில்சுட்டியுள்ளார்.

---கீதா


திங்கள், 17 ஆகஸ்ட், 2015

சாம்பார்

Image result for vegetable sambar

சகோதரர் விஜு அவர்கள் தனது ஊமைக்கனவுகள் தளத்தில் “தோசை” என்ற பதிவில் அதனை பழைய இலக்கியத் தொடர்புகளோடு தமிழர்களின் உணவு என்று மிக அருமையாகச் சொல்லியிருந்தார். அன்றே தோன்றியது, தோசை என்றால் சாம்பார் வேண்டாமோ என்று! அதுவும் தமிழ்நாட்டு மக்களின் காலை உணவு சாம்பார் இல்லாமல் புலர்வதில்லை! தொடர்ந்து மதிய உணவிலும் இடம் பெறும் அளவு தமிழ்நாட்டின் அடையாளமாகவும், தமிழ் மக்களின் நாவிற்கும், மனதிற்கும் உகந்ததாகவும் ஆகிய ஒன்று. என்னதான் இப்போது ஏற்பட்டுள்ள நாகரீக வளர்ச்சியினால் எல்லா மாநில உணவுகளும், ஏன் பல நாடுகளின் உணவும், பல தமிழக நகரக் குடும்பங்களிலும், உணவகங்களிலும் கலந்து விட்டாலும், சாம்பார் காலை உணவிலும், மதிய உணவிலும் ஆட்சி புரியத்தான் செய்கின்றது.

தமிழ்நாட்டிற்கு வரும் பல மாநிலத்தவரும், ஏன் வெளிநாட்டவரும் கூட, “தமிழ்நாட்டில் உங்களுக்குப் பிடித்த உணவு எது” என்று கேட்டால், சாம்பாரைத் தாங்கள் விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவதாகச் சொல்வதைக் கேட்கும் போது  அது தமிழ் உணவாகத்தான் இருக்க வேண்டும். அப்படி என்றால் நான் கேள்விப்பட்டக் கதை? அது சொல்லும் வரலாறு?


                       குடம்புளி                         கோக்கம்

10 வருடங்களுக்கு முன் புனாவிற்கு என் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கு ஒரு நண்பரின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றிருந்தோம். நம்மூர்காரர்தான் ஆனால் பல வருடங்களாக அங்கேயே இருப்பவர். அங்கு ஆம்டி எனப்படும் பருப்பு (குழம்பு) சாதத்திற்கு வைத்திருந்தார்கள். அது வேறு ஒன்றுமில்லை, புளிக்குப் பதிலாக கோக்கம் - புளியைப் போன்றது - போட்டு செய்திருந்தார்கள். (கேரளத்தில் இதைக் குடம் புளி என்று சொல்லுகின்றனர்.) சாம்பார் பொடிக்குப் பதிலாக கோடா மசாலா எனப்படும் மஹாராஷ்ட்ரா மசாலா போட்டு செய்திருந்தார்கள். நன்றாக இருந்தது. நான் அதன் குறிப்புகளை வாங்கிக் கொண்டேன். புளியும் போட்டு செய்வார்களாம். ஆம்டியிலிருந்து வந்ததுதான் சாம்பார் என்று சொல்லி நண்பர் இந்தக் கதையைச் சொன்னார்.


அதாவது, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் (நண்பர் தஞ்சாவூர்காரர்தான்) தஞ்சாவூரை மகாராஷ்ட்டிரா மன்னர் சம்பாஜி ஆண்டு கொண்டிருந்த போது ஒரு நாள் அவரது அரண்மனையில் கோக்கம் தீர்ந்து விட சமையல்காரர் தமிழகத்தில் விளையும் புளி போட்டு செய்தாராம்.  மன்னரும் மிகவும் விரும்பி உண்டாராம், வித்தியாசம் எதுவும் தெரியாமல். பின்னர் ஒரு நாள் சம்பாஜி மகாராஜா அரண்மனைக்கு வந்த போது அரண்மனையில் யாரும் இல்லாததால், தனது பசியைப் போக்கிக் கொள்ள தானே சமையற்கட்டிற்குள் சென்று தனது நளபாகத் திறமையைக் காட்டினாராம். அங்கிருந்த காய்கறிகளையும், பருப்பையும் சேர்த்துச் சமைத்து உண்டாராம். அதுதான் பின்னாளில் சாம்பார் என்று சொல்லப்பட்டது என்றார்.

அப்படியென்றால், சாம்பார் தமிழர்களின் உணவில்லையா என்ற கேள்வி எழ, அதன் வரலற்றைச் சற்று தேட ஆரம்பித்தேன் உட்கார்ந்த இடத்திலிருந்தே..அதாங்க இணையத்தில் தேட கிடைத்த தகவல்கள் சாம்பார் தமிழர்களின் உணவுதான் என்று தெரிய வந்தது.

“அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,” (கல்வெட்டடு, 503, 1530 CE) என்ற கல்வெட்டிலிருந்து நாம் அறிய வருவது, சம்பாஜி மன்னரின் ஆட்சிக்கு (கி.பி.1675) முந்தைய காலத்திலேயே தமிழகத்தில் இருந்திருக்கின்றது என்பது. கறியமுது - சம்பாரம் என்றால் பல காய்களையும், அரிசியையும் (அமுது) கொண்டு சமைக்கப்படும் உணவு என்ற பொருள். கறியமுது, நெய்யமுது, தளிகை என்பன வைணவத் தமிழில் வரும் சொற்கள் என்பது எனது புரிதல். (கேரளத்தில் சம்பாரம் என்றால் நீர் மோர் –உப்பு, கறிவேப்பிலை, மிளகாய், கடுகு என்று தாளித்து செய்யப்படுவது).

சாம்பு எனப்படுவது அரைத்த தானியங்கள், தேங்காய் என்ற பொருள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சம்பாரம் என்படும் சொல்தான் சாம்பார் என்று பின்னர் அழைப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்தச் சொல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சம்பல் எனப்படும் உணவுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது.

