செவ்வாய், 9 ஜூன், 2015

POET THE GREAT - முன் - பின் பயணக் குறிப்பு 2


இந்தியன் காஃபி ஹவுசில் காலை உணவை முடித்துக் கொண்டு அடுத்து படகுத் துறைக்குச் சென்றோம்....அது அடுத்த பதிவில்....தொடர்கின்றேன்.  அதன் தொடர்ச்சி இங்கே..
















அதற்கு முன் ஒரு சிறு குறிப்பு ஒன்று முதல் பகுதியில் விடுபட்டுவிட்டது. குறும்படத்திற்கு முன், நான் கோவை சென்று இறங்கிய போது நம் நண்பர் ஆவி என்னை அழைத்துச் செல்ல வந்து விட்டார்.  என்னை, மருதமலை அருகில் இருக்கும் எனது தம்பியின் (அத்தை மகன்) வீட்டில் விட்டுச் செல்ல வந்தவருடன் கதைகள் பல பேசி, மதிய உணவு உண்ட பின், 3 ஆம் தேதி அன்று குறும்படத்திற்கு அவர் மொட்டை போட வேண்டி இருந்ததால், உடனே அவர் "சேச்சி நாம் மருதமலை சென்று அங்கு நான் மொட்டை அடித்துக் கொண்டுவிடட்டுமா?  குடந்தையார் பழனியில் மொட்டை போட்டுக் கொண்டார்.  நான் இங்கு! உங்களுக்குப் பிரச்சனை இல்லையே சேச்சி?" என்றார். எனக்கா?!!!! உடன் வண்டி மருதமலை நோக்கிப் பயணித்தது என் அத்தைமகனின் வீட்டைக் கடந்து. அங்கு ஆவி மொட்டைப் போட்டுக் கொண்டு, என்னப்பன் முருகனையும் வணங்கிவிட்டு என்னை அத்தை மகனின் வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார். 

எர்ணாகுளம்/கொச்சி! கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரம்தானே?! எர்ணாகுளம்/கொச்சியைப் பார்த்ததும் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது.  ஒரு வேளை நஞ்ஞள் அறியாதே தலைநகரம் மாறிவிட்டதோ என்று! அந்த அளவிற்கு முன்னேற்றம்.  இதனை கேரளாவின் வணிகத் தலைநகரம் எனலாம். ஒரு காலத்தில் இந்த நகரம்தான் கொச்சி ராஜாக்களின் தலைநகரமாக  இருந்தது. எர்ணாகுளம் மாவட்டத்தின் தலைநகரமாகவும் இருந்தது. ஆனால், தற்போது இந்த மாவட்டத்தின் தலைநகரம் காக்கனாடு. கொச்சியின் ஒரு பகுதியான எர்ணாகுள நகரம் (எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது) கடல் நீரால், கொச்சிக் கோட்டை, வெல்லிங்க்டன் தீவு, இவைகளிலிருந்து பிரிந்து உள்ளது.  அதனால் எர்ணாகுளத்தில் நிறைய படகுத் துறைகள் இருக்கின்றன.  அதில் மிகவும் முக்கியமான, பெரிய படகுத் துறைதான் எர்ணாகுளத்தின் படகுத்துறை.  அங்கிருந்து தினமும் படகுகள், கொச்சி கோட்டை, வைப்பின், மட்டஞ்ச்சேரி (இதுவும் கொச்சியின் பகுதி) வெல்லிங்கடன் தீவு இவற்றிற்குச் சென்று வருகின்றன. இந்த இடங்களுக்கு சாலை வழிப் பயணத்தைவிட பெரும்பான்மையோர் இந்தப் படகுப் பயணத்தைதான் உபயோகப்படுத்துகின்றனர், பயணச் சீட்டின் விலையும் குறைவு, பயண நேரமும் மிகவும் குறைவு என்பதால். 


ட்ரக்குகள் வைப்பினிலிருந்து எர்ணாகுளத்திற்கு பயணிக்கின்றன 

படகுத் துறையில் சுற்றுலாத்துறை அலுவலகம் உள்ளது

நாங்களும் எர்ணாகுளம் படகுத் துறையிலிருந்து வைப்பின் வரை சென்று திரும்பினோம்.  வைப்பின் பகுதிக்குள் செல்லவில்லை.  பயணம் மிகவும் சுகமானது.  வண்டிகளின் நெருக்கடியும் கிடையாது!! பயண நேரம் குறைவு. படகில் நெருக்கடியான கூட்டம் இல்லை. அதனால்தான் பயணிகள் படகில் பயணிக்க விரும்புகின்றனர்.  ஒவ்வொரு படகும் புறப்படும் நேரம், எவ்வழி செல்கின்றது, பயணச் சீட்டின் விலை என்று அட்டவணை படகுத் துறையில் வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற படகு, வெல்லிங்க்டன் தீவைத் தவிர, கொச்சி கோட்டை, கொச்சி, வைப்பின் வரை சென்று மீண்டும் இந்த இடங்களில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி எர்ணாகுளம் படகுத் துறையை அடைகின்றன. சென்று மீண்டும் வர 1.30 நிமிடங்கள் ஆகின்றது. தினமும் செல்வோருக்கு இது சாதாரணமாகத் தெரியலாம்.  ஆனால், நான் மிகவும் அனுபவித்த பயணம் என்று சொல்லலாம். எனது படகு, கப்பல் பயணத்தைப் பற்றி பிறிதொரு பதிவில்.  படகுத் துறையைச் சுற்றி நடை பாதையும், அதை ஒட்டிச் செடிகளும், மரங்களும், கடைகளும் இருக்கின்றன.


