வெள்ளி, 17 ஜூலை, 2015

டாஸ்மாக் தமிழ்நாட்டின்/தமிழர்களின் அடையாளமா?!!

டாஸ்மாக்கில் எலைட் வேறு -  ரொம்ப நல்லாருக்குப்பா - நல்ல வளர்ச்சி!!!!
Image result for Tasmac

      தமிழ்நாடு என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகின்றதோ இல்லையோ எங்களுக்கு டாஸ்மாக் தான் நினைவுக்கு வருகின்றது இப்போதெல்லாம். பின்ன என்னங்க, இந்த டாஸ்மாக்கும், மதுபானக் கடைகளும் பண்ணுற அலங்கோலங்களை எவ்வளவு நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது? சமீபத்திய நிகழ்வுகள் பல தளங்களிலும், ஊடகங்களிலும் பேசப்பட்டு எல்லோரும் அறிந்ததே.

எழுத்து ஒரு கூரிய வாள்! எழுத்தின் சக்தி பெரிது அப்படினு எல்லாம் கூக்குரல் போடத்தான் செய்கின்றார்கள். இதற்கொன்றும் குறைச்சல் இல்லை. நாட்டின் தூண் இந்த ஊடகம் என்றெல்லாம் மார்தட்டிப் பேசுவதுண்டு.  ஆனால் நடைமுறையில் ஊடகங்கள் எந்தப் புரட்சியையும் கொண்டுவருவதாகத் தெரியவில்லை.

ஏன் தமிழ் நாடு அரசு டாஸ்மாக்கை மூடாமல் வைத்திருக்கிறது?  என்று எங்கள் சிறிய அறிவு நச்சரித்துக் கொண்டிருந்த சமயம், நம் பண்டைய தமிழர் வாழ்வு பற்றி வாசிக்க நேர்ந்தது.  என்னாயிற்று? அதற்கும் உங்கள் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? எல்லோரும் டாஸ்மாக்கிற்கு எதிராகக் கொடி பிடித்து எழுதும் வேளையில் டாஸ்மாக்கையும் பண்டைய தமிழர்களையும் முடிச்சுப் போடுகின்றீர்களே என்ற வியப்பு உங்களுக்கு மேலிடுகின்றது இல்லையா? என்ன இது புதுக்கதை என்று தோன்றுகின்றதா?

இருங்கள் இதோ விஷயத்திற்கு வருகின்றோம். வேறு ஒன்றும் இல்லை, நாங்கள் சமீபத்தில் பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் – திரு. சாமி சிதம்பரனார் எழுதிய புத்தகம் வாசிக்க நேர்ந்தது. பண்டைய தமிழர்கள் மதுவை வெறுத்தவர்கள் அல்லர். (மது, புலால் என்று குறிப்பிடப்படுகிறது.  இங்கு தலைப்பிற்கு வேண்டி கள்ளை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.) சங்க நூல்களில் கட் குடிப்பு கண்டிக்கப்படவில்லை. அவர்கள் கள்ளை மிகவும் மகிழ்ந்து குடித்ததையும், பாராட்டியதையும் புறநானூறில் காணலாம். பத்துப்பாட்டில் இதை அருந்தாதவர்களும் சங்க காலத்தில் இருந்தார்கள் என்றும் ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்றும், பெரும்பாலான தமிழர்கள்/பழந்தமிழர்கள் மது அருந்தி மகிழ்ந்தார்கள் என்பதைச் சொல்லுகின்றது. எட்டுத்தொகையிலும் வருகின்றது. சிறந்த வள்ளல்கள், பெரிய புலவர்கள் எல்லோரும் விருந்தினர்க்கு மது அளித்து விருந்தோம்ப செய்ததாகச் சொல்லப்படுகின்றது. இவற்றை விலக்கவில்லை.

வடக்கிலிருந்து சமணமும், பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கிய போதுதான், மது, புலால் (உயிர் வதை கூடாது என்று) போன்றவை கண்டிக்கப்பட்டு, போதிக்கப்பட்டதாக இந்த வரலாறு சொல்லிச் செல்கிறது. அந்தக் காலட்டத்தில்தான் பழந்தமிழர், இச் சமயங்களினால் நாகரீக வளர்ச்சி அடையத் தொடங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. அப்படிப் பார்க்கும் போது, அற்குப் பிறகுதான், அதாவது கடைச்சங்க காலத்திற்குப் பிறகுதான் நம் வள்ளுவரும், எழுதி இருக்க வேண்டும். மது, புலால் மட்டுமல்ல, பல சங்ககாலக் கொள்கைகளைப் புறக்கணித்து கூடா ஒழுக்கம் என்று எழுதியுள்ளார். சைவ, வைணவ மதங்களும், சமண, பௌத்த சமயங்கள் சொன்ன மது, புலால் மறுப்பையும் புலன் அடக்கத்தையும் ஏற்றுக் கொண்டு பின்பற்றத் தொடங்கின.  ஆனால், பிற தத்துவ வேறுபாடுகள் பல இருந்தன. (விஜு அவர்கள் தனது ஊமைக்கனவுகள் தளத்தில் சமணம் பற்றி பேசுவதில் நாம் இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம். )

சரி இப்ப அதுக்கென்ன? என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள்தானே.  இதோ. 

யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற
(புறநானூறு)

(தேறல் = மது; ஒண்தொடி = ஒளி பொருந்திய வளையல்; மடுப்ப = ஊற்றித் தர)

அதாவது, யவனர்கள் என்பவர்கள் ரோமாபுரியிலிருந்து வந்த வணிகர்கள், நல்ல மரக்கலங்களில் கொண்டு வந்த குளிர்ச்சி பொருந்திய நறுமணமிக்க மதுவை, ஒளி பொருந்திய வளையல்கள் அணிந்த இளம்பெண்டிர், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களில் ஊற்றித் தர, அவ்வினிய மதுவை நாள்தோறும் பருகி மாறன் என்னும் பாண்டிய அரசன் களிப்புடனும், அமைதியுடனும் வாழ்ந்தான். (இந்தப் பாடலின் அர்த்தம் நம் தமிழ் படங்களில் வரும் வில்லன், அல்லக்கைகளையும் நினைவுபடுத்துகின்றது அல்லவா.  அப்போ நம் தமிழ் திரைப்படங்களும் தமிழ் மரபைத்தான் பின் பற்றி எடுக்கின்றனரோ?  பின்னர் ஏன் நாம் மேலை நாட்டுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டுவிட்டது என்று குரல் எழுப்புகின்றோம்??!!!!!)

இவ்வாறு இலவந்திகை தூஞ்சிய நன்மாறன் - 82ஆவது பாண்டியன் மன்னனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (நம்ம நெற்றிக்கண் நக்கீரர் தான்) வாழ்த்திப் பாடியதாக வருகின்றது. அடுத்து

இழை அணி வனப்பின் இன் நகை மகளிர், 
போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால்,
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,
ஆர உண்டு, பேர் அஞர் போக்கி,
செருக்கொடு நின்ற காலை,

-பொருநராற்றுப்படை- பாடியவர் முடத்தாமக் கண்ணியார், பாடப்பட்ட அரசன் சோழன் கரிகால் பெருவளத்தான்

இதன் பொருள்,  போக்கு இல் என்பது களைப்பு, வருத்தமும் தீரத் தரப்படும் பானம் என்று சொல்லப்பட்டாலும் அது மதுவைத்தான் குறிக்கின்றது என்று தெரியவருகின்றது. அந்தப் “போக்கு இல்” ஐ, முகம் முழுவதும் இனிய அழகிய புன்னகையுடனும், அழகிய அணிகலன்கள் அணிந்தும், பெண்கள் பொற்கலம் நிறைய, பானம் தீர தீரத் தந்து, அதை அருந்தி, வருத்தம் தீர்ந்து செருக்கோடு நின்ற….

அடுத்து கபிலரும், ஔவையாரும்.  செல்வக் கடுங்கோ வாழியாதன் (கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பொறையர் குடிச் சேர மன்னர்களில் ஒருவர்) மன்னனை கபிலர் சந்திக்கின்றார். மன்னர் கபிலரின் கைகள் மென்மையாக இருப்பதாகச் சொல்லவும், கபிலர் சொல்வது, மன்னன் போர் புரிவதால் கைகள் காய்ச்சி உள்ளதாகவும், அரசன் வழங்குவதை மட்டுமே பெற்று உண்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாததால் தனது கைகள் மென்மையாக இருப்பதை இப்படிச் சொல்லுவதாக வருகின்றது.

 ‘மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பதும்’
 அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்...

--புறநானூறு

மன்னனின் கள் வைத்திருக்கும் பாத்திரம் எப்போதும் வாய் திறந்தே இருக்கும் என்பதை “மட்டு வாய் திறப்பவும்”  என்று சொல்லுகின்றார்.

அடுத்து, புறநானுறில் ஒளவையாரின் பாடல்.

ஒளவையை ஆதரித்த மன்னன் அதியமான் நெடுமானஞ்சி என்பவர். அவரது அரண்மனையில் ஒளவைக்குப் பெரும் மதிப்பு. அந்த மன்னன் இறந்தபோது துயர் தாங்காத விறலியாகிய (ஆடல் பெண்) ஒளவை புலம்புகின்றாள்.

"சிறியகட் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரியகட் பெறினே யாம் பாட தான் மகிழ்ந்துண்ணும் மன்னே....."

அதில், சிறிதாகக் கள் பெற்றால் அக்கள்ளை எனக்குத்தருவாய். பெரிய அளவில் கள் பெற்றால் எம்மைப் பாட வைத்து நீயும் அருந்துவாய் என்ற பொருளில் பாடியுள்ளார்.

மதுவைச் சுவைத்து அவற்றை வாழ்வின் இயல்பாக்கியவள் ஒளவை. அதனைப் பாட்டில் வெளிப்படையாகச் சொல்லி இருப்பதும் அவரது நேர்மையையும், தைரியத்தையும் சொல்லுகின்றதாகத்தான் சொல்லப்படுகின்றது.

இதை எல்லாம் வாசித்த போதுதான்...இப்போது மது அருந்தும் பெண்கள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்றும் தோன்றியது.  

அதனாலதான், நம்ம தலைவர்களுக்கும், மக்களுக்கும், நாம் தமிழர்கள்! நாம் டாஸ்மாக்கை மூடிவிட்டால், குடிக்கவில்லை என்றால் நாம் தமிழர்களே அல்ல. பண்டையத் தமிழ் கலாச்சாரம், மரபு எல்லாம் அழிந்து வரும் வேளையில், நாம் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள ஓர் அடையாளமாவது இருக்க வேண்டாமா? அப்படின்ற எண்ணமா இருக்குமோ? ஒரு வேளை அதை எல்லாம் இவங்க தப்பா புரிஞ்சுகிட்டுருப்பாங்களோ? அப்புறம் ஏனப்பா மேலை நாட்டுக் கலாச்சாரத்தினால் தமிழகம் கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடுகின்றோம்?

Image result for Tasmac

நாங்க குடிக்கறதுனாலத்தானே கஜானா நிறையுது நாடு வளருது!!!