இதுவரை மேலே சொல்லப்பட்ட கதைதான் மனதில் இருந்தது.  தோசை தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றும் இது தமிழ் உணவு என்றும் சகோ விஜு அவர்கள் பல பாடல்களுடன் சொல்லியிருந்ததை வாசித்த போது அதற்குத் துணை போகும் சாம்பாரும் இலக்கியத்தில் சொல்லப்பட்டுளாதா என்று சில தேடல்கள்.  ஆனால், தமிழ் உணவு என்று, எங்கள் அறிவிற்கு எட்டிய தமிழ் விக்கியின் உதவியுடன் இங்கு சொல்லியாயிற்று. சகோ விஜு அவர்கள் இலக்கியப்பாடல்களுடன் சொல்லலாம் என்று நினைக்கின்றோம்.

---கீதா

படங்கள் : நன்றி - இணையம்

(ஹப்பா கீதா சின்னதா பதிவு போட்டுருக்காப்பா...அப்படியாவது மழை நல்லா பெய்யட்டும்...மழை வருதானு பாருங்க..)

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

பள்ளிச்சாலையைத் தந்த ஏழைத் தலைவன்...

     Image result for independence day
படங்கள் இணையத்திலிருந்து:  எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துகள்.  இது வெறும் வாழ்த்தல்ல! நம் கலாமின் கல்விக் கனவு நிறைவேற வேண்டும் என்ற நல்லெண்ணதுடனான வாழ்த்து.  அதையொட்டிய ஒரு பதிவு.   ஒரு சிறிய கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு சாமானியரால் கல்வியின் விதை ஊன்றப்பட்ட ஒரு செய்தியை, இந்த நல்ல நாளில், இங்கு சொல்வதற்கு மகிழ்கின்றோம்.



ஹஜ்ஜப்பா!

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.”
- அவ்வை

“.....நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்தின்
வேருக்கு நெக்கு விடும்’.”

      அவ்வையார் அருளிய இவ்வரிகளை எழுதும் இச்சமயம் மட்டுமல்ல, இவ்வரிகளை நினைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் வந்த போதெல்லாம்  என் மனத் திரையில், 1970ல், நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது எங்களுக்குத் தமிழ் கற்பித்த சுருளியம்மா டீச்சரின் உருவம் ஒளிர்வதுண்டு. கூடவே அன்று அவர் பாடி என் மனதில் பதிய வைத்த அந்த இனிய குரலும் தெளிவாக என் மனச் செவியில் விழுவதுண்டு.  இப்போதும் கூட மூக்குப் பொடிச் சிமிழில் இருந்து பொடி எடுத்து இடையிடையே மூக்கில் திணித்த பின்பு பாடிக் கற்பிக்கும் பழக்கமுடைய சுருளியம்மா டீச்சரின் உருவம் மனத்திரையில் மிளிர்கிறது. கூடவே எனக்குக் கற்பித்த மணி வாத்தியார், என்னைச் சித்திரகுப்தனாக நடிக்க வைத்த செல்லத் துரை வாத்தியார், ஆங்கிலம் கற்பித்த முத்துக் கருப்பையா வாத்தியாரும் மனத்திரையில் வந்து மனதை நெகிழச் செய்கிறார்கள்.  ஆனால், ஒரு போதும் இதற்கு முன், கட்டாயப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்ட, நான் 1 முதல் 5 ஆம் தரம் வரை கல்வி கற்ற அந்த ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியை, என் கிராமமான ராசிங்கபுரத்தில் நிறுவக் காரணமான, அதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றி கண்டவர்களை நான் நினைத்துக் கூடப் பார்த்த்தில்லை.

   அன்று ராசிங்கபுரத்தில் மறைந்த திரு சர்க்கரைப் பிள்ளை அவர்கள் நிறுவிய மல்லிங்கேஸ்வரர் இந்து உயர் துவக்கப்பள்ளி எனும் வேறு ஒரு பள்ளி, கிராமத்திலுள்ள மாணவ மாணவியர்களுக்கு நல்ல முறையில் கல்வி அறிவு புகட்டிக் கொண்டுதான் இருந்தது. இருப்பினும் வளர்ந்து வரும் அக்கிராமத்திற்கு, கிராமத்தின் வட கோடியுலுள்ள அப்பள்ளி மட்டும் போதாது என்றும், தென்பகுதியில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதற்கான முயற்சியில் இறங்கி, பள்ளி நிறுவப்பட காரணமாக இருந்த அந்த முகம் தெரியா நல்ல உள்ளம் படைத்தவர்களை 45 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மனமாரப் பாராட்டத் தோன்றுகின்றது.  அது போல் உயர்நிலைக் கல்வி பெற உதவிய போடி நாயக்கனூர் ஜ கா மு (ஜமீந்தாரணி காமூலம்மாள் நினைவு உயர்நிலைப் பள்ளி) யை நிறுவியவர்களையும், இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற மதுரைக் கல்லூரியை நிறுவியவர்களையும், முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்ற நாகர்கோவில் தெ தி இந்துக்கல்லூரியை நிறுவியவர்களையும் உளமாரப் பாராட்டத் தோன்றுகின்றது.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி என் மனதில் அவர்களைப் பற்றிய எண்ணம் திடீரென தோன்றக் காரணமான ஒருவர்தான் இந்த ஹஜ்ஜப்பா.!

      நான் இப்போது ஆசிரியனாய் பணிபுரியும், பாலக்காடு அருகேயுள்ள மாத்தூர் CFDVHS பள்ளியும் 1981 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி இல்லாதிருந்த ஒரு கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில நல்ல உள்ளம் படைத்தவர்களால், அவர்கள் ஒவ்வொரும் தங்களால் இயன்ற அளவு ஒரு தொகையை பள்ளியைத் துவக்கச் செலவிட்டு தொடங்கப்பட்ட பள்ளிதான். அவர்களது சேவையால் உருவான பள்ளி 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்து, உயர் மேல்நிலைப் பள்ளியாய் மாறி அப்பகுதிக்குத் தேடித்தந்த முன்னேற்றத்தை நேரில் கண்டறிந்தவன் என்ற முறையில், அதற்குக் காரணமான அப்பள்ளியை நிறுவியவர்களில் ஒருவரான மறைந்த திரு பாலகிருஷ்ணன் மாஸ்டரை (பாலன் மாஸ்டர்) நினைவு கூரத்தான் எங்களது மூன்றாவது குறும்படமான கார்பெண்டர் த க்ரேட்டை அவருக்குச் சமர்ப்பித்திருந்தோம்.