Lulu Mall Kochi.jpg
கூகுள் தந்த படம்
லுல்லு மால் 
லுல்லு மாலின் ஸ்கேட்டிங்க் பகுதியில் மேலிருந்த அலங்காரம்
அதன் பின் நாங்கள், துளசியின் குழந்தைகள் ஆசியாவிலேயே பெரிய மால் என்று சொல்லப்படும் லுல்லு மாலிற்குச் செல்ல வேண்டும் என்று பயணத்தின் முதலிலேயே சொல்லிவிட்டதால் அங்கு சென்றோம். ஆனால், இந்த மால் இந்தியாவிலேயே மிகப் பெரிய மால் அல்லாமல் ஆசியாவிலேயே மிகப் பெரிய மால் அல்ல. (மால் (பெரிய வணிக்ச் சந்தை? வளாகம்?) என்பதற்குத் தமிழில் என்ன வார்த்தை என்று தெரியவில்லை) கேரளாவிற்கும், வளைகுடா நாட்டிற்கும் உள்ள பந்தம் எல்லோரும் அறிந்ததே.  கேரளத்துக்காரர் எம்.ஏ யூசுஃப் அலி என்பவர் (வளைகுடாவில் இருக்கின்றார்.  பிசினஸ் மேன்) லுல்லு குழுமத்தின் மேனேஜிங்க் டைரக்டர். இந்த மாலின் சுவற்றில் ஒரு வாசகம் இருந்தது.  

இங்கு வந்து மனதைச் சந்தோஷமாக்கிக் கொள்ளுங்கள்.  எனக்குச் சிரிப்பு வந்தது. ம்ம் அங்கு போனால் சந்தோஷம்தாம், ஓசி ஏசி, வித விதமான, பல வண்ணங்களில் வேடிக்கைப் பார்க்க கடைகள், உடைகள், கலைப் பொருள்கள், தின்பண்டங்கள், நெகிழ்கூழ்கள், பல வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான பொருட்கள் என்று களை கட்டினாலும் இவை எல்லாம் வேடிக்கை பார்க்க மட்டுமே அல்லாமல் பர்சைத் திறந்தால் சந்தோஷம் பறந்துவிடும்!  அத்தனை விலை! பின்னே இத்தனைப் பெரிய மாலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா?! நம் தலையில் தானே கட்ட வேண்டும்.  லுல்லு குழுமத்தின் ஹைப்பர் மார்க்கெட் என்று மிகப் பெரிய சங்கிலித் தொடர் கடை இருக்கின்றது.  இது ஆசியாவிலேயே இருக்கும் மிகப் பெரிய மார்க்கெட்களில் ஒன்று. பன்னாட்டுப் பொருள்களும் குவிந்து கிடக்கின்றன. உலகம் கையளவில், மிகச் சிறியது என்று இந்தக் கடையைப் பார்த்தால் தெரியும்.  உலகமயமாக்கலின் விளைவும் தெரியும்.  அயல் நாட்டுப் பொருட்கள், ஐஸ்க்ரீம்ஸ், பழங்கள், காய்கள், உலர் பருப்பு, பழங்கள் என்று உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இங்கு கிடைக்கின்றன.  என்ன உங்கள் பர்ஸ் கனமாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளவும்.
  
மாலில் குழந்தைகளும், பெரியவர்களும் விளையாடுவதற்கு என நிறைய இருக்கின்றன.  கிட்டத்தட்ட கேசினோ போலவும்.  சாப்பாடு பற்றிக் கேட்க வேண்டுமா? ஓ! ஒருவாடு கடிக்கானும், திங்கானும்! இஷ்டம் போல! இஷ்டம் போல என்றவுடன் அன்லிமிட்டெடா என்று கேட்காதீர்கள்.  வெயிட்டான விட்டமின் எம் இல்லை என்றால் கஷ்டம் கேட்டோ?!
சோட்டாணி அம்மை கதவு திறந்நில்லா
மால் கதை போதும்.  இங்கு சென்னையில் இல்லாததா என்ன? அடுத்து சோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.. ஆனால் நடை அடைத்துவிட்டார்கள்.  எனவே வெளியிலிருந்து எண்டே பகவதிக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு நகர்ந்தோம்.  