சரி அப்புறம் ஏன் திருக்குறளை பேருந்துகளிலும், பல பொது இடங்களிலும் எழுதி வைச்சுருக்காங்க? மது அருந்துதல் வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு அப்படினு எழுதி வைச்சுருக்காங்க? என்னமோ போங்க. நல்லா குடிங்கப்பா குடிங்க! உங்க குடியை நல்லா வளருங்கப்பா, வளருங்க! ஒண்ணும் புரியலை.  ஆனா, ஒண்ணும் மட்டும் நல்லா புரியுது. இது டாஸ்மாக்கிற்கு மட்டுமில்லை, மேல்தட்டு “குடி”ல்களுக்கும் சேர்த்துதான் போகிற போக்கைப் பார்த்தால், தமிழகம் “தண்ணீரில்” மிதப்பதைப் பார்த்தால், குடும்பத் தலைவிகள் பலரின் கண்ணீரில் தமிழகம் தத்தளிப்பதைப் பார்த்தால் டாஸ்மாக் தமிழர்களின் அடையாளமாகிப் போனதோ என்று தோன்றுகின்றது.

(பின் குறிப்பு: டாஸ்மாக்கை மூடாத தமிழகத்திற்குச் சிலகேள்விகள். குடித்துவிட்டுத் தலைக்கவசம் போட்டு ஓட்டலாமா? குடித்திருக்கின்றார்களா என்று ஏன் காவல்துறையினர் பரிசோதனை செய்கின்றார்கள்?  பாண்டிச்சேரியிலிருந்து வரும் போது ஏன் வண்டிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன? முரண்பாடுகள்! ஒன்றுமே புரியலைப்பா...மது, புலால் பற்றி பண்டைய தமிழர்கள், பின்னர் ஏன் மறுத்தல் என்பது பற்றி வேறு ஒரு இடுகை...)

தலைப்பு வைப்பதில் கில்லாடிகள் மதுரைத்தமிழன், சென்னைப்பித்தன் சார், நண்பர் ஸ்ரீராம், சகோதரி துளசி கோபால், சகோதரர் விஜு (சமீபகாலமாக), பழனி கந்தசாமி ஐயா, ந்ண்பர் விசு, நண்பர் கோ இன்னும் சிலர்......மதுரைத் தமிழன் ஏற்கனவே எங்களுக்கும் சொல்லி இருந்தார்...அதனால் இப்படி ஒரு முயற்சி ...ஹிஹிஹி... 

சகோதரர் விஜு அவர்களுக்கு.  இந்தக் கட்டுரையில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டத் தயங்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்,  நாங்களும் கற்றுக் கொள்வோம். பொருட்பிழையாக இருந்தாலும் சரி, சொற்பிழையாக இருந்தாலும் சரி...)

-----கீதா

படங்கள் - இணையம் 

பின் குறிப்பிற்கு ஒரு பின் குறிப்பு :  இதோ இந்த இடுகைக்கு நம் சகோ/நண்பர் விஜு அவர்கள் கொடுத்த பின்னூட்டத்தையும் இத்துடன் கொடுக்கின்றோம்.  எல்லோருக்கும் உதவலாம் அவரது விளக்கமான, பல தகவல்கள் என்ற ஆர்வத்தில்....