    ஆனால், இப்போதெல்லாம் தொடங்கப்படும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முதலீடு செய்பவர்கள் வியாபார ஸ்தாபனம் தொடங்குவது போல்தான் அவற்றைத் துவங்கி நடத்துகிறார்கள். தன்னலம் மட்டும் கருதி லாப நோக்குடன் நடத்தப்படும் அந்நிறுவனங்களை உருவாக்கும் வியாபார நோக்குள்ளவர்களைப் போலல்லாமல், முன்பெல்லாம் பொது நல நோக்குடன் தொடங்கப்பட்ட பள்ளிகளும், கல்லூரிகளும்தான் என்னைப் போன்ற, நம்மைப் போன்றவர்களுக்கு கல்வி போதித்த கல்விச் சாலைகள். அவற்றை நிறுவக் காரணமானவர்களை எப்போதாவது நினைவு கூர்ந்து அவர்களைப் பற்றி அறியாதவர்களுக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் பொது நல சேவை செய்யும் ஆர்வம் அடுத்த தலைமுறை ஒரு சிலருக்கேனும் தோன்றும்.


     சிறுவயது முதல் ஆரஞ்சுப் பழங்கள் விற்று தன் குடும்பத்தினரைக் காப்பாற்றி வந்த ஹரேக்களா ஹஜ்ஜப்பா, மங்களூருவில் தன் விற்பனைக்கிடையே, ஏதேனும் ஒரு சமயம், தனக்கு ஏட்டுக் கல்வி அறிவு இல்லாமல் போன குறையை உணர்ந்திருக்க வேண்டும். அது போல ஒரு இழிநிலை தன் கிராமத்திலுள்ள  அடுத்த தலைமுறைக்கு ஏற்படக் கூடாது என நினைத்த அவர், அதற்காக பலரையும் அணுகி பலனில்லாமல் போகவே, தானே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள  தீர்மானித்திருக்கிறார். அப்படி 1991 ஜூன் 6 ஆம் தேதி, தன் கிராமமான, ஹரேக்களாவிலுள்ள த்வாக் மஸ்ஜிதின் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆரஞ்சுப் பழங்களை விற்று தான் சேமித்து வைத்த பணத்தின் உதவியால் ஒரு பள்ளியைத் தொடங்கியும் விட்டார் ஹஜ்ஜப்பா. 


  பள்ளிக்குக் குழந்தைகள் வரவேண்டி அவர்கள் பின்னாலும், அவர்களது பெற்றோர்களின் பின்னாலும் நடையாய் நடந்து ஒரு வழியாக 28 குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தும் விட்டார். அவர்களுக்குக் கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியையும் ஏற்பாடு செய்து அவருக்குச் சம்பளம் கொடுக்க, அன்றிலிருந்து, அதிகமான நேரமும், அதிகமான தூரமும் ஓடி ஓடி ஆரஞ்சுப் பழங்களைச் சுமந்து விற்கத் தொடங்கியும் விட்டார்.


    ஆனால், பள்ளி தொடங்கிய பின்பு, தொடங்கிய பள்ளிக்கு அங்கீகாரம் வாங்க அவர் அதைவிட அதிகமாக  கல்வி இலாகா அலுவலகங்களுக்கு ஓட வேண்டி இருந்தது.  முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் தானே? அங்கீகாரம் கிடைத்த போதுதான், அவருக்கு வேறு ஒரு விசயம் தெரிய வந்தது.  கிடைத்த அங்கீகாரம் நிலையான அங்கீகாரம் ஆக வேண்டுமெனில் பள்ளிக்குச் சொந்தமாக இடமும் கட்டிடமும் வேண்டியிருந்திருக்கிறது.  பல நல்ல மனிதர்களை நேரில் கண்டு உதவி கேட்டார். ஓடி ஓடி உழைத்தார். பலரிடம் கடனும் வாங்கினார்.  அப்படி 2001ல், தான் சேகரித்த ரூ 50,000 கொடுத்து பள்ளிக்காக 40 சென்ட் இடமும் வாங்கியேவிட்டார்.


    அதுவரை  ஏளனம் செய்தவர்கள் அதற்குப் பின் ஹஜ்ஜப்பாவை ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும் பார்க்கத் தொடங்கினார்கள்.  நல்ல மனமுள்ள பலரும் ஹஜ்ஜப்பாவின் வீடு தேடிவந்து அவருக்கு உதவவும் ஆரம்பித்துவிட்டார்கள்.  இதற்கெல்லாம் மேலாக “கன்னட பிரபா” எனும் கன்னட நாளிதழ் அவ்வருடமே அவரது சேவையைப் பாராட்டி நாளிதழின் “மேன் ஆஃப் தெ இயர்”  ஆக அவரைத் தேர்ந்தெடுத்து, பரிசுத் தொகையான ரூ 1 லட்சத்தை அவருக்குக் கொடுத்து உதவியது.

    2007ல் சிஎன்என், ஐபிஎன், “த ரியல் ஹீரோவாக” ஹஜ்ஜப்பாவைத் தேர்ந்தெடுத்து பர்சுத் தொகையான ரூ 5 லட்சத்தை வழங்கியது.  அப்போதும் பரிதாப நிலையிலிருக்கும் தன் வீட்டை புதுப்பிக்கவோ, தனக்கோ தன் மனைவி குழந்தைகளின் தேவைகளுக்கோ, கிடைத்த பரிசுத் தொகையிலிருந்து 1 ரூபாய் கூட எடுக்காமல் அதை அப்படியே தன் பள்ளிக்கு நன் கொடையாகக் கொடுத்துவிட்டார் ஹஜ்ஜப்பா.
 