அடுத்து செம்மந்தட்டா.  அது திருச்சூரில் உள்ள செம்மந்தட்டா எனும் ஊரில் ஒரு அருமையான பழைய சிவன் கோயில்.  துளசி பேன்ட் ஷர்ட் அணிந்திருந்த்தால் அவரைக் கோயிலின் உள்ளே விடவில்லை.  அது போன்று பெண்கள் சுடிதார்  அணிந்தும் செல்லக் கூடாது. துளசி மனம் வருத்தம் அடைந்தார்.  இறைவனைத் தொழ எதற்கு ட்ரெஸ் கட்டுப்பாடு? எதற்கு மொழி? இறைவன் அப்படிச் சொல்லவில்லை, என்று நயமாகவும், கொஞ்சம் உறுதியாகவும் சொல்லிப் பார்த்தார் என்றாலும் எங்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்தக் கோயிலின் விக்ரகத்தை முதன் முதலில் பரசுராமர் தான் பிரதிஷ்டை செய்தாராம். இக் கோயில் கேரளாவில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்று என்றும் சொல்லப்படுகின்றது. அங்கு ஒரு குளமும் உள்ளது. ஆனால், நாங்கள் சென்ற பொது இருட்டத் தொடங்கி விட்டதால் எடுத்தப் புகைப்படங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. இந்தக் கோயிலைப் பற்றித் தெரிந்தவர் யாரேனும்  பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
பின்னர் அன்று இரவே வீடு திரும்பினோம். அடுத்த நாள் நான் சென்னைக்குப் பயணம்.  அருமையான நாட்கள் அங்கிருந்த நாட்கள்!  மீண்டும் சில பயணக் குறிப்புகள் சொல்ல இருக்கின்றேன். இப்போது அல்ல இன்னும் சில நாட்களில்....ஒரு சில பதிவுகளுக்குப் பின்...

கீதா

புதன், 3 ஜூன், 2015

"விசுவாசமின் சகவாசம்" புத்த வெளியீடும், பதிவர் சந்திப்பும்-அழைப்பிதழ்


நம் நண்பர் விசு"Awesome"மின் சகவாசம் - புத்தக வெளியீடு வரும் சனி  - 06-06-2015 அன்று வேலூர், வூரிஸ் கல்லூரியில் நடை பெற உள்ளது.

நேரம் : காலை 11 மணி

தலைமை வகிப்பவர் : கல்லூரி முதல்வர் டாக்டர் அருளப்பன் அவர்கள்

புத்தகத்தை வெளியிடுபவர் :  டாக்டர் விசுவநாதன் (Founder, VIT)

சிறப்பு விருந்தினர்/சிறப்புரை : "வளரும் கவிதைகள்" கவிஞர் திரு முத்துநிலவன் அவர்கள்.

நன்றி உரை : திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

மதிய உணவிற்குப் பின் பதிவர் சந்திப்பு : 2.30 மணிக்கு

தங்கள் வருகையைப் பற்றி உறுதி செய்ய தொடர்பு கொள்ள விழைபவர்கள் கீழ் காணும் மின் அஞ்சல், தொலை பேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

thulasithillaiakathu@gmail.com        Geetha : 9940094630

Dindugal Danabalan   pdhanabalandgl@gmail.com    9944345233


வேலூரில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடனும், நட்புடனும் 

துளசிதரன்,    கீதா






POET THE GREAT படப் பிடிப்பிற்கு முன் - பின்.....

எங்கள் குறும்படத்திற்காகச் சென்ற போது எனது பயண அனுபவக் குறிப்பே இந்தப் பதிவு.  இந்தப் பயணக் குறிப்பு, பயணக் குறிப்பு எழுதுவதில் வல்லவர்களான, நம் நண்பர்கள், வெங்கட்ஜி, சகோதரி துளசி கோபால், கூட்டாஞ்சோறு செந்தில், சீனு போன்றவர்களின் குறிப்பு போல் எல்லாம் இருக்காது. என்றாலும் எனக்குத் தெரிந்த வகையில் பகிர்கின்றேன்.

எனது பயணம் இப்போதெல்லாம், எனது மூன்றாம் கண் (மகனிடமிருந்து எனக்கு) வந்ததிலிருந்து அது இல்லாமல் லோக்கல் பேருந்தில் கூட பயணம் செய்வதில்லை! அது போன்றுதான் எனது மூன்றாவது செவியும்! இவை இரண்டும் எனது கவசங்கள்!

எனது பயணத்தின் ஆரம்பம் பெரிய அளவு முக்கியமானது இல்லை என்றாலும், போகிற போக்கில் சொல்லிப் போகலாமே என்று குறிப்பிடுகின்றேன். குறும்பட ஷீட்டிங்க் தேதி மே 3, 4.  பாலக்காட்டில்.  அதற்காக, முன்னதாகவே எனது பயணத் தேதிகள் முடிவாகி, காதுப் பிரச்சனையால் எல்லாம் குளறுபடியாகி, இறுதியில் மே1 ஆம் தேதி பயணம் செய்ய இரு ரயில்களில் பதிவு செய்து, இறுதியில் காலை 4.45 ற்கு கௌஹாத்தியிலிருந்து சென்னை வழி திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் தான் இடம் உறுதியானது.