ஊமைக்கனவுகள்.20 ஜூலை, 2015 ’அன்று’ 7:17 பிற்பகல்
அன்பு ஆசானே!
சங்க காலம் என்று நாம் இன்று சொல்லத் துணை செய்யும் இலக்கியங்கள், இனக்குழு சமுதாயங்கள் மெல்ல அழிந்தும் முடியுடை அரசுகளின் கீழ் கொணரப்பட்டும் நாகரிக பண்பாட்டு ரீதியாலான ஒரு பெருவேகப்பாய்ச்சலை நிகழ்த்தத் தொடங்கிய காலமாக அறியப்படுகின்றன.
ஆடு மாடுகளுக்காக நிகழந்த போர் ,நாடு பிடிக்கவும் காக்கவுமாக நீண்ட பரிணாம வளர்ச்சி நடைபெற்ற காலம் இது.
வீர மரணம் விருப்புடையது எனவும் களம்படுதல் கொண்டாற்குரியது எனவும் கருதப்பட்ட காலம்.
மலைவேடர்களும் முல்லை ஆயரும் வேளாண்குடிகளும் கடல்பரதவரும் தத்தம் குடி எல்லையில் இருந்து விலகி மற்ற நில மக்களோடு ஊடாட்டம் நிகழ்ந்த காலம்.
வேட்டையாடியும் கிடைத்ததை உண்டும் வாழ்ந்த தொல்குடிகளின் வாழ்வு வித்தியும் உழுதும் உற்பத்தி செய்யக் கற்ற காலம்.
இக்காலத்தில் தமிழ்ப்பெரு நிலப்பரப்பின் இன்னொருபுறம் காணப்படு நிலங்களை வளைத்தும் குடிகளைத் தன்கீழ்ப்படுத்தியும் முடியுடை மூவேந்தர்கள் நாட்டை, அதன் வளங்களை மக்களைக் கூறிடுகிறார்கள்.
சமூகம் தன்னிற் கலக்கத் தொடங்கிய போது, தன் பசிக்குத் தேடிக்கொண்ட இரை பி்னபு உணவாகி , அதன் உற்பத்தியில் அது வணிகப்பொருளாக மாற்றம் அடைகிறது.
மதுவின் வரலாறு இதனோடு தொடர்புடையது.
“மீன் தடிந்து, விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ, மலர் சிதறி,
பலர் புகு மனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு “ (176-180. பட்டினப்பாலை.)
சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் வரும் இவ்வரிகள் இன்றைய மதுபானக்கடைகளோடு ஒத்த காட்சியைக் காட்டுவன.
பூம்புகாரின் அங்காடித் தெருக்களின் வணிகக் கடைகளில் தங்கள் வணிகம் செய்யும் பொருள் குறித்த அடையாளக்கொடிகளைப் பறக்கவிட்டுள்ளன.
மதுபானக் கடையின் கொடியும் பட்டொளி வீசிப்பறக்கிறது.
அக்கடையின் முன் மணல் பரப்பப்பட்டுள்ளது.
பூக்கள் சிதறிக்கிடக்கின்றன.
கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடைக்கு முன் அரிந்த மீன்களைப் பொறித்தும், இறைச்சியை வறுத்தும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் இன்றைய மதுபானக்கடையின் சிற்றுணடிச்சாலையோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள்.
தொல்குடிகள் பண்பாட்டு நிலைகளில் மேம்பட மேம்பட அவர்களின் உணவு முறை மாற்றத்தையும், அது வணிகப்பொருளாக மாறியதையும் நாம் இதுபோன்ற பல சான்றுகளின் வழிக் காணலாம்.
இதனால், அறிவுப்பகிர்ச்சியும், தேடலும் கலைகளும் மேம்படத்தொடங்கின என்பதும் உண்மைதான்.
இக்கலப்பின் விளைவாகக் கள்ளின் பலவகைகளை நாம் சங்க இலக்கியத்தில் காணமுடியும்.
அங்குப் பரத்தமை அனுமதிக்கப்பட்டிருந்தது.
உயிரைப் பொருட்படுத்தா போர்கள், வீரமரணம் விண்ணேற்றம் தரும் கருத்தேற்றம் நிலவியது.
அவை உச்சம்பெற்ற ஒரு கட்டத்தில்தான் சமணம் பௌத்தம் போன்ற சமயங்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன.
மக்களிடையே காணப்படும் சிலவழக்கங்கள் தீங்கானவை என்று உணர்த்துகின்றன.
மெல்ல மெல்ல கள்ளுண்ணுதல் இழிவென்றும், பொருட்பெண்டிர் வழக்கு தகாதென்றும் சமூகத்திற்கு, தனிமனிதனுக்குத் தீங்கு செய்பவை இவையிவை என்று வகைப்படுத்தி அவற்றைத் தவிரக்கச் சொல்லும் கோட்பாடுகள் உருப்பெற்று வலிமை அடைகின்றன.
குடிக்கும் ஒவ்வொருவரும் அப்பழக்கத்தின் தொடக்கத்திலோ தொடர்ச்சியிலோ ஒருகணமேனும் இது தவறென்னும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருந்தால் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளாய்க் கற்பிக்கப்பட்ட இக்கருத்தேற்றம்தான் காரணம்.
இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயரால் நம் நாட்டில் நேர்ந்த சமூக மாற்றங்களோடு இதனை ஒப்பிடலாம்.
சங்க காலத்தில் கள் இருந்தது எல்லாரும் கள்குடியர்களாக இருந்தார் என்று ஒருவர் சொல்வது, தமிழகத்தில் தீண்டாமை இருந்தது, குழந்தை மணம் இருந்தது இப்போது இருந்தால் என்ன என்று கேட்பதைப் போன்றது.
அரசு இதை ஊக்குகிறது என்பதுதான் பேரவலம்.
வரலாறு நிகழ்ந்ததன் தொகுப்பு.
பின்னால் சென்று அதனை விருப்பம்போல மாற்ற இயலும் காலயந்திரம் நம்மிடையே இல்லை.
ஆனால் வரலாற்றில் இது இருந்திருக்கலாம், இது தவிர்த்திருக்கலாம் என்று அறிவதை நம்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நம்மால் முடியும்.
பொழுது விடிவதும் முடிவதும் குடிக்க மட்டுமே என்று எண்ணும் மக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
உடலுறுப்புகள் சேதமாகிக் கொண்டிருக்கின்றன.
குடும்பங்கள் அதிலுள்ள நாளைய தலைமுறைகள் நசிந்து கொண்டிருக்கின்றன.

மெல்லக் கொல்லும் நஞ்சினை அரசு ஊட்டிக் கொண்டிருக்கிறது.
சமுதாயத்தில் நிகழும், கொலை, கொள்ளை, பாலியல்வன்முறை, விபத்து போன்றவற்றிற்கான அசாத்தியத் துணிச்சலை மது ஏற்படுத்துகிறது.
யாராயிருந்தாலும் இன்றைய தமிழக மதுக்கடைகளைக் காண்பவரால் ஒருபோதும் அதனை நியாயப்படுத்த முடியாது.
உங்கள் பதிவின் முதல் வாசிப்பிலேயே உங்கள் பதிவில் மேற்கோளாகவேனும் நீங்கள் காட்ட வேண்டும் என நான் நினைந்தது,
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.“
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.“
எனும் இவ்விரு குறள்களைத்தான்.
உங்கள் பதிவில் நான் கண்ட குறை ‘தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்ட உங்களின் அந்தத் தாழ்மைதான்.
என்னிடத்து ஒருபோதும் அது தேவையில்லை.

நன்றி ஆசானே.

மிக்க நன்றி சகோ தங்களது மிக மிக அருமையான, விளக்கமான தகவல்களுக்கு...

புதன், 15 ஜூலை, 2015

தூறல்கள்….