     அன்றைய கர்நாடக கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர், ஹஜ்ஜப்பாவை தன் மாளிகைக்கு அழைத்து அவரைக் கௌரவித்தார். 2011 ஆம் ஆண்டு கர்நாடக அரசின் “ராஜ்யோத்ஸவ்”  பரிசும் அவருக்குக் கிடைத்தது.  கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரு, குவேம்பு, தாபங்கரே எனும் பல்கலைக் கழகங்களில் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் “மூடிவாணி” (இனிய எழுத்துக்கள்) எனும் தலைப்பில் இளங்கலை மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

   இப்போது மங்களூருலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள “ந்யூ பதப்பு” எனும் கிராமத்தில் ஹஜ்ஜப்பாவின் பள்ளி 1 ½ ஏக்கர் இடத்தில், 10 வகுப்புகள் உள்ள இரண்டு கட்டடங்களாக தலை நிமிர்ந்து நிற்கிறது.  அரசின் உதவித்தொகையும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது இந்த “தக்ஷின கன்னடா ஜில்லா பஞ்சாயத்து ஹையர் ப்ரைமரி ஸ்கூலுக்கு”  ஒவ்வொரு வகுப்பிற்கும்  விவேகானந்தர், டாக்டர் ராதா கிருஷ்ணன், கல்பனா சாவ்லா போன்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.


  இப்பள்ளியை ஒரு மேல்நிலைப்பள்ளியாக்கியே தீருவேன் என உறுதியாக இருக்கும் நம் ஹஜ்ஜப்பாவிற்கு அது எட்டாக் கனியல்ல; உள்ளங்கை நெல்லிக் கனியே......மன்னிக்க....உள்ளங்கை ஆரஞ்சுப்பழமே!!! வாழ்த்துவோம் இம்மனிதருள் மாணிக்கத்தை!! போற்றுவோம்!! கல்விச் சாலையைத் தந்த இந்த ஏழைத் தலைவனை!!!

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து - நன்றி
பின் குறிப்பு: நாங்கள் இருவருமே இந்த மூன்று நாட்கள் வேலைப்பளு காரணமாக அன்பர்களின் வலைத்தளம் வர இயலாமல் போகும்...திங்கள் கிழமைதான் வலைப்பக்கம்.  காரணம்? விரைவில் வரும்..




புதன், 12 ஆகஸ்ட், 2015

தலைநகரில் நாலடியாரும், ஆறடியாரும் - 3

தில்லி ரயில் நிலையத்தில் தொட்டியில் தண்ணீர் தேங்கி தண்ணீர் பாட்டில்கள் மிதந்தன. 

தில்லிப் பயணத்தின் நிறைவுப் பகுதி. எனது முதல் பதிவில் எங்களுடன் பயணித்த உதவிப் பேராசிரியர் திரு தவசிலிங்கமும் அவரது மாணவர் குழு பற்றியும் குறிப்பிட்டிருந்தேன் இல்லையா அவர்களைப் பற்றி இதோ.

திரு தவசிலிங்கம், மதுரை சேது பொறியியல் கல்லூரி, இயந்திரவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இளைஞர். அவருடன் அவரது மாணவர்கள் 25 பேர் கொண்ட குழு தில்லியில் நடைபெற்ற பைக் ராலி போட்டியில் கலந்து கொள்ள பயணித்தார்கள்.  நிகழ்வின் பெயர் க்வாட் டார்க். மேலும் தெரிந்து கொள்ள இந்த சுட்டியைச் சொடுக்குங்கள்.  தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.  இங்கே நான் சுருக்கமாக?! தருகின்றேன்.

படமும் தகவலும் http://quadtorc.in தளத்திலிருந்து
"Quad-TORC" is an off-road design challenge for undergraduate and diploma students of engineering. Quad is a four-wheelers bike, which was initially developed as a farm-to-town vehicle in isolated and mountainous areas. This competition is to design and fabricate a QUAD BIKE under some rules and regulations specified in rule book. This complete work will be done by the students without direct/indirect involvement of the professionals. This competition is a direct entry event i.e., there will be no selection round. Teams are allowed to start manufacturing from the day they register their team. The registered teams will be allowed to manufacture the vehicle while various reports will be asked in between. All the teams will be awarded the points on the basis of their performance in the reports and in the FINAL ROUND.

"Indian Society of New Era Engineers என்பது, இளம்கலை பொறியியல் பட்டதாரிகளுக்கு அவர்களது திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், திறம்பட செப்பனிடவும், வேலை வாய்ப்புகள் பெற்றிடவும் உதவும் நிறுவனம்.  இவர்கள் கோடைகாலத்தில் பயிற்சிப்பட்டறையும் நடத்துகின்றார்கள்.  இந்த பைக் ரேலி போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் குழுவாகத்தான் பங்கு பெறுகின்றார்கள்.  பைக் என்றால் இரண்டு சக்கரம் அல்ல.  நான்கு சக்கரங்களுடன் கூடிய பைக் போன்று மாணவர்களே வடிவமைத்து, அதைப் போட்டியில் ஓட்ட வேண்டும்.

பாகங்கள் வாங்குவது, வடிவம் அமைப்பது, சோதனை செய்வது என்று 4 நாட்கள் போட்டி நடக்குமாம். இந்தப் பாகங்கள் மிகவும் எடை உள்ளதாக இருக்குமாம். அதை எல்லாம் வாங்கி, சுமந்து கொண்டு, வடிவமைத்து என்று ஒரு குழு சார்ந்த போட்டி என்பதால் 25 பேர் கொண்ட அணி. தொழில் முறைக் கல்வியாகவும் இருப்பதால், 2 ஆம் வருட மாணவர்களும் இந்த 25 பேரில் அடக்கம். பொருட்களைத் தூக்கி வருவதில் உதவி புரிவதோடு, இதைப் பற்றிய முன் அனுபவமும் கிடைக்கும் என்பதாலும்.