 இதுவரை இந்த ரயிலில் பயணித்தது இல்லை.  ரயிலில் ஏறுவதற்கு முன் அப்படியே திகைத்துவிட்டேன்.  எனது பயணப் பைகளை எங்கு வைத்து ஏறுவது என தெரியாமல் குழம்பினேன். அந்த இடம் முழுவதும் ஆட்கள் நிறைந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். கால் வைப்பதற்குக் கூட இடம் இல்லை. எப்படி ஏறி எனது பயணப் பையுடன் உள்ளே எனது இடத்திற்குச் செல்வது என்று முழி பிதுங்கிவிட்டேன். முழுவதும் வட கிழக்கு மாகாணங்கள், பெங்கால், ஒரிசாவிலிருந்து வரும் இளைஞர் கூட்டம்.  அந்த இடத்தில் மட்டுமல்ல, அந்தப் பெட்டி முழுவதும் ஆண்கள்தான்.  ஒரே இருட்டு, எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்ததால். பெண் வாசனை நான் மட்டுமே.  எனது இருக்கை எண்ணைக் கண்டுபிடித்துச் சென்று பார்த்தால் அதிர்ச்சி.  அந்தக் காபின் முழுவம் இளைஞர்கள் தான்.  அதுவும் 6 பெர்த்தில் 14 பேர் படுத்திருந்தார்கள்.  தரையில் இருவர் 16 சைட் பெர்த்தில் மேலும் கீழுமாக 4 பேர்......இவர்கள் எல்லோர் நடுவிலும் இடம் இல்லாமல் நான் நின்று கொண்டிருக்க...பயணச் சீட்டு பரிசோதகர் வருவார் என்று பார்த்தால் வரவே இல்லை. எனக்கு இருக்கை கிடைத்தது என்னவோ 6 மணி அளவில்தான். அதுவும் அந்தக் கூட்ட நெரிசலில். எவரும் எழுந்திருக்கவே இல்லை 7 மணி வரை. எனக்குப் பயம் இல்லை என்றாலும் கூட்டத்தில் அமர்வது சற்றுக் கஷ்டமாகத்தான் இருந்தது. 

இளைஞர்கள் எல்லோரும், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா/தெலங்கானா மாநிலங்களில் இருந்து கேரளாவில் கட்டுமானத் தொழிலுக்கும், சாலை அமைப்பு, மற்றும் அங்கு தற்போது எர்ணாகுளம், ஆலுவா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மெட்ரோ இரயில் பாலம் கட்டும் தொழிலுக்கும் ஒரு ஏஜண்டின் மூலம் வரவழைக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.  கேரளம், தமிழ்நாடு மற்றும் பங்களூர் பகுதிகளில் இப்போது இவர்களின் வரவு அதிகம்.  அதனால், இந்த மூன்று மாநிலங்களில் இருந்தும் இவர்களைப் பற்றிய புகார் கூக்குரல்கள் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. என்றாலும் பள்ளிக்கூட வாசனை அறியாத அந்த இளைஞர்களின் வயிற்றுப் பிழைப்பு இதுதான்.  ரயிலில் நான் அந்தக் கூட்டத்தை எடுத்த புகைப்படங்கள் எப்படியோ தவறி எனது கவனக் குறைவால் அழிந்துவிட்டது.

அந்தப் பெட்டியில் இருந்த பெரும்பான்மையான ஆண்கள்/இளைஞர்கள் மேல் சட்டை அணியாமல், அரை கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தார்கள். பலர் 15 - 18 வயதில் தான் இருந்தார்கள். எல்லோரும் ஏதோ ஒரு பொடியை அவ்வப்போது கையில் எடுத்து அதை நம்பியார் ஸ்டைலில் கைகளைத் திருகி மூக்கில் அடைத்துக் கொண்டார்கள். என்ன பொடியோ? என்ன பழக்கமோ? அதில் அவர்களுக்கு என்ன சுகமோ, மாயமோ தெரியவில்லை!  எல்லோருக்கும் மூக்கிலிருந்து ஒரு வஸ்து ஒழுகிக் கொண்டிருந்தது. அதை அவர்கள் ஒரு அழுக்கு டவலால் துடைத்துக் கொண்டிருந்தார்கள் இல்லை என்றால் கையால்.  குழந்தைகள் எப்படி வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும், குடும்ப அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று உளவியல் ரீதியில் நான் சிந்திப்பதாலோ என்னவோ, அவர்கள் வளர்ந்த சூழலை நினைத்து மனம் கனத்தது.  மட்டுமல்ல நமது நாடு இன்னும் முன்னேறவே இல்லை என்றும் தோன்றியது. இப்படியாக எனது பயணம் கோயம்புத்தூரிலும், பாலக்காட்டிலும் ஒரு ப்ரேக் எடுத்துக் கொண்டது.  படப்பிடிப்பு பற்றி துளசி எழுதி விட்டதால், இங்கு அதற்கு சென்சார் கேட்டோ....இனி எனது பயணம் கேரள எல்லையில் அதனால் அவ்வப்போது மலையாளத்தில் சம்சாரிக்க்கும் கேட்டோ...

படப்பிடிப்பிற்குப் மறு நாள் துளசி குடும்பத்தாருடன், ஆவியும், நானும் மலம்புழா அணைக்கட்டிற்குச் சென்றோம்.  எனது மூன்றாவது கண்ணிற்குப் பணம் கட்டாமல் நான் தெரியாமல் உள்ளே எடுத்துச் சென்றதால், அது பொருட்கள் வைக்கப்படும் அறைக்குள் வைக்கப்பட்டுவிட்டது.  அதனால் புகைப்படங்கள் இல்லை. எனக்கு அத்தனை சுவாரஸ்யம் இல்லை அணைக்கட்டில்.  நான், ஆவி, துளசி மூவரும் அமர்ந்து சம்சாரித்தோம். அதன் பின் துளசி அவரது குடும்பத்தார் குழந்தைகளுடன் செல்ல, நானும், ஆவியும் சம்சாரித்துக் கொண்டிருந்தோம். மழை பெய்த போதும், வெயிலின் கடுமையாலோ என்னவோ, மலம்புழா அத்தனை சுவாரஸ்யமாக இல்லாததால் அதைப் பற்றி இங்கு நான் எதுவும் சொல்லவில்லை. 