ஆசிரியரின் பேரன்களும், பேத்திகளும்

யதார்த்த வாழ்வியல்
தத்துவ மழையின் தூறல்கள்
என் மேல் பன்னீராய் தூவிட
நிமிர்ந்து கண்ணுற்றேன்
என் வாழ்க்கைப் பரிமாணத்தின்
குறுங்கோணங்கள்
மாறிடத் துடிக்கின்றன
விரி கோணமாய் !
   என்னடா இது தில்லைஅகத்திலிருந்து கவிதை? வியப்பு இல்லையா? வலை நண்பர்கள்/சகோதரிகள் பலரும் கவிதைகளில் கலக்கி வரும் போது அவர்களுக்கு நாங்கள் நிகராக வர இயலாதுதான். தூறல்கள் எனும் இப்புத்தகத்தை வாசித்ததும் மனதில் எழுந்த வரிகள். இது விமர்சனமல்ல. இப்புத்தகத்தில் முழுவதும், ஆழ்கடலில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட முத்துகள் போன்ற தத்துவ முத்துகள்.  இந்தத் தத்துவ முத்துகளில் பல ஆலங்கட்டி மழை போல “ணங்க்” என்று தெறித்து விழுந்து, தலையில் குட்டி, “இதைக் கொஞ்சம் கவனி” என்று சொல்லுகின்றன.  அவற்றில் சிலவற்றை நாங்கள் இங்கு பகிர்கின்றோம்.

தத்துவம் என்றதும், ஏதோ புரியாத மொழி என்றோ, மத சம்பந்தப்பட்ட ஒன்று என்றோ,  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் மூளைக்கு எட்டாத ஒன்று என்றோ நினைத்து விட வேண்டாம். ஏனென்றால், மிக நுணுக்கமான சிந்தனையாளர்களுக்குக் கூட தத்துவங்கள் என்றால் ஒவ்வாமை உண்டு. ஆனால், இந்தப் புத்தகத்தில், வாழ்வியல், அனுபவ தத்துவங்களே. இதோ ஆசிரியது வார்த்தைகள்.

“வெவ்வேறு காலகட்டங்களில், சூழல்களில், பல்வேறு பாதிப்புகளில், மனதளவில்-என் குறுகிய எல்லைக்குட்பட்டு, நான் உணர்ந்த ஒரு சில, இங்கே உரத்த சிந்தனைகளாகி உங்கள் பார்வைக்கு வருகின்றன.  யாருக்கும் இவை அறிவுரையோ, உபதேசமோ, பிரச்சனைகளுக்குத் தீர்வோ நிச்சயமாக அல்ல – அந்தக் குல்லாய் எனக்குப் பொருந்தாது”

அவரது சமூகக் கவலையில் நம்மையும் பங்கேற்க வைக்கின்றார்.  அதில் “நான்” என்று அவர் சொல்லியிருப்பது, அந்த நான் அவரை மட்டும் குறிப்பது அல்ல அதை வாசிக்கும் நாமும்  அந்த “நான்” ல் நம்மைப் பொருத்திப் பார்ப்போம், பங்கேற்போம் என்ற நம்பிக்கையில். அதில் அவர் வெற்றியும் கண்டிருக்கின்றார் என்றால் அது மிகையல்ல.

“போய்விட்ட வாழ்க்கை திரும்ப வாழக் கிடைத்தால் எல்லோருமே வேறுவிதமாகத்தான் செயல்படுவார்கள்! ரொம்ப யதார்த்தமானது இது – “நடக்காது” என்று தெரிவதால்!” என்று ஆரம்பத்தில் சொல்லி, உண்மை இனிக்கட்டுமே என்கிறார். உண்மைதான் இல்லையா? ஆனால் உண்மை கசக்கின்றதோ?!

“கீழே விழுந்து விடுதல்” அடிக்கடி நடக்கின்றது. உடல் விழுவது இல்லை; மனம்! பயிற்சி போதாது!” எனும் அவரது வார்த்தைகள் நம் ஒவ்வொருவரது மனதிற்கும் சொல்வதாக இருக்கின்றது.

“அடுத்ததைப் பாருங்கள். பொறி! “பிளவு படாத ஒரே மனம் யாருக்காவது சாத்தியமாகி இருந்திருக்குமா? “மகான்கள்” என்கிறார்களே, அவர்கள் உட்பட?” யாராவது இதற்கு பதில் சொல்ல முடியுமா? முடியாது!

மனித உறவுகளைப் பற்றிப் பேசும் போது வார்த்தைகள் நச். “மனித உறவுகளிலேயே மிக உயர்வானது எது? “நீ யாரோ, நான் யரோ, நிலை தான். உறவுக்கும் பல தகுதிகள், அளவுகோல்கள் உண்டு. பணம், அந்தஸ்து, செல்வாக்கு இவற்றுக்கு அங்கே முக்கியத்துவம் அதிகம்.”

“புரிந்து கொள்வது” என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்வதே இயல்கிறது. ஒருவருக்குச் சரியெனப்படுவது இன்னொருவருக்குத் தவறாகவே படுகிறது.” இது நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறது. நமது புரிந்து கொளல் எந்த அளவு என்று! ஆம், “கருத்து வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டால், ஒத்துப் போகாததோடு மட்டுமல்லாமல், பிணக்குகள், கோபம், வெறுப்பு எல்லாமே தலை தூக்கிவிடுகின்றன”.  நட்பு, மனித உறவு என்பது வேறு, கருத்து வேறுபாடு வேறு என்பதை நம்மால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லைதானே!

     “குடும்ப வாழ்வில் தகுதி இழப்பு என்பது வாழ்வின் பல கட்டங்களில் நேர்கின்றது. உத்தியோகத்தில் “ரிட்டையர்மென்ட்” என்று அதற்குக் கௌரவமான பெயர் சூட்டியிருக்கின்றார்கள். சுய கௌரவம், தன் மதிப்பு என்பதெல்லாம் இப்போது கெட்ட வார்த்தைகள். முதுமைக்கு ஒரு நிரந்தர அடையாளம் உண்டு – “மழை எருமை” என்பது மிகப் பொருத்தமான உவமை."