இப்படி வடிவமைப்பதில் வெற்றி பெறுபவர்களின் வடிவங்கள் ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் உபயோகப்படுத்தப்படுமாம். வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்குமாம். அதே போன்று திறமையான அணித்தலைவருக்கும் பரிசு உண்டு. இப்படி பைக்கை மாற்றியமைக்க 5 லட்சம் ரூபாய் செலவாகுமாம்.  இதற்கான செலவுகளைத்தான் மேலே சொன்ன இந்த  Indian Society of New Era Engineers நிறுவனம் ஏற்றுக் கொள்கின்றது. இதற்கு 2014 நவம்பர் மாதமே விண்ணப்பித்து, இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளத்தான். இந்தக் குழு, தில்லிக்கு எங்களுடன் பயணம். சேது பொறியியல் கல்லூரி, இயந்திரவியல் துறையிலிருந்தே இரு குழுக்கள் கலந்து கொண்டன. இதுதான் முதல் முறையாம் இந்தக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்வது. நாங்கள் அவர்களுக்கு வெற்றி வாகை சூடி வர வாழ்த்தினோம். இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள்.  http://quadtorc.in

4 ஆம் தேதி சென்னையை நோக்கிப் பயணம். நிஜாமுதினிலிருந்து மாலை 3.45க்குப் புறப்படும் துராந்தோ ரயிலில் சாதாரணப் பெட்டியில் பயணம் பதிவு செய்திருந்தோம். குளிரூட்டப் பெட்டி என்றால் இயற்கையை ரசிப்பது அவ்வளவாக முடியாது என்பதால். அன்றும் மகனுக்கு வேலை வந்ததால், நாங்கள் காலையிலேயே என் தங்கையின் வீட்டிலிருந்துப் புறப்பட்டுவிட்டோம். அவனது வேலையை முடித்துவிட்டு அப்படியே நிஜாமுதீன் ரயில் நிலையம் வந்துவிடலாம் என்று. அப்போது தங்கையின் கணவரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு. அவர்கள் வீட்டுச் சாவிகளில் ஒன்று எனது பையில். எங்கள் உபயோகத்திற்காகத் தந்ததை வீட்டில் கொடுக்க மறந்துவிட்டோம். எனக்குக் குற்ற உணர்வு.

அங்கிருந்து நிஜாமுதின் செல்ல பெருநகர் ரயில் பிடித்தால் கண்டிப்பாக 11/4 மணி நேரம் ஆகும். சாலை வழி என்றால் நாம் 2 மணி நேரம் முன்பே புறப்பட வெண்டும். சாவியைக் கொடுத்துவிட்டு பெருநகர் ரயிலைப் பிடிக்க ஆட்டோ பிடிக்க முயற்சித்த போது தங்கையின் கணவர் அழைத்து, பெருநகர் ரயில் வேண்டாம் என்றும், தனியார் வண்டி அனுப்புவதாகவும் சொல்ல, நாங்கள் தயங்கினாலும், நேரம் இல்லாததால் மறுக்க முடியாமல் சரியென, அந்த வண்டி 5 நிமிடம் தாமதிக்க, போக்குவரத்து நெரிசலைக் கடந்து நிஜாமுதின் நிலையத்தை அடைந்து படிகளில் ஏறி நடைபாதைக்கு இறங்கும் போது, நடை மேடையிலிருந்து துராந்தோ தூரமாகி எங்கள் கண் முன் நகர்ந்து கொண்டிருந்தது. அப்படியே ஒரு நிமிடம் அங்கேயே உட்கார்ந்து விட்டோம்.

அப்போது வெங்கட்ஜி என்னை அழைத்து “ஹேப்பி ஜெர்னி” என்று வாழ்த்த நான், வெங்கட்ஜியிடம் ரயிலைத் தவறவிட்டு விட்டோம் என்று சொல்ல அவர் ஒரு நொடி அதிர்ச்சியாகி எப்படி என, நான் காரணத்தைச் சொன்னேன். தங்கையின் கணவர் எங்களை அலைபேசியில் தொடர்ந்து கொண்டிருந்ததால், அதே வண்டியில் எங்களை மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி, அன்று இரவே தமிழ்நாடு விரைவு வண்டியில் ஏசி பெட்டியில் பதிவு செய்துவிட்டதாகச் சொன்னார். ஆர்ஏசி. வெங்கட்ஜி, உறுதியாவதற்கு உதவுவதாகச் சொன்னார். ஆனால் கூட்டம் இல்லாததால்,  பதிவு உறுதியாகி விட்டிருந்தது. நாங்கள் தீர்மானித்தபடி பெருநகர் ரயிலைப் பிடித்திருந்தால் நிச்சயமாக 2 நிமிட இடைவெளியில், சரியாக துராந்தோ ரயிலில் ஏறியிருந்திருக்கலாம் என்றும் தோன்றத்தான் செய்தது.

துராந்தோ ரயில் என்றால் அதிலேயே உணவு வழங்கப்படும். வெங்கட்ஜி குறிப்பிட்டிருந்த “பனீர் சாம்பார்”???!!!! ஏற்கனவே அனுபவம் உண்டு என்றாலும் மிஸ் ஆகிவிட்டது!? இல்லை தப்பித்தோமா?!

இட்டார்சியில் நின்றபோது ஒரு துண்டறிக்கையை ஒருவர் எல்லா பெட்டிகளிலும் வைத்துவிட்டுச் சென்றார்.  அதில் இருந்ததை இதோ நான் புகைப்படம் எடுத்துத் தந்துள்ளேன். அதைப் பற்றிக் குறிப்பிட்டால் பதிவு இன்னும் நீண்டுவிடும் என்பதால் அதைச் சொடுக்கிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். IRCTC - இணையம் வழியாக நம் பிஎன்ஆர் எண்ணைக் கொடுத்து கொடுக்கப்பட்ட உணவுப் பட்டியலில் என்ன வேண்டும் என்று தேர்ந்தெடுத்துப் பதிவு செய்தால் சரியாக அந்த நேரத்தில் உணவு நமக்கு வந்து விடும். எந்தெந்த ரயில் நிலையங்களில் இந்த வசதி உள்ளது என்ற பட்டியல் இதோ...