துளசி குடும்பத்தாருடன் எர்ணாகுளம் பயணம். அங்கு துளசியின் சகோதரரின் மகனது திருமணத்திற்குச் செல்லும் உபயத்தில் எர்ணாகுளத்தப்பன், எர்ணாகுள படகுத் துறை, லுல்லு மால், செம்மந்தட்டா கோயில் பற்றி. துளசி கார் ஓட்ட, நிலம்பூரிலிருந்து, பட்டாம்பி, திருச்சூர் வழி எர்ணாகுளம் செல்லான் 6 மணிக்கூரே என்னாலும், கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆகிவிடுகின்றது. இடையில் கேரளத்து கடிக்கான் (தின்பண்டங்கள்) பண்டங்களைக் கடிக்காது போகான் பற்றுவோ?! கேரளத்து நெய்யப்பம், கேக் (இது கேக் அல்ல ஒரு இனிப்பு) பக்கவட (பக்கோடா அல்ல) மைதாவில் செய்யப்படும் வடை, எல்லாம் கடிச்சு! என்னைப் போன்ற சாப்பாட்டுப் பிரியர்கள் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்!


எர்ணாகுளத்தை அடைந்தவுடன், மெட்ரோ பணியினால் சென்னையைப் போல அங்கும் போக்குவரத்து நெரிசல்.  இஞ்ச் இஞ்சாக நகர்தல். ஆனால், துளசிக்கு ரொம்ம்ம்ம்ம்ம்பவே பொறுமை!  எந்தவித எரிச்சலும் இல்லாமல் (என்னைப் போன்று! இப்படித்தான் சைக்கிள் காப்ல நம்மளப் பத்தி எடுத்து விட்டாத்தான் உண்டு. அதுவும் துளசிக்குப் போட்டியாக!!!) இ மனுஷன் இ லோகத்து மனுஷனோ என்று வியப்படைய வைக்கிறார்! 
Image result for GOD'S OWN COUNTRY BOARDS IN KERALAImage result for GOD'S OWN COUNTRY BOARDS IN KERALA
நிலம்பூரிலிருந்து பயணம் செய்த வழி நெடுகிலும், இரு புறமும், பசுமை, நீர் வளம், புழைகள் என்று ஒரே கண்ணுக்குக் குளிர்ச்சிதான் போங்க....எனது மூன்றாவது கண்ணிற்கு வேலை அதிகம்....முடிந்த வரை அதை ஜன்னலுக்கு வெளியில் திறந்தே வைத்து சிமிட்டிக் கொண்டே வந்தேன். துளசி, “நிறுத்தட்டுமாடா, நல்லா எடுத்துக்கடா..நம்ம பதிவுக்கு.” என்றார்.  நான், என்னால் நேரம் அதிகமாகிவிட வேண்டாம் என்பதாலும் பொறுமையின் சிகரமான அந்த மனுஷருக்கே நான் ஆப்பு வைத்து விடக் கூடாது என்பதால், வேண்டாம் என்றுவிட்டேன். ஆனாலும், இந்தக் கேரளத்துக்காரர்களுக்குக் கொஞ்சம் தற்பெருமை அதிகம்தான்.  எங்கு பார்த்தாலும், “KERALA- GOD’S OWN COUNTRY” என்ற போர்டுகள். 

அப்படி என்றால் மற்ற மாநிலங்கள்? எங்கள் வெங்கட்ஜியின் பதிவுகளைப் படியுங்கள். வட கிழக்கு, வட மேற்கு மாநிலங்களும் கடவுளின் மாநிலங்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்வதற்கேனும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்.  ஏன் தமிழ்நாடும் தான்! இப்படி இடையில் புகுந்து நம் பெருமையையும் சொல்லிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தனி பதிவு வேண்டும். எனவே இங்கு இதற்கு ஒரு முற்றுப் புள்ளி.

காயல் - படகுத் துறை

நாங்கள் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி, மறுநாள் முதல் வேலையாக அருகில் இருந்த எர்ணாகுளத்தப்பன் எனச் சொல்லப்படும் சிவன் கோயிலுக்குச் சென்றோம்.  அது நகரின் மையத்தில், மிகப் பெரிய காயலின் – மிகப் பெரிய படகுத் துறைக்கு எதிர்த்தாற் போல் அமைந்துள்ளது.  படகுத் துறை பற்றியும், ஆசியாவிலேயே மிகப் பெரிய மால் என்று சொல்லப்படும் லுல்லு மால் (இது சரியல்ல என்பது எனது வாதம். சிங்கப்பூரில் இருக்கும் மால் தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய மால்) பற்றியும் அடுத்த பதிவில்.

எர்ணாகுளத்தப்பன் கோயில்.  வேறு படங்கள் எடுக்க அனுமதி இல்லை.