      “உறவுகளும், நட்புகளும் இல்லாமல் மனித வாழ்வே இல்லை. உறவுகளை விட நட்புக்கு கூடுதல் சலுகை எப்போதும் உண்டு. இங்கே மன நெருக்கம் இயல்பாக இருக்க முடியும். ஆரோக்கியமற்ற சில எதிர்ப்பார்ப்புகள் எளிதாகக் கசப்பை உணர்த்துகின்றன. இதன் பாதிப்பு உறவில் அதிகம். ஆனால் நட்பில் பாதிப்பு அதிகம் இல்லை. என்றாலும் இரண்டும் தும்பும், வாலும் போல, ஏதேனும் ஒன்று வாழ்வில் தேவைப்படுகின்றது பற்றிக் கொள்ள” இதை வாசித்த போது, எங்களுக்கு ஒரு நல்ல வாசகம் முகநூலில் வாசித்தது நினைவுக்கு வந்தது.

“உறவினால் ஏற்படும் அன்பை விட அன்பினால் ஏற்படும் உறவு உன்னதமானது”

“மனிதத்துவம், நல்லொழுக்கம், அறநெறிச் சிந்தனைகள், ஆழ்ந்த கல்வி, தன்னடக்கம், வறுமையிற் செம்மை, வாய்மை, தன்னல மறுப்பு – இவை சமூக அந்தஸ்து பெறுவதில்லை.  இவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். இவர்கள் இருக்கும் இடம் தெரியாது. எல்லாமே அரசியலாய் இயங்கும் ஒரு சமூக மாற்றமே நாம் “முன்னேற்றம்” என்ற தவறான பெயரிட்டு அழைக்கும் இன்றைய நிலை” முன்னேற்றம் என்பதற்கான வார்த்தைகள் சாட்டையடி இல்லையா?!

“வாழ்வில் இலக்குகள் வேண்டும், சுயஅலசல் வேண்டும். நமக்கு நாமே ஒரு இலக்குமணக் கோடு இட்டுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிச் செல்பவர் அடுத்து “ராமனுக்கும் அக்னிப் பிரவேசம் தேவைப்படுகிறது. ஏனெனில் சலவைத் தொழிலாளர் புகார்கள் நிரந்தரமானவை, சலனப்படுத்திக் கொண்டுதான் இருக்கும்” என்று பெரிய உண்மையை இப்படிப் போகிற போக்கில் அநாயாசமாகச் சொல்லிச் செல்கின்றார்.

      நடிப்புச் சுதேசிகள் என்று எப்படிச் சொல்லுகின்றார் பாருங்கள் நமது மனதை அப்படியே சொல்லுவது போல.

“ஆன்மீகம் ரொம்பத் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்ற வார்த்தையாகியிருக்கிறது. பேசுகிறவர்கள் தங்களின் போலித்தனங்களுக்கான ஜிகினா மேக்-அப்புடன் பொன் மொழிகளை உதிர்க்கிறார்கள். எரிச்சலாகிறது. கோவில், ஆண்டவன், ஒழுக்கம், ஈகோ – விளையாட நிறைய சொற்கள் இருக்கின்றன. ஏதாவது ஒன்றிரண்டு போதும்.  உதைபந்துதான்!

“முற்பிறவி-மறுபிறவி” என்றெல்லாம் பயமுறுத்தல்கள் நிறைய.  எவருக்கும் எதுவும் தெரியாது.  ஆனால் எல்லாம் தெரிந்தது போல பேசுவது சுற்றிலும் அன்றாட ஜோக். சொர்க்கம், நரகம் லிஸ்டில் பல “மெனுக்கள்” தயாராக வைத்திருக்கிறார்கள். எல்லாம் பகவான் செயல் என்பதற்கு மேல் அப்பீல் இல்லை! கழட்டிக் கொள்ள, பொறுப்பு ஏற்காமல் இருக்க! ரொம்ப சாதகமான பாதுகாப்புக் கருவி இந்த மனப்பான்மை. போட்டி வியாபாரிகள் பகுத்தறிவுக் கடை விரித்து வணிகம் நடத்துகிறார்கள்”

“விரதம் என்பது எதன் குறியீடு? மன வலிமைக்கான நிரூபணம் என்ற அளவுக்கு சரிதான். வேறு பயன்கள், விளைவுகள் என்ற கனவுகள் வேண்டியதில்லை. அவை பொய்த்துவிடும். அது ஒரு போலி மனப்பான்மைதானோ? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள, எது ஒன்றைக் கண்டோ அஞ்சி, எதிலிருந்தோ விலக நான் இடையே விரிக்கும் கௌகரியமான திரைதானே?”

அப்பா, உங்களுக்கு எங்கள் பொக்கே! இந்த வரிகளுக்கு! நீங்கள் இருக்கும் முகவரிக்கு மானசீகமாக வந்தடையும்!

 “சுயம் எத்தனை பேரிடம் இருக்கிறது. யாராவது ஒருவரை “ரோல் மாடலா”க்க் கொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம்? தன்னம்பிக்கைக் குறைவா, தகுதிப் பிரக்ஞை இல்லாததா? “மூட்” என்பது ஒரு வியாதி. பல வேலைகள் முடிக்கப்படாமல் சோம்பிக் கிடப்பதற்கும் இதுவே காரணம். சுகம் காணும் மனோபாவம்”  நெற்றிப் பொட்டில் ஓங்கி ஒரு அடி கொடுத்தது போல் இருந்தது.