வரும் வழியில் எடுத்த சில படங்கள்



வரும் போது வழியெங்கும் நல்ல மழை. போபாலில் 24% அதிகப்படியான மழை ஆதலால் வெள்ளம். அதனால், சில உயிரிழப்புகள், மும்பை வாரணாசி ரயில் தடத்தில் இரு ரயில்கள் தடம் புரளல் என்ற செய்திகள். அதனால் எங்களுக்கு அலைபேசி அழைப்புகள். ஆனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதுவரை இல்லாத பிரச்சனை சென்னையை நெருங்கும் போதுதான்.  வழக்கமானதுதான். ரயில் முன்னதாகவே சென்னையைச் சமீபத்திருந்தது. சேர வேண்டிய நேரம் காலை 7.10. சரியாக வந்த ரயில், கொருக்குப் பேட்டையை 6.50க்குத் தொட்ட வண்டி அதைத் தாண்டியதும் நின்றுவிட்டது. பின்னர் பேசின்பிரிட்ஜிலும் 20 நிமிடம். அதன் பின் மெதுவாக சென்ட்ரலுக்குள் வந்து சேரும் போது 7.55. சற்று ஆயாசமாக இருந்தாலும், தங்கை குடும்பத்தார் மற்றும் தில்லி வலை ராஜாவைச் சந்தித்த நல்ல நினைவுகளுடன், மீண்டும் சென்னை போக்குவரத்து நெரிசலினூடே, சென்னைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியாயிற்று!

--கீதா

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தலைநகரில் நாலடியாரும், ஆறடியாரும் - 2

படம் இணையத்திலிருந்து

சென்ற பதிவிலிருந்து - (வெங்கட் ஜி அழைக்க, அவர் எங்கிருக்கின்றார் என்று அலைபேசிக் கொண்டே மின் ஏணியில் சென்றால் அங்கே ஆறடியார்! அவர் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி! எங்களை மிகவும் ஆவலுடனும், மகிழ்வுடனும் வரவேற்று கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்! ) சென்ற பதிவின் தொடர்ச்சி....

வெப்கட் ஜி கேட் 2 ல் இருப்பதாகச் சொல்லவும் நாங்கள் மின் ஏணியில் எறிச் சென்றோம். தலைநகர் என்பதால் பெருநகர் ரயில் நிலையத்தில் எங்கு ஏறினாலும் ஒவ்வொரு முறையும், நமது பொருட்கள் ஸ்கானரில் அனுப்பப்பட்டு, ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக ஸ்கான் செய்யப்பட்ட பின்புதான் நாம் நமது பொருட்களை எடுத்துக் கொண்டு ரயில் ஏறவேண்டிய மேடைக்குச் செல்ல முடியும்.  எந்தத் தடம் எப்படிச் செல்ல வேண்டும் என்பதற்கான குறியீடுகள், பெயர்ப்பலகைகள் என்று எல்லாமே மிகத் தெளிவாக இருப்பதால் எல்லோருக்குமே எளிதாக உள்ளது.

ஆறடியாரை நான் நிமிர்ந்து பார்த்ததுமே, பளிச்சென்றது அவரது உயரம். அவருடைய உடல் மொழியும், பேசிக் கொண்டே நடந்தாலும், சுற்றுப் புறத்தையும், நிகழ்வுகளையும் கண் வழியே உள் வாங்குதலும், அவரது பயணக் கட்டுரைகள் எப்படி இவ்வளவு அழகாக, சுவாரஸ்யமாகத் தெளிவாக வருகின்றன என்பதற்கானக் காரணத்தைத் தெளிவாக்கின! மட்டுமல்ல, அவர் பயணம் செய்வதையும், புகைப்படம் எடுப்பதையும் மிகவும் விரும்பிச் செய்கின்றார் என்பதையும்!

வெங்கட் ஜி 6.1 என்றால் சகோதரி ஆதியும் (வெங்கட்ஜியின் மனைவி) 5.10 ஆம். அப்பாவும், அம்மாவும் இத்தனை அடிகள் உயர்ந்தால், குட்டிப் பெண் ரோஷினி பல அடிகள் உயராமல் இருப்பாரா?! காரணம் புரிந்தது. இரண்டு அர்த்தங்கள் கொள்ளலாம், அவர்களின் உயரம் வலை உலகிலும்தான்.  ரோஷினியின் உயரத்தை வைத்து 7 ஆம் வகுப்போ என்றதற்கு, இல்லை 5 ஆம் வகுப்பு என்றார் வெங்கட் ஜி! ரோஷிணிக் குட்டி நன்றாகப் படம் வரைகிறார் என்றேன், அவருக்கு அதில் மிகவும் ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தார்.

வெங்கட் ஜி என்னிடம், மகனுக்கு ஏதோ வாங்க வேண்டும் என்று சொன்னீர்களே என்ன வாங்க வேண்டும்? என்று கேட்க, மகன் வாங்க வேண்டிய மருந்து (நான்கு கால்களுக்குப் போட வேண்டிய ஊசி மருந்து...)அதை அவன் குர்காவ்னிலேயே கிடைத்ததால் வாங்கி விட்டான். எனவே எனக்கு நடைப்பயிற்சிக்கான ஷூ, வாங்க வேண்டும் என்று சொல்ல, அவர் சென்ட்ரல் செக்ரட்டேரியட் நிறுத்தத்தில்லிருந்து இரண்டாவது நிறுத்தமாகிய ராஜீவ் சௌக்  நிறுத்தத்தில் இறங்கிச் செல்லலாம் என, நாங்கள் மீண்டும் பெருநகர் ரயில் வண்டியில் ஏற, எங்கள் பொருட்களை ஸ்கானரில் போட்டுச் சோதித்த பின் ரயிலில் ஏறி இரண்டாவது நிறுத்தமாகிய ராஜீவ் சௌக் நிறுத்தத்தில் இறங்கினோம்.
மகனும் நண்பர் வெங்கட்ஜி யும் ஹோட்டல் சரவணபவனில்