இப்போது எர்ணாகுளத்தப்பன் பற்றி. இந்தச் சிவன் கோயில் சேரர்களின் ஆட்சிக் காலத்தில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்ட ஒரு கோயில் என்று முதன்முதலாகச் சங்க கால இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. அதற்கான பாடலைத் தேடிப்பார்த்தேன் கோயிலில் எங்கும் காணவில்லை. தமிழ் எங்கும் இல்லை. ஒரு வேளை என் கண்களில் புலப்படவில்லையோ எனவோ.  கூட்டம் வேறு. கல்வெட்டுகள் போன்று எதுவும் இல்லை.  அங்கிருந்த கோயில் தேவசம் போர்ட் ஒருவரிடமும், மற்றும் நம்பூதிரி ஒருவரிடமும் கேட்டேன். அவர்களுக்கு சேர வரலாறு தெரிந்திருக்கவில்லை.  கல்வெட்டுகள் எதுவும் பற்றிக் குறிப்பிடவில்லை. சேர ஆட்சியில் ஏரி நாள் குளம் (அதாவது எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும் ஏரி- அதான் அந்தக் காயல்) என்பது, சேர ஆட்சி கவிழ்ந்து நாயர்களின் கைக்கு வந்த போது அது எர்ணாகுளம் என்றாகியது. (அந்தக் கோயிலில் இருக்கும் புனிதமான குளத்தை நினைவுகூரும் வகையில்) அதன் பிறகு இது கொச்சி அரசாட்சியின் கீழ் வந்தது. பின்னர் கொச்சிக் கோட்டை, 17 ஆம் நூற்றாண்டில் டச்காரர்களின் வருகையால் அவர்களின் கீழ் வந்ததும், கொச்சியை ஆண்டவர்கள் எர்ணாகுளத்தைத் தங்களது தலைநகரமாக மாற்றிக் கொண்டார்கள். மட்டுமல்ல இந்தக் கோயிலை அடுத்து தங்களது அரண்மனையை நிறுவினார்கள். அரசர்களின் ஆதரவும், பாதுகாப்பும் கிடைத்ததால் கோயில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இந்தக் கோயிலின் இறைவன் அந்த நகரின் பாதுகாவலன் என்று அறுதியிட்டு முடிவாக்கப்பட்டதால், கொச்சி ஆட்சியாளர்களுக்கும் பழமையான எடப்பள்ளி நாயர் நிலப் பிரபுக்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தது.

அதன் பிறகு, இந்தக் கோயில் கொச்சி திவான் திரு எடக்குன்னி சங்கர வாரியரால் புதுப்பிக்கப்பட்டு இரு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. 1846 ல் பொது மக்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டு, அரச கோயிலாக உயர்த்தப்பட்டு, கொச்சி தேவசம் போர்டின் கீழ் வந்தது. 1949 ல் கொச்சி இந்தியப் பகுதியுடன் இணைக்கப்பட்டதும், தேவசம் போர்டு அரசின் கீழ் வந்து இன்று வரை அது தொடர்கின்றது. இது எனக்கு கூகுள் தேவதை தந்த வரலாறு.

முருகன் கோயில்

 லிங்க வடிவில் இறைவன்.  கௌரிசங்கரர் அரபிக் கடலை-காயலை நோக்கி வீற்றிருக்கின்றார். அர்ஜுனன் வழிபட்டதாகச் சொல்லப்படும் கீர்த்தமூர்த்தி லிங்க வடிவில் கருவறையின் வடக்குப் பகுதியில் ஒரு புறம் இருக்கின்றார். தெற்குப் பகுதியில் விநாயகர். கருவறையின் பின் புறம் பார்வதி தேவியின் இடம். அதனால் கிழக்கு முகப்பு தேவியின் முகப்பு என்று சொல்லப்படுகின்றது. இந்த வளாகத்திற்குள் சமீபத்தில் கட்டப்பட்ட முருகன் கோயிலும் அழகாக இருக்கின்றது. முருகன் எப்போதுமே தனியாகத்தான் இருப்ப்பார்.  அப்போதே அவர் அண்ணனிடம் ஞானப் பழத்திற்காகப் போட்டியிட்டு, தந்தையிடம் கோபப்பட்டுக் கொண்டு வந்ததாலோ என்னவோ! கேரளத்திற்குள் தமிழ் கடவுளைக் கண்டதும் ஒரு மகிழ்வு! அப்படியாக சிவன், குடும்ப சமேதராக அங்கு வாசம் செய்கின்றார். கோயிலில் இருந்து நாங்கள் வெளிவந்து, இந்தியன் காஃபி ஹவுசில் காலை உணவை முடித்துக் கொண்டு அடுத்து படகுத் துறைக்குச் சென்றோம்....அதைப் பற்றி அடுத்த பதிவில்....தொடர்கின்றேன்.


n  கீதா 

புதன், 20 மே, 2015

அந்நியன் கணக்கு

     கணக்கு என்பது எல்லோரும் அறிந்ததே!  அதென்ன அந்நியன் கணக்கு?  அது வேறு ஒன்றுமில்லை.  அந்நியன் படத்தில், (அந்த அம்பி அந்நியனாக மாறும் போது கேட்கும் கணக்கைப் போன்ற ஒன்றுதான் நான் இங்கு பகிர்ந்து கொள்வது.  சுஜாதா அவர்கள் தான் வசனம்.  எனவே அந்த வசனம் கூட சுஜாதாவின் வசனம்...ஸாரி கணக்காகத்தான் இருக்குமோ?! அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்தான் இப்படி எல்லாம் எழுதக் கூடியவர்!) 

 அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பில்லைங்க’’
“அஞ்சு கோடி பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘தப்பு மாதிரிதாங்க தெரியுது...’’
“அஞ்சு கோடி பேர், அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா?”
‘‘அய்யோ... பெரிய தப்புங்க...’’           

என் சிறு வயதில், 5 பைசா, 10 பைசா, 20, 25 பைசா இருந்த காலத்தில் எல்லாம், பெட்டிக் கடைக்காரர் கூட நாம் 10 பைசா கொடுத்து 5 பைசாவிற்கு மிட்டாய் வாங்கினால் 5 பைசா மீதி தருவார். ஒரு பைசா கூட மீதி பெற்றது உண்டு. சில்லறைகள் புழங்கிய காலகட்டம் வரை.  இப்போது 50 பைசா வழக்கில் இருந்தாலும் கூட, அது மதிக்கப்படுவதில்லை.  ஏன் 1 ரூபாய்க்கே மதிப்பில்லை என்றாகிப் போனது.  பல கடைகளில் மீதம் 1 ருபாய், 2 ரூபாய் மீதி தரவேண்டும் என்றால் கூட தருவதில்லை.  சில சமயங்களில் 5 ருபாய் கூட தருவதில்லை.  அதற்குப் பதிலாக நமக்கு உபயோகமே இல்லாத, வேண்டாத பொருள் வாங்கச் சொல்லுவார்கள். ஐயையோ இல்லைங்க ஸாரி.... நம் மீது திணிக்கின்றார்கள்! அந்தப் பொருள் பெரும்பாலும் சாக்கலேட், மிட்டாய்கள்! இதைப் பற்றி நம் நண்பர் விசு அவர்கள் கூட மிகவும் நகைச் சுவையாக ஒரு பதிவு போட்டிருந்தார் அவரது வலைத்தளத்தில்.

நான் அந்த மாதிரி மிட்டாய் கொடுத்தால் வாங்குவதில்லை.  நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் மிட்டாய்களை.  நான் ஏற்கனவே என் உடம்பில் நிறைய மிட்டாய்கள் வைத்திருக்கின்றேன்.  உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்னிடமிருந்து என்று சொல்லிவிட்டு சில்லறை தரவேண்டும் என்று உறுதியாக இருப்பேன்.  அப்படித் தரவில்லை என்றால், தெரிந்த கடை என்றால், அப்புறம் வந்து வாங்கிக் கொள்கின்றேன் என்று சொல்லி விடுவேன்.  அப்படி இல்லை என்றால் ஏதாவது வாங்கிய பொருளைக் குறைத்தால், விலை முழுமையாக வருமா என்று பார்த்துவிட்டு குறைத்து விடுவேன். அப்படியும் இல்லை என்றால் விட்டுவிடுவேன். வேறு வழி?! ஆனால், அவர்களுக்கு அதனால் ஒன்றும் மனசாட்சி அவர்களை வறுத்தெடுக்கப் போவதில்லை.  லாபம்தான் அவர்களுக்கு. அப்படிச் சில்லறைகளை நாம் விடுவது தவறு என்பதைச் சுட்டிக் காட்டி ஒரு அந்நியன் ஸ்டைல் கணக்கு ஒன்று எனது மின் அஞ்சலில் வந்தது. எனது மனதைப் பிரதிபலிப்பதாக.  அதைப் பாருங்கள் இங்கே அப்போது உங்களுக்கே புரியும்!  (இது வெளி நாடுகளில் நடப்பதில்லை! சரியாக நமக்குச் சில்லறை கிடைத்துவிடும். அதனை கில்லர் ஜி அவர்களிடமும் உறுதி செய்து கொண்டேன். இரண்டாவது நாம் இங்கு கார்டு தேய்த்தால் சரியான பில் தான் கழிக்கப்படும்.  ஆனால் சர்வீஸ் சார்ஜ் என்று பேங்கிற்கு அழ வேண்டுமே!

சரி இப்போது அந்த அந்நியன் கணக்கிற்கு வருகின்றேன்!  ஆங்கிலத்தில் வந்ததை எனக்குத் தெரிந்த விதத்தில் தமிழில் மொழி பெயர்த்துத் தந்திருக்கின்றேன். நாம் ஏன் சில்லறைகளையும், ரூ 1 யும் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து நிச்சயமாகப் பெறவேண்டும்.

நாள் ஒன்றிற்கு 500 பேர் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு வருகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அவர்கள் ஒருவர் கூட மீதி ரூ 1 ஐ பொருட்படுத்தவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்

500 x  1 = Rs 500

365 நாட்களுக்கு  500 X 365 = Rs. 1, 82,500

இது ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கானது.  இப்படி 1500 சூப்பர் மார்க்கெட்டுகள் நமது நாட்டில் இருக்கின்றன.

Rs. 1, 82,500 x 1500 =  Rs. 273,750,000  ஐயோ இப்படி பெரிய, பார்க்காத நம்பர் எல்லாம் சொன்னா நமக்குப் புரியாதுங்கோ!  நாம அப்பாவிங்கோ!  அதனால் ஒரு சாமானியனுக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால் 27 கோடி ஒரு வருடத்திற்கு! இது சூப்பர் மார்க்கெட்டுகள் என்று சொல்லப்படுபவை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.  இதில் மற்ற பெரிய கடைகளும் அடக்கம். உலகமயமாக்கலின் விளைவினால் முளைத்திருக்கும் பெரிய பெரிய துணிக்கடை ஷோரூம்கள், மால்கள் என்று சொல்லப்படுபவையும் இதில் அடக்கம்.