      “சாதனை என்பது சிகரம் தொடுவது அல்ல. சராசரிக்கும் கீழான குடும்பச் சூழலில் பற்பல இன்னல்களுக்கிடையே அடிபட்டு உதைபட்டு கல்விப் படிகளில் மேலே மேலே ஏறி அடுத்த போர்க்களம் நோக்கித் திரும்பும் பாமர மனிதனின் ஒவ்வொரு காலடியும் மகோன்னத வெற்றிதானே! அசாதாரணம் எதுவோ அதுவே வெற்றி என மனித மனம் எடைபோட்டே பழகியிருக்கிறது.”

“எவரும், தான் விரும்புவதில் பற்று வைக்க எந்தத் தடையும் இருக்க முடியாது. அதே சமயம், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கிற குறைந்தபட்ச பண்பாடு கூட வேண்டாமா?”

      தலைமுறை இடைவெளியைப் பற்றி இவர் என்ன அழகாகப் பொருத்தமாக மிகத் தெளிவான கருத்தை முன்வைத்துள்ளார் பாருங்கள்.

  “தலைமுறை இடைவெளி”யாமே? நிஜமா!? ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று உயர்வாக இருக்கும்.  அல்லது கருதப்படும். அதே சமயம் ஒன்றின் தொடர்ச்சிதான் இன்னொன்றாகவும் இருக்கும். இருக்க முடியும். பெயர் மாறக் கூடும், வடிவம் அதே.

“பேரன் பேத்தி முன்னேற்றம் தாத்தா பாட்டியை இயல்பாகப் பூரிக்க வைக்க வேண்டும்.  எல்லா இடத்திலுமா?  இல்லை.  சில இடங்களில், இவர்களால் புரிந்து கொள்ளப்படவும் இல்லை, ச்வீகரிப்பதும் இல்லை. அடையவேண்டிய பெருமிதத்தையும் தொலைத்துவிட்டு “இடைவெளி” என்று பொய் பேசுகிறோம்.” 

“தகவல் பரிமாற்ற இடைவெளி மிக அதிகமாக வளர்த்து வைத்திருப்பது நம் அண்மைக்கால சாதனை. பேசவே பலருக்கு அலுப்பு. சிலருக்குக் காசு கொடுக்க வேண்டும்.”

      “ஒவ்வொரு கணத்திலும் நொடியிலும் வாழ்க்கை உயிர்த்துடிப்புடன் பிறந்து நகர்கிறது. உடனுக்குடன் அந்நேரத்தை அனுபவிக்கத் தெரிய வேண்டும். இதற்கு அந்தந்தக் கணத்தில் மட்டுமே வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.”

      இன்னும் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.  பல கேள்விகளும், கருத்துகளும் நம் சிந்தனையை மிகவும் தூண்டுவதாகவே உள்ளது. முதுமை மனசுக்கல்ல என்பதை இந்தப் புத்தகத்தில் நீங்கள் வாசித்துப்பாருங்கள்! அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். எதை விட, எதை எடுத்துக் கோர்த்து இங்கு தர என்ற மனக் குழப்பத்தில், ஒரு சில மட்டுமே இங்கு.  இன்னும் பல இருக்கின்றது, அதுவும் மிகவும் சுவாரஸ்யத்துடன். ஏற்கனவே இடுகை பெரிதாகிவிட்டது.  நமக்கோ சுருக்கித் தரத் தெரியாது. அதுவும் இப்புத்தகத்தை எப்படிச் சுருக்கித் தருவது என்ற தடுமாற்றம். என்றாலும் இறுதியாக ஒன்று..

      “பெட் காஃபியோடு அன்றைய தினசரியையும் பார்க்காவிட்டால் பலருக்கும் தலை சுக்கல் நூறாகி விடும். அதுவும் எம்மாதிரி செய்திகள் நம் தகவல் ஊடகங்களின் தர்ம கைங்கர்யம்?  கொலை, கற்பழிப்பு சாலை விபத்து, லஞ்சம், நடிகைகளின் வழுவழுப்பான மர்ம பிரதேச தரிசனம், ஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் உளறல்கள், பொய்கள்.

   மனிதத்துவம் வெல்வதாக, மானுடம் ஜொலிப்பதாக எப்போதாவது சில சில செய்திகள் அத்திப் பூக்கும், தனி நபர்களின் சாதனைகளைப் படிக்கும் போது ஏற்படும் மன எழுச்சி சொற்பம் தான். ஒரே ஒரு பக்கம், அல்லது ஒன்றிரண்டு பத்திகளில் அவற்றைக் தேடித் தேடி வெளியிடும் நிருபர்களும், பத்திரிகைகளும் மகத்தான சேவை செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஒரே ஒரு பக்க அளவு இன்னும் நிறைய நிறைய பெருகினால், நாட்டில் சுபிட்சம் பொங்கும். எது இல்லாவிட்டாலும் படிக்கின்றவர் மனசாவது டெட்டால் போட்டுக் கழுவப்படும்.”

    அப்பா, உங்களது இந்தக் கனவு, உங்கள் அருமை மகன், எங்கள் நண்பர் ஸ்ரீராம் அவர்களால் அவர்களது தளமாகிய “எங்கள் ப்ளாகில்” சனிக்கிழமை தோரும் பாசிட்டிவ் செய்திகள் என்ற தலைப்பில் பல செய்திகளை நீங்கள் சொல்லி இருப்பது போல் தேடித் தேடி வெளியிட்டு, இந்த உலகம் முழுக்க அதை வாசிக்கும் எங்கள் எல்லோரது மனசையும் டெட்டால் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கின்றார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!!! நீங்கள்  பார்த்து ரசித்துக் கொண்டிருப்பீர்கள்! மகிழ்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருப்பீர்கள்! இல்லையா!!?