அங்குதான் தில்லி நகரின் இதயப் பகுதியான கன்னாட் ப்ளேஸ் இருப்பதால் வெங்கட் ஜி அங்கு இருக்கும் பாலிகா பஜார் செல்ல வேண்டுமா எனவும், நாங்கள் முன்பே எல்லாம் பார்த்திருப்பதால் வேண்டாம் எனவும் கன்னாட் ப்ளேசில் இருக்கும் நம்மூர் ஹோட்டல் சரவணபவனில் காஃபி அருந்தலாம் என அழைத்துச் சென்றார். வேறு ஏதாவது சாப்பிடுகின்றீர்களா என வெங்கட் ஜி எங்களை அன்புடன் உபசரிக்க, நாங்கள் வேண்டாம் எனவும், காஃபி மட்டும் அருந்தினோம்.  இந்த சரவண பவனில் மதியம் உணவு சாப்பிட வேண்டும் என்றால் பந்திக்கு முந்துவது போல் செல்ல வேண்டும் இல்லை என்றால் வெளியில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.

காஃபி அருந்தியபின், எங்களை, ஷூ வாங்க, கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் போது நண்பர் துளசி வெங்கட்ஜியிடம் பேச விரும்பியதால், நான் துளசியை அழைக்க வெங்கட்ஜி துளசியிடம் பேசினார். ஷூ வாங்கிய பிறகு, வெங்கட் ஜி, கன்னாட் ப்ளேசில் இருக்கும் சென்ட்ரல் பூங்காவிற்குச் சென்று அங்கு அமர்ந்து பேசலாம் எனவும் அங்கு சென்றால், அன்று திங்கட் கிழமை ஆதலால் பூங்கா விடுமுறை. இந்த சென்ட்ரல் பூங்காவில் இருந்த நம் தேசியக் கொடியை, இந்தியாவிலேயே மிகவும் உயரமான, பெரிய தேசியக் கொடி என்று வெங்கட் ஜி சுட்டிக் காட்டினார். சென்ற முதல் பதிவில் இருந்த தேசியக் கொடிதான் அது. இந்தத் தகவல் அங்கு காப்பி பேஸ்ட் செய்யும் போது ப்ளாகர் மிகவும் தொல்லை பண்ணியதால் விடுபட்டுவிட்டது. நானும் கவனிக்கத் தவறிவிட்டேன்.

இந்தப் பெரிய தேசியக் கொடி, Monumental National Flag, 15 இடங்களில் இருப்பதாகவும் சொன்னார். ஃபரிதாபாதிலும் இது போன்று ஒன்று இருக்கின்றது. இந்தக் கொடியின் அகலம் 60 அடி. நீளம் 90 அடி. பறக்கவிடப்பட்டுள்ள கம்பத்தின் உயரம் 207 அடி.  கொடியின் எடை 37 கிலோகிராம். Flag Foundation of India வின், தலைவரான நவீன் ஜிந்தால் என்பவராலும், புதுதில்லி முனிசிபல் கவுன்சிலாலும் நிறுவப்பட்டிருக்கிறது. மார்ச் 7, 2014 ஆம் வருடம் இந்தக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. (நன்றி விக்கி)


   நம் சகோதரி பதிவர் கோமதி அரசு அவர்களின் மகள் – அவரும் பதிவர் – தில்லியில்தான் இருக்கிறார் என்றும் சொன்னார். அடுத்த முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவரையும் சந்திக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். தில்லியிலும் நிறைய பதிவர்கள் இருந்தார்கள் என்றும் முன்பெல்லாம் சந்திப்புகள் நிகழ்ந்ததுண்டு என்றும் சொன்னார். ஆனால், இப்போது வெங்கட்ஜி மட்டுமே தில்லி பதிவர் என்று நினைக்கின்றேன்.  

சென்ட்ரல் பார்க்கிற்கு எதிரே இருந்த மற்றொரு பார்க்கிற்குள் சென்று அமர்ந்தோம். வெங்கட் ஜி மிகவும் சுவாரஸ்யமான மனிதர். அவருடன் பேசினால் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். பயணங்கள் பல மேற்கொள்வதால். நேரம் போவதே தெரியாது. தில்லியைப் பற்றியும், அவரது ஒரு சில பயணங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். சாப்பாடு என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தால் நாம் பயணங்கள் மேற்கொள்வது என்பது மிகவும் கடினம். சைவ உணவு கிடைக்கவில்லை என்றாலும், டீ, ரொட்டி (ப்ரெட்), பிஸ்கட் என்று ஏதேனும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றால் மட்டும்தான் பயணங்கள் இனிக்கும் என்று அவர் சொல்லியது எங்கள் கருத்தாகவும் இருந்தது.

வடகிழக்கு மாகாணம் நாகாலாந்து பயணத்தில், அங்கு மக்கள் நாயை அடித்து உண்ணும் பகுதிக்கு அவர்கள் சென்றதைப் பற்றிச் சொன்னார். நாகாலாந்து மக்கள் நாய் கறி உண்பார்கள் என்பது எங்களுக்கும் மகனுடன் படித்த நாகலாந்து நண்பர்களிடமிருந்து அறிந்திருந்ததுதான் என்றாலும், வெங்கட் ஜி சொன்ன அடுத்த தகவல் புதியதாக இருந்தது. நாயை அடித்துச் சாப்பிடுவதால், அவர்களின் உடலில் இருந்து வெளியாகும் வியர்வையில் நாய் மணம் வரக்கூடும் என்பதாலோ என்னமோ, அவர்கள் அருகிலோ, பகுதிக்குள்ளோ நாய்கள் வரவே வராதாம். மகன் சொன்னான், அவர்கள் கல்லூரியில் விடுதியில் இருந்த நாய்களைக் கூட அந்த மாணவர்கள் அடித்துக் கறி ஆக்கிவிடுவார்களாம். சென்னையில் கூட புறநகர் பகுதியில் நாய்கறி விற்பதாக எப்போதோ செய்தித்தாளில் படித்த நினைவு.


நாங்கள் அமர்ந்திருந்த பகுதியைச் சுற்றித்தான், ஒவ்வொரு வருடமும், புதுவருடக் கொண்டாட்டத்திற்கு பெரும்பான்மையான தில்லி மக்கள் கையில் “பாட்டில்”களுடன் குழுமி கும்மாளம் அடிப்பார்களாம். அந்தப் பகுதி வழியே எவரும் செல்ல முடியாத அளவிற்கு. தினமுமே நள்ளிரவில் கூட இளம் பெண்களும் ஆண்களும் மிகச் சர்வ சாதாரணமாக இருப்பார்களாம். பார்க்குகளில் நாம் சிலவற்றைக் கண்டும் காணாமலும் போவது நல்லது என்றார். நான் கேட்டேன், பெண்களைப் பற்றி, பெற்றோர் கவலைப்படமாட்டார்களா என்று. அங்கு இந்த வாழ்க்கை முறை மிகவும் சாதாரணமான ஒன்று என்றார். இப்படி நிறைய பேசிக் கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் இளம் பெண்கள் குழு ஒன்று அமர்ந்திருக்க அவர்கள் அருகில் ஒரு சிறுவன் இரு குரங்குகளுடன் நின்று கொண்டிருக்க, இதுவும் ஒரு தொழில் என்று வெங்கட்ஜி சொன்னார்.

காது குடைதல் - புகைப்படம் எடுத்து உதவியதற்கு நன்றி வெங்கட் ஜி

நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில், எனது பின்புறம் சற்று தூரத்தில், ஒரு காட்சியை வெங்கட் ஜி பார்க்கும் படி சைகை செய்ய, நான் மெதுவாகத் திரும்பிப் பார்த்தால் அங்கு அமர்ந்திருந்த ஒருவருக்கு, மற்றொருவர் காது குடைந்துக் கொண்டிருந்தார். காது குடையப்படுபவர் சுகமாக, கண்ணை மூடிக் கொண்டு தூங்குவதும் உண்டாம். காது குடைவதற்கு ரூ 10. இப்படி நிறைய பேர் காது குடைவதற்கென்று இருக்கின்றார்களாம். அவர்கள் தலையில் ஒரு சிவப்பு துணியால் குல்லாய் போல் கட்டி கையில் ஒரு கம்பியுடன் வருவார்களாம்.  அவரைப் புகைப்படம் எடுக்க நான் விரும்பினாலும், நான் திரும்பி எடுப்பதை அந்தக் காது குடைபவர் பார்த்தால், என்று நான் சொல்ல, வெங்கட்ஜியும் எனது மகனும் அது நன்றாக இருக்காது என்று சொல்லி, வெங்கட் ஜி அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவருக்குத் தெரியாதபடி புகைப்படம் எடுத்துக் கொடுத்தார்.

மட்டுமல்ல அந்தப் பூங்காவின் வெளியில் உள்ள நடை பாதையில் சென்றால், பல் செட்டு விற்பவர்களையும், மூக்குக்கண்ணாடிகள் விற்பவர்களையும் மிகவும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம் என்றார். வேடிக்கையாக இருக்கும் என்றார்.  நிறைய பேர் அங்குதான் பல்செட் கட்டிக் கொள்வார்களாம். அதைப் போல் நமது கண் பவர் சொன்னால் கண்ணாடியும் கிடைக்குமாம்.  மிகக் குறைந்த விலையில்.  இப்படி நிறைய போலி பல், கண் டாக்டர்களின் உலகம் அது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  அன்று மாலை நேரமாகியதால் அந்தக் காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. 

ஒரு மணி நேரத்திற்கும் மேல் நேரம் போனதே தெரியவில்லை.  நாங்களும், எங்கள் உறவினர் பெண்ணின் தோழியை அங்கு சந்திப்பதாகச் சொல்லி அப்பெண் வந்ததும் புறப்பட்டோம். மழை லேசாகப் பெய்யத் தொடங்கியது. வெங்கட் ஜி எங்களை ராஜிவ்சௌக் ரயில் நிலையம் வரை வந்து வழி அனுப்பினார். வெகு நாட்களாக நான் சந்திக்க வேண்டும் என்று நினைத்த நண்பர் வெங்கட் ஜியை சந்தித்ததில் எனக்கு அத்தனை மகிழ்ச்சி. 

     பெரிய வரிசையில், பொருட்களையும், எங்களையும் ஸ்கேன் செய்ய நின்றோம். மாலை 6.30 மணி ஆனதால், அலுவலகம் முடிந்து செல்லும் கூட்டம் அதிகமாக இருந்தது.  நாங்களும் மெட்ரோ கார்ட் வாங்கி வைத்திருந்ததால், தனியாக பணம் கட்டி பயணச் சீட்டு பெற வேண்டிய அவசியம் இல்லாததால், அதற்கான வரிசையில் நாங்கள் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அடுத்தடுத்து ரயில்கள் வந்து கொண்டே இருப்பதால், கூட்டம் அதிகமாக இருந்ததால், 4 ரயில்களை விட்டு பின்னர் வந்த ரயிலில் ஏறி, 55 நிமிடத்தில் குர்காவ்ன் சென்றோம், மிகவும் அருமையான, சுவாரஸ்யமான, அன்பான நண்பர் வெங்கட் ஜியைச் சந்தித்த மகிழ்வான தருணங்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டு. 


அடுத்த பதிவுடன் இந்த தில்லிப் பயணத் தொடர் முடிவடைகின்றது.  அடுத்த பதிவில் இரு தகவல்களுடன்...தொடர்கின்றேன். 

--கீதா