வேதனை என்னவென்றால் இதற்கு வரி கிடையாதாம்! (அமெரிக்க கணக்குப் பிள்ளை! உங்களுக்குப் புரிந்து இருக்குமே! கணக்குப் பிள்ளைகள் இதற்குப் பதில் சொல்லவும், முடிந்தால்!)  ஏனென்றால் விலைச் சீட்டு இந்த 1 ரூபாயைக் கணக்கில் கொள்ளாதாம். நுகர்வோர்கள் எல்லாரும் பணக்காரர்கள் ஆகிவிட்டதால் அவர்களுக்கு இந்த சில்லறை, 1 ருபாய் பெரியது அல்ல.  அதனால் தான் பெரும்பான்மையான பொருட்களின் விலை பேட்டா கணக்கு போல (ரூ,100.99) -49, -50, -69, -99, -999 ஒன்லி  என்றிருக்கின்றது! ஆனால், நான் பணக்காரி அல்ல.  சாதாரண சாமானிய மக்களில் அடக்கம்.  யாசிப்பவர்கள் கூட இப்போதெல்லாம் ரூ 1 ஐ ஏற்றுக் கொள்வதில்லை.  நம்மைத் திட்டுகின்றார்கள். சாதாரண பலசரக்குக் கடைகள், மொத்த வியாபாரக் கடைகள் இதில் வருவதில்லை.

நுகர்வோர்கள் ராஜாக்கள்! (Consumers are the king! consumer sovereignty) என்று பொருளாதாரத்தில் சொல்லப்படுவதுண்டு. அதாவது நுகர்வோர்களின் தேவைக்கேற்பதான் பொருட்களின் உற்பத்தியும், விலையும் நிர்ணயிக்கப்படும். இது மேலை நாடுகளுக்குப் பொருந்தும். நம் நாட்டிற்குப் பொருந்தாது. ( நுகர்வோர்களில் ஆண்களும், பெண்களும் தானே அடக்கம்? அது என்ன கிங்க்?  அப்போ க்வீன் இல்லையா? ம்ம் அந்தக் காலத்தில் பெண்கள், ராணிகள் வீட்டை விட்டுச் செல்லாமல், சமையலறையிலும், அந்தப்புரத்திலுமே இருந்ததால் ஆண்கள் தான் வெளியில் சென்று பொருட்கள் வாங்கியதால் கிங்க் என்று சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் தான் அதிகமான நுகர்வோர் பட்டியலில் வருகின்றார்கள்.  பெண்களால்தான், துணிக் கடைகள், நகைக்கடைகள், பாத்திரக் கடைகள், ஃபேஷன் கடைகள் எல்லாம் இப்படி அள்ளிக் குவிக்கின்றதாக ஒரு உபரித் தகவல் கிடைத்தது. அதனால் நுகர்வோர்கள் ராஜா/ராணி.  Consumers are the Kings and Queens!

இந்த 1 ரூபாய்க்கு மதிப்பு இல்லை என்றால் ஏன் கடைக்காரர்கள் மட்டும் நம்மிடம் அந்த 1 ரூபாயைத் தர வேண்டும் என்று நிர்பந்திக்கின்றார்கள்?  இல்லை என்றால் நம்மீது ஏதேனும் ஒரு மிட்டாயைத் திணிக்கின்றார்கள்?  அவர்கள் தருவதில்லை.  மதிப்பு என்பது இருவருக்கும் பொதுதானே! அப்போ இங்கு நுகர்வோர்களுக்கு உரிமை இல்லை என்றாகின்றதல்லவா. மதிப்பு இல்லாத அந்த 1 ரூபாயை நமது ரிசர்வ் வங்கி இன்னும் ஏன் புழக்கத்தில் வைத்துள்ளது? 1ரூபாய் மட்டுமல்ல. 2 ரூபாய் கூட.  ஏன் சில சமயங்களில் 5 ரூபாயும். அதுவும் சில்லறைத்தனமாக, கஞ்சத்தனமாக? 50 பைசா இன்னும் ஏன் புழக்கத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை? அதற்கு மதிப்பே இல்லாத போது  ஏனென்றால் 1 ரூபாயை இரண்டு 50 பைசாக்ககளாகக் கொடுத்தால் பெரும்பான்மையோர் வாங்குவதில்லை. விலைப் பட்டியல்கள் ஏன் முழுமையாக நிர்ணயிக்கப்படுவதில்லை?  எங்கு ஊழல் தொடங்குகின்றது? நண்பர்களே!  இது அந்நியன் கணக்குதானே!  உங்களுக்குப் பதில் தெரிந்தால் என் மனதில் எழும் இந்தக் கேள்விகளுக்கு விடை கொடுங்களேன்!  நானும் எனது மிகச் சிறிய அறிவை விரிவாக்கிக் கொள்வேன்!
--கீதா

(பயணக் குறிப்புதான் தொடரும் என துளசி சொல்லி இருந்தார். ஆனால் வேலைப் பளு.  அதை இன்னும் எழுதி முடிக்காத காரணத்தால் அடுத்து....அதற்கு முன் இந்தப் பதிவு...)