  மிக மிக உயரிய கருத்துகளைக் கொண்ட, விரிவான சிந்தனைகளையும், கேள்விகளையும் முன்வைத்து, வாசிப்பவர்களின் சிந்தனைகளையும் தூண்டும் விதத்தில் மிகவும் சுவாரஸ்யமாகப் படைத்துள்ளார் ஆசிரியர். இவ்வளவு நேரம் இதை எழுதியவர் யாராக இருக்கும் என்று உங்களுக்கு ஏற்பட்ட புதிருக்கு, மேலே சொல்லப்பட்ட பத்தியில் விடை கிடைத்திருக்கும். ஆம் நம் நண்பர் “எங்கள் ப்ளாக்” ஸ்ரீராமின் தந்தை, ஹேமலதா பாலசுப்ரமணியம்.  என்னடா தந்தை என்கின்றனர்.  பெயரோ பெண்ணின் பெயராக இருக்கின்றதே என்று உங்களுக்கு வியப்பாக இருக்கிறதல்லவா. பாலசுப்ரமணியம் ஹேமலதா என்பதுதான் அவர் பெயர். (அதிலும் தனது மனைவியிம் பெயர்!)

ஆசிரியரின் மனைவி - நண்பர் ஸ்ரீராமின் தாயார்

மனைவியை நேசிக்கும் ஆண்களின் மத்தியில் இவர் உச்சியில் இருக்கின்றார்.  மனைவியின் மீது கொண்ட மட்டற்ற அன்பினால், மனைவியின் மறைவிற்குப் பின் மனைவி ஹேமலதா தன்னுள் கலந்து இருப்பதாக, மனைவிக்கு முன்னிடம் கொடுத்து தன் பெயரை ஹேமலதா பாலசுப்ரமணியம் என்று இட்டிருக்கின்றார்.  இந்தப் புத்தகத்தையும் தன் மனைவிக்கே படையல் என்று சொல்லி,

என்னில் தானாக ஒன்றித்
தானே நானாக
இறுதி வரை இணைந்தும்
இன்றுள்ள நானாக என்னை
உருவாக்கி வளர்த்தலில்
பரிவு, பாசத்துடன்
முதற் பங்கேற்றும்.........

அவர்களின் திருவடித் தாமைரைக்கு சமர்ப்பித்துள்ளார்.  நண்பர் ஸ்ரீராம் தன் தந்தையைப் பற்றி மேற்சொன்னவற்றைச் சொல்லி தன் தாயின் நினைவுடன் தன் தந்தை வாழ்ந்து வருவதை விவரித்த போது மனது நெகிழ்ந்துவிட்டது. அப்படிப்பட்ட உயரிய தந்தைக்கு எங்கள் மனமார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருப்பவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள். அவரது அணிந்துரையை நாங்கள் எழுதி முடித்த பிறகுதான் வாசித்தோம்.  ஏனென்றால், அணிந்துரை வாசித்துவிட்டால், எங்கள் பார்வையில் கலப்பு ஏற்படுமோ என்ற எண்ணம்தான். ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்த முத்துக்களில் சில அணிந்துரையிலும் சொல்லப்பட்டுள்ளதைக் கண்ட போது வியப்பாக இருந்தது!  ஆசிரியரின் முத்துக்களின் வீச்சை நினைத்து! 

ஆசிரியர் - நண்பர் ஸ்ரீராமின் தந்தை

இதை எழுதி முடித்துவிட்டு வலைத்தளத்தை மேய்ந்த போது ஓர் ஆச்சரியம்! சகோதரி தேனம்மை லக்ஷ்மணனின் கவிதை! அந்தக் கவிதை இந்தப் புத்தகத்திற்கு, நாங்கள் எழுதிய கவிதையை விட இன்னும் பொருத்தமாக இருக்குமோ என்று நினைத்து அதை இங்கே பகிர்ந்திருக்கின்றோம்.  நன்றி சகோதரி தேனம்மை!

நீரின் பயணம்

எங்கோ பெய்யும்
பெருமழையின்
ஒரு தூறல் என் மேல் விழுந்து
தெரிவிக்கிறது என் உயிர்ப்பை, இருப்பை.
நானும் ஒரு துளியாய்
துளித் துளியாக்
கரையத் துவங்குகிறேன்.
மலைகளில் இருந்து வீழ்ந்து
மடுவில் அடிபட்டு
உள் குகைக்குள் சென்று
சின்னச் சின்ன உருளல்களோடு
நீளக் கோடுகளாய்க்
கடல் நோக்கிக் நகர்கிறதென் பயணம்.
(சகோதரியின் இந்தக் கவிதை கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

தூறல்கள் புத்தகம் : வெளியீடு: திருமதி. ஹேமலதா பாலசுப்ரமணியம்,
அறப்பணிச் சேவைகள்
14/12 A, மேல அனுமந்தராயன் கோயில் தெரு, மதுரை - 1
தொ. பே: 2346010, அலை பேசி: 9943782928

ஆசிரியர் மதுரையில் இருக்கின்றார்.

முதல் பதிப்பு 2009
விலை : ரூ 40

இந்தப் புத்தகம் விற்பதால் கிடைக்கும் தொகை, அறப்பணிச் சேவைகள்செய்யும் இவ்வமைப்பின் நிதியில் சேர்க்கப்படும்.

இவ்வமைப்பு 2002 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு ஏழை எளியோர்க்கு கல்வி, மருத்துவ உதவி, மிக வறிய நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்கு நிதி உதவி, முதியோர் இல்லங்கள், அனாதைக் குழந்தைகள் விடுதி, ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள் சிலவற்றிற்கு எளிய வகையில் உதவி, வசதியற்றோர்க்கு உடை என்று விரிகின்றது பணிகள். எங்கள் பணிவான வணக்கங்களும், இச்சேவை இன்னும் விரிவடைய வாழ்த்துகளும்